லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது படைப்புகளில் வாசகர்களால் உணர முடியும். ஒரு இடைவெளியை அவர்களுடன் நான் ஏற்படுத்திக்கொண்டே செல்கிறேன், அது வாக்கியத்தின் கட்டமைப்பிலோ , கதை நகர்தலிலோ அல்லது ஒரு சொல்லிலோ கூட இருக்கலாம்.
உதாரணத்திற்கு ‘வெற்றோசை’ எனும் சிறுகதையில் ‘அவள் மேகத்தை நோக்கி நீந்திக் கொண்டிருக்கிறாள்’ என்கிற வரியைச் சொல்லலாம். இது நான் எடுத்துக்கொண்ட அல்லது கைவிடப்பட்ட நிலத்திலிருந்து எழும் மனப்போக்கை உடையதாகவே இருக்கிறது. இதை நான் ஏற்படுத்தும் இடைவெளியிலிருந்து வாசகர்கள் தங்களை கதையிலிருந்து துண்டித்து சுயத்தை அடைய வேண்டும் என்கிற அடிப்படை தான்.
இப்படி எனது படைப்புகளில் யதார்த்தத்தை தாண்டிய கதை முறைகளில் எனது நிலமாக இருப்பவைகளை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று அனுபவங்கள் ஏற்படுத்திய மனப்பிறழ்வு, மற்றொன்று தத்துவ விசாரிப்புகள். இவைகளை கதை என்னும் நிலப்பரப்பில் சிதறடித்தளையே விரும்புகிறேன்.
1. ‘மன்யாவின் உடல்கள்’ என்னும் கதையில் கதையின் கடைசி வரி ‘அடிவயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டாள் அதற்கு கீழ் ஒன்றும் இல்லை’ இப்படியாக முடிகிறது.
2. ‘வெற்றோசை’ கதையில் “தொடக்கமும் முடிவும் ஒரே முடிச்சில் இருந்தே பிரிக்கப்பட்டதாகிவிட்டதா என்கிற தேடல் அவனும்! அவளும்! அதுவாகி! போன வெற்றோசை ”.
இப்படிப்பட்ட கதைகளை எழுதும் பொழுது மொழித்திருகல்களோடு மட்டும் நின்றுவிடாமல் அவைகள் நம் நிலத்திற்கான கூறுகளுக்குள்ளும் இயங்குவதை உன்னிப்பாகக் கையாளுகிறேன். அதற்கு ‘சதுக்கப் பூதம்’ என்னும் மாய எதார்த்தக் கதை வாதத்தில் நம் இலக்கிய, பண்பாட்டுத் தொன்மங்களுடன் ஒன்றாவதை கவனிக்க முடியும். அந்தக் கதையில் கரிசல் நிலத்தை ஒரு சிறுவன் பூதம் என்று நினைத்துக்கொள்கிறான். இப்படியாக அந்த மாய யதார்த்தம் அவர்கள் வழிபடும் குலதெய்வ வழிபாட்டில் பிணைக்கப்படும் பொழுது நமக்கான கூறுகளை அது கண்டடைகிறது.
பெரும்பாலும் எனக்கான கதைகளை கதாப்பாத்திரங்கள்தான் கொண்டு வந்திருக்கின்றன. அவைகளின் பார்வையிலேயே அவர்கள் வாழ்ந்த நிலத்தை பதிவு செய்வதால் அந்நிலம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறாகவே தன்னை அர்த்தப்படுத்திக் கொள்கின்றன.
‘போட்டோ சார்’ மற்றும் ‘தொடர்பவைகளின் கூற்று’ ஆகிய இரண்டு கதைகளும் கொடைக்கானல் மலையில் நடப்பவையாகத் தெரிந்தாலும், தன்னை இழத்தலில் யாசிர் பாயும், தன்னை அறிதலில் தொடர்பவைகளின் கூற்றின் மையக் கதாப்பாத்திரமும் வித்தியாசப்படுகின்றன. அவர்களின் நிலமும் அங்கு மாறுபடுகின்றன. அந்நிலத்தின் தொன்மத்தையும் சமகால சமூகவியல் மாற்றங்களில் அவர்கள் உழலும் பொழுது இருவேறு நிலமாக மாறுகின்றன.
போன முறை தை பொங்கலுக்கு ஊருக்குச் சென்றபொழுது நடந்த நிகழ்வை ஒட்டிய கதையே ‘ம்மே’. கோடங்கி மறைவுக்கு பிறகு அவரின் மகனுக்கு சாமி இறங்காமல் மந்தையில் நிகழ்ந்தவைகள் பற்றிய கதை. இதன் உள்ளடக்கத்திலும் ஆசிரியர் தலையீடு சிறிதும் இருக்காது. மதுரையின் வட்டார வழக்குடன் எழுதிப் பார்த்த கதை. என்னதான் நான் என் ஊரிலிருந்து தள்ளியே வாழ்ந்திருந்தாலும் இக்கதையை எழுதும் போது அங்கு நான் கேட்ட மனிதர்களின் குரல்களை என்னால் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிந்தது, அப்போதுதான் நானே அறியாமல் என்னுள் அந்நிலம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அறிந்தேன். அக்கதையில் வரும் ‘கூட்டுக் கருப்பட்டி’ மாற்றுதல் போன்றவைகள் என் நிலத்திற்கே உண்டான சிறப்பு. இதே நடையில் எழுதப்பட்ட ‘போஸ்டர்’ சிறுகதையும் இதே நிலத்து மனிதர்களைப் பேசுபவைகள்தான். எதனளவு கொண்டாடுகிறோமோ அதனளவு விமர்சனமும் எனக்கு இருக்கிறது. மதுரை என்றாலே கோபம் , வீரம், பாசம் என்று மாற்றி மாற்றி கேட்டுக்கேட்டு எனக்கும் சலிப்புதான் வருகிறது. யதார்த்த மனிதர்களை உள்ளடக்கிய நகரம் என்றுதான் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படியான எதார்த்த மனநிலையினுடைய அமுதனை உங்களால் அக்கதையில் பார்க்க முடியும், இப்படியாக முன்சொன்ன வீராப்புகளில் ‘புழுத்து செத்த’ அவனது அப்பா மணிமுத்தையும் பார்க்க முடியும். அக்கதை அந்நிலத்தின் இந்த வெட்டி வீராப்புக்கும் எதார்த்தத்துக்கும் இடையே சொல்லப்பட்ட கதை.
சில சமயங்களில் நான் எடுத்துக்கொண்ட கதைகளுக்கு தனி நிலத்தையும் உருவாக்கி இருக்கிறேன். போனமுறை தஞ்சாவூர் சென்றிருந்த போதே ‘காடு இறங்குதல்’ பற்றி கேள்விப்பட்டேன். அவர்களின் வழிபாட்டு முறைகள், காளை வளர்ப்பு என்று தெரிந்து கொண்டாலும், அவைகள் இப்போது இருக்கும் நிலத்திற்கு அந்நியப்பட்டவைகளாகவே இருந்தன. ஆனால் அவர்கள் எனக்கு கொடுத்த தவசியையும், வனத்தையும், காசிவளவரையும், மணியப்பனையும் என்னால் விட்டுவிட முடியவில்லை. அதனால் எனக்கான ஒரு கற்பனை நிலமான பாப்பநாடு, கொண்டக்குடிகல், வேதன்யம் காட்டை என்னால் உருவாக்க முடிந்தது. இப்படியாக எழுதியதும் ஒருவிதச் சுதந்திரம்தான். அதற்குள் ஒன்றுபட்ட இரண்டு மூன்று பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்.
நாம் அறியாத புது நிலத்தில் நம் பயணங்களின் போது உள்ளிழுக்கப்பட்டு தொலைவது இயல்புதான். அப்படித்தான் சத்திஸ்கர் காட்டினுள் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது திடீரென என்றைக்கோ வாசித்த செல்மாவினுடைய தேவமலர் காட்டினுள் புகுந்தது போன்ற உணர்வு. அங்கே தோன்றியதுதான் ‘செல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்’ எனும் சிறுகதைக்கான கரு. அந்தக் காட்டினுள் செல்மா அலைந்து திரிந்து வாசகராகிய நமக்கு எடுத்து வந்த கதையைப் பேசும் சிறுகதை. நிலமென்ற மாயம் செல்மாவினுடைய மனம்தான். அதற்காக செல்மா பற்றி நிறைய படிக்க நேர்ந்த அனுபவங்களும் என்று என்னால் நிறைவாக எழுத முடிந்தது. செல்மாவை அவரின் படைப்புகள் வழியும், தனிப்பட்ட வாழ்வின் மீறல்களையும் பேசும் சிறுகதை. ‘டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்’ இப்படிப்பட்ட கதை கருதான். ஆனால் இதில் வரும் மானசி எதிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பாதவள். நிலத்திலிருந்து விடுபட நினைக்கும் அப்பாவி.
அதற்கடுத்து நான் இயங்கும் சினிமா சார்ந்த கதை களங்கள்தான். சினிமா தெருக்களில் உங்களால் நடக்க முடிந்தால் ‘ஆப்பிள் பாக்ஸ்’ கதையில் வரும் ராமகிருஷ்ணன் போன்று எண்ணற்ற திறமை வாய்ந்த அசிஸ்டண்ட் டைரக்டர்களை உங்களால் பார்க்க முடியும். எவ்வளவோ இடர்களுக்கு மத்தியிலும் எந்த விதத்திலும் தங்கள் கனவுகளை விட்டுவிடாது சுற்றும் உள்ளங்கள். ‘வெளில புடுச்ச வேலைய செய்யாம எத்தனையோ பேரு செத்துட்டு இருக்கான், நான் புடுச்ச வேலைய செஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன் விடுடா, சீக்கிரம் படம் பண்ணுவோம்’ என்று ராமகிருஷ்ணன் அண்ணன் நம்பிக்கையாகச் சொன்னது இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது. ‘ஸ்டார்’ திரைப்படங்களில் பணியாற்றும் ஸ்டண்ட் மாஸ்டரைப் பற்றிய கதை, ‘போகஸ்’ ஜூனியர் ஆர்டிஸ்ட் பற்றியது. சினிமா சார்ந்த நிலத்தை உள்ளிருந்து பதிவு செய்வது ஒருவித மனக்கசப்பால் வருவதுதான் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். கூடுதல் தகவலாக ஒரு உதவி இயக்குனருக்கு ஒருநாள் பேட்டா ஐம்பது ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இருக்கட்டும். வாழ்க!
எப்படியோ இதெல்லாம் கதைகளாக நடந்தேறியது என்பதுதான் மகிழ்ச்சி. சில நேரங்களில் நேர்த்தியாகவும் சில நேரங்களில் உளறல்களாகவும். இன்னும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நடக்குமானால் மகிழ்ச்சி. அது உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.
***
லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com