ரூபன் சிவராஜா
(இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்)
தனிமனித அனுபவங்களைக் ‘கூட்டு அக்கறை’க்குரியவை ஆக்குதல்:
அகநிலைப்பட்ட சிக்கல்களை மையப்படுத்திய அரங்கம் என்பதால் தனிமனித அனுபவங்கள் இதற்கான அடிப்படையாக உள்ளன. அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவம் என்பது கதைசொல்லலாக-பகிர்வாக அமையும். ஏனைய பங்கேற்பாளர்கள் அதனுடன் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் கதைத் தெரிவு அமைதல் வேண்டும். ஆகையினால் ஆற்றுகையின் போது மூன்று அல்லது நான்கு பங்கேற்பாளர்கள் வெவ்வேறு கதைகளைப் பகிர்ந்துகொள்வது பயனுடையதென Boal பரிந்துரைக்கின்றார். இதன் நோக்கம் அவற்றிலிருந்து சிறந்த கதைகளைத் தெரிவுசெய்வதன்று. மாறாக அவற்றில் எந்தக்கதை கூடுதலானவர்களால் தமக்கான அனுபவமாக அல்லது தாம் அறிந்த கதையாக அடையாளப்படுத்துகின்றது என்பதற்கானது.
எளிமையாகச் சொல்வதானால் ‘இது எனக்கும் நடந்திருக்கலாம்’ என அரங்கிலிருப்பவர்களில் அதிகமானவர்கள் உணரக்கூடிய கதையைத் தெரிவுசெய்தல் இந்த உத்தியின் நோக்கம்.
ஆகவே கதை/சம்பவம்/அனுபவம் தனிமய நீக்கம் செய்யப்படுகிறது. பொதுஅனுபவமாக மாற்றப்படுகிறது. தன்னிலை ஒருமையிலிருந்து தன்னிலை பன்மைக்கு கவனக்குவிப்பு மாற்றப்படுகின்றது. அதாவது முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் கொண்டிருக்கும் அனுபவம் அல்லது சூழ்நிலை கூட்டு அக்கறைக்குரியதாக மாற்றம் பெறுகின்றது.
‘Protagonist’ வானவில் அரங்கச் செயற்பாட்டில் முக்கிய ஆற்றுகையாளர். Protagonistன் முதல்வேலை ஆற்றுகைக்குரிய ஒரு அத்தியாயத்தை/பகுதியைக் காட்சிப்படுத்துவதாகும். அதாவது முரண்பாட்டினை உருவகப்படுத்திப் பிரதிபலிக்கும் ஒரு சூழ்நிலையை/அனுபவத்தை காட்சிப்படுத்த வேண்டும்.
மக்கள் அரங்கு, கட்புலனாகா அரங்கு, உருவக அரங்கின் கணிசமான உத்திகள் ஒடுக்குவோர் யார், ஒடுக்கப்படுவோர் யார் என்பதை இலகுவாக வேறுபடுத்தி அறியும் வடிவ உத்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒடுக்குவோர் எனும்போது அரசு, இராணுவம், காவல்துறை, நிலப்பிரபு, முதலாளி என மேலதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்குவர். இவர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் இவர்களின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வோராகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளின் மூலம் அதனைத் தகர்த்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் ஒடுக்கப்படுவோரின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படும்.
ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர் சார்ந்த சிந்தனை மரபு
ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ‘ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்’ எனும் சிந்தனை மரபிற்கு அதிகம் பழக்கப்படாதவர்கள். மக்களில் பெரும்பாலானோர் தம்மை ஒடுக்கப்படுவோராய் அடையாளப்படுத்துவதில்லை, உணர்வதில்லை. இந்தச் சிந்தனை முறையில் நிலவுகின்ற இடைவெளியை சரியான மொழிப்பயன்பாட்டின்; மூலம் இட்டுநிரப்பலாம் என Boal நம்பினார். வறிய மக்களுக்கும் இத்தகைய உணர்வு சார்ந்த, உளவியல் சார்ந்த அகவயப்பட்ட ஒடுக்குமுறைகள் உள்ளன. ஆயினும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாடு சார்ந்த புற-ஒடுக்குமுறைகள் மோசமானவையாக அவர்களை நெருக்கும் போது புற-ஒடுக்குமுறைகளிலிருந்து வெளிவருதல் என்பது முன்னுரிமை பெறுகிறது.
கலையின் அழகியல் வெளி
மேற்கு வாழ்வியல் சூழலில் அகவயப்பட்ட ஒடுக்குமுறைப் பிரச்சினைகள் அதிகம். ஐரோப்பாவில் மக்கள் அதிகம் இறப்பது பட்டினியால் அல்ல. தற்கொலைகள், அதீத போதையால் இறப்பவர்கள் அதிகம். அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது.
அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும்.
‘வானவில்’ கருத்துருவாக்கம்
வானவில் அரங்கக் கருத்துருவாக்கம் என்பது விருப்பங்களை அவற்றின் வண்ணங்களாகக் பிரித்துக் கலைத்துப்போட்டுப் புதியதாக – விரும்பிய வழிகளில் அவற்றை மீண்டும் இணைப்பதைக் குறிக்கின்றது. உணர்ச்சிகள் தூய்மையான நிலையில் இருப்பலையல்ல. ஆனால் பல்வேறு விகிதாச்சாரங்களில், பொதுவாக ஒருவகை உணர்ச்சி ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அக-ஒடுக்குமுறைகள் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டிருப்பவை. உதாரணமாகச் சொல்வதானால் வேதனையையும் அடக்குமுறையையும் நிறைந்த சூழ்நிலைகளுக்கிடையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற நிலைமைகளும் உள்ளன. ஆந்த வகையில் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் தன்னுணர்வற்ற அடக்குமுறைகளை வெளிக்கொணரவும் முகம்கொடுக்கவுமான உத்தி முறைமைகளை வானவில் அரங்கம் கொண்டிருக்கின்றது.
The cop in the head
புற அடக்குமுறைகளின் அதே செயற்பாட்டைச் செய்யும் அக ஒடுக்குமுறைகளைக் குறியீடாக ‘The cop in the head’ என Boal குறியீட்டு உருவம் கொடுக்கின்றார். அதன் பொருள் ‘மூளைக்குள் காவல்துறை உட்புகுந்து’ மனிதர்களின் விருப்பத்திற்குரிய செயல்களைத் தடுக்கின்றன அல்லது விருப்பத்திற்கு எதிரான செயல்களைச் செய்வதை வலிந்து கடப்பாடுடையதாக்குகின்றன.
Boalஇன் கூற்றுப்படி, மனிதர்கள் சமூக ஒடுக்குமுறைகளை உள்வாங்கி சவ்வூடுபரவலுக்கு ஆளாகுகின்றனர். சவ்வூடுபரவல் என்பது ஒரு வகையான சமூக இடையூடுருவல். கருத்துகள் விழுமியங்கள், சுவைகளை சமூகத்திலிருந்து சுவீகரித்துக்கொள்ளுதல். இந்தச் செயற்பாடானது புற-ஒடுக்குமுறைச் சக்தியின் வெற்றிகரமான உள்நீடிப்பு எனச் சொல்லும் Boal, காவல்துறை எமது தலைகளுக்குள்ளும், அதன் தலைமைப்பீடம் வெளியிலும் இருப்பதாக கருத்தியல் ரீதியான உருவகத்தினைக் கொடுக்கிறார்.
அரங்க இயங்குநிலை
ஒடுக்குபவர்/ஒடுக்குகின்ற அம்சம், ஒடுக்கப்படுபவர் எனும் உறவுநிலையில் இந்த அரங்க வடிவமும் இயங்குகின்றது. ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட நபரும் அக மற்றும் புற அழுத்தங்களால் தம்மை ஒப்புக்கொடுத்தலுக்கும் இழத்தலுக்கும் பணிந்துபோதலுக்கும் ஆளாகுகின்றனர். அடிபணிவுக்குள்ளானதை இல்லாமல் செய்து – இழந்ததை மீட்டெடுப்பது இந்த அரங்கச் செயல்முறையில் முக்கியமானது.
ஒடுக்கப்பட்டவர் தனது அக மற்றும் புற யதார்த்தத்தை உருவகங்களாக மாற்றி வெளிப்படுத்துகிறார். தனித்துவமான உருவகங்களாலான உலகத்தை வடிவமைப்பதன் மூலமும் சாத்தியமான விடுதலையைக் கற்பனை செய்வதன் மூலமும் உண்மை யதார்த்தத்தில் விடுதலை எப்படி நிகழும் என்பதைக் கண்டறிய முடியும். அதனை நோக்கிய மாற்றங்களை அடையவும் ஏற்படுத்தவும் முடியும்.
தனிநபர் சிந்தனை, உணர்வுகளை மீளுருவாக்கம் செய்வதில் வானவில் அரங்கம் கவனம் செலுத்துகிறது. அதனூடு தனிநபர் ஒருவர் வாழ்வில் தனக்கு ஒத்திசைவான விருப்பங்களைக் கண்டடைவதற்கான உந்துதலை வழங்குகின்றது.
பேசுபொருள்
தனிநபர் அனுபவங்கள், உணர்வுகள், நிகழ்வுகளை மையப்படுத்தியிருப்பினும் இந்த ஆற்றுகைச் செயன்முறை சமூக நோக்கினையும் உள்ளடக்கியுள்ளது. தனிநபரிருடன் தொடர்புபட்ட அனுபவங்கள், சம்பவங்களின் பொதுமைப்படுத்தல் தன்மையே அத்தகையை விளைவுக்கு இட்டுச்செல்கின்றது. ஆற்றுகைக்கு உட்படுகின்ற கதைகள் ஒற்றைத்தன்மையுடன் முற்றுமுழுதாகத் தனிப்பட்டவையாக அடையாளப்படாமல் குறியீட்டுத் தன்மைகளுடன் பொதுமைப்படுத்தல் தன்மையைப் பெறுகின்றன. அத்துடன் பார்வையாளர்களின் அனுதாபத்தை வேண்டி நிற்கக்கூடிய அனுபவங்களும் முக்கிய இடம்பெறுகின்றன.
ஒடுக்கப்படும் உணர்வுகளிலிருந்து விடுதலைபெறுதல் இதன் இலக்கு. ஆசை/விருப்பங்களை அகற்றுவதற்குப் பதிலாக – ஆசைகள் விருப்பங்களுக்குத் தடையாக நிற்கும் அக மற்றும் புறத் தடைகளை அகற்றுவது. இன்னொரு வகையில் சொல்வதானால் சுய-வெளிப்படுத்தலில் மாற்றத்தை ஊக்குவிப்பது. அதாவது எல்லா வகையான ஒடுக்கப்படும் உணர்வுகளும் இடையூறு விளைவிக்கும் அம்சத்தை நீக்குகிறது என்ற அடிப்படையில் இந்த வடிவத்தின் உள்ளடக்கமும் நோக்கமும் விளைவுத்தாக்கமும் கையாளப்பட வேண்டும். புரிந்து கொள்ளப்படவேண்டும்.
***
ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.