அதகளத்தி
1
நானும் என் சொற்களுமானதொரு
மின் இணைப்பு எனக்கென்று ஆனது
அதில் பிளவுபட்ட மொழியின் உலராத ஈரம்
கசிந்து கொண்டேயிருந்தது
இங்கு ஈரமென்பதே காய்தலில்லா திரிபுக்காட்சி
ஈரம் அதிகமாகும் போதெல்லாம்
முன்பேச்சுகளைத் திறந்து பார்க்கிறேன்
அது உயர் மின் அழுத்தத்தில் கிடந்தது
எங்கோ ஓரிடத்தில் மின் கசிந்தாலும் காட்டு
மரங்களின் அடர்கரி அழுத்தம் தான்
என் செய்வது?
ஒவ்வொரு கணமும்
ஒரு துப்பாக்கி முனை
குறி வைப்பதில் விலக முடியவில்லை.
எங்கோ எம் பாணர்கள்
சருகு ஆடை அணிந்து புகழ் மாலை பரவுகிறார்கள்
ஆனாலும் இந்த துப்பாக்கிகளுக்கு குண்டை
வைத்து அழுத்த வேண்டும்.
அவ்வளவே
அதற்குத் தெரியாது
உடல் மட்டும் மீந்திருக்கிறதென
திடீரென ஒரு துப்பாக்கியிலிருந்து
குண்டு சிதறி என்னைத் துளைக்கிறது
துளைத்த குண்டில் ‘காத்திருத்தல் இனிதென்ற’
சொல் மருந்தாக
என்னுள்ளே சென்றாள் அதகளத்தி
*
2 அது ஒரு முடிவில்லா இரவு
தடைப்பட்ட மொழியினை
என் ஆத்மாவென சொல்லிச் சொல்லி
ஓர் உரையாடலுக்குத் தயாரானேன்
இப்பொழுது நானும் ஆத்மாவும் மட்டும்
கேள்விப்பாத்திரத்திலிருந்த கேள்விகள்
தம்மை அறிவிப்பு செய்தன
எந்த வகைச்சீட்டை எடுப்பது?
கரிக்கிடங்கின் சாம்பல் பூத்து
ஒவ்வொன்றும் காதோதி நின்றதின் மேல்
விசாரணை ஏதுமில்லை
எச்சார்புமின்றி சாய்ப்பில்லாமல்
அடியில் கிடந்த கேள்விகளை
கைத்துடுப்பினால் மேலெழுப்பினேன்
சாம்பல் உதறி பளிங்காய் வந்தவையெல்லாம்
என்னையே திரும்பக்காட்டின
அதோ பாருங்கள்…
எம் தலைவி பகற்குறி தேடி
அலைகின்றாள்
எந்த மின்துகளின் தூண்டுதலில்லாமலும்
இப்பொழுது ஆத்மா பேசியது
உளி கொண்டு பேசுபவனுக்கு கண்ணே முகம்
நான் சொல்கிறேன்
நீ பேசும் சொல்லை வடிவமைப்பது எளிதல்லவே
ஹே… ஹே…
அதகளத்தியின் குரல் கேட்கிறது
மரணமென்பதே பிறத்தலின் ஒரு
வடிவம் தான் என்றவாறு
ஆத்மாவின் கைச்சிறையை
எடுத்து விடுகின்றாள்
குற்றுமி நீங்கிய நிவர்த்திச் சொற்கள்
பல உருக்களாய் வடிவம் பெற்று
ஒல்லென்று ஒலிக்கத் தொடங்கின
தத்தரிகிட… தத்தரிகிட… தத்தரிகிட…
*
3
என்னைப் பல தீக்கொளுத்திகள் சூழ்கின்றன
மேற்கூரையற்ற நிலச்சாரத்தில்
தாங்குகோலின்றி நிற்பது
அதற்குத் தெரிந்துவிட்டது போலும்
இப்பொழுது தீக்கொளுத்திகள் அருகில் வருவதை
உதட்டுச்சாயம் பூசிய சிவப்பென்று
சொல்லிவிட முடியவில்லை
ஆனால், அச்சிவப்பில்
என் நினைவுமொழியின் கற்றைச்சொற்கள்
நீந்திக் கொண்டேயிருக்கின்றன
மிகச் சரியாக சொல்வதென்றால்
சொற்களுக்குத் தான் சிவப்பின் மேல் எவ்வளவு விருப்பம்???
எம்மூதாய்
அன்றே தீக்கொளுத்தியே அறமென்றுரைத்தாள்
எம்முதுபெண்டிர்
சிறு உலக்கையில் நற்சொல் இடித்துத் துப்பியதில்
தாளித்தலின் நறுமணம் கூட்ட
தீக்கொளுத்தியே தேவையாயிருந்தது
அவர்கள்
குழைந்த கறியின் உடலொத்து
கால் நீட்டி தீக்கொளுத்திக்காகக் காத்திருக்கேன்
என்றனர்
இப்பொழுது
என்னருகில் ஒன்றுக்கு பின்னொன்றாய்
வெப்பப்பிழம்புத் தொடப்போவது தெரிகிறது
நான் எங்கும் ஓடவில்லை
நின்று கொண்டுதானிருக்கிறேன்.
ஆனால் பாருங்களேன்…
ஒரு தீக்கொளுத்தியின்
பின்னிருந்து
அதகளத்தி
மா மழை போற்றுதும்…
மா மழை போற்றுதும்…
எனப் பண்ணிசைத்து வருகிறாள்
ம.கண்ணாம்மாள்
kannamano07@gmail.com
மிக அருமையான கவிதைகள்! தங்களது சொல்லாடல் தனித்தன்மையோடு எப்போதும்போல் மிளிர்கிறது. வாழ்த்துக்கள் மேடம்!