நுழையா பாவனையோடு..
மிக நீண்ட கனவின் வராண்டாவில் விழித்தெழுந்தேன்
முடிவற்ற பிரகாச ஒளியை மனம் கண்ணுற்றது
காலடி ஓசைகள் உருவங்களை சுமந்தலைந்தன
திசைகள் கிடையாது
விவரணக் குறிப்புகள் எங்கும் ஒட்டப்பட்டிருக்கவில்லை
குறைந்தபட்சம் ஒரு சொல்லையாவது தந்துதவ புலனாகா
பிம்பங்கள் வியாபிக்கும் கணமது
சரியும் விதிகள் மோதி நசுங்கும் உறவுகளை
சமநிலைக் குழைவோடு பிரதியெடுக்கும் வாதமொன்று
விரித்துக் கிடந்த மேஜையில்
மினியேச்சர் குடும்ப அமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன
காலி செய்யப்பட்ட நகரங்களின் அகாலத் தருணத்தில்
நின்றபடி மொழியை நினைவுகூர யத்தனித்தால்
குறுக்கிடுகிற குகை ஓவியங்களில்
தட்டச்சு செய்யப்பட்ட முகவரிகளின் லிபியில் எண்கள்
உடைந்து கிடந்தன
மனித எலும்புகளில் வார்க்கப்பட்ட சாவிகளின் பற்களில்
காலத்தின் கணக்கு சூட்சுமம்
பழைய கட்டிட அடுக்குகளை உருவகிக்கின்றன
திறந்து பார்ப்பதற்குரிய பரிதாபக் கபாலத்துக்குள்
நீண்டு கிடக்கிறது திறக்கப்படாத வராண்டா
***
நீங்கள் அப்பால் திரும்பிக் கொள்ளுங்கள்
முதலில் கதவு அடைந்துகொண்டது
பிசிர்ந்த காற்றின் திடுக்கிடலோடு உதிர்ந்துவிடும் தூக்கத்தை
மெல்ல இழுத்து போகின்ற எறும்பை
விட்டுவிடாமல்
பின்தொடரும் மனத்தை
நாளைய
மீளா கனவில் அசைந்துகொண்டிருக்கும் கிளையொன்றில்
சுருட்டி வைத்தாகிவிட்டது
இன்னும் அதனை
அது அறிந்திருக்கவில்லை
அவ்வப்போதே முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த
நொடியில்
அடைந்துகொண்டுள்ள கதவு தாழிடப்படுகின்ற ஓசை
தொலைதூர பாலை மணலில்
புதைவதை
கண்டுகளித்தும் கொண்டிருக்கிறேன்
அவ்வாறாகி
எக்களிப்பின்
ரகசிய துள்ளலை வீதிதோறும் வடம் பிடித்து இழுத்தோடிட
இவ்வார்ப்பில்
தீ குழைய நொதும்பி கொண்டிருக்கும் மனிதச் சக்கரங்கள்
உருண்டோடி உடன் வர
ஓங்கிய
சம்மட்டியால்
அடிபடுகிறது அறையின் அச்சாணி
***
இடைக்காலங்களின் கோடை
என் புழக்கடையெங்கும் பூத்திருந்தன மலர்கள்
கரும்பாசி தளுக்கும் கிணற்றடி
காலம் அறுந்தும் கயிறைத் தொங்கிட அனுமதித்த
ராட்டை
ஆழத்தில்
கருநிழல் நீரின் சலசலப்பு
பாரேன்
வெயில் ஊறும் மேகங்களுக்கு தெரிந்திருக்கவில்லை
யவ்வன கவுச்சி தீரா
இவ்வனப்பின் தகிப்பில்
பின்னிரவாகி
கசியும்
நிலவின்
பாங்கு
***
அழியாத் தடம்
பவிசின் நறுமணத் தள்ளாட்டத்தில்
எத்தனையாகச் சுழன்று மீண்டு
சுழன்று
கிறக்குகிறாய்
வாகாக கவ்விக்கொள்ள
துடித்தழைத்த
இதழ்களை ஊற வைத்திருந்த இரவின்
தயவை
கொஞ்சமாகத் திறந்து வை
இருள் மூளும் பசிய பாதையை நடுக்கிடும்
கடுங்குளிர்
நினைவில் கொளுத்தும்
உடற்சூடு பற்றிப் படர்ந்திருந்த
பழங்
கதகதப்பை
***
கவிதைக்காரன் இளங்கோ
elangomib@gmail.com
ஓவியம் – Katsushika Hokusai