பாசக்கார அக்கா அவள்…
தங்கையின் பெயரையே
பேத்திக்கும் பிரியமாகச் சூட்டி
மனதில் நேசமும்
கனிந்த பொக்கை வாயின் ஓரத்தில்
பெருமை கலந்த வெட்கமும் கசியச் சிரித்தாள்.
வைரம் பாய்ந்த மரத்தின் வட்டங்களாய்ச்
சுருக்கம் தேங்கிய கைகளில் சிசுவை ஏந்தி
பிஞ்சு உடம்பு நோகாமல்
கனிவு சொட்டும் குரலில்
பெயரைத் தழுதழுத்தாள்
தலைமுறை தாண்டியும்
தங்கையின் பெயர் நிலைப்பதில்
ஆசை கொண்டவள்
வளைத்து வளைத்துக் கேட்டாலும்
தவறியும் தன் பெயரைத்
தூக்கத்தில்கூட உளற மாட்டாள்,
சாமியாகி ஐம்பது வருடமாகிவிட்ட
மாமியாரான சொந்தப் பாட்டியின்
பெயரும் அதுவே என்பதால்.
கரிசல் மண்நிற மேனிகொண்டவளின்
மனமோ கொல்லென்று பூத்த முல்லையின்
மணமும் நிறமும் கமழ்ந்தது
தாய்மாமனுக்கே வாழ்க்கைப்பட்டுப்
பெற்ற நான்கையும் பின் அவனையும்
விஷக் காய்ச்சலுக்கு வாரிக் கொடுத்து
இளம் வயதிலேயே தனிமரமாக நின்றவள்
தீயாய் எரிக்கும்
பறிகொடுத்த வாழ்வின் ஏக்கத்தைக்
கருணை ததும்பும் நெஞ்சுக்குள் மறைத்து
அகல் தீபமாக ஒளிர்ந்தாள்
தங்கையின் பிள்ளைகள் மேல்
தேனூறும் பாசம் என்றால்
அவர்கள் பெற்ற பிள்ளைகள்
தேனிலூறிய நெல்லிக்கனிகள்
சுட்டெரிக்கும் கோடை விடுமுறைகளில்
அவர்களின் வருகை
தோட்டத்துப் பன்னீர் மரத்தின்
குளுமையைத் தெளித்தது அவள் மனதில்
பேத்தியைத் தூங்க வைக்கக்
கதைசொல்லியாக மாறிய இரவுகளில்
தான் முதலில் கண் உறங்கி
மழலையாகப் பிதற்றுவாள்
நீண்ட கூடத்திலும்
குளுமையான கருங்கல் திண்ணையிலும்
சீட்டுக்கட்டு, சொப்பு, பல்லாங்குழி
அஞ்சாங்கல் விளையாட்டெனத்
தூணுக்குத் தூண் ஓடி ஒளியும் சிறுமியாகி
ஒற்றைக் கரத்தைக் குவித்து
பொக்கை வாயை மூடி
சிரித்துக் குதூகலிப்பாள்
சமையல் அறையில்
மெலிந்த நடுங்கும் விரல்களால்
இலாவகமாய் சுற்றும் கைமுறுக்கில்
கொஞ்சம் வெண்ணெய்யோடு
அளவு கடந்த பாசத்தையும்
சேர்த்துப் பிசைந்தாள்
கணவன் வீட்டில் சொத்துபத்து
நகைநட்டு என ஜொலித்த சீமாட்டி
தங்கை வீட்டில் கந்தையில் உறங்கிப்
பசி எனக் கேட்காமல் இட்டதை உண்டு
பாசம் இழைய உழைத்துக் கொட்டினாள்
தான் பெயர் வைத்த தங்கையின் பேத்தி
தன் ஊருக்கே வாழ்க்கைப்பட்ட மகிழ்ச்சியில்
மங்கிய கண்கள் வைரமாய் ஜொலித்து
ஒளிக்கீற்றைப் பாய்ச்சியது
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை
காலை பலகாரத்துக்கும் மதிய உணவுக்கும்
இடைப்பட்ட நேரத்தில் போய்
பேத்தியை நலம் விசாரித்துக்
காப்பித் தண்ணி மட்டும் குடித்து
பசியே இல்லை என்றபடி
சம்பந்தி மரியாதையைக்
காப்பாற்றிக்கொண்டு வீடு திரும்புவாள்
படுக்கையில் விழுந்த கடைசி வருடம்
வயிற்றில் மூண்ட பசி நெருப்பு
என்ன தின்றும் மாளாமல் கனன்றது
பார்ப்பவரிடத்தில் எல்லாம்
‘சாப்பிடத் தா தா’ என்றாள்
வாழ்க்கை முழுதும் நெஞ்சில் ஒளித்த
தனிமையின் ஏக்க நெருப்பு
திகுதிகுவென்று வயிற்றில் எரிந்தது போல
அவள் மரித்த நாளன்று
எரிகாட்டில் தங்கையின் மகன் ஏற்றிய
கொள்ளி நெருப்புப் பற்றிய நொடியில்தான்
வயிற்று நெருப்பு அணைந்து தணிந்தது
*
அன்பெனப் பெய்த மழை
ஒரு பின்மதிய நேரத்தில்
இளஞ்சிவப்பு இதயங்களாகப்
பொழிகிறது மழை
கூடவே தனக்கான துளியைக்
கண்டுணர்ந்த முகங்களில்
வெள்ளிப் புன்னகைகளை
இலவசமாக ஒட்டிச் செல்கிறது
மரக்கிளைகளில் சிக்கிய பட்டங்களென
பிரியமானவர்களின் கண்களில் சிக்கி
படபடக்கும் இதயங்களை ஒன்று சேர்க்க
ஒளி ஊடுருவும் ஏணியில்
கால் பதிக்கிறான் காதலின் இரட்சகன்
நனையப் பிரியப்பட்ட சிறுவர்களின் முகங்களை
செல்ல நாய்க்குட்டியாகி நக்குகிறது மழை
கொள்ள யாருமின்றி தேங்கிய நீரில்
மிதக்கும் இதயங்களை
கதம்ப மாலையில் தொடுக்கும் பூக்காரக்கிழவி
ஒரு கிள்ளைக் கொண்டையில் சொருகியதும்
தெருவோர அம்மனாக ஒளிர்கிறாள்
சொட்டுச் சொட்டாகப் பெய்து
பார வண்டியின் இடுக்குகளை நிறைத்து
இலேசாக்கிய இளஞ்சிவப்பு இதயங்கள்
வண்டிக்காரனின் வறண்ட களைப்புற்ற பாதங்களில்
இரண்டு துடிப்புமிக்க இறக்கைகளை ஒட்டுகின்றன
நகர முழுவதும் குளம் கட்டிய மழைநீர்
மனம் மயக்கும் பாடலைப் பாடும் இதயங்களை
வீடுகளின் ஜன்னலில் சொருகி வைத்தது
ஒரு கூடை நிறைய இதயத்தை அள்ளி வந்து
குளிர்பதனப் பெட்டியில் உறைய வைக்கிறேன்
மழை நின்ற பொழுதில் அன்பின் இனிமையைச்
சுவைப்பதற்காக என
***
நேர்த்திக் கடன்
தசாப்தங்களாக நீளும் வாழ்க்கையில்
தினந்தோறும் தீ மிதிக்கிறாள்.
பூக்குழியின் நீளம் என்ன
சில அடிகள் தானே.
பொறுப்பற்ற கணவனின்
கடமையையும் சேர்த்தே
காலமுழுவதும் சுமக்கிறாள்.
பால் காவடியைக்
கோவிலுக்குப் போனதும்
இறக்கி வைக்கலாம் அல்லவா.
சக்கையாகப் பிழிந்தெறியும்
வாழ்க்கையில் விடிவு பிறக்க
எலுமிச்சையில் தீபம்,
கொஞ்ச நேரமாவது
இருண்ட வாழ்வில் ஒளிவீசட்டும்.
முடிவில்லாமல் நீளும் நாட்களில்
வியர்வையும் கண்ணீருமே
பெருகிக் களைத்துவிட்டாள்.
அபிஷேகப் பாலும் தேனும் இளநீரும்
கொஞ்சமாவது இனிப்பைச் சேர்க்கட்டும்.
ஈர நாராக இறுகி
மூச்சு முட்ட வைத்த வாழ்க்கையில்
நறுமணம் வீசிய மலர்கள் உதிர்ந்து
சருகு மட்டுமே இப்போது மிச்சம்.
குருதி கொப்பளிக்கும்
பலியைமட்டும் கேட்டு விடாதே.
கொடுப்பதற்கான தலைகளை எண்ணவே
பல நாட்கள் ஆகிவிடும்.
***
கார்குழலி –
மொழிபெயர்ப்புகள், கவிதைகள், கட்டுரைகள் என அச்சு ஊடகம், மின்னிதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஆசிரியர் தொடர்புக்கு – karkuzhali.sreedhar@gmail.com