ஜான் ஆப்ரஹாம், அம்ம அறியான் மற்றும் ஒரு கழுதை
1]
கடவுள் ஒரு கழுதைக்கு கொடுத்த சாபம்
என்னை மிக தாமதமாய் வந்தடைந்தது
அதற்குள் நான் என் கழுதையை மறந்து விட்டிருந்தேன்
கழுதையும் என்னை மறந்து விட்டிருந்தது
தன் மரணத்துக்குப் பிறகும்
ஜான் ஆப்ரஹாம் ‘சாலமோனின் உன்னத சங்கீத’த்தை வாசிப்பதை நிறுத்தவில்லை
கழுதை ஜானுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தது
தன் பிறவியின் குறைவான ஆசீர்வாதங்களை
ஜானுக்கு கொடுத்து விட்டிருந்தது
ஜானோ தன் நாடோடித் தன்மையை கழுதைக்கு
கொடுத்துவிட்டிருந்தார்
ஜானின் சாராய நெடியை
சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அறவே வெறுத்தன
ஆனால் கழுதைக்கு அதுபற்றிய கவலை
கொஞ்சமும் இல்லை
ஒரு மின்னலை வெறித்துப் பார்க்கும் ஆசையை
கழுதை ஜானிடம் சொன்னது
ஜான் தான் பயன்படுத்தாத ஒளி விளக்குகளை
கழுதையை நோக்கி திருப்பினார்
கழுதைக்கு சவுந்தர்யக் கூச்சம் பெருகியது
அதன் மந்தகாசம் முகில்களின் பயணத்தை
இன்னும் விரைவாக்கியது
ஜானுக்கும் கழுதைக்குமான உறவை கடவுள்
இன்னும் அங்கீகரிக்கவில்லை
ஜானுக்கு அது பற்றியெல்லாம் கவலை இல்லை
ஜானுக்கு தன் கழுதையை பிரிந்து போனதுதான்
பெருந்துக்கமாயிருந்தது
கடவுள் கழுதைக்கு கொடுத்த சாபத்தை
நான் யாரிடம் கொண்டுசேர்ப்பது?
நான் யாரிடம் கொண்டுசேர்ப்பது?
***
2]
வயநாட்டில்
நல்ல ஒரிஜினல் சாராயமும்
மீன்கறியும்
நத்தைக் கறியும் கிடைத்தவுடன்
ஜான் தன் பயணத்தை இரண்டு நாட்கள்
தள்ளிப் போட்டார்.
முடிந்துவிட்ட பயணத்தின் களைப்பு
ஜானின் வார்த்தைகளில்
தெறித்தது
தன் கழுதைக்கு
கண்ணகி பயணம்போன
வழித்தடத்தை
அவர் சொல்லியிருந்தார்.
கழுதையின் ஞாபகத்தில்
வழித்தடத்தின் வரைபடம் விரிந்தது.
கொடுங்கல்லூரில் ஜானும் கழுதையும்
சந்திப்பது என்பது தான் திட்டம்
ஃபோர்ட் கொச்சியில்
வாஸ்கோடகாமா கல்லறையில்
தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த
கழுதையை அவர் தடவிக் கொடுத்து
கழுதை வீட்டுக்கு திரும்பப் போக வேண்டும்
என்றார்.
கழுதை ஜான் கூற்றை மறுக்கவில்லை
அது கனைத்துக்கொண்டே
தனக்கு பழக்கப்பட்ட வீதியில்
நடந்து போனது
ஆங்காங்கே சில சிறுவர்கள்
கல்லெறிந்து விளையாடினாலும்
கழுத்தைக்கென்று ஒரு புகாருமில்லை.
ஜான் கள் மயக்கம் தீர்ந்தவுடன்
தன் சொந்த ஆன்மாவை சுமந்து திரியும்
கழுதையை தேடிப் போனார்.
அவர் அலைவுறும் கண்களில்
சொல்லப்படாத கதைகளின் மிச்சம்.
அம்ம அறியானின் ஆன்ம தரிசனம்
ஜானை தேடிப் போனவர்கள் பலர்
ஜானைக் கண்டடைந்தவர்கள் சிலரே.
***
3]
ஜானின் பயணத்தை யாராலும்
கணிக்க இயலாது
சில சமயங்களில் அது
இத்தாலியின் வயதான மரமாக இருந்தது
சில சமயங்களில் அது
சுந்தர ராமசாமியின் ஆசார முற்றமாயிருந்தது
சில சமயங்களில் அது
கழுதைகள் முனகிக்கொண்டே
ஓய்வெடுக்கும் ஆற்றங்கரையாயிருந்தது.
சில சமயங்களில் அது
போர்ட் கொச்சியில்
போர்த்துகீசிய கல்லறையாயிருந்தது
சில சமயங்களில் அது
நாற்றமெடுக்கும் பேருந்து நிலைய
பொதுக் கழிப்பறையாயிருந்தது
எது எப்படி இருந்தாலும்
ஜானின் பயணத்தை கணிப்பது
அத்தனை சுலபமல்ல
ஒடேஸாவின் ஒளிக்கீற்றுகள்
இன்னும் அணைந்து போகவில்லை.
ஜான் ஒரு சலன சித்திர தேசாந்திரி
ஜானின் சட்டகங்கள்
விதியின் கோணலோடு பொருந்திப் போனவை
ஜான் ஒரு கலைஞனின் மரணத்தை
விசாரிக்கப் போனான்
கடைசியில் ஜானே ஒரு மறக்கவியலாத
மரணமாக மாறிப் போனான்
ஜானின் ஒளிசட்டகங்களில் இன்றும்
நீங்கள் காணமுடியும்
ஒரு இடையறாது சுடர்விடும்
விண்மீனை.
***
சரோ லாமா