சலனம்

3

நாச்சியாள் சுகந்தி

சந்தியா  சாவு வீட்டிலிருந்து திரும்பி வருபவளைப் போல அயர்ச்சியுடனும் துக்கத்துடனும் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தாள். அந்த சாலை அவளுக்கு மிகப் பழக்கமான சாலைதான்.  ஆனால் அந்த சாலையில் ஒருபோதும் நடந்தவளில்லை. பி.எம்.டபிள்யூ காரில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு, ‘ஒரு அமைச்சரே என் காலடியில் தான் இருக்கிறான்’ என்கிற மமதையில்தான் சில மணி நேரத்துக்கு முன்பு கூட  இருந்தாள். காலம் யார் மமதையில் மண்ணள்ளிப் போடாமல் விட்டது.

சந்தியாவுக்கு தான் எந்த சாலையின் வழியே நடக்கிறோம், எங்கே செல்கிறோம் என்கிற நினைவு முற்றிலும் இல்லாமல்  கால்  போகும் பாதையில் போனாள். எத்தனை தூரம் நடந்திருக்கிறோம் என்பது தெரியாமலேயே நடந்தாள். நடந்து நடந்து நா வறண்டபோது சுயநினைவுக்கு வந்தாள். வளசரவாக்கத்திலிருந்து கே.கே நகர் வரை நடந்து வந்திருக்கிறாள். அதுவும் உச்சி வெயில் மண்டையை மட்டுமில்லாது மொத்த உடம்பையும் வியர்க்க வைத்து உடலில் இருந்த அத்துனை நீரையும் மிடறுமிடறாக குடித்துத் தொலைத்திருந்தது. நா வறட்சியும் மனக்குழப்பமும் சேர்ந்து மயக்கம் வருவது போல கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது சந்தியாவுக்கு.   

கண்ணை முழித்து பார்த்தபோது வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் இருந்தாள். சந்தியா பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்.  சினிமா நடிகைக்கு இருப்பது போல் சந்தியாவுக்கும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல நாடுகளில் ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. முகநூலிலும் டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பல லட்சம் பேர் சந்தியாவை பின்தொடர்ந்தார்கள்.  சந்தியா முகநூலில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி ஒரு நிமிடம் முடிவதற்குள் ஐநூறு  லைக்குகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். அதுவும் இப்போதெல்லாம் செக்கச் செவேலென ஹார்ட்டின்கள் குவியும். அதுவும் பேஸ்புக் ஸ்டோரியில் ரத்தத்தால் அபிஷேகம் செய்வது போல ஹர்ட்டின்கள் மழையாக  பெய்யும்.

சந்தியாவுக்கு இந்த புகழையெல்லாம் விட,  தமிழ்நாட்டின் மிக இளம்வயது அமைச்சர் என ஊடகங்களும் பத்திரிகைகளும் பாராட்டிய அமைச்சரின் காதலி என்கிற பெருமை  எல்லா செயல்களிலும் இடங்களிலும் அவளை அறியாமலேயே வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும். அந்த சந்தியாதான் இப்போது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தாள்.  கே.கே நகர் பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்தவளை அவளின் ரசிகர் ஒருவர்  தன் காரில் ஏற்றி வந்து மருத்துவம்னையில் சேர்த்து   இருந்தார். அவர் சந்தியா வேலை பார்க்கும் செய்தி தொலைக்காட்சிக்கு தகவல் சொல்ல, அங்கிருந்து சந்தியாவின் தோழிகள் இருவர் வந்திருந்தனர். அதில் ஒருத்திக்கு மட்டுமே சந்தியாவின் நிகழ்காலம், நிழல்காலம் எல்லாமும் உள்ளது உள்ளபடியே தெரியும்.

அவளிடம் தான்  டாக்டர், சந்சந்தியாவுக்கு பிளட் பிரஸர் அதிகம் இருப்பதாகவும் ஊசி போட்டுள்ளதால் அவர் தூங்குகிறார் என்றும் தூங்கி எழுந்தால் பிரஸர் குறைந்துவிடும் என்று கூறியிருந்தார். அவள், ‘சந்தியா முழித்துவிடுவாள்’ என்ற நம்பிக்கையில் அவளது அருகிலேயே உட்கார்ந்து சொட்டு சொட்டாக விழும் டிரிப்ஸை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் தண்ணீர் போன்றது. காட்சிகளாக உறைந்து விடுகிறது; வார்த்தைகளாக ‘சொட் சொட்’ என விழுகிறது. சில சமயம் ஆறுபோல ஓடிவிடுகிறது. காலம்தான் ஞானம்; காலம்தான் கடவுள்.

கண் மூடிக்கிடந்த சந்தியாவுக்கு பாலாஜி பேசியது மீண்டும் மீண்டும் தலையின் நான்கு சுவர்களிலும் பட்டு எதிரொலிப்பது போல இருந்தது.

“ஆமாம் சந்தியா, உன்ன லவ் பண்ணினதுக்கு அப்புறம்தான் வெறும் நகர செயலாளரா இருந்த நான் எம்.எல்.ஏ ஆனேன். அதே வருஷத்துல அமைச்சர் ஆனேன். அதெல்லாம் ஒத்துக்குறேன். இல்லேனு சொல்லவே இல்லை. ஆனா ரெண்டு கொழந்தைகளுக்கு அம்மாவான உன்ன நான் எப்படி ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்க முடியும் சொல்லு…? இத வச்சே பத்திரிகையில அதையும் இதையும் எழுதி நாறடிப்பானுங்க. அதனால கட்சிக்கு பேர் கெடுதுன்னு என்னை அமைச்சர் பதவியில இருந்து தூக்குனாலும் தூக்குவாங்க. ஒனக்காக நான் பதவிய இழக்கணுமா சொல்லு. கல்யாணம் பண்ணினாலும் உன்ன எப்பவும் போல பாத்துக்குவேன். அது சத்தியம்’’

“அப்ப ஒனக்கு வப்பாட்டியா இருக்க சொல்றியா’’

“ரெண்டு புள்ள பெத்தவள பொண்டாட்டி ஆக்கிக்க முடியுமா”’

“என் கூட சுத்தும்போதும், படுக்கும் போதும் நான் ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மான்னு தெரியாதா”

“சந்தியா, நெலம கைமீறி போயிடுச்சு… கல்யாணம் நடந்துதான் தீரும். என்ன அரசியலுக்கு கொண்டு வந்த என் மாமனுக்காக நான் இந்த கல்யாணத்த செஞ்சுதான் ஆகணும். அப்பத்தான் நான் உயிரோடயே இருக்க முடியும்…புரிஞ்சுக்கோ…’’

“நீ என்கூட சுத்துனது, போனது வந்தது எல்லாம் உன் கட்சி தலைவர்கிட்ட சொன்னா அப்பவும் உன் பதவி போகும் தான’’

“என்ன பயமுறுத்துறியா… இதுக்கெல்லாம் கட்சிய விட்டு தூக்கணும்னா கட்சிக்கு அதுமட்டும் தான் வேலையா இருக்கும். உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்கோ…போ… இனிமே உங்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசிய மயிரு எனக்கில்ல…போ, உன்னால முடிஞ்சத செய்”

இந்த வார்த்தைகள் சந்தியாவை உயிரோடு அறுக்கும் கத்தியாக இருந்தன. அந்த வார்த்தைகளை விடவும் அவனது முகபாவனைகள் அத்துனை கொடூரமாக இருந்தது. அதுதான் சந்தியாவை மிகவும் துன்புறுத்தியது.  வார்த்தைகளை விட மனிதர்களின் முகபாவனைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். எல்லா நேரத்திலும் ஆன்மாவை சிதைத்துக் கொண்டே இருக்கும். நிம்மதியாக தூங்க விடாது.

மனிதர்கள் கசப்பேறிய சொற்களைப் பேசும்போது அவர்களது முகபாவனைகளில் ‘சாத்தான்த்னம்’ சட்டென குடியேறிவிடுகிறது. வெறுப்பான சொற்களை பேசும்போது ரத்தம் குடிக்கும் காட்டேரியை நேரில் பார்ப்பது போன்றே சிலரின் முகங்கள் இருக்கும். பாலாஜியின்  முகமும்  அப்படித்தான் இருந்தது. அதுவும், ‘நீ ரெண்டு புள்ளைக்கு அம்மாதான’ எனக் கேட்டபோது இருந்த முகபாவம் சாத்தானும் காட்டேரியும் கலந்த முகபாவம். அந்த முகபாவம்தான் சந்தியாவை என்னென்னவோ செய்தது. ‘செத்துவிடலாமா’ என்கிற எண்ணத்தைக் கொடுத்தது. இரண்டு பெண் குழந்தைகளை நினைத்தபோது அந்த எண்ணம்  உள்ளங்கையில் இருந்த ஐஸ் கட்டி  போல் கரைந்தது.

பாலாஜி நடுநிசியில் இரண்டாம் முறையாக கூடல் முடிந்த பொழுதொன்றில், “நீ என் அதிர்ஷ்ட தேவதை.   நீ என்கூட இருக்குற வரைக்கும் அதிர்ஷ்டம்  என்கூட  ஃபிரண்ட்ஷிப்பா இருக்கும்’’ என்று சொல்லியபோது இருந்த முகத்தை நினைத்துப் பார்த்தாள். அந்த முகம்தான் இப்போது சாத்தானாகவும், காட்டேரியாகவும் மாறியிருந்தது என்கிற உண்மையை சந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை.

‘ஆண்கள் சுயநலத்துக்காக தேவதூதர்களாகவும் மாறுவார்கள். சாத்தான்களாகவும் மாறுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தேவதூதர்களும் இல்லை; சாத்தான்களும் இல்லை. சுயநலப்பிசாசுகள். அதுவும் பணம், பதவி, வெற்றி என அலையும் மகா சுயநலப் பிசாசுகள்’ என அவளது மனம்  கூட சேர்ந்து பலவற்றை சொல்லி சொல்லி துக்கத்தை அதிகப்படுத்தியது. மனம் ஓடும் ஓட்டத்துக்கு எதிர்திசையில் ஓடும் மனத்திண்மை வாய்ந்தவர் உலகத்தில் யார் இருக்கிறார்?

பாலாஜி கல்யாண மேடையில் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் முழுக்க தேனடையில் அப்பிக்கிடக்கும் தேனீக்கள் போல பயம் அப்பிக்கிடந்தது.  புது மாப்பிள்ளைக்கு உரிய எந்த குதூகலமும் அவன் முகத்தில் இல்லை. ‘இந்த கல்யாணம் எப்படியாவது நடந்தால் போதும்’ என்கிற படபடப்பு வியர்வையாக வழிந்துகொண்டே இருந்தது. அவனால் துடைத்துத் துடைத்து மாளவில்லை. பயம் வயிற்றுக்கு இறங்க இரண்டுமுறை கழிவறைக்கு செல்ல வேண்டியதானது. பயம், பயத்தினால் கொடூர பசி,  அந்த பசியினால் வியர்வை என, ‘இந்த கல்யாணமே வேண்டாம் என தூக்கிப்போட்டு விட்டு ஓடிவிடலாமா’ என்றுகூட அவனுக்குத் தோன்றியது. கட்சித்தலைமை வந்துகொண்டிருக்கிறார் என அரைமணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் வந்தபாட்டைக் காணவில்லை. மண்டபத்தில் கூட்டமோ மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் போல் இருந்தது.

கட்சி தலைமை வருவது தாமதம் ஆக ஆக பாலாஜிக்கு பயம் நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. ‘ஒருவேள சந்தியா தலைவர மீட் பண்ணி எல்லாத்தையும் சொல்லியிருப்பாளோ…  இங்க வந்து எல்லோருக்கும் முன்னாடி கலாட்டா பண்ணுவாளோ’ என தான் பார்த்த சினிமாக்களை எல்லாம் நினைத்துப் பார்த்து பயந்தான்.

பயம் துரத்தும் மிருகம். அந்த மிருகத்துக்கு அஞ்சிவிட்டோம் என தெரிந்தால் போதும்…அவ்வளவுதான், துரத்திக்கொண்டே இருக்கும். இளைப்பாறுவதற்கு நேரம் கொடுக்கவே கொடுக்காது. துரத்தும். யூகிக்க முடியாத வேகத்தில் துரத்திக் கொண்டே இருக்கும். பாலாஜியையும் அந்த மிருகம் துரத்த ஆரம்பித்துவிட்டது. அரைமணி நேரத்தில் வருவார் என்ற தலைவர் முக்கால் மணிநேரமான பின்பும் வந்து சேரவில்லை. ‘இப்போதுதான் வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார்’ என இரண்டாம் கட்ட தலைவர்கள் பாலாஜியிடம் சொன்னார்கள்.

‘தலைவர் வீட்டை விட்டு இப்பத்தான்  கிளம்பியிருக்கிறார் என்றால்.. ஏன், என்ன ஆகியிருக்கும்? சொன்ன நேரத்துக்கு வந்துவிடுகிறவர் இன்னமும் வரவில்லை என்றால்…? ஒருவேள சந்தியா விஷயம் எப்படியோ தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தால் நிலைமை என்ன ஆகும்? மீடியா நம்மை நாறடித்து விடுவார்களே… மணல் அள்ளுவதை தடுத்த தாசிதாரைக் கொன்றபோது கூட இப்படி பயந்தது இல்லையே. கட்சித் தலைமை உத்தரவையும் மீறி தடை விதிக்கப்பட்டிருந்த போதை பொருளை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்த போது கூட கட்சித் தலைமைக்காக பயப்படவில்லையே. குவாரி கான்ட்ராக்டில்  பிரச்சனை செய்த சொந்தக் கட்சிக்காரனைக்  கொன்று அதை விபத்து என நாடகமாக்கியபோது கூட இப்படி பயந்து செத்தது இல்லியே. இந்த அல்ப விஷயத்துக்கு ஏன் இப்படி பயப்படுகிறோம்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு பயத்தின் வியர்வையில் பட்டு சட்டை முழுவதுமாக நனைந்து விட்டிருந்தது. முகத்தைத் துடைக்கும் போதுதான் பார்த்தான், தன் அருகில் மணப்பெண் நிற்பதை. அவளது முகத்திலும் உற்சாகமோ, சந்தோஷமோ எதுவும் இல்லை. ஒரு இயந்திரத்தை நிற்க வைத்தால் நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.

பாலாஜியை விட ஒன்பது வயது சிறியவள்.   பாலாஜியின் துறை சார்ந்த காண்ட்ராக்ட்  எல்லாம் இவளின் அப்பாதான் கடந்த மூன்று  வருடங்களாக செய்து வருகிறார். பாலாஜிக்கு எல்லாவற்றிலும் முப்பது சதவீதம் கமிஷன் தந்துவிட வேண்டும். முப்பது பர்சண்ட் பாலாஜி என்பதுதான் இப்போதைய பட்டப்பெயர். அது கட்சித் தலைமைக்கும் தெரியும். அடுத்து வரவுள்ள மூன்று தொகுதிக்கான இடைதேர்தல் மொத்த செலவும் பாலாஜி தலையில்தான் எழுதப்பட்டுள்ளது.

நின்று நின்று சலித்துப் போனவள் அலங்கார நாற்காலியில் அமர்ந்தும் விட்டாள். அவளது தோரணை இவனுக்கு பயத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘ஒருவேளை சந்தியா இவளது நம்பரை எப்படியாவது வாங்கி இவளிடம் எல்லாமும் சொல்லியிருப்பாளா? ஏன் இப்படி ரோபோ போல் நிற்கிறாள்’ என சிந்தித்தவனுக்கு எல்லாமும் சிலந்திவலை பின்னிக்கொண்டே போவது போல இருந்தது.

‘இப்போது தெரியாவிட்டாலும் கல்யாணத்துக்கு பிறகு தெரிந்தால்….? இவள் குடும்பம் கொலைக்கும் பழிக்கும் அஞ்சாத குடும்பம். இவள் கண்ணை கசக்கிக்கொண்டு போய் நின்றால் யோசிக்காமல் நம்மை ஈவு இரக்கமில்லாமல், ஒரு அமைச்சர் என்றும் பார்க்காமல் கொலை செய்துவிடுவது உறுதி’ என நினைக்கும்போதே அவனுக்கு  தலை சுற்றுவது போல இருந்தது.

தலைவர் இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்று உறுதியாகச் சொன்னார்கள். மளமளவென வேலைகள் நடந்தன. மணப்பெண் அப்போதும் எழுந்து நிற்க விரும்பாமல் உட்கார்ந்தே இருந்தார். முதன்முறையாக அவளிடம் பேசினான் பாலாஜி. ‘தலைவர் வரப் போறாரு.. எழுந்து நில்லு’ என காதருகே போய் சொன்னான்.

அவள் யோசிக்காமல் , ‘இவ்வளவு நேரம் நின்னுட்டுத்தான் இருந்தேன். அப்ப உங்க கண்ணுக்கு தெரியவே இல்லியா… ஒரு மணிநேரமா ஆடாம அசையா நான் நிக்குறேன். அதுவும் உங்களையே பார்த்துகிட்டு நிக்குறேன். நான் நிக்குறதே உங்களுக்கு தெரியல. என்ன கருமமோ, உங்களுக்கு வேர்த்து வேர்த்து வழியுது… எதுவும் வியாதி இருக்கா…   நாசமாப் போன மடையன் எங்கப்பா.  விசாரிக்காம கட்டிக்கொடுக்குறாரு…உங்கள பார்த்தாலே பயமா இருக்கு. ஏசி ரூம்லயும் இப்படி வேர்க்குதுன்னா, என்ன வியாதியோ. இதுல சும்மா சும்மா பாத்ரூமுக்கு போயிட்டு வர்றீங்க. சுகர் இருக்கா, இல்ல வேற எதுவும் வியாதி இருக்கா? 36 வயசாகியும் இதுனாலதான் கல்யணம் பண்ணிக்கலையா. எவனும் பொண்ணு கொடுக்காம இப்ப நான் வந்து மட்டிக்கிட்டேனா’ என அவள் மணமேடை என்றும் பாராமல் கடுகடுவென வார்த்தைகளை தீக்கங்கென வீசினாள்.

அந்த வார்த்தைகள் அவன் மீது பட்டு பட்டு கொப்புளமாக்குவது போல் இருந்தன. வார்த்தைகளை அவள் தூக்கியெறியும் வேகத்தில் வெளிப்பட்ட முகபாவம் த்ரில்லர் சினிமாக்களில் காட்டுவது போல, சாத்தான் நேரடியாக தொண்டையைக் கவ்வுவது போலவே அவனுக்குத் தோன்றியது.  ஏற்கனவே துரத்திக்கொண்டிருக்கும் பயமும் இவளது இந்த சாத்தான் – தொண்டை முகபாவமும் சேர்ந்து மொத்தமாக நெஞ்சை அடைத்த உணர்வைக் கொடுத்தது. உலகமே சட்டென இருட்டாவது போல  தோன்றியது. உட்கார நினைத்தவன் அப்படியே  புயலில் சாயும் மரமென சரிந்து விழுந்தான். அவன் விழ விழ பயம் அவன் மீதேறி மிக உக்கிரமாக உட்கார்ந்து கொண்டது.  

கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார். கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தார். இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பதற்றமாகச் சொன்னார்.

மொத்த மண்டபமும்  உறைந்து போயிருந்தது. பயம் அங்கு எஜமானனாகி அதி திமிருடன் நின்றது.

***

நாச்சியாள் சுகந்தி – இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அரசியல், சினிமா, இதழியல் என இவர் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார்

3 COMMENTS

  1. தொய்வில்லாத நடையில்
    அருமையான எழுத்தாக்கம்👍
    வாழ்த்துக்கள் சகோதரி
    நாச்சியாள் சுகந்தி

  2. அருமையான எழுத்தாக்கம்வாழ்த்துக்கள் சகோதரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here