(1)
அளவில் பெரிய பனம்பழங்களை
அகாலத்தில் உதிர்த்துக்கொண்டுதான்
இருக்கின்றன ஈழத்துப்பனைகள்
சுட்டுத்தின்னக் கேட்டாலும் தராமல்
பனங்கிழங்கு மேட்டுக்காய் அதை சேகரிக்கிறாள்
மூதாய்
ஆயிரம் விதைத்தால் காட்டுப்பன்றி தின்றது போக
முன்னூறு கிழங்கு வந்தாலே
போதும் அவளுக்கு
கிழங்கு பிடுங்குவதற்கு முதல் நாள் இரவில்
நாடியில் கைகள் ஊன்றியபடி
காவல் நிற்கிறாள்
காட்டுப் பன்றிகள் போர் முடிந்தும்
தோண்டப்படாத கண்ணிவெடிகளின்
மீது தாடை கிழிந்து கிடக்கின்றன.
(02)
அம்மாவை நாள் கூலிக்கு தோட்ட வேலை செய்ய
அனுப்பிவிட்டு வாகைமரத்தடியில்
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அப்பா
தன் இளமைக்கால கதைகளை சொல்லத்தொடங்குவார்
நாடு பிடித்த கதை சொல்லுவார்
சண்டை போட்ட கதை சொல்லுவார்
அம்மாவை காதல் பண்ணின கதை சொல்லுவார்
வாகரை சமரில கால் போன கதை சொல்லுவார்
அவங்க கல்யாணம் கட்டின கதை சொல்லுவார்
அகதி முகாமில நாங்க பிறந்த கதை சொல்லுவார்
வானம் இருட்டி அம்மா வரும் வரைக்கும் கதை கேட்போம்
நாளைக்கும் அம்மா வேலைக்கு போவாள்
நாளைக்கும் அப்பா கதை சொல்வார்
நாளைக்கும் அவர் கதை கடந்த காலம் பற்றியதாகவே இருக்கும்
***
ஆயிரம் விதைத்தால் காட்டுப்பன்றி தின்றது போக
முன்னூறு கிழங்கு வந்தாலே
போதும் அவளுக்கு’
இது தான் இன்றைய விவசாயியின் வாழ்க்கை. அருமையான கவிதை வாழ்த்துக்கள்!
பாராட்டக்கள் சிந்துஜன் நமஷி. காலமும் இயற்கையும் படிமம் குறியீடென கவிமொழியாகுவதுதானே நமது சங்க மரபு. நல்வரவு கவிஞரே.
“காட்டுப் பன்றிகள் போர் முடிந்தும்
தோண்டப்படாத கண்ணிவெடிகளின்
மீது தாடை கிழிந்து கிடக்கின்றன.” – வ.ஐ.ச.ஜெயபாலன்