வைரவன் லெ.ரா
வீட்டிலுள்ள எல்லோருமே எதிர்பார்த்திருக்கும் இறுதியான நாள் இன்றாகவும் இருக்கலாம். சென்னைக்கும் நாகர்கோயிலுக்குமிடையே கடந்த ஒரு வருடத்தில் தான் எத்தனை ஓட்டங்கள். உடல் பருத்து, முகம் நிறைத்து தாடியும், அசுவாரசியமான உள்ளக்கிடங்கும் சேர வெறுமனே அமர்ந்திருந்தேன். வரவேற்பறையில் அம்மா தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்திருந்தாள். திரையில் ஓடும் காட்சிகளில் எளிதாக தன்னைத் தொலைக்கிறாள். பலர் இரண்டு நாட்களாக பேசுகிறார்கள், அழுகிறார்கள், அவ்வப்போது சிரிக்கிறார்கள். அம்மாவும் அதே காட்சிகளை எப்படி மீண்டும் மீண்டும் முகம் சுழிக்காமல் பார்க்கிறாள். “அம்மா, கடுந்தேயில போட்டு தாரியா. மண்டக்கனக்கு”. நான் சொல்லியது காதில் விழவில்லையோ! அசையாமல் இருந்தாள். மெதுவாக எழுந்து அவளைத் தொட்டேன், “என்ன மக்ளே நேரம் ஆயிட்டோ.. அப்பாக்கு இப்போதான ஜூஸ் கொடுத்தேன். கஞ்சி வைக்கணும். விஜிய எங்க” . அம்மை பதற்றத்தோடு பேசினாள். அப்பா அவரின் அறையோடு ஒதுங்கிய பிறகு உருவான பதற்றம். ஒன்றரை வருடங்களாக அழுதவள், இப்போது எல்லாவற்றையும் எளிதாக எடுக்க ஆரம்பித்துவிட்டாள். அவளின் கண்கள் ஆழத்தில் கிடந்தன. எவ்வளவு ஒல்லியாகி விட்டாள். ஒழுங்காய் சாப்பிடுகிறாளா? என்றைக்காவது நான் கேட்டிருக்கேனா? எங்கோ போய், எப்படியோ குழம்புகிறேன். “விஜி சாதனம் வாங்க போய் இருக்கா. நான்தான் கடுந்தேயில போட்டு கேட்டேன்,” என்றேன். “பாலு ஊத்தி டீ போட்டு தாரேன்.” அம்மை அடுக்களைக்குள் நுழையும் முன்னே சொன்னாள். “அம்மா, நீதான் பால் இல்லன்னு சொன்ன. அவ கடைக்கு போயிட்டு வரும் போது பாலும் வாங்கிட்டு வருவா.”
அப்பாவழி ஆச்சி நான் பிறந்து மொட்டை போடப் போகும்போது சொல்லியது வரை ஓர்மை இருக்கும் அம்மை எப்படி ஆகிவிட்டாள். கட்டிலில் சாய்ந்து படுத்தேன். என் மகனோ வலப்பக்கமிருந்த இருண்ட அறையின் வாசலில் நின்றபடி உள்ளே செல்ல நான் அனுமதிப்பேனா? என்பது போல பரிதாபமாகப் பார்த்தான். மேலே சுழலும் மின்விசிறியை நோக்கினேன், ஐந்தில் சுற்றினாலும் காற்றே வரவில்லை. தூசி படிந்து அலங்கோலமாக சுழல்கிறது. ‘மாசத்துல ஒரு ஞாயிறாச்சும் ஃபேன தொடைக்கனும். அப்பா இருக்கது வீட்டுல ஒரு நாளு. அன்னைக்காச்சும் வேல இல்லாத நாள் இருக்கா. ஒனக்க கப், போட்டோ வைக்க செல்ப் கேட்டேலா. அதையாச்சும் ஒழுங்கா தொடைக்கியால, லேய் காதுல விழுகா.தோளுக்க ஒசரம் வந்தா போதாது? ஆம்பளக் கணக்கா நிக்கணும். பாரு கூனு உழுந்த கெழடு மாறி நடக்கத. கைய நீட்டணுமா சொல்லுல,’ அப்பா சொல்லும்போதே கையில் கிடைத்த துணியால் செல்ஃப்பை துடைக்க ஆரம்பித்துவிடுவேன். “அப்பா, தாத்தா ரூமுக்கு போட்டா,”என் காதருகே வந்து மெதுவாகக் கேட்டான். “அங்க இருக்க எதையும் தொடக் கூடாது. தாத்தா ஒறங்கிட்டு இருந்தா அவர எழுப்பக் கூடாது. இரி நானும் வாறேன்,”. நானும் அவனோடு அப்பாவின் அறைக்குச் சென்றேன்.
‘சைக்கிளு ஓட்டும்போ கீழ விழத்தான் செய்வ, சின்ன பொலயாடிமவன கேளு, கைல காலுல அடிபடத்தான் செய்யும். அதுக்கா இப்புடி அழுவா. ஆம்பளப் பய அழுவியால. அழுதைன்னா காலுக்கு கீழ இழுத்துருவேன்’
‘பத்தாம்ப்பு கணக்கு பாடத்துல நூத்துக்கு அறுவது மார்க் எடுத்தா இப்போ என்னாடே. மயிரபுடுங்கி பாஸ் ஆயிட்டலா. எனக்க பிரண்ட் ஒருத்தன் சொன்னான், டிவிடி பள்ளியோடத்துல இடிஎ ன்னு ஒரு படித்தம் இருக்காம். ஈஸியா மார்க் எடுக்கலாம். இதுக்குன்னு அம்மைக்க அண்டைல கெடந்து அழுவியால. எந்தில கண்ணத் தொட. கையக் காட்டு, ஒரு படம் பாத்துட்டு, வரப்ப புரோட்டா தின்னுட்டு வா’
‘பிரசவ வலி எடுக்க பொம்பளயே உள்ள தைரியமா போய் இருக்கா. நீ எதுக்கு மயிரேபோச்சுன்னு அழுக. கெதியா இருல முட்டாப் பயல’.
அப்பாவின் முன்னால் நான் அழமுடியாது. அவருக்கு அழுவது பிடிக்காது. அப்பா கோபமாகவோ அல்லது வேறு வார்த்தைகளின் மூலமாகவோ அழுவதை தவிர்க்கச் சொல்வார். ஆச்சியும் தாத்தாவும் இறந்தபோதும் அப்பா அழவில்லை. என் நினைவுமுடிச்சுகளில் இருந்து அவர் அழுத ஏதோவொரு தருணத்தை ஓர்மையில் கொண்டுவர முயற்சி செய்தேன். என் பால்ய பதின்பருவங்களில் அப்படியொரு தருணம் நிகழவேயில்லை. அப்பா பெயிண்டராக வேலைபார்த்து பின் கான்டிரக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தவர். ஞாயிறு மட்டுமே வீட்டில் இருப்பார், அன்றைக்கும் ஏதாவதொரு வேலையைச் செய்வார். செய்தித்தாள் தினமும் வாங்கும் பழக்கமுள்ளவர், காலையில் வெளிநடையில் இருந்து பொறுமையாகப் படிப்பார். வாரம் ஒருமுறை மொத்தமாகக் கட்டி வைப்பார். வீட்டிற்கு வெளியே நிற்கும் சங்குபுஷ்ப செடியின் கொப்புகளை வெட்டிவிடுவார். பழைய நாற்காலி, மின்விசிறிக்கு வர்ணம் பூசுவார். ஞாயிறு மதியம் கண்டிப்பாக வெளியே சென்று நான்கு காலில் திரும்பி வருவார். அப்போதெல்லாம் கூட அப்பா சாதாரணமாகத்தான் இருப்பார். ஆனால் அந்தவொரு சமயம் மட்டும் என்னை விரட்டிவிட்டு உதடுகளின் அடியே போயிலையை சொருகிவைப்பார். அவர் பேசும்போதும் வாய் நாறும், அந்நேரங்களில் அவரும் என்னை அருகில் சேர்த்துக் கொள்ளமாட்டார். நானும் செல்லமாட்டேன்.
“மக்ளே, அப்பாட்ட ஃபோன கொடுக்கேன் பேசு”
“என்..னா எப்..புடி இருக்..கீரு”
“ஏம்ப்பா, விட்டு விட்டு கேக்கு. என்னாச்சு”
“வாயிபு..ண்ணுடே. வெண்ண தடவியிருக்கேன்.. சரியா.. யிடும்…”
“அப்பா. லைன்ல இருக்கீங்கலா”
“மக்கா. அப்பாக்கு பேசமுடியல. ஆசுவத்திரி வாங்கன்னாலும் வரமாட்டுக்காரு. வாயி புண்ணு, இப்போவும் மத்தத வாயில உருட்டி வச்சுட்டு தான் இருக்காரு. நீ ரெண்டு ஏச்சு கொடு..”
“அவன்ட்ட என்ன பேசன்னு தெரியாது. சரி சரி ஆசுவத்திரி போறேன்டே”
இரண்டு மாத காலம் மாறி மாறி மருத்துவமனைகளை மாற்றினாலும் வாய்ப்புண் குணமாகவில்லை. பிறகு நான்தான் வில்லியத்திடம் போகச் சொன்னேன்.
“இது வேற மாறி இருக்கு. பயப்படாண்டாம். ஒன்னியும் இருக்காது. சாம்பிள் எடுத்து திருவந்திரம் அனுப்பியிருக்கேன், “வில்லியம் அன்றிரவே அழைத்துச் சொன்னான். நான் உடனே அம்மாவை அழைத்தேன்.
“அம்மா, எத்தன நாளா இருக்கு இது. முன்னாடியே சொல்லலாம்லா”
“அவரு எங்க உட்டாரு.. நீங்க தீவாளிக்க வந்தப்போவே சொல்லச் சொன்னேன். இப்போ கழுத்துக்க கிட்ட கட்டி மாறி இருக்கு மக்ளே. எதையும் முழுங்க முடியல. நீராகாரம் தான் கொடுக்கேன்”
“அப்பாக்கு பேச முடியுமா”
“இப்போதான் மாத்திர போட்டுட்டு படுத்து இருக்காரு. எழுப்பவா”
“வேண்டாம்மா ஒறங்கட்டும். நாளைக்கு கூப்டுகேன்,”எனக்கு தவறாகப் பட்டது. கைப்பேசியில் வாய் புற்றுநோய் பற்றி அதிகம் ஆராய ஆரம்பித்தேன். அப்பாவின் போயிலை பழக்கம் என்னுடைய சந்தேகத்தை வலுப்படுத்தியது. என் மனைவி வரவும், எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன்.
“ஒன்னும் பயப்படாதீங்க. அதுலாம் மாமாக்கு ஒன்னும் ஆகாது. சூட்டுக்கு வருமாயிருக்கும்.” என் அருகே வந்தமர்ந்தாள்.
“பய தூங்கிட்டானா?” ஆமாம் எனத் தலையை அசைத்தாள். விளக்கை அணைத்தேன்.
காலை நேரமாகவே எந்திரித்தேன். அவள் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். எனக்கு மதியம்தான் வேலைக்குச் செல்லவேண்டும். போகும் போது சைல்ட் கேரில் மகனை விட்டுச் செல்வேன். மாலை, அவள் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வாள். காலை, மதியம் இரண்டு நேர உணவும் அடுக்களையில் இருந்தது. நான் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்தேன். வேலைக்குச் செல்லும் முன், என்னைத் திட்டாமல் சென்ற நாளேயில்லை. செல்ஃப்பில் இருந்த பிள்ளையார் படத்தின் முன்னே விளக்கேற்றியபடியே, “ஒன்னும் குழப்பிக்காதீங்க.கேன்சர்லாம் இருக்காது. அவன் தோச கேட்டா மாவு பிரிட்ஜ்ல இருக்கு. இட்லி ஹாட்பாக்ஸ்ல இருக்கு,”சொல்லிக் கொண்டே அருகில் வந்து, என் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றாள்.
அவள் செல்லவும் மகன் விழித்து அழும் ஓசை கேட்டது. ஓடி அறைக்குச் சென்று அவனைத் தூக்கி வெளியே வந்தேன். சாதாரண நாளுக்குரிய எல்லாவற்றையும் முடித்தேன். அப்பாவின் முகமே என்னை ஆக்கிரமித்திருந்தது. காலை நான் விழிக்கும் முன்னே எழுந்து குளித்து முடித்து, நெற்றி நிறைத்து திருநீறும் நடுப்பொட்டில் மஞ்சணையும் பூசி வெளிநடையில் அமர்ந்திருப்பார். என்னைப் பார்த்து முறைக்கவும், குடுகுடுவென பல் தேய்க்க ஓடுவேன். சேர்ந்து காலையில் உண்ண வேண்டும். இட்லியோ, ஆப்பமோ, தோசையோ என் தட்டில் மிச்சம் இருந்தால், தலையில் குட்டு விழும். வலித்தாலும் அழக்கூடாது. என் மடியில் இருந்தவன் மிச்சம் வைத்த இட்லியை எடுத்து குப்பையில் போட்டேன். மகனுக்கு தொலைக் காட்சிப் பெட்டியில் சூச்சூ டிவியை ஓடவிட்டு, கைப்பேசியில் வில்லியத்தின் எண்ணை விரல்களால் தொட்டபடி இருந்தேன். அவன் என் மடியில் வந்தமர்ந்தான்.
“தாத்தாக்கி காச்சலா. அதான் நேத்துக்கு நீயும் அம்மாவும் பேச இருந்தீய”
“ஆமா மக்கா. தாத்தாக்கு காச்சலு. ஒன்னும் ஆகாதுலா, நீ சொல்லு”
“காச்சல் சரி ஆடும். ஸ்டாபரி மருந்த குடிக்க சொல்லு”
“சரி மக்ளே”,அவனை இறுக அணைத்தேன்.
வில்லியம் என்னை அழைத்ததும், அப்பாவிற்கு செய்ய வேண்டிய மருத்துவம் பற்றி நேரடியாக உரையாட ஆரம்பித்துவிட்டான். அவன் சொல்லிமுடிக்கும் வரையிலும் அமைதியாக இருந்தேன், உண்மையில் என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. எப்படி அந்த உரையாடல் முடிந்தது எனவும் நினைவில்லை. விஜியை உடனே அழைத்தேன். முகம் வியர்த்தது, பெரும்மூச்சை இழுத்தேன். விக்கலும் கூடவே வந்தது. இடுப்பை சின்ன கைகள் அணைத்து இழுத்தது, முட்டிப் போட்டு அவன் அருகே அமர்ந்தேன். “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல,”சொல்லிக் கொண்டே கன்னத்தில் முத்தமிட்டான். ‘இல்ல இருக்காது. நேரா ஊருக்கு போய் நானே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். பொய்யா இருக்கும்,’ புலம்பினேன்.
மூன்று மாதம் ஒருவரின் உடலையும் மனதையும் இப்படியொரு மாற்றத்திற்கு கொண்டு போய் நிறுத்துமா? அப்பா பாதியாக இருந்தார். உதடுகள் பழுத்தும், கழுத்து வீங்கியும் இருந்தது. வீட்டிற்கு வரும்வரையிலும் இருவரிடமும் எதுவும் சொல்லாமல் வந்திருந்தேன். ஊருக்கு கிளம்பும் வரையிலும் இதுவெல்லாம் பொய் என்று நம்பிக் கொண்டிருந்த நான், நேரில் அப்பாவைப் பார்த்ததும், சரி அடுத்து என்ன? என்பது போல யோசிக்க ஆரம்பித்தேன். வில்லியம் அவனுக்குத் தெரிந்தவர்களிடம் பேசி அடையார் இன்ஸ்டிடியூட்டுக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்தான். வீட்டில் ஒருநாள் தான் இருந்தேன். இருவருக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மாலையே சென்னை கிளம்ப முடிவுசெய்தேன். வழக்கமாக என்னைக் கண்டால் கொஞ்சமாவது பேசும் அப்பா, அன்றைக்கு வீட்டில் இருந்தவரை என் கண்களில் படுவதைத் தவிர்த்தார். தலையை தாழ்த்தியே நடந்தார். நான் ஏதாவது பேச முயற்சித்தால் இரண்டு வார்த்தைகளில் அதுவும் உக்கிரமூர்த்தியாக முடித்துவிடுவார். அவரின் அறையிலேயே இருந்தார். எப்போதும் ஒழுங்கோடும் சுத்தமாகவும் இருக்கும் அறை, வலை பிடித்தும் தூசிகள் நிறைந்தும் காணப்பட்டது. “அம்மா, அப்பா ரூம ஏன் இப்புடி போட்டு வச்சுருக்க,”கேட்டேன்.
“என்ன உள்ள விட்டாதானே. என்ன ரகசியம் இருக்கோ,” அடுக்களையில் இருந்து குரல் கேட்டது. அப்பாவின் அறையில் எந்தச் சத்தமும் இல்லை. அவர் உறங்கியிருப்பார் என்றெண்ணி மெதுவாக அறைக்குள் நுழைந்தேன். அப்பா கட்டிலில் வாயை இறுக்க பொத்தி குனிந்து இருந்தார். அவரின் உடல் துடித்தது. கால்களை தரையில் அழுந்தப் பதித்திருந்தார். அவரின் தலை உதறல் எடுத்தது. உள்ளே என் இருப்பை அறிந்தவர், “வெளிய போல தாயோளி,”என்றார். சிறுவயதில் என்னைத் திட்டிய வார்த்தைகள் தான், ஆனாலும் முதல்முறையாக வாய் திறந்தேன். “வாயி மயிர வச்சு பேசாம இருந்திருக்கணும், நல்ல உருட்டி உருட்டி வச்சீங்களா. இன்னைக்கு யார் பாடப் போறா? நாங்கதான்.”
அமர்ந்திருந்த அப்பாவின் உடல் நடுங்கியதை உணர்ந்தேன். எதிரே நிற்கும் என்னை பாதம் முதல் தலைவரையிலும் மெதுவாக நோட்டமிட்டபடியே வலதுகையால் புடைத்து வெளித்தெரிந்த நெஞ்செலும்பை வருடினார். கண்களில் ஆத்திரம் பொங்க என்னையே வெறித்தவர், என் கண்களை நோக்கவும், காரி உமிழ்ந்தார்.
“இப்படி வீட்டுக்குள்ள துப்புனா, மத்தவங்களுக்கும் சோக்கேடுதான் வரும்,” எனக்கு அவரைப் பார்த்தபோது உருவான பரிதாபம் மெல்லமெல்ல கோபத்தை நோக்கி கூட்டிச் சென்றது.
சட்டென்று எழுந்தவர் என்னை அடிக்க வலதுகையை நீட்டவும், இடதுகையால் அதைத் தடுத்தேன். கண்கள் சிவக்க, “வெளிய போல புண்டாமவன,” நெஞ்சைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அறைக் கதவை சடாரென்று சாத்தினார். ஆத்திரம் அடங்காமல் அடுக்களைக்குள் சென்றால், அம்மா சேலையால் கண்களை துடைக்கிறாள். எத்தனை நாளாக இது தொடர்கிறது.
மாலை அவரை சென்னை அழைத்துச் செல்ல பெரும்பாடு ஆனது.
“இந்த சின்ன கூதிமவன் வீட்டுல போய் இருந்தா பட்டிய விட மோசம். நான் வரல்ல. இங்கய சாவேன். கொள்ளி போடக் கூட இவன் வேண்டாம்.”
“ஒமக்கு இருக்க எழவு சோக்கேடுக்கு இங்கேய இருந்தா சாவத்தான் செய்யணும். சென்னைல போய் நா எதுவும் பேசமாட்டேன். கெளம்பும்.”
“எனக்க வீட்டுல நின்னுட்டு. எம்முன்னால வாயிபுண்டைய தொறக்கயோ,”அவரின் வாயில் பழுப்பும் ரத்தமும் வடிய ஆரம்பிக்கவும், எனக்கு பதற்றமானது.
“சரிப்பா. அம்மா தொடைக்க துணிய எடும்மா. இப்போ என்ன ஒடனே சாவணும்மா” அம்மாவை பார்த்து கத்தினேன். உள்ளறையிலிருந்து துவர்த்தை எடுத்து வந்தவள், அப்பாவின் அருகில் செல்ல தயங்கி நின்றாள்.
“வெளிய போல புண்டாமவன. சாவு எனக்க குன்ன,”அடிப்பட்ட மிருகத்தின் கண்கள் தோன்றி மறைந்தன.
இருவரும் சென்னையில் பேசிக் கொள்ளவேண்டாம் என முடிவெடுத்தவுடன்தான் கிளம்பி வந்தார். விஜி நான் நினைத்ததிற்கு எதிர்மாறாக நடந்தாள். வீட்டிற்கு இருவரும் வந்த நாள் முதல் முகம் கோணாமல் நடந்தாள். ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தாள். வீட்டில் அதிகமாய் கோபப்படுபவள், எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கிறாளோ! நடிக்கிறாள் எனும் சந்தேகமே வலுத்தது. ஒ1ரு நாள் என் கை தவறி ரிமோட் விழுந்து உடையவும், “ஒழுங்கா ஒர்க் ஆகல, நானே புதுசு வாங்கணும்ன்னு நெனச்சேன். நல்லவேள நீயே ஒடச்சுட்ட,” புன்முறுவலோடு சொன்னாள். வீடும் எல்லாவற்றுக்கும் பழகியது. அப்பா படுக்கையை விட்டு எப்போதாவது எழுவார், அறைக்குள்ளேயே நடப்பார். நாங்கள் இருவரும் முடிந்தவரை ஒருவருக்கொருவர் முகம் சந்திக்காமல் தவிர்த்தோம். அப்பாவின் அறையைத் தட்டாமல் யாரும் உள்ளே செல்லக் கூடாது என எல்லோருக்கும் சொல்லியிருந்தேன். முதல் அறுவைசிகிச்சையில் கீழ்தாடையில் உதட்டிற்கும் ஈறுகளுக்கும் இடையே கொஞ்சம் சதைகளை எடுத்தார்கள். அதே நேரம் புற்று பரவாமல் இருக்க கீமோதெரபியையும் முயற்சித்தோம். அப்பாவின் உடல் திடீரென்று நீர் பிடிக்கும், பின் மெலிவார். நீராகாரம் மட்டுமே உண்ணமுடியும். என் மகனையும் அம்மாவே பார்த்துக் கொண்டாள். அவனுடைய தமிழ் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக வருகிறதாம், விஜி சொன்னாள்.
அடையாறு இன்ஸ்டிடியூட்டில் அப்பாவோடு எத்தனை இரவுகள் தனியே இருந்திருக்கிறேன். விஜியும் பாவம் தான், அம்மாவையும் அழைத்துக்கொண்டு தேவையானவற்றை தினமும் காலை எடுத்து வருவாள். அம்மாவோ இரவில் மருத்துவமனையில் தங்க மறுத்தாள். இரவுகளில் பாடும் ராப்பறவைகளின் அழிச்சாட்டியம் எனக்கு உறக்கம் இல்லாத நீண்ட இரவுகளையே அளித்தன. அப்பாவின் முன்னே போய் நிற்பேன். உறங்கிக் கொண்டிருப்பார். உடல் மெலிந்து, தலைமுடி உதிர்ந்து, கண்கள் வெளுத்து, காணும் போதெல்லாம் என் தொண்டை கனத்து, கண்ணீர் முட்டும். கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் மருத்துவமனையில் கொட்டினாலும், ஏதாவது மாறப் போகிறதா?இளவயதில் என் உடம்பு அவருடையதில் பாதியாவது இருந்ததா! அப்பாவின் முகமா இது? சிறுபிள்ளை கிறுக்கியது போல இரத்தச் சிவப்பான கோடுகள். வாய் சிறுத்து உதடுகள் ஒட்டும் முனைகளில் எப்போதும் ஒழுகும் பழுப்பு. முன்னே கிடப்பவரை பார்த்து கேட்கவேண்டும் போலத் தோன்றியது. எல்லாம் எங்கே போயிற்று? இது நீங்களா? எதுவும் முடியாதா? ‘நீங்களே வருத்திக்கிட்டு வச்ச எழவுதான’. அரை லட்சம் தாண்டியாச்சு, இன்னும் இரண்டுக்கு மேலோ, அதற்கும் மேலாகவோ ஆகலாம். தலைசுத்த ஆரம்பிக்கும், சட்டென்று அவரே என்னை நிறுத்தி, ‘இப்படித்தான் நடக்கணும்ன்னா அத மாத்த முடியாதுல தாயோளி,’ என்பார்.
மருத்துவம், சிலசமயம் மந்திர மாயாஜாலங்கள் நிறைந்தவை போலத் தோன்றும். சென்னை வந்த ஆறு மாதம் கழித்து அப்பா கொஞ்சம் பேச ஆரம்பித்தார். இட்லி கேட்டார், மெதுவாக சவைத்து உண்ண ஆரம்பித்தார். விஜி வழக்கம் போல கோபப்பட ஆரம்பித்தாள். அம்மாவிற்கும் அவளுக்கும் அடுக்களையில் முட்டல் வரும். ஆறு மாதமாக அடையாருக்கும் ஆதம்பாக்கத்திற்கும் வாரம் ஒருமுறை அலைந்து, அலுவலகத்தைச் சமாளித்து, வார இறுதியிலும் வீட்டில் யாரும் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசிக் கொள்ளாமல், அப்பா எனக்காக சேர்த்து வைத்திருந்த பணம் போக, மாதம் சம்பாதிப்பதில் பாதி மருந்துக்கும் போக்குவரத்து செலவுக்கும் போக, ஒவ்வொரு நாளையும் முட்டி முட்டி தள்ளிக்கொண்டிருந்தேன் எதிலும் ஈடுபாடு இல்லாதவனாய், இரவுகளில் தனியே படுத்து, ஃபோர்னோகிராபி படங்களைப் பார்த்தால் கூட எடுக்காதவனாய் இருந்திருக்கிறேன். மூச்சை இழுத்து யாரும் எதுவும் என்னை அழுத்தவில்லை என்பது போல மெதுவாக விட ஆரம்பித்திருந்தேன். நடுநிசியில் எல்லோரும் உறங்கியவுடன் அப்பாவின் அறையை சிலசமயம் எட்டிப் பார்ப்பேன். ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருப்பார். முகத்தை விரல்களால் தொட்டுப் பார்ப்பார். முதல் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தார்.
“கண்ணாடி முன்ன பொம்பளக் கூட இத்தற மணிக்கூறு நிக்க மாட்டா. ஒமக்கு எதுக்கு இவ்வளவு அலங்காரம்.”
“யாமுட்டி. நாப்பது வயசு மாரியா இருக்கேன். மீச, தாடிய சரியா ஒதுக்கி விடணும். சுண்டுக்கு கீழ நீண்டு மீச வளர உடக் கூடாது. ஒனக்கு கடுப்பு, நீ அரக்கெழவி ஆயிட்டளா”
நானோ நாற்காலியில் முகம் நிறைத்து பவுடரும், பணித்து வாரிய தலையோடும் அமர்ந்திருப்பேன்.
இரண்டு மாதம் கழித்து மீண்டும் வாயில் புண் வர ஆரம்பித்தது. அறுவைச் சிகிச்சை செய்த இடம் தவிர மற்ற இடங்களில் புற்று வளர ஆரம்பித்தது. விடுமுறை நாட்கள் போல இரண்டு மாதம் கடக்க, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தோம். இம்முறை மருத்துவர் சொல்லியவை நம்பிக்கையற்ற வார்த்தைகள். வில்லியமையும் சென்னைக்கு அழைத்தேன். வலி குறைய வேண்டுமென்றால் வாயின் மற்ற இடங்களுக்கும், தொண்டைக்கும் பரவாமல் இருக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அப்பா ஒரு சராசரி மனிதனுக்குரிய எதையும் அனுபவிக்க இயலாதவராகி விடுவார் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து அறிந்தேன். அம்மாவின் கண்கள் அப்பாவின் முன் எப்போதும் நிறைந்தே இருக்கும். அறுவைசிகிச்சை முடிந்ததும் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்தை தொடர வேண்டும். சென்னை எதற்கு? ஒழுகினசேரி போகச் சொல்லி அம்மா சண்டை போட ஆரம்பித்தாள். அவள் நினைத்ததே நடந்தது.
“தெய்வத்த நம்பனும்ன்னு சொல்லது இப்போ வெறும் வார்த்ததான், ஆசுவாசப்பட்டுக்கலாம் . எனக்க பிரண்ட்டு நீ, இனி காசு எவ்வளவு செலவு பண்ணாலும் மாமா பழைய ஆளாட்டு வரமுடியாது கேட்டியா. இருக்க வர அவர சந்தோசமா வைக்கப் பாரு. சாவ முன்னாடியே செத்த வீடு கணக்கா இருக்காண்டாம். ஒனக்க சக்திக்கு நீயும் அடையாரு இன்ஸ்டிடியூட் எல்லாம் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்ட. ஒங்க அப்பாக்க சேப்டர் முடிய போகு. எனக்க எக்ஸ்பீரியன்ஸ்ல சொன்னா இன்னியும் ரெண்டு மூணுநாளு. மெட்ராஸ் போகவேண்டாம்ன்னு சொல்றேன். ஐடி தான ஒர்க் பிரம் ஹோம் கேட்டுப்பாரு,”வில்லியம் சொல்லும் போதே என் கால்கள் நடுங்கின. நாற்காலியில் இருந்து எழுந்தேன். நெஞ்சு பலமாக விம்மியது. கண்கள் நிறையவும் உடனே கைகளால் துடைத்தேன்.
வில்லியம் என் கைகளைத் தடவிக் கொடுத்தான், “முத்தி போயிதான் கவனிச்சு இருக்கோம். தொண்ட வர பரவி பாதி எடுத்தாச்சு. குழாய் மாட்டிதான் ஆகாரம் போறதுலாம் துக்கம்டே. ஸ்டிச்சிங் போட்ட இடத்துல சீழ் கட்டிருக்கு. மாமா அனுபவிக்க வலி ஒனக்குத் தெரியாது. ஆனா ஒன்னுடே.. இன்னும் அந்த மனுஷன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரல. என்ன வீம்புள்ள மனுஷன்டே. கர்த்தாவே இந்த சங்கடம் தீர ஒரு வழியச் சொல்லும்,” அப்பாவின் அறையில் நாங்கள் இருந்தோம். அரைத் தூக்கத்தில் இருந்தார். அப்பாவின் ஏறியிறங்கும் நெஞ்சும், விசில் போல ஒலிக்கும் மூக்கில் இருந்து குவியும் காற்றும் என்னுள் மெல்ல பயத்தை விதைத்தது. அப்பாவின் முகஜாடையில் நானும் கண்ணாடியில் தெரிய ஆரம்பித்தேன்.
நாங்கள் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களும் விஜியும் அம்மாவும் பல கதைகளை பேசினார்கள். விஜி கடைக்குப் போய் வருவாள், பக்கத்து வீடுகளுக்கு கருக்கல் நேரம் சென்று இரவு வரையிலும் கதையடிப்பாள். அம்மையோ என் மகனைத் தூக்கிக் கொண்டு வெளிநடையில் போய் அமருவாள். நான் மட்டும்தான் வீட்டினுள் அப்பாவைப் பற்றிய சிந்தனைகளோடு இருக்கிறேன் என நினைத்தேன். விஜி இரவு வீட்டிற்கு வந்ததும், “ஏங்க வடசேரில ஆர்.வி ன்னு ஒரு கட இருக்காம். புரோட்டாவும் மட்டனும் நல்லா இருக்குமாம். வாங்கிட்டு வாரீங்களா,” கேட்கவும், அம்மை என்ன நினைப்பாளோ என்பது போல அவளைப் பார்த்தேன். “எனக்கு புரோட்டா வேண்டாம் மக்ளே. தோச இல்ல சப்பாத்தி வாங்கிட்டு வா. அப்பாக்கு நைட் பால்கஞ்சி கொடுக்கலாம்,” என்றாள்.
எப்போதும் பத்து மணிக்கு மேல் எங்கள் அறைக்கதவைத் தட்டாத அம்மை அவசரமாக எழுப்பினாள், “ஒங்க அப்பாக்க மேலெல்லாம் தணுத்திருக்கு. உசுரு நாடில ஏறி நிக்கி. வில்லியத்துக்க நம்பர் எனக்ககிட்ட இல்ல, அவனக் கூப்டணுமா. மக்ளே நீ வேணும்னா கூப்புட்டு வரச் சொல்லு. எதுக்கும் அவன் ஒருவாட்டி பாக்கட்டுமே,”அம்மை ஆர்வமாக சொல்லவும் குழம்பிப் போனேன். “அவன் வந்தா மட்டும். முடிஞ்சா சொல்லிக்கலாம்,”கூறிவிட்டு திரும்பி விஜியைப் பார்த்தேன். அவளுடைய உதடுகள் மெல்லியதாக விரிந்து மூடின.
அறைக்குள் செல்லும்போது ஆடைகளின் புழுங்கல்வாடை வந்தது. அப்பாவின் உடல் ஜில்லென்று இருந்தது. அம்மை மடியில் பேரனை அமர்த்தியபடி கையில் பால்கிண்ணத்தோடு வந்தாள். எனக்கு காரணம் புரியவும், “நாமளும் பண்ண வேண்டியத பண்ணி பாப்போம். மேலாங்கோட்டுகாரி ஒருமுடிவச் சொல்லு,” அரைகுறை உறக்கத்தில் இருந்தவன் கையில் கரண்டியைக் கொடுத்து அவளே தொண்டையில் மாட்டியிருந்த குழாயில் இரண்டுதுளி பாலை ஊற்றினாள். பிறகு, புலம்பிக்கொண்டே வாயில் இருந்த தழும்பில் இரண்டுதுளியை ஊற்றினாள். விஜியும் அதைத் தொடர்ந்தாள். அம்மை என்னைப்பார்த்து கண்ணை அசைக்கவும் நானும் பால் ஊற்றினேன். ஒருமணிநேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அங்கேயே இருந்தோம். “உறக்கம் வருகு, நாளைக்கு காலைல பாப்போம். மனுஷன் விடக்கூடிய ஆளா?” சொல்லியபடியே மடியில் உறங்கிக்கொண்டிருந்த பேரனை தோளில் மாற்றி உறக்காட்டியபடி வெளியே சென்றாள். விஜியும் நானும் கூடவே சென்றோம்.
காலை எழுந்ததுமே வில்லியம் சொன்ன மூன்றாம் நாள் இதுதான் என்பது ஞாபகம் வந்தது. அப்பாவின் அறைக்கு எழுந்ததுமே சென்றேன், நாடி மட்டும் ஏறி இறங்கியது. பக்கத்தில் அப்பாக்கு கொடுத்ததற்கு அடையாளமாக ஜூஸ் டம்ளர்,பாதி மிச்சமிருந்தது. விஜி வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்க வெளியே செல்லவும், அம்மை அவளை அழைத்து பாலும் இல்லையென அதையும் வாங்கி வரச் சொன்னாள். நான் கட்டிலில் அமர்ந்திருந்தேன். என் மகனோ அப்பாவின் அறைக்குக் கூட்டிச் செல்ல நச்சரிக்க நானும் கூடவே சென்றேன். அப்பாவின் கண்கள் பாதி திறந்திருந்தன. பேரனைப் பார்க்கவும் கண்கள் முழுவதும் விரிந்தன. விரல்கள் அசைந்தன. நாடி வேகமாக ஏறி இறங்கியது. காவிச் சாரம் மட்டும் கட்டி சட்டையில்லாமல் கிடந்தார். வயிறு ஒட்டி, நெஞ்செலும்புகள் எல்லாமே அச்சுப் போலத் தெரிந்தன. ஒடுங்கிய முகத்தில் கண்ணும் மூக்கும் சிறுத்து, தையல் தழும்புகளால் சுருங்கிய வாயும், தொடர்ந்து அவரைப் பார்க்கபார்க்க என்னை அறியாமல் கண்கள் கலங்கவும், அப்பாவின் உடல் உதற ஆரம்பித்தது. கை கால்கள் இழுத்து பிடித்தன.
நான் ‘அம்மா’ என்று கத்தினேன். அம்மை உள்ளே ஓடிவந்தாள். அப்பாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவர் படுத்திருந்த கட்டிலில் நீர் நிறைந்து அருவி போலக் கொட்ட ஆரம்பித்து, அறையை நிறைக்க ஆரம்பித்தது. நான் மகனை தோளில் தூக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். அவரின் உடலில் இருந்து ஏதோவொன்று பிய்த்துக் கொண்டு வெளியேற முயற்சிப்பது போலவும், அதன் நுனிக்கயிற்றை விரலிடுக்கில் பிடித்து இழுப்பவர் போலவும் அப்பா தோன்ற, “விட்டு தொலையும்வே. செத்து போவும். தாயோளி மவன். நீயும் தான் என்ன பாடுபடுத்துக,” கத்தியபடியே அம்மாவைப் பார்த்தேன். பூர்ணமான புன்னகை நிரம்பிய முகம். அவள் பின்னாலே விஜியும் அதே சாயலில் நின்றாள். கையில் இருந்தவன் அழ ஆரம்பிக்க, கண்களை உருட்டி, நாக்கை பல்லிடுக்கில் கடித்தபடி அவனை வெறிக்கவும் அமைதியானான். அந்த இருண்ட அறையே வெண்மை பரவ சிரித்துக் கொண்டிருந்தது. அவரின் உடல் பந்தைப் போலத் துள்ளி மீண்டும் கட்டிலில் விழுந்தது. அவரின் கண்கள் திறந்தபடி கிடக்க, முகம் அசைந்தது. மகனைக் கீழே இறக்கிவிட்டு, முகத்திற்கருகே சென்றேன், கண்கள் நிறைய குபீரென்று சிரிப்பு வந்தது.
“வெளிய போல புண்டாமவன. சாவு எனக்க குன்ன.”
***
வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில்.
பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் ’பட்டர் பீ & பிற கதைகள்’ ’ராம மந்திரம்’ இவரது நூல்கள். இவரது நூல்களை வாங்க இங்கே சொடுக்கவும்
மின்னஞ்சல்: vairavanlr@gmail.com
இறுதிவரை மனதில் நடுக்கத்தை தக்க வைக்கும் எடுத்துரைப்பு. தந்தையின் இறுதி பார்வையின் பூரணம் நிமிண்டுகிறது. நல்ல அனுபவத்திற்கு நன்றிகளும், வாழ்த்துகளும்…
Vazhthukaludan ungal puthaga ulagathirku….
Varugiren vanakkam ????????????