சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

0

1 ) சிறுமியின் வருகை  

நான் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். மரத்திலிருந்து இலை ஒன்று காற்றில் அற்புதமாக மிதந்து தரையில் அமர்ந்தது. அவள் நினைவு வந்தது. ஆண்களுக்குப் பெண் நினைவு மனதில் தோன்றுவது எப்படி இயற்கையோ அது போல் பெண்களுக்கும் ஆண் நினைவு தோன்றுவது இயற்கைதான் என்று நினைத்தேன். ஆனால் ஆண்களைப்போல் பெண்கள்  அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதில்  தயக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அணில் ஒன்று மரத்தில் ஏறுவதைப் பார்த்தேன். காற்று வீசிக்கொண்டிருந்தது. நான் கண்களை மூடி உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் கண் திறந்தேன். எதிரே ஒரு பெரியவர் நின்றிருந்தார். ‘தியானமா ‘ என்றார். ‘இல்லை. அசதி’ என்றேன். என் அருகில் அமர்ந்தார். ‘இந்தப் பிரபஞ்சம் அதிசயமானது. வாழ்க்கை புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. உலகம் ஆண்களின் கையில் இருக்கிறது. பெண்களை நினைத்து அல்லல்படுகிறார்கள். அதனால் வாழ்க்கை அவர்களுக்குச்  சிக்கலாகிவிடுகிறது’ என்றார். ‘இதை ஏன்.என்னிடம் சொல்கிறீர்கள்’ என்றேன். ‘விசேஷக் காரணமில்லை. எல்லா ஆண்களுக்கும் பொருத்தமான விஷ யம் உங்களுக்கும் பொருத்தமாகத் தானே இருக்க முடியும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே. ஒரு பெண் அவரிடம் வந்தாள். ‘என் தோழி’ என்றார். அந்தப் பெண் ஸ்டைலாக இருந்தாள். பின் இருவரும் சென்று விட்டார்கள்.
 
பூங்காவிற்கு வந்து செல்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு சிறுமியுடன் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தாள். நான் அங்கிருந்து செல்ல நினைத்து எழுந்து பூங்கா வாசலுக்கு வந்தேன். அந்தப் பெரியவர் அவர் கூட  வந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘ உலகம் மிக சூழ்ச்சியானது ‘ என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘அப்பா’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுமி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

 2 ) ஆப்பிள் துண்டுகள்

அந்தக் கம்பேனியில் சேர்மனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருந்தார்கள், நான் 61 வயதில் ஒரு பொறுப்பில் சேர்ந்தபோது ‘ சின்ன வயதாக இருக்கிறீர்களே ‘என்றார்கள். சுந்தரேசன் என்பவருக்கு  – அவருக்கு வயது  80 க்கு மேல்இருக்கும் -.  மூச்சு இளைப்பு நோய் இருந்தது. அவர் என் மேல் அன்பாக இருந்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கோ பதில் மனு தாக்கல் செய்வதற்கோ சேர்மன் அவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் என் பொறுப்பில் இருந்தன. சுந்தரேசன் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்தார். சம்பளம் அவர் வங்கிக் கணக்குக்குப் போய்விடும். வக்கீல் தயார் செய்திருந்த   பேப்பர்களில் நான் அவரிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. அவர் வீட்டிற்குச் சென்றேன். படுக்கையில் படுத்திருந்தார். வெண்டிலேட்டர் வைத்திருந்தார்கள். சுவரில் பொருத்தியிருந்த டிவியில் எதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்  பார்த்துக் கொண்டிருந்தார். சத்தம் வைக்கவில்லை. மனம் யோசிப்பதைத் தவிர்க்க அவர் கண்டுபிடித்த யுக்தி. இடுப்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்தியிருந்தார்கள் ஒரு பெண் வந்து தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மருமகள்கள் அழகாக இருப்பது ஒரு தவிர்க்க முடியாத விதி.. நான் சுந்தரேசனிடம்  கையெழுத்துக்கள் பெற்றுக் கொண்டேன்.. சில தடவைகள் இவ்வாறு சென்றதில் அந்த மருமகள் எனக்குப் பழக்கமாகிவிட்டார்.

பிறகு அந்த மருமகள் கனவில் வர ஆரம்பித்தாள். கனவில் படுக்கையைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு நாள் கனவில் தட்டில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே ’என் கணவரும் மாமனாரும் கொடுமைக்காரர்கள்.. நடந்ததை நினைத்தால் எனக்கு ஆத்திரம் வருகிறது. நான் அந்த வென்டிலேட்டரை எடுத்துவிடப் போகிறேன்’ என்றாள். அடுத்த நாள் சுந்தரேசன் இறந்த செய்தி அலுவலகத்துக்கு வந்தது. 

3 ) கறிக்குழம்பு 

‘என்ன ரொம்ப ஓவரா பேசறே’ என்றாள், ரம்யா. ‘உன் பொண்டாட்டிகிட்டே சொல்லவா ‘ என்றாள். இது ராஜனை  நோக்கி அவள் எய்யும் அம்பு. அவன்  ‘சரி போய்ச் சொல்லு ‘ என்றான். அவள் ஆடை மாற்றிக் கொள்ள அறைக்குள் சென்றாள்.  ‘மனைவியிடம் சென்று இவள் சொன்னால் என்ன ஆகும். இவளிடம்  வருவதை துண்டித்துவிடுவாளே. இந்த அறிவு கூட இல்லாமல் இருக்கிறாளே’ என்று ராஜன்  யோசித்துக்கொண்டிருந்தான். அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் தோற்றத்தைப்  பார்த்ததும் அவளை சமரசப்படுத்த வேண்டும் என்று ராஜனுக்குத் தோன்றியது. சென்று அணைத்துக்கொண்டான். தன்னை அவனால்  விட்டுவிட முடியாது என்று அவள் அறிவாள். இது போன்ற ஊடல் அவர்களுக்கிடையே மேலும் மேலும் மோகத்தையே உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இருவரும் வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். வீட்டுப்படியில்  இறங்கும்போது வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். ரம்யாவிடம் ‘என் மனைவி’ என்று அறிமுகப்படுத்தினான்.
 
மூவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மனைவி, ரம்யாவை இன்டெர்வியூ பண்ணுவதுபோல் நிறையக்  கேள்விகள் கேட்டாள். ரம்யா அடக்க ஒடுக்கமாக அனைத்திற்கும் சாமர்த்தியமாகப் பதில் கூறினாள். ரம்யாவின் பதிலில்  திருப்தியடைந்தவள் போல் ராஜனின் மனைவி  தோன்றினாள். ‘சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சேருங்கள். இன்று கறிக்குழம்பு’ என்று கூறிவிட்டு  அவனின் மனைவி சென்றாள். ராஜனும் ரம்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘உங்கள் மனைவி  அதிசயமானவர்’ என்றாள் , ரம்யா. ‘நான் கறிக்குழம்பு  சாப்பிடவேண்டும்’ என்று சொல்லிவிட்டு ராஜன் கிளம்பினான். ரம்யா வெறுமை பரவியிருந்த வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here