Saturday, November 16, 2024
Homesliderசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (சு. தா. ம. 2020)

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (சு. தா. ம. 2020)

பாரதிராஜா

அதென்ன சு.தா. ம. 2020 (EIA 2020)? அது பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள்?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (Environmental Impact Assessment 2020) என்பதன் சுருக்கமே சு.தா.ம.2020 அதாகப்பட்டது, புதிதாக ஏதேனும் திட்டம் தொடங்கும் போது, அந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு நிகழப்போகும் கொடுமைகளைப் பற்றிய ஆய்வுதான் சு.தா.ம மிகக் கொடுமையான பாதிப்புகள் இருக்குமானால், வரப்போகும் திட்டத்தையே வரவிடாமல் செய்யும் வல்லமை கொண்டது அந்த ஆய்வறிக்கை. இதற்காக ஏற்கனவே இருந்த பல வழிகாட்டல்களைத் திருத்தி எழுதிப் புதிய வரைவு ஒன்றை நடுவண் அரசு வெளியிட்டிருக்கிறது.

ஆகா, நல்ல விஷயந்தானே! நம் அரசு மக்களுக்கான அரசு, அதனால் எப்போதும் இது போன்ற நல்ல விஷயங்களையே நமக்காகச் செய்யும். அப்புறம் ஏன் அதுபற்றி இவ்வளவு பேர் இவ்வளவு பேசுகிறார்கள்? இதுதான் பலருக்கும் இருக்கும் கேள்வி.

“இவர்கள் எப்போதும் இப்படித்தான். என்ன செய்தாலும் நொன்னை சொல்லிக் கொண்டிருப்பார்கள்” என்று கடந்து செல்வோரும் நம்மில் இருக்கிறோம். இதில் நல்ல செய்தி என்னவென்றால், இது எது பற்றியுமே எந்தக் கவலையும் இல்லாத, கவலை கொள்ளவே தெரியாத, அது தன் வேலையே இல்லை என்று கருதுகிற மக்களே நிறைந்திருக்கிற இந்த வல்லரசு தேசத்தில் ஓரிரு மாநிலங்கள் மட்டும் சிறிது கூடுதலாகக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன, அதில் நம் தமிழகமும் ஒன்று. குறிப்பாக இளைஞர்கள் பரவலாக இதுபற்றி உரையாடுகிறார்கள். சமூக ஊடகங்களில் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள். கேள்வி கேட்பவர்களும் எதிர்ப்பவர்களும் அதிகம் இருப்பதாலேயே அதற்குப் பதிலளிப்பவர்களும் ஆதரித்துப் பேசுபவர்களும் இங்குதான் அதிகம் இருக்கிறார்கள்.

“வரைவில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாதவர்கள்தான் அதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஒரு சாராருக்குப் பெரும் வருத்தம். அவர்கள் சொல்வதை, “வரைவைப் படித்துப் புரிந்து தேர்ந்தவர்கள்தான் அதுபற்றி வாயை மூடிக்கொண்டு இருப்பவர்களும், அதை ஆதரித்துப் பேசுபவர்களும்” என்று புரிந்து கொள்ளலாமா?

“இந்த அரசு என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது” என்று சொல்லும் கூட்டம் எவ்வளவு யோக்கியமான கூட்டம் என்பதும் நமக்குத் தெரியும். இந்த அரசு என்ன செய்தாலும் அதைத் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும், முட்டுக்கொடுக்கும், அதுபற்றி அரசு சார்ந்த கூலிப்படையே பரப்பிவிடும் பொய்ப் பரப்புரைகளைப் பரப்பத் துணை நிற்கும் கூட்டத்தில் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அதனால் எந்த முன்முடிவும் இன்றியே கூட நாம் இதுபற்றி அறிய முயலலாம்.

ஆதரவு-எதிர்ப்பு என்பதற்கு முன்பு, இது பற்றிய உரையாடலே தேவையா இல்லையா என்கிற பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த உரையாடலே தேவையில்லாதது என்று சொல்பவர்களின் நியாயந்தான் என்ன என்று புரிந்துகொள்ள முயன்றுதான் பார்ப்போமே!

  1. “தம் பிள்ளைகளுக்கு எது சரி-தவறு என்பது பெற்றோர்களுக்குத் தெரிந்ததை விடவா பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடப் போகிறது? அதுபோல, தம் மக்களுக்கு எது நல்லது அல்லது கெட்டது என்பது அவர்களின் அரசுக்குத் தெரியும். ஆகவே, அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். மக்கள் அவர்களின் வேலையை மட்டும் பார்த்தால் போதும். அரசு அதன் கடமையைப் பார்த்துக்கொள்ளும். தனக்கான பணியை யார் செய்வது என்பதை முடிவு செய்துவிட்ட பின்பு அதை அவர்களிடம் முழுமையாக விட்டுவிட வேண்டும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் நோண்டிக்கொண்டு இருந்தால் அது தான் தேர்ந்தெடுத்ததைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டு செய்யும் நேர விரயம்.”

இதையெல்லாம் கேட்கும்போது, இவர்கள் மக்களாட்சியிலும் மக்களின் தேர்விலும் இவ்வளவு நம்பிக்கை கொண்டவர்களா என்று புல்லரிக்கும். இதே வாதத்தை எல்லாக் கட்சியின் ஆட்சிக்கும் வைப்பார்களா என்று சோதித்துப் பார்த்தால் எல்லாம் அம்பலப்பட்டுப் போகும். ‘நல்ல’ சர்வாதிகாரி வேண்டும் என்பதில் தொடங்கி, இந்த மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையே தாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணுவது வரை இவர்களின் நியாய உணர்வு நம்மைக் கிறங்கடிக்க வைக்கும். இவர்கள் வேறொரு காரணத்துக்காகச் சாமியாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களை விட்டுவிடுவோம். எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இப்படித்தான் பேசுவார்கள் என்று நம்பத்தக்க ஒரு நேர்மையான கூட்டமும் (அந்தளவுக்கு யோக்கியர்கள் இந்தப் பக்கம் மிகவும் குறைவு) இருக்கிறது. அவர்களை வைத்துப் பேசினால் கூட, இந்த வாதத்தில் இருக்கும் பெரும் பிரச்சனை, இது மக்களை முழு முட்டாள்களாகப் பார்க்கிறது. அரசைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டுமே மக்களுடையது, அதன் பின்னர் அரசு செய்யும் வேலைகளைக் கண்காணிக்க வேண்டிய கடமை மக்களுக்கில்லை என்று மட்டும் சொல்லவில்லை; அதற்கான உரிமையோ அறிவோ கூட மக்களுக்கு இல்லை என்கிறது.

அரசின் ஒவ்வொரு முடிவெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் நேரடிப்பங்கு இருக்க வேண்டும் என்பதோ அவர்கள் ஒவ்வொருவரும் அரசை விடவும் அரசு கையைக் காட்டும் வல்லுநர்களை விடவும் அறிவாளிகள் என்பதோ அல்ல நம் வாதம். அரசுக்கு வெளியிலும் அறிஞர்கள் இருக்கிறார்கள், புரிபடாத மக்களுக்கும் அவர்களின் மொழியில் புரியவைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது, இப்படி ஒரு பெரும் நோய்ப்பரவல் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாக உரையாடலே இல்லாமல் இப்படியான பெரிய மாற்றங்களைப் புகுத்துவது பெரிய அயோக்கியத்தனம் போலப்படுகிறதே என்பதுதான் நாம் சொல்வது. வாய்திறந்து பேசும் கொஞ்சநஞ்சப் பேரின் குரல்களையும் நெரிக்க முயல்வதில் இருக்கும் பதட்டம்தான் நமக்குப் பெரும் அச்சத்தைக் கொடுக்கிறது.

உரையாடலே தேவையில்லை எனும் இந்தக் கூட்டந்தான் இந்த வரைவு தம் தாய்மொழி உட்படப் பல மக்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்படாததை வரவேற்கும் கூட்டமாக இருக்கிறது. “மக்கள் கருத்துக் கேட்புக்குத் தக்க நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே!” என்று வாதாடிவிட்டு, “இதுகளுக்கெல்லாம் என்ன புரிஞ்சிடுச்சுன்னு கருத்துச் சொல்லணும்னு துடிக்குதுக!” என்று புலம்புபவர்களாக இருக்கிறார்கள். இதற்கும் ஏதோவொரு வகையில் மதச்சாயம் பூசி அல்லது அந்நியக் கைக்கூலிகள் என்று பூச்சாண்டி காட்டி உரையாடலைத் திசைதிருப்ப முடியுமா என்று திட்டம் தீட்டும் பேர்வழிகளாக இருக்கிறார்கள்.

  • “இதை எதிர்ப்பவர்கள் எல்லோருமே வளர்ச்சிக்கு எதிரானவர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பொருளியல் வளர்ச்சி என்பது மிகவும் அடிப்படையானது. அதன் அருமை தெரியாதவர்களே சுற்றுச்சூழல் போன்ற பொருளற்ற விஷயங்கள் மீது கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள்.”

நல்ல குற்றச்சாட்டுதான். இதை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் போலத்தான் தெரிகிறது. குறிப்பாகப் பொருளியல் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் போலத்தான் தெரிகிறது. ஆனால் யாருடைய வளர்ச்சியை? யாருடைய பொருளியல் வளர்ச்சியை? இது ஒரு பெரும் முதலாளித்துவ மோசடியின் பரப்புரை. அதற்கு வீழ்ந்து கிடப்பது யார் என்று பார்த்தால் அவர்களிடம் ஊதியம் பெற்று சென்ற தலைமுறையை விட ஓரளவு வசதிகளோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டதில் பெரும் பெருமிதமும் நிறைவும் அடைந்துவிட்ட நடுத்தர வர்க்கம். இந்த எதிர்ப்பாளர்கள் முதலாளிகளின் வளர்ச்சி – அதுவும் பொருளியல் வளர்ச்சியைக் கண்டு சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த முதலாளிகளின் மீது இவர்களுக்கு என்னதான் கோபம்? இது ஒரு வெறும் வறியவனின் – வக்கற்றவனின் பொறாமையா? தனக்குக் கிடைக்காதது யாருக்கோ கிடைக்கிறதே என்ற பொறாமை மட்டுந்தானா?

அல்லது, அதற்கும் மேலே, இன்னும் அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப் பெறாமல் சீரழிந்து கிடக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கு நடுவில் மனச்சாட்சியே இல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு சிறுகூட்டம், தன் வருமானத்தில் ஒரு சிறுபங்கை மட்டும் சமூகத்தின் ஒரு பகுதியினரோடு பகிர்ந்துகொள்வதன் மூலம், அதையே ஒரு நாட்டின் – சமூகத்தின் வளர்ச்சி என்று நம்ப வைத்து, அதன் மூலம் பயனடைவோரை எல்லாம் வாயடைத்து வைப்பது மட்டுமில்லாமல், அவர்களைத் தமக்காக வாதாடவும் வைக்க முடிகிற கொடுமையைப் பார்த்து வரும் கோபமா?

அதற்கும் மேலே, தம் நல்வாழ்வுக்காக எந்த மனச்சாட்சியும் இல்லாமல் வாயற்ற – குரலற்ற கோடானுகோடி மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வளர்ச்சி நாயகர்களின் கொடுமையைக் கண்டு கொதிக்காத – உணரக்கூட முடியாத பெரும்பான்மை மக்களின் மனச்சாட்சியாக இருக்கத் துடிக்கும் கோபமா?

  • “மனிதன் வாழத்தானே பூமி! இவர்கள் ஏன் இப்படி மனிதனை விடப் பூமியைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்கள்? இந்தச் சிந்தனையே மேற்கத்தியச் சிந்தனை போல் இருக்கிறது. இதில் ஏதோ சதி இருக்க வேண்டும்!”

மனிதன் வாழத்தான் பூமி. ஐயமேயில்லை. ஆனால் மனிதன் அழிப்பதற்கு அல்ல. இப்படியே அழித்துக்கொண்டே போனால் அது திரும்பி மனிதர்களையே அழித்துப் போட்டுவிடும். இந்தத் தொடர்பு, வளர்ச்சி வியாபாரிகளுக்கும் அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு மாரடிக்கும் நம் பிரச்சார பீரங்கிகளுக்கும் புரிந்து தொலைவதில்லை. அல்லது, அதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

பூமி மனிதனுடையதுதான். ஆனால் மனிதனுடையது மட்டுமல்ல. மற்ற உயிர்களுக்குமானது. அதைக்கூட விடுங்கள். பூமி நமக்கு மட்டுமானதில்லை. நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமானது. அதைப் பற்றியாவது கவலைப்பட வேண்டாமா? “நாமா அழியப் போகிறோம்! நம் சந்ததிகள்தானே அழியப் போகிறார்கள்! அதற்காக நாம் ஏன் இப்போதே கவலைப்பட்டுச் சாக வேண்டும்!” என்பவர்கள் இவர்கள். சரிதான். இது தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் கூட்டம் போலத் தெரியவில்லை. தற்போதைப் பற்றி மட்டுமே கவலைப்படும் கூட்டம் போலவும் தெரிகிறது.

சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலைப்படுவதே மேற்கத்தியச் சிந்தனை என்னும் இவர்கள்தான் புழுப்பூச்சிகளுக்குக் கூடத் துன்பம் நேர்வதைத் தாங்க முடியாமல் பூமி பூஜை போட்டு வீடுகட்டும் மரபைப் பற்றிப் புளகாங்கிதம் அடைபவர்கள். புழுப்பூச்சிகளுக்குத் துன்பம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாதுதான். குறைந்தபட்சம் அதற்காக வருந்தவாவது செய்வோமே, வருந்திக்கொண்டே நமக்கு வேண்டியதைச் செய்து கொள்வோமே என்கிற தத்துவத்தைப் போலத்தானே இதுவும்! இதற்கு மட்டும் ஏன் மேற்கத்தியச் சாயம் பூச வேண்டும்! இயற்கையையும் நதிகளையும் வணங்கும் நமக்குத் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தும் வாதம்தானே மேற்கத்திய வாதம் போலப் பட வேண்டும்!

“நல்ல சாலைகள் வேண்டும், பாலங்கள் வேண்டும், இருப்புப்பாதை வசதிகள் வேண்டும்; ஆனால் அவை அனைத்தும் மரங்களை வெட்டாமலே, இயற்கையின் மீது விரல்படாமலே செய்ய வேண்டுமா? இதென்ன பினாத்தல்? அதெப்படி முடியும்?”

வசதிகள் வேண்டும் என்றாலே இயற்கையைச் சீரழித்துத்தான் அவற்றைக் கொடுக்க முடியும் என்பதே பைத்தியக்காரத்தனமான பேச்சு. சோம்பேறித்தனமானதும் கூட. நல்ல உடை போட வேண்டும், நகை போட வேண்டும் என்றால், அதற்குக் கையை வெட்ட வேண்டும் – கழுத்தை வெட்ட வேண்டும் என்பது போல் இருக்கிறது இந்த வாதம். வேறு வழியே இல்லை என்றால், தக்க ஆய்வுக்குப் பின் – ஒப்புதலுக்குப் பின் வெட்டிக்கொள் என்பதற்கும், தொடங்கும் எல்லாத் திட்டங்களுக்குமே எதை வேண்டுமானாலும் கேள்வியில்லாமல் வெட்டிக்கொள்ளும் உரிமையைக் கொடுப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. “இது வேண்டுமென்றால் அது கிடைக்காது, அது வேண்டுமென்றால் இது கிடைக்காது” என்கிற இருமைய வாதத்துக்கு வெளியே வந்து, “இதுவும் முக்கியம், அதுவும் முக்கியம்” என்று ஏற்றுக்கொண்டு விடை தேடினால் நன்றாக இருக்கும். இந்த அரசு அதற்கு நேரமில்லாத அரசாக இருக்கிறது.

நிறுவனங்கள் இயல்பிலேயே லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுபவை. அவர்களிடமிருந்து மக்களையும் மண்ணையும் காக்கத்தான் அரசு. அந்த உரிமையை நிறுவனங்களிடம் விட்டுக்கொடுக்கும் அரசு, மக்களுக்கும் மண்ணுக்கும் அவ்வளவு நல்லதில்லை. இதுதான் அச்சமாக இருக்கிறது.

சரி, இதைப் பற்றிய உரையாடல் வேண்டும் என்று கூச்சல் போடுபவர்கள் யார்?

இவர்களில் கண்மூடித்தனமாக அரசை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். வேறொரு கட்சியின் ஆட்சியில் இவ்வளவு பேசியிருக்க மாட்டார்கள். இவ்வரசின் மற்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டு எப்படியேனும் இவர்களின் கொடுமைகளுக்கு முடிவு வந்துவிடாதா என்ற நம்பிக்கையில் எல்லா எதிர்ப்புகளிலும் கலந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அரசியல் சார்பு காரணமாகவே நாலுவரியில் எதையேனும் பேசப்பழகிக் கொண்டு வந்து எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது மிகச்சிறுபான்மையான ஒரு கூட்டம். மிச்சமிருக்கும் பெருங்கூட்டம் யார் என்று பார்த்தால், அவர்கள் எல்லாக் கட்சியின் ஆட்சியிலும் இதே வேலையைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் ஆட்சிகளுக்கும் ‘வளர்ச்சிக்கும்’ எதிரானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நியாயந்தான் என்ன என்று பார்ப்போமே!

  1. “மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சி. மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக அவர்களின் வாக்கைப் பெற்று மேலே செல்பவர்கள், அதன் பின் தம்மை மேலானவர்களாகவும், தம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களைக் கீழானவர்களாகவும், மக்குப் பிண்டங்களாகவும் (தம்மைத் தேர்ந்தெடுத்ததாலேயே அப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன!) கருதும் போக்கு மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளுக்கே எதிரானது. உண்மையில், பல்வேறு காரணங்களுக்காக, தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்களின் சராசரி அறிவை விடக் குறைவான அறிவும் கல்வியும் கொண்ட பல தலைவர்களை இந்த நாடு பார்த்திருக்கிறது. அரசுகளும் அவர்களின் வல்லுனர்களும் அறிவாளிகளாக இருந்தாலுமே கூட, அவர்கள் மோசம் போவதற்கு வாய்ப்பு நிறைய இருப்பவர்கள். எனவே கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைக் கண்காணிக்கும் ஆற்றலும் அறிவும் படைத்த வல்லுநர்கள் மக்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தம்மைப் போலவே பெரும்பான்மை மக்களையும் அறிவாளிகளாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் ஆக்க வேண்டும் என்று உழைக்கிற வல்லுநர்கள், ஊழலில் திளைத்தே பழகிவிட்ட அரசுகளை விடவும் அரசு வல்லுநர்களை விடவும் சந்தேகத்துக்கு உரியவர்கள் இல்லை.”

இதுவும் மக்களாட்சியின் மீது கேள்விகளை எழுப்பும் கூட்டமாகவே இருக்கிறது. ஆனால் அதற்கு விடையாக, ஒரு தனி மனிதனைக் கடவுளாக்கி ‘நல்ல’ சர்வாதிகாரி வேண்டும் என்று சொல்லி அத்தனை அதிகாரத்தையும் ஒரே மனிதனிடம் குவிக்க வேண்டும் என்கிற அறிவுகெட்ட கூட்டமாக இல்லாமல், மக்களை மேலும் அதிகாரம் படைத்தவர்களாவும் உரிமையுடையவர்களாகவும் விழிப்புணர்வு உடையவர்களாகவும் மாற்றிக் கண்காணிப்பைக் கூட்ட வேண்டும் என்கிற கூட்டமாக இருக்கிறது. எனவே இயல்பாகவே நமக்கு இவர்கள் பேசுவதுதான் ஈர்க்கிறது.

  • “பொருளியல் வளர்ச்சி அல்லது தொழில் வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி ஆகிவிடாது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்று இன்னும் பல்வேறு கூறுகள் இருக்கின்றன. அது மட்டுமில்லை. வளர்ச்சி என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உலக மக்களில் 95% பேர் 5% வளங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் மீதமிருக்கும் 5% பேர் 95% உடைமைகளையும், வளங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் மாறுவது மனிதகுலத்தின் வளர்ச்சியல்ல, வீழ்ச்சி.”

“பொருள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை, அது இருந்தால் மற்ற எல்லாமே எளிதில் கிடைக்கும்” என்பது உண்மைதான். ஆனால் அது ஓரளவுதான் உண்மை. அதற்கு ஆதாரமாக எத்தனையோ நாடுகளும் இந்தியாவுக்குள்ளேயே பல மாநிலங்களும் இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்காண்டினேவிய நாடுகள்தான் உலகப்பெரும் பணக்கார அமெரிக்காவை விடவும் வாழச் சிறந்த நாடுகளாகப் போற்றப்படுபவை. தொழில் வளர்ச்சியில் முன்னேறியதாகச் சொல்லப்படும் மராட்டியத்தையும் குஜராத்தையும் விடவும் கேரளம்தான் முன்னேறிய மாநிலம். இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சமநிலையான பாதைதான் தமிழகம் செல்ல விரும்பும் பாதை. இந்தியா செல்ல விரும்ப வேண்டிய பாதை.

அடுத்து, வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கி நகர்வதிலும் இந்தியாவுக்குக் கேரளமும் தமிழகமுமே முன்னோடிகள். நாமும் அதிகாரக் குவிப்புக்கும் பொருட் குவிப்புக்கும் வேகமாக இரையாகிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதற்குக் கொஞ்சநஞ்ச எதிர்ப்பாவது வருகிறது என்றால் அது இங்கிருந்துதான் வருகிறது. இதை நாம் விடாமல் தொடர வேண்டும். அதைத்தான் இந்தப் பக்கம் இருப்பவர்களும் பேசுகிறார்கள். எனவே அவர்களோடு அணி சேராவிட்டாலும் கூட அவர்களோடு உரையாட வேண்டியது நமக்கு முக்கியம். அதற்கு அவர்களின் குரல்வளை நெறிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

  • “மனித வாழ்க்கை என்பது இயற்கை சார்ந்தது. இயற்கையின் ஒவ்வோர் அங்கமும் மனிதன் உயிர் வாழ்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பவை. வியாபாரிகள் இதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள். ஆட்சியாளர்கள் இந்த வியாபாரிகளுக்காக உழைப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே நாம்தான் மக்களுக்காக உழைப்பவர்களாகவும் போராடுபவர்களாகவும் இருக்க வேண்டும்.”

காற்றுக்கும் நீருக்கும் உணவுக்கும் எரிபொருளுக்கும் மருந்துகளுக்கும் பொருளியல் வளர்ச்சிக்குமே கூட இயற்கையைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். இயற்கையிடம் இருக்கும் வளங்கள் அளவற்றவை அல்ல. அவற்றுக்கென்று ஓர் அளவு இருக்கிறது. அவற்றை முழுதும் முடித்துவிட்டால் அதன் பின்பு மனிதகுலத்தின் இருப்பே சாத்தியமில்லாமல் போய்விடும். இந்தக் கிரகம் மனிதர்கள் வாழத் தகுதியாகிவிட்டால் அதன் பின்பு என்னென்ன வைத்திருந்தாலும் என்ன பயன்?

இந்த வரைவு இந்த மண்ணை வாழத் தகுதியற்றதாக்கும் வேலையை வேகப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் இவர்கள். அப்படியெல்லாம் ஆகாதென்றோ அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றோ எண்ணுகிறது எதிரில் இருக்கும் கூட்டம். “உனக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை” என்றும் ஆணவத்தோடு முறைக்கிறது.

இந்த இடத்தில் நமக்குக் குழப்பம் வருகிறது. எனவே இங்கோர் உரையாடல் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழலைக் காக்க உரையாட வேண்டியது முக்கியம் என்பதோடு சேர்த்து நம் மண்ணையும் மக்களையும் வரப்போகிற எல்லாவற்றிலுமிருந்து காக்க உரையாடும் மரபையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

ஆக, உரையாடல் தேவையில்லை என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். தேவை என்பவர்கள், கீழே உள்ள கேள்விகளுக்கான விடையைத் தேடுங்கள்:

  1. பெரும்பாலான திட்டங்களை பி2 பிரிவில் தள்ளி மக்களின் பார்வைக்கு வெளியே எடுத்துச் செல்வதன் நோக்கம் என்ன? மக்கள் கருத்துக் கேட்புக்கான அவகாசங்களைக் குறைப்பதன் பின் உள்ள தேவை என்ன? வளர்ச்சியை வேகப்படுத்தி ஏற்கனவே வல்லரசாகிவிட்ட நாட்டை இன்னும் பெரிய வல்லரசாக்குவது மட்டுந்தானா?
  2. இந்த வரைவு நிறைய ஒளிப்பு வேலைகளுக்குத் துணை போகிற வகையில் உள்ளது என்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால், உலகம் முழுக்கவுமே வெளிப்படைத்தன்மையோடு குடிமக்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பெரிதும் பேசப்பட்டும் அதன் மூலம் தகவல் பகிர்வை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டும் வருகிறது. இப்படியான சூழ்நிலையில் அதற்கு நேர் எதிர்த் திசையில் ஒரு வல்லரசு நாடு பயணப்படுவது அந்த நாட்டுக்கும் அதன் ஆதிக்கத்தின் கீழ் வரப்போகும் உலகத்துக்கும் நல்லதுதானா? அதனால் யாருக்கு நல்லது? உலகத் தலைமை ஏற்றிருக்கும் நம்மிடமிருந்து இந்த உலகம் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா?
  3. தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு விலக்கு சரி (அதுவே சரியில்லை. ஏனென்றால் அதைச் சாக்காகக் கொண்டு ஒளிந்து கொள்கிற கதைகளையும் நிறையவே பார்த்து விட்டோம், எ.கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கும் எல்லாப் பெரிய கேள்விகளுக்குமே இதுதான் இப்போது ஒரே பதில்!). அதென்ன நடுவண் அரசு உத்திநோக்கோடு (strategic considerations) அறிவிக்கும் திட்டங்கள்? தேசியப் பாதுகாப்பு தொடர்புடையதல்லாத – ஆனால் உத்தி முக்கியத்துவம் உடைய திட்டங்கள் என்றால், அதில் தேர்தல் உத்திநோக்கோடு செய்யும் வேலைகளும் அடங்குமா? அதற்குள் வேறெதுவும் அடகு வைக்கும் வேலைகள் செய்ய வாய்ப்பிருக்கிறதா?
  4. இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது யார்? அவர்களின் உயிரோ, உடைமையோ உங்களுடையவற்றைப் போலவே மதிப்பு மிக்கவைதானா?  உங்களைக் கூட விடுங்கள். மும்பையிலோ சென்னையிலோ ஒரு வசதியான பகுதியில் வாழும் மக்களை விடப் பெயர் தெரியாத ஏதோவொரு காட்டுக்குள் வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையில் முக்கியத்துவம் குறைந்தது? அவர்கள் நாம் சொல்லிக்கொண்டிருக்கும் வளர்ச்சியைக் கேட்டார்களா? அல்லது, அவர்களுக்கு வளர்ச்சி வேண்டாம் என்றாலும் நமக்கு வளர்ச்சி வேண்டும் என்பதால் அவர்கள் நமக்காக விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டுமா? அப்படி அவர்கள் நமக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே போவதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?
  5. அனுமதி இல்லாமல் தொடங்கிய திட்டத்துக்குக் கூட பின்னர் அனுமதி வாங்கிக் கொள்ளலாமாமே? அதாவது, எந்தத் திட்டமும் அனுமதி வாங்காமல் தொடங்கிக் கொள்ளலாம், பின்னர் அனுமதி வாங்கிக் கொள்ளலாமாமே? உண்மையா? இப்படிச் சொல்வதற்குப் பதில், “மதிப்பீடும் தேவையில்லை, ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை, போப்பா அந்தப் பக்கம்!” என்று சொல்லியிருக்கலாமே! அப்படி ஏன் செய்யவில்லை? அடுத்து அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?
  6. கண்காணிப்புத் தேவைகள் முன்பு இருந்ததை விடக் கூடியிருக்கின்றனவா அல்லது இப்போது குறைந்திருக்கின்றனவா? ஒருவேளை, ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் குறைத்திருப்பதை விட, நமக்கு ‘வேண்டிய’ நிறுவனங்களுக்கு மட்டும் குறைத்தோ, விலக்களித்தோ ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியுமா? அதுதானே வளர்ச்சிப்பாதையில் நடைபோடும் நமக்கு உதவும் முதலாளிகளுக்கு நாம் செய்யும் தக்க கைம்மாறாக இருக்க முடியும்!
  7. அனுமதியின் செல்லுபடிக் காலம் கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? ‘காலாவதியாகாத செல்லுபடி’ என்று ஏதேனும் இருக்கிறதா? அடுத்த திருத்தத்தில் அப்படியும் ஒன்றைத்தான் சேர்த்துக் கொள்வோமே! குறைந்தபட்சம், நமக்கு ‘வேண்டிய’ நிறுவனங்களுக்காவது இதைச்செய்ய முடிய வேண்டும். அதுதானே தேச நலனுக்கு நல்லது!
  8. சுற்றுச்சூழல் அமைச்சகம் என்று ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதே ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு எதிரானது என்கிறார்களே! அதை ஏன் மூடிப் போட்டுவிடக் கூடாது? குறைந்தபட்சம், வணிக அமைச்சகத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் வளர்ச்சிக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்கிறார்களே! அதுபற்றி இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேட விரும்பும் ஒருவர், ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தவராக இருந்தால் மட்டுமே அவருக்கு அதற்கான தகுதி இருப்பதாகக் கருதிய அரசு, வேறு எந்த முக்கிய மொழியிலும் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் விட்டது தற்செயலானது இல்லை. ஆறில் ஒரு பங்கு மனிதகுலத்தை ஒற்றை மொழியின் கீழ் கொண்டு வந்துவிடக் கூடிய அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் சிலரின் தப்புக் கணக்கு இது. அவர்கள் கெட்ட நேரம், அதில் தமிழ்நாடும் இருக்கிறது. “இன்று இரவு உன் வீட்டில் தீ வைக்கப் போகிறோம். அதை உனக்குப் புரிகிற மொழியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்கிற ஆணவம் யாரை எரிக்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம்!

இத்தனையையும் மீறி, தான் படித்துப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. தன் மக்கள் எல்லோரும் இதைப் படித்துப் புரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று எண்ணி ஓர் இளைஞர் கூட்டம் அதை இரவு-பகலாக விழித்து வேலை செய்து தன் தாய்மொழியில் வெளியிட்டிருக்கிறது (இவ்வரும் பணியைச் செய்து முடித்திருக்கும் யாவரும் குழுவைப் பாராட்டச் சொற்களில்லை நம்மிடம்). இந்தியாவில் அப்படியான ஒரு வேலையைச் செய்யும் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கும் ஒரே தாய் தமிழ்த்தாய்தான். எத்தனையோ விஷயங்களில் நாம் இந்த நாட்டுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறோம். இதிலும் இருந்துவிட்டுப் போவோம். தமிழ் வரைவைப் படித்துச் செரித்து, செரிக்க முடியாதவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து, கேள்வி கேட்டு, நம் மக்களாட்சிக் கடமையை ஆற்றுவோம். எவ்வளவோ பொய்யும், புரட்டும் பகிரப்படும் சமூக ஊடகங்களில் இவ்வரைவையும், அது பற்றிய நேர்மையான உரையாடல்களையும் பகிர்வோம். பிறருக்காகவும் சேர்த்தே இம்மண்ணைக் காக்கும் கடமை தமிழர்களுக்கு இருக்கிறது. இன்றல்ல, நாளையல்ல, பல தலைமுறைகளுக்குப் பின் இதற்காகப் பல நாடுகள் நமக்கு நன்றி சொல்லும்.

இதில் மக்களின் பேராசைக்கும் பெரிய பங்கிருக்கிறது. இயல்பிலேயே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் அளவுக்கு நம் வளங்களைக் காப்பதில் நமக்கு அக்கறை இல்லாமல் இருக்கிறது. மக்களே அக்கறையோடு இருக்கும் நாடாக இருந்தால் கூட அதை மக்களிடம் விட்டுவிடலாம்.  மக்களும் அக்கறையற்றவர்களாக இருக்கும் போது அரசுதான் மக்களின் சார்பாகக் கவலைப்பட வேண்டும். மக்களைப் போலவே அரசும் கவலையற்று அல்லது விழிப்புணர்வற்று இருக்கும் போது இரு சாராரையுமே விழிப்புணர்வுடையவர்களாக மாற்றும் பொறுப்பு அந்நாட்டு வல்லுநர்களுக்கும் படித்தவர்களுக்கும் இருக்கிறது. அதைத்தான் தமிழகத்தில் ஓர் இளைஞர் கூட்டம் செய்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கைலாய மலைக்கும் அபாயம், பழனி மலைக்கும் அபாயம் என்கிறார்கள். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

***

பாரதிராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular