கண்ணீர்த் துளிகள்
பிரபஞ்சத்தின் கடைசி இலையும் விழுகிறது
அத்துயரத்தை அனுபவிப்பதற்கென அங்கு யாருமில்லை
பிறகு
அதன் அர்த்தம் பகிர்ந்து கொள்ளவே முடியாததாக மாறிவிடுகிறது
*
பரிசுத்தமானவைகளின் இதயங்கள் வெளியே கிடக்கின்றன
ஒரு மூடிய வீட்டிலுள்ள அழுகையைத் திறந்து விடுவது
போல
இந்தத் துன்பம் மிகப்பெரியது
*
இந்த உலகின் குறுகலான பாதைகளைக் கடந்து
சிறிது தூரத்தில் துவங்கும் பாடலுக்குள் நுழைந்து விடுகிறோம்
பிறகு
எங்கு சென்று கொண்டிருந்தோமென்பதையே மறந்து போகிறோம்
*
எல்லாவற்றின் சாயலிலும் இருக்கிறது இந்தப் பாரங்களின் வலி
ஒவ்வொரு அடுக்காக இறக்கி வைக்கும் போது
தவறுதலாக என்னையும் கழற்றி வைத்து விட்டேன்
*
ஒரு ஆயுதத்தின் கூர்மை முழுவதுமாக இறங்கிக்கொண்டிருக்கும்
போதுதான்
மன்னிப்புகளுக்கான பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன…
வெகுநேரம் மண்டியிட்டு சரிந்த உயிரின் வலியை
உலகம் பொருட்படுத்துவதில்லை
*
நீண்ட காத்திருப்பின் தடத்தை மெதுவாக உணர்ந்த போது
ஒரு கீறலின் காய்ந்திடாத வடுவை தடவிப்பார்த்துக் கொண்டேன்
காட்டு விலங்கின் நகம் போலிருக்கிறது இவ்விரவு
*
இந்த நதி தனக்குள் மூழ்கி எழுந்திருக்கும் யாரையும்
ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை
வெறுமனே ஓடிக்கொண்டிருப்பதுவே அதன் சந்தோசம்
மேலும்
அதன் அழுக்கு அதற்கு நன்றாகவேத் தெரியும்
*
ஒரு சிறு குறியீட்டில் மொத்த அன்பையும் பகிர்ந்து கொள்ளும்
உலகத்தில் நீ வந்து சேர்ந்து விட்டாய்
பிறகு
நீ வைத்திருக்கும் ஒவ்வொரு கண்ணீருக்குமான பிரிவுகளையும்
ஒரு பருவத்திற்குள் வளர்த்தெடுக்க வேண்டும்
காயங்களின் ஆழத்திலிருக்கும் ஒரு நரம்பு தான்
சின்னஞ்சிறு மனதிற்குள் எஞ்சியிருக்கும் ரணத்தை உணரச் செய்கிறது
துன்புறுத்தும் இந்த பாதி வெளிச்சத்திலிருந்து
அதை மறைக்க வேண்டும்.
*
தொட்டிச் செடிகளில் சிறிய பூக்கள் பூப்பதற்கு முன்பு
நாம் இவ்வளவு நேசங்கள் கொண்ட மனிதர்களாக யில்லை
அதன் இதழ்கள் மிருதுவானவற்றை நம்புவதற்கு பழக்கியிருக்கின்றன
*
நிறைய தூரத்திற்கான ஒரு மனதை இங்கிருந்து
பத்திரப்படுத்துவேன்
முடிவற்ற பாதைகளின் பிரம்மாண்டங்களுக்குள்ளிருந்து
வெளியேறும் மிகச்சிறிய வழிகளை
அதுவே கண்டுபிடித்துக் கொள்ளும்
*
தன் காலத்திலிருந்து நகர்ந்து வரும் நத்தை
இப்பிரபஞ்சத்தை மிக மெதுவாக அளந்து கொண்டிருக்கிறது
கடைசி ஒரு அடியில் தன் கால்களை வைப்பதற்கு இடமற்ற
வெறுமையில்
அப்பிரபஞ்சத்தை விட்டேச் சற்று வெளியில் நிற்கிறது
தன் பளபளப்பை இழந்து விட்டிருந்த அக்கல்
கைகளிலெடுக்கப்படும் ஒருநாளில்
தன்னர்த்தத்திலிருக்கும் சொரசொரப்பைப் பகிர்ந்து கொள்கிறது
அது இந்த உலகின் மிகப்பழைய மனிதனின்
துயரத்தைச் சொல்வது போலவேயிருக்கிறது
*
தவறிய வழியொன்றில் கைவிடப்பட்ட வொரு பாதத்தடத்தை
பார்க்க முடிந்தது
எல்லாத் தேவைகளுக்குமான ஒரு சின்னப் பொருளை
கொடுத்து விட்டு அது மறைந்து போய்விட்டது
ஓரிடத்தில் சிறிய பூ தோன்றி மறைவதைப் போல
*
பசியிலிருக்கும் ஒரு உயிர் குதிப்பதற்கென ஒரு முனையும்
உடனடியாகக் கிடைப்பதில்லை
இந்நிலம் எல்லாவகையிலும் மிகவும் தட்டையானது
போலவே திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருக்கிறது
*
வெகு காலத்திற்கு முன்பே உதிர்ந்த இலைகளை
அடுக்கிக்கொண்டிருந்தவன்
தன் காலத்தில் ஏன் அவைகளெல்லாம் விழவில்லை யென்று
அக்கறை கொள்கிறான்
அவனை மூடிக்கிடக்கும் மணல் மேட்டில்
விழுந்த முதல் இலை
இன்னும் நன்கு பழுத்திருக்கவில்லை
***
ஜீவன் பென்னி