-யவனிகா ஸ்ரீராம்
கவிஞர் ஞானக்கூத்தன்
நாளடைவில் ‘அன்று வேறு கிழமை’யையும், ‘நடுநிசி நாய்களையும்’ நூலகத்தில் எடுத்து வாசித்த போது அக்கவிதைகள் என்னோடு தனிமையில் உறவாடியது போலத் தோன்றியது. மிகப்பெரும் நெருக்கடியோ கொந்தளிப்பான சூழல்களோ அல்லாமல், கெடுபிடியான மிசாக் காலங்களும், ‘ஸ்கைலாப்’ எனும் செயற்கை விண் கோள் ஒன்று பழுதாகி பூமி மேல் விழப்போவதாகவும் வந்த அச்சுறுத்தல்களும் இறுதியில் அது கடலில் விழுந்து விட்டதாகக் கூறிய காலங்களும் கடந்து போயிருந்தன.
ஆங்காங்கே கழகப்பிரச்சாரங்களும், கம்யுனிஸ்ட் ஊர்வலங்களும், கோவில் விழாக்களும், நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் தவனைகளில் பெருகியிருந்தன. திருச்சி, சென்னை, கோவை, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு காபிக்கொட்டை வியாபரத்திற்காகப் போகும் வேலை எனக்கு!. பெரிய கடைவீதிகளிலும், ஆலய சன்னதித் தெருக்களிலும் காபித்தூள் வறுவல் மணக்கும் கடைகள் தான் எனக்கு வாடிக்கையாளர்கள். அப்படியான சமயத்தில் ஸ்ரீரங்கம் சன்னதித் தெரு பெட்டிக்கடையொன்றில் அம்மாதக் கணையாழி இதழ் 10 ரூபா மதிப்பு ஒன்றையும், பழைய கிரவுன் சைஸ் 5 ரூபா பதிப்புகள் நான்கைந்தையும் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவேன்.
காப்பி மூட்டைகளை சுமப்பது, வெகு தூரம் பயணிப்பது, மேற்கு மற்றும் கிழக்கு மலைப் பிராந்தியத்தில் காபி கொள்முதலுக்கென அலைவது என கடுமையான உழைப்பில் இருந்த நேரம், நவீன இலக்கியப் படைப்புகளை கோணிச் சாக்கிகளிலும், கைப்பையிலும் வைத்துக் கொண்டு வாசித்து வருகையில், அதிகம் மேலோட்டமான உணர்வுகள் குறைந்து புறச்சூழல்கள், காட்சிகள் அனைத்தும் வித்தியாசமாக, புதிர் நிறைந்த மனித் முகங்களாக, என் அணுகும் முறையும் கூட மாறியிருக்க எல்லாமே இலக்கிய நடத்தைகளாக இருப்பதை அனுமானிக்கும்போது என் யதார்த்தம் குலைந்து போனது.
ஒரு இளம் பருவத்தை அதிகம் பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகளும் வேட்கைகளும், (ஆணாய் இருக்கும்பட்சத்தில் பெண்களை வேட்டையாடுதல்) வெட்கமற்ற செயல்களுக்கு தள்ளி விடுகிறது. ஆணாய் இருப்பதன் அனைத்து சலுகைகளும், தமிழ்ச் சமுகத்தில் பெண்கள் குறித்த நல்ல மன உயரங்களை உருவாக்கவில்லை. வக்கிரங்களை மட்டும் வளர்த்த சாதியப் பின்புலங்கள் மேசமானவை, சிகரெட் புகைப்பது, நீர்நிலைக்குப் போவது , கொஞ்சமாக மது அருந்துவது, கவிதை எழுதுவது எனப் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே திரிந்த போது எனது முதல் கவிதை 1992 என நினைவு, ‘’’கணையாழி’யில் வெளியானது. கவிதைகளை ஞானக்கூத்தன் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன், தொடர்ந்து எட்டுக்கவிதைகள் இடையே இரண்டு சிறுகதைகள் என பிரசுரமானதில் ஞானக்கூத்தனின் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட கவிஞனாகி விட்டேன் என்பது தெரிந்தது. ‘கணையாழிக் கவிஞர்’ என்று விக்கிரமாதித்தியன் கூட குறிப்பிட்டார்.
பல சிறுபத்திரிக்கைக் கவிஞர்களையும், தி.ஜா குறுநாவல் வரிசைகளிலும், சுஜாதாவின் கடைசிப்பக்கங்களில் மனம் கொடுத்து கணையாழியின் வழியேதான் பலரின் புத்தகங்களை அடையாளம் கண்டு சேகரிப்பதும் எனக்குள் தொடர்ந்தது. ஞானக்கூத்தனின் “அம்மாவின் பொய்கள், மேசை நடராஜர், பாடைக்குள் ஒளிந்து போகும் நாய், ஆத்மாநாமுடன் வாக்கிங் போகையில் அணுகுண்டு வெடிப்பது, செங்கமலம் சைக்கிள் ஓட்டியது, நாகரிகம் பொசுங்கிய கீழ்வெண்மணி கவிதை, வழுவமைதி, தனிச்செங்கல் சரிவது, ஆள் மறையும் கொல்லை” என பல கவிதைகள் என மனதிற்குள் சலனம் கொண்டிருந்தன.
‘த்வனி, இறைச்சி; என வடமொழி சமஸ்கிருத அணுகுமுறையும் தெரிந்த அவர் தமிழின் தொல்காப்பிய ஒப்புமைகளோடு, திணைகளையும் வைத்து எழுதிய பல கட்டுரைகளைப் படித்தும் இருக்கிறேன். அவற்றுள் அவருக்கு ஒரு உலாகளாவிய ஞானம் இருந்த்து. வரலாற்று விவாதத்திற்கு பதிலாக, கலை உவக்கும் மாற்றங்களே அவருக்குப் பிரதானமாக இருந்தது. அந்தவகையில் உரையாடலையும், பன்முகத் தன்மைகளையும் நவீனக் கவிதையில் வைப்பதற்கும், கூறும்முறையில், எளிமையாக உணர்த்துவதில் அல்லது வேறு வேறு தன்னிலைகளோடு சகவாசம் கொள்ளுவதாய் இருந்ததை ஞாபகம் கொள்கிறேன். பக்தி இலக்கியத்தின் மொழி வளத்தை அதன் ‘போற்றி’ எனும் ஆன்மீகச் சாயலற்று தமிழ் நவீன கவிதைக்கு ஒரு இந்திய முகம் கொடுக்கும் விதமாகி உருவி எடுத்து அதிலிருந்து தனக்கான உலகதாயப் பார்வையை முன்வைத்தார் என்றே கூறலாம்.
80,90களில் அதிகம் தாக்கப்பட்டவரும், இயக்கங்கள் சார்பாக வாங்கிக் கட்டிக் கொண்டவரும், தனது கவிதைகளிலேயே அவற்றுக்கு பதில் அளித்தவரும் அவர்தான். “அதிகார மையத்திற்கு தப்பி கவிதை பிழைத்துக் கிடக்கும்” என்றும் , “கலை சுதந்திரமானது” என்றும் எளிமையாகச் சொல்லிவருபவர் தான் அவர்.
நான் அவரின் மாணாக்கன் என்பதில் உடன்படுவேன். திணைகளைக் கலைத்துப்போட்டு எழுதும் எனது கவிதைகளில் அதிகம் இடம் பெற்று விடும் HYPER REALITY தன்மைகள் குறித்த விமர்சனங்கள் வந்த போது “சொற்கள் உறங்கும் நூலகம்” வாசித்துவிட்டு, அதை ஒரு நல்ல தொகுப்பு என்றும் , அதில் புதிய படிமங்கள் ஆச்சரியமூட்டுகின்றன” என்றும் திருவல்லிக்கேணி சந்துகளினுள் ஒன்றில் அவர் நாடகப்பயிற்சி செய்யும் போது கைகளைப் பிடித்துச் சொல்லிவிட்டுப் போனார். யாரிடமும் பெரிதாக உறவு கொண்டு விடுகிற நபர் அவர் இல்லையெனினும் கவிதைகள் என வரும் போது சமகாலக் கவிதைகளின் செல்வழி குறித்தும் சிந்திப்பதில் புத்தார்வம் மிக்கவராகவும், பகிர்ந்து கொள்பவராகவும் இருப்பது எந்த் அதிகாரமுமற்ற, கவி வாழ்வின் பொறுப்பேற்கும் தனிமைதான் என்றே உணர்கிறேன். மற்றபடி பார்ப்பன & திராவிட முரண்பாடுகள் அக்காலத்தில் நெருக்கடிகளாகவே நின்று விடுகின்றன அல்லது அதன் தேவைகள் வர்க்க நலங்களாகிவிட்டதையும் பார்க்கிறோம். ஆக ஒருவித மேற்கத்திய அனுபூதிச் சாயல்களையும், தமிழின் செவ்வியலையும் இணைத்து முதன்முதலாக புதைய நவீன கவிதைகளை அவர் உருவாக்கினார் அதிலும் தமிழ் அடையாளாம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டாலும் ‘நியோ கிளாசிசம்’ எனும் நவீன உள்ளுரையாற்றல் ஞானக்கூத்தனிடம் அதிகம். ஓசைநயம் மற்றும் செய்யுள் வடிவ நாடகப்பாங்கு, நளினம், அபிநயங்கள் கூடிய அவரின் சொல்லாட்டம் நடனத்தைப் போன்றதும் கலையமைதி கூடியதும் ஆகும். குறுங்காவிய மரபுகளின் தொடர்ச்சி எனவும் கூறலாம். புன்முறுவலை வரவழைக்கும் அவரது பகடி – பெரும் உரைநடை வீச்சுகளில், மேடைகளின், கோசங்களின் போலித்தனத்திற்கு அப்பால் அயர்ச்சியிலும், சலிப்பிலும் குறுகத்தரித்தவை. சுயத் தணிக்கையில் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவர் அவர். உறவுகளின் அப்பாலைத் தனிமக்கு இறைத்த மற்றவை அவரது கவிதைகள். பூர்ணத்திற்கும், இருப்பிற்கும் அதிகம் கடன் படாதவை எனினும் அதற்குள்ளேயே படைப்போய்வைக் கொண்டவை. சற்றே கம்பீரம் தொனிக்கும் அவரது வித்யா கர்வமே மொழியை வைத்து அரசியல் நடத்தும் பலருக்கும் எரிச்சலை ஊட்டியிருக்கலாம். பல்கலைக்கழக்ப் பேராசிரியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் பற்றிய அவரது விமர்சனம் நேர்மையானது. எல்லாவற்றுக்கும் பிறகு இன்றைய நிலையில் அவரது மௌனம் எந்தச் சிக்கலுமில்லாத அவரது திருப்தியின் தேர்வாக இருப்பதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
இன்றளவில் நிறுவனங்களின் நியதிகளையும், மாற்றம் பெறாத இயக்கங்களின் ‘மடம்’தனமான வரம்புகளையும் மீறிச் செல்லும் கலைப்பண்பே தனிமனிதனின் இருத்தல் மீதான குறைந்தபட்ச அக்கறையாக நீடிக்கிறது. ஞானக்கூத்தனின் ஆள்மனம் உயிர்க் குறும்புகளின் வழியே இயற்கையின் சலனங்களை ஜென் நிலையில் அனுமானிப்பவை. தவளைகளை “ஜீவியக் காய்கள்” என்பவர் அசேதனங்களை உயிர்ப்பொருளாகவும் (மேசை நடராஜர்) மனிதத் தன்மையின் பாசிச, நார்சிச இயலாமைகளை கேலி செய்தலும், கவிதையின் மையங்களைக் கழற்றி விடுவதில் ஆழுணர்வு கொண்டவராகவும் இருக்கிறார். குறியீடுகளையும், அகநிலை வெண்பா முறைகளையும் பயன்படுத்தி தமிழ் வாழ்வைச் சொல்வதில் தொடங்கி ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பதில் பெரிதும் மனப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கிறார். அந்தவகையில் அவரது எல்லாக் கவிதைகளும் வாசிப்பில் அலுக்காதவையும், சுவாரசியம் கூடியவையும் தான்.
ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சி.மணி, பிரம்மராஜன் என பாரதி, கா.நா.சு வழியில் நவீனக் கவிதைக்கு ஒரு மரபு இருப்பதை வலியுறுத்தும் பா.வெங்கடேசன், ஆனந், ஷா அதி, தேவதச்சன், சுகுமாரன், மோகனரங்கன் என தொடர்ச்சியாக இன்றைய இளம்படைப்பாளிகள் வரை அம்மரபு குறித்து விளக்கமாக எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.
அமைப்பியல், பின்னமைப்பியல் மற்றும் மொழி சார்ந்த பல்வேறு தொன்ம கலாச்சாரக் குழுமங்களின் படைப்புகளுக்கு முரணாக தலித்தியம், பெண்ணியம், பின் மார்க்சியம், சூழலியம் போன்றவற்றின் தலையெடுப்பு, ஆக இரண்டின் தொடர்பாகவும் இணைய முடியாமல் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகால விமர்சன மௌனம் முடங்கியிருக்கிறது. இந்நிலையில் தமிழ் ஈழக் கவிதைகள், புலம்பெயர் வாழ்வுகள், அமெரிக்க இந்திய மனம், விளிம்பு நிலை, உடல் எனப்பலவும் இம்மௌனத்தை மேலும் வலுவாக்கி வரும் வேளையில், பொருளியல் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் விஞ்ஞான சரக்கு சந்தை ஏக போகத்திலும் தனி மனிதன் என்பவனின் கவிதையும், விடுதலையும் உலகம், நாடு, நகரம், கிராமம் என்ற இடம் காலத்தில் அல்லது குறுகிய அதிகார வரம்பின் எல்லைக்குள் என்னவிதமான மாய்மை(fantasy) கொள்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஞானக்கூத்தனின் அறம் சார்ந்த அரசியல் பகடியிலிருந்து, நவீனக் கவிதை குற்றத்தின் ஆன்மீக அறத்திற்கு மடைமாற்றம் ஆகியிருக்கிறது, இப்போது அதிகாரத்திற்கு இறைமை தேவையில்லை, குற்றத்திற்குத்தான் துணையாக ஆன்மீகம் தேவைப்படுகிறது. என்னளவில் ஒரு தத்துவார்த்த மௌனம் ஞானக்கூத்தன் என்கிற லோகதாயவாதியின் இருப்பில் உரைந்து இருக்கலாம் என்பது அவரது ஆளுமையை என்னளவில் “ஒரு பண்பு குறித்த நிலைப்பாடாய்” புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கிறது.
-யவனிகா ஸ்ரீராம்
பின் குறிப்பு :
2005களில் நானும், கவிஞர் சங்கர் ராம சுப்பிரமணியனும் ராமச்சந்திரா மேன்சனில், திசை குழம்பித் திரிந்த நேரம் ஞானக்கூத்தன் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்தித்தோம். பரவலான நம்பிக்கைகளுடன், நவீன கவிதையில் செவ்வியல் பற்றிப் பேசினார். காபி அருந்திவிட்டு திரும்பினோம். பிறகு பலமுறை கூட்டங்களில் சந்தித்து இருந்தாலும், திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் அவருக்கு “விளக்கு விருது” பெற்றதற்கான, பாராட்டுக் கூட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசினேன். ஏற்புறையில், மிக நெகிழ்ச்சியாக தான் கடந்து வந்த பாதையை விரிவாகவும் அதே சமயம் எளிமை குன்றாத மனதுடன் விவரித்தது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவர் தமிழின் முக்கியமான கவிஞரும் திருப்புமுனையை உண்டாக்கியவரும் தான்.இன்றைய இளைஞர்கள் பலரின் கவிதைகளிலும் அவரது தர்கமும், பகடியும் தொடர்வதே அதற்கு சாட்சி.
(***)
(நன்றி : தி இந்து தமிழ்திசை