வெறுப்புணர்வு மிகுந்த சூழலில் நாம் கலை இலக்கியம் பேசுகிறோம். நமது ஒவ்வொருவரின் காதுகளும் அரசோ இல்லை ஊடகங்களின் எண்ணங்களுக்குத் தக்கவாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. (Customized ears) அதற்குப் பெயர் தான் ட்ரெண்டிங் எனும் குறுகியகால பயிர், அதாவது பிடுங்கி எறியப்பட வேண்டிய களையையே பயிர் செய்வது.
ஒரு வெறுப்பிற்கு இணையாக மற்றொரு வெறுப்பு கண்டுபிடிக்கப்பட்டே இருக்கின்றது. போரும், பஞ்சமும் நாட்டின் வெவ்வேறு எல்லைகளின் மறுபுறம் இருக்க, இங்கே திரைக்கலைஞர்களை சீண்டிவிட்டு அரசியல் பேசும் கலையை பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறோம். சாதியைத் தாண்டியனை சாதியத்தில் கட்டி வைக்கிறோம். மற்றொரு புறம் புனிதப்பட்டம் கட்டுகிறோம்.
அம்பேத்கர் நிழற்படத்தை ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலும் வைத்தாயிற்று, ஆனால் காந்தியை ஏன் கழட்டினோம்? அம்பேத்கர் ஊழியருக்கு உரிமை பெற்றுத் தருவார் என்றால், நுகர்வோருக்கும் வாடிக்கையாளருக்கும் மரியாதையைத் தரச் சொல்லும் காந்தியை ஏன் அகற்றினோம். ஒன்றை சேர்ப்பதால் ஒன்றை கழிக்க வேண்டாம்.
இளையராஜா இல்லையென்றால் திரைப்பாடல் வழியாகவே இந்தி பட்டித்தொட்டிகளில் குடியேறியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தால், அவரது அரசியல் சார்புக்காக அவர் இசையையே துறக்கும் பல்லவி பாடும் ஆத்மாக்கள் எங்கு கொண்டு போய் நிறுத்த ஆசைப்படுகிறார்கள். ஒன்றை மறுப்பதால் ஒட்டுமொத்தமாக மறுப்பது அநீதி.
கலை இலக்கியம் சமகாலத்தை வெறும் தற்கால தற்காலிகமாக அனுகிட வைப்பது ஆபத்தில் தான் முடியும். அதற்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தான் யாவரும் தேட விழைகிறது.
*
இணைய இதழ்கள் எல்லாமே உற்சாகமாய் இயங்குகின்றன. நிறைய சிற்றிதழ்கள் அச்சில் வரத்தொடங்கியுள்ளன, தமிழக அரசின் சிற்றிதழ்களுக்கான நூலக ஆணைக்குப் பின்னர் நிகழ்ந்த அற்புதம் இது. புரவி ஒரு ஆண்டை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது. தமிழ்வெளி, சிறுகதை காலாண்டிதழ்கள் தொடர்ந்து வருகின்றன. மீண்டும் அகநாழிகை இதழ் வருகிறது. “சால்ட், தனிமை” சிற்றிதழ்கள் வர இருக்கின்றன. புதுமைப்பித்தன் முழுத்தொகுப்பு 20000 பிரதிகள் கடந்தும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கோவிட் நெருக்கடிக்குப் பின்னர் மொழியில் இத்தனை சுறுசுறுப்பான வேலைகள் நடைபெறுவது உற்சாகமூட்டும் சூழல் தான்.
மின்னிதழாகத் தொடர்வதிலேயே நிறைய சிக்கல்களைக் கடந்தாலும். ஒவ்வொரு இதழை வலையேற்றும் போதும் ஒரு மலைப் பயணம் முடித்த நிம்மதி கிடைக்கின்றது. பங்களித்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
ஒரு கதையைத் தந்துவிட்டு இதழ் வருவதற்குள் தொகுப்பே வந்துவிடுமளவு மெதுவாக வேலை செய்கிறோம் என்றாலும் ட்ரெண்டிங் போன்ற தற்காலிகங்களுக்கு அப்பாற்பட்டு பேசவேண்டிய அரசியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிடும் மற்றொரு இதழும் கொண்டுவரத் திட்டமிடுகிறோம், தேவையெல்லாம் உங்களது ஊக்கம் மட்டுமே.
அன்புடன்
ஜீவ கரிகாலன்