Saturday, November 16, 2024
Homesliderநிழலுலகம்

நிழலுலகம்

காலத்துகள்

“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாமன்னு ஆரம்பிக்காத” என்ற குரலைக் கேட்டு அபார்ட்மெண்ட் மாடியை சுற்றிப் பார்த்தேன், யாருமில்லை. அன்று முன்மாலை மாடியில் நின்றுகொண்டு, தெருக்களில் அதிகரிக்க ஆரம்பித்திருந்த மக்கள் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்து கொண்டிருந்தார்கள். நேர்த்தியான உடையணிந்து, முகக்கவசமின்றி தெருவில் நடந்து கொண்டிருந்தவரைப் புகைப்படம் எடுத்து – நண்பர்கள் வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து அறச்சீற்றம் கொள்ளத் தான் – திரும்பியவன் அபார்ட்மெண்ட் தண்ணீர் தொட்டியின் சுவற்றின் என் நிழலைப் பார்த்து, அதை புகைப்படம் எடுக்க நினைத்தேன். நானும் நிழலும் ஒருவரையொருவர் புகைப்படம் எடுப்பது போல் நின்றிருந்த கணத்தில், நான் என்னை போட்டோ எடுக்கிறேனா அல்லது என் நிழலையா, ஒருவேளை என் நிழல் என்னை புகைப்படம் எடுக்கிறதோ என்று யோசிக்க ஆரம்பித்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

நானே எனக்குள் உரத்த குரலில் பேசியிருக்கக் கூடும், அப்படிச் செய்யக்கூடியவன் தான் நான். மீண்டும் என்னை அல்லது என் நிழலை புகைப்படம் எடுக்க முயன்றபோது, “முடிவுக்கு வந்துட்டியா” என்ற குரல் கேட்கும் போது என் நிழலின் வாயசைவைப் பார்த்தேன். நான் பேசவில்லையே. வாயை இறுக மூடிக்கொண்டேன். எங்கிருந்து வருகிறது இந்தக் குரல்? “உன்கிட்டேந்து தான்”, நிழல் மீண்டும் பேசியது. இந்த முறை நிச்சயமாக என் வாய் அசையவில்லை. “நீ யாரு” என்று கேட்டுவிட்டு நான் சிரிக்க ஆரம்பித்த நொடியிலேயே நிழலும் சேர்ந்து கொண்டது. சுவற்றின் அருகில் சென்று என் கையை நீட்டினேன், நிழலிடம் அசைவில்லை. தோளைத் தொடும்போது சுவற்றை தான் உணர்ந்தேன். என் கையை நீட்ட, நிழலின் கரமும் என்னை நோக்கி வந்து, கைகுலுக்கிக் கொண்டோம்.

என் மனநிலையை குறித்த சந்தேகம் இந்நேரம் என்னுள் எழுந்திருக்க வேண்டும், ஆனால் நான் என் நிழலின் வருகையை இயல்பாக ஏற்றுக் கொண்டேன். இந்த அசாதாரண ஆண்டில் எதுவும் நடக்கும் என்ற திடீர் ஞானத்தினால் அல்ல. ‘வாழ்வை பற்றி கற்று கொடுத்த ஆண்டு’ என்று இந்த வருடத்தைப் பற்றி பலர் சொல்கிறார்கள். நான் எப்போதுமே யதார்த்தம் குறித்த கேள்விகளும், சந்தேகமும் கொண்டவனாகத் தான் இருந்திருக்கிறேன், மீமெய்யியம், மாற்று மெய்ம்மை போன்றவை எனக்கு அணுக்கமான, நான் நம்பக் கூடிய உணர்வு நிலைகளாகவே இருந்துள்ளன.

‘எப்படி திடீர்னு உனக்கு உயிர் வந்தது’ என்று மட்டும் மட்டுமே கேட்டேன். என் வயதைச் சொல்லி அத்தனை வருடங்களாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன் என்று சொன்னது நிழல். (என் நிழலை, ‘அது’, ‘சொன்னது’ என்று குறிப்பிடுவது சரியா, ‘அவன்’, ‘சொன்னான்’ என்று மாற்றலாமா, நான் தானே அவன்? போன்ற கேள்விகள் இதை எழுதும் போது குழப்பின. என் பிம்பம், மறுபடிவம் என்று சொல்லலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பதில் கிடைக்க காத்திருந்தால் எழுதி முடிக்க மாட்டேன் என்று உணர்ந்ததாலும், என் நிழல் கோபம் கொள்ளாது என்ற நம்பிக்கையாலும் இந்த புனைவில் அஃறிணையிலேயே குறிப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்). ‘அப்ப ஏன் இவ்ளோ நாள் பேசலை’ என்று கேட்டதற்கு ‘யூ டின்ட் லிசன்’ என்ற பதில் வந்தது. தொடர்ந்து ‘நான் எங்கேயிருந்து வந்தேன், எப்படி இங்கிலீஷ் பேசறேன்னு யோசிச்சிட்டிருந்தேன்னா, என்கூட பழகும் அனுபவம் உனக்கு கிடைக்காது, புனைவு தருணத்தை மிஸ் பண்ணிடுவ… கோ வித் தி ப்ளோ’ என்று நிழல் சொன்னது சரியன்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். (இதைப் புனைவாக எழுத வேண்டும் என்று நான் ஆழ்மனதில் அப்போதே எடுத்திருந்திருக்கக் கூடிய முடிவையும், கதையை எழுத நான் படும் பாட்டையும் என் நிழல் அறிந்திருக்க வேண்டும்)

‘கீழ போறேன் வரியா’ என்றதற்கு தலையாட்டியது நிழல். ‘மத்தவங்க உன்னை எப்படி பார்ப்பாங்க’

‘எப்பவும் போலத்தான், உனக்கு மட்டும் தான் நான் பேசறது கேட்கும்’
‘அப்ப ஜாக்கிரதையா இருக்கணும், இல்லைனா தனியா பேசிட்டிருக்கான்னு சொல்லிடுவாங்க’

‘இப்பவே உன்னை பத்தி அப்படி…’ என்று நிழல் முணுமுணுத்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு காரணம், அடுத்து என்ன செய்வது என்று நான் யோசிக்க ஆரம்பித்திருந்தது தான். ‘என் நிழலும் என்னை கைவிட்டது’ என்று எனக்கு மிகவும் பிடித்தமான குரு தத்தின் பாடலில் வரியொன்று உண்டு. எனக்கோ உயிர் பெற்ற நிழல் கிடைத்துள்ளது. ஒருவருக்கு அவருடைய நிழல் உதவவில்லை என்றால் வேறு யார்தான் உதவுவார்கள். சரியான முறையில் இனி உபயோகப்படுத்த வேண்டும். கடைக்கு அதை அனுப்பி எந்த செலவும் இல்லாமல் பொருட்களை கொண்டுவரச் செய்யலாம், ஏடிஎமுக்கு அனுப்பி பணம் எடுத்துவரச் சொல்லலாம். மாய மனிதனாக மற்றவர்களை அவர்களறியாமல் கவனிக்க வேண்டும் என்பது என் சிறுவயது கனவுகளில் ஒன்று.

‘நீ என்ன கிரிமினல் ஆக்கிடுவே போலிருக்கே’ என்றது நிழல்.

‘ஏன்’

‘என்னால மத்தவங்க பெட்ரூம்ல எட்டி பார்க்க முடியாது’

‘பொய் சொல்லாத, என்னோட எல்லா ஆசைகளும் உனக்கும் இருந்து தானே ஆகணும். ப்ளஸ் நான் எங்க பெட்ரூம் பத்தி யோசிச்சேன், நீயே தானே அதை சொல்றே’ என்று நான் கூறியதற்கு நிழலிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த விஷயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம், சிறியதாக ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தேன்.

ஒரு மாதமாக கடைகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாலும், என் ‘பரனோயா’ என்னை விட்டு முழுதும் நீங்கவில்லை. எனவே நிழலை அனுப்பினேன். அது ரெண்டு மூன்று முறை சென்று வந்தபின், பரனோயா புதிய சந்தேகத்தை எழுப்பியது. ‘நீ பாதிக்கப்பட சான்ஸ் இருக்கா, அப்படி ஆச்சுனா எனக்கும் தொத்திக்குமா’ என்ற கேட்டதற்கு ‘தெரியலை, நீ சொல்ற மாதிரி கூட நடக்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று விட்டு மாஸ்கை வெளிச்சத்தில் வைத்து அதன் நிழலைக்கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டது என் நிழல். நிழல் எப்படி என் உருவம் கொள்கிறது, நிழல் நானாக கடைக்கு செல்லும் போது நேரத்தில் நான் யாராக இருக்கிறேன், அப்போது நிழலில்லாமல் இருக்கும் ‘என்னை’ என் குடும்பத்தினர் கவனிப்பதில்லையா போன்றவற்றை குறித்தெல்லாம் நான் யோசிக்க விரும்பவில்லை.

இவை அனைத்தும் இப்போது நிஜத்தில் நடப்பவை, இவற்றை அப்படியே நினைவில் பதிவு செய்வதை மட்டுமே செய்ய விரும்பினேன், அப்போது தானே யதார்த்தம் குறையாத இந்தப் புனைவை எழுத முடியும்.

பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. மேகங்கள் சூழ்ந்தாலோ, மழை பெய்தாலோ நிழல் வலுவிழந்து விடும், அதை உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும். இது சிறிய விஷயம் தான், பூதாகரமான சிக்கல் விரைவில் எழுந்தது. இருள் குறித்து எந்த நேர்மறை/எதிர்மறை அபிப்பிராயங்களும் இல்லாதவன் நான். அதை தவிர்க்க முடியாத, ஒன்றாக எண்ணி வந்திருந்தேன். இப்போது இருளிலும் என் படுக்கையறையில் என் நிழல் அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு முதலில் கிளர்ச்சியை தந்து பின்பு ஒவ்வாமையாக மாற ஆரம்பித்து, முயக்கத்தில் என் ஈடுபாட்டை குறைத்தது. சீக்கிரமே தூங்கிவிடுவதாக எத்தனை நாள் நடிக்க முடியும், என் மனைவிக்கு என்னை குறித்த சந்தேகம் எழுவதாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. இதை இனி இப்படியே விட முடியாது. தீர்வு எளிதான ஒன்றாக இருந்தது. என் மனைவியின் நிழலை கவருமாறு என் நிழலுக்கு அறிவுரை தந்தேன். உண்மையைச் சொல்லப்போனால், என் பள்ளி நாட்கள் முழுதும் ஒரு வார்த்தை கூட பேசாத உமா மீது பதின் பருவ ஆசைகளை உருவாக்கி, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத என்னை விட, என் நிழல் என்னை விட மிக ஆளுமை மிக்கதாக விளங்கியது, இப்படியெல்லாம் பெண்கள் மகிழுமாறு பேச முடியும், நட்பு கொள்ள முடியும் என்பது தெரிந்தது. நிழலை நான் எதுவாக ஆக முடியாதோ, அவற்றின் மறுபடிவமாக உணர ஆரம்பித்தேன். விரைவில் என் வீட்டில் இன்னொரு ஜோடி உருவாகியது. (நானே உமாவை ஒத்த நிழலொன்றை உருவாக்கி இணைத்து விடலாம் என்று நினைத்து பின் அதன் சாத்தியமின்மையை உணர்ந்தேன்)

இரண்டு வாரத்திற்குப் பின், இன்னும் சில நிழல்களை தன் குழுவில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் எல்லா நிழல்களும் அவரர் வீட்டிலேயே வசிக்கும் என்றும், இருவரும் மட்டுமே இருப்பதால் உருவாகும் சலிப்பை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும் நிழல் என்னிடம் கூறியது. ஒப்புக்கொண்டவன், ஓரிரு நாட்களுக்குப் பின்தான் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன். நிழல் சொன்னது பொய். இரண்டாம் தளத்தின் ரமேஷின் நிழலும், என் தளத்தில் வசிக்கும் ரேவதியின் நிழலும் குலவும் காட்சிகள், கையறு நிலையில் அவர்களை பார்த்தபடி இருக்கும் அவற்றின் கணவன்/மனைவி நிழல்கள். (அவர்களிருவரையும் ஒன்றிணையச் சொல்லலாமே என்று என் நிழலிடம் நான் சொன்னதற்கான பதில் அதன் பார்வையிலேயே கிடைத்தது). சில நாட்கள் கடந்த பின் முதல் தள வனிதாவின் நிழல் தன்னுணர்வு கொண்டுவிட்டதா என்று கேட்டேன். என் தந்திரத்தை புரிந்துகொண்ட நிழல்

‘ரமேஷ், ரேவதி நிழல்கள் செய்வது அதுங்களோட விருப்பம், அதுக்காக நானும் அப்படியே இருக்க முடியாது’, என்றது.

‘இல்ல வனிதாக்கு என்ன…’

‘ஐ ஆம் நாட் நாட் இன்ட்ரஸ்ட்டட்’

‘சரி வேற யாரையுமே புடிக்கலையா’ பதில் எதுவும் சொல்லவில்லை.

நிழலைக் குற்றம் சொல்ல முடியாது, என்னுடைய தைரியமின்மை மற்றும் கையாலாகாத்தனம் அப்படியே அதற்கும் வாய்த்துள்ளது. அபார்ட்மெண்ட்டில் இந்த வருடப் புத்தாண்டு விருந்தின் போது, வனிதா என்னிடம் பேசியதில் சமிக்கை உள்ளதாக உணர்ந்தவன், அதை குறித்து எதுவும் செய்யாமல் தானே இருக்கிறேன். எல்லா விஷயத்திலும் நிழல் என் மறுபடிவமாக இருக்காது என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

என் அபார்ட்மெண்ட்டிலிருந்து தெருவிற்கும் நிழல்களின் ராஜ்ஜியம் பரவ ஆரம்பித்தது. தெருவில் செல்லும் போது நிழல் இணை உலகொன்று இயங்கிக் கொண்டிருப்பதை பார்ப்பேன். அருகிலிருக்கும் வீட்டில் சங்கரின் நிழல் பேசிக்கொண்டிருக்க, அவர் என் அபார்ட்மெண்ட் மாடியில் மாஸ்க் அணிந்து கொண்டு நிழலில்லாமல் நடை பயிற்சி செய்து கொண்டிருப்பார். ரமேஷ், ரேவதியின் நிழல்கள் தழுவிக்கொண்டிருக்க, அவற்றின் நிஜங்கள் தங்கள் இணைகளுடன் பேசிக்கொண்டிருக்கும். பொது வெளியில் எந்த கூச்சமுமின்றி நிழல்கள் முயங்கித் திரிவது எனக்கு வியப்பைத் தரவில்லை, ஏனென்றால் தாங்கள் நிழல்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னைத் தவிர யாருமே அறிந்து கொண்டது போல் தெரியவில்லை. (தனித்து உயிர் பெற்ற அனைத்து நிழல்களும் பெரியவர்களுடையது, குழந்தைகளின் உயிர்பெற்ற ஒரு நிழலைக் கூட காணவில்லையே என்று என் நிழலிடம் கேட்டதற்கு அதனிடம் பதிலில்லை)

முன்பு, இயந்திரங்கள் உலகை இன்னும் சில காலத்தில் ஆளப்போகும், ‘ஏ.ஐ’ வளர்ந்து கொண்டே இருக்கிறது போன்ற செய்திகளை படிக்கும் போது அவற்றை எளிதாக கடந்து விடுவேன். ஆனால் இப்போது நிழல்கள் உலகை ஆள தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆள ஆரம்பிக்குமோ என்று பயப்பட ஆரம்பித்தேன். இதுவரை நிழலுலகில் ரெண்டு மூன்று தெருக்கள் மட்டுமே உள்ளன, இனி நான் வசிக்கும் ‘நகர்’, அடுத்து இத்தகைய நகரங்களின் இணைப்பான ‘தொகுதி’, பின் நான் வசிக்கும் ஊர்/நகரம்/மாநிலம் (எனக்கு மூன்றுமே ஒன்றுதான்) இவையெல்லாம் நிழலுலகினுள் வருவதற்கு இன்னும் பலகாலம் பிடிக்கும் என சமாதானம் செய்து கொள்வேன்.

நிழலுலகின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்-யாராலும் தேர்ந்தெடுக்கப்படாத – தலைவராக என் நிழல் இயங்க ஆரம்பித்ததை வியப்புடன் பார்த்தேன். எதையும் தானாக முன்சென்று நடத்தும் குணம் எனக்கில்லையே? நிழலுலகின் சட்டங்களை இயற்றும் போது நம்முலகை அப்படியே பின்பற்ற வேண்டாம் என்று மட்டும் நிழலிடம் சொல்லி வைத்தேன். (நிழலுலகு என்பது குற்றம் புரிபவர்களின் உலகை சுட்ட உபயோகப்படுத்தப்படுவது என்பதால் அதைத் தவிர்க்க எண்ணினாலும், உருவாகிக் கொண்டிருக்கும் இந்த உலகமும் அதன் பரிணாம வளர்ச்சியில், குற்றங்களுக்கான விளைநிலமாக மாறிவிடும் என்பதால் அது பொருத்தமான வார்த்தை தான் என்ற முடிவுக்கு வந்தேன்)

நிழலுலகம் பெரிதாக பெரிதாக, என் நிழல் வீட்டில் செலவிடும் நேரம் குறைய ஆரம்பித்தது. வெளியே என்ன செய்கிறாய் என்று கேட்பது அநாகரீகம் என்று நான் முதலில் நினைத்தாலும், என் நிழலின் அந்தரங்கம் என்னுடையதும் தானே, எனக்குத் தெரியாத என்னுடைய அந்தரங்கம் என்று ஒன்று எப்படியிருக்க முடியும் என்று எனக்கான காரணத்தை உருவாக்கி என் நிழலிடம், அது எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்தேன். என் உலகிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவதற்காகத் தான் தனியாக செல்கிறது என்று எனக்குத் தோன்ற, அது வெளியே செல்லும்போது நானும் பின்தொடர்வேன், ஆனால் லிப்டில் இறங்கி முடிப்பதற்குள் நிழல் என்னை தவிர்த்துவிட்டு தப்பிவிட, என் சந்தேகம் ஊர்ஜிதமாகும்.

அபார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகளைப் பார்க்கும் போது, இவர் நிஜமா அல்லது நிழலா என்ற கேள்வி எழும், தங்கள் நிஜங்களின் இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டனவா நிழல்கள்? நானே கூட என் நிழலாக இருப்பேனோ, என்று எனக்குத் தோன்றிய அன்று நிலைமை விபரீதமாக ஆகிக் கொண்டிருப்பதை உணர்தேன். நிழலை ஒழித்து விடுவதாகவும் அதற்காக என்னையே அழிக்கத் தயாராக இருப்பதாக அதனிடம் கூறினேன். நான் உனக்கு எதிராக எப்படி செயல்படுவேன், உனக்கு தீங்கு ஏற்பட்டால் அது எனக்கும் தானே பாதிப்பு, நான் தனியாக செல்வது ஏனென்றால் நாமிருவரும் ஒரே வார்ப்பு தானென்றாலும், எனக்கான உலகத்தில் தானே நான் இயல்பாக இருக்க முடியும் என்று என் நிழல் என்னிடம் அன்று பலமுறை இறைஞ்சிக் கூறிய பின்தான் மனதளவில் சமநிலையை அடைந்தேன்.

அதுவும் சில நாட்களுக்குத் தான். எனக்கு வாய்க்காத, நான் அறிந்திராத இன்பங்களை என் நிழல் நுகர்ந்து வருவதாக உறுதியாக நம்ப ஆரம்பித்தேன். நிழலுலகின் களியாட்டங்கள் என்று நானே உருவாக்கும் கற்பனைகளில் திளைத்து, பின் அதிலிருந்து மீண்ட பின் என் இயலாமை குறித்த கழிவுணர்ச்சி கொள்வேன். நம்முலகம் எந்தச் சுவையோ, சுவாரஸ்யமோ அற்றதாக மாறியது. இங்கு வாழ்வதற்காக என்னையே வெறுக்க ஆரம்பித்தேன்.

மற்றொரு முன்மாலை பொழுது. காலையிலிருந்து பெய்து கொண்டிருந்த மழை நின்றிருந்தது. மாடிக்குச் சென்றவன், என் நிழல் என்னுடனில்லை என்பதைக் கவனித்தேன். மழைக்குப் பின்னான அடர் மஞ்சள் நிற சூரிய ஒளியில் யாருமில்லாத தெருவைப் கண்கள் கூசப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் படர்ந்திருந்த பொன்னிறம் கருமை கொள்ள ஆரம்பித்தது. அருகிலிருக்கும் எல்லா வீடுகளின் சுவற்றிலிருந்து நெளிந்து இறங்கும் நிழல்கள். தனி உடல்களாகக் குழைபவை ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. களிப்பின் பேரோசை, முயக்கத்தின் மணம். இந்த உலகும் என்னுடையது தானே? சங்கமித்த நிழல்கள், சாலையில் தார் போல் உருகி வழிகின்றன. தளும்பும் கார்கடல். அதில் கடையப்பட்டுக் கொண்டிருக்கும் அமுதமும் எனக்காகத் தானே? மாடிச்சுவற்றின் மீதேறினேன்.

***

காலத்துகள்

தொடர்ந்து கதைகளை சொல்வனம், பதாகை ஆகிய இதழ்களில் கதைகள் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. இப்படிக் கதைகள் ஒரு முடிவு வைத்துக் கொண்டு இயங்க அரம்பிக்கின்றன அல்லவா? வித்தியாசமான முயற்சி. முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறார்…
    சமாதானம் என்கிற அளவில் லாஜிக் மிஸ்சாகிற இடங்களில் பிராக்கெட் போட்டு விஸ்தரிக்கிறார்… காலத்துகள் தனித்தன்மையான எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular