சந்திப்பு : கவிஞர்.அகரமுதல்வன்
தி. திருக்குமரன் தமிழீழ மண்ணின் எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் , சூழலியலாளர் என பல்வேறு களங்களில் 1999 இல் இருந்து செயற்படத் தொடங்கியவர். இவரது அரசியல்/எழுத்துச் செயற்பாடுகள் காரணமாக 2008 இல் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு இரகசிய வதை முகாமொன்றில் மிகுந்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டவர். தமிழீழ மக்களின் விடுதலைக் குரலாக, வலிகளை , துயரங்களை, இலட்சிய நெறியோடு கவிதைகளாக எழுதிவருபவர். இவரின் விழுங்கப்பட்ட விதைகள் எனும் கவித் தொகுப்பு அரசியல் பிரக்ஞை கொண்ட மிக முக்கியமான பதிவு.
– அகரமுதல்வன்
*
அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு ஈழத்துப் படைப்புகள் வெளியில் பேசப்படவில்லை
-கவிஞர் தி.திருக்குமரன்.
*
அகரமுதல்வன் : ஒரு ஊடகவியலாளராக இலங்கையின் ஊடக சுதந்திரம் எவ்வாறு இருக்கிறதென உணர்கிறீர்கள்?
திருக்குமரன் : சுதந்திரம் என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற நாடு இலங்கை. இல்லாத ஒன்றில் எப்படி அளவு இருக்க முடியும்அதுவும் மக்கள் பிரச்சனையை வெளிப்படுத்தும் ஊடகத்தில்சாத்தியமே அற்றது தானே?
சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைத்து அழுவதற்குக் கூட சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்தில் ஊடகத்துக்கான சுதந்திரத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனமானது; மேலும் உலகில் ஊடகர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த தேசமாக இலங்கையை எல்லைகடந்த கடந்த ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்த வருடமும் பட்டியல் இட்டிருக்கிறது.
சிங்கள அரச இயந்திரம் தனியே தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, தமிழீழத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் , கொள்கையளவில் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ‘லசந்த விக்கிரமதுங்க’ கூட மகிந்த அரசின் ஊழல்களை, மோசடிகளை வெளிப்படுத்தினார் என்பதற்காகவே கொழும்பின் பிரதான நகரமொன்றில் அனைவரும் பார்த்திருக்க சுட்டுக் கொல்லப்பட்டதோடு நிமலராஜன், சிவராம் என இந்த ஊடகர் படுகொலைப் பட்டியல் இன்னும் நீண்டு தான் செல்கிறது.
இலங்கை அரசால் காணாமற்போகச் செய்யப்பட்ட ‘லங்கா ஈ நியூஸ்’ ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட இதற்கு ஓர் அண்மைய உதாரணம். சிங்கள ஊடகர்களுக்கே இந்த நிலமை என்றால் தமிழன் என்பதால் மிக இலகுவாக புலி என்று சொல்லிவிடக்கூடிய ஈழத்தமிழ் ஊடகர்களின் நிலமையைச் சொல்லவேண்டியதில்லை.
அகரமுதல்வன் : 2006இல் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்ட நீங்கள் எந்த மாதிரியான சித்திரவதைகளை எதிர்கொண்டீர்கள்?
திருக்குமரன் : 2006 ல் அல்ல 2008 யூனில் வெள்ளை வானில் வீட்டுக்கு வந்த ஆயுததாரிகளால் பலவந்தமாக துப்பாக்கி முனையில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், இரகசிய வதைக்கூடமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு குரூர வதைகளின் பின்னரும் எவருக்கும் பயனற்று உயிருடன் இருக்கும் ஒரே தமிழ் ஊடகர் நானென்று தான் நினைக்கிறேன்.
எப்படி வதைத்தார்கள் என்ன செய்தார்கள் என்று திரும்பவும் வதைகளைப் பட்டியலிட்டு மீண்டும் பயங்கர இரவுக்கனவுகளில் அலற நான் விரும்பவில்லை வதைகளின் பின்னர் ஏறத்தாழ 8 மாதகாலம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகி என்னுடைய நாளாந்த கடமைகளைக் கூட செய்ய முடியாமல் இன்னொருவரின் துணையில் மட்டுமே இயங்கக் கூடிய நிலையில் இருந்தேன்.
எதிர்வரும் யூனுடன்(June ) கடத்தப்பட்டு 6 வருடங்கள் ஆகிற போதிலும் கூட பழைய மாதிரி என்னால் இயங்கநடக்க முடியாத நிலமையில் தான் இருக்கிறேன் என்பதளவு மட்டுமே என்னால் சொல்ல முடியுமெனில் வதை எப்படியானதென்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
.
அகரமுதல்வன் : புலி எதிர்ப்பு வாதத்தினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஆதரிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
திருக்குமரன் : மகாவலியின் பெயரால் சிங்கள அரச இயந்திரத்தால் உத்தியோக பூர்வமாக ஆக்கிரமிக்கப்படத் தொடங்கிய எமது நிலமும் அடையாளமும் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளால் தான் தடுத்து தக்க வைக்கப்பட்டிருந்தது.
புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எந்தக் கேள்வியுமே இல்லாமல் சட்டவிரோதத்தைச் சட்டமாக்கி தமிழர் நிலங்களை வேகமாக சிங்கள அரசு பறித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதாவது புலி எதிர்ப்புவாதிகளுக்கு விளங்கியிருக்க வேண்டும் ஆனால் வயிற்றை நிரப்ப விளங்காதது போலவே இருப்பார்கள்.
கடலில் சென்று கொண்டிருந்த போது படகின் முன் பகுதியில் ஓட்டை விழுந்துவிட நீர் வேகமாக உட்புகத் தொடங்கியதாம், அப்போது முன் பகுதியில் நின்றவர்கள் தம்மால் முடிந்தளவு வேகமாக உள்வரும் நீரை அள்ளி வெளியில் ஊற்றியபடி பின்பகுதியில் உள்ளவர்களை நோக்கி உள்ளே நீர் புகுந்து விட்டது உதவி செய்யுங்கள் என்று கேட்க, பின்பகுதியில் நின்ற குழுவினர் கால்களை படகின் மேல் தூக்கி வைத்தபடி எம் பகுதிக்கு இன்னும் நீர் வரவில்லையே ஏன் நாம் வீணாக உங்களுக்குதவ வேண்டும் என்று கேட்டு முன்னால் நின்று நீர் இறைத்துக் கொண்டிருந்தவர்களை தேவையற்ற வேலையென விமர்சித்துக் கொண்டிருந்தார்களாம்.
இந்தப் பின்னால் நிற்கும் குழு போன்றவர்கள் தான் இவர்களும். மூழ்கிக் கொண்டிருக்கும் இவர்களையும் காப்பாற்றத்தான் அவர்கள் முன்னால் நின்று போராடுகிறார்கள் என்பது இவர்களுக்கு புரியவில்லை , மூக்கை மேவி நீரேறும் போது புரியும்.
.
அகரமுதல்வன் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அப்படித் தான் இருக்கிறதா?
திருக்குமரன் : காலங்காலமாக இலங்கையில் தமிழரசியல்வாதிகள் எப்படி செயலாற்றினார்கள் என்பது நாமறிந்தது தான், தமிழீழத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலைப்படித்தால் இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளின் தகிடுதித்தங்கள் புரியும்.
இப்போது கூட்டமைப்பில் இருக்கின்ற எல்லோரும் அப்படிப்பட்டவர்களல்ல, ஆனால் அவர்களின் தலைமை தன்னுடைய அரசியல் வாழ்நாட்காலம் முழுவதிலும் ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவாகவும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகவுமே இருந்திருக்கிறது.
சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சம்மந்தனுக்கு குண்டு துளைக்காத காரும் கொமாண்டோ பாதுகாப்பும் கொடுக்குமளவில் சிங்கள அரசியல்வாதிகளுடனான உறவு நீடிக்கிறது, மேலும் இவர்கள் ஒரு எழுச்சியை உருவாக்கவோ மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கவோ சக்தி அற்றவர்கள்.
தமிழ்நாட்டில் எப்படி தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தை கொண்டோட மட்டுமே நினைத்து செயலாற்றுகின்றார்களோ அதே தான் அங்கும் ஏனெனில் இவர்கள் அந்த வழி வந்தவர்கள் தான்.
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த பின்னர் அரசியல்வாதிகள் இளைஞர்களை நோக்கி சரி இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாழ்வை, கல்வியை தொடருங்கள் என அனுப்பி விட இளைஞர்களும் சம்மதித்து சென்று விட்டார்கள்.
இந்த முறையைத்தான் தமிழீழப்பிரகடனத்தின் மூலம் இங்கும் அரசியல்வாதிகள் செய்தார்கள், தனிநாடு என்ற கோரிக்கை மூலம் இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டி தேர்தலில் ஜெயித்து விட்டு சரி நாங்கள் இனிப்பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் செல்லுங்களென ஆயுதமேந்திய இளைஞர்களை அனுப்ப நினைத்தார்கள், ஆனால் ஈழத்தில் அதுவாய்க்கவில்லை.
இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் இவர்கள் தமக்கு முடிந்த சமாளிப்பு, விட்டுக்கொடுப்பு அரசியலைத்தான் செய்கிறார்களே தவிர உண்மையாக தமிழ் மக்கள் படும் அவலங்களை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்கிறார்களில்லையென்ற விமர்சனம் இவர்கள் மீது நிறையவே வைக்கப்படுகிறது.
.
அகரமுதல்வன் : முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா ?
திருக்குமரன் : கடந்த 30 ஆண்டுகளாக வன்னியில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு அமைவாகவே ஓர் குரலின் கீழ் தனித்தனியான நிர்வாக முறைமைகளில் இயங்கிக் கொண்டிருந்த அமைப்புகள், அந்தக் குரல் மெளனித்துப் போனவுடன் அவையவை தமக்கான தனித்த நிர்வாக நிலையின் படி மற்ற அமைப்புகளுக்கு பதில் சொல்லத் தேவையற்று இயங்கத் தொடங்கின.
இதில் ஒருவரின் செயற்பாடுகளில் மற்றவருக்கு கருத்துவேறுபாடு வருவது தவிர்க்க முடியாயது தான், இந்த தனித்துப் பிரிந்திருக்கும் நிலையை எதிரியும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பலரை தமக்குள் உள்வாங்கி குழப்பத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
அயர்லாந்தில் வட அயர்லாந்தில் விடுதலைக்காக இன்னும் குரல் கொடுக்கும் IRA அமைப்பில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன, அவரவர்களுக்கிடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, மிகச் சிலவேளைகளில் தமக்குள் அவர்கள் மோதிக்கொள்வதும் உண்டு, பாலஸ்தீனத்தை எடுத்துக் கொண்டாலும் இதே தான்.
ஆனால், அவர்களுக்கும் எமக்கும் ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில் அவர்களுக்கு கால்பதித்து நின்று போராட சொந்த நிலம் இருக்கிறது, வெளிநாடுகளில் உள்ள அவர்களின் குழு உறுப்பினர்கள் அங்கிருந்து வரும் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள்.
ஆனால் எம் நிலைவேறு நாம் முற்று முழுதாகப் புலத்தில் இருக்கிறோம், நிலத்தில் இருந்தும் குரல் கொடுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்தாலும் நாட்டில் உள்ள எதேச்சதிகார நிலைமையில் அது ஒரு அளவுக்கு மேல் முடியாது.
பிரிந்து தமக்குள் அடிபட்டு ஆளாளுக்கு கறுப்புவெள்ளை அடித்துக் கொண்டிருந்த அமைப்புகளை இலங்கை அரசு தடை செய்தது, ஒருவகையில் எல்லோரையும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தேவையை உருவாக்கி இருக்கிறது.
சூரியனின் ஈர்ப்பில் ஒழுங்குமாறாமல் வலம் வந்த கோள்கள், திடீரென ஒருநாள் அந்தச் சூரியனை ஒரு கருந்துளை விழுங்கினால் நெறிப்படுத்த ஓர் ஈர்ப்பின்றி தம்முள் முட்டி மோதும், செல்லும் வழி ஒழுங்கு திடீரென உடைந்ததால் தடுமாறும், அது தான் எமக்கும் இப்போது நிகழ்கிறது என்பது தான் உண்மை.
.
அகரமுதல்வன் : தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை தமிழீழ மக்களின் அரசியல் தோல்வியென நோக்கும் நிலை குறித்து ?
திருக்குமரன் : பொதுவாகவே உலக நாடுகளின்விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நிர்வாகமுறை அரசியலில் இருந்து இராணுவத்துக்கு வந்தது, அதாவது அரசியல் மட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களைத்தான் இராணுவம் முன்னெடுத்தது.
ஈழத்தில் அப்படி அல்ல, எல்லா முடிவுகளும் இராணுவத்திலிருந்தே எடுக்கப்பட்டது இராணுவத்தின் தீர்மானங்களைத் தான் அரசியல் பிரிவு தம்மூடாக உலகுக்கு முன்வைத்ததுஅதனால் தான் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டவுடன் அதன் உத்தரவுகளில் தங்கி இருந்த அரசியல் நிலையில் ஒரு பாரிய தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் மாறிக்கொண்டு வருகிறது, அதன் நலன் என்கின்ற வட்டத்தில் எம்முடைய தேவைகளும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் எப்போதும் மாறாத சரியானவர்களால் வைக்கப்படுமானால் நாம் மீண்டும் மேவி எழலாம்
.
அகரமுதல்வன் : தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்விக்கு பின்னர் மாறியுள்ள உலக அரசியல் சூழல் தமிழர்களுக்கு சாதகமானதாக உள்ளதா?
திருக்குமரன் : இல்லை நிச்சயமாக இல்லை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததென்பது தனியே இலங்கை அரசு செய்ததில்லை, 21 நாடுகள் தம்முடைய பிராந்திய நலனுக்காக இலங்கையுடன் இணைந்து செய்த கூட்டுப் படுகொலை தான் இந்த தமிழினப் படுகொலை. இலங்கை அரசு செய்தது வெறுமனே துப்பாக்கி விசைய அழுத்தியது தான்.
துப்பாக்கி செய்தது ஒரு நாடு, குண்டு கொடுத்தது ஒரு நாடு, சுடப் பயிற்சிகொடுத்தது இன்னொன்று , சரியான தகவல் கொடுத்தது இன்னொன்று, கையில் பிடித்து குறிபார்த்துக் கொடுத்தது மற்றொன்று ஆக அழுத்தியது மட்டும் தான் சிங்கள இராணுவம்.
புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் கழுதைப்புலியாக, நரியாக எச்ச சொச்சங்களை துன்புறுத்தி, பலாத்காரம் செய்து இலங்கை அரசு மகிழ்ந்ததை, மகிழ்வதை எல்லோரும் அறிந்தது தான். இப்படி இருக்க எப்படி கொலையாளிகளிடமிருந்தே எமக்கான தீர்வை நாம் எதிர்பார்க்க முடியுமென்று தெரியவில்லை.
‘விடுதலைப் போராட்டம் நெடிது’ உலகெங்கணும் சாத்தியமில்லை என்று நினைத்த விடுதலைப் போராட்டங்கள் உறுதி குலையாத தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே சாத்தியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
‘நடந்துவிடாதென்பதையும் நடத்துவித்துக் காட்டுவதே
திடம்மிகுந்த விடுதலைப் போராட்டத் திருக்கீதை’
இனி ஈழம், தமிழ் என்ற சொற்பதங்களே வராதபடிக்கு எல்லாவற்றையும் ஊதி அணைக்கும் திட்டத்தை அமெரிக்க இந்திய மேற்குலக நாடுகள் கையிலெடுத்திருந்தாலும் ஓர்மங்குன்றாத தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் ஒருநாள் எங்கள் கனவு மெய்ப்படும் என்பதே என் நம்பிக்கை.
.
அகரமுதல்வன் : புலம் பெயர்ந்த ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறு மக்கள் அரசியலில் எதிர்வினை ஆற்றுகிறது ?
திருக்குமரன் : ஈழ அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு, எதிர்வினையாற்றும் அளவுக்கு, மக்கள் கருத்துநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய அளவில் ஈழத்துப் படைப்புகள் வெளியில் பேசப்படவில்லை என்றே சொல்லுவேன்.
அதற்கான வெளி எமக்கின்னும் உருவாகவில்லை, சரி தமிழ்நாட்டிலாவது உருவாகும் என்று பார்த்தால் அங்கும் வாய்ப்பில்லை, அவர்களுக்கு எம்முடைய பாடுபொருள் புதிது, விளங்கவும் மாட்டார்கள் அதற்கு விரும்பவும் மாட்டார்கள்.
நீங்கள் சிங்களத் தமிழா அல்லது தமிழ் தமிழா என்று தமிழ்நாட்டில் எழுத்தாளர் பதாதையை காவிக்கொண்டு திரிவோர் சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், அது தவறானதும் இல்லை, ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் எந்த வட்டார வழக்கு எழுத்தையும் வாசித்து புரிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டவர்கள் எம்முடைய கொலோக்கியலை புரிய முயல்வதில்லைஏனெனின்றால் அது அவர்களுக்கு சோறுபோடாது, தேவையும் இல்லை.
ஈழத்தமிழர்கள் சிங்களம் பேச விளங்க முயல்வார்கள், ஆனால் சிங்களவர்களுக்கு தமிழ் படிக்க வேண்டும் விளங்க வேண்டுமென நினைப்பதே இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு தேவையில்லை,.
அதே போலத்தான் தமிழ்நாட்டிலும் எம்முடைய வலிகளைப் பேசும் எழுத்துகள் எல்லாம் அவர்களுக்கு புலம்பலாகவே தெரியும், எழுத்துக்களை தம்முடைய அறிவுத்தராசில் நிறுத்து அளவு கூறும் தமிழ்நாட்டு இலக்கிய விமர்சகர்கள் எழுத்தாளர்கள், முகமனுக்காக எம்முன்னால் தற்செயலாக உதட்டளவில் ஏதும் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் எப்போதும் ஈழத்து எழுதுக்களைப் புறக்கணிக்கும்,ஒதுக்கும் போக்கையே கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டில் சுற்றித்திரியும் எம்முடைய சில எழுத்தாளர்களும் தம்மை அங்கு தக்கவைக்க வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டுக்குரிய பாடுபொருட்களையே தம்முடைய எழுத்துகளில் பேசிவருகிறார்கள், சாதி, பெண்ணியம், பெரியார், மோடி, இந்துத்துவா, இப்படி நிறைய, அதற்காக அதனைப் பேசக்கூடதென நான் சொல்லவில்லைஅங்கு தாம் பேசப்பட வேண்டுமெனில் இதனைப் பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள் என்று தான் சொல்கிறேன்.
எமக்கான ஒரு அரசியற் சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த நிலைமைதான் நீடிக்கும், ஆனால் தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் அந்தந்த தேசத்துக்கான மொழிகளில் திரைப்பட வடிவிலோ எழுத்து வடிவிலோ எம் பிள்ளைகள் பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.
காலப்போக்கில் இது வளர்ர்சியுறும் என்றே நம்புகிறேன், அரசியற்பணி செய்யும் புலம்பெயர் அமைப்புகள் எம்பிள்ளைகளின் கலைப்படைப்புகளை வெளிக்கொணரும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
.
அகரமுதல்வன் : புலம்பெயர் தமிழரின் அரசியல் மந்தத்தனத்தை சூடு போடும் கவிதையாக உங்கள் எதுவுமற்ற காலையை எடுத்துக் கொள்ளலாமா?
திருக்குமரன் : அது பார்ப்பவர்களின் புரிதலைப் பொறுத்தது; போரில் தோற்று வாழ்க்கையையே இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது எங்கள் தமிழ்ச்சமூகம் போராளிகளை எப்படிக் கேவலமாக கையாள்கிறது அவர்கள் மனதை எப்படி நோகடிக்கிறது.
இதற்காகத்தானா, இவர்களுக்காகத்தானா போராடினோம் என்கின்ற மன விரக்தியின் ஆதங்கவெளிப்பாடுதான் அந்தக் கவிதை.
.
அகரமுதல்வன் : தமிழ்நாட்டின் அரசியல் பண்டமாக ஈழத் தமிழர்களின் துயரம் உபயோகப்படுதப்படுகிறதென்கிற கருத்தில் உடன்படுகிறீர்களா ?
திருக்குமரன் : எல்லோரையும் அப்படிச் சொல்வதற்கில்லை; அப்துல்ரவூப் முதல் முத்துக்குமாரில் இருந்து 16 பேர் எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தம்மையே எரித்துக் கொண்டார்கள், தமிழ்நாட்டில் இப்படி ஒன்று நடந்திருந்தால் ஈழத்தமிழர்கள் யாராவது இப்படி எரிவார்களென்று நினைக்கிறீர்களா? நான் இதனை இப்படித்தான் பார்க்கிறேன்.
எந்த வழியிலேயோ ஈழம் பற்றிய கதை ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் யாராலோ மக்களிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது; ஈழத்தில் நடப்பவை அதே மொழிபேசும் மக்களின் நினைவில் தக்க வைக்கப்படுகிறது.
பலர் ஈழத்தை தம்முடைய அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்களென்பது உண்மைதான். ஆனால் விடுதலைப் போராட்டத்தின் போது எமக்கான களமருத்துவப்பொருட்களை, குருதியை, இன்னும் களத்துக்கு தேவையானவற்றை தமிழ்நாட்டு அரசியற்கட்சியின், அமைப்புகளின் தோழர்களே மிகுந்த சிரமத்தின் மத்தியில் அனுப்பி வைத்தார்கள் இதனால் அவர்களில் பலர் இன்னும் வழக்குகளைக் கூட எதிர்கொள்கிறார்கள்.
புலிகளின் தலைவர் சொன்னதைப் போல ஈழம் குறித்த செய்தியை, அந்த நெருப்பை அணையவிடாமல் இன்னமும் அதனைப் பேசுபொருளாக்கி தமிழ்நாட்டில் எம்மீது அபிமானம் கொண்ட அரசியல்வாதிகள் பேணிவருகிறார்கள்’ அதுதான் உண்மையும் அவர்களால் முடிந்ததும் கூட.
.
அகரமுதல்வன் : உங்கள் விழுங்கப்பட்ட விதைகள் எனும் கவிதைத்தொகுப்பு குறித்து ?
திருக்குமரன் : விழுங்கப்பட்ட விதைகள் என்னுடைய இரெண்டாவது கவிதைத் தொகுப்பு, நான் எதிர்கொண்ட வதை முகாம்களை, சிறைகளை, பிரிவை, நீண்ட தனிமையை, தோற்றுப்போன ஆற்றாமையை , வாழ்ந்த, வாழும் வாழ்வை முடிந்தளவு எந்தப் பாசாங்குமில்லாமல் அப்படியே எனக்கான மொழியில் எழுதி இருக்கிறேன்.
*
திருக்குமரனின் வலைப்பூ : http://www.thirupoems.
நேர்க்காணல் நேர்த்தியான ஒன்று.பகிர்ந்து கொண்ட எண்ணங்களும் கருத்திற்கொள்ள வேண்டியதாய் உள்ளது.
கவிஞர் திருக்குமரன் எதிர்கொண்ட இலங்கை இனவாத அரசின் கொடுமைகள் நினைக்கவே ஆன்மா அதிரும். அவர் கடந்த காலத்தில் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட இலங்கை அரச பயங்கரவாதத்தின் பதிவு செய்யப்பட வேண்டிய எஞ்சியுள்ள சாட்சியங்களுள் ஒன்றாகவே வாழ்கிறார். நிச்சயமாக அவரைப்போன்றவர்களின் வாழ்வு ஆவணப்படமாக புத்தகமாக பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். இவற்றைவிட கவிஞர் திருக்குமரன் தேர்ந்த ஈழத்தின் சூழலியல் வல்லுனர். நான் அவரது ஈழத்தின் சூழலியல் தொடர்பான எழுத்தை எதிர்பார்க்கிறேன். ஈழத்தின் சூழலியல்பற்றி திருக்குமரன் ஒரு புத்தகம் தொகுத்தால் நிச்சயம் நானும் ஒருகட்டுரை எழுதுவேன். பல்லாண்டு வாழிய தோழா