ஜீவ கரிகாலன்
மழை நாளொன்றில் – 1
அரசாங்கங்களின் நீண்டகாலத் திட்டங்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவு தூரத்திலிருந்த எதிர்காலத்தின் ஆண்டொன்றை தனது போலோ சட்டையில் பெரிதாகப் பொறித்திருக்கும் மானுடவியலாளர்களால் தரம் பிரிக்க முடியாத கலப்பின மனிதன் அவன். மழைநீரால் சூழப்பட்டு அரை ஷட்டர் கீழறக்கப்பட்டு இருக்கும் பகுதியில் இருக்கின்ற 500 சதுர அடி புத்தகக் கடையில் திக்விஜயம் செய்து, “அனைத்தும்” என்றான். பின்னர் “மலிவான ஃப்யூஅல்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
அந்நகரத்தின் மழை சூழாத மேட்டுப்பகுதியில் இருக்கின்ற புத்தகக் கடைக்கு இந்தச் செய்தி வரும்போது கூடவே வேறு சிலரும் வந்து சென்றார்கள். அவர்களும் அதையே சொன்னார்கள். மழையே பெய்யாத மாவட்டங்களின் புத்தகக் கடைகளுக்கும் அவர்கள் வந்தார்கள். பின்னர் அவர்கள்தான் என்றில்லை, அந்த நிலத்தின் அத்தனைக் கடைகளும் காலியாக்கப்பட்டன. ஒருமுறை கூட வாசகர்களுக்கு தள்ளுபடியே தராத புகழ்பெற்ற புத்தகக்கடை ஒன்று மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. அவர்களும் அதே காலத்தை சட்டையில் பொருத்தியவர்கள் தாம்.
பதிப்பகங்கள் திடீரெனக் கோமாவிலிருந்து விழித்தன. அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எழுதித்தர அவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்களின் வீட்டில் வரிசையில் நின்றார்கள். கவிதைகளுக்கான பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பிற்கு கல்லூரிகள் வகுப்புகள் தொடங்க பல்கலைக்கழகங்களுக்கு அரசாணை பிறப்பித்தன.
எழுதுவதற்கான காகிதம் தீர்ந்து போகும் என்கிற அச்சத்தில் இராணுவத்தினர்கள் வனத்தைப் பெருக்கவும் உருவாக்கவும் தொடங்கினார்கள். மரம் வெட்டுவதற்கு எதிரான தண்டனைகள் மனிதத்தன்மையற்றது என உலக சபை அறிவுறுத்துவதை அவர்கள் பொருட்படுத்தாமல் இருந்த வேளையில், அச்சகத்தில் கிடைத்த வெட்டப்பட்ட உபரிக்காகிதங்களை தாஸ் பொறுக்கி விற்றுக் கொண்டிருந்தான்.
ஈஸ்வருக்கு தனிநபர் கடன் கிடைத்ததால் அவனும் சில கட்டுக் காகிதங்களை வாங்கி வீடுவந்து சேர்ந்தான். இந்தக் காகிதம் தான் வடிவத்தை தீர்மானிக்கும் என்று அவனுடைய கனவில் வந்த கழுதையின் ஞாபகம் வந்தது.
*
மழை நாளொன்றில் – 2
மழை பெய்யும் நாளொன்றில்தான் குளிக்க முடியும் என்று எதிர்பார்த்த மனிதர்களைப் போல அதுவும் தன் அகத்தை விட்டு வெளியே வந்தது. தன் தலையில் பட்டுத் தெறிக்கும் ஒவ்வொரு சொட்டின் ஓசையும் தன் இணையைக் கட்டையால் அடித்துக் கொன்ற சப்தத்தை நினைவுபடுத்தினாலும் பெய்வது மழை அன்றோ. ஆறு போகும் நிலத்திற்கோ கண்மாயுள்ள பூமிக்கோ இடம்பெயராமல் கொன்றவனைப் பழிவாங்கக் காத்திருந்த அந்த ஆறு அடி கருநாகத்திற்கு அருகிலேயே நின்றாலும்.. முதல் மழையை சந்திக்கின்ற எலி கரிசல் மண்ணின் சகதியால் ஒரு கார்க் பந்தாக மாறப்போவதை அறியாமல் தன் மீசையில் ஒழுகும் நீர்த்துளிகளை எண்ணிக் கொண்டிருந்தது.
கிழிந்த சொக்காயும் ஒழுகும் மீசையும் கைகளில் ஆறு ஏழு சூட்டுக்காயத் தடங்களும் கொண்ட சிறுவனின் முதல் மழை.. உப்புச் சோப்பினாலும் சவரு தண்ணியாலும் கழுவப்படாத கந்தக விரல்களில் மழை நீர் தேய்த்து உறித்தெடுக்கும் தோல்களில் முளைத்திருக்கும் புதுத்தோல் தன் குஞ்சுகளின் தோல்களைப் போன்றே இருப்பதை அறிந்தது கருநாகம்.
அச்சிறுவனோடு சேக்காளிகள் வந்து மாரியாத்தா பாட்டு பாடினார்கள்.
கருநாகம் படமெடுத்து வானைப் பார்த்து வாய்பிளந்து, பிளவு பட்ட நாக்கை நீட்டி 1 2 3 என நீர்த்தொகுப்புகள் உள்ளிறங்க, தன் இணையைக் கொன்றவனின் மகனைக் கொல்லாமல் விட்ட அது மழையைக் குடித்தது.
*
மழை நாளொன்றில் – 3
மழை பெய்யும் நாளொன்றில் சென்று கொண்டிருந்தது சவ ஊர்வலம். தினத்தந்தியில் எப்போதும் பிரிவினைகளுக்கான கொலைச்செய்தி தரும் நகரொன்றில் எப்போதுமில்லாத நாளாய் எல்லோரும் ஒன்று கூடியிருந்தார்கள். மெஸெஞ்சர்களை, இணையத்தை முடக்கி வைத்திருந்த அரசு அந்த ஊர்வலத்தின் வெற்றியைக் குலைக்க அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.
பிற சாதிக்காரர்களை வீட்டிற்குள் விடாத, வேலைக்காரர்களை பின்வாசல் வழி உள்ளே விடும் சுதா, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செல்வதாக பொய் சொல்வதை அவள் வீட்டுநாய் கூட அறிந்திருந்தது.
“எந்த வேச மக்காவாச்சும் லத்திய தூக்குட்டும்.. பொறவு அவன் அம்மாட்ட வாங்குன பால கக்கிட்டுத்தான் ஊரெவிட்டும் போகனும்லே” என்று அதிகாரியை மிரட்டிய பாதிரியாரைப் பார்த்தபடியேதான்.. அவளும் கூட்டத்தில் இணைந்தாள். பின்வாசல் வழி வந்தவளைக் கண்டு அவள் கை கோர்த்தாள். அது மன்னிப்பைக் கோரும் கை கோர்ப்பு.
“சகாய மேரி” என்று தன் கடுஞ்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட பாதிரியாரைப் பின் தொடர்ந்து அந்த நகரத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஊர்வலம் வந்தது. ஆண்டவனின் வார்த்தைகளை உதிர்க்கின்ற வெள்ளையுடைகளின் முகங்கள். ரஸாயனக் காற்றை சுவாசித்து வெள்ளையாகிப் போன அவள் உதடுகள் பைபிள் வசனத்திற்கு ஈடாக குல தெய்வத்தை முனுமுனுத்தது
சடங்குகள் முடித்து போய்க்கொண்டிருந்தவர்களை அங்கங்கே நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏம்மா அந்தத் தெருல இருந்து நீயேம்மா?” என்கிற.. திருநீற்றை டிஸ்டெம்பர் போல் நெற்றியில் நிரந்தரமாய் பூசிய அதிகாரிக்கு..
“உசுரக் கொடுத்து இந்த மழையக் கொண்டு வந்தவ அவ, இந்த ஊருக்கே இது கன்னி தெய்வம்” என்றபடி பாதிரியாயிடம் கேட்டுப் பெற்ற மையவாடி மண்ணைக் காண்பித்தாள். மஞ்சள் தடவி அவள் வணங்கப் போகும் மண்ணிற்கு உயிர் கொடுத்தது மழைச்சொட்டு.
*
மழை நாளொன்றில் – 4
மழை பெய்யும் நாளொன்றில் வீட்டிற்கு வந்த கோடங்கி ஒரு படி அரிசி கேட்டான். கடையிலேயே இரண்டுமாதக் கடனும் வீட்டிலேயே குறைவாகத்தான் இருக்கு என்பதையுமறிந்திருந்தவன் கையில் ஒரு தம்ளர் அரிசியைக் கொட்டும் அம்மாவைப் பார்க்கையில் ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு.
அச்சிறுவனைப் பார்த்ததும் வீட்டின் கூரையைப் பார்த்த கோடங்கி, “மாரியாத்தா போயிடுச்சா” என்றான். வாடிய முகத்தோடும் கருவளையங்களில் இன்னும் ஒளி பொருந்திய கண்களோடும் இருக்கும் அவள்.. “மூனாவது தண்ணியும் ஊத்தியாச்சு” என்றாள். தூரத்தில் இன்னொரு பையனும் கணவனும் முகத்தில் புள்ளிகளோடு அமர்ந்திருந்தனர்.
பையில் வாங்கிக் கொண்ட அரிசி முழுவதுமாக விழுவதற்குள் நான்கு மணிகளைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டவன். பழைய அரிசியின் வாசனையில் புன்முறுவலித்தான்.
“மக்களப் பெத்த மகராசி நீ.. உன்னால மத்த உசுரும் பூமியில நிக்குது. குலதெய்வம் யாருன்னு தெரியாம நிக்கிற நீயும் தெய்வந்தான்”
வெலவெலத்தாள்.
“போய் வெளக்கேத்தி கோலம் போட்டு அதுல மஞ்சத்தண்ணிய தெளி.. மிஞ்சுன கோலம்தான் உன் சாமி.. அதைய படத்துல வரஞ்சி வை..”
“அதல்லாம் நம்பாத, ஏமாத்தி காசு வாங்குறான்” என்று உள்ளிருந்து எக்காளிமிட்ட குரலைக் கண்டித்தான்.
“நீ இன்னிக்கு உசுரோட இருக்கறதே இந்தம்மாவோட புண்ணியத்துல தான். சாமி இருக்கற எடத்துல மெதப்புக்குன்னு பேண்டவங்க தான் நீங்க”
இவனுக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கேட்காத போதும்..
“சுத்தமான தண்ணி நெனச்ச ஒடம்புல பொய் வராது – மழை – அந்த மாரியாத்தாவே உனக்கு யார்னு காட்டுவாடா”
அன்றிரவு நடுநிசி அமைதி கும்மெனச் சூல்கொண்டிருந்த மழை மேலிருந்து சோவென உதிரத்தயாராகும் முன்னர் இருந்த பேரமைதியில் அவ்வீட்டில் பரிசு கொடுக்க என்று வாங்கிய வெண்கல குத்துவிளக்கு ஒன்று விழுந்து உருண்ட சப்தம்.. அந்த சப்தமே குரலானது.
“டேய் யாராச்சும் வெளக்கப் போடுங்கடா”
அம்மையின் குரல் இத்தனைக் கம்பீரமாய், அதட்டலாய், எதிரொலிக்க கேட்காதவர்கள் அலறியடித்தபடி விளக்கைப் போட்டார்கள். படுக்கையின் மேலே நால்வரும் ஒருவர் பார்த்தார்கள். பின்னர் அம்மாவையே மற்ற மூவரும் பார்த்தார்கள்.
“குறிச்சு வச்சுக்கங்கடா என் பேரை”
மீண்டும் சப்தம் வந்தபோது அது அம்மா இல்லை என்று அச்சிறுவர்களுக்குப் புரிந்தது. நிதானத்துடன் அவர்களை அமரச்செய்து காகிதத்தை நீட்டினாள். இடது கையால் பேனாவை வாங்கி எழுதத் தெரியாமல் தண்ணீர் அழித்து எஞ்சியிருந்த கோலத்தையே காகிதத்தில் போட்டார்.
“என்னடி பாக்குற நான் தான் காந்தாரி”
கூப்பாடு போட்டு பெய்யத் தொடங்கியது மழை.
*
மழை நாளொன்றில் – 5
மழை பெய்யும் நாளொன்றில் தேநீர் வாங்கி வரச்சொல்லி தன் இளைய மகனை கடைவீதிக்கு அனுப்பினார் அவர். அடகிலிருந்து வீடு மீண்டது என்கிற சந்தோசத்தில் பொன்னியம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்ய தன் மகளோடு போயிருந்தாள் மனைவி. தானும் போயிருக்கலாம் என்றுதான் தோன்றியது. பட்டறையை முழுவதும் விற்று, தான் மீண்டு வந்தது உண்மையில் மீட்சியா என்கிற அலை.
“இனி ஒன்னும் செய்ய வேணாம், நாம் பாத்துக்கறேன்” என்று டிப்போவுக்கு செல்லும் மகனை வாசல் வந்து வழியனுப்பிய மனைவியின் முகத்தில் தாம் என்னவாக இருப்போம் என்று யோசித்திருக்கக் கூடாது.
“டீக்கடையில் இரும்புச் சத்தம் கேக்காமல் எப்படி இருக்க முடியும், டவுன்ல ஏ.டி.எம் பார்த்துக்குறியா” என்று சிநேகிதன் கேட்டிருக்கக் கூடாது.
மூன்றாவது புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று சொல்லும் ரேடியோவில் அதற்கடுத்து ஒலிபரப்பிய பாடலைக் கேட்கும் முன்னரே நிறுத்தினார் அவர். அவர் வழக்கமாகப் பாடல் கேட்கும் நேரம்.. தான் நிப்பாட்டியிருக்கக் கூடாது.
சைக்கிளில் கழன்றுக் கிடந்த செயினை இழுத்துப் பொருத்திவிட்டு கையாலேயே பெடலைச் சுற்றுகையில் அது தன்னைப் பொருத்திக் கொண்டது. அவனுக்கு அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
“சைக்கிள் செய்ன மாட்டுறது மாதிரி தான் வாழ்க்க, ஒரு ரெண்டு பல்ல சரியா கோர்த்து சுத்துனா அதுவா மாட்டிக்கும். எதையாச்சும் ஒன்னையாவது உருப்படியா செஞ்சன்னா வாழ்க்க பிடிச்சுக்கும்.. ஒன்னு நல்லா நல்லா படி இல்ல வெளையாடு இல்லன்னா வேலை செய்யி.. எல்லாத்தலயும் அரமனசா இருந்தா எதுவுமே சரியாகாது”
குரங்குப் பெடல் அடித்தபடி ஒரு கையில் தூக்குச்சட்டி கீழே விழாது பிடித்துக்கொண்டே வானவில் பார்த்தபடி ஓட்டிச் சென்றான்.
‘ஏன் இப்பல்லாம் அப்பா டீக்கடைக்கு போகாம வாங்கிவரச் சொல்றார்’ என்று மனதில் தோன்றியது. தேநீர் கடையில் நிற்கையில் மனதும் சட்டையைப் போலே ஈரமாகியது.
தன்னை நோக்கி குரல் கொடுத்தபடியே டி.வி.எஸ்ஸில் வந்த பக்கத்து வீட்டு அண்ணன் “உங்கய்யா தூக்கு மாட்டிக்கிட்டாருடா” என்று சொல்கையில் அவன் தந்தை கேட்காமல் விட்ட பாடலின் கடைசி வரி ஒலித்தது.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மழை நாளொன்றில் – 6
மழை நாளொன்றில் அவள் கோயிலுக்குச் சென்றிருந்தாள். சும்மா போக்குக் காண்பித்துவிட்டு பெய்யும் மழையென்று தான் அவள் நினைத்திருக்க வேண்டும். இல்லை அவன் அப்போதாவது பின்தொடர்ந்து வரமாட்டான் என்கிற நம்பிக்கையாய் இருக்கும்.
சின்ன கற்கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு. கருவறைக்குள் நின்றபடி நான்கடி பெரிய லிங்கத்தைத் தழுவி வணங்கி கும்பிடுவது அவ்வூர் மக்கள் வழக்கம். மழை வலுத்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் தனது ராசியை, நட்சத்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது அவனும் உடனிருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள். வேறு யாரிடமோ பேசுவது. இத்தனை நாள் தன்னைத்தான் பார்க்க வந்தானா என்கிற சந்தேகம் கிளர்த்த, அவள் புதுவிதமான உணர்வு கொண்டாள்.
தன்முறை வந்து லிங்கத்தை அணைக்கையில் வரும் பால் வாசம், கற்பூர வாசம் அன்று வரவில்லை. இறுக்கமாய் தழுவிக்கொண்டாள் அவன் வாசனை வந்தது. அவள் முதுகை யாரோ தட்டும் வரை எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை.
ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் கோயில் என்பதால் கோயிலுக்கு வந்தோர் வீடுகளிலிருந்து குடைகளோடும் சிலர் இரண்டு குடைகளோடும் வந்து கூட்டிச்சென்றனர்.
அவளைக் கூட்டிவர யாரும் ஊரில் இல்லை என்று தெரியும். அவள் அம்மாவின் சுகவீனத்திற்காய் தான் அவள் கோயில் வருகிறாள். அவன் குடை ஒன்றை இரவல் பெற்று அவளிடம் வந்தான். வீடுவரை வந்து விடுகிறேன் என்று சொல்லும்போது தலையாட்டினாள். அவள் குரல் சமாதியடைந்தது போல் தோன்றிற்று. இன்னும் ஒருமுறை என்று லிங்கத்தைத் தழுவிவிட்டு வந்தவளைப் பார்க்கையில் அவன் மிரட்சியாய் இருந்தான்.
அதுவரை இருந்த அவனுக்கு இல்லாத ஒன்றைத் தந்தாள். குடையை நான் பிடித்துக் கொள்கிறேன் என்று அவனுக்கும் பிடித்தபடி நடந்துச் செல்ல, அவனும் உடன் வந்தான்.
ஊருக்குள் நுழையும்போதே குடையிலிருந்து விலகி அவளை வீட்டுக்குச் செல்லுமாறும் தான் அடுத்தநாள் வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லி வீடு நோக்கி விரைந்தான். குடையில் அவன் தொட்ட இடத்தின் சூட்டை மழைநீரால் குளிர்வித்தாள்.
*
மழை நாளொன்றில் – 7
மழை நாளொன்றில் பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அது முற்றிலும் எதிர்பார்த்தேயிராத விடுதிதான். முன்பொரு காலத்தில் அரண்மனையாக இருந்த அந்த மாளிகை இப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதியாகியிருந்தது.
ஒரு ராஜா ராணியை வரவேற்பது போல் பாவனை செய்யும் சிப்பந்திகளும் அவர் தம் சேவைகளும் நம்மையும் மன்னராக உணரவைக்கும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அப்படித்தான் நடந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவளைப் பாவிக்கும் முறையில் ஒரு வித்தியாசம் இருந்தது. அவளை உபசரிக்க, உபசரிக்க மிகுந்த மிடுக்குடன் நடமாட ஆரம்பித்தாள். அந்த நானூறு வருட பழமையான படுக்கையறையும் அதன் பொருட்களும் பழமையோடும் புதுமையை மறைத்துக் கொண்டுமிருந்தன.
உள்ளே நுழைந்ததும் தோரணையோடே அமர்ந்தாள். உடைகளை எடுத்துவைக்கப் பணித்தாள். சிப்பந்தியை அழைத்து தேநீர் கேட்கையில் அவன் கைகள் நடுங்கியபடி வைத்துவிட்டுப் போனான். கதவைச்சாற்றச் செல்கையில் அவன் என்னைப் பரிதாபத்தோடே பார்த்தபடி மூடினான்.
கடலோரம் என்பதால் இருட்டிக் கொண்டிருக்கும் வானமும் கடலும் எனது அச்சத்தை இருமடங்காகக் கூட்டியது.
எப்போதும் போல சல்லாபத்தோடு ஒன்றாகத்தானே குளிப்போம் என்கிற வழக்கத்தில் ஆடை களைந்து ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த அவள் நான் கதவைத் திறந்ததும். “வெளியே போ” என்று கத்தினாள்.
சில விநாடிகள் நின்று துடித்த இதயத்திற்கு இயல்பான ரிதத்தை அடைய அவகாசம் தேவைப்பட்டது.
இரவு கவிழ ஆரம்பிக்க, ராஜா.. ராணி உபச்சார இரவுணவு முடித்து படுக்கைக்குச் சென்றோம். மிகுந்த ஆளுமையோடு என்மேல் அமர்ந்தபடி மேலாடைகளற்று இயங்கிக் கொண்டிருந்தவள், தலையில் ஏதோ அணிந்திருப்பதைப் போலவும் இயங்குவதால் ஏற்படும் அதிர்வில் அது கீழே விழுகையில் பிடிப்பது போலும் பாவனைகளைத் திரும்பத் திரும்பச் செய்தாள்.
நான் அதிர்ச்சியோடே அவளிடம் கேட்க முற்படுகையில் அவள் தலைக்குப் பின்னே இருக்கும் கண்ணாடியைப் பார்க்கச் சொன்னாள். நான் இறுகக் கண்களை மூடிக்கொண்டேன். நூற்றாண்டுகளைக் கண்ட கட்டில் ஆடும் சப்தமும் ஓடுகளில் சடசடக்கும் பேய் மழைச் சப்தமும் முயங்கிக் கொண்டிருந்தது,
நான் கண்களைத் திறக்கவேயில்லை.
ஜீவ கரிகாலன் – டிரங்குபெட்டிக் கதைகள், கண்ணம்மா – இரு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். மின்னஞ்சல்: yaavarum1@gmail.com, yaavarumdocs@gmail.com