Saturday, November 16, 2024
Homesliderமாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் - வா.மணிகண்டன் (நேர்காணல்)

மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்)

நேர் கண்டவர் : ஜீவ கரிகாலன்

‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்திற்கான உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருவதைப் போலே தன் ஊரைச் சுற்றிலும் சூழலியல் பணிகள், பழங்குடியினர் நல்வாழ்வு, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிக்கூடங்களின் நிலையை மேம்படுத்துதல், நீர் மேலாண்மை, விளையாட்டுப் போட்டிகள் ஊக்குவிப்பு, சிவில் சர்வீஸ், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல் என்று பல பணிகளைச் செய்துள்ளார். அவரது கடைசி நூல் வெளி வந்தது 2017ல் (ரோபோஜாலம்) எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எழுத்து குறித்து அவரிடம் செய்த ஒரு நேர்காணல்.

நிசப்தம் மணிகண்டன் பலருக்குமான முன்னுதாரணம். மணிகண்டன் அவர்களுக்கு முன்னுதாரணமாக யார் இருந்தார்கள்?

முன்னுதாரணம் என்றால் எந்த அர்த்தத்தில் இருந்து இதைக் கேட்கிறீர்கள் எழுதுவதிலா அல்லது சமூகப்பணிகளில் கேட்கிறீர்களா.?

எழுதுவதில் என்று மட்டும் சொல்ல முடியாது. உங்களுடைய எழுத்திலும் உங்களுடைய சமூகப்பணிகளில் அதோடு ஐடி துறையில் இருந்து கொண்டு உங்கள் விருப்பங்கள் சார்ந்த துறைகளில் இருந்து கொண்டு எப்படி சமூகப்பணிகளிலும் பலருக்குமான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்?

ழுத்து, என் துறை சார்ந்த வேலைகள், அதோடு நிசப்தம் டிரஸ்ட் வொர்க் இப்படி எல்லாவற்றிலும் இயங்கும்போது தனியாக ஒருவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இந்த வாழ்க்கை ஒருவகையில் நீரோட்டம். ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டே இருக்கையில் அது நீரின் வேகத்திற்கு எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போகிற மாதிரி அதற்குள் ஒருதளத்தை கண்டுபிடித்து போய்க்கொண்டு இருக்கிறோம்.

அதேபோல்  நாம் படிக்கின்ற புத்தகம் அல்லது நமற்கு முன் இருக்கக்கூடிய தனிப்பட்ட ஆளுமைகள் என்று பார்த்துக்கொண்டால், நம் பள்ளியில் படிக்கும்போது நம்மைக் கவர்ந்த ஆசிரியர்களில் தொடங்கி, நம்மிடம் சின்னச் சின்ன விசயங்களை விதைத்துக்கொண்டே வரக்கூடியவர்களும், நண்பர்கள், புத்தகங்கள், எழுத்தாளர்கள் என்று எல்லாம் கலந்துதான்  நம்முடைய பாதையை தீர்மானம் செய்கிறது என்று நினைக்கிறேன். இதில் தனிப்பட்ட நபரை அல்லது தனிப்பட்டதொரு ஆளுமையை முன்னுதாரணமாகக் கொண்டிருப்பதாய் ஒரு கிரிடிட் கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதோடு இவர்கள்தான் முன்னுதாரணம் என்பது போல் நான் எவற்றையும் வைத்துக் கொள்வது கிடையாது. போகிற போக்கில் போய்க்கொண்டே இருப்போம் என்பதுதான். வேறு ஒன்றும் கிடையாது.  

நீங்கள் வசிக்கும் வட்டாரத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் நிசப்தம் மணிகண்டன் என்று உங்களை பலரும் குறிப்பிடும் போது அதற்கான பொறியை யாராவது தட்டிவிட்டிருப்பார்கள், அப்படி யாரையாவது நினைவு கூற விரும்புகிறீர்களா?

நிசப்தம் முதல் முதலில் pesalaam.blospot.com என்ற ஒரு வலைதளமாக 2004 ல் உருவானது. தொடர்ந்து வலைதளத்தில் எழுதிக்கொண்டே இருக்க, வாசகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அப்படி அதிகமாகும் ஒரு கட்டத்தில் ஒரு பையன் உதவிகேட்டு வரும்போது அந்த பையனைப் பற்றிய தகவல்களை நிசப்தம் தளத்தில் எழுதுகிறபோது அந்தப் பையனுக்கான உதவியை என்னுடைய வாசகர்கள் செய்தார்கள். அதேபோல் அடுத்ததொரு உதவி தேவைப்படும் போது அவற்றையும் நம் தளத்தில் பதிவு செய்தோம். அதற்கான உதவிகளையும் செய்தார்கள்.

இங்கு ஒருவரின் தேவைகளைப் பொறுத்து உதவிகளைச் செய்யும் போது அவர்கள் கேட்கும் உதவித்தொகையை மீறி அதிகத்தொகை ஒருவரிடம் சேர்க்கிறது. இதை உதவி தேவைப்படுகிற மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்துவோம் என்ற நோக்கோடுதான் நிசப்தத்தை டிரஸ்ட்டாக பதிவு செய்தோம். நிசப்தத்தை டிரஸ்டாக பதிவுசெய்த பின்னுங்கூட இந்த வேலைகளைத்தான் செய்யப் போகிறோம், இவற்றைத்தான் செய்வோம் என்ற தெளிவான ஒரு குறிக்கோள் கிடையாது. கல்விக்கான உதவிகளைச் செய்வதில் நிசப்தத்தை முதலில் ஆரம்பித்தோம். பிறகு மருத்துவத்திற்கு அதன் பிறகு இயற்கைக்கு அடுத்ததாக கிராம மேம்பாட்டிற்கு என்று இப்படி படிப்படியாக நிசப்தம் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் தான் சொல்கிறேன் இவைதான் என்னுடைய லட்சியம் என்றோ, இவையெல்லாம்தான் என்னுடைய இலக்கு அல்லது பாதை என்றும் நான் எந்த விதத்திலும் முடிவு செய்வது கிடையாது.

ஒருநாள் பயணத்தில் இருக்கும்போது என்னோடு ஒருவர் அதே பேருந்துப் பயணத்தில் என் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். நடுராத்திரி ஒரு மணி இருக்கும். அப்போதும் அவர் அழுதுகொண்டே வந்தார் என்ன காரணமென்று எனக்குத் தெரியாது. அவருக்கு ஐம்பது வயதிருக்கும். அவர் அழுது கொண்டே இருக்கும்பொழுது நம்மையும் மீறி கேட்கத் தோன்றும். நான் ஏன் அழறீங்க என்று கேட்கிறேன். கேட்கும்போது தான் தெரியும் அவர் பெங்களூரில் கட்டட வேலை பார்ப்பவர்.  அவருடைய மகள் தற்கொலை பண்ணி இறந்து போனதா ஊரில் இருந்து தகவல் வர, அதற்காக தன் ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவருக்கு மனைவி கிடையாது. இந்த விஷயங்களை எல்லாம் அவர் சொல்லும் போது அவருக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. நமக்கு சாதாரண மனிதர்களிடம் இருந்துதான் இந்த வேலைகளைச் செய்வதற்கான பொறி நமக்குக் கிடைக்கும். நாம் தினசரி வாழ்வில் ரத்தமும் சதையுமாக பார்க்கக்கூடிய மிகச்சாமானிய மனிதர்களிடம் இருந்துதான், இந்த உலகம் இப்படித்தான் இருக்கிறதென்று தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பணிகளையும் செய்து முடிக்கிற போது, உதாரணமாக கல்வி, மருத்துவம் விளையாட்டு அதைத் தவிர்த்து சூழல் சார்ந்தது என்று நிறைய பணிகள் செய்கிறீர்கள், ஒவ்வொரு பணியையும் செய்து முடிக்கிற போது துல்லியமாக உங்களது மனது எப்படி உணரும்?

ஒவ்வொரு பணிக்கும் ஒரே மாதிரியே உணர்கிறேன். உதாரணமாக கல்விக்கு

உதவ நீங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதாக வைத்துக்கொண்டால், அந்த உதவி உங்களுக்கு அப்பொழுது எந்தவிதமான திருப்தியையும் தராது. காரணம் யாரோ ஒருவர் கல்வித்தொகைக்கு உதவி செய்ய, அந்த உதவியை நாங்கள் உரியவரிடம் கொண்டு சேர்க்கிறோம். அந்த தருணத்தில் அந்த மாணவர்களுக்கு நீங்கள் ஒரு அம்மாவாகவோ, அப்பாவாகவோ இருந்து நாம் அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துகிறோம் என்ற மனநிலை தான் அந்தத் தருணத்தில் தோன்றும்.  அதே மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வரும்போது கிடைக்கிற அந்த உணர்வுதான் தனி.

இராஜேந்திரன் என்ற ஒரு மாணவர். பணம் உதவி வேண்டுமென்று கேட்டு நிசப்தத்தைத் தேடிவரும் போது, நாம் போய் அந்த மாணவனின் வீட்டிற்கு தகவல்களை கேட்கப் போகிறோம். ஏழ்மையான வீடு அது. மேற்கூரை கூட சரியாக இல்லாத, மழை நேரங்களில் தண்ணீர் வழிவதைத் தடுக்க பாலீதின் பேனர்களால் கட்டப்பட்ட அந்த வீட்டிலிருந்து படிக்கிற ஒரு மாணவன். அவன் பிஎஸ்சி படிக்கும்பொழுது என்னிடம் அறிமுகம் ஆகிறான். இந்த மாணவனை பிஎஸ்சி படிக்க வைக்கின்றோம், பி.எஸ்.சி யில் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராக வருகிறான். அப்படி அவன் பி எஸ் சி முடிக்கிறபோது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். ஆனா பி.எஸ்.சியை மட்டும் வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ண போகிறான், அடுத்து எம் எஸ் சி படிக்கப்போறான். எம் எஸ் சிக்கும் பீஸ் கட்டுகிறோம், அவனுக்கு நல்ல யுனிவர்சிட்டில சீட் கிடைக்கிறது. காந்தி கிராமத்தில் அந்த மாணவனைப் படிக்க வைக்கின்றோம். அதன் பிறகு அவன் கேட் எக்ஸாம் எழுதினான். கேட் தேர்வில் வந்து ஆல் இந்தியா ஸ்கோர் வாங்கி ஐஐ டிக்குள் போகும்போது தான் நமக்கு முழுமையான ஒரு திருப்தி வரும்.

இதே போன்று மருத்துவ உதவி கேட்டு ஒரு பெண்மணி தன் நாற்பது வயதுள்ள கணவருக்கு ஹார்ட் அட்டாக், அவருக்கு காலையில் அறுவைச்சிகிச்சை செய்யப் போவதாகவும் அதற்கு உதவி தேவைப்படுவதாகவும் நம்மை அணுகினார். நான் பெங்களூரில் இருந்து கிளம்பி, மதுரையில் அவர்கள் இருக்கிற மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்கான மருத்துவ உதவித்தொகையைக் கொடுத்துவிட்டு அவர்கள் சிகிச்சை முடியும் வரை அவரோடு உடனிருந்துவிட்டு வந்தேன். சிகிச்சை முடிந்ததும் அந்தப் பெண் வெளிப்படுத்திய அந்த அழுகைக்கு பின் அந்த குடும்பத்தை காப்பாற்றிய ஒரு திருப்தி இருந்தது.   

இதே போன்று கிராமப்புறங்களில் ஒரு வேலையைச் செய்யும் போது மரத்தை நடுகிறோம், மரத்தை நடுவதற்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகிறது, மரம் நடுகிறபோது அந்த மரக்கன்று தாங்குமா, அந்தச் சூழலில் இருந்து அந்த கன்று தப்பித்து வளர்ந்திடுமா என்பது போன்ற பயம் இருக்கும்.

இன்னொன்று ஒரு குளத்தை தூர்வாருகிற போது ஒரு லட்சம் செலவாகிறது. அந்த செலவிற்குபின் பலருடைய பங்களிப்பு இருக்கிறது. அப்படி அந்த குளங்களை தூர்வாரும் போது அந்த குளத்தை தூர்வாரி சேர்த்திடுவோமா, தூர்வாரி முடிந்ததும் மழை வருமா? மழை வந்தாலும் அந்தக் குளத்தில் தண்ணீர் நிரம்புமா என்ற கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் ஒரு துல்லியமான மனநிலையிலேயே  இதை எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்கிற  யோசனைதான் இருக்கும்.

இதில் உயிர்காக்கின்ற வேளைகளில் மட்டும் ஏதோ ஒன்றை செய்துவிட்டோமென்ற திருப்தி உருவாகும். மற்றபடி இவை தொடர்ச்சியான பயணம் தான் இவை எல்லாம்.

உதாரணமாக இப்படியான உதவிகள் எல்லாம் வெற்றியடையவும் கூடும், தோல்வி அடையவும் கூடும் அந்த இரண்டு வித்தியாசங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இங்கு வெற்றி தோல்வின்னு விசயங்களை எடுத்துக் கொண்டால் நாம் எதுவும் செய்ய முடியாது, இதுவொரு மாற்றம் அவ்வளவு தான். ஒரு இடத்தில் ஒரு இரண்டாயிரம் செடி நடுகிறோம். அப்படி நடுகிற போது அது வெற்றியா தோல்வியா என்று பார்க்க வேண்டாம். அந்த பொட்டல் காடாக இருந்த இடத்தில் ஒரு இரண்டாயிரம் மரக்கன்றுகளை வைத்து அந்தச் சூழலை ஓரளவு செழிப்பாக்க முயற்சிகள் செய்கிறோம். இந்த மாதிரியான முயற்சிகளைப் பார்த்துவிட்டு , நம்மோடு இருக்கிறவர்களில் ஒரு இரண்டு பேர் இதே போலொரு முயற்சிகளில் இறங்கினால் அதுதான் வெற்றி.

இதையே சமூகம் சார்ந்த வேளைகளில் நாம் வெற்றி தோல்வி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த மாதிரியான தருணத்தில் உங்களால் அந்த உதவியைச் செய்ய முடிகிறது என்பதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளணும். இதை வெற்றி தோல்வி என்று பிரிடிக்ட் பண்ண முடியாது.

உங்கள் குடும்பத்தார்கள் உங்கள் பணியில் எத்தனை தூரம் உதவுகிறார்கள் அல்லது ஊக்கம் அளிக்கிறார்கள்?

இதில உபகாரம் என்பதை விட  உபத்திரவம் இல்லாம இருக்கிறது பெரிய விஷயம் தான். ஆரம்பத்தில் அவர்களுக்கு முதலில் ஒரு வருத்தம் இருந்தது. வீட்டில் பெரும்பாலான நேரங்களில் அவர்களோடு இருப்பது இல்லை. அது குறித்து அவர்களுக்கு முதலில் வருத்தமிருந்தது. சம்பாதிக்கின்ற வயதில் சொத்து சேர்ப்பதைப் பற்றி யோசிக்காமல் இப்படி வேறேதோ வேலைகளை செய்கிறானே  என்பதைப் போன்ற சின்ன அப்ஜெக்க்ஷன் இருந்தது அவர்களுக்கு. எங்களுடைய குடும்பம் கூட்டுக்குடும்பம். நானும் தம்பியும் இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிச் சேர்ப்பது, தேவையான பொருட்களை வாங்குவது மாதிரியான வேலையை எல்லாம் அம்மா, தம்பி, அப்பா இவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வதால் எனக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பறம் என் மனைவிக்கு யாரோ ஒருவர் எங்கோ இந்த உதவிகளால் சந்தோஷமாக இருக்காங்கங்கிறது என்பது தெரிந்ததனால் எனக்கு எல்லாவிதமான சுதந்திரமும் வீட்டில் கிடைத்தது.  அதனால் யாரும் பெரிதாக என்னை எதுவும் கண்டு கொள்வது இல்லை.

ஒன்னே ஒன்னு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எங்கு போனாலும் ஒரு நான்கு நாட்களுக்கு முன்னதாக எனக்குத் தகவல் சொல்லிடு அப்படி என்பது தான், அதையும் நம்மால் சில நேரங்களில் செய்ய முடியாது. திடீர் என்று கிளம்பிப்போகிற சூழல் வரும். இதுமட்டும் தான் சின்ன துருத்தலாக இருக்குமே தவிர மத்தபடி வீட்டுல பெரிய உபகாரம்  பண்ணமுடியாது. ஏன்னா இதில் என்ன நடக்கிறது என்று அவர்கள் யாருக்குமே தெரியாது. ஆக அதை தடை போடாமல் இருப்பதே பெரிய உதவி என்று நினைக்கிறேன்.

உங்களுடைய அப்பா நிசப்தம் டிரஸ்ட் விசயங்களில் உங்களுடைய இந்த பணிகளை என்னவாக பார்த்தார்?

எங்க அப்பா ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தாரு. எங்க அப்பா எதையுமே வெளிப்படையாக காமிக்க மாட்டாங்க. அதனால் ஏதாவது ஒரு மறுப்பு இருந்தா அம்மாவிடம் சொல்லிச் சொல்றது தான். எனக்குத் தெரிஞ்சு எங்க அப்பா வந்து என்னைப்பற்றி பெரிதாக வருத்தபட்டுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல அவருக்கு ஒரு சந்தோசம் இருந்தது. பசங்களை படிக்க வைப்பது, மருத்துவ உதவி செய்வது இதையெல்லாம் எங்கப்பாவிற்கு ஒரு கட்டத்தில் புண்ணியம் தேடிக்கொள்கிற மாதிரியான வேலையை செய்கிறேன் என்று எங்க அப்பா நினைத்தார்.  

உங்களுக்கு இந்த புண்ணியம் என்கிற கருத்துகள் மீது நம்பிக்கை  இருக்கிறதா?

புண்ணியம் என்கிற கான்செப்ட்டில் நம்பிக்கை, நம்பிக்கையின்மை இதெல்லாம் எனக்கு தெரியல. ஏதாவது ஒருவிதத்தில் செய்கிற எல்லா காரியத்திற்கும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நான் நினைக்கிறது. பிறக்கின்றோம், இறப்போம் இதற்கு இடையில் உருப்படியாக ஏதாவது வேலைகளைச் செய்ய வேண்டும்.

பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்

புதுக்கோட்டையில் இருந்து ஒரு பையன், அம்மா அப்பா இல்லாமல் பாட்டி கூட வளர்கிற பையன். அவனைக் கூட்டிகொண்டு வந்து ஹாஸ்டல் ல ஒரு பீஸ் கொடுத்து, அவன் பிளஸ் டூ முடிச்சு காலேஜ் போகிறவரைக்கும் அவனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்பதன் அர்த்தம் அந்த பையனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? ஏதாவது ஒரு கனெக்ட்டிவிட்டி இருக்கிறதா, இல்லைல்ல. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பேன். புண்ணியம் பாவம் என்பதெல்லாம் நாம் சேர்த்து வைக்கிறோமா அப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா எல்லாக் காரியங்களுக்கும் ஏதாவது ஒருவிதத்தில் எங்கையோ கனெக்ட்டிவிட்டி இருக்கிறது இதுவொரு சார்ந்த சமூகம் தான். எதையும் இங்கு சுயமா நாம் செய்துவிட முடியாது. எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில கனெக்ட் ஆகியிருக்கிறது. படிக்கின்ற அந்த பையன் என்னை சார்ந்து இருக்கிறான். நான் பணம் கொடுப்பவர்களை சார்ந்து இருக்கிறேன். பணம் கொடுப்பவர்கள் என்னுடைய எழுத்தைச் சார்ந்து இருக்கிறார்கள் இது மாதிரி எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் இன்டர்கனெக்டட் என்பதுதான். இதில் புண்ணியம், பாவம் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. ஆனால் செய்கிற விசயங்களில் ஏதோ அர்த்தம் இருக்கின்றது என்று  நினைக்கின்றேன்.    

உங்களுடைய அறக்கட்டளை பணிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்கள்?

உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்கள் என்றால் பண உதவி செய்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நிசப்தத்தில் படிப்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எங்களுக்கு மெயில் அனுப்புபவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எங்காவது நம்மளை பார்த்திட்டு, நீங்க செய்கிற வேலையெல்லாம் நல்ல வேலைங்க என்று யாராவது சொல்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இப்படி எல்லாருடைய மாரல் சப்போர்ட்டில் தான் இது நடகிறது.  ஒரு நிகழ்ச்சின்னு அரேஜ் பண்ணுவதற்கு கூடவே இருந்து உதவி செய்யக்கூடியவர்கள் ஏகப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான ஆட்கள் என்று எடுத்தாலே ஒரு நூறு பேர் இருப்பார்கள்.

அரசு தாமஸ், கார்த்திகேயன் இப்படி எப்படி எடுத்தாலும் நூறு பேருக்கு குறைவில்லாம முக்கியமான வேலைகளை செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள். அதோட சம்மந்தமே இல்லாது எங்கிருந்தோ ஒரு ஐநூறு ரூபாய் அனுப்பக்கூடியவர்கள், நூறு ரூபாய் அனுப்பக்கூடியவர்கள் இப்படி  எடுத்துக்கொண்டால் ஆயிரக்கணக்கான நபர்கள் வருவார்கள்.

அரசு ரீதியான ஏதாவது ஒரு காரியம் வேண்டும் என்றால், ஏதாவது ஒரு தாசில்தாரிடம் பேச வேண்டும் என்றால், இல்லை ஒரு கலெக்டரிடம் பேச வேண்டும் என்றால் நமக்காக பேசிக்கொடுக்கக் கூடிய அதிகாரிகள் மட்டத்தில், இந்த மாதிரி நீங்கள் கணக்கெடுத்தால் நமக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கக்கூடிய நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட பேர் வந்திடும். எனக்குத் துல்லியமாக இவர்கள் தான் என்று என்னால் சொல்லவும் முடியாது. இதுவொரு பெரிய கூட்டு இயக்கம் தான் எல்லாவற்றுக்கும் ஒருமுகமாக நிசப்தம் மணிகண்டன் என்று இருக்கின்றதே ஒழிய, எனக்கு பின்னால் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

இவ்வளவு பணிகள் செய்கின்றீர்கள், ஊடகத்தால் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறீர்களா? அல்லது ஊடகத்திடம் இருந்து எப்படியான சப்போர்ட் நிசப்தத்திற்கு கிடைத்திருக்கிறது?

ஊடகத்தில் இருந்து தினகரன், வசந்தம், விகடன், தினமலர், வட அமெரிக்க தமிழர்கள் இதழான தென்றல், தினமணி ஆகிய இதழ்களில் நிசப்தம் குறித்து கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது. அதோடு விகடன் டாப் டென் நம்பிக்கை மனிதர்களில் என்னையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் இவையெல்லாம் ஒருமாதிரியான கவனம் தான். நானொரு சினிமா நடிகர் இல்லை, அரசியல்வாதியும் கிடையாது. எல்லா வாரத்திலும் எனக்கொரு கால் பக்கம் ஒதுக்கி நிசப்தம் சம்மந்தமான செய்திகளைப் போடவும் முடியாது. அவ்வப்போது சொல்வதே கவனப்படுத்தல் தான். இந்த மாதிரியான கவனப்படுத்தல்களை ஊடகங்கள் செய்திருக்கிறார்கள்.  

கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர் இந்த இடத்தையெல்லாம் விட்டு சற்று தூரம் வந்து விட்டதாக தெரிகிறதே?

ஒரு பத்து வருடத்திற்கு முன் கவிதைகள் எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது எழுதுவாயா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்றே சொல்லியிருப்பேன். அதன்பிறகு ஒரு நான்கு வருடங்கள் கழித்து சிறுகதை எழுதுவீர்களா என்று கேட்திருந்தால் இல்லை என்றே சொல்லியிருப்பேன். அதன் பிறகு நாவலும் எழுதி விட்டேன், சினிமாவைப் பற்றியும் எழுதியாச்சு. இப்போது இரண்டு வருடத்திக்கு முன் நிசப்தம் டிரஸ்ட் வைத்து இந்த நலப்பணிகள் போன்ற வேலைகளை செய்திருப்பாயா என்று கேட்டிருந்தால் இல்லை என்றே சொல்லியிருப்பேன். எதுவும் நாம் டிஸைட் பண்ணி இப்படித்தான் போக வேண்டுமென்று நாம் நினைப்பது, நம்மை நாம் வதைத்துகொள்வது அல்லது வருத்திகொள்வது மாதிரிதான். நம் வாழ்வில் அந்த தருணத்தில் எதைச் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, எது நமக்கு சந்தோஷத்தை தருகிறதோ, எது ஒரு திருப்தியைக் கொடுக்கிறதோ அந்த வேலையை செய்து போய்க்கொண்டே இருக்கலாம். அதன்படி தொடர்ந்து நிசப்தம் டிரஸ்ட் வொர்க் பிடித்திருக்கிறது, என்னுடைய அலுவலக வேலைகளும் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த வேலைகளை இப்படியே பார்ப்போம். மனது மாறிக்கொண்டே இருக்கும். மனிதன் சுவற்றில் அடித்த ஆணி கிடையாது, மாறிக்கொண்டே  இருப்போம். எது நமக்கு பிடித்ததாக இருக்கிறதோ அதை செய்துகொள்வோம்.

உதவுவதில் உங்களிடமிருந்து நிறைய கெடுபிடிகள் உள்ளது என்பதைப் போல் சொல்கிறார்களே?

ஆமாம், கெடுபிடி இருக்கிறது. மருத்துவ உதவி என்று பார்த்தால் உயிர் காக்கிற மருத்துவ உதவிகள் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். உயிர் காக்கும் மருத்துவம் என்றால் அந்த உதவி செய்யவில்லையென்றாலும், அந்த சிகிச்சை நடக்காது போனாலோ அவர்கள் உயிர் போய்விடும்  என்ற சூழலைத் தான் உயிர்காக்கும் மருத்துவத்திற்கான உதவிகள் என்று சொல்கிறோம்.

ஒருமுறை மருத்துவ உதவி கேட்டு என்னிடம் ஒருவர் வந்தார். தன் மகனுக்கு காலில் அடிபட்டதாகவும் அவருக்கு அறுவைசிகிச்சைக்கான பணம் தேவையென்றும் வந்தார். நானும் சம்மந்தப்பட்ட அந்த மருத்துவமனையின் அருகிலிருக்கிற நம் நிசப்தம் சார்ந்த நபரின் உதவியோடு அந்த தகவல்களை விசாரிக்கச் சொன்னேன். அவர் தகவல் விசாரித்து சொன்னதும் தான் தெரிந்தது அந்த விபத்து அவர் மது அருந்திவிட்டு வண்டியை ஓட்டியதால் நேர்ந்தது என்று. உடனே அவர்களுக்கான மருத்துவ உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டோம். நிசப்தம் இந்த மாதிரியான உதவிகளுக்கு கை கோர்க்காது.

அதோடு நிசப்தத்தில் மருத்துவ உதவி என்று வருகின்ற போது குழந்தைகள், குழந்தையுடைய பெற்றோர்கள்  இவர்களுக்கு முதலாவதாக உதவி செய்யவேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. காரணம் ஒரு குழந்தை இப்போது தான் இந்த உலகத்தைப் பார்க்கிறது. அது இன்னும் இந்த உலகத்தில் நிறைய பார்க்க வேண்டியது இருக்கிறது  அதற்காக அந்த குழந்தையின் மருத்துவத்திற்கான உதவிகளை நிசப்தம் செய்கிறது. குழந்தைகளின் பெற்றோருக்கும் உதவிகள் ஏன் செய்கிறோம் என்றால் அந்த பெற்றோரில் உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு நாம் மருத்துவ உதவிகள் செய்யாமல் அவர்களைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டால் அந்த குழந்தையின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகவும் இந்த மருத்துவ உதவிகளைச் செய்கிறோம்.    

ஏன் வயதானவர்களுக்கு உதவக் கூடாதா என்ற கேள்விகளும் என்னிடம் வந்திருக்கிறது. மருத்துவத்திற்கு என்று நாம் செய்கிற உதவி நாம் கல்விக்காக செய்கிற உதவிகளை விட மூனு மடங்கு அதிகமானது. ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் ஒரு மாணவனின் ஒரு செமஸ்டருக்கான கட்டணத்தைக் கட்டிவிட முடியும். மருத்துவத்திலோ மூன்று லட்சங்கள் செலவாகும் பட்சத்தில் அந்த தொகையை நான் முப்பது மாணவர்களின் ஒரு செமஸ்டருக்கான கட்டணமாக கட்டிவிட முடியும். ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சை வழங்கிகொண்டு இருக்கிறார்கள் என்றால் அதில் நூற்றுக்கணக்கான பேருக்கு உதவி தேவையிருக்கும் அந்த உதவியினால் என்ன விளைகிறது என்பதை நான் பார்க்கிறேன்.  அது தான் எனக்கு முக்கியம்.

இரண்டாவது கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கும் இதே விதிமுறைகள் தான். நீங்கள் நன்றாகப் படிக்கிற மாணவனாக இருந்து உங்களால் நல்ல கல்லூரியில் இடம் வாங்க முடிந்து உங்கள் பெற்றோர்களால் படிக்க வைக்க இயலவில்லை என்றால் அந்த இடத்தில் தகவல்களை கேட்டறிந்து நிசப்தம் கட்டாயமாக உதவிகள் செய்கிறது. இது நிசப்தத்தினுடைய அடிப்படை புரிதல். ஏன் தனியார் கல்லூரியில் படிக்க வைக்கின்றோம் என்றால் உங்களுக்கு முதலிலே தெரிந்திருக்கும் தனியார் கல்லூரி என்றால் யாருக்கு எல்லாம் மார்க் வாங்க முடியவில்லையோ இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டத்தில் இருக்கக்கூடிய பசங்கள்தான் தனியார் கல்லூரியில் சேர்கிறார்கள்.  நன்றாகப் படித்து பன்னிரெண்டாவது முடிக்கின்ற பையனுக்கு தெரிந்திருக்கும் நாம் ஒழுங்கா படித்திருக்கிறோம் என்று.  

மற்ற மாணவன் படிக்கவில்லை, படிப்பு வரவில்லையெனில் அப்போது அவன் தனியார் கல்லூரியில்  படிக்கிறான். அவன் குடும்பம் சிரமத்துல இருக்கிறதென்று அவனுக்கே தெரிந்திருக்கும். அல்லது அந்த மாணவரின் அம்மா அப்பாவிற்கு தெரிந்திருக்கும் நம் பையனை நம்மால் படிக்க வைக்க முடியும் இல்லை முடியாது என்று, முடியாது என்கிற பட்சத்தில ஏன் கொண்டுபோய் பிரைவட்ல போய் சேர்க்கிறாங்க, அதுவொரு கேள்வி எப்படியாவது சமாளித்து விடலாம், சமாளித்துவிடட்டும் என்ற எண்ணம்தான். இதே ஒரு அரசு கல்லூரியில் படிக்கக்கூடிய பையன், வறுமை. அம்மா, அப்பா இல்லை, இல்லை யாராவது ஒருத்தர் இல்லை அரசு கல்லூரியில் படிக்கிறான் அவனுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் அந்த வருடத்திற்கான ஒரு செமஸ்டர் பீஸ் கட்டிரலாம் என்றால் அவனுக்கு கட்டிவிடலாம். இங்கு யாரோ ஒருவர் கொடுக்கின்ற பணத்தை வாங்கி சும்மா இறைச்சு விட முடியாது அதானாலே சில கட்டுபாடுகளை செய்ய வேண்டியதாக இருக்கிறது.

இதில் நிறைய சீட்டிங்க்ஸ் உண்டு. நம்மளை நிறைய நபர்கள் ஏமாற்றுவார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்டிக்டடா இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தப்பிக்க முடியும். நீங்கள் எவ்வளவு லிபரலாக மாறுகிறேர்களோ உங்களை நெருக்கி தள்ளுற ஆட்களோட எண்ணிக்கை அதிகமாகிடும்.

ப்படியான கட்டுப்பாடுகளால் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்களும் கிடைச்சிருக்கும். அதைப் பற்றி சொல்லுங்க?

கண்டிப்பா வந்திருக்கு. ஆனால் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் ஒன்றுமே செய்ய முடியாது. நிறைய இடங்களில் இருந்து பண உதவி கேட்பார்கள். கேட்பவர்கள் எல்லோருக்கும் நாம் கொடுத்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை கல்விக்கென்று உதவி செய்கிற போது நிசப்தம் அந்த மாணவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த மாணவன் எவ்வாறு படிக்கிறான், வேறுவேறு என்ன என்ன விதமான ஆக்டிவிட்டி செய்கிறான் என்று கல்வி சார்ந்து நான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என்று நினைப்பேன். இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் கருதுவது நாலுமுறை அந்த மாணவனிடம் பேசினால் அதில் இரண்டு முறையாவது நீ நன்றாக படித்து வந்தால், உன்னை போன்று இரண்டு பேரை படிக்க வை என்று சொல்வதுண்டு. இதுவொரு தொடர் சங்கிலி மாதிரிதான் என்று நான் நினைக்கிறேன்.

இங்கு பொதுவாக ஒரு மனநிலை இருக்கிறது. நமக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. நமக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்றால் இரண்டு நபருக்கு நடுவில் மீடியேட்டரா இருக்கிறவன் யாரிடம் உதவி வாங்கித் தருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். யாருக்கு அந்த உதவி போகிறது என்றும் சொல்ல மாட்டார்கள். முடிந்தவரை அந்த இருவருக்கும் நடுவில் ஒரு தடுப்புச்சுவராக இருக்கக் கூடியவர்கள்தான் இங்கு அதிகம். அவர்கள் வந்து கேட்பார்கள் இதுவரை விசாரித்துப் பார்த்ததில் அதைவிட தகுதியானவர்கள் இருக்கிற போது அதை ஏன் நான் செய்யவேண்டும் என்று அவற்றை தவிர்க்க முயற்சி செய்வதுண்டு. அப்படி தவிர்க்கும் போது அந்த பக்கம் சென்று ஏதாவது சொல்லிட்டு செல்கிறவர்களும் உண்டு. அதைப் பத்தி பெரிதாக நான் கண்டு கொள்வது இல்லை. நிசப்தத்திற்கு வரக்கூடிய பணம் எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியும் எவ்வளவு கஷ்டப்படுறவங்க இதில் இருக்கிறார்கள் என்றும் தெரியும், அதில் ஐநூறு ரூபாய் அனுப்புகிறவர்களில் தொடங்கி, நூறு ரூபாய் அனுப்புகிறவர்கள் என்று  நூற்றுக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். அப்படியான அந்தப் பணத்தை வாங்கி யாருக்கோ தானம் பண்ணுவதற்கு இது என்னுடைய பணம் கிடையாது, என்னுடைய வருமானம் கிடையாது, அதைத்தவிர்த்து கெட்ட பெயர் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும். நூறு பேர் நல்லாதாகச் சொல்லும் போது, பத்து பேர் தப்பாக சொல்லத்தான் செய்வான். நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து வேலை செய்யும் போது என்ன வேலை செய்தாலும் நாலு நபர் திட்டத்தான் செய்வார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது.  

உங்களுக்கு கிடைத்ததில் உண்மையான ஊக்கம் எது? எது உங்களைத் தளர்ச்சி அடையச் செய்யும்?

 எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நான் கடவுளிடம் இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்டது கிடையாது. இதை நான் வெளியில் சொன்னதும் இல்லை. நான் கடவுளிடம் எனக்கு நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாத்தையும் உன் காலடியில் போட்டு விடுகிறேன். காற்றில் பறக்கிற இறகு மாதிரி என் மனதை வைத்துக்கொள்ள உதவி செய் என்பது என்னுடைய தினசரி பிரார்த்தனையாக வைத்துக் கொள்வதுண்டு. அதுமாதிரி தான்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல் 

என்ற திருக்குறளை எடுத்துக் கொண்டால் இந்த வேலையை இவன் செய்யட்டும் என்று நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதில்  தளர்ச்சி கிடையாது, சந்தோசம் கிடையாது, ஊக்கம் கிடையாது. நாம் செய்துகொண்டு போய்கொண்டே இருப்போம் அதன் விளைவைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது கிடையாது.  

இப்பணிகளை செய்யத்தூண்டும் அகத்தூண்டல்கள் எப்படியான சிந்தாந்தத்திலிருந்து வெளி வந்தது என்று சொல்ல முடியுமா அல்லது உங்களுடைய கலகத்தன்மையைக் கொண்டும் உங்கள் எளிமையைக் கொண்டும் காந்தியவாதி என்று புரிந்து கொள்ளலாமா?

இரண்டு விஷயம் உண்டு.  கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மாணவர்களிடம் பேச அழைக்கும் போது நான் இரண்டு புத்தங்களை உறுதியாக படிக்கச் சொல்லுவதுண்டு. அதையும் அவர்களுடைய பதினெட்டு வயதிற்குள் இந்த இரு புத்தங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஒன்று சத்திய சோதனை. ஒரு மூன்று மாதம் சீரியஸாக படிக்க வேண்டியது இருக்கும்.  இரண்டாவது புத்தகமாக திருக்குறள். குறைந்தது ஒரு பத்து குறள். வாழ்க்கையில் நமக்கான குறள் என்று ஒரு பத்து குறள். அந்த திருக்குறளை எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக பின்பற்ற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தீவிரமாக பின்பற்றிட வேண்டும். நமக்கென்று ஆத்மார்த்தமாக பிடித்த ஒரு பத்து திருக்குறள். இந்தக் குறளை எந்த காலத்திலும் கைவிட்டு விடக்கூடாது.

வள்ளுவன் காந்தி இந்த இரண்டு பேரும்தான்  இன்றைய காலக்கட்டத்திற்கு ரொம்பவும் முக்கியமான சித்தாந்தம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் எல்லாரும் ஏதாவது ஒரு விதத்தில் சார்புத்தன்மை உடையவர்களாக இருக்கக்கூடிய சித்தாந்தங்கள் தான் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பெரும்பாலான சித்தாந்தங்கள்.

ஏதாவது ஒரு விதத்தில் ஒரு சார்புத்தன்மை இருக்கும். காந்தியம் மட்டும்தான் யார் பாதிக்கப்படுகிறார்களோ அவன் பக்கத்தில் நிற்கக்கூடிய சித்தாந்தம். காந்தியம் மட்டும்தான் நீங்கள் இந்துவா, முஸ்லிமா என்று பார்ப்பது கிடையாது. இந்துவில் இருந்து முஸ்லீம் அடிச்சான்னா முஸ்லீம் பக்கம் நில்லு. முஸ்லீம் இந்துவ அடிச்சான்னா இந்து பக்கம் நில்லு. பணக்காரன் ஏழையை அடித்தால் ஏழை பக்கம் நில், ஏழை பணக்காரனை அடித்தால் பணக்காரன் பக்கம் நில். யார் அதிகமாக அந்த இடத்தில் பாதிக்கப்படுகிறானோ அந்த இடத்தில் நிற்கக்கூடிய சிந்தாந்தம் காந்தியம். அதனால்தான் வாழ்க்கை முழுவதும் காந்தி மேல் விமர்சனம் இருந்தது. இன்றைக்கும் காந்தி மேல விமர்சனம் வருவதற்கு காரணமும் அதேதான் என்று நினைக்கிறேன். ஆக இந்த இரண்டு சிந்தாந்தங்கள் வாழ்க்கையில் நமக்கு ரொம்ப முக்கியமான சித்தாந்தங்கள் என்று சொல்லுவேன். இந்த இரண்டு சித்தாந்தங்கள் தான் என்னை உருவாக்கி இருப்பதாக நான் நம்புகிறேன்.

உங்களுடைய குழந்தைகளுக்கு சமூகம் குறித்த புரிதல்களை எப்படி உருவாக்குகிறீர்கள் அல்லது எப்படி உருவாக்க விரும்புகிறீர்கள்?

குழந்தைகளுக்கு எதையும் திணிக்கக்கூடாது என்று நான் நினைப்பேன். என்னுடைய பெற்றோர்கள் என்னை எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்தியது கிடையாது. யாரெல்லாம் குழந்தைகள் மேல இதைத் திணிக்கிறார்களோ அந்த குழந்தைகள் திசைமாறிப் போவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு. நான் என் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் செய்யக்கூடிய செயல்களில் இருந்து அவர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். இப்படிச்செய் இப்படிச் செய்யாதே இதைப்படி என்பதை எந்த காலத்திலும் நான் சொல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் படிப்பதைப் பார்த்து அவன் படிக்க வேண்டும், நான் பேசுவதைப் பார்த்து அவன் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்கான சூழலை வீட்டில் உருவாக்கி வைக்க வேண்டும். மற்றபடி வலியுறுத்தி எதையும் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

கல்விக்கு நிகராக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

நான் எந்த காலத்திலும் விளையாட்டு விளையாண்டதே இல்லை. ஒரு கட்டத்தில் பார்த்தால் இந்தியா இல்லை, தமிழ்நாட்டில் விளையாடுவதற்கான உடல்வாகே இல்லையோ என்கிற மாதிரி எனக்கு தோன்ற ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய உடலமைப்புக்கும் தமிழ்நாட்டில இருக்கிற உடலமைப்புக்கும் குறிப்பா வேற்று மண்டலம் என்று பார்த்தால் நாம் விளையாட்டில் ஏதோவொரு விதத்தில் பலவீனமாக இருபாதைப் போல் எனக்குத் தோன்றியது. அந்த மனநிலையை மாற்ற வேண்டி இருக்கிறது என்று எனக்கொரு சின்ன தூண்டல் உண்டு. அதனால் விளையாட்டிற்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.

 எம் ஜி ஆர் காலனி என்று ஒரு காலனி இருக்கிறது. அந்த காலனி நரிக்குறவர்கள் உள்ள காலனி. நாடோடிகள் அவர்கள். அவர்கள் வந்து இப்போது ஒரு ஊரில்  இருக்கிறார்கள். அந்த பசங்களிடம் யாரோ ஒரு என் ஜி யோ போய் என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் படிப்புதான் முக்கியம். படிப்பு மட்டும்தான் உங்களை மாற்றும் என்று சொல்லி விட்டார்கள். அந்த பசங்க ஜிம்னாஸ்டிக்கை விட்டுவிட்டு போய்ட்டாங்க. அவங்களுடைய ரத்தமும் சதையுமே அந்த ஜிம்னாஸ்டிக் தான். அவங்க அப்பா செய்தார்கள், அவர்களுடைய தாத்தா செய்தார்கள். இந்த பசங்களுக்கும் அதற்கான உடலமைப்பு இருக்கும். இவர்கள் சொல்லிச் சொல்லி என்ன பண்ணி விட்டார்கள் என்றால், ஒரு பதினைஞ்சு வருடமாக ஜிம்னாஸ்டிக் என்பதையே விட்டு விட்டார்கள். அப்போ எனக்கு இந்த பசங்களுக்கு மறுபடியும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது. மற்றபடி  விளையாட்டிற்கு என்று பெரிதாக நிசப்தத்தில் இருந்து மெனக்கெடுவது இல்லை.

ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு உதவி கொடுக்கிறீங்க அதில் எதுவும் குறிப்பிட்ட நோக்கம் என்று எதுவும் இருக்கிறதா?

ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்ட பையன், அவன் ஜிம்னாஸ்டிக் காலேஜ் படிக்கிற போதே அவனுக்கு பிராப்பராக கல்கத்தா தேசிய சாய் விளையாட்டு அத்தாரட்டியில் கல்கத்தாவில் ஒரு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்தார்கள். அதுவும் கோச்சாக மாறுவதற்க்கான பயிற்சிகொடுத்தார்கள். அந்த பையன் அங்கு பயிற்சிக்காக போனான். இப்போது தமிழ்நாடு யுனிவர்சிட்டி அசோசியேஷனில் வந்து கோச்சாக இருக்கான். நரிக்குறவர் குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பையன் வந்து தமிழ்நாட்டோட யுனிவர்சிட்டி அசோசியேஷனில் கோச்சாக இருக்கிறது ஒரு பெரிய நகர்வுதானே. ஆனா அதை நாங்கள் கிளைம் பண்ணிக்கொள்ளவில்லை அந்த பையன் எல்லாவிதத்திலும் திறமையான பையன். அவனுக்கான சில உதவிகளைச் செய்தோம்.

உங்கள் அறப்பணிகளின் எல்லைகளை விஸ்தரிக்கும் திட்டம்?

இதில் விஸ்தரிக்கின்ற, இதைச் செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை போட்டுவிட்டோம் என்றால் அதே எண்ணம் மட்டும் தான் நம் மனது முழுதும் ஆக்கிரமித்து இருக்கும். அடுத்து இதைச் செய்ய வேண்டும், அடுத்து இதைச் செய்ய வேண்டும் என்று இருந்தால் வாழ்வதற்கான சந்தோஷத்தையே தொலைத்து விடுகிறோம் நாம். அதில் ஒரு பகையாளி வருவான். நம்மளைப் பற்றி வயிற்றெரிச்சல் பேசக்கூடியவன் வருவான், புறம் பேசுறவன் வருவான். ஒரு காலெடுத்து வைக்கின்றோம், அந்த இடத்தில் அதன் பக்கத்தில் இருக்கிறவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அவன் நம்மளைப் பற்றி சங்கடப்படுகிறான் என்றால் நாம் ஒரு காலை எடுத்து பின்னாடி வைத்துக் கொள்வது தப்பகிடையாது. இதை விஸ்தரிக்கணும் என்று திட்டம் போட்டு இதைப்பண்ணுறோம். அடுத்து இது என்று நாம் பண்ணும் போது தேவையில்லாத குடைச்சல்களை உள்வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அந்தக் குடைச்சல்கள் என்னவாகும் என்றால் நம்முடைய சந்தோஷத்தை வாழ்வதற்கான அர்த்தத்தை எல்லாவற்றையும் அது சிதைத்து விடும். இது தேவையில்லை என்று நினைக்கிறேன். போகிற போக்கில் போயிட்டே இருப்போம். நம்மளால் எது செய்ய முடியுமோ அதைச் செய்வோம். செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான வேற வழியை பார்த்துக் கொள்வோம்.

உங்களால் பயனடைந்தவர் உங்களோடு பணியில் துணை நிற்கிறார்களா?

நிறைய பசங்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் மறுக்கவே முடியாது. நீங்க ஒரு சினிமாவில் காட்டுகிற மாதிரி முன் பின் அப்படி என்று ஒரு பிரேமில் கொண்டு வரவே முடியாது. இதுவொரு ஆன்கோயிங் ப்ராசஸ். நீங்க ஓடுகிற ஓட்டத்திற்கே  நீங்கள் உருவாக்கிய அத்தனை பேரும் கூடவே ஓடிட்டு இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அதை எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால் அவர்கள் எல்லாரும் ஏதாவது ஒருவிதத்தில் நம்மோட தொடர்பில் இருப்பார்களே ஒழிய, நான் செய்கிற எல்லா வேலையிலும் இருபத்தி நான்கு மணிநேரமும் என்னுடனே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுவொரு இயக்கம் கிடையாது, கட்சி கிடையாது, ஒரு ரசிகர் மன்றமும் கிடையாது.  நாலுபேருக்கு கை தூக்கி விடுகிறோம் அவன் யாரையோ எங்கையோ கை தூக்கி விடுறான். எங்கயாவது பார்க்கும் போது சிரித்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.

உங்களைப் பொருத்தவரை மாற்றம் என்பது என்ன?

 மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான். சுயநலத்தில இருந்து கொஞ்சம் பொதுநலம். எல்லா மனிதர்களுக்கும் சுயநலம் இருக்கும். எனக்கும் சுயநலம் இருக்காது என்றெல்லாம் இல்லை. நான் நல்லாயிருக்கணும் என் குடும்பம் நல்லாயிருக்கணும் என் குழந்தை நல்லாயிருக்கணும் நிறைய சம்பாதிக்கணும், வருமானம் வரணும் இந்த மாதிரி எல்லா சுயநலங்களும் இருக்கும். இதைத்தாண்டி யாராவது ஒருத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுமா, என்னுடைய ஒரு கால்மணி நேரத்தை ஒதுக்க முடியுமா என்று நான் நினைத்தேன் என்றால் அது எனக்குள் உருவாக்குகிற மாற்றம். இந்த கால்மணி நேரம் என்பது ஒரு ஐந்து மணிநேரமாக மாறியது என்றால் அது மிகப்பெரிய மாற்றம். ஒவ்வொரு மனுசனும் ஒரு இரண்டு மணிநேரத்தை அடுத்தவங்களுக்காக கொடுக்கிறோம் என்றால் அதுதான் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். அந்த இரண்டு மணிநேரம் அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்கலாம், களப்பணிகள் செய்யலாம். இதுதான் மாற்றம். ஒவ்வொரு தனிமனிதனும் ஒருநாளில் நம்முடைய நேரம் போக செலவழிக்க முடிந்த நேரத்தை பிறருக்காக என்று யோசித்தால் அது மிகப்பெரிய மாற்றங்களை பரவலாக உருவாக்கும்.

நிசப்தம் கல்விப்பணிகளில் பயன்படும் மாணவர்களில் எப்படியான மென்டார்ஸ்கள் இருக்கிறார்கள்?

மென்டார்ஸ் இருக்கிறார்கள் எல்லாமே சக்சஸ் என்று சொல்ல முடியாது. ஒரு ஆர்வத்திற்கு நான் வந்து மென்டராக வருகிறேன் என்று சொல்வார்கள். இதை  குற்றச்சாட்டாகவும் சொல்ல முடியாது. ஒருத்தர் வருவார். அவர் வந்த பிறகு கல்யாணம் ஆகும், அப்பறம் டிரான்ஸ்பர் மாறும். அப்பறம் ப்ரொமோஷன் கிடைக்கும், வந்த அப்புறம் வேலை போகும், அவங்களோட குடும்ப சூழல், குடும்ப பிரச்சனை எல்லாம் வந்து பெரும்பாலானவர்களை ஒரு வட்டத்தைத் தாண்டி வரவைக்க வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதைச்செய்ய முடியாத அளவு சூழல் இருக்கும். அந்தமாதிரி தான்.  யாரையும் குறையும் சொல்ல முடியாது. சில நபர்கள் சீரியஸாக வேலை செய்கிறார்கள்.

பசங்களுக்கு சிவில் சர்வீஸ்க்கு பயிற்சி வேண்டும் என்றால் அதற்கு என்ன புத்தகம் வேண்டும், என்ன புத்தகம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று இயங்கக்கூடிய மென்டார்ஸ் இருக்கிறார்கள். இதை நூறு சதவீதம் சக்சஸாக  பண்ண முடியாது. ஏன் என்றால் இருக்கக்கூடிய எல்லா பசங்களும் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பசங்கள். வேலையில் இருக்கிறவர்கள் எல்லோருமே பெங்களூர், சென்னை, கொச்சி என்று வெளியூரில் இருக்கிறவர்கள். அவர்களுக்கான தொடர்பு வந்து அவ்வளவாக ஒரு பர்சனல் அட்டாச்மெண்ட் வருவது இல்லை. அது போகப்போக சரியாகலாம் என்று நினைக்கிறேன்

நேரடி அரசியல் பிரவேசம் எப்போது?

நேரடி அரசியல் பிரவேசம் என்று நான் எதையுமே திட்டமிடுவதே கிடையாது. இதைச் செய்ய வேண்டும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. அடுத்து அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று ஏன் இப்போது யோசித்து மண்டகாய வேண்டும். நீங்கள் அரசியலுக்கு என்று வந்துட்டா உங்களை வெட்டுவதற்கு என்று நாலுபேர் ரெடியாக இருப்பார்கள். வெட்டுவது என்றால் கழுத்தை வெட்டுவதைச்  சொல்லவில்லை. உங்களை எங்கு காலி பண்ண வேண்டும் என்று யோசிக்க நாலுபேர் இருப்பார்கள். ஆனால் அரசியல் சம்மந்தப்பட்ட வேலைகள் நான் நிறைய செய்துட்டுதான் இருக்கிறேன்.

அதை மணிகண்டனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறது இல்லை என்றாலும், எஸ் வி சரவணனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். நேரடி அரசியல் என்று தெரியவில்லை. மற்றபடி காலம் வந்தது என்றால் அப்படி ஒரு சூழல் உருவானால் அதைப் பார்ப்போம்  

நன்றி..


***

  • நிசப்தம் அறக்கட்டளை மூலமாக உதவிகள் பெறுவதற்கு இவரது வலைதளத்திற்கு செல்லவும் www.nisaptham.com

RELATED ARTICLES

2 COMMENTS

  1. மணிகண்டனை நிசப்தத்தில் மட்டுமல்லாது நேரிலும் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டு முறை, கோபியில் அவர் வீட்டில் ஒரு முறை. அதிகம் பேச மாட்டார். செயல் ஒன்றே சிறந்த சொல் என்ற இளைஞர். ஊருக்கு ஒரு மணிகண்டன் உருவாக வேண்டும்.

    சீனி. மோகன்

  2. அருமையான நேர்காணல் … எதார்த்தமான பதில்கள்

    அடுத்து வானத்தை வில்லாக வளைத்துவிட்டுதான் மறுவேலை என்று கேட்டே பழக்கப்பட்ட நேர்காணல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது இந்த பேட்டி

    வெல்டன் சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular