ரூபன் சிவராஜா
சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை ஊடான சுற்றுப்பாதையைத் தவிர்த்து நேரடிப் போக்குவரத்துப் பாதைக்கு மியான்மார் அவசியமான தளம். Rakhine கரையோரத்திலிருந்து (Port of Kyaukphyu ) சீனாவின் தென்மேற்கு மாநிலமான Yunnan-இற்கு ஆழ்கடல் வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்துடன் (Belt and Road) தொடர்புபட்டது. 2015-இற்குப் பின்னர் மியான்மாரில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதான பார்வை நிலவுகிறது.
2015 தேர்தலில் Aung San Suu Syi பெரும் வெற்றியடைந்தார். தொடர்ந்தும் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு மக்கள் மத்தியில் உள்ளது. இம்முறைத் தேர்தலிலும் பெரும் வெற்றியடைந்தார். தேர்தல் நடாத்தப்பட்ட முறை அல்ல பிரச்சனை. தேர்தல் முடிவுகள்தான் இராணுவபீடத்திற்குப் பிரச்சனை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது அரசியல் வகிபாகமும் அந்தஸ்தும் பலவீனமடைந்த நிலையில் மேலும் ஐந்து ஆண்டுகள் தமது அதிகார இருப்பினைக் கேள்விக்கு உட்படுத்திவிடுமென்ற அச்சமே புதிய அரசாங்கம் கூடவிருந்த சிலமணி நேரங்களுக்கு முன்னர் ஆட்சிப் பறிப்பு முடிவினை இராணுவபீடம் எடுக்கவைத்துள்ளது. 80 வீதமான நாடாளுமன்ற இருக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு வென்றது. இது இராணுவக் கட்சிக்கு பெருத்த வீழ்ச்சியும் அவமானமும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (2011) ஜனநாயகத் திறவுக்கு இராணுவ ஆட்சிபீடம் இணங்கியமைக்கான பின்னணிகளில் முக்கியமானது நாட்டின் மீதான சீனச்செல்வாக்கினைக் குறைத்து, மேற்கினை நாட்டுக்குள் அனுமதிப்பதாகும். அதன் மூலம் ஒருவகைச் சமநிலையை உருவாக்குகின்ற நோக்கத்திலானது என்கிறார் பேராசிரியர் ஸ்தொக்க. மேற்கினை உள்வர அனுமதித்தல் என்பது சீனாவைக் கையாள்வதில் ஒரு எதிர்வலுவினை உருவாக்குவதும், சீனாவைக் கையாள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டாகக் கையாள்வதும் தொடர்பான மியான்மார் இராணுவ ஆட்சியாளர்களின் நோக்கத்தைக் குறிக்கின்றது. ஆனால் மேற்கின் உள்நுழைவு என்பது சீனாவை முற்றிலுமாக அரங்கிலிருந்து அகற்றவில்லை. ஆனால் சீனாவின் அதிகாரம் ஒருபடி பின்தள்ளப்பட்டது என்பதில் உண்மையுள்ளது.
2015 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. இராணுவ பீடம் தமக்குச் சாதகமாக அரசியலமைப்பினை மாற்றியிருந்தபோதும் Aung San Suu Kyi-இன் பாரிய வெற்றியும் அவர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகியமையும் இராணுவபீடத்தின் அதிகார நலன்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தின. சீனாவிற்கு சார்பாக வலுச்சமநிலை மாறுவதற்கு ஏதுவான சூழல் அமைந்தது. Suu Kyi மேற்கின் செல்லப் பிள்ளையாக இருந்தார் என்பதும் சமாதானத்திற்கான நோபல் விருது உட்பட்ட பல்வேறு மனித உரிமை விருதுகளை மேற்குலகம் அவருக்கு வழங்கியிருந்தமை உலகறிந்தது. ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கு எதிர்பார்த்த தாராளவாத ஜனநாயகவாதியாக செயற்படவில்லை. அவரின் நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும் மேற்கிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தன.
அவர் முதன்முறையாகப் பர்மிய – பௌத்த ஜனநாயகப் புரிதலுடன் உள்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, இராணுவ பீடத்துடனான மேற்கின் உறவு சார்ந்தும், மேற்கின் அரசியல் ஈடுபாடு வணிக, பொருளாதார ஈடுபாடாக மாறியதையிட்டு அதிருப்தியடைந்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கிறிஸ்தியான் ஸ்தொக்க.
ஆனால் மேற்கின் அணுகுமுறை என்பது, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், அபிவிருத்தி, என்ற பேர்களில் தமது வணிக பொருளாதார நலன்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதே இறுதி இலக்கு. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகையை சொற்பிரயோகங்களுடனேயே அமெரிக்காவும் மேற்கும் தலையீடு செய்து களமிறங்குகின்றன. இதற்குப் பல்வேறு உதாரணங்களை வரலாற்றிலிருந்து கூறமுடியும். முரண்பாடுகள், உள்நாட்டுப் போர்கள் நடைபெறும் நாடுகளில் மேற்கினால் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னால் அவர்களின் பொருளாதார நலன்கள் இருந்திருக்கின்றன என்பதுவும் அறியப்பட்டதே.
மியான்மாரைப் பொறுத்தவரையிலும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புதல் என்ற அணுகுமுறை, மேற்கத்தைய வணிகத் தரப்புகள் போட்டிபோட்டுக் கொண்டு இராணுவ பீடத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குரிய கதவுகளைத் திறந்தது. எனவே இது பரஸ்பரம் மியான்மார், சீனா உட்பட்ட பிராந்தியத் தரப்புகள் மற்றும் மேற்கு ஆகியவை தத்தமது நலன்களுக்கான அறுவடையைக் கருத்திற்கொண்டு முன்னெடுத்த அணுகுமுறைகளாகும்.
2012-இலிருந்து மதரீதியான வன்முறைகள், குறிப்பாக நாட்டின் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்தன. பவுத்த தேசியவாதம் வன்முறையோடு மீள் எழுச்சியடைந்தது. ராக்கின் மாநிலத்தில் (Rakhine province) ரொகிங்ய மக்களுக்கு (Rohingya) மக்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் அதிகரித்தன. Rakhine முரண்பாடு என்பது அடிப்படையில் மத முரண்பாடு அல்ல. அது ரொகிங்ய மக்கள் மீதான அப்பட்டமான இன ஒடுக்குமுறை. 1982-இல் ரொகிங்ய மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மியான்மாரின் பௌத்த பெருந்தேசியவாதம் அம்மக்கள் மீதான பாரிய வன்முறைகளை 2015 காலப்பகுதியில் கட்டவிழ்த்துவிட்டது. 2017-இல் இராணுவ வன்முறைகளில் 6700 வரையான ரொகிங்ய மக்கள் கொல்லப்பட்டதோடு, 700 000 வரையான ரொகிங்யர்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, வங்கதேச எல்லைகளை நோக்கி விரட்டப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளை இன அழிப்பு என ஐ.நா வரையறை செய்தது. அத்தோடு இதனுடன் தொடர்புபட்ட சில இராணுவ ஜெனரல்களின் பெயரைக் குறிப்பிட்டு, இன அழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடாத்துமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறும் கோரியிருந்தது.
Rohingya முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான மியான்மார் அரச இராணுவ இயந்திரத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தார்மீக எதிர்ப்பினையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தவில்லை என்ற அடிப்படையில் 2012-ஆம் ஆண்டு Suu Kyi-க்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருதினை அமெரிக்க Holocaust Museum 2018-இல் மீளப்பெற்றது 1997-ஆம் ஆண்டு Oxford பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கான விருதும் (Freedom Award) கடந்த 2017 நவம்பர் மாதம் மீளப்பெறப்பட்டது.
விருது மீளப்பெறுகை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது:
‘இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான நீண்ட எதிர்ப்புப் போராட்டம், மியான்மார் மக்களின் சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்குமாக ஓங்கி ஒலித்த உங்கள் குரல் உலகெங்கிலுமுள்ள பல மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் நீங்கள் உருவாக்கிய உத்வேகத்தின் அடிப்படையில் உங்களுக்கு 2012-இல் விருது வழங்கியதில் நாம் பெருமைகொண்டோம். இப்போது மிகுந்த வருத்தத்துடன் அந்த விருதினை மீளப்பெறுகிறோம். இந்த முடிவிற்கு நாம் இலகுவில் வரவில்லை.’
அருங்காட்சியகம் ரொகிங்ய மக்களுக்கெதிரான மியான்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளையும் அதற்கான Aung San Suu Kyis-இன் பதில்களையும் நுணுக்கமாகக் கண்காணித்து வந்ததோடு, மியான்மார் மற்றும் வங்கதேசத்திற்குப் பல பயணங்களை மேற்கொண்டு முதற்கட்ட ஆதாரங்களையும் சேகரித்துள்ளது. இன அழிப்புத் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்ததாக 2018-இல் The Guardian செய்தி வெளியிட்டிருந்தது.
மியான்மார் நாட்டின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து, அதற்காக 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த Aung San Suu Kyi நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுமளவிற்கு சர்வதேச சமூகத்தால் கொண்டாடப்பட்டவர். ஆனால் 2017-இல் ரொகின்ய மக்கள் மீதான வன்முறை, அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கிற்கும் அவருக்குமிடையிலான உறவில் விரிசலும் பரஸ்பரம் கசப்பும் ஏற்படத்தொடங்கியது. ரொகிங்கிய மக்கள் மீதான இராணுவத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்து இராணுவத்தினைப் பாதுகாத்தார். மேற்குக்கும் Aung San Suu Kyi இற்குமிடையிலான விரிசல் சீனா அவரை நெருங்க வழிவகுத்தது.
சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை ஊடான சுற்றுப்பாதையைத் தவிர்த்து நேரடிப் போக்குவரத்துப் பாதைக்கு மியான்மார் அவசியமான தளம். Rakhine கரையோரத்திலிருந்து (Port of Kyaukphyu) சீனாவின் தென்மேற்கு மாநிலமான Yunnanஇற்கு ஆழ்கடல் வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்துடன் (Belt and Road) தொடர்புபட்டது. 2015-இற்குப் பின்னர் மியான்மாரில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதான பார்வை நிலவுகிறது.
மியான்மாரில் சீனாவின் வகிபாகமும் தலையீடுகளும் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டதாகவும் பார்க்கப்படுகின்றது. ஒரு தளத்தில் அல்ல. பல தளங்களில், அதாவது அரசியல், இராணுவ, பொருளாதாரம் என அனைத்திலும் சீனா களமிறங்கி நிற்கின்றது. அங்குள்ள சிறுபான்மை இன ஆயுதப் போராட்டக் குழுக்களுடனான சமாதான முயற்சிகளில் சீனா அனுசரணைப் பாத்திரம் வகிக்கின்றது. சமாதான முயற்சியில் சீனாவின் நிலைப்பாடு ஒடுக்கப்படுவோரின் உரிமைகள், கோரிக்கைகளின் நிலைப்பட்ட அணுகுமுறை அல்ல. மாறாக பொருளாதார நிலைப்பட்ட சமாதான அணுகுமுறை அவர்களுடையது. பொருளாதார மேம்பாடும், மக்களை வாழ்க்கைத்தர நெருக்கடிகளிலிருந்து மீட்கும் திட்டங்கள் சமாதானத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும் என்பது சீனாவின் முரண்பாட்டுக் கையாள்கை, சமாதான அணுகுமுறை. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் சீனா தனது, வகிபாகத்தினையும் செல்வாக்கினையும் பலப்படுத்தியமை இராணுவபீடத்திற்கு உவப்பானதாக அமையவில்லை.
மியான்மார் விடயத்தில், பல பந்தயக் குதிரைகளில் பணம் கட்டுகின்ற அணுகுமுறையைச் சீனா கடைப்பிடித்து வந்துள்ளது. ஒன்று சறுக்கினால் மற்றொன்று என்பதே அந்த அணுகுமுறை. பொதுவாகவே பனிப்போருக்குப் பின்னான காலத்தில் உலகநாடுகளின் வெளியுறவுத் தீர்மானங்களும் நகர்வுகளும் கோட்பாட்டு இலட்சியங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. நலன்களின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. இதற்கு உலகநாடுகள் எதுவுமே விதிவிக்கல்ல. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக கியூபா வாக்களித்தமை என்பது இதற்குரிய முக்கியமான எடுத்துக்காட்டு.
மேற்கு தனது பொருளாதார நலன்களுக்காக பெயரளவில் பெரிதாகவும் செயலளவில் சிறிதாகவேனும் ஜனநாயகம், நல்லாட்சி, சமாதானம் போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றது. சீனா கோட்பாட்டு இலட்சியங்களின் அடிப்படையில் வெளியுறவு முடிவுகளை எடுப்பதில்லை. பொருளாதார நலன் சார்ந்தே அதன் முடிவுகள் அமைவன. பொருளாதார ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி நிதியுதவி என்பனவே சீனாவின் வெளியுறவு மூலோபாயங்கள். அந்த வகையில் மியான்மாரைத் தளமாகப் பேணுதல் என்ற இலக்கிற்குரிய முடிவுகளையே சீனா எடுக்கும். மியான்மாரின் உள்நாட்டுச் சக்திகளுடன் தனது நலனுக்குரிய வகையில் உறவைப் பேணும் முடிவினையே அது எடுக்கும். அது இராணுவ பீடமாயிருந்தால் என்ன, போன்ற ஜனநாயக கட்சித் தலைவர்களாக இருந்தால் என்ன. அந்தந்தக் காலகட்டத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் உறவைச் சீனா பேணும். இராணுவ ஆட்சி எத்தனை காலம் நீடிக்கும் என்பது யாரும் அறியாதது. தற்போது அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் இராணுவத்தினர். எனவே அவர்களைப் பாதுகாக்க எண்ணுகிறது சீனா.
தென்-கிழக்கு ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க அணிதிரட்டலுக்கு மியான்மாரும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானது. இந்தியாவும் மியான்மாரில் தனது வகிபாகத்தை உருவாக்குவதில் முனைப்புக் கொண்டுள்ளது. ஜப்பானும் ஏற்கனவே சமாதான அனுசரணை, அபிவிருத்தி நிதியுதவி ஆகியவற்றினூடு ஒருவகையான பொருளாதார அதிகாரத்தை மியான்மாரில் கொண்டுள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய இரண்டும் பிராந்தியத்தில் சீனாவின் போட்டி சக்திகள். அமெரிக்காவின் ஆதரவு சக்திகள். அளவுகளில் வேறுபாடிருப்பினும் இலங்கை போன்று மியான்மாரும் சிக்கலான உள்நாட்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. மட்டுமல்லாது புவிசார் அரசியல் முரண்பாட்டுச் சக்திகளால் தத்தமது நலன்களுக்காகக் கையாளப்படும் தேசமும்கூட.
பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் இரண்டு கூட்டு(கள்) பர்மாவை மையம் கொண்டுள்ளன. ஒன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நட்பு சக்திகளின் கூட்டு ஒரு புறம். இது சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள் இணைந்த கூட்டு. மற்றையது சீனாவின் நலன்கள் சார்ந்த தலையீடு. இதில் சீனா தனிப்பெரும் தரப்பு எனினும் பிராந்தியத்தின் கம்போடியா மற்றும் பிலிப்பைன் ஆகியன சீனாவின் ஆதரவு சக்தியாக உள்ளன.
***
ரூபன் சிவராஜா
தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.