(நாவல் பகுதி)
வாசு முருகவேல்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறும் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஆற்றப்படும் உரை சாலையெங்கும் எதிரொலித்தது. நெசப்பாக்கம் வரை கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் உறுமிக் கொண்டிருந்தன. இரவு ஒன்பது மணியாகியும் அந்த உரை தொண்டர்களை நோக்கி பொழிந்தது. தொண்டர்களின் கரவொலிக்கு மத்தியில் அந்த உரை பேருரையாக மாற்றம் கண்டதை வீரமணி உணர்ந்துகொண்டான். கூட்டம் முடிந்தால்தான் அவனால் நித்திரை கொள்ள முடியும்.
கரீம் பிரியாணி கடையின் முகப்பில் நாளாந்தம் படுத்துறங்கும் வீரமணிக்கு இந்தக் கட்சியின் பொதுக்கூட்டத்தின் மீது கோபம் பொங்கியது. தன்னுடைய படுக்கையறையில் வந்து கூட்டம் நடத்தும் அவர்களைப் பார்த்து ‘போங்கடா போதும், உங்க கட்சித்தலைவன் அவனோட பத்து தலைமுறைக்கும் காசைச் சுருட்டிட்டான்’ என்று அவர்களைப் பார்த்துத் திட்டினான். வீரமணிக்கு கொஞ்சம் சாராய போதையிருந்தாலும் உண்மை பேசுவான். உளறுவதில்லை. நாளைக்கு காலையில் அவன் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். கட்சிக் கூட்டம் முடியும்வரை காத்திருக்காமல் அப்படியே வீதியின் ஓரமாக தூங்கலாமென முடிவெடுத்தான் வீரமணி.
கழகத்தொண்டர்களாகிய நாம் தலைமை சொல்லும் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும். எங்கள் தலைவனே சூரியன். எங்கள் தலைவனே விடிவெள்ளி என்ற ஓங்குதாங்கான புகழ் இடியில் அந்தப்பேருரை முடிந்தது.
சூரியன் உதிப்பதற்கு முந்தியே பாதாள சாக்கடைக்குள் வீரமணி இறங்கினான். எழுந்ததும் ஊற்றிய காப்போத்தில் சாராயம் அவனுக்குள் ததும்பியது. அவனின் முழங்கால் வரைக்கும் நகரத்தின் சாக்கடை நரகம் போல வெடித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அத்தனை கழிவுகளின் காற்றையும் அவன் சுவாசித்துக் கொண்டிருந்தான். எம்ஜிஆர் நகர் மெயின் வீதியில் நிற்கும் ஒவ்வொரு மரத்தையும் ஒரு வியாபாரம் பிடித்துக் கொள்ளும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் சாவி பூட்டு அடிப்பவன் கடை போட்டிருந்தால் இன்னொரு வேப்ப மரத்தை டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுகிறவர் பிடித்திருப்பார். அவர்களுக்கு அந்தந்த மரங்களின் நிழல்கள் எழுதி வைக்கப்பட்டது. இடம் மாறி கடை போடவே மாட்டார்கள். எளியவர்களின் ஒப்பந்தமது.
அங்குதான் நாட்டு முட்டை விற்கும் கிழவியின் வேப்பமரமிருந்தது. ஒரு சாக்கில் முட்டையை வைத்துக்கொண்டு கிழவி அமர்ந்திருப்பாள். அவ்வப்போது தன் பழைய சேலையிலேயே முட்டைகளை துடைத்துத் துடைத்து வைத்து வீதியின் இரு முனையையும் ஏக்கத்துடன் பார்த்திருக்கும். ஆறு மணியோடு சாக்கை சுருட்டிக் கொண்டு முட்டைகளை சீலை தலைப்பிலேயே கட்டிக்கொண்டு காணாமல் போய்விடும்.
எம்.ஜி.ஆர் நகருக்கும் கே.கே நகருக்குமான எல்லையை பிரிப்பது அந்த ஒரு முக்கிய வீதிதான். தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களில் அமர்ந்துக்கொண்டு அரசியல் செய்வர்களின் பெயரிலமைந்த எம்.ஜி.ஆர் நகரும், கே.கே.நகர் என்னும் கலைஞர் கருணாநிதி நகரும் அசோக் பில்லரில் துவங்கி நெசப்பாக்கம் சந்தி வரை நீண்டு செல்கிற அண்ணா பெயரிலான அந்தப் பிரதான வீதியிலே பிணைக்கப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர் நகரில் அடிக்கடி நடக்கும் அரசியல் கூட்டம் முடியும் வரையில் அவனாலும் நித்திரை கொள்ள முடியாது. கைத்தட்டலுக்காக நிறுத்தி நிதானிக்கும் இடங்களைத் தவிர ஒலிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவனது அறைக்கதவை குறிவைத்தே பேசுவது போல இருக்கும். அன்றைய கூட்டத்தில் பேசுகிறவர் “இலங்கை தமிழர்கள்” என்று வேறு உச்சரித்துக் கொண்டிருந்தார். ஐயா நாங்கள் இலங்கை தமிழர் இல்லை ஈழத்தமிழர் என்று சொல்ல வேண்டும் போல அவனுக்குத் தோன்றும் அன்றைக்கும் அப்படித்தான். எப்போது கூட்டம் முடிந்து சத்தம் ஓயும் என்பதிலே கவனமாய் இருந்தான். உடல் களைத்து நிற்கும் அவனுக்குக் கொஞ்சம் கட்டாய ஓய்வும் தேவைப்பட்டிருந்தது.
ஏனெனில் நாளை காலையில் கனடாவில் இருந்து ஒரு குடும்பம் வர இருக்கிறது. அவனது மாமாவுக்கும் அது தெரியும். ஆனாலும் அவர் போதையில் மறந்திருப்பார். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் இந்நேரம் அவர் நிம்மதியாக நித்திரை கொண்டிருக்கலாம். அல்லது தன் வீட்டுக்காவது புறப்பட்டுப் போயிருப்பார்.
வீட்டின் முதலாவது மாடியில் லண்டனைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கியிருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்கே அவர்களது விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. இரண்டாவது மாடிக்குதான் நாளை காலை கனடா குடும்பம் வந்து சேரவிருக்கிறது. கட்டிடத்தின் உச்சியில் ஒரு தனிமை விரும்பியைப்போல துவாரகன் நின்று கொண்டிருந்தான். அதில் அவனுக்கொரு விருப்பமுமில்லை. விதிக்கப்பட்ட தனிமையை சுமந்து கொண்டிருந்தான். அவன் மேல் அக்கறை கொண்டவர்களின் கடின முயற்சியின் பின் அவன் இங்கே நிற்கிறான்.
துவாரகனின் மாமா வடகைக்கு எடுத்துள்ள அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் வீடுகள் முழுவதும் ஓர் விருந்தினர் விடுதியாக இயங்குகிறது. ஒரு வீட்டை ஒருமாதம் முழுமையாக வாடகைக்கு எடுத்தால் இருபத்தைந்தாயிரம் முதல் இருபத்தி இரண்டாயிரம் வரும். அது வருகிறவர்களின் வசதியை பொருத்தும், அவர்களை அனுப்புகிறவர்களின் நட்பைப் பொருத்தும் மாமாவால் நிர்ணயிக்கப்படும்.
நாள் அல்லது வாரக்கணக்கு என்றால் எப்படியும் இரண்டாயிரத்து ஐநூறுக்குக் குறையாது. மூன்று வீடுகளும் சுழற்சி முறையில் வெளிநாட்டு வாழ் ஈழத்தமிழர்களால் நிறைந்து காணப்படும். இப்போது கொஞ்சம் வருகை குறைவாக உள்ளதால் துவாரகனுக்கு இது ஓய்வான காலம்.
இந்த வீட்டிற்கு வந்த நாள் துவாரகனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. “பிரான்ஸ் போனால் மட்டும் அங்க என்ன இருந்து பார்க்கிற வேலையா கிடைக்கப் போகுது. கோப்பை தான் முதலில் பல பேர் களுவுவாங்கள்” என்று அவனிடம் சொன்னார். கீழே குந்தி இருந்து பெட்டியை திறந்து சரத்தை வெளியே இருந்து கொண்டிருந்த துவாரகன் அதனைப் பொருட்படுத்தவில்லை. “என்னடா மாமா கல்யாணம் செய்து வச்சது பிடிக்கேலையோ?. காதல் கீதால் எதாவது” என்று இழுத்தார்.
“ஐயோ மாமா” அவசரமாக எழும்பி நின்றான். “நானும் காதலிச்சுத்தானே கட்டினான். காதலிச்சாலும் நாமதான் கழுவி விட வேண்டிக் கிடக்கும். வயிறை மட்டும் கழுவினா போதாதடா. எல்லாத்தையும் கழுவோணும்” என்று இறுக்கமாக முடித்தார். இதற்கு எதாவது சொல்ல வேண்டுமா என்று துவாரகன் யோசிக்கும் போதே அவர் கழிவறைகளை சுத்தம் செய்யும் பிரஸ்ஸும் ஆசிட் போத்தலுமாக கீழே இறங்கிப் போயிருந்தார்.
கனடா குடும்பம் தங்கவிருக்கும் இரண்டாவது மாடி இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. இரண்டுமே கழிவறைகள் இணைக்கப்பட்டவை. சமையல் அறையும் படுக்கை அறையின் பாதி அளவில் இருக்கும். சமையலுக்குத் தேவையான பாதிரங்களும் காஸ் சிலிண்டரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். முன் விறாந்தை இரண்டு படுக்கை அறைகளையும் இணைத்தால் இருக்கக் கூடிய அளவுக்குப் பெரியது. அதனை இரண்டு சோபா செட்டுகளும் நான்கு பிளாஸ்டிக் கதிரைகளும் ஒரு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியும் ஆக்கிரமித்திருக்கின்றன. அந்த தொலைகாட்சியில் பாரிசில் இருந்து ஒளிபரப்பாகும் பாசன் சானல் உட்பட எல்லா சானல்களும் பார்க்கக் கிடைக்கும்.
நகரின் மையத்தில் விருந்தினர் விடுதியாக அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்னிருக்கும் இளவம்பஞ்சு மரத்தில் இப்போதெல்லாம் நிறைய வவ்வால்களைக் காண முடிகிறது. இருட்டில் அவைகளைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. மொட்டை மாடிக்கு மேலாக அவ்விரவில் எங்கோ அவசரமாகப் பறந்து பறந்து களைக்கும் அவைகளும் அவனைக் குறித்து எந்த கவனமும் கொள்ளாதவையாக பறந்து கொண்டிருந்தன .துவாரகன் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். அப்படியான இருட்டில் எந்தப்பறவைகளும் பறவாத வானம் மட்டும் அவனது கண்களுக்கு தெரிந்தது. தன்னுடைய கைகளை அகல விரித்து விசும்பி அழத் தொடங்கினான். அந்தத் தனிமையின் கண்ணீரில் இருட்டு தளும்பத் தொடங்கியது.
Valthukkal. Kathai sirappaka irukkirathu.