Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 09 // போதாத காலம்

யாளி பேசுகிறது – 09 // போதாத காலம்

யாளிக்கும் இது போதாத காலம் என்று தான் தோன்றுகிறது. அகண்ட வாயிலிருந்து தொங்கும் நாவானது, அரசினை எதிர்த்துப் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் வெளியே வந்திருக்குமோ என்னவோ, ஒருவேளை நெல்லையப்பர் கோயில் அம்மன் மண்டபத்தில் உள்ள குரங்கினைப் போல் உடலில் சேதம் விளைவித்து அதை மறைப்பதற்கு ஏதுவாய் வேறெதுவும் கூட கட்டித் தொங்கவிடப் படலாம்.

சமகாலக் கலை எது?

1970களோடு நின்று போய்விட்ட நவீனக் காலத்திற்குப் பின்னே உருவான எல்லாப்படைப்புகளும் சமகாலக்கலை என்கிற பார்வையை ஒரு நண்பரிடமிருந்து கேள்விப்பட்டேன், அவர் படைப்புகள் என்கிற இடத்தில் மிக அழுத்தம் தெரிவித்து இருந்தார் என்பதையும் இங்கே சொல்லிவிடுதல் உத்தமம்.

சென்னை தமிழ்நாடு அரசு இசைப் பல்கலைக்கழகத்தில் CONTEMPORARY ART EXHIBITION என்கிற தலைப்பு உள்ளே சென்று வரப்பணித்தது. நண்பர் ஒருவரிடம் கேட்ட போது, இது முக்கியமான கண்காட்சி தான் ‘போய்ப் பாரு’ என்று புன்னகைத்தார். வழக்கமான புன்னகைதான்.

“உள்ளே சென்ற எனக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது” என்பது அநேக துப்பறியும் கதைகளில் நடந்ததைச் சொல்லும் ஒரு அபலையின் குரல் தான். இப்போது நானும் அப்படியே சொல்கிறேன், SG வாசுதேவ், RM பழனியப்பன், அச்சுதன் கடலூர், கே. முரளிதரன் , நரேந்திர பாபு, டக்ளஸ், கே.பாலசுப்ரமணியன் என பலரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மெட்ராஸ் ஸ்கூலின் படைப்பாளிகளை ஒரு சேர பார்ப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம் தான் என்று உங்களிடம் நான் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு ஊரின் பெரிய கோயிலுக்கான தேர்த்துனியை, ஒரு கண்மட்டுமே இருக்கின்ற தன் அப்பா ஒருவராகவே அளந்து, வெட்டி, படம்வரைந்து உருவாக்கினார் என்று சொல்லியபடி, அந்த தேர் இழுக்கப்படும் உற்சவத்தில் “இந்தத் தேர் பனிரெண்டாவது முறையாக அணிந்திருக்கிறது” என்று நிழற்படத்தைக் காட்டி மகிழும் முகத்தில் அசலான ஒன்றை கண்டு ரசிக்க முடிந்தது.

ஒரு நள்ளிரவில் – ஓ.எம்.ஆரில், முன்னதே கேள்விப்பட்டிருந்தும் தலைவலி மாத்திரை கூட வாங்காமல் அந்த பிரம்மாண்ட இயக்குநரின் படத்தைப் பார்த்துவிட்டு வந்த தலைவலியைப் போக்கிட ஒரு தேநீர் தேடி அலையும் நேரத்தில் மூன்று முறை காவலர்களின் கெடுபிடி சோதனைகளுக்கு ஆளாக நேர்ந்திருந்தது. ஆனால் ஒரு சைக்கிளில் தேநீர் சிகரெட், பன், பழம் என வைத்துக்கொண்டு நடுநிசியில் பயமில்லாமல் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்ய ஒருவனால் எப்படி முடிகிறது என்பதற்கு பதில், அவனது வெள்ளைச் சட்டையின் பைகளில் சொருகியிருக்கும் ஆளுங்கட்சியின் உறுப்பினர் என்னும் அட்டை, ஒரு சிறுதொழில் செய்வதற்கே அரசியல் செய்யவேண்டியிருக்கிறது என்பது சமூகத்தின் நிர்பந்தமாகிப் போய்விட்ட காலத்தில்…

இருந்த உறவையெல்லாம் இழந்துவிட்ட ஒருத்தன், கரித்துண்டுகளாலும், செங்கற்பொடியாலும் ஒரு வெள்ளைச்சுவற்றில் மனதில் பதிந்த அந்த இரும்புப் பெட்டியில் வரைந்திருந்த மூன்று ஓவியங்களில் ஒரு ஓவியத்தின் சுவடு இன்னும் அழகாய் மாறியிருக்கிறது. ஒரு கையில் பீடியை வழித்தபடியே வரைந்து கொண்டிருக்க, ஒரு ஸ்தபதிக்கு கோயிலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்ததில் அவனுக்கு கற்றுக்கொள்வதற்கு என்று வேறேதுமில்லாமல் போனதற்கு காரணமாயிருந்த அந்த சித்திரக்காரனை அவன் சபிக்கவேயில்லை. தனது முதுகிற்குப் பின்னே “உச்” கொட்டும் சமூகம் மீது எந்த மரியாதையும் இல்லை, அக்கறையுமில்லை.

பிரச்சினை எல்லாமே நாம் மதிக்கின்ற, போற்றுகின்ற, நாம் நம்புகின்ற கலை மீது தான். சமகாலக் கலை மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களின் அணிவகுப்பு என்று தமிழக முதல்வரின் முகப்புப் படம் போட்ட ஃபேஸ்புக் பக்கம் சொல்லும் போது கூட எனக்கு எந்த முன்யோசனையும் இல்லை, துணைவேந்தரின் செய்திக் குறிப்பில் சமகாலக்கலையும், தஞ்சாவூர் ஓவியங்களும் சங்கமம் என்ற அறிவிப்பில் இருக்கும் மடிப்பினைத் தெரிந்து கொள்ளும் அளவு ஞானம் இல்லை என இப்போது அந்த நண்பரின் புன்னகையை நினைவு கூர்கிறேன்.

ஊட்டியில் இயங்கிவரும் மேக்கேன் கட்டடக்கலை பள்ளி (MCGAN’s School of Architecture) ஏற்பாடு செய்திருக்கும் கண்காட்சி அது, மேற்சொன்ன தமிழகத்தின் முன்னோடி ஓவியர்களோடு, அப்பள்ளியின் மாணவர்களும் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் போலும், ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றில் வேறொரு பெயரைப் பார்த்தபோது தான் அந்த ஆச்சரியம் எழுந்தது, விசாரித்தால் அது மாணவரின் ஓவியமாம், லலித்கலாவில் இந்தோகொரிய கலாச்சார பண்பாட்டு பகிர்வாக காட்சிப்படுத்தப்பட்ட கொரியப் பள்ளி மாணாக்கார்களின் படைப்பும் அப்படியான ஒன்றாகத் தான் இருக்குமோ என்றும் அதைத் தான் அரசும் முன்னிருத்துகிறதோ என்கிற கேள்வியை இரண்டு முறை அழித்துவிட்டு தான் மீண்டும் தட்டச்சு செய்கிறேன். ஓ.எம்.ஆரின் தேநீர் கடைக்காரருக்கும் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்பவருக்குமான வித்தியாசங்கள் பல இருக்கலாம், ஆனால் இருவரும் அரசியல் முகவரிகளால் தங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள்.

CREATIVE DISPLAY என்பது எப்படியோ இருக்கட்டும் – மிகமோசமான காட்சிப்படுத்தல் எப்படி இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள உதவியது இக்கண்காட்சி என்பது மிகையல்ல, மிகவும் பழமையான தஞ்சாவூர் ஓவியம் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டது போல் கடைசியாக வைக்கப்பட்டிருந்ததிலிருந்து, தொங்கிக் கொண்டிருக்கும் ஓவியங்களை விட லேபிள் விலையுயர்ந்ததா என்ன? என்று கேட்குமளவுக்கு ஒரு ஓவியத்தில் தவறு ஒன்று திருத்தி எழுதப்பட்டிருந்தது, விநாயகரின் சற்றே பிதுங்கிய மார்பினை நினைத்து அந்த அரங்கக்காப்பாளர் அதை தேவி என்று எழுதியிருக்கிறார். அது திருத்தி எழுதப்பட்டிருந்த வரலாறு பற்றி அடியேனுக்கு எதுவும் தெரியாது என்பதில் வருத்தமே.

தஞ்சாவூர் ஓவியங்கள் எந்த இனக் குழுவிற்கு சொந்தமானது? அதற்கென மொழி அடையாளம் என்று ஏதேனும் உண்டா என்கிற கேள்விக்கு அடிப்படைத் தமிழக வரலாறு தெரிந்திருந்தால் போதுமானது. தமிழகத்தின் தொன்மையான கலையாக இருந்த சித்திரக்கலையின் நீட்சியாக இன்று நாம் எதைத் தக்கவைத்திருக்கிறோம்? அல்லது நாம் இன்று தமிழர்களின் கலை என்று எதை மார்தட்டிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? இவ்விரண்டும் இரு வேறு கேள்விகளாய் தோன்றவில்லை

மராட்டியர்களின் வரவிற்குப் பிறகு தான் சாம்பார் என்கிற உணவு தமிழனின் தாளியில் சேர்ந்தது என்று சொன்னால் கூட யாரேனும் உணர்வாளர்கள் என்னை பழிக்கலாம். கேழ்வரகுக் கூழ் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு செய்வது யாளியின் நோக்கமல்ல.

தமிழக முதல்வரின் இருபது பெரிய ஓவியங்களை, அலங்காரம் செய்து அதை தஞ்சாவூர் ஓவியங்கள் என்று பெயரிட்டிருப்பதால் அவற்றை தஞ்சாவூர் ஓவியங்கள் என்றே நம்ப வேண்டும் என்பது தமிழகத்தின் தலையெழுத்து. தமிழக முதல்வரின் கலையுலக வாழ்க்கையை பொன்னாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் விலைமதிக்கவியலா வரலாற்றில் பதிவது தான் கண்காட்சியின் நோக்கமெனத் தெரிந்தது. இதனோடு சமகாலக் கலைஞர்களென நம்பியிருந்த கலைஞர்களின் படைப்புகளோடு ஒட்டவைத்து எதையோ கட்டுமானம் செய்ததாகத் தோன்றுவது, கட்டடக்கலைப் பள்ளியின் சேர்மேன் அவர்களின் கனவுத் திட்டமா அல்லது கனவுத் திட்டத்தின் பிரதிபலனா என்கிற ஐயம் நிதர்ஸனம்.

நாம் பார்ப்பனவற்றில் நம் மனதில் பதிய வேண்டியவை இவை தான் என்று முன்னமே தீர்மானித்து CUSTOMIZE செய்து கொள்ளும் திறன் இருந்தால் தேவலை தான். இங்கே, இதற்கு இணையான உதாரணமாக, ஸெம்மொழி மாநாடு நடந்த வரலாறு தெரியுமா என்றும் எதிர் அரசியல் பேசலாம் தான். அரசு போடும் தீவனத்தை எதிர்பார்க்கும் சமூகத்தை தான் முதலில் சுட்ட வேண்டியிருக்கிறது என்பது யாளியின் மன உறுதி

“ஒரு சமூகம் எல்லாவகையிலும் பின் தங்கிப்போய்விடும் என்பதை அதன் முகமான கலை வடிவங்களின் நிலையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆட்சியிலிருப்பவர்களை அண்டித் தான் கலைஞர்கள் பிழைக்க வேண்டியிருக்கிற நிலை சாபக்கேடு. வெகுஜன ஊடகங்களின் செயல்பாடு இப்படி இருந்தால் பரவாயில்லை, சமகாலக் கலைப் பண்பாடுகளின் அதிதீவிர இயக்கங்களும் இவ்வாறே வாழவேண்டிய நிர்பந்தம் இருப்பதாகத் தம்மைக் காட்டிக்கொண்டு இருப்பது, உறக்கத்திலிருந்து எழவே விரும்பாத சமூகத்தின் நிலையாகத் தான் இருக்கிறது. நாம் வாழும் காலத்திலேயே அச்சமூகத்தோடு சேர்ந்து ஜீவ சமாதியாகிப் போய்விடத் தான் மனம் நாடுகிறது…” என்று கிறுக்குத்தனமாய் ரோட்டில் கத்தியபடி நடந்து சென்ற ஒருவன், இறந்து போன யாரோ ஒருவனின் நினைவாக வைத்திருந்த அந்த ஒட்டுபோட்ட ஜோல்னா பையிலிருந்த சில கரித்துண்டுகளையும், ஓட்டுச் சிதிலங்களையும் கையில் எடுத்தான். ஒரு வெள்ளைச் சுவர் அவனை வா… வா… என்று அழைத்தது..

 

யாளி தன்னைத் தானே கல்லைச் சமைக என்று சாபமிட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular