தொடரும் உயிரி
எவ்வித கவலைகளுமின்றி
சீழ்கையடித்தபடி
வான்பார்த்து நடந்து செல்பவன்
நிதானித்துத் திரும்பிப் பார்க்கையில்
அவ்வுயிரின் கண்களை
நேருக்குநேர் சந்திக்க நேரிடுகிறது
எப்போதென கணிக்க இயலாத
காலத்திற்கு முன்பிருந்தே
தொடர்ந்து கொண்டிருக்கும் பயணத்தின்
ஏதோவொரு நிறுத்தத்தில்
இறங்க வேண்டியவர்களாயினும்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்களது வாகனம்
உடலை துளைத்திடும் பார்வையிலிருந்து
தப்பிக்க முயல்பவனை
விடாது துரத்திடும்
அதன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த
சங்கிலியின் முனையைப் பிடித்திருக்கும்
விரல்களுக்குச் சொந்தக்காரனின்
முகத்தை
இதற்குமுன் பலமுறை
கண்ணாடிகளில் பார்த்த ஞாபகம்
உடையினை ஒவ்வொன்றாய் களைந்தபடியே
ஓடிக்கொண்டிருப்பவன்
அவிழ்த்தெறிந்த ஆடைகளை தின்றபடியே
மீளமுடியா சாபத்தின் கண்ணியாய்
பின்தொடர்கிறது
இனி வழியேதுமில்லையென
பயத்தின் உச்சத்தில் உடலொடுங்கி
குன்றியவனின் அருகில் வந்து
இடம்மாற்றிய
சங்கிலியை பற்றியவனை
விழிகளால் வெறித்து பார்க்குமதன்
இதழில் தெரிந்த ஏளன சிரிப்பின்
அர்த்தம் புரிந்திட
திறந்துகொள்கிறது பாதை
***
விளையாட்டு மைதானம்
நெடிதுயர்ந்த
இம்மதிலுக்கு பின்னே இருக்கிறது
ஒரு விளையாட்டு மைதானம்
தினமும் வருபவர்களின்
கூச்சல்களும் இரைச்சல்களும்
செவிகளில் விழும்போதெல்லாம்
பரபரக்கும் மனதை கட்டுப்படுத்தி
கவனம் சிதறாமல் உறங்க முயல்கையில்
கனவுக்குள் மெல்லக் கேட்கிறது
இதுவரை அறியப்படாத விளையாட்டின்
விதிமுறைகள்
உதைபடும் பந்தாகவோ
அடித்திடும் மட்டையாகவோ
இடையிலிருக்கும் வலையாகவோ
எதுவொன்றாகவும் இல்லாமல்
மைதானத்து நிலமாக இருக்க விரும்பும்
விநோத ஆசையோடு
நிதமும் தருணத்தை எதிர்பார்த்து
காத்திருப்பவர்களுக்கு ஆறுதலென
காற்றில் மிதந்து வரும் தூசினை
சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்
நிரம்பி வழிகையில்
தூரத்தில் ஒலித்த மணியோசையால்
சிந்தை மீண்டு தலைதிருப்பிட
எங்கிருந்தோ வந்து விழும்
பந்தொன்றில் வரையப்பட்டிருக்கும்
சிரிக்கும் முகத்தை பிரதியெடுத்து
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
மதிலுக்கு முன்னிருப்பவர்களால்
ஒருபோதும் போகமுடியாத மைதானத்தில்
தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன
எண்ணற்ற விளையாட்டுகள்..
***
கூட்டாளிகள்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
யாவற்றையும் பார்த்தவாறே
அமைதியாய் இருக்கும்
அச்சிலையை போலவே எதுவும் பேசாமல்
ஒரு ஓரமாய் உட்கார்ந்திருப்பவனை
யாரும் கவனித்ததாய் தெரியவில்லை
அனைத்தையும் படம் பிடிக்கும்
தேர்ந்த புகைப்படக் கலைஞனை போல
தலையை உயர்த்தி
கண்களை மூடிமூடித் திறக்க
சேகரமாகின்றன புகைப்படங்கள்
குவியத்தொடங்கிய புதியனவற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
பழையவைகளைக் கண்டுபிடிக்கும்
ஒருபோதும் அலுத்திடாத விளையாட்டில்
ஈடுபட்டிருப்பவனை அழைத்து
தன்னையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி
இறைஞ்சும் குரல்
அவனுக்கு மட்டுமே கேட்டிட
மெல்ல அத்திசை நோக்கி
திரும்பிப் பார்த்து சிரித்தவனுக்கு பதிலாய்
ஒற்றைக்கண் சிமிட்டி நகைக்கிறது சிலை.
***
அதீதன்