Sunday, October 27, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள்

அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள்

நாராயணி சுப்ரமணியன்

கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது.

அறிவியல் பின்னணி

காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உமிழ்வுதான் இதற்கும் காரணம். காலநிலை மாற்றம் என்பது பொதுவான அச்சுறுத்தல் என்றால், அமிலமாதல் கடலுக்கு மட்டுமேயான அச்சுறுத்தல்.

 காற்றிலிருக்கிற கரியமில வாயுவை, கரிமத்தை உறிஞ்சும் தன்மை கடலுக்கு உண்டு. இதனால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை, கடலின் அன்றாட சுழற்சிகளே சமன் செய்துவிடும். ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளால், காற்றில் கரிமம் அதிகரிக்கும்போது, கடல்நீருக்குள் உறிஞ்சப்படும் கரிமத்தின் அளவும் அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாகக் கரியமில வாயு கடலுக்குள் சேரும்போது, பொதுவான சுழற்சிகளால் அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. சமநிலை சீர்குலைகிறது; கடலின் வேதித்தன்மையே மாறுகிறது.

கடல்நீர் பொதுவாக காரத்தன்மை கொண்டது (Alkaline). அளவுக்கதிகமாகக் கரியமில வாயு உறிஞ்சப்படும்போது, அது கடல்நீருடன் வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறுகிறது. இதனால், கடல்நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதைத்தான் விஞ்ஞானிகள் கடல்நீர் அமிலமாதல் என்று அழைக்கிறார்கள்.

தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை மொத்தம் 400 பில்லியன் டன் கரிமத்தை நாம் வெளியிட்டிருக்கிறோம்.. இதில் கிட்டத்தட்ட 30% கடலுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது! இவ்வாறு சேர்ந்த கரிமத்தால், கடல்நீரின் அமில-கார எண் (pH) 0.1 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது! “அட, 0.1க்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? என்னவோ அமிலத்தையே கடலில் கொட்டியதுபோல் குதிக்கிறீர்களே” என்ற கேள்வி எழலாம். அமில-கார அட்டவணையின் மொத்த அளவீடே 14 தான். ஆகவே, 0.1 pH அதிகரிப்பது என்றால், சராசரி அளவை விட 30 சதவிகிதம் அமிலத்தன்மை கூடியிருக்கிறது என்று பொருள்! என்கிறது ஒரு தரவு. நாம் வெளியிடும் கரிமத்தை உறிஞ்சிக்கொள்கிற கடல், கொஞ்சம் கொஞ்சமாக அமிலமயமாகிக்கொண்டிருக்கிறது.

கடல்நீரின் அமில-காரத்தன்மையில் அவ்வப்போது நுண் வேறுபாடுகள் ஏற்படும், அது புவியியல் சுழற்சியில் ஒரு பகுதிதான். ஆனால், இப்போது அமிலத்தன்மை அதிகரித்திருக்கும் வேகம் அசுரத்தனமானது. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளின் சராசரி மாற்ற விகிதத்தோடு ஒப்பிடும்போது, இது நூறு மடங்கு கூடுதல்!

கரிம உமிழ்வுகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், 2100ம் ஆண்டுக்குள் கடலின் சராசரி அமில கார எண் 8.1 என்பதிலிருந்து 7.7 என்பதாக சரிந்துவிடும். அப்படிப்பட்ட கடலில் பல இடங்கள் உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக மாறிவிடும். குறிப்பிட்டு சொலல்வேண்டுமானால்  2038ம் ஆண்டிலிருந்தே கடலின் சமநிலை சீர்குலையத் தொடங்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

1990களின் பிற்பகுதியில் கண்டறியப்பட்ட சூழலியல் பிரச்சனை இது. 2003ல் இதற்கு “கடல் அமிலமாதல்” என்ற பெயரும் வைக்கப்பட்டது. கடலின் அமிலத்தன்மை/காரத்தன்மையை அளப்பதில் இருந்த சில நடைமுறை சிக்கல்கள், அமிலமாவதற்குக் காரணமான கரிமம் எங்கிருந்து வருகிறது என்ற ஆராய்ச்சியில் இருந்த தடைகள் போன்றவற்றால் இதை உறுதிப்படுத்தவே பல வருடங்கள் பிடித்தன. ஆனால், அதன்பிறகு நடந்த எல்லா ஆராய்ச்சிகளுமே, நாம் நினைத்ததை விடவும் இதில் ஆபத்து அதிகம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

ஆராய்ச்சிக்களங்கள்

எதிர்காலத்தில் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை ஆராய வேண்டுமானால், அமிலத்தன்மை நிறைந்த இயற்கையான கடற்பகுதிகள் வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதற்காக இயற்கையாகவே இருக்கும் அமிலப் பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றுள் முக்கியமானவை Carbon dioxide seeps என்று அழைக்கப்படும் கரியமிலப் பிளவுகள். கடலுக்கடியில் இருக்கும் தகடுகளில் விரிசல் ஏற்படும்போது, பூமிக்கு அடியிலிருந்து எரிமலைக் குழம்புகளோ கரியமில வாயுவோ வெளியேறலாம். கரியமில வாயு வெளியேறும் இடங்களில், சுற்றியுள்ள கடல்நீரின் அமிலத்தன்மை மிகவும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற பகுதிகளைத் தேடிச்செல்லும் விஞ்ஞானிகள், அங்கு உள்ள சூழலையும் விலங்குகளையும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் கடல் இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பை முன்வைக்கிறார்கள்.

 இந்த பிளவுப் பகுதிகளில் மிகக்குறைவான உயிரினங்களே காணப்படுகின்றன, பவளப்பாறைகள் அவ்வளவாக வளர்வதில்லை, களைகளாகக் கருதப்படும் பாசிகள் அதிகமாக வளர்கின்றன, உயிரிப் பல்வகைமை மிகவும் குறைவாக இருக்கிறது. இங்கு வந்துபோகும் மீன்களும் குறைவு. அமிலமாதல் தொடர்ந்தால், எதிர்காலத்தில் எல்லா கடற்பகுதிகளும் இப்படிப்பட்டவையாக மாற வாய்ப்பு உண்டு.

கடல் பட்டாம்பூச்சிகள்

2012ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “கடல்நீர் அமிலமயமாதலால் உயிரினங்கள் பாதிக்கப்படும்” என்பதற்கான முதல் ஆதாரம் கண்டறியப்பட்டது.கடல் பட்டாம்பூச்சிகள் (Sea Butterflies) என்கிற ஒரு கடல்வாழ் உயிரி உண்டு. நிலத்தில் நத்தையைப் பார்த்திருக்கிறோம் இல்லையா? ஊர்வதற்கு பதிலாக, தசைப்பிடிப்பான உடலை சிறகுபோல் விரித்து, நத்தைகள் நீரில் நீந்தினால் எப்படி இருக்கும்? அந்தக் கற்பனையின் உயிர் வடிவம்தான் கடல் பட்டாம்பூச்சி.

அண்டார்டிகாவையொட்டிய தெற்குக் கடல் பகுதியில் அதிகரித்துவரும் அமிலத்தன்மையால், கடல் பட்டாம்பூச்சிகளின் ஓடுகள் வலுவிழந்து வருகின்றன என்று அந்த ஆய்வு உறுதி செய்தது. எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாகப் பார்த்தால், நல்ல கடல் சூழலில் இருக்கும் ஓடுகளோடு ஒப்பிடும்போது, அமிலமான கடலில் இருக்கும் ஓடுகள் திட்டுத் திட்டாகக் காட்சியளித்தன. வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள், ஒரு சோதனை முயற்சியாக, சில கடல் பட்டாம்பூச்சிகளை, 7.7 அமிலத்தன்மை உடைய கடல்நீரில் போட்டுப் பார்த்தார்கள். வெறும் 45 நாட்களில்,ஓடு முற்றிலும் கரைந்து, காணாமலேயே போய்விட்டது! 2100ல் கடலின் அமிலத்தன்மை 7.7 என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆக, நாம் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், 2100ம் ஆண்டில், கடல் பட்டாம்பூச்சிகளின் ஓடுகள் முற்றிலும் கரையும் அளவுக்கு அமிலத்தன்மை மோசமாக இருக்கப்போகிறது!

ஓடுள்ள பிற உயிரினங்கள்

கடல்நீர் அமிலமாகும்போது, அதில் உள்ள ஆர்கனைட்டின் அளவு குறையும். ஆர்கனைட் இல்லாமல் விலங்குகளால் ஓடு போன்ற அமைப்பை உருவாக்க முடியாது. ஓடு உருவாக்க சில விலங்குகள் அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும், சில விலங்குகளால் ஓட்டை உருவாக்க முடியாமலே கூடப் போகலாம்.

முத்துச்சிப்பிகள், மட்டிகள், முள்ளிச்சங்குகள், சங்குகள், கிளிஞ்சல்கள், கடற்பரட்டைகள், உறுதியான வெளி ஓடு கொண்ட சில வகை பாசிகள், நுண் விலங்குகள் ஆகிய எல்லாமே பாதிக்கப்படும்.2100க்குள் சிப்பிகளின் ஓட்டில் 10% குறைபாடும், மட்டிகளின் ஓட்டில் 25% குறைபாடும் ஏற்படும். ஓடு வலுவாக இல்லாததால் இவை எளிதில் இறக்கும், இவற்றால் பாறைகளோடு தங்களை இறுகப் பிணைத்துக்கொள்ள முடியாது.

 அமிலமான கடலில், வளரர்ந்த பவள உயிரிகள் நிறமிழந்து வெளிறிப் போகும். வயது குறைந்த பவள உயிரிகளால் வலுவான கால்சியம் கார்பனேட் ஓடு ஒன்றை உருவாக்க முடியாது, பவளப்பாறைகள் திடமாக உருவாகாது. சுருக்கமாக சொல்லப்போனால், பவளப்பாறைகளுக்கு எலும்புப்புரை ஏற்படும்! வெளிப்பார்வைக்கு வலுவான பாறைகளாகத் தெரியும் பவள உயிரிகள், தொட்டால் பொடிந்துபோகிற அளவுக்கு பலவீனமாக இருக்கும். இதை “Coral Osteoporosis” என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த அச்சுறுத்தலால் மட்டுமே எதிர்காலத்தில் பவளப்பாறைகளின் எண்ணிக்கை 47% வரை குறையலாம்.

மீன்களும் திமிங்கிலங்களும்

அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, போதைப்பொருள் உட்கொண்ட மனிதர்களின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகிறார்கள் விஞ்ஞானிகள். “Fishes on Acid” என்று இதை அவர்கள் விவரிக்கிறார்கள்.  இடம் கண்டறிவதில் குழப்பம், கேட்கும் திறன் பாதிக்கப்படுவது, மோப்ப சக்தி குறைவது, ஆபத்தான இடம் என்று தெரிந்தும் அங்கு பயணிப்பது என்று மீன்களுக்கு பல பாதிப்புகள் வரும் என்கிறார்கள். “கடல்நீரின் அமிலத்தன்மை, இந்த மீன்களுடைய மூளையையே மாற்றி அமைக்கிறது” என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சில வகை ஊசிக்கணவாய்களின் வளர்ச்சி விகிதமும் அமிலத்தன்மையால் குறைந்துவிடுகிறது. சில மீன்களின் வேதி சமநிலை மாறி, அவை அமில அதிர்ச்சியால் இறக்க்கூடும்.

Volcanic carbon dioxide seeps of Ischia, Italy.
Credit: Pasquale Vassallo,
Stazione Zoologica Anton Dohrn.

அமிலத்தன்மை அதிகரித்தால், கடலுக்குள் ஒலி பயணிக்கும் தூரமும் அதிகரிக்கும்.  2050க்குள், கடலுக்குள் 70% கூடுதல் தொலைவுக்கு ஒலி அலைகள் பயணிக்கலாம். எங்கேயோ ஓடுகிற கப்பலின் இரைச்சல்கூட, நெடுந்தொலைவு தள்ளி இருக்கிற கடற்பகுதிக்கு சென்று சேரலாம், எதிர்காலத்தில் கடல்முழுக்க இரைச்சலாக இருக்கப்போகிறது. இதில், ஒலியை வைத்து மட்டுமே வழி கண்டுபிடிக்கும் விலங்குகள் தீவிரமாக பாதிக்கப்படும். திமிங்கிலங்களின் வலசைப்பாதைகள், உணவு உண்ணும் இடங்கள் எல்லாமே குழப்பம் நிறைந்தவையாக மாறும்.

அதிக பாதிப்புகள் உள்ள இடங்கள்

குளிர்நீர் உள்ள கடல்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நீரின் வெப்பத்தன்மை குறையும்போது, அது கரிமத்தை உறிஞ்சும் வேகமும் அதிகரிக்கும், ஆகவே குளிர் கடல்கள் எளிதில் அமிலமாகிவிடும் ஆபத்து உண்டு. வடக்கு அட்லாண்டிக், வடக்கு பசிபிக், ஆர்டிக் போன்ற கடல்கள் அதிகமாக பாதிக்கப்படும்.

பெரிய தொழிற்சாலைகள் உள்ள கடலோரப் பகுதிகள், பெருநகரங்களுக்கு அருகில் இருக்கும் கடற்கரையோரங்கள் ஆகியவற்றில் பாதிப்பு அதிகரிக்கும். இந்த இடங்களில் கரிம உமிழ்வு அதிகம் என்பதால், கடலுக்குள் சென்று சேரும் கரியமில வாயுவின் அளவும் அதிகமாக இருக்கும்.

அரசியல் சிக்கல்கள்

காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே பரவலாக விவாதிக்கப்படுகின்றன. அதற்குப் பின்னணியில் வலுவான காரணமும் இருக்கிறது. மனிதர்களுக்கு வருகிற ஆபத்துக்களை மட்டுமே மையப்படுத்தி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தும் உலக அரசுகள் கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருக்கின்றன. இதில், “எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரினங்கள் பாதிக்கப்படும்” என்ற ஒரு தகவலை முன்வைத்தால் திட்ட வரைவியலாளர்கள் அதைக் கண்டுகொள்வார்களா என்பதே தெரியவில்லை. அந்த உயிரினத்தின் இழப்பால் எத்தனை கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என்பதைக் கணக்கிட்டு சுட்டிக்காட்டினால், ஒரளவு எதிர்வினையும் பாதுகாப்பு சட்டங்களும் வருகின்றன. இதுதான் நிதர்சனம்.

“காலநிலை மாற்றத்துடன் பிறந்த ரெட்டைப் பிள்ளை” என்று அழைக்கப்படும் அமிலமாதல், போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. “நாம் வெளியிடும் கரிமத்தைக் கடல் உள்வாங்குகிறது” என்று முதன்முதலில் அறிவியலாளர்கள் தெரிவித்தபோது, “நல்லதுதான், எல்லாம் கடலுக்குள் போய்விடுமே” என்ற ரீதியிலேயே அரசுகள் இதை எதிர்கொண்டன. ரகசியமாகக் குப்பைகளைக் கடலுக்குள் கொட்டிவிடுவதுபோலவே இதைப் பார்த்தனர் அன்றைய திட்ட வரைவியலாளர்கள். “நமக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே” என்கிற மனிதனை மையப்படுத்திய (Anthropocentric) சிந்தனை இது.

இப்போதுகூட, “அமிலமாதலால் சிப்பி கிளிஞ்சல்கள் அழிவதால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும், பவளப்பாறைகள் அழியும்போது மீன்வளம் குறையும், அமிலமயமான கடலில் இருந்து பிடிக்கப்படும் சிப்பிகளில் புரதச்சத்து 50% குறைவு. கிளிஞ்சல் தொழில் பாதிக்கப்ட்டால் 2100க்குள் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படும்” என்றெல்லாம் எழுதவேண்டியிருக்கிறது. “மனிதனுக்கு ஆபத்து” என்ற மையப்புள்ளியிலிருந்து விலகாமலேயே இதைப் பேசவேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் இது சர்வதேச ஒப்பந்தங்களில் பேசுபொருளாகவே மாறுவதில்லை.

மனிதனுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே சூழல் பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படுகின்றன என்பது கவலைக்குரிய போக்கு. நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பாதுகாப்பதும் சீர்குலைக்காமல் இருப்பதும் ஒரு அடிப்படை அறம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஏன் திட்ட வரைவுகள் வடிவமைக்கப்படுவதில்லை? லாப/நஷ்டக் கணக்குகளைக் காட்டி இயற்கையைப் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்வி நிச்சயம் பழமைவாதத்தின் அடிப்படையில் எழுப்பப்படவில்லை. பரிணாமத்தின் உச்சத்தில் தன்னைக் கற்பனை செய்துகொள்கிற மனித இனம், மற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டால் மட்டும் ஏன் நழுவித் தப்பிக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், எதிர்காலத்தில் மனித இனம் இருக்குமா என்பதையே முடிவு செய்யும்.

நம்பிக்கைக் கீற்று

அமிலமாதல் ஆராய்ச்சிகளில் அவ்வப்போது வெளிவரும் சில தரவுகள் நம்பிக்கை தருகின்றன. நண்டு, இறால் உள்ளிட்ட சில உயிரினங்கள் அதிக அமிலத்தன்மையிலும் ஓரளவு தாக்குப்பிடிக்கின்றன. சில கடல்வாழ் உயிரிகள் தங்களையே மாற்றியமைத்துக்கொண்டு அமிலத்தன்மையை சமாளிக்கின்றன. கடற்புல் படுகைகள் (Seagrass beds) கடல்நீர் அதீத அமிலமாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. இதுபோன்ற பல ஆராய்ச்சி முடிவுகளைத் திரட்டினால்,  அமிலத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விலங்குகள் எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கும் என்று நம்மால் கணிக்க முடியும். அமிலமாதலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த விலங்குகள் நமக்குத் துணைபுரியும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

“இயற்கை ஒரு முடிவிலி என்பது மனிதன் வைத்திருக்கும் கடைசி மாயை. இயற்கையை, பெருங்கடலை, எல்லாவற்றையும் பெரிய அளவில் மாற்றியமைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டால் இந்த மாயை பறந்தோடிவிடும். இந்த மாயை விலகினால் மட்டுமே, இயற்கையைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற உண்மை தெரிய வரும். மனிதனால் இயக்கப்படும் காலவெளி இது. இதில் நுழைந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு” என்று எழுதுகிறார் சூழலியல் அறம் பற்றி ஆராய்ந்துரும் பேராசிரியர் ஃப்ரெட்ரிகே போஹ்ம். 

தன்னால் ஏற்படுகிற பாதிப்பு என்று இதை அறம்சார்ந்து அணுகுகிறோமோ, தனக்கும் பாதிப்பு நாளை வந்துவிடும் என்ற அச்சத்தோடு அணுகுகிறோமோ, கடல்நீர் அமிலமாதலை நாம் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியபோதுதான் இந்த அளவுக்கு மோசமான அமிலத்தன்மை இருந்ததாம். இன்னும் மனிதன் விண்வெளியை அண்ணாந்து பார்ப்பவனாகவே இருக்கிறான், ஆனால் அவனது தொடர் செயல்பாடுகள் விண்கல்லின் தாக்கத்தை ஒத்திருக்கின்றன என்பது தத்துவரீதியாக  என்னவோ செய்கிறது.

தரவுகள்

  1. Extensive dissolution of live pteropods in the Southern Ocean, Bednarsek et al, Nature Geoscience, 2012.
  2. Anthropogenic carbon and ocean pH, Ken Caldeira and Michael Wickett. Oceanography, 2003.
  3. A short history of ocean acidification science, P.G.Brewer, Biogeosciences, 2013.
  4. Changing Ocean, marine ecosystems and dependent communities, Bindoff et al, IPCC Special Report, 2019.

***

  • நாராயணி சுப்ரமணியன்
  • ஆசிரியர் தொடர்புக்கு :nans.mythila@gmail.com
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular