காற்றும் சிற்சிறு இலைகளும்
1
படுக்கும் அறைக்குள் சிற்சிறு இலைகள்
மரத்தில் உயிர்த்திருந்தவை பயங்கர காற்றில் மூச்சிழந்து
உயிர் துறந்து
இறுதி யாத்திரையில் என்னிடம் வந்துவிட்டன
சுற்றிலும் வெற்றுடல்களில் சுவாசித்துக் கிடக்கும் என்னுடல் இதற்கு முன் கண்டிருந்த சடலங்களின் நினைவில் கலக்கமுற்றது
இறந்துபோனவர்கள் என்னருகில் இருப்பது போன்ற மாயை வேறு
உதிர்ந்தவை யாவும் மாண்ட உடலங்களை நினைவூட்டதாகவே இருப்பது இந்த தனித்த இரவின்
துயரை
கனக்கச் செய்துவிடும் போலும்
வரவிருக்கும் நித்திரை மீது
இந்தச் சருகுகள் சாவுமேளத்தை இசைக்காமலிருக்க வேண்டும்.
***
2
பெருங்காற்று மரங்களுக்கு போதை ஊட்டி கிறுகிறுக்க செய்து அதன் உயிரான இலைகளைச்
சிதைத்து
என் வீட்டினுள் தூக்கியெறிந்தது
பரிதாபத்தில் என்னருகில் இருத்திக்கொண்டேன்
மரத்திலிருந்தால் சப்தமிட்டுக்கொண்டிருக்கும்
இப்போது அதற்கு எந்த வாய்ப்புமில்லை
உயிர்ப்பான காலத்தைக் காற்று
பறித்துவிட்டது
நான் துடிக்கும் என்னிதயத்துடன்
துடிப்படங்கிய உடல்களைத் தரிசித்தேன்
மரணம் தரிசனத்துக்குரியது
துக்கப்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை
அருகிலிருந்த அவற்றின் நிச்சலனத்தின் மீது
என்னுறக்கம் ஊர்ந்தது போலிருந்தது.
***
3
காற்று எங்கோ ஒளிந்து கொள்ள
மரத்தின் அசைவுகள் ஸ்தம்பித்திருந்தன
பாவம் இலைகள் தான் பிரிந்துவிட்டன
அதற்கு பெரும் ஆறுதலாய் நான்
என் வீட்டில் இடம் கொடுத்தேன்
ஆயினும் இறந்துவிட்டவை
அமைதியில் தோய்ந்து இருந்தன
படுக்கையின் மீதிருந்த அவற்றை
கொஞ்சம் ஓரமாய் பெருக்கி வைத்தேன்
இந்த இரவு இலைச் சடலங்களுடன்
கழிவதை நினைக்கையில் ஒரு இலைபோல இதே காற்று உலகிலிருந்து என்னை
உதிர்த்துவிடுமென்று நினைத்துக்கொண்டேன்
உயிர்களை இயக்கும் காற்று புதிரானது
யாரும் அறியாத ரகசியத் தன்மையில்
அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
***
4
இந்த நாள் முழுக்கவே காற்றின் தாண்டவம் முழுவீச்சில் இருந்தது
மரங்களை பேய் பிடித்த பெண்களின் தலையை போல சுழற்றி அடித்தது
எதிர்க்கத் திராணியற்ற மரங்கள்
நிலத்தில் விழுந்து மடிவது போல் இருந்தன
பலகீனமான அவற்றின் உடலில் இருந்து
மிக மெலிதான உடல்களால் ஆன இலைகள்
எதிர்த்துப் போர் புரிய முடியாமல்
கூட்டம் கூட்டமாய் சரிந்து வீழ்ந்தன
அப்படித்தான் இன்று காற்றின் கைகள்
என் அறைக்குள் அவற்றை எறிந்துவிட்டு போனது
இப்போது என் வீடு இலைகளால் ஆன
மரம் போன்று இருப்பதாய்த் தோன்றியது.
***
அய்யப்ப மாதவன்