அரேப்போவின் கடவுள்

9

தமிழில் : ஹாலாஸ்யன்

டம்ப்ள்ர் இணையதளத்தில் கதைக்கான துவக்க வரி ஒன்றைக் கொடுத்து அதை வைத்து ஒரு முழுக்கதை எழுதும் சவால் ஒன்று நிகழ்த்தியிருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட துவக்க வரி இதுதான்.

கோயில்கள் கடவுள்களுக்காக கட்டப்படுபவை. இது தெரிந்த ஒரு விவசாயி சிறிய கோயில் ஒன்றைக் கட்டி எந்த மாதிரியான கடவுள் குடிவருவார் என்று பார்க்கிறார்.

Sadoeuphemist என்னும் நபர் எழுதிய கதையைத்தான் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஆனால் மனதுக்கு மிக நெருக்கமான கதையாக இருந்தது

ரேப்போ தன்னுடைய வயலில் ஒரு கோயில் கட்டினான். கோயில் என்றால் கட்டிடம் எல்லாம் இல்லை. வெறும் நான்கு கற்களை அடுக்கி வைத்ததுதான் கோயில். இரு நாட்களுக்குப் பின்னர் அதில் ஒரு கடவுள் குடியேறியது.
“நீங்க அறுவடையின் கடவுளாக இருக்கவேண்டும்” என்றபடி அரேப்போ ஒரு சிறிய பலிபீடம் செய்து அதில் இரண்டு கோதுமைக் கதிர்களை எரித்தார். “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று பலிபீடத்தில் எரிந்த கோதுமைக் கதிர்களின் சாம்பலையும், அடுக்கி வைத்த கற்களின் கோணல்மானலான வடிவத்தையும் பார்த்தார். “இது பெரிய கோயிலெல்லாம் இல்லைதான். ஆனால் நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னை கவனித்துக்கொள்ள ஒரு கடவுள் இருக்கிறார் என்று நினைப்பது சுகமாகத்தானே இருக்கிறது” எனத் தன் வைக்கோல் தட்டைகளால் ஆன தொப்பியைக் கையில் எடுத்துக்கொண்டு அரேப்போ கிளம்பினார்.

அடுத்தநாள், பலிபீடத்தில் ஒரு ஜோடி அத்திப்பழங்கள் வைத்தார். அதற்கு அடுத்த நாள் கோயிலுக்கு அருகே ஒரு பத்து நிமிடம் தியானத்தில் அம்ர்ந்திருந்தார். மூன்றாவது நாள் குடியேறிய தெய்வம் பேசியது.

“நீ நகரத்தில் இருக்கும் கோயிலுக்குப் போக வேண்டும்.”

அதன் குரல் கோதுமைக் கதிர்கள் உரசுவதைப் போன்று, புற்களினூடே ஓடும் வயல் எலிகளின் கீச்சுகளைப் போலவும் இருந்தது

“ஒரு உண்மையான கோயில். ஒரு நல்ல கோயில். அங்கு போய் அசலான சில கடவுள்களின் அருளைப் பெற்றுக்கொள். நான் துடியான கடவுள் எல்லாம் கிடையாது. ஆனால் என்னால் சிபாரிசு செய்ய முடியும்.” பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் இலையைப் பறித்து பெருமூச்சு விட்டபடி அது தொடர்ந்தது. “ நான் உன்னைக் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தக் கோயில் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கான வழிபாடுகளும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இதனாலெல்லாம் உனக்கு ஏதேனும் நன்மை நிகழும் என்று நினைத்துக்கொள்ளாதே”

“நான் கட்டும்போது எதிர்பார்த்ததை விட எனக்கு நிறையவே நிகழ்ந்திருக்கிறது” என்றார் அரேப்போ. தன் கதிர் அரிவாளை கீழே போட்டு தானும் அமர்ந்தபடி கேட்டார். “ சொல்லுங்கள் நீங்கள் எதற்கான கடவுள்?”

“நான் உதிர்ந்த இலைகளின் கடவுள். நிலத்தடியில் நெளியும் புழுக்களின் கடவுள். காட்டுக்கும் வயலுக்குமான வரம்பின் கடவுள். பனிப்பொழிவுக்கு முன்பான முதல் உறைதலின் கடவுள். உங்கள் பற்களுக்கிடையே கடிபடும் ஆப்பிள் தோலின் கடவுள். நான் பல சிறிய விஷயங்களின் கடவுள். அழுகிப்போகும் துணுக்குகள் போன்ற, கணநேரத்தில் மறையும் காட்சிகள் போல. காற்றில் ஏற்பட்டு மறையும் ஒரு மாற்றத்தைப் போன்ற பொருட்களின் கடவுள்.”

பெருமூச்செறிந்தபடி அந்தக் கடவுள் தொடர்ந்தது, “இதையெல்லாம் வழிபட்டுப் பயனில்லை, போர், அறுவடை அல்லது புயல் போன்று அல்ல இவையெல்லாம். உன் பிரார்த்தனைகளை உன் கட்டுப்பாடுகள் அல்லாத விஷயங்களுக்காக சேமித்து வை. நீ மிகவும் சிறியவன். என்னைவிட ஆற்றல் வாய்ந்த எதையேனும் வழிபடு. போ.”

அரேப்போ இன்னொரு கோதுமைக் கதிரைப் பிடுங்கி, தன் பற்களிடையே வைத்து தட்டையாக்கினார். “எனக்கு இம்மாதிரி வழிபாடு செய்வதே போதும். அதனால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நான் இப்படியே தொடர்கிறேன்.”

“சரி உன் வசதிப்படி செய். ஆனால் முன்னமே உன்னை எச்சரிக்கவில்லை என்று சொல்லாதே” என்றபடி அடுக்கிவைக்கப்பட்ட கற்களுக்குள் பதுங்கிக் கொண்டது.

அரேப்போ தினமும் காலையில் வயல் வேலைக்கு முன்னர் ஒரு பிரார்த்தனையைச் சொல்வார் பின்னர் அவரும் அந்தக் கடவுளும் அமைதியாக மரங்களைப் பற்றிச் சிந்திப்பார்கள். நாட்கள், வாரங்கள் இப்படியே ஓடின. பின்னர் கரிய பெரிய ஒரு பெரும் புயல் வந்தது. அரேப்போவின் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. அவர் வீட்டு ஓடுகள் காற்றில் விசிறப்பட்டன, அவருடைய ஆலிவ் மரத்தில் இடி விழுந்து எரிந்து போனது. அடுத்தநாள், அரேப்போவும் அவருடைய மகன்களும் என்னென்ன மிச்சம் கிடக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறிய கோயில் வயல்முழுக்க இறைக்கப்பட்டிருந்தது. அந்த நாளின் வேலை முடிந்தவுடன், அரேப்போ சிதறிக்கிடந்த கோயில் கற்களை சேகரித்து திரும்ப அடுக்கினார்.

“தேவையில்லாத வேலை” என்று முணுமுணுத்தபடியே மீண்டும் அந்த கோயிலுக்குள் அந்தக் கடவுள் நுழைந்தது. “ஆனால் என்னால் உனக்கு ஆகக்கூடியது ஒன்று இல்லை”.

“நாம் சமாளிக்கலாம். புயல் தாண்டிவிட்டது. திரும்பக் கட்டுவோம். ஆனால் இன்று படையலுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நாளை இதற்கான அஸ்திவாரத்தை சரி செய்யலாம். சரியா?”

அந்தக் கடவுள் கற்களை ஒருமுறை அசைத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டது.

ஒரு வருடம் ஆனது. அந்தக் கோயிலுக்கு கற்சுவரும், கோதுமைத் தட்டைகளால் ஆன கூரையும் வந்தது. அரேப்போவின் நண்பர்கள் அதைப் பார்த்து மெலிதாய்ச் சிரித்தார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் சில நேரம் பழங்களையும் பூக்களையும் வைத்துப்போனார்கள்.

பிறகொருமுறை வெள்ளாமை பொய்த்தது. கடவுள்கள் தங்கள் கருணையை நிறுத்திவிட்டார்கள். அரேப்போவின் வயலில் கோதுமை மெலிதாய் உடைந்து விழக்கூடியதாய் வளர்ந்தது. மக்கள் கதறியபடி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வெறித்த கண்களோடு வயல்களைப் பார்த்தார்கள். செம்மறி ஆடுகளைப் பறிகொடுத்து அதன் இரத்தத்தை நிலத்தில் தெளித்து பசியோடே உறங்கப் போனார்கள். அரேப்போ கோயிலுக்கு வந்து கோயிலுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். அவருடைய விலா எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. அவர் கைகள் நடுங்கியபடி ஒரு பிரார்த்தனையைச் சொன்னார்.

“உனக்கு இங்கு எதுவும் கிடைக்காது” என்றபடி அந்தக் கடவுள் இருளில் முனகியது. “நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. சொல்லப்போனால் செய்யக் கூடியதே எதுவுமில்லை” நடுங்கியபடி அது “இந்தக் கோயில் உனக்கு இன்னொரு சுமையா?” என்றது.

“நாங்கள்” என்று தொடங்கி அரேப்போ வாக்கியத்தை விழுங்கினார். “ இந்த வருடம் சரியில்லை. நாங்கள் இதனைச் சந்தித்திருக்கிறோம். இப்போதும் சந்திப்போம். என்ன பசியுடன் இருக்கிறோம். அவ்வளவுதான்” என்றார்.

“நாம் ஒருவருக்கொருவர் இருக்கிறோம் தானே? இன்னும் பலர் வேறு கடவுள்களை எல்லாம் வேண்டினார்கள். ஆனால் அவர்கள்கூட காப்பாற்றவில்லையே” என்றபடி பலிபீடத்தில் சில கோதுமைக் கதிர்களை வைத்தார். “நம் ஒப்பந்தம் எனக்குப் போதும் என்றார்”

“இன்னும் மோசமானவை வரும்” என்றபடி அந்தக் கடவுள் கற்களுக்குள் இருந்து உரைத்தது. அவற்றில் இருந்தெல்லாம் நான் உன்னைக் காக்க முடியாது.”

வருடங்கள் உருண்டோடின. அரேப்போ சுருக்கம் விழுந்த தன் கைகளை கோயில் கற்கள் மீது வைப்பார். சில நாட்கள் அங்கு அமர்ந்தபடி கடவுளைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்.

ஒரு சபிக்கப்பட்ட நாளில் செந்நிறத்தில் மிளிரும் கடலைத்தாண்டி போர் வந்தது.

அரேப்போ தள்ளாடியபடி கோயிலுக்குள் வந்தார். அவருடைய கை அவருடைய வயிற்றை மூடியபடி இருந்தது. அந்தப் புனித இடமெங்கும் அவருடைய இரத்தம் சிந்தியது. அவருக்குப் பின்னால் அவருடைய கோதுமை வயல்கள் எரிந்தன. அதில் எலும்புகள் கருகின. தள்ளாடியபடி மண்டியிட்டார். அப்போது அந்தக் கடவுள் அவரைக் காண வெளியே வந்தது.

“என்னால் இவற்றைக் காப்பாற்ற முடியவில்லை” என்று மிக வருத்தத்துடன் சொன்னது. “என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு!” என்று இறைஞ்சியது. மரங்களின் இலைகள் எரிந்து சாம்பல் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. “இத்தனை வருடங்கள் நான் உனக்கு எதையுமே செய்ததில்லை” என்று அரற்றியது.

“ஷ்” என்றபடி அரேப்போ தன் வாயை விரலால் மூடிக்காட்டினார். அவர் இதழ்கள் இரத்த வாடையை அறிந்தன. அவர் பார்வை மங்கியது. தன் நெற்றியை கருவறைக் கற்களின் மீது வைத்தபடி அரேப்போ முனகினார். “சொல்லுங்கள். நீங்கள் எவற்றின் தெய்வம்?”

“நான்…” என்று இழுத்தபடி தெய்வம் அரேப்போவின் தலையைத் தடவிக்கொடுத்து தன் கண்ணை மூடிப் பேசியது.

”நான் உதிர்ந்த இலைகளின் கடவுள். நிலத்தடியில் நெளியும் புழுக்களின் கடவுள். காட்டுக்கும் வயலுக்குமான வரம்பின் கடவுள். பனிப்பொழிவுக்கு முன்பான முதல் உறைதலின் கடவுள். உங்கள் பற்களுக்கிடையே கடிபடும் ஆப்பிள் தோலின் கடவுள்.”

அரேப்போவின் இதழ்கள் புன்னகைத்தன.

“நான் பொருளற்ற, பல சிறிய விஷயங்களின் கடவுள். அழுகிப்போகும் துணுக்குகள் போன்ற, கணநேரத்தில் மறையும் காட்சிகள் போல. காற்றில் ஏற்பட்டு மறையும் ஒரு மாற்றத்தைப் போன்ற பொருட்களின் கடவுள்” என்று முடிக்கையில் அந்தக் கடவுள் விசும்பியது.

“அழகு” தன் இரத்தம் கற்கள் வழியே தரைவரைக்கும் ஒழுக அரேப்போ சொன்னார் ”எல்லாமே! அவை எல்லாமே அழகு”

வயல்கள் எரிந்து அந்தப் புகை சூரியனை மறைக்க, இரத்தப்பசி எடுத்த அந்தப் போர் நடந்தது. வானுலகம் தன் கோரமுகத்தை கட்டவிழ்த்து விட்டது. அரேப்போ என்னும் விவசாயி அந்தக் கோயிலின் கருவறைக் கற்களில் தலை சாய்த்தபடியே தன் கடவுளிடம் போயிருந்தான்.

***

இதன்பின்னர் ciiriianan என்னும் நபர் எழுதியது.

சோரா அந்தக் கோயிலை கூரைகள் உட்பக்கம் விழுந்த நிலையில் எலும்புகளுடன் கண்டடைந்தாள்.

“பாவம்! ஏழ்மையான கடவுள்” கடைசிப் பூசாரியைப் புதைக்கக்கூட யாருமில்லை” என்றாள். பின்னர் வெளியூர்க்காரியான அவளுக்கு “இல்லை இப்படித்தான் இறந்தவர்களுக்கு இங்கு மரியாதை செய்வார்களோ” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அந்தக் கடவுள் ஆழ்ந்த யோசனையில் இருந்து விழித்தது.

“அவன் பெயர் அரேப்போ. அவன் ஒரு விவசாயி” என்றது.

சோரா திடுக்கிட்டாள். அவள் அதற்குமுன் ஒரு தெய்வத்தின் குரலைக் கேட்டதில்லை. “நான் அவருக்கு எப்படி மரியாதை செய்வது?” எண்றாள்.

“என் பலிபீடத்துக்குக் கீழே அவனைப் புதை” என்றது கடவுள்.

“சரி” என்றபடி சோரா மண்வெட்டியை எடுக்கச் சென்றாள்.

அவள் திரும்ப வந்து, மரக்குச்சிகள் மற்றும் உதிர்ந்த இலைகளுக்கு இடையே இருந்து எலும்புகளைச் சேகரிக்கும்போது, அந்தக் கடவுள் அவளிடம் “இரு” என்றது”. அவள் அந்த எலும்புகளை சாயமேற்றாத கம்பளித்துணி ஒன்றில் வைத்திருந்தாள். “இரு” என்று மீண்டும் கூறிவிட்டு “என்னால் உனக்கு எதுவும் செய்ய முடியாது. நான் உபயோகமான எவற்றின் கடவுளும் இல்லை” என்றது.

சோரா பலிபீடத்தைப் பார்த்தவாறு தரையில் அமர்ந்து அந்தக் கடவுள் சொன்னதைக் கேட்கத் துவங்கினாள்.

“புயல் அவன் விளைச்சலைச் சூறையாடிய போது, நான் எதுவும் செய்யவில்லை. வெள்ளாமை பொய்த்து அவன் பசியுடன் இருந்தபோது, என்னால் அவனுக்கு உணவளிக்க முடியவில்லை. போர் வந்தபோது” அதன் குரல் நடுங்கியது.

“போர் வந்தபோது என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. போரிலிருந்து இரத்தம் வழிய என் கைகளில் மரணிப்பதற்காக அவன் என்னிடத்தில் வந்தான்”

சோரா மீண்டும் அந்த எலும்புக் குவியலைப் பார்த்தாள்.

”எனக்கு என்னவோ நீங்கள் மிக உபயோகமான ஒன்றின் கடவுளாக இருந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது”

“என்ன!” என்று அந்த தெய்வம் கேட்டது.

சோரா, அந்த மண்டை ஓட்டை பத்திரமாக அந்தக் கம்பளித் துணியில் எடுத்து வைத்துவிட்டுச் சொன்னாள். “நீங்கள் அரேப்போவின் கடவுளாக இருந்திருக்கிறீர்கள்.”

***

இதன்பின்னர் Stu-pot என்பவர் தொடர்ந்து எழுதியது.

தலைமுறைகள் உருண்டோடின. அந்தக் கிராமம் மீண்டு வந்தது. வீடுகள் மீண்டும் கட்டப்பட்டன, தோட்டங்கள் மீண்டும் பயிரிடப்பட்டன, காயங்கள் ஆறின. மலையில் வசித்த, கற்களோடு பேசிய அந்தக் கிழவனை எல்லோடும் மறந்துவிட்டார்கள் ஆனால் கோயிலுக்கு அவன் பெயர் நிலைத்துவிட்டது.

அந்தக் கோயிலின் கடவுள் பல நாட்களுக்கு முன்னமே அமைதி ஆகிவிட்டதால், பலபேர் அது வெற்றிடம் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தப் பாழடைந்த கோயிலைக் கடக்கும்போதெல்லாம், ஒரு இறந்த நண்பனுக்கான இரங்கல்போல நெஞ்சுக்குள் வலித்தது. அந்தக் கோயிலில் இருந்து வீசும் வெறுமையான குளிர்காற்று, போய்ப்பார்க்கலாம் என்று நினைத்தவர்களையும் விலக்கியது. அந்தக் கோயிலுக்கு அரிதாக வருபவர்கள் விவரமறியாத குழந்தைகள் மட்டுமே. அவர்கள் சுற்றியிருக்கும் பூச்செடியில் இருந்து வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு மலர்களை பலிபீடத்தில் வைத்துவிட்டுப் போவார்கள்.

அந்தக் கடவுள் அமைதியான அதன் கோயிலுக்குள் அமர்ந்து தூரத்துச் சாலையையும் அதில் பயணப்படும் மக்கள், வண்டிகள், குதிரைகள், மரத்தில் இருந்து விழுந்து காலைச்சுற்றும் இலைகள் ஆகியவற்றைப் பார்த்தபடி இருந்தது. எவ்வளவு நாளாயிற்று? இந்த உலகம் அது இல்லாமல் நகர்ந்திருக்கிறது. அதனால் ஆகக்கூடிய உதவி எதுவுமில்லை என்று அதற்குத் தெரியும். நிலங்கள் வெள்ளத்தில் முழுகவும், வெள்ளாமை பொய்க்கவும், வீடுகள் எரிக்கப்படவும், உபயோகமுள்ள கடவுள்களே கைவிட்டார்கள் எனில் இந்த உலகம் மிகவும் மோசமான இடமாக இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டது,

மனிதர்கள் அறிவிலிகள் என்று அதற்குப் புரிந்தது. வரம் தராத, அதிர்ஷ்டம் அருளாத கடவுளிடம் யாரேனும் பிரார்த்தனை செய்வார்களா? எதையுமே எதிர்பார்க்காமல் ஒரு கோயிலைப் பராமரித்து யாரேனும் படையலிடுவார்களா? ஒரு உப்புப் பெறாத கடவுளிடம் அமர்ந்து யாரேனும் தியானம் செய்வார்களா? எதையும் எதிர்பார்க்காமல் யாரென்றே தெரியாத ஒருவரைப் புதைத்துவிட்டுப் போவார்களா? பயனற்ற, வித்தியாசமான அன்பை என்னிடம் கொட்டிப்போயிருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான, முட்டாள்தனமான, நன்றியுள்ள, அதே நேரம் பிழைக்கத்தெரியாத பிறவிகள் இந்த மனிதர்கள்.

அதனால் அது மாலை மங்கும் மஞ்சளை மரத்தில் இருந்து விழும் இலைகளில் தீட்டியது. புழுக்களை மண்ணில் நடனமாடச் செய்தது. காட்டுக்கும் வயலுக்குமான வரம்பை பூச்செடிகளும் சிறிய பெர்ரிப் பழச் செடிகளும் வளரச் செய்தது. பனி பொழியும் குளிர் வருமுன்னே காற்றில் குளிரை ஏற்றி எச்சரித்தது. ஆப்பிள்கள் மொறுமொறுப்பான, கடித்தால் பற்களில் சிக்காத தோலுடன் பழுக்கச் செய்தது. இதனுடன் அதன் கட்டுப்பாட்டில் இருந்த அர்த்தமற்ற அனைத்தையும், தன் இறுதி மூச்சில் தன்னைப் புகழ்ந்த ஒருவனுக்காக அழகாக்கியது.

“வணக்கம்! எளிய அழகான பொருட்களின் கடவுளே” என்று ஒரு பரிச்சயமான குரல் வந்தது.

கண்கள் சுருக்கி உதடுகள் குவித்து அந்தக் கடவுள் “அரேப்போ” என்று முணுமுணுத்தது. நூறாண்டுகள் பேசாததால் அதன் குரல் முரடு தட்டியிருந்தது.

“நான் அர்ப்பணிப்பின், சிறிய அன்புகாட்டும் செய்கைகளின், முறிக்கமுடியாத பிணைப்புகளின் கடவுள்” என்று அந்தக் கடவுளை அமைதிப்படுத்தியது அரேப்போ.

“மிக அருமை அரேப்போ” என்று அந்தக் கடவுள் தன் கண்ணீரினூடே சொன்னது. “எனக்கு உன்னை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது – இவ்வளவு முக்கியமான கடவுளுக்கு நிச்சயம் பெரிய கோயிலொன்று தேவைப்படும். நீ நகரத்துக்குப் போகலாமே. அங்கு பலபேர் உன்னைக் கொண்டாடுவார்கள்”

“இல்லை” என்றது அரேப்போ.

“அப்படியென்றால் இன்னும் தொலைவாக தலைநகரத்துக்குப் போகிறாயா? போகும்வழியில் என்னைப் பார்த்துப் போனமைக்கு நன்றி” என்றது கடவுள்.

“இல்லை! நான் அங்கும் போகப்போவதில்லை” என்று அரேப்போ தலையாட்டி மெல்லச் சிரித்தது.

“இன்னும் தொலைவா? உனக்கு ஆசைகள் அதிகம். ஆனால் நீ நிச்சயம் விரும்பப்படுவாய் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று அந்த மூத்த கடவுள் சொல்லிக் கொண்டிருக்கையில் அரேப்போ இடைமறித்தது.

“நீ அனுமதித்தால் நான் உன்னுடனே இருக்க விரும்புகிறேன்” என்றது அரேப்போ.

மூத்த கடவுளுக்குப் பேச்சில்லை, “நீ ஏன் இங்கிருக்க விரும்புகிறாய்?” என்றது.

ஏனெனில் “ நான் முறிக்கமுடியாத பந்தங்கள், பிரியாத நட்புகளின் கடவுள். மற்றும் நீ அரேப்போவின் கடவுள்” என்றது அரேப்போ.

****

ஹாலாஸ்யன் – ஆசிரியர் தொடர்புக்கு -yes.eye.we.yea@gmail.com

9 COMMENTS

  1. வாழ்வு எங்கெங்கு இருந்தாலென்ன.. சங்கிலி போல மனிதர்கள் அதைப் பிணைக்கிற வித்தையும், சாலெடுத்து உழுதது போல நிலம் கீறி வெளிப்படுகிற கதைகளும் மனித மனங்களின் ஆழத்தில் உறைந்திருக்கும் உன்னதம். ஹலாஸ்யன் இந்தக் கதையை மொழிபெயர்த்திருப்பதன் மூலம் உங்கள் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது.

  2. நாங்கள்” என்று தொடங்கி அரேப்போ வாக்கியத்தை விழுங்கினார். “ இந்த வருடம் சரியில்லை. நாங்கள் இதனைச் சந்தித்திருக்கிறோம். இப்போதும் சந்திப்போம். என்ன பசியுடன் இருக்கிறோம். அவ்வளவுதான்” என்றார்

    நேர்த்தியான வார்த்தைகள் மானுடத்தின் வலி மிகும் தருணம் ஏதுவும் செய்யாத கடவுள் தான் இருக்கின்றன ஏதாவது செய்து கொண்டிருக்கும் உயிர்களுக்கு ❤

  3. மனதை தொட்ட கதை. மிக தெளிவான மொழிபெயர்ப்பு. கதையின் கூடவே மனதும் செல்கிறது. மிக அழகான முடிவு. அருமையான கதை தேர்வு.

  4. மனதை சற்றே இலகுவாக மாற்றியது.. நன்றி சிவா! வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here