Saturday, November 16, 2024
Homesliderஇதான் மச்சான் லைப் !

இதான் மச்சான் லைப் !

மணி எம் கே மணி

பசிக்குது என்றார் ஆரிப்.

தாசன் தலையை அசைத்தார். ஒருமுறை குளத்தில் மூழ்கி எழுந்தார்.

தாசன் உள்ளிட்ட எட்டு பேருக்கும் அதுதான். கொசகொசவென வந்து குழுமும் மீன்களுக்கு நடுவே நீந்திக் கொண்டிருந்தார்கள். மதியம் போலவே இல்லை. மேகங்கள் கூடியிருந்தன. வரப்போகின்ற மழைக்குளிர் குளத்தில் இருந்தது. சுற்றியிருந்த ஒருவிதமான கருமையும், இவர்களைத் தவிர ஒருவரும் இல்லாத சுதந்திரமும் கட்டவிழ்த்து விட்டது போலிருந்தது. மீன்களைப் பிடித்து ஆராய்ந்து மறுபடியும் அவற்றைத் தண்ணீரில் விட்டு ஆட்டம் போட்டார்கள். வருகிறவர்கள் எல்லாம் அள்ளி இறைக்கிற பொரியைத் தின்று அவைகள் கொழுத்திருந்தன. கோவில் திறக்க நேரமிருக்கிறது இன்னும். அதனால் இப்படிதான் நேரத்தைப் போக்கியாக வேண்டும். என்னதான் பசித்தாலும்.
சாலமனும் ஆரிபும் தம்மடிக்க கடையைத் தேடிக்கொண்டு போனார்கள்.

மற்றவர்கள் பாலகனை தொழுது நின்றார்கள். முழுமையான ஒரு அமைதியின் வெளியில் குடிகொண்டு எளிமையாக சிரிக்கிற அழகன் அவன். தொழுகையின் துல்லியத்தில் மனம் கூர்மைப்பட்டு மனம் கனிந்து தன்னை இலேசாக உணருகிற தருணம் அனைவருக்குமே வாய்த்திருக்க வேண்டும். ஆனால் அனைவரும் ஐயப்பன் மாலைகளை சம்பிரதாயமாகக் கழற்றி முடித்து வெளியே வந்து சட்டையை போட்டுக் கொண்டதும் வேகவேகமாக காருக்கு நடந்தார்கள். சாலமன் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான். தாசன் இரண்டு இழுப்புக்கு அப்புறம் அதை ராஜாவிடம் கொடுத்து விட்டார். “ரொம்பப் பசிடா, ஏறுங்க போலாம்!” டிரைவர் நிலைமை உணர்ந்து வேகமாகவே போனார்.

ஓட்டலில் அது ஏறக்கட்டும் நேரமாக இருக்க வேண்டும். எட்டுபேர் என்கிற சபலம், கொஞ்சம் தாமதித்து உள்ளே அனுமதித்தார்கள். நடுத்தர ஓட்டல். ஒருவன் இப்போதுதான் உலை வைக்க ஓடுகிறான் என்பது புரிந்தது. எவ்வளவு தான் துடைத்து மொழுகி கிருமிநாசினி போட்டிருந்தாலும் அதன் வாசத்தை மீறி, உணவுப் பொருட்கள் புழங்குகிற அடையாளம் தான் முன்னின்றது. அது பசியை அதிகமாகக் கிளறியது. பரிமாறுகிறவர்கள் ஒருவரையும் காணோம். ஒருவிதமாக எதையோ தயார் செய்கிறார்கள், அதுதான். அவர்களில் ஓரிருவர் வந்து இலைபோடவே தாமதமாயிற்று. அதைக் கழுவிவிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் யாரிடமும் பேசவில்லை. சகஜமாக இருக்க முடியவில்லை. முதலில் கூட்டுப்பொரியல் வந்தது. பேதமே இல்லாமல் அனைவரும் அதை வாரித்தின்று இலையை காலி செய்தார்கள். மேலும் கேட்டார்கள். அவர்கள் முகச்சுளிப்புடனும், முணுமுணுப்புடனும் பரிமாறியதில் ஒருவன் தப்பாக பேசுவதை தாசன் கேட்டார். அவருக்கு நன்றாக மலையாளம் தெரியும். முதலில் சோறு, அது வந்தது. எல்லோரும் அதேபோல பேசாமல் கொள்ளாமல் தியானம் செய்வது போல சாப்பிட்டார்கள். ஓரளவு பசி தணியும் போது ஓடி ஓடி பரிமாற வேண்டியிருந்த அவர்களுக்குள் ஒரு பரிகாசம் ஓடிக்கொண்டிருந்ததை தாசன் கவனித்தவாறே இருந்தார். சாலமன் பில்லைக் கொடுக்கும்போது தாசன் பணம் ஏதாவது போட்டுக்கொடுக்க வேண்டுமா என்று கேட்கவும் செய்தார்.கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்தவன் எதற்கு என்பது போல கேட்டான் மிகவும் கூர்மையாக.

தாசன் கோணலாகச் சுழிந்தார். “நீங்கள் பரிமாறின மயிரு லட்ஷணத்துக்கு தான்!” என்றார் மலையாளத்தில். அநேகமாக அவன் அந்த மொழியை எதிர்பார்க்கவில்லை. அவன் தங்களுடைய ஆடகளைப் பார்த்துக் கொண்டான். அவர்களுக்குள் ஒரு பின்னடைவு இருந்தது. என்றாலும் கேஷ் ஆள் அடங்கவில்லை. “மரியாதை! அது முக்கியம்! இது உங்க தமிழ்நாடு இல்லை!” என்றான் அவன்.

“அதுதான்! தமிழ்நாட்டான் உங்க சபரிமலைக்கு லட்சம் லட்சமா வருவான். இந்த மாதிரி கோவில் ஊருக்கு கார்லயும் பஸ்லயும் கூட்டம் கூட்டமா வருவான். உங்களுக்கு அவங்க காசு மட்டும் வேணும். மத்தபடி அவங்கள மயிரு மாதிரி நடத்துவீங்க. அதானே?”

அதற்குள் இவர்கள் எல்லாரும் சுதாரித்துக்கொண்டு விட்டார்கள். ராஜா “ங்கோத்தா டேய். தமிழன்னா உனக்கு இளக்காரமா? நாங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா, அறுத்து போட்டு போயிகினே இருப்போம்!” என்றான். அதன் கூடவே இதே தொனியில் பலரும் பலதும் சொல்லி விட்டார்கள். அவர்கள் தரப்பில் கூட்டம் கூடிவிட்டது. வாக்குவாதங்கள் முற்ற முற்ற அது பெருகிக்கொண்டேப் போயிற்று. பக்கத்து கடைக்காரர்கள் அனைவரும் ஓட்டலுக்குள் ஏறி விட்டார்கள். சாலையில் இருந்த நான்கு போலீசாரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். சண்டை எங்கிருந்து தொடங்கியது என்பதே மறந்து போய், அது தமிழன் மலையாளி விரோதத்தில் வசைகளுடன் முறுகி ஓரிரு ஆட்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு விட்டார்கள். மேலே சண்டை போட முடியாது என்று வந்து விட்டது. எட்டு பேரும் முற்றிலுமாக மலையாளிகளால் சூழப்பட்டு நின்றார்கள். பலரும் அவர்களை அடிக்க முயன்றாலும், பலரும் அதைத் தடுத்துக் கொண்டிருக்கவும் செய்தார்கள். யாரோ ஒரு சகாவு வந்து இதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றார்கள். சிகரெட்டு பிடிக்க அனுமதிக்கவில்லை. குடிகாரன் ஒருவன் ஒரு தடியைக் கொண்டு வந்து வீசியவாறு முந்திவந்து விழ, அது பிரகாஷின் நெற்றியில் பட்டு ரத்தம் துளிர்க்க, மேலும் ஆவேசம் உண்டாகி தள்ளுமுள்ளு ஆகி விபரீதத்தை நெருங்கிய போது சகா வந்துவிட்டார் என்றார்கள்.
வந்தவர் கிரிவாசன்.

“தாஸ் அண்ணா” என்று ஊடுருவிப் பார்த்தவாறே வந்தவர் முதலில் அரிப்பை அணைத்துக் கொண்டு அவனுடனே முன்னுக்கு நகர்ந்து தாசனைப் பார்த்தார். தாசனோடு இருப்பவர்களில் பலரையும் அவருக்குத் தெரியும். எதிர்தரப்பு ஆட்களையெல்லாம் பார்த்தார். “என்னா.. தாசண்ணா, இதெல்லாம்? இங்க எப்டி? மலைக்கு வந்தீங்களா?” அப்படியே அவர்களிடம் “எல்லாரும் நம்ம ஆளுங்க!” என்றார். கூட்டம் பலவேறு அசட்டுச் சிரிப்புக்களுடன் விலகி, தள்ளி நின்றது. வேடிக்கை பார்த்தது. அவர் தாசனையும் மற்றவர்களையும் குசலம் விசாரிக்க ஆரம்பித்தார். அப்படியே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து “எல்லாரையும் சாதாரணமா நெனைக்காதீங்க! அத்தன பேரும் கில்லாடிங்க!” என்றார் பெருமிதத்துடன். இது எல்லாமும் நடக்கிற போதிலும் அவருடைய கரம் ஆரிபின் தோளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கவில்லை.

“தாஸ் அண்ணா. புரோக்ராம் என்ன?”

குற்றாலம் போற வழி. ரெண்டு மூனு நாள் இருந்து குடிக்கறதா பிளான். பசி தாங்காம இங்க சாப்பிட வந்ததுக்கு சண்ட!”

“குற்றாலம் தானே? நாளைக்கு போலாம்! இன்னைக்கு இப்ப நம்ம வீட்டுக்குப் போவோம். நைட்டு ஸ்டே. நல்லா குடிங்க. நல்ல சாப்பாடு போடறேன். நாளைக்கு காலைல எழுந்து, நீங்க உங்க வழிக்கு போலாம்! ரைட்டோ?”
“ரைட்டு!”

ஓட்டல்காரர்கள், அக்கம் பக்கத்தவர்கள், போலீசார் என்று அனைவருமாக கும்பல் கூடி அமர்ந்து பரஸ்பரம் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டு சாந்தி சமாதானம் உருவாவதன் பொருட்டு காப்பி, பிஸ்கெட்டுகள் சாப்பிட்டார்கள். சிகரெட்டு பீடி புகைத்தார்கள். கைகுலுக்கிக் கொண்டு, அணைத்துக் கொண்டு கிரிக்கு பின்னால் நின்றுகொண்டு விடைபெற்றார்கள். கிரி போன் செய்து சொல்லியிருக்கவே, விருந்தினர்களை வரவேற்க ஒரு குடும்பம், மற்றும் கூட்டம் அவர் வீட்டில் காத்திருந்தது. கிரியின் அப்பா, அம்மா, வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகள், மனைவி வல்சலா என்று அனைவருமே தென்னந்தோப்பின் அவுட்-டஹவுசில் இவர்கள் குடிக்க விதவிதமான டிஷ்களைக் கொண்டு வந்து கொடுத்தவாறே இருந்தார்கள். கிரியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

அவனுக்கு எப்போதுமே குடிப்பழக்கம் இருந்ததில்லை. ஆரிப்பிற்கு மாட்டிறைச்சி கைமா ரொம்பப் பிடிக்கும் என்று கவனம் வைத்திருந்து அவன் கையாலே அதை செய்து எடுத்து வந்தான். அதைப்போலவே சரக்கு வாங்கவும் அவனே சென்று விலையுயர்ந்த இறக்குமதி பாட்டில்களை அள்ளிக்கொண்டு வந்தான். இருட்டுகிற நேரத்தில், அந்தக் குளிர் பிராந்திய மழை, குடிக்கிற மூடுக்கு மாண்பு சேர்த்தது. ஊரின் உட்புறமாக, வெள்ளம் நிறைந்த வயல்கள் தூரமாக இருந்து மின்னுகிற அழகு தெரிகிற அந்தத் தோப்பையும், எல்லோருக்கும் பெக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிற கிரியையும் தாசன் பார்த்தவாறே இருந்தார். அவருடைய கண்களை ஏறிட வேண்டி வரும்போது கிரி செய்த புன்னகையில் ஒரு துளியேனும் கள்ளமில்லை. மிகவும் வெளிப்படையாக இருந்தார். அவருடைய குடும்பம் அவரை உள்ளங்கையில் வைத்துப் போற்றியது சந்தோஷமான ஒரு காரியம். ஒரு கோணத்தில் தாசன் சற்றே படபடப்பில் தானிருந்தார். சென்னையில் கிரி ரவுடியாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய பிறகு குறைந்தது மூன்று பேரையாவது கொன்றிருக்கிறான் என்பதை எப்படி நினைவு கொள்ளாமலிருக்க முடியும்?

கிரியின் அம்மா மறுமணம் செய்து கொண்டபோது அவனுடைய சித்தப்பா அவனைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். அப்போது அவனுக்கு வயது பதிமூன்றோ, பதினான்கோ? அரசுப்பள்ளி அவனுக்குச் சேரவில்லை. ஒட்டேரியின் உள்ளே இருந்த குறுக்குச்சந்தில் இருந்த டீக்கடையில் அவன் எச்சில் கிளாஸ்களைக் கழுவிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்துக்கு அப்புறம் சித்தப்பா தன்னுடைய வீட்டில் தன்னுடைய மனைவியுடன் அப்பளத் தொழிலைப் பார்க்க, இவன் தனியாளாகவே கடையைப் பார்த்துக் கொண்டான். என்ன, அது அந்தக் குடும்பத்தின் வாயிற்கும் வயிற்றிக்கும் மட்டும் வருகிற சோம்பலான வணிகம். வாழ்க்கைக்கு ஒரு பொருளும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்து விடுவதால் நுரைக்கிற அலுப்பில் இருக்கும்போது அங்கே அந்த சம்பவம் நடந்தது. மெயின் ரோடு பிளாட்பார வியாபாரிகளிடம் பண வசூல் தொடர்பான ஒரு விரோதத்தில் மறுகரை ஆட்கள் ஆயுதங்களுடன் ஏரியாவிற்குள் நுழைய, பைபிள் படிக்காசு தலைமையில் குறுக்கு சந்து பூராவும் வீட்டு ஓடுகளின் மடிப்பில், அடி பம்புகளின் இடுக்குகளில், குப்பைத்தொட்டிகளின் கல்லு மறைவில் இருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ஓடி அவர்களை நேரிட்டு சண்டை செய்தார்கள். பின்னடைந்தும் முன்னேறியும் அந்தச் சண்டை நீடித்தது மிகக் குறைந்த நேரம் தான். போலீசு வந்து விடும் என்பதால் அத்தனை பேரும் ஓடித்தான் ஆக வேண்டும். படிக்காசு மண்டையை யாரோ பிளந்து விட்டிருந்தார்கள். அவன் திரும்பி தனது வீட்டுக்கு ஓடுகிற வழியில் டீக்கடைக்குள் ஏறி நின்று ரத்தத்தைக் கழுவினான்.

“ஒத்தா என்னா பாக்கற” என்று கிரியை நோக்கி கத்தியைத் தூக்கினது தான் தாமதம், கிரி காய்ந்து கொண்டிருந்த டீத்தூள் குடுவையை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினான். அப்புறம் நடந்தது எதுவும் அவன் கையில் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் அவனை சட்டமன்ற உறுப்பினரிடம் அறிமுகம் செய்ய கிரி பல காரியங்கள் செய்தான். வசூல்கள் அவனை முன் வைத்து நடந்தன. அவர் சொல்லி பாபர் மசூதி இடிப்பு நாளில் ஒரு ஜவுளிக்கடையின் பிரம்மாண்ட கண்ணாடிகளை உடைத்ததில் நிறைய பணம் கிடைத்தது. பலரையும் ஒடுக்கி வைத்துவிட்டு சிற்றப்பாவின் குடும்பத்தை பணம் கொடுத்து அவர்களின் பிள்ளை இருந்த மும்பைக்கு அனுப்பிவிட்ட பிறகு ஆட்டமாக ஆடினான். அதில் அவன் செய்த மூன்று கொலைகளும் அடங்கும். கண்களில் திண்மை அமர்ந்து, பெரிய மனிதர்களிடம் அவர்களுடைய முகம் பார்த்து பேசுகிற சாதுர்யங்கள் எல்லாம் படிந்து, அப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஈ ஓட்டிக் கொண்டிருந்த காங்கிரசில் அவர்கள் தருவதாகச் சொன்ன பதவிக்காக காத்துக் கொண்டிருந்த போது, கேரளாவில் இருந்த, இவனே மறந்து போயிருந்த அவனுடைய பால்யசகி வல்சலா ஒருமுறை ஆப்செட் வர்ணத்தில், மகாபலி ஓவியமெல்லாம் இருந்த வாழ்த்து அட்டையை அனுப்பி, பக்கவாட்டில் ஒரு ஓரமாக நீ நம் ஊருக்கெல்லாம் வர மாட்டாயா என்று கேட்டிருக்கிறாள். அப்படி அது கையில் கிடைத்தது பாருங்கள் அதுதான் ட்விஸ்ட். அதைப் பார்த்தவாறே மூன்று நாட்கள் அலைந்து திரிந்து, எதற்காகவோ ஒரு கனவில் இருந்து கண் விழித்து அழுதிருக்கிறான்.

இத்தனைக்கும் அவன் அவ்வளவு முக்கியமான சம்பவங்கள் எதையும் கனவில் பார்த்திருக்கவில்லை. புகைவண்டிகள் ஓடியவாறே இருந்திருக்கின்றன. மறுபடியும், மறுபடியும். திரும்பத் திரும்ப. மறுநாள் நிஜத்தில் வண்டி ஏறி விட்டான். அதோடு திரும்பவில்லை. இந்தக் கதைகளை எல்லாம் அடிமுதல் முடிவரை தெரிந்த ஒரு ஆள் தாசன் தான். மற்றபடி ஆரிப்புக்கும் வேறு கொஞ்சமெல்லாம் தெரியும். அன்று இரவு தூங்கி காலையில் எல்லோரும் குற்றாலத்துக்கு கிளம்பின போது, கிரி ஆரிப்பை முத்தமிட்டு வழியனுப்பினான். சற்று தூரம் சென்று விட்ட பிறகு அவன் திரும்பிப் பார்த்தபோது கிரியும் அவனது குடும்பமும் இன்னமும் நின்று கையசைத்துக் கொண்டிருந்தார்கள். ஆரிப்பும் தாசனும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்கள்.

சொன்ன மாதிரியே குற்றாலத்தில் இருந்து அருவிகளில் குளித்தவாறு தண்ணி போடுவது நடக்காமல் இருக்குமா?.

அங்கேயிருந்து கிளம்புகிற அன்று அதிகாலை நேரத்தில் கிரி அங்கே வந்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்.

“போயிட்டு வா மச்சான்” என்றார் ஆரிப்பிடம்.

ஒரு நேரத்தில் ஒரு கல்லூரி வாத்தியின் முகத்தை உடைப்பது சம்மந்தமாக ஒரு குழுவிடம் கிரிக்கு தொடர்பு ஏற்பட்டது. எல்லாமே பெத்த கைகள். ஒருவன் கர்னாடக முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆப்ரிக்காவில் சாராயத்தொழில். ஜவுளித் தொழிலில் கொட்டை போட்ட குடும்பங்களை சேர்ந்த இருவர். இன்னும் இருவர் இப்போது தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களாக இருக்கிறார்கள். இப்படி அவர்களுடைய வட்டத்தை வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இரவில் அவர்கள் குடிப்பதற்கோ, பெண்களை பொட்டி போடுவதற்கோ சுற்றும்போது கிரியை தங்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். குடிக்ககாத, பெண்களை ஏறிட்டுப் பார்க்காத கிரிக்கு அவர்களுடைய ஆட்டம் சரியாக செரிக்க மறுத்தது. அவர்கள் குடிமுற்றி இவனிடம் செய்யச் சொல்கிற காரியங்களை முறைப்புடன் மறுத்தவாறு வந்தான். அவர்கள் அதை நீடித்துக் கொண்டு அதில் இருந்து ஒரு கிண்டலை இழுத்துக் கொண்டு இவனை ஒரு ஜோக்கர் போல நகைச்சுவை கொண்டாடினர். முக்கியமாக அக்கூட்டத்தில் ஒருவனாக இருந்த ஆரிப் இவனைக் கிண்டல் செய்து அவர்களைச் சிரிக்க வைக்க அரும்பாடுபட்டான். உதாரணம், நான் முதுமலைக் காட்டில் ஒருமுறை புலியைப் பார்த்திருக்கிறேன் என்கிறான் கிரி. கொட்டை எடுத்த புளியா, கொட்டை எடுக்காத புளியா? ஹா ஹா ஹா ஹா . அவனுடன் சேர்ந்து அனைவரும் ஹா ஹா ஹா ஹா. ஆரிப்பிடம் கிரி பலமுறை சொல்லிப் பார்த்திருக்கிறான். அவன் இவனை சட்டை செய்யவில்லை. ஒருநாள் தூக்கியாயிற்று. பூந்தமல்லி தாண்டி ஒரு ஊரில், ஒரு அட்டை கம்பனி குடோனுக்குள் எல்லா துணியையும் அவுக்க வைத்து தன்னுடைய ஆட்களுடன் ஆரிப்பை கட்டிப் போட்டான் கிரி. மிக எளிமையாக இதை மட்டும்தான் கேட்டான். மச்சான், நீயே ஒரு எச்சக்குடி. உனக்கு இந்த நக்கல் தேவையா? அதற்கு அப்புறம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முதலில் கால் விரல்கள் அனைத்தையும் கல்லு வைத்து நசுக்கியிருக்கிறான். இரண்டு நாட்கள் வலி தாங்காமல் அவன் கதறி முடித்த பிறகு கை விரல்கள் நசுக்கப்பட்டன. மலம் சாப்பிட வைத்திருக்கிறார்கள். அவனது குறியில் சிகரெட்டால் சுட்டு அந்தப் புண்ணில் அனைவரும் மூத்திரம் பெய்தவாறு இருந்திருக்கிறார்கள். கண்களைக் கூட திறக்க முடியாமல் அவன் போதமிழந்து போனதற்கு அப்பால் காயங்கள் சீழ் வைத்து ஒழுகும்போது ஒரு பையன் வந்து சிகிச்சையளிக்கத் துவங்கி தொடர்ந்து ஊட்டச்சத்துள்ள திரவ ஆகாரங்களைக் கொடுத்தார்கள். அந்தக் காரியங்கள் யாவுமே ஒரு ஆன்மீக செயற்பாடு போல இருந்தது என்றான் ஆரிப். எனக்கு மேல பாத்தா வானம், கீழ பூமி. இத நீ யாரிடமாவது சொன்னால், அந்தப் பயல்களின் சபைக்கு நீ வந்தால் முதலில் நான் உன் அம்மா அப்பாவைக் கொல்லுவேன், பின்னர் உனது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கொல்லுவேன் என்று சொல்லிய பின்னர் அவனை விடுவித்திருக்கிறான் கிரி. மேலும் ஒன்றை சொன்னான், அது விசித்திரம். “எனக்கு அல்லான்னா ரொம்பப் புடிக்கும். பசிக்கும் போதெல்லாம், தனியா இருந்து அழும்போதெல்லாம், அவமானப்படும் போதெல்லாம் அவரையும் தொழுதுகிட்டே இருந்திருக்கேன். அனாத நாய்களுக்கு இந்த சாமி, அந்த சாமி இருக்கா? அவுரும் என் கொற கேட்டார். நீ அவர கும்பிடறவன் ஆச்சே? அதுக்காகத்தான் உன்ன உயிரோட விடறேன் ! “

கிரி பலமுறையும் ஆரிப்பை தழுவிக் கொண்டதற்கு இந்தக் குற்றவுணர்வு தான் காரணம்.

எல்லோரும் சென்னை வந்து சேர்ந்து வழக்கமான சுழலில் இறங்கிக் கொண்டு அவரவர், அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒருநாள் ஆரிப் தாசனுக்கு போன் செய்தார்.

“என்னய்யா?”

“வேற என்ன? கிரி ஞாபகம்!”

“ம்.”

“அன்னைக்கு நைட்டு எல்லாரும் தூங்கிட்டு இருந்தமா? தட்டி எழுப்பி வயல் பக்கம் கூட்டிட்டுப் போனான். மறுபடியும் செதைக்கப் போறானோன்னு கூட பயம் தட்டிருச்சு. நான் மூனு பேர கொன்னுருக்கேன். அது என் தொழில். எனக்கும் செத்தவனுக்கும் ஒரு சம்மந்தமும் கெடையாது. ஆனா உன்னோட நெனைப்பு வர்றப்ப எல்லாம் ஏன் சின்னப் பொண்ணு உள்ளங்கைல ஏன் மொகத்த பொதைச்சுப்பேன்னு சொன்னான். அப்டியே கால்ல விழுந்து அழ்தான் தெரியுமா? நானும் அழ்தேன். ”

வெகுநேரம் இருவரும் பேச முடியாமல் தத்தம் நினைப்பில் இருந்தார்கள்.

அப்புறமும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஆரிப் ஒன்றை தான் சொன்னார். அது இந்தக் கதையின் தலைப்பு.

***

மணி எம் கே மணி
mkmani1964@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular