இன்றும் கூட இப்படியாய்..
தொடுவானத் தொலைவெனினும்
தொட்டிடலாம் என்றெண்ணி
காத்திருந்தும் இன்றுவரை
கையெட்டாக் கலக்கத்தில்
கடலில் மூழ்குகின்ற
கடைசிக் கணச் சூரியனாய்
கண்கள்
விடைபெறுமந்தக் கண
வேளையிலும் எற்றியெற்றி
அடிக்கின்ற அலைகளாய்
அவள் நினைவு, மூச்சடைத்து
வெடித்த நெஞ்சிருந்து
விசிறுண்ட குருதியின்
படிவாய் ஆங்காங்கே
பரவி முகிற் தசைகள்
வாழ்ந்திருந்த காதலின்
வழித் தடமாயும் தான்,
நேத்திரத்துள் நிழலாய்
நினைவினுரு கரைகையிலே
போர்த்துறங்கிப் போயிற்று அந்தி
சோர்த்த படி
வெறித்த என் மனம் போல்
வீழ்கிறது இன்றிரவு..
எதுவுமற்ற காலை..
எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது
கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது
உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன
கொடுத்து வைத்தவர்கள்
அமரர்,மாவீரரென ஆக
ஊழ்வினை முடியாதோர்
உழல உயிர் பிழைத்தது
அப்போது தான் தெரியவந்தது
குண்டுகளை வானமன்று
குடையாகப் பிடித்திருந்தும்
தன்மான வாழ்வின்
தன்னிறைவில் இருந்ததனை
எப்படித்தான் நாம் மறந்து போனோம்?
இப்போதில்
கழுத்தை நெரித்த கவட்டுக்குள்
கன்னம் தேய்த்தல் தான்
இராஜதந்திரமெனும்
பொரிமாவை மெச்சும்
பொக்கை வாய்ச்சியின் காலம்
பாத்தீனியமாய் எம்முன்னே
படர்கிறது
மறதியும் காலமும்
மனுச வழிக்காவி தான்
அதற்காக
அறணையாய் எப்படி ஆனோம் நாம்?
வீங்கிச் சிவந்த கண்ணும்
வீறிட்டழுத வாயும்
ஏங்கிய மனமுமாய் நாளை
எழுந்து நாம் பார்க்கும் போது
தேங்கியிருக்குமோ எம்
தீராத கனவு கொஞ்சம்?, இல்லை
ஓங்கி அரசதையும் மேவி
உயர வளர்ந்திருக்கு மோடா?
காலத் தூரிகை
ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல
உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்
எழுந்துவரும் என்னுடைய
ஏக்கப் பெருமூச்சை
இழுத்தெறிந்தாள் கடல் மேலே!
ஏதோ சில வெண்கோடாய்
இதன் படிமம், அப்போதே
ஆவியாய் கடல் கொஞ்சம்
அசைந்தெழுந்து வான் முட்ட
காவியத்தின் அதியுச்சக்
கட்டம் போல் விழியிருந்து
அஞ்சனத்தை எடுத்து
அப்பி விட்டாள் முகில்மேலே
பஞ்சு வண்ண முகில்
பாரமாகிக் கருக்கட்டி
பன்னீர்க் குடமுடைந்து
பளபளக்கும் துளிகளெந்தன்
கண்ணீரோடு சேர்ந்தென்
கன்னத்தில் உருளுகையில்
ஒவ்வொரு துளிகளிலும்
ஊரும், உறவுகளும்
எவ்வளவு இயல்பாக
என் முன்னே!, உயிரென்னை
கட்டி அணைத்துக்
கை இறுகப் பற்றியது
விட்டுன்னைச் செல்லேனென
விம்மியது, பூவுலகின்
காலக் கரைப்பானிந்தக்
களிமழைதான் காணென்று
கண்ணைத் துடைத்தென்னைக்
கட்டியது, காதோரம்
மழையன் பாடல்கள்
மண்ணீர மணத்தோடு
அளைந்தென்னைச் செல்கிறது
அள்ளி..
அனுக்கிரகம்..
அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?
வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!
வீணையை வானம்பாடி
மீட்டினால் எழுந்துவரும்
கானந்தான் ஏதுமுந்தன்
காதுகளிற் கேட்கிறதோ!
இதழாற் காதுமடல்
இழுத்துக் கடித்தபடி
பிடரிக்குள் விரலூரும்
பெருஞ்சுகத்தின் கிறுக்கத்தில்
கண்ணிருட்டிப் போவது போல்
காய்கின்ற அந்தியிலே
ஊறுகின்ற நினைவுகள் தான்
உனைக்கரைத்து விட்டதுவா!
கடற்தொடுப்பின் கரையிலுள்ள
கற்தூணில் மெல்லமெல்ல
உடற்பாரம் முதுகினிலே
ஊன்றி, தேய்த்தபடி
குந்திவிட்டாய் வினாக்குறியாய்
கூனி, கொதித்தெரியும்
எந்த வலியெனினும்
இடியாமல் அதன் சுவையை
அனுபவித்துச் சுகிக்கின்ற
அனுக்கிரகம் உனக்குளது
தனித்துப் போனாயெனும்
தடுமாற்றம் ஏதுமில்லை
யாருமற்ற கடற்கரையும்
அரையிருளும்,குளிர்காற்றும்
தூரத்தில் எங்கிருந்தோ
துமிக்கின்ற ஓரிசையும்
தாழ்ந்துயர்ந்து மிதந்து செலும்
தனித்தனிப் பறவைகளும்
வாழ்வுக்குப் போதாதா
வழி நெடுக, கை நிறைய
கட்டியணை முழங்காலை
கண் கலங்கும், பிறகென்ன
அழகான தனிமையடா
அப்படியே செத்து விடு..