- ம.நவீன்
கொட்டகைக்கு அருகில் நிழலசைவு தெரிந்தவுடன் முத்தண்ணன் திடுக்கிட்டு எழுந்தான். உச்சையின் நெடுநேர கனைப்பு கனவின் தொலைதூரத்தில் கேட்பதுபோல இருந்ததால் அயர்ந்துவிட்டிருந்தான். சமீப காலமாக அவன் கனவுகளில் மனிதர்களே வருவதில்லை. சிறு தீப்பொறி கனன்று கம்முவது தெரிந்தது. கண்களை கசக்கிப்பார்த்தான். நின்றிருக்கும் மனிதரின் தலைக்கு மேல் தொப்பியின் நிழல்வடிவம். துரைதான் என்று தெரிந்தவுடன் பயம் அதிகரித்தது. ஏதும் தவறு செய்துவிட்டோமா என மனதில் ஒருதரம் ஓட்டிப்பார்த்தான். மாலையில் கோதுமை தவிட்டை தின்றுவிட்டு பீட்ரூட்டையும் அதுதான் ஆசையாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டது. அதற்கு பீட்ரூட் என்றால் கொள்ளை பிரியம். அருகம்புல்லை நீட்டினால் முகத்தைத் திருப்பிக்கொள்ளும். சீமை குதிரையென்ற திமிர். நோய்த்தடுப்புக்கென அவ்வப்போது தவிட்டுடன் கலந்து கொடுத்துவிடுவான். இன்று அப்படி எதுவும் செய்யவில்லை. அதன் மகிழ்ச்சியை உறுதி செய்த பின்னரே படுக்கச்சென்றான்.
கொட்டகைக்கு ஓடினான். வாயைக் கொப்பளிக்காமல் அருகில் சென்றால் துரைக்கு கோபம் வரும். பதற்றத்தில் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பீளையை அகற்றியபடி துரையை நெருங்கினான். எப்போதும் முகத்தைக் காட்டும் துரை அன்று ஒன்றும் சொல்லவில்லை. கடந்த இருவாரமாகவே அவர் நிரைகளுக்கோ அலுவலகத்திற்கோ செல்லாமல் பங்களாவுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். அவனுக்கு துரை முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. இரண்டாவது சிகரெட்டைப் புகைக்க பொறிப்பெட்டியைச் சொடுக்கியபோது அவரது மீசையும் தாடியும் செம்பு நிறத்தில் மின்னுவதைப் பார்த்தான். அவருக்கு மீசை தாடியெல்லாம் முளைக்காது என்றே அத்தனை காலம் நம்பியிருந்தான். நெருப்பைப் பார்த்ததும் உச்சை கொஞ்சம் பின்வாங்கி தலையை உலுக்கியது. அருகில் சென்று அதன் முகத்தை வெகுநேரம் தடவியவர் ‘பிளேக்கி’ என அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். துரை அழுகிறார் என்று தெரிந்ததும் அவன் விதிர்த்துப் போனான்.
முத்தண்ணன் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் நாள் “ஏலேய் பிலாக்கி. ஞ்ச வாடே” என கொஞ்சம் மல்லுக்கட்டி இழுத்தபோது, துரை பூட்ஸ் காலால் அவன் இடுப்பில் மிதித்தார்.
“குதிரய அதோடு பேர சொல்லி கூப்புடாம வேற எப்புடி ஐயரே கூப்புடுறது”
ஐயரிடம்தான் அவனால் எதையும் கேட்க முடியும். துரையின் காரியதரிசி. பங்களாவில் துரை இருந்தால் படுக்கையறை, உணவு அறையைத் தவிர பெரும்பாலும் அவருடனேயே சுற்றிக்கொண்டிருப்பார். பங்களாவை ஒட்டி இருந்த சிறிய கல்வீட்டில் வசித்து வந்தார். மனைவி குழந்தைகள் ஊரில் இருந்தார்கள். எவ்வளவு வேலையாக இருந்தாலும் சொந்தமாகவே சமைத்துக்கொள்வார். துரையின் சமையலையோ அவர் சமையல்காரரையோ வீட்டுப்பக்கம் சேர்க்க மாட்டார்.
“நீ சார்ன்னு மரியாதையா கூப்ட்ருந்தியானா அவர் உன்னண்ட பவ்யமா நடந்துண்டுருப்பார்” இடுப்பு வலியைவிட ஐயரின் கேலி எரிச்சலாக இருந்தது. குதிரையுடன் நன்றாகப் பழகிய பிறகு அதனை ஏவி ஐயரின் குண்டியில் உதைவிட வேண்டுமென நினைத்துக்கொண்டான்.
வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டே “உச்சைஸ்ரவம்னா தெரியுமாடா?” என்றார்.
அதுவும் ஏதோ கேலி சொல்போல இருந்ததால் அவன் ஒன்றும் சொல்லாமல் முறைத்தான்.
“இந்திரனோட குதிரை”
“அது வெள்ளையாமுல்ல இருக்கும்”
“கெட்டிதான். இதெல்லாம் தெரிஞ்சு வச்சுண்டிருக்கே. உச்சைஸ்ரவத்துக்கு ஏழு தலை. குதிரைக்கெல்லாம் அதுதான் தேவன் தெரியுமோ? நாலு காலையும் ரக்கையா விரிச்சுண்டு வானத்திலே பறக்கும்”
“பின்ன… இந்திரன் வானத்துல இருந்தா பறக்கத்தானே வேணும். தரையில அதுக்கென்ன வேல”
“வார்த்தைக்கு வார்த்த பதில் பேசாதடா அதிகப்பிரசங்கி… காஷிப முனிவர்னு ஒருத்தர். சகலமும் அறிஞ்சவர், மஹா புருஷர். அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி விநதை. இன்னொருத்தி கத்துரு. ரெண்டு பொம்மனாட்டிகளோட ஒன்னா குடித்தனம் பண்ணனும்னா சாத்தியப்படுமோ? சதா சண்டதான். ஒருநாள் அவா ரெண்டு பேரும் வானத்தில பறக்கிற உச்சைஸ்ரவத்த பாத்துட்டா. விநதை அது வெள்ளைக் குதிரைங்கிறா. கத்துரு கருப்புங்கிறா. வாக்குவாதம் நீண்டுண்டே போறது…”
“கோயில் கோபுரத்துலதான் செலயாவே இருக்குமே ஐயரே. அதுல என்ன போட்டி?”
“குறுக்கப் பேசாதேன்னேன்னோ. காஷிபர் வாழ்ந்தது உங்க தாத்தா காலத்திலேன்னு நெனக்கறாயாடா மண்டு. அப்போ இந்திரனுக்கு சிலையெல்லாம் கிடையாது. இது பாரதக் கதை தொடங்கறதுக்கு மின்னாலே நடந்த சம்பவம்டா. கேளு. வாதம் முத்திடுத்து. யார் சொல்றது சரின்னு தீர்ப்புச் சொல்ல வேண்டிய சங்கடம் காஷிபருக்கு. அவர் பறக்கிற குதிரையைப் பார்க்க வெளில வர்றார். கத்துருவுக்கு ஜனிச்சதெல்லாம் கருநாகமோன்னோ… அவ என்ன பண்றான்னா, அந்த க்ஷணமே, தன் கொழந்தேள அனுப்பி குதிரையோட வாலைச் சுத்தி மறைச்சுக்கச் சொல்றா. குதிரையோட வால் கறுப்பாயிடுத்து. வால் கறுப்புங்கிறதால, குதிரை கறுப்புன்னு தீர்ப்பாயிடுத்து. தோத்துப்போன விநதை கத்துருவுக்கு அடிமையாயிட்டா…”
“கத நல்லா இருக்கு. ஆனா இந்திரனோட குதிர வெள்ளதானே”
“அது இங்க முக்கியமில்லைடா.” என்றவரின் குரல் தாழ்ந்தது. “நம்ம பிளாக்கியும் ஸர்ப்பம் சுத்தின குதிரைதாண்டா. அதனாலதாண்டா அது வந்ததுமே நோக்கு உதை விழுந்திருக்கு”
“என்ன ஐயரே சொல்றீரு?”அவனுக்கு படபடப்பாக வந்தது. அவனுக்குப் பாம்பென்றாலே பயம்.
“நம்புடா. அது வந்து இறங்கின க்ஷணமே கவனிச்சுட்டேன். கருநாகம்போல அதோட தேஹம் என்னமா ஜொலிக்கறதுன்னு பாத்தியோ… “
“ஆமாங்க ஐயரே.” பின்னர் கொஞ்ச நேரம் யோசித்து “ஆனா அதானே பாக்க ஒரு இதுவா இருக்கு” என்றான்.
“ஸர்ப்பம் சுத்தினா அப்படித்தான்டா இருக்கும். அது வந்த நேரம் நம்ம தோட்டத்துக்கு கஷ்டகாலம் ஆரம்பமாயிடுத்து தெரியுமோ. அதை வளர்க்கிறவனுக்கும் கேடுகாலம்டா. அதுக்குத்தான்டா அப்பவே ஒன்ன ஓடிப்போயிடுன்னு ஜாடை காட்டினேன். உன் மரமண்டைக்குப் புரியல்லை…”
“ஏன் ஐயரே அப்படி சொல்றீங்க” ஐயர் நிரம்ப கற்றவர் என கேள்விப்பட்டிருந்ததால் அவனால் மறுத்துப்பேச முடியவில்லை.
“குதிரைக்கு சுழி இருக்குடா. என் தாத்தா அஸ்வசாஸ்திரம் படிச்சவர். அந்தக் காலத்தில குதிரை வாங்கிறதுன்னா ராஜா அவரண்டதான் யோஜனை கேப்பார். சுழிங்கிறது உனக்கும் எனக்கும் இருக்கிற கைரேக போலத்தான்டா. எல்லா சுழியும் அமையணும்னு அவசியமில்ல. நெத்திப்பொட்டில ஸ்தான சுழியும், வலப்பக்கம் குபேரமேட்டு சுழியும் முக்கியம். அதற்கப்புறம் உதடு, அடிவயிறுன்னு ஒன்பது சுழியாவது இருக்கணும். நேக்கும் கேள்வி ஞானம்தான்.”
“நம்ம குதுரைக்கு?”
மீண்டும் குரலைத் தாழ்த்தி “அது வயிற்றோரப்பகுதியில ஒரு சுழி இருக்கு. பார்த்துட்டேன். ஊருக்கு ஆகாது”
“தொரைக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
“அவருண்டயா… குதிரையோட அழகுல மயங்கிப்போய் நிக்கறார். ஸர்ப்பத்தோட ஜொலிப்புக்கு மயங்காதவா யாரு. அது கோடகம். அதோட முக்கோண கழுத்துக்கு அப்படி ஒரு வசீகரம். வெவரம் தெரியாவனுக்கு உடம்புல எது மயக்கறதுன்னே புரியாது.”
அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு குதிரையால் ஊரே அழியும் என்பதை ஏற்கவே முடியவில்லை.
“குதிரேங்கறது செல்வாக்கு. இங்க உள்ள எட்டு டிவிஷன்லேயும் அவருக்கு லாபம் கொழிக்கிறது. குதிரை மேல ஏறி உக்காந்துண்டு எஸ்டேட்டுல ராஜநட போட்றதில ஒரு இது அவருக்கு. எல்லாம் சொல்ப காலத்துக்குத்தான்”
“வேகமா ஓடாதா?”
“ஓடாதாவது? அவரால இதோட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியுமான்னு கேளு. வளக்கறவனோட மொகத்தைப் பாத்து பக்குவமா நடந்துக்க நாய்க்குட்டியாடா இது? வாயு பகவான்டா. அதன் பாஷ தெரியலேன்னா அடிபடணும். சாதாரணமா ஏமாத்திட முடியாது. தோரிதகமின்னு சொல்லுவா. நடக்கிறதவிட சித்த வேகமா போகும். இந்தத் தோட்டத்தில இந்தக் குதிரையோட வேகம் அதன் ஆயுசு வரைக்கும் அவ்வளவுதான்,” என்றவர் வெற்றிலையை புளிச்சென துப்பினார்.
“என்னால வேகமா ஓட்ட முடியும் ஐயரே” என்றான் துடிப்பாக.
“அப்படி ஏதும் பண்ணித் தொலைச்சிடாதடா. அந்த வெள்ளக்காரன் அவன் வண்டியிலகூட ஒருத்தனயும் ஏற விடமாட்டான். புலி மெரட்டல் இருக்கறச்சயே ஒத்த மனுஷனா சுத்திண்ட்ருக்கார். ஏடாகூடாம எதையாவது பண்ணிப்ட்டு சுடுபட்டு செத்துடாதேடா. அது ஸர்ப்பம் சஞ்சரிக்கற தேகம். பத்திரம். எதுவும் நடக்கலாம். ஜாக்கிரதையா இருந்துக்கோ சொல்லிட்டேன். அப்புறம் ஒம்பாடு,” என்றார்.
“அதென்ன பேரு”
“உச்சைஸ்ரவம்”
அவன் உச்சை சிரவம் என சொல்லிப் பார்த்தான். வாயில் சரியாக வராததால் உச்சை என சுருக்கமாக அழைக்கப்போவதாகச் சொன்னான்.
ஐயர் கொஞ்ச நேரம் யோசித்து “கேட்க என்னவோபோல இருக்குடா. ம்… கேக்கக் கேக்க பழகிடும், போ…” என்றார்.
மறுநாள் அவன் அவ்வாறே கூப்பிடும்போது துரை வினோதமாகப் பார்க்க, ஐயர் அது கடவுளின் பெயர் என வானத்தைப் பார்த்து விளக்கம் சொன்னார். துரையின் முகத்தில் பூரிப்பு. சில வாரங்களில் குதிரைக்கே தனது பெயர் பிளேக்கியா, உச்சையா என்ற குழப்பம் வந்துவிட்டது. ஆனாலும் அது துரையைவிட முத்தண்ணனிடம்தான் நெருக்கம் காட்டியது. காலையில் எழுந்து ‘உச்ச’ என்றால் காதுகளைக் கூர்மையாக மேலே தூக்கிக்கொள்ளும். ‘புர்ர்ர்’ என உறுமிவிட்டு தடவிக்கொடுக்கும்போது கனைக்கும்.
உச்சை வந்த பிறகுதான் தோட்டத்துக்கே அழகு கூடியதுபோல இருந்தது முத்தண்ணனுக்கு. சுற்று வட்டாரத் தோட்டங்களில் கம்பீரமான கறுப்புக் குதிரை ஒன்று ஆயேர் தோட்டத்தில் குடியேறியுள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை தொலைவில் இருந்து வேடிக்கை பார்க்கவே பொடிசுகள் தோட்டத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்கள் வழி உச்சையின் புகழ் மேலும் மேலும் பரவியது. அதைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் முத்தண்ணன் அதனிடம் சகல உரிமைகளையும் பெற்றுள்ள செய்தியும் இணைந்து செல்வதை உறுதி செய்துகொள்வான்.
“நீ யேண்ணே குதிரை மேல ஏறி ஓட்டாம கூடவே நாயாட்டம் ஓடுற” என சிறுவர்கள் கேலி செய்யும்போது மட்டும் கடும்கோபம் வரும். கல்லெறிந்து விரட்டுவான். அவன் உச்சையின் பராமரிப்பாளனானது யாருமே எதிர்பார்க்காததுதான்.
***
லண்டனிலிருந்து பினாங்கு துறைமுகத்துக்குக் கப்பலில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஒரு குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பிரத்தியேக லாரியில் அந்தத் தோட்டத்துக்கு எடுத்துவரப்பட்டபோது எல்லோரும் ஞாயிறு விடுப்பில் தாமதமாகவே விழித்திருந்தனர். முன்பே கேள்விப்பட்டதால் அது லாரியில் இருந்து இறங்கும் அழகை வேடிக்கை பார்க்க தோட்டமே திரண்டது. நேரம் ஆக ஆக செய்தி கேள்விப்பட்டு பக்கத்து டிவிஷன் ஆட்களெல்லாம் வரத்தொடங்கினர். திருவிழாக் கூட்டம்போல துரை பங்களாவைச் சுற்றி சனம் கூடியது.
“என்னடே கறியனா புடிச்சி வந்திருக்கான். வெள்ளைக் குதிரையினா அப்படியே புடிச்சி நம்ம மதுரை வீரன சொமக்க வச்சிடலாம். அவரோட குதிரைக்கு முன்னங்காலு ஒடைஞ்சி ரெண்டு வருசமா சிமிண்டு பூசாம அப்படியே கெடக்குல்ல,” கோயில் பூசாரி சொன்னார்.
“இது பொட்ட குதிரதான் சாமி. ஒம்ம மதுரவீரன் குதுரைக்கு காலு மட்டுந்தான நொல்ல… சோடி சேத்து உட்டா புதுசா குட்டி போடுமுல்ல”
எல்லோரும் சிரிப்பது துரைக்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். முறைத்தான். ஆனால் தன் குதிரையின் அழகை அனைவரும் பார்க்கட்டும் என யாரையும் விரட்டவில்லை. கையில் எப்போதும் இருக்கும் பிரம்பு அவன் மனதைக் காட்டும். அது அன்று உற்சாகமாக சுழன்றுகொண்டிருந்தது. குதிரை மிரள மிரள சுற்றிலும் பார்த்தது. அதன் வால் நிற்காமல் சுழன்றது. உடல் இடவலமென அலைபாய்ந்தது. வெயிலில் அதன் மினுக்கும் கருமை அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. முத்தண்ணனால் அந்தப் பளபளப்பை நம்பவே முடியவில்லை.
“என்னாண்ண வெயிலு பட்டா ஜொலிக்குது” என்றான்.
“இதான் கறுப்பு வைரம் டே” என்றார் காத்தையா.
அப்படித்தான் அது ஜொலித்தது. ஒவ்வொரு அசைவிலும் கர்வம் தொனிப்பதுபோன்ற உடல் அமைப்பு. தொடைகளில் நரம்புகள் புடைத்திருப்பதை தொலைவில் இருந்தே அவனால் பார்க்க முடிந்தது. மெல்லிய அசைவில் அலையெழுப்பும் பிடரி மயிரை தடவ வேண்டுமென ஆர்வத்தில் ஓரடி முன் சென்றான். அவ்வளவு மட்டுமே தன் எல்லை எனத் தெரிந்ததும் பெருவிரலால் பூமியை அழுத்திக்கொண்டான்.
“ஊருல ஏராளம் குதிரய பாத்திருக்கேன். இதென்ன ஆறடியில இப்படி ஆள உசுப்புது. பொட்டச்சிய பாத்த மாதிரி கெழம்புது.”
முருகேசன் சொன்னபோது ஆங்காங்கு சிரிப்பொலி எழுந்தாலும் எல்லோருமே அந்தரங்கமாகக் குதிரையை ரசிக்கத் தொடங்கியிருந்தனர். அதை அணைத்துப்பிடிக்க எல்லோருடைய மனமும் பரபரத்தது. அதன்மேல் ஏறி அமர்ந்தால் ஓர் அரசன் போலவே தத்தம் கணவர்கள் தோற்றம் தரக்கூடும் எனப் பெண்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. அதன் சுழலும் வால் தங்கள் முகத்தில் மோதும்போது கிடைக்கும் ஸ்பரிச உணர்வை கற்பனையாக உருவாக்கிக் கிறங்கினர். சிலிர்த்து அதிரும் தொடையின் தோல் இறுக்கம் சுண்டியிழுத்தது. அதன் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாதா என வகை வகையாக ஒலியெழுப்பிச் சீண்டினர்.
“இதுக்குதான் தொர ரெண்டு வாரமா கொட்டா கட்டவும் தீனித் தொட்டி கட்டவும் சுழுக்கெடுத்தானா?” கூட்டத்தில் யாரோ சொன்னார்.
கொட்டகை கட்டும்போது முத்தண்ணன் கூடமாட உதவியிருக்கிறான். நல்ல பெரிய கதவுகளுடன் காற்றாடியெல்லாம் பொருத்தப்பட்ட தூய்மையான கொட்டகை அது. கொட்டகையைச் சுற்றிலும் குறைந்தது நூற்றைம்பது சதுர மீட்டர் விசாலமான புல்வெளி இருந்தது. கொட்டகையின் வாயில் வடக்குப் புறமாக இருந்ததால் சாலையில் பயணிப்பவர்களால் குதிரையைப் பார்க்க முடியாது. கொட்டகைக்கு சற்று தள்ளி பெரிய குழி ஒன்று வட்ட வடிவமாகத் தோண்டப்பட்டிருந்தது. அங்கு குதிரை குளிக்க நீச்சல் குளம் தயாராவதாகச் சொன்னார்கள். அதைச் சுற்றி அரை வட்டத்தில் தகரத்தடுப்பு போடப்பட்டிருந்தது.
“பொம்பள குளிக்கிறத பாக்க கூடாதுலெ”
“அதுக்கு தொர குதிரய ஊட்டுக்குள்ளாரவே வச்சிருக்கலாமே”
“மேயரதுக்கு ஐயர் மண்டையில மட்டுந்தான் மசுரு இருக்கு”
மீண்டும் சிரிப்பொலி கேட்கவும் துரை “ஷட் ஆப்” எனக் கத்தினார். குதிரையைக் கொண்டு வந்த லாரிக்காரனிடம் ஏதோ விவாதித்துக்கொண்டிருந்த அவர் முகம் ஏற்கனவே சிவந்திருந்தது. அதே முகத்துடன் கொஞ்ச நேரம் கையைப் பிசைந்தவர் தடியை மெல்ல சுழற்றத் தொடங்கினார். அவர் தீவிரமாக எதையோ யோசிக்கிறார் என எல்லோருக்குமே புரிந்தது. பின்னர் ஐயரிடம் ஏதோ சொல்லவும் அவர் அதிர்ச்சியோடு கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தை நோக்கி துரை கை காட்டி பேசுவதைக் கண்டவுடன் புறப்பட இருந்தவர்களும் கொஞ்ச நேரம் என்னவோ ஏதோவென நின்று கவனித்தனர். பின்னர் ஐயர் தலையைத் தொங்கபோட்டபடி அருகில் வந்து “குதிரைய பாத்துக்க வர்றதா சொன்னவர் கடைசி நிமிஷத்தில ஊருக்குக் கிளம்பிட்டாராம். உங்கள்ள யாருக்காவது குதிரையைப் பாத்துக்க தெரியுமான்னு துரை கேக்கறார்,” என்றார்.
“மாட்ட மேச்சலுக்கு எடுத்துபோவும்போது கூடயே கூட்டிபோயி மேச்சலுக்கு விடுறேனுங்க ஐயரே” பிலாகாயன் சொல்வது நல்ல திட்டமாக எல்லோருக்கும் தோன்றியதால் கைதட்டினர். அப்படியே தாங்களும் குதிரையைத் தொட்டுத் தடவி விளையாடி, சவாரியெல்லாம் செய்யலாம் என்ற எண்ணமே குதூகலமாக்கியது.
“இது என்ன நீங்க மேக்கிற நாட்டு மாடுன்னு நெனைச்சுட்டேளா? சீமக் குதிரை. தெரிஞ்சுக்குங்கோ. நெறைய பணம் செலவு பண்ணி துரை இத வரவழைச்சிருக்கார். கூடவே இருந்து பராமரிக்கணும். படுத்துக்க எடமும் போஜனமும் துரை கொடுத்துருவார். எப்பவுமே குதிரை உங்க பார்வேலயே இருக்கணும். ஒழுங்கா தீவனம் போடணும். அதுக்கு எந்த வாதையும் வராதமேனிக்கு கண்கொத்தி பாம்பா இருக்கணும். குதிரச் சாணிய அள்றதிலேர்ந்து அதக் குளிப்பாட்டி, கொட்டகேல கட்ற வரையில எல்லாமே நீங்கதான் பண்ணனும். ஆனா தோட்ட வேலையவிட இரண்டு மடங்கு சம்பளம்” என்றார் ஐயர்.
கூட்டத்தில் சலசலப்பு.
“குதுர பீய மட்டும் அல்லனுமா? இல்ல சூத்தையும் கழுவி உடனுமா ஐயரே” கூட்டத்தில் இருந்து யாரோ அடித்தொண்டையில் கத்தினான்.
“ஐயரே தொறைக்கு கழுவி உடுவாரு போல. நீ குதுரைக்கு கழுவுனா என்னா?” மீண்டும் மற்றொரு குரல்.
ஐயருக்கு எரிச்சலானது. “ஒங்கள்ள ஒருத்தரும் தயாரா இல்லன்னா பரவாயில்லை. நான் துரைட்ட சொல்லிடறேன்” என அவர் புறப்பட்டபோதுதான் “எனக்கு தெரியும் ஐயரே!” என முன்வந்தான் முத்தண்ணன்.
“ஏது… குதிர பீய அள்ளவா? ஒஞ்சாதி புத்தி உட்டுப்போவுமா?” கூட்டத்தில் மீண்டும் குரலும் சிரிப்பும் எழுந்தது. முத்தண்ணன் திரும்பி பார்க்கவில்லை. “என்னால குதுரய பாத்துக்க முடியுங்கய்யா” மீண்டும் உறுதியாகக் கூறினான்.
“டேய் முத்தண்ணா. இது வெளையாட்ற விஷயமில்லடா. துரை ஆசையா இந்த குதிரைய வாங்கிருக்கார். ஏடாகூடமா ஏதாவது ஆயிடுத்துன்னா அந்த நிமிஷமே ஒன்ன சுட்டுக் கொன்னுடுவார். ஒன்னால என்னையும் சேத்துக் கொன்னாலும் கொன்னுடுவார்,” என பல்லைக் கடித்தபடி கூறினார். அவர் கண்களை உருட்டி கூறியவிதம் ‘பேசாமல் ஓடிப்போயிடு’ எனச் சொல்வது போலவே இருந்தது.
“லேய்… ஒன்னய நம்பி மாட்டையே கொடுக்க மாட்டனுவ. குதிரய கொடுப்பாங்களா?” மறுபடியும் நசநசத்த சிரிப்பொலி.
அவன் எதற்கும் தயங்கவில்லை. “தொர… ஐ எம்” என்றான் சத்தமாக. கூட்டம் சட்டென அடங்கியது. இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் அப்படி இப்படி வார்த்தைகளைத் தேடி நான் குதிரை வளர்ப்பதில் கில்லாடி என விரிவாகவே ஆங்கிலத்தில் சொல்லியிருக்க முடியும் என அவனுக்குள் ஒரு நம்பிக்கை தோன்றியது. துரை கம்பை ஆட்டி அவனை அழைக்கவும் அருகில் ஓடினான்.
துரையை அவ்வளவு அருகில் அவன் பார்ப்பது அதுதான் முதன் முறை. நிரையில் பால் சேகரிக்கும்போது ஜீப்பை ஓரமாக நிறுத்திவிட்டு தொப்பியுடன் சிகரெட் பிடித்தபடி அனைவரையும் முறைத்துக் கொண்டிருப்பார். யாரையாவது திட்டும்போது மட்டும் ஜீப் குலுங்க தடாரென இறங்குவார். இடது கையில் துப்பாக்கி இருக்கும். சரியாக அவர் இடுப்பு உயரம். “எல்லாரும் ஒழுங்கா வேலை செய்யுங்க” என எண்ணி எண்ணிச் சொல்வார். அவருக்குத் தெரிந்த ஒரே தமிழ் வாக்கியம். சுருளி அண்ணன் மலேசியா முழுக்க உள்ள எல்லா துரைகளுக்கும் தெரிந்த ஒரே தமிழ் வாக்கியம் அதுதான் என்பார். எவ்வளவு சிகரெட் புகைத்தாலும் துரையின் உதடுகள் கறுக்காமல் இருந்தன. அகன்ற உடல். முழங்கால் வரை நீண்ட நீளமான பெரிய கைகள் முறுகிக் கிடந்தன. அரைக்கால்சட்டைக்குள் செருகப்பட்டிருந்த டீசட்டையைத் தள்ளிக்கொண்டு சரிந்த தொந்தி. தொப்பி அணியாத மொட்டைத்தலையுடன் கூர்மையான நாசியும் விழிகளும் அவரை இன்னும் முரட்டுத்தனமாகக் காட்டின.
முத்தண்ணனை அலட்சியமாகப் பார்த்தவர் ஆங்கிலத்தில் ஏதோ கூறினார். முத்தண்ணன் “ஐ எம் தொர” என்றான். ஐயர் முகத்தில் கலவரம். துரை போனவுடன் “என்ன கேட்டாரு?” என்று கேட்டான்.
“ஒன்னண்ட கேக்க என்ன இருக்கு? குதுரைக்கு சின்ன சங்கடம்னாலும் உன்னைக் கொன்னுடுவேன்னு சொன்னார்” என்றார். அவனைப் பார்க்க ஐயருக்குப் பரிதாபமாக இருந்தது.
உண்மையில் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு கோவேறு கழுதையை அவன்தான் பராமரித்தான். அசப்பில் குதிரையைப் போலவே இருந்தாலும் உச்சையைவிட குட்டையானது. கழுதைகளைவிட உயரமானது. குதிரையைப் போலவே குதிக்கும்; கனைக்கும். வாலும் குதிரையைப் போல அடர்த்தியானது. யாரோ வெளியூர் வியாபாரி அயிலம்மாவிடம் இருந்த இரண்டு கழுதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாகக் கொடுத்தாராம். வெண்மை நிறமான அது கழுதையைக் காட்டிலும் பளுவை அதிகம் சுமந்தது. ஆனால் இரண்டு கழுதைக்கு அது ஒன்று ஈடாகாது என சவுரி படுத்தபடியே கத்திகொண்டிருப்பார். அவர்கள் பிள்ளைகள் அதற்கு வெள்ளை எனப் பெயரிட்டனர். அயிலம்மா அதை ஆற்றுக்கு பொதி சுமந்து செல்லப் பயன்படுத்தினாள். சவுரி படுத்தப்படுக்கையானபிறகு முத்தண்ணன்தான் குறைந்த கூலிக்கு அயிலம்மாவுடன் செல்வான். அவள் ஊரார் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது முத்தண்ணன்தான் அதனைக் குளிப்பாட்டுவான். புல் வெட்டி வந்து தின்னக்கொடுப்பான். அது காராமணியை விரும்பித்தின்னும். கழுதைக்குப் பதிலாகக் குட்டை குதிரை கிடைத்ததில் அவனுக்குப் பெரும் சந்தோசம். போகும்போதும் வரும்போதும் அவனே அதை ஓட்டி வருவான். ஒரு முறை அதில் ஏற முயன்றபோது அயிலம்மா அவனைக் கீழே தள்ளிவிட்டாள். கையெல்லாம் சிராய்ப்புகள்.
“அதற்கு சேணம் பூட்டவேணும் கண்ணு. அப்புறமா நீ ஏறலாம்,” என காயம்பட்டிருந்தவனை அப்பா சமாதானம் செய்தார். அயிலம்மாவின் பிள்ளைகள் சேணம் இல்லாமல் ஏறுவதைச் சொன்னான். “அவங்க பெரிய பசங்க. வெள்ள குட்டி போட்டதும் நாம அத சவுரிகிட்ட இருந்து வாங்கிக்கிடலாம். அப்போ நீ அதுல ஏறி வெளையாடலாம்” எனக்கூறவும் சமாதானம் ஆனான். அந்த நாளுக்காகக் காத்திருந்தான். அதுவரை வெள்ளைக்கு புல் அறுத்து வந்து போடுவது, தொட்டிலில் நீர் நிறைப்பது என அவனே முன்வந்து அனைத்து பணிவிடைகளையும் செய்தான். “வெள்ள எப்போ குட்டிப்போடும்” என அவன் அயிலம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் ஒன்றும் பேசாமல் முறைப்பாள். வீட்டுக்குள் நுழைய முயலும்போதோ தன் பிள்ளைகளுடன் விளையாடும்போதோ அயிலம்மா வசைப்பதையெல்லாம் வெள்ளையைப் பார்த்தவுடன் மறந்தே போவான். வெள்ளை குட்டி போட்ட பிறகு அதில் ஏறி சவாரி செய்யப்போகும் நாள் அவன் கற்பனையில் சுழன்றுகொண்டே இருந்தது. ஆனால் அது முதிர்ந்து நோயுற்று சாகும் வரை குட்டி போடவே இல்லை. அவன்தான் வெள்ளையைப் புதைக்க குழி வெட்டினான். அப்போது ஓரளவு அவன் வளர்ந்திருந்தான். மீசை கூட அரும்பியிருந்தது. கோவேறு கழுதைகள் குட்டி போடாது என தெரிந்துகொண்ட வயது அது.
லாரியில் குதிரையைக் கொண்டுவந்த சீனனிடமே குதிரையை எப்படி பராமரிப்பதென்று விளக்கம் கேட்டுக்கொள்ளச் சொன்னவர் அவரே முன்னின்று மொழிபெயர்த்தும் சொன்னார். குதிரை சராசரியாகப் பதினைந்து லிட்டர் தண்ணீர் குடிக்குமென்றும் அதற்கு சுத்தமான தண்ணீர் தொட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதில் தொடங்கி கோதுமை தவிடு போடும்போது கூடவே பச்சைக்கடலை, சோளமெல்லாம் கலந்துகொடுத்தால் பத்து கிலோ வரை சாப்பிடும் என்பது வரை விளக்கினான். பேசிக்கொண்டே குதிரையின் வாயைத் தூக்கி அதன் சிங்கப்பல்லைக் காட்டினான் சீனன். அந்தப் பற்களுக்கு இடையில் அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் லகான் இருந்தது. கடிவாளத்தையும் மிதி இரும்பையும் காட்டி ஐயரிடம் சீனன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் அதன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய நீண்ட புருவங்கள். தன்னால் அதை நன்றாகப் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. தன்னைப் பார்த்து “ஐ எம் தொர” என்றவனை துரை சலிப்புடன் பார்த்துவிட்டுச் சென்றார்.
நீண்ட பயணம் செய்து வந்ததால் உச்சைக்கு மறுநாளே வயிற்று வலிகண்டது. எதையும் சாப்பிடாமல் கனைத்துக்கொண்டே இருந்தது. துரை கலங்கிவிட்டார். குதிரையைத் தனியாக விட்டுப்போக மனம் இல்லை. குதிரைக்கான வைத்தியர்கள் கோலாலம்பூரில் இருந்து வரத் தாமதமானது. முத்தண்ணன் துரைக்குத் தெரியாமல் பெருங்காயம் கலந்த நீரை அதற்கு பருகக் கொடுத்தபோது முரண்டுபிடித்தது. ஐயர் “என்னத்தயாவது கொடுத்துத் தொலைச்சுடாதடா. துரை சுட்டுப் பொசுக்கிடப் போறார்” எனப் பயந்தார். “எங்க ஊரு கழுதைக்கெல்லாம் இதான் வைத்தியம்” என்றவன் துரை கண்ணசந்த சமயம் பிடிவாதமாக அதன் வாயில் பெருங்காய நீரை ஊற்றினான். மறுநாளே அது பூரண குணமானவுடன் துரையிடம் ஐயரே உண்மையைக் கூறினார். குதிரை வந்த இரண்டாவது நாளே பங்களாவுடன் ஒட்டியிருந்த அறை ஒன்று அவனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒண்டிக்கட்டையான அவனிடம் எடுத்துவர பொருளென பெரிதாக ஒன்றுமில்லை. மாட்டுவண்டியில் ஒரு நடை போதுமாக இருந்தது.
“இது நாவம் சுத்துன குதுர இல்ல ஐயரே. சும்மா பயந்து சாவாதீங்க. இது வந்த அதிஷ்டம் எனக்கு இந்த வேல கெடச்சிருக்கு. தொரைக்கு ஆக்குற மாட்டுக்கறி டான்னு தின்னக்கெடைக்குது. வேற என்னா வேணும்” என உற்சாகமாகச் சொன்னவனைப் பார்த்து முகம் சுளித்தார் ஐயர்.
“நாகம் படமெடுக்கறதப் பாக்கறச்சே நாட்டியமாத்தான் இருக்கும்.” என்றார்.
***
குதிரை பராமரிப்பாளனான பிறகு முத்தண்ணனுக்கு தோட்டத்து சனங்களுடன் பெரிதாக தொடர்பு இல்லாமல் போனது. அவனுக்கு அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை. அவனுக்கு உச்சையுடன் நன்றாகவே பொழுதுபோனது. காலை ஏழு மணிக்கு அவனுக்கு வேலை தொடங்கும். கொள்ளுடன் கொண்டைக்கடலையையும் கொடுத்தால் சந்தோசமாக சாப்பிட்டுக் கனைக்கும். சோளத்தட்டை விருப்பமானது. கொட்டகையைத் துப்புரவாக்கி துரை அமர்வதற்கு முன் உச்சைக்கு உடலில் படிந்துள்ள புழுதியை பருத்தித் துணியால் துடைத்து விடுவான். இரண்டு மணி நேரம் துரையைச் சுமந்துகொண்டு தோட்ட உலா. வந்ததும் செம்மண் படிந்துள்ள அதன் கருமை உடலை மீண்டும் துடைத்து பச்சை புல்லை மேய விடுவான். அப்போதுதான் அவனும் அதனை பார்வையிட்டபடியே சாப்பிடுவான். வெய்யில் இறங்கியதும் குதிரைக்கு வயிறு போடாமல் இருக்க அருகில் உள்ள புல்வெளியில் ஓட விட்டுப் பயிற்சி கொடுப்பான். குளிப்பாட்டும்போது கால் குளம்பை சுத்தம் செய்வான். முதலில் எல்லாம் உச்சை உதை கொடுப்பதை வாங்கிக்கொண்டாலும் பின்னாளில் அது முத்தண்ணனுடன் நல்ல பழக்கம்கொண்டது. மீண்டும் மாலை உணவாக கோதுமை தவிடு. லாடத்தை வாரம் ஒருமுறை அடித்துவிட மட்டும் முதலில் கஷ்டப்பட்டான். பின்னர் உச்சையே அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால் காலைத் தூக்கினால் வாகாக காட்டத் தொடங்கிவிட்டது. அப்போது மட்டும் கொஞ்ச நேரம் தாங்கிப் பிடிக்க தோட்டத்தில் உள்ள பையன்களைக் கூப்பிடுவான். அந்த வாரம் தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் போட்டியிட்டனர். அதற்காக அவனை எங்கு பார்த்தாலும் மரியாதையாகப் பேசினர். தின்பதற்கு வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துவந்து கொடுத்தனர். குதிரை வந்த ஒரு மாதத்திற்குள் அவனது மரியாதையும் தோட்டத்தில் உயர்ந்தது. அவனைக் குதிரைக்காரன் என்றே அழைக்கத் தொடங்கினர். அவர்கள் முன் உச்சையில் ஏறி ஒருதரமாவது பவனிவர வேண்டுமென்ற ஆசை முத்தண்ணனை நாளுக்கு நாள் தின்றது.
துரையும் குதிரை மீது உயிரையே வைத்திருந்தார். குதிரைக்கு சிறு தீங்கு நடந்தாலும் நிச்சயமாக அவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொல்ல வாய்ப்புள்ளது என்று அறிந்தே வைத்திருந்தான் முத்தண்ணன். துரை தன் மனைவியின் பிட்டத்தைத் தட்டியதால் ஞாயம் கேட்கச் சென்ற மலையாண்டியை, அவர் வீட்டு வளாகத்திலேயே சுட்டதோடு அவனுக்கு திருடன் பட்டமும் கட்டியதை தோட்டத்தில் இன்னும் யாரும் மறக்கவில்லை. மலையாண்டி மனைவிக்கு எங்கு சென்றும் நியாயம் கிடைக்கவில்லை. அதனாலேயே அவன் குதிரை கொட்டகைக்கு அருகிலேயே ஒரு கயிற்றுக்கட்டிலைப் போட்டுக்கொண்டான். மழைபெய்யும் காலங்களில் உச்சையின் முதுகில் பெட்ஷீட்கள் போர்த்திவிடுவான். உடம்பு சூடேற நெல்லை சாப்பிடக் கொடுப்பான். வெப்பமான காலங்களில் துளசி, வெந்தயம் ஆகியவற்றைத் தின்னக்கொடுப்பான். ஐயருக்கு அவன் திறமை ஆச்சரியமளிக்கும் போதெல்லாம் “எல்லா சைவ பட்சினிக்கும் ஒரே வைத்தியம்தான் ஐயரே. ஒமக்கு ஒடம்பு முடியலன்னாலும் நாந்தான் மருந்து ஊட்டுவேன்,” என ஐயர் முகம் சுளிக்க கேலி செய்வான்.
காலையில் துரை குதிரையில் ஏறி நடை போகும்போது அவனும் உடன் ஓட வேண்டும். அதற்கு முன் துரை குதிரையில் ஏற மிதி வளையத்தில் காலை வைத்து மறுகாலை உயர்த்தும்போது அவன் தோள்களால் அவர் பிட்டத்துக்கு முட்டுக்கொடுத்துத் தூக்கிவிட வேண்டும். அதேபோல இறங்கும்போது அவன் இடப்பக்கம் அமர்ந்துகொண்டால் தோளில் வலது காலை இறக்கி இறங்குவார். ஒவ்வொரு முறையும் அது அவனுக்கு மரண வலியைக் கொடுக்கும். நடைபோகும்போது துரையின் துப்பாக்கி அவன் தோளில் இருக்கும். துரைக்குதான் அது இடுப்பு உயரமே தவிர அவனுக்கு மார்பை எட்டும். கையில் துரைக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறிய பெட்டியைச் சுமந்திருப்பான். குதிரைக்குதான் அது நடையே தவிர அவன் மெதுஓட்டம் ஓடினால் மட்டுமே அவர்களைப் பின்தொடர முடியும். துரை சில நிரைகளின் அருகில் குதிரையை நிறுத்துவார். அப்போதெல்லாம் அவனுக்கும் சலாம் கிடைத்தது. அது அவனுக்குப் பெரும் கௌரவமாக இருந்தது.
தோட்டக்காட்டை வலம் வரும்போதெல்லாம் சனங்கள் ஒரு நிமிடம் குதிரையைப் பார்க்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு வசீகரம். அது கால்களை அசைத்துக் கொண்டு ஒரே இடத்தில் நிற்பதை பார்க்கும்போதெல்லாம் குதிரை தங்களை அடையாளம் கண்டுகொள்ளுமென அதனிடம் சிரித்து வைப்பார்கள். அவர்களுக்கு அதனை எப்படி அழைப்பதென்றும் தெரியவில்லை. மாடசாமி “ப்பா ச்சு ச்சு ச்சு” என ஒருதரம் நாயை அழைப்பது போல சத்தம் கொடுத்ததும் துரை அவனை மாலையில் பங்களாவுக்கு வரச்சொல்லி பிரம்பால் உரித்தெடுத்தார். சிறுவர்களுக்கு அதனருகில் செல்ல ஆசையாக இருந்தாலும் யாரும் வரக்கூடாது என முத்தண்ணன் எச்சரித்திருந்தான். அதற்குமுன் அவன் அப்படி யாரையுமே மிரட்டியதில்லை. உண்மையில் குதிரையால் தனக்கு தோட்டத்தில் மெல்லிய அதிகாரம் வந்துவிட்டதை முத்தண்ணன் உணர்ந்த நாளில் கூடுதல் உற்சாகமாக இருந்தான். அதற்காக துரை கொடுக்கும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்தான்.
“ஜீப்பில் செல்வதைவிட குதிரையில் செல்லும்போது மனதுக்கு இன்னும் சந்தோசமாக உள்ளது” என்றார் துரை. அதைச் சொல்லும்போது அவர்கள் குன்று போன்ற உயர்ந்த பகுதியில் இருந்தனர். தொடக்கத்தில் எல்லாம் ஒன்றும் பேசாமல் இறுக்கமாக இருந்த துரை ஒரு சில வாரங்களுக்குப் பின் தன்னிடம் பேசியது அவனுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது.
“என்னா தொர?” என்றான் பணிவாக. துரை மீண்டும் அதையே அழுத்தமாகச் சொன்னார்.
முத்தண்ணனுக்கு துரை சொன்ன ‘ஹெப்பி’ என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் புரிந்தது. இப்படி சில வார்த்தைகள் அவனுக்குப் புரிவதுண்டு. அவனும் “ஹெப்பி” என எல்லா பல்லும் தெரிய சிரித்தான். துரை பெட்டியைத் திறக்கச் சொல்லி சாடை காட்டவும் பவ்வியமாகத் திறந்தான். உள்ளே ஒரு துவலை சுருண்டு கிடந்தது. அதன் மேல் தொலைநோக்கி. மறு ஓரம் குடிநீர் புட்டியுடன் ஒரு விஸ்கி பாட்டிலும் இருந்தது. அத்தனை நாள் சுமந்து வந்தாலும் துரை அதைத் திறந்ததில்லை. விஸ்கி பாட்டிலைக் கைகாட்டி எடுக்கச் சொன்னார். எடுத்தான். அதற்கு கீழே அவன் ஆள்காட்டி விரல் உயரத்துக்கு ஒரு கண்ணாடி கிளாஸும் இருந்தது. அதையும் எடுத்துக்கொடுத்தான்.
“நான் பகலில் மது குடிப்பதில்லை. ஆனால் இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் இப்படி குதிரையின் மேல் அமர்ந்து குடிக்கவேண்டும்போல தோன்றும்” என்றவர் கிளாஸில் கொஞ்சமாய் ஊற்றினார். உனக்கு வேண்டுமா என கிளாஸை குதிரையில் இருந்தபடியே அவனை நோக்கி நீட்டினார். முத்தண்ணன் அவசரமாக “நோ தொர” என மறுத்தான்.
“நல்லவேளையாக மறுத்துவிட்டாய். இல்லாவிட்டால் உன்னை இங்கேயே சுட்டுக்கொன்றிருப்பேன்” எனக்கூறிச் சிரித்தார். முத்தண்ணனும் துரை ஏதோ சந்தோசமாக இருக்கிறார் என நினைத்துச் சிரித்துக்கொண்டான்.
“குதிரையில் ஏறிப் போகும்போது கம்பீரம் வர நீயும் ஒரு காரணம். முன்பு ஜீப்பில் வரும்போது தனியாகத்தான் வருவேன். இங்கு புலிகள் அதிகம். நான் மறையும் அதன் வாலைப் பார்த்துள்ளேன். எனக்கு பயமில்லை. என்னைத் தாக்க முயன்றால் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் சரியாக குறிபார்த்துச் சுட்டுவிடுவேன். என் இடது கை எப்போதும் துப்பாக்கியைப் பிடித்திருக்கும். இப்போது நீ உடன் வருகிறாய். என் துப்பாக்கியைச் சுமந்தபடி. ஒரு இடதுகை போல… ஒரு நாய் போல… நாய்…” துரை சிரித்தார். அவனுக்கு ‘நாய்’ என்பது புரிந்தது. ஆனால் ஏன் நாயைத் தேடுகிறார் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் சீமை நாய் ஒன்றை வாங்கினாலும் தான்தான் அதை பாதுகாக்க வேண்டும் என்கிறாரா என நினைத்து “ஐ எம் துரை” என உற்சாகமாக அனைத்திற்கும் தயார் என நிமிர்ந்து நின்றான்.
துரை வேகமாகச் சிரிக்கவும் அவனுக்கு மேலும் மகிழ்ச்சியானது. துரை கிளாஸை நீட்ட அடுத்தடுத்து அவன் அளவாக ஊற்றிக்கொடுத்தபடியே இருந்தான். தன் வாழ்நாளில் எப்போதும் கிடைக்காத கௌரவம் தனக்கு அன்று கிடைத்துள்ளதை எண்ணி கண்கள் கலங்கின. இதையெல்லாம் பார்ப்பதற்குள் அவனது பெற்றோர் இறந்துவிட்டதை எண்ணி வருந்தினான். துரையிடம் என்றாவது கேட்டு உச்சையை ஓட்டிப்பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆனால் அதற்கான தைரியமே அவனுக்கு வந்ததில்லை.
துரை உலா வராத நாட்களிலும் நள்ளிரவு வேளைகளிலும் ஒரு நிமிடம் அதன் மேல் ஏறி பார்க்கலாமா எனத்தோன்றும். ஆனால் துரையின் கண்கள் எங்கோ தன்னை கண்காணிப்பதாகவே எண்ணிக்கொள்வான். அவருக்குத் தெரியாமல் அந்தத் தோட்டத்தில் எதுவுமே இல்லை என்பதுதான் அத்தனை காலம் அவருடன் உலா சென்றதில் அவன் அறிந்துகொண்டது. தான் குதிரையில் ஏறிய அடுத்த கணமே துரையால் சுடப்பட்டு வீழும் காட்சிகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். காற்றுபோல செல்லக்கூடிய இந்த உச்சையை இப்படி நடக்க மட்டுமே வைப்பதில் அவனுக்கு விருப்பமே இல்லை. பயிற்சியின்போது பிடரி மயிரும் வாலும் அலையலையாய் எழும்ப சிறிய புல்வெளியில் அது சுற்றிவரும் வேகத்தை நூறாக ஆயிரமாக அதிகரித்து ஓட்டிப் பார்ப்பான். தனது ஆசையைக் கடைசியாக ஐயரிடம் சொன்னபோது “ஒன்னச் சொல்லி குத்தமில்லடா. ஸர்ப்பம் புத்திய மழுங்கடிக்கறது. ஆசைங்கறது வெஷம். நாள்பூரா அதோடவே ஈஷிண்டு இருக்கியோல்லியோ. வெஷம் ஏறத்தானே செய்யும். அது நோக்குச் சொந்தமில்லாத பொருள் மேலெல்லாம் மோகத்த உண்டாக்கும். மோகம் கண்ணுக்குள்ள இருக்கற காதுகளத் தீண்டும். கண் செவிடாகும். செவிட்டுக் கண்ணுக்கு எல்லாமே தன்னதுன்னு தோணும். தர்மம் தெரியாது. துரியோதனனுக்கு இருந்ததில்லையா… அந்தக் கண்கள் ” என்றார்.
ஐயர் கோவப்படுவது அவனுக்கு வினோதமாக இருந்தது. அதன்பின்னர் இரண்டு வாரத்துக்கு முன்பு ஐயர் வந்து அவனைப் பார்த்தபோது கலங்கி இருந்தார். அவன் அப்போது குதிரையின் உடலைத் துடைத்துக்கொண்டிருந்தான். ஐயரின் கலங்கியிருந்த முகத்தைப் பார்த்ததும் பதறிப்போனான்.
“நா ஊருக்கு கிளம்பறேன்டா” என்றார்.
“என்ன திடீருனு ஐயரே” . பல நாட்கள் பார்க்காததால் ஐயரின் முகம் புதிதாக தெரிந்தது. அதிகம் வயதானவர் போல காட்சியளித்தார்.
“தேசத்தோட நெலமை எதுவும் சரியால்ல. ஜப்பாங்காரன் உள்ள புகுந்துட்டான்னு சொல்லிக்கறா” என்றார்.
“அதுக்கு நீ யேன் ஐயரே கவலப்படுற? அவனுக்கு வெள்ளைக்காரந்தானே பக. நமக்கு ஒன்னும் ஆவாது.”
“இங்கிலிஷ் தெரிஞ்சிருக்கறதால ஏதோ லெட்டர் எழுதி, கணக்கு வழக்குகள பார்த்துண்டு காலத்த ஓட்டிட்டேன். இனிமே புதுசா ஒண்ணக் கத்துண்டு வாழறது சிரமம்,” என்றவர் அவனின் கைகளைப் பிடித்தார். அப்படி அவர் பிடிப்பார் என அவன் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. மாடு தின்கிறான் என்பதால் துரையின் உடல் உரசாமல் நடப்பவர்.
“டேய் முத்தண்ணா… நீயும் இங்க இருக்காதடா. கெளம்பிடு. ஜப்பாங்காரன் வந்தான்னா தோட்டத்தில வேலை இருக்காது. மூணு வாரமா ஜனங்கள் வெட்டிச் சேர்ந்த பால் வெளியூர் போகல. அத்தனை பாலையும் சாக்கடையில கொட்டினா. இந்த மாசம் பூரா உழைச்சவனுக்கு ஊதியமும் இல்லேன்னுட்டார். ஜனங்கள்ட்ட இதச்சொன்னா அவன் என்னைக் கொன்னுடுவான்” என்றார். அவர் கண்களில் நீர் வழிந்தது. குரல் உடைந்தது. அவன் பதிலுக்கு ஐயரின் கையை பிடிக்கலாமா எனத் தயங்கிக்கொண்டிருக்கும்போதே கண்ணைத் துடைத்துக்கொண்டு விடைபெற்றார். “நாளைக்கு விடியறச்சே நான் இங்க இருக்கமாட்டேண்டா முத்தண்ணா. நீயும் கெளம்பிடு. அத்தனபேரயும் வேற ஏதாவது பொழப்பத் தேடிண்டு கெளம்பச் சொல்லு. நான் சொன்னேனோல்லியோ! இது ஸர்ப்பம் சுத்தின குதிரை, சர்வநாசம் பண்ணிடும்”
***
ஓடிச்சென்று கொட்டாயின் விளக்கைப் போட்டவுடன் துரை அவசரமாக அணைக்கச் சொன்னார். அப்போதுதான் கவனித்தான். பங்களாவும் இருண்டே கிடந்தது.
“என்ன தொர” என்றான்.
“நான் இன்றைக்கு இரவே லண்டனுக்குப் புறப்பட வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் ராணுவ வண்டி வரும். அதில் ஏறிப் போய்விடுவேன். கப்பலில் ஏறுகிற வரை எங்கு இருப்பேன் என்று சொல்ல முடியாது. நீ தோட்டத்துக்கே போய்விடு. உன்னுடைய சனங்களிடம் சொல்லி எல்லா விளக்குகளையும் அணைக்கச் சொல். எப்போ வேண்டுமானாலும் குண்டுகள் விழும்.”
துரை ‘பாம்’ என்றது அவனக்குப் புரிந்ததும் பதறி விட்டான். “ஒய் தொர” என்றான்.
“இன்னும் இரண்டு நாட்களில் ஜப்பான் இராணுவம் முழுமையாக மலேசியாவை கைப்பற்றிவிடும். நான் இனி இங்கு இருக்க முடியாது. என்னாலும் பிளேக்கியாலும் அடிமையாக வாழமுடியாது. அதுவும் நீ அடிமையாக வாழப்போகும் இடத்தில்…” துரை அழுதார்.
இப்போது முத்தண்ணனுக்கு ஐயர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஜப்பான்’ என்ற வார்த்தை புரிந்தபோது மற்ற எல்லாமே புரிந்தது.
துரை துப்பாக்கியை அவன் கையில் கொடுத்தார். “இனி நேரமில்லை. பிளேக்கியைச் சுடு.” என்றார்
குதிரையைக் காட்டி துரை சொல்வது அவனுக்குப் புரிந்தது. நெஞ்சு படபடத்தது. “ஓய் தொர?” என்றான்.
“இதற்கு மேல் இதை யார் பராமரிப்பது. சுடு” என்றார்.
‘ஷூட்’ என்பது அவனுக்குப் புரிந்ததும் “நோ தொர” என்றான்.
துரையின் முகத்தில் இப்போது கோபம். “என்னிடமே ‘நோ’ சொல்கிறாயா” என்றவர் துப்பாக்கி கட்டையால் அவன் தலையில் அடித்தார். குதிரை அதிர்ச்சியில் கனைத்தது.
“என்னால் இதைச் சுட முடியவில்லை. அது என்னுடைய மகள். என் இளவரசி. எப்படி அதை என் கையால் கொல்வேன். ஓ…” துரை அழுதார்.
முத்தண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஏன் அழவேண்டும், ஏன் சுடச் சொல்லவேண்டும் எனக் குழம்பினான். நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே துரையைக் கூர்ந்து பார்த்தான். ‘நீ போ தொற நா குதிரைய பாத்துக்கிறேன்’ எனச் சொல்ல நினைத்தான். “ஐ எம் தொர” என்றான். அவனுக்கு அது மட்டும்தான் சொற்களாக வந்தது. மற்ற அனைத்தையும் செய்கையால் காட்டினான்.
துரை வெறி பிடித்தவன் போலானான். “ஏய் நாயே! உன்னால்தான் அதை கொல்கிறேன். அது நான் ஏறி சவாரி செய்த குதிரை. இந்த இரவிலும் எப்படி மின்னுகிறது பார்த்தியா? நீ அதில் ஏறிப் போவதை என்னால கனவில்கூட அனுமதிக்க முடியாது. என்னால் என் நாட்டில் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதற்கு நான் ஜப்பானியனிடமே சுடபட்டு சாவேன். ஏய் நாயே… என் இடது கையே… உனக்கு என் குதிரை வேண்டுமா?” துரை வெறிபிடித்தவன் போல முத்தண்ணனை துப்பாக்கி கட்டையால் அடித்தான்.
அடியில் கீழே விழுந்தவன் தடுமாறி எழுந்தபோது மீண்டும் அவனிடம் துப்பாக்கியை நீட்டினார். அவன் புருவங்கள் கிழிந்திருந்தன. ஒரு பல் உடைந்து வாய் முழுவதும் சிவந்திருந்தது. குதிரை விடாமல் கனைத்துக்கொண்டு தலையை உலுக்கியபடி கொட்டகைக்குள் அலைந்தது.
“ஒரே குண்டுதான் இருக்கிறது. அதன் தலைக்கு குறி வை. என்னால் அது துடிப்பதைப் பார்க்க முடியாது. சுடு” என்றார்.
அவன் துப்பாக்கியை வாங்கிக்கொண்டான். துரை அதன் கட்டையை அவனது தோள்ப்பட்டையில் வைத்து இறுக்கிப்பிடிக்கச் சொன்னார். அவன் இடது கையை நகர்த்தி நேராக குதிரையின் தலைக்கு குறி வைத்துக்கொடுத்தார். விசையில் மொரமொரப்பு இருந்தது.
உச்சை முத்தண்ணனைப் பார்த்து கனைத்தது. அந்த இரவிலும் அதன் கண்களில் ஈரப்படலம் போர்த்தியதுபோல ஒளிர்ந்தது. முத்தண்ணன் அதன் தலைக்கு வைத்த குறியை உறுதியாக்கினான். அந்த இரவில் உச்சையின் கருமை அலையெழுப்பி நெளிந்தது. அதன் உடலில் சுற்றியுள்ள ஆயிரமாயிரம் கருநாகங்கள் நெளிவதை அவனால் அவ்விரவில்தான் முதன்முறையாகக் காண முடிந்தது. உச்சை இறந்தால் அவை சீறிக்கொண்டு வெளியேறும். ஐயர் சொன்னதுபோல தோட்டத்தையே அழிக்குமென தோன்றியது.
–
ம. நவீன் – வல்லினம் அமைப்பின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். மலேசியாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் அண்மையில் வந்த ஒரு நாவல் என 11 நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – valllinamm@gmail.com
சிறந்த கதை வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதில் அக்கறையுள்ள எழுத்தாளர் ம. நவீன்.
ஒரு கதை அப்படியே கதையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது மலேசியாவில் நடந்த கதையாக இருந்தாலும், நமக்கு இங்கு தமிழக மலைவாழ் மக்களிடம் நடப்பது போலவே இருக்கிறது. ஒரு காலனிய ஆதிபத்தியத்தின் எஜமானனின் ஆதிக்க உணர்வு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் நம்மவர்களின் அடிமை தனமும் சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. குதிரையை சுட்டுக் கொல்ல துரை சொல்லும் காரணம் அதிர்ச்சி தரும் நிதர்சனமாக இருக்கிறது. கதையை கோர்த்து எடுப்பதற்கு, கருநாகங்கள் என்கிற மாயச் சரட்டை மையச் சரடாக பயன்படுத்தியிருக்கிறார். நல்ல கதை
சீராளன் ஜெயந்தன்
Kathai mikavum suvaarasiyamaga irunthathu. Vaasikkum aarvathai meelum athigaritatu . Valthukkal.
அருமையான கதை…
கதையை நகர்த்திய விதம் அருமை.
வாழ்த்துகள்,
உச்சை மிக அருமையான கதை. வாழ்த்துகள் ஆசிரியரே.
செயகாந்தன் அவர்களின் ‘நிக்கி’ சிறுகதை ஒரு நாயைப் பற்றியது என்றால் தகுமா?.
திரு.ம. நவீன் எழுதிய ‘உச்சை’ கதையும் அப்படியே.
தெலுங்கு மொழி தெரிந்த எனக்கு கதையின் தலைப்பு முதலில் சில கேள்விகள் எழக் காரணமாய் இருந்தது. தவிர, அதுவென் அறியாமை மட்டுமே.
சில பணி இடங்களில் சிலர் சில சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என்பதற்கு முதலாளிகளின் அடிவருடிகளாக இருப்பார்கள். அப்படியான ஒருவன்தான் முத்தண்ணன். ஊர் மெச்சவும், மாட்டுக்கறிக்கும் தன்னை ஒப்புக்கொடுக்கிறான்.
கழுதை வளர்த்த அனுபவம் உள்ள அவன் இறுதிவரை துறையால் சுடப்பட்டுச் சாவதிலிருந்து தப்புகிறான்.
துறைக்கு அவன் அடிமை, ஐயருக்கு அவன் தாழ்ந்தவன் என்பதுவே முத்தண்ணனின் மனவோட்டம். ஓர் இடத்தில் ஐயரே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு குமுறும் போதும் முத்தண்ணன் பதிலுக்கு அவ்வாறு செய்யத் தயங்குகிறான்.
மலம் அள்ளுபவன் என முத்தண்ணனை முன்னம் நகைத்துள்ள ஐயர் தீண்டாமையை திடீரெனத் தள்ளி வைத்திருக்கலாம். அதற்கு சப்பான்காரனுக்கே நன்றி சொல்ல வேண்டும்
புராணப் புரட்டுகளை முழுதாய் நம்புகிற, மாட்டிறைச்சி உண்பதால் துறையை உரசி நடக்கவும் மறுக்கும் ஐயரை, வாழ்வு மீதான பீதி பீடித்திக்கொள்கிறது.
அவமதிப்புகள் முத்தண்ணனுக்குப் புதிதன்று. அயிலம்மா, ஐயர், துறை, இவர்களால் முத்தண்ணன் உதாசினப்படுத்தப் படுகிதான். மாறாக, அவனிடமிருந்து எதிர்வினைகள் ஏதும் இல்லை.
துறை உச்சையை கொல்லச் சொல்லும் போதும்கூட மன்றாடியே மறுக்கிறான்.
முத்தண்ணன் உச்சையை அன்பாகவோ, உயிராகவோ வளர்க்கவில்லை. பகட்டுக்காகவே அவன் அதனை வளர்க்க முன்வருகிறான். துறை கொல்ல நினைக்கும் குதிரையை தான் வளர்த்துக்கொள்வதாகச் சொல்லும் தருணத்திலும் மனிதம் வெளிபடுவதுக் கொஞ்சமாகத்தான்.
துறையின் அதிகாரத்துவ உணர்வு, தான் சவாரி செய்த குரிரையை ஓர் ‘அடிமை நாய்’ சாவாரி செய்வதைக் கற்பனை செய்யக்கூட மறுக்கிறது.
உச்சையைக் குறிப் பார்த்தத் துப்பாக்கி துறையை குறிப் பார்த்திருக்கலாம்.
கதை முழுக்க முத்தண்ணனோடு நல்ல எண்ணத்தோடே பயணிக்கிறார் என எண்ணவும் இடம் கொண்ட ஐயர் புகட்டியக் கரும்பாம்பின் கதை, முத்தண்ணன் உச்சையின்பால் பீடை உணர்வு கொள்ள வைக்கிறது.
உச்சை செத்திருப்பது சாத்தியமே.
அதிகாரத்துவம் மற்றும் அடிமைத்துவம் குறித்த இப்புனைவுக்கு புரவி ஒரு கருவி. இக்கதை எல்லா நிலத்திற்கும் தகும்.
கதையில் பரவலாகப் பிரயோகம் செய்யப்படாத அருஞ்சொற்கள் காணக் கிடைக்கின்றன. திரு. நவீன் எப்போதும் இதற்காய் மெனக்கெடுபவர்.
‘உச்சை’ ஆண்டான் அடிமையின் முகம்.