உலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில் – பகுதி 1
மேலும் மக்கள் வீட்டில் தங்கினர்
மேலும் நூல்களைப் படித்தனர்
மேலும் படிப்பதைக் கேட்டனர்
மேலும் ஓய்வெடுத்தனர்
மேலும் உடற்பயிற்சி செய்தனர்
மேலும் கலைப்படைப்புகளை உருவாக்கினர்
மேலும் விளையாடினர்
மேலும் இருத்தலுக்கான புதிய வழிகளைக் கற்றுக் கொண்டனர்
மேலும் இன்னும் கற்றனர்
மேலும் ஆழ்ந்து கேட்டனர்
சிலர் தியானம் செய்தனர்
சிலர் வேண்டுதல் செய்தனர்
சிலர் நடனம் ஆடினர்
சிலர் அவர்தம் நிழலைச் சந்தித்தனர்
மேலும் மக்கள் வேறுபட்ட வகையில் சிந்தித்தனர்
மேலும் மக்கள் குணமடைந்தனர்
மேலும் அறியாமை வழியில்
அச்சுறுத்தும் வகையில்
பொருண்மையற்று
மேலும் இதயமற்று
வாழ்ந்த மக்களின் இன்மையால்
பூமி கூட குணமடையத் தொடங்கியது
மேலும் அபாயம் கடந்து சென்றதும்
மேலும் மக்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்தனர்
இழந்தவைகளுக்காக வருந்தினர்
மேலும் அவர்கள் புதிய விருப்பத்தை உருவாக்கிக் கொண்டனர்
மேலும் புதிய தரிசனங்களைக் கற்பனை செய்தனர்
மேலும் புதிய வாழ்க்கைக்கான வழியை உருவாக்கிக் கொண்டனர்
மேலும் பூமியை முழுமையாகக் குணமாக்கினர்
அவர்கள் குணமானதைப் போல
உலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில் – பகுதி 2
மேலும் சில மாயைகள் அகன்றன
மேலும் சில ஆண்கள்
தங்கள் வலிமை மறைந்து போவதைக் கண்ணுற்றனர்
ஆனால் அடைந்தனர்
மேலும் உள்வாங்கினர்
மேலும் போராடினர்
வேலைக்குத் திரும்ப அவர்கள் ஆணையிட்டனர்
சுவர்களை எழுப்புமாறு அவர்கள் கட்டளையிட்டனர்
தேவையில்லாதவற்றில் பணத்தைச் செலவழி
மற்றவர்களைப் பழி சொல்
அந்நியர்களின் மீது அச்சங்கொள்
என் அதிகாரத்திற்கு மரியாதை கொடு
மேலும் மக்கள் சொல்லினர் முடியாது என்று.
அவர்கள் சொல்லினர் :
எங்கள் பரிசை நீ கைக்கொள்ள முடியாது.
அது பகிர்ந்து கொள்வதற்காக எங்களுக்கு மட்டுமே உரியது
நிலமும் அவள் மக்களும் குழப்பத்தில் இருந்து நீங்கினர்
அதற்கான மருந்து வேறு ஒரு வகைப்பட்டது
நாங்கள் இன்னும் இருப்போம்.
நோய்மையே எங்கள் ஆசிரியர்
நாங்கள் படிப்பினைகளுக்குச் செவிமடுப்போம்
இந்த பூமியே நம் இல்லம்.
மேலும் எங்களை நாங்களே
குணப்படுத்திக் கொள்வோம்
மேலும் எஞ்சியவை பழைய நிலையில் வைக்கப்படும்
இந்த பூமி எல்லோருக்குமான இல்லம்
மேலும் நாங்கள் அந்நியர்களைப் பராமரிப்போம்
மேலும் நாங்கள் அந்நியர்களுக்கு உணவளிப்போம்
மேலும் நாங்கள் அந்நியர்களுக்கு இருப்பிடம் தருவோம்
மேலும் நாங்கள் அந்நியர்களை அன்பு செய்வோம்
உள்ளும் புறமுமாக
இந்த பூமி அனைவருக்குமானது
கிட்டி ஓ மீரா (தமிழில்) – மதுரயாழ்
***
கிட்டி ஓ மீரா
ஐரிஷ் அமெரிக்கரான கிட்டி ஓ மீரா ஓய்வு பெற்ற ஆசிரியர். அமெரிக்காவில், விஸ்கான்சென் மாகாணத்தின் தலைநகரான மாடிசனில் வசித்து வருகிறார். In the time of Pandemic – என்ற தலைப்பில் இரு பகுதிகளாகக் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதை சமூக ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகள் கிட்டி, மருத்துவத் துறையில் பணியாற்றிருக்கிறார். இச்சூழலில் தம் மருத்துவத் துறை நண்பர்கள் , உலக மக்கள் அனைவரின் நிலை நினைத்தும் நடமாட்ட முடக்க காலத்தில் இக்கவிதையை எழுதியதாகக் கூறுகிறார். ஆங்கிலம் , அரங்கநாடகம் பயின்ற இவர், மருத்துவச் சேவை தொடர்பான படிப்பையும் படித்திருக்கிறார். ஒரு சிறு நிறுவனத்தில் படைப்பாக்கத் தலைவராகப் பணியாற்றி , பின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மருத்துவமனையில் நோயாளிகளுக்காக வேண்டுதல் செய்யும் பணியும் ஆற்றி இருக்கிறார்.
தற்போது , பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
மார்ச் 13 ல் இருந்து அவர் தம் குடும்பத்தார் சுய தனிமைப்படுத்தி இருந்த காலத்தில், தன் துணையுடன் மதிய உணவின் போது, எதுவும் செய்ய இயலாத மனநிலையில், அச்சமூட்டும் செய்திகளைப் பார்த்து விட்டு, இப்பெருந்தொற்றைப்பற்றியும், அன்பானவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டு இருந்ததாகவும் , அதே நேரத்தில் பூமி மாசுகள் குறைந்து இந்த உலகம் குணமாகிக் கொண்டு இருப்பதையும் பேசி விட்டு, முகநூலைத் திறந்து, சில பதிவுகளைப் பார்த்து கடந்த பிறகு, “And the people stayed home,” என்று எழுதத் தொடங்கி அப்படியே அதைப் பதிவேற்றம் செய்து விட்டு, தன் நாளைத் தொடர்ந்திருக்கிறார்.
அன்று இரவு மீண்டும் முகநூலைத் திறந்த போது, அவருடைய தோழி ஒருவர், இந்தப் பதிவு எனக்குப் பிடித்திருக்கிறது, இதைப் பகிரலாமா என்று கேட்டிருக்கிறார். கிட்டி, Sure என்று பதிலுரைத்திருக்கிறார். அதற்கடுத்த வாரங்களில் அவர் எதிர்பாராத அளவிற்கு, கட்டுகடங்காத ஆழிப்பேரலையைப் போல இக்கவிதைக்கு வரவேற்புக் கிடைத்ததாகக் கூறுகிறார்.
மதுரயாழ் –- இயற்பெயர் : வீரலெக்ஷ்மி மதுரையைச் சார்ந்த இவர், தற்பொழுது தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைகழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பு சார்ந்த ஆய்வுகளை செய்துவருகிறார். தொடர்புக்கு : jovesa2009@gmail.com
சீக்கிரமே இதிலிருந்து மீண்டு வருவோம் என பிரார்த்திப்போம்…
ஆம், நன்றி கார்த்திக் சார் 🙏
அருமையான கவிதை . சூழலுக்கு ஏற்ற கவிதை வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏☺
காலம் இக்காலத்தைக் கடந்து செல்லட்டும். மீண்டும் எழுவோம்.