–ரமேஷ் ரக்சன்
இருட்டுவதற்கு முன்பாகவே சாலையோரம் உள்ள மின்விளக்குகள் போடப் பட்டிருந்தன. வாழைக்காய் லோடு ஏற்றிச் சென்ற டெம்போவின் மேலிருந்து வாய்குளறியபடி ஆனால் புரிந்துகொள்ளக் கூடிய கெட்டவார்த்தை போட்டு மின்சார ஊழியர்களைத் திட்டிக்கொண்டு, வாழைக்குலை உதிரி ஒன்றை எடுத்து டியூப்லைட்டை நோக்கி எறிந்தான். அது டியூப்லைட்டில் படாமல் தக்காளி வயலுக்குள் விழுந்தது. வீரகாளியம்மன் கோயில் முன்பிருக்கும் வேகத்தடையில் டிரைவருக்கு சத்தம் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டான். வீரகாளியம்மன் கோயிலுக்குப் பின்புறம் செல்லும் தெருவில்தான் சாமிதுரைக்கு வீடு. மேய்ச்சலில் இருந்து திரும்பிய மாடுகள் பின்னாலேயே வந்தான். கறைகள் படிந்திருந்த சட்டையை தெரு வழியே பட்டன் போட்டுக்கொண்டு நடந்தான். எல்லாம் ப்ரெஸ் பட்டன். அவனுக்கு காஸா வைத்து பட்டன் போடுவதோ சட்டையைக் கழற்றவோ வராது.
சட்டையின் நடுவே கை நுழைத்து படபடவென அனுமார் நெஞ்சு போல இழுக்கப் பிடிக்கும் சட்டை கழட்டும் அந்த டப் டப் ஓசையைக் கேட்க அவனுக்குப் பிடிக்கும்.
கல்லூரியில் வாலிபால் விளையாடும் வீரர்கள் இருவர் தங்களுடைய கை பெலனை ஜம்ப்பிங் சர்வீஸ் போட இன்னும் கொஞ்சம் ஏத்திக்கொள்ள வேண்டி, வடங்கயிறுக்கான சொந்தக்காரரிடம் பொங்கல் முடிந்த பிறகும், அவிழ்க்க வேண்டாமெனக் கேட்டிருந்தனர். அவரும் கெடுபிடி காட்டாமல் சரி என்றதால் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தது. இருவரும் ஏறி ஏறிப் பயிற்சி எடுத்து முடித்ததும் மரத்தின் மேலே தூக்கிப் போட்டுச் செல்வார்கள். மறுநாள் காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு கம்பின் துணை கொண்டு கீழே இழுத்துக் கொள்வார்கள். இந்த விளையாட்டு சாமிதுரைக்கும் பிடித்திருந்தது. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பு யாருக்கானதென்று தெரியாது. ஆனால் அந்த திசை பார்த்துச் சிரித்தான்.
***
ஒன்பதாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடுமுறையோடு பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டான். நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு ஒரு வருடம் முன்னதாகவே அவன் உடல் மொழியில், பார்க்கும் திசையில், பேச்சில் மாற்றம் தெரிந்தது. “அப்பன மாதிரியே மழுமட்டை பயலாலா ஆயிருவான் போலயே” இவனை பையன்கள் விளையாடுவதற்காக அழைக்க வரும் போதெல்லாம் மனதிற்குள் நொந்து கொள்வாள். ஒரு நேரம் கவலை கொள்வதாகவும், சில நேரம் ஆதங்கமாகவும் வெளிப்படும். அவளின் கோபமானது மடியில் வைத்து சுத்திக் கொண்டிருக்கும் சாணி மெழுகி காய வைத்த பீடித் தட்டில் வெளிப்படும். அந்த வட்டத் தட்டில் சொருகி வைத்திருக்கும் கம்பியில் தான் நூல்கண்டு பொருத்தப்பட்டு இருக்கும். அதை ஆத்திரத்தில் தூக்கி எறியும் பழக்கமும் அவளிடம் இருந்தது. பீடிக்கணக்கு கொடுப்பதிலும், பீடி மடக்கி வண்டல் போடுவதற்கும் தாமதம் ஆவதையும் உணர்ந்து நிறுத்திக் கொண்டாள். சில நேரம் கத்தரி முனை அவளைத் தூண்டும். ஒரேயொருமுறை தரையில் குத்தியிருக்கிறாள். தன் பயத்தில் சினுக்குவாரியலைத் தூக்கிப் போட்டிருக்கிறாள்.
மூன்று வேளை சாப்பிடுவதும், சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடங்காட்டிற்கு சென்று வருவதும், இடைப்பட்ட பகல் நேரத்தில் ஓட்டிற்கும் பனங்கம்பிற்கும் இடையே இருக்கும் ஓட்டடையையும், சிலந்திவலையையும் சன்னலோரத்தில் கிடக்கும் பூ போட்ட வொயர் கட்டிலில் படுத்தபடி பார்த்துக்கொண்டே இருப்பான். சன்னல் கம்பியில் இடதுகாலை நீட்டி கையை ‘அங்கேயே’ வைத்திருப்பான்
சாமிதுரை வாழைக்காய் லோடிற்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு இந்தப் பிரச்சனையில்லை..
எந்தப் பட்டப் பெயர்களும் இல்லாமல் இருந்தவனுக்கு, அவனின் சிரிப்புச் சத்தம் விக்கலின் வேகத்தைக் குறைத்து, மூன்று நொடிகளுக்கு ஒருதடவை எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இழுத்து இழுத்து சிரிக்கத் தொடங்கியதிலிருந்து அவனை ‘எட்டேமுக்கால்’ என்றும், ‘செல்லக்கிறுக்கன்’ என்றும், ‘கோட்ட’ என்றும் அழைக்கத் தொடங்கியிருந்தனர். அவனோடு பள்ளியில் படித்த ஊர் நண்பர்கள் மட்டும் அவனை ‘மூணுகாலன்’ என்பார்கள். அவனுக்கு தன்னை திட்டுவதெல்லாம் தெரியாமலே போயிற்று. அவனுடைய விளையாட்டு மட்டும் அவனிடமிருந்து விடைபெறாமல் இருந்தது. பார்வைத்திறன் குறையாமல் இருந்தாலும் பார்க்கும் திசையிலிருந்து பார்வை தப்பியிருக்கும். அதனாலேயே கிரிக்கெட்டில் அவனுக்கு இடமில்லை.
சொன்னது போலவே செய்யும் கிளிப்பிள்ளை ஆனதும் அவனது பள்ளிக்கூடத்தை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சாமிதுரையின் அம்மாவும் இவன் நடவடிக்கைகளை உணர்ந்திருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் tc வாங்கிக் கொண்டாள். சிந்திக்கும் திறனற்றுப் போய்விட்டதை, மக்காச்சோளத் தட்டையை ‘பசங்க’ சொல்லி தன் மீது எறிந்தான் என சாட்சி சொல்ல நின்ற வாத்தியார் வாய்திறக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
சாமிதுரையிடம் கேள்விகளே இல்லாமல் ஆனது. யார் என்ன சொன்னாலும் செய்வான். மண்டையை ஆட்டுவான். மூன்று வேளையும் சாப்பிடுவான். அவனின் சாப்பாட்டு அளவு கூடிக்கொண்டே போனது. “பொங்கிப்போட்டு முடியல” என ரேஷன் கார்டை மாதாமாதம் தேடி எடுக்கும் போதெல்லாம் சொல்லிக்கொள்வாள். மகன் பாரமாகிப்போனது குறித்த அவளது வருத்தம் நாளடைவில் கொலைகிராதியாக மாற்றியிருந்தது. இதையும் அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வாள். அவளிடம் தாய்மையின் அச்சு முறிந்திருந்தது. “இடிவுழுவான் சீக்கிரம் போய் சேர்ந்தாமில்லையே” என்றே அனத்துவாள். சாமிதுரைக்கு அப்போதும் சிரிப்புதான். ஆனால் அந்த முக அசைவில் ஏதோ புரிந்தது போலிருக்கும். சிரிப்பின் தன்மை மாறுபடும்.
சாமிதுரையின் கைகள் நீளமானது. விரலும், விரல் நகங்களும்கூட நீளம் தான். வளர்ந்த நகத்தை வெட்டி ஒரு கத்தி போலப் பயன்படுத்தலாம். அவ்வளவு வலுவாக இருக்கும். பிடித்துத் தள்ளினால் போய் விழுவானே தவிர, திருப்பித் தாக்கத் தெரியாதவனாக கால் பிடியில் தரையில் ஊன்றி நிற்க முடியாதவனாக ஆகிவிட்டான். அவனின் உடல் திறன் அசாத்தியமானது. கோயிலில் கிடக்கும் மாப்பிள்ளைக்கல்லைத் தூக்கும் திறமை அவனிடம் இருந்தது. அதை வைத்தே வாழைக்காய் லோடு ஏத்திவிட சுமை தூக்கியாகவும், வண்டி ஓட்டுநராகவும் இருந்த எதிர் வீட்டு இசக்கி சேர்த்துக் கொண்டார். ஆளைப் போல குறைவில்லாத சம்பளம் சாமிதுரை அம்மாவின் கைக்குப் போய்விடும்.
பள்ளிப்படிப்பை நிறுத்தியபின் வரும் முதல் பொங்கல். ஊரெல்லாம் பாட்டுச் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. பையன்கள் தெருவில் ஓடிப்பிடித்து விளையாடுகையில் எழுப்பும் அலறல் சத்தம் சாமிதுரையின் புன்னகையை மாற்றியிருந்தது. தெருவெல்லாம் வண்ண வண்ணக் கோலங்கள் பார்த்து அவன் கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன. ‘இப்படி ஒரு பிள்ளைய பெத்துட்டமே என்று புலம்பியவள், சாமிதுரையை கூட்டிக்கொண்டு ஜவுளிக்கடைக்கு கிளம்பினாள். கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டைத் திறந்து கதவைப் பூட்டப் போனவள், அவசரவசரமாக வீட்டிற்குள் சென்று விளக்குப் போட்டாள். திருநீறு பூசி விட்டாள்.
செவ்வக வடிவிலான வரவேற்பறை அளவிற்கு இருந்த அந்த துணிக்கடையில் பொங்கல் கூட்டம் அலைமோதியது. கூச்சப்பட்டு நின்றாள். ஒருவழியாக “பையனுக்கு காலுக்கு நடுவுல கொஞ்சம் நல்லாவே கீழ இறக்கம் இருக்கற மாதிரி ஜட்டி குடுங்க; இவனுக்குத்தான்” கைகாட்டினாள். அவருக்கு கோக்குமாக்காகத் தெரிந்தான். புது வரவான Three by Forth மாதிரி எடுப்போமா என்றார் கடையில் நின்றவர். “முக்கா பேண்ட்மா முழங்காலுக்கு கீழ கெடக்கும்” என்றார். “நல்லதா போச்சு அதையே தாங்க”. முக்கால் பேண்ட் இரண்டும், அவசரத்திற்கு ஒரு டீ ஷர்ட்டும் எடுத்துக்கொடுத்தாள்.
சாமிதுரைக்கு வேட்டி கட்ட வராது. உடலில் எல்லாமே அவனுக்கு அளவிற்கு மீறிய வளர்ச்சி. இதுவே அவளுக்கு அருவருப்பைத் தந்தது. சாரத்தைக் கட்டி பழகச் சொன்னால்கூட கட்டமாட்டான். அவனுக்கு இடுப்பில் நிற்கும் உணர்வே இல்லையா என்றும் தோன்றியது உண்டு. இதனாலையே வெள்ளிக்கொடியை கழட்டிவிட்டு கருப்புக் கயிறு வாங்கிக் கட்டி விட்டிருந்தாள். பொங்கலுக்கு ஆறுமாதம் முன்பு டெய்லரிடம் சொல்லி டவுசரை இறக்கித் தைக்கச் சொல்லி வாங்கியது கூட பலனளிக்காமல் போயிருந்தது.
அவனுக்கு குரலென்று ஒன்று இருப்பதே எல்லோருக்கும் மறந்து போயிருந்தது. அதிசயமாகப் பேசுவான். பொங்கலன்று, பழைய சாமிதுரையின் குரல் இல்லாவிட்டாலும், திக்கித்திக்கி பதில் சொல்லும் அளவிற்குப் பேசினான். அவனைவிட வயது குறைந்த சின்னப் பசங்களோடு அவனையும் நிற்கவிட்டு, அவன் வாயிலும் ஒரு ஸ்பூனைக் கொடுத்து எலுமிச்சைப் பழத்தை வைத்து விதிமுறையைச் சொன்னார் அந்த போட்டியை நடத்துபவர். கைதட்டல்களும், அவன் பெயர் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதும் ஒரே நாளில் எல்லாமே மாறிவிட்டதாக சாமிதுரையின் அம்மாவிற்குப்பட்டது. பரிசுக்கான பாத்திரங்களை வாங்க மேடையேறும் போது புது டீ ஷர்ட் அணிவித்து விட்டாள். அவனுக்கு கழுத்தை நெறிப்பது போல இருந்தது. இருந்தும் போட்டுக் கொண்டான். மறுநாள் பயல்களோடு அனுப்பி வைக்க முடிவு செய்தாள்.
காணும் பொங்கலன்று மலையடிவாரத்திற்கு சென்று வந்தவன் எட்டேமுக்கால் சாமிதுரையாக திரும்பி வந்தான். பரந்தவெளி அமைதியும், விழுங்குவது போல உயர்ந்து நின்ற மலையும் பயம் காட்டியிருந்தது. பனைமரங்களின் உயரமும், அதன் தலையும், காற்றில் உரசும் காவோலை ஓசையும் மிகுந்த கலவரத்தை உண்டு பண்ணியிருந்தது. வீட்டிற்கு வருவதற்கு வழி தெரியும். ஆனாலும் தேங்கி நின்றான். அவனுக்குள் கேட்கும் கட்டளையின் தொனி மாறியிருந்தது. அந்தக் குரலின் சீற்றம் பயமுறுத்தியது. பையன்களின் விளையாட்டு ஆர்வத்தில் அவர்களுக்கு அவன் நினைவில் இல்லாமல் போயிருந்தான்.
தேரி மணலையொத்த செம்மண் குவியலில் கபடி விளையாட சாமிதுரையையும் சேர்த்துக் கொண்டனர். கபடி பாடி வருபவர்களிடம் அடிபடும்போதெல்லாம், வாயில் வந்த பட்டப்பெயர்கள் எல்லாம் சொல்லித் திட்டு வாங்கினான். இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த பழைய “கோம்ப” சிரிப்பு. அதே சிரிப்பு. சாமிதுரையைத் தொடுவதற்கே அதன் பிறகு பயமாக இருந்தது. அவனை கரையில் இருக்கச் சொன்னார்கள். பதில் பேசாமல் அமர்ந்து கொண்டான்.
சாமிதுரையின் கண்கள் மறுபடியும் அலைபாயத் தொடங்கியது. மேக்காற்று மண்ணள்ளித் தட்டியது. அவன் கண்ணிற்கு உறுத்தவில்லையா என்பதை அவனிடம்தான் கேட்க வேண்டும். சில நேரம் நிலைகுத்தி நின்றான். கழுத்து இறங்கி பார்வை மேல்நோக்கி நின்றது. சூரியன் இறங்க இறங்க அவன் மாறிக்கொண்டே இருந்தான்.
எல்லாரோடும் ஆளைப்போல நடந்து வீடு திரும்பியவன் குளித்தான். சாமிதுரையின் கண்களில் ஏதோ ஒன்று தென்பட்டது. அவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள். தடுமாறி விழுந்தவன் மேலே கிடந்து அழுதாள். அதே சிரிப்பு. மளமளவென அவனைக் கிளப்பி, கோயிலில் தண்ணீர்கோரி எறியலாமென கூட்டிச் சென்றாள். வழியிலேயே கோயில் பூசாரி தென்பட்டார். பொங்கலுக்கு வெள்ளையடித்தது. வீடு சுத்தமாக இருந்தது. தன் வீட்டில் வைத்தே தண்ணீர்கோரி எறிந்து திருநீறு போட்டுவிட சம்மதித்தார்.
பூசாரி தன் மனைவியிடம் “அந்தப் பய கண்ல ஒரு சாவுக்களை தெரியுது சீக்கிரம் போயிருவான் போலுக்கு” என்றார். சாமிதுரையின் கண்களில் யானைக்கு நீர் வடிவது போல வடியத் தொடங்கியது. அவன் முகத்தில் தென்பட்ட பொலிவுக்கும், கண்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. பூசாரியின் மனைவி, சாமிதுரை அம்மாவிடம் சொல்ல முற்படும் போதெல்லாம் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அதைச் சொல்லும் தைரியம் அவளுக்கு ஒரு போதும் வாய்க்காதிருந்தது.
மறுநாளில் இருந்தே வாழைக்காய் லோடிற்கு சென்று கொண்டிருந்தான். எப்போதும் இரத்தவோட்டம் தென்படும் விரல் நகங்கள் வீட்டிற்கு வரும்போது வெளிர் நிறமாக மங்கித்தெரியும். வேலை நேரத்தில் இந்த வித்தியாசம் இருக்காது. பழக்கப்பட்ட நாய்கள் கண்டு ஒதுங்கிப் போனான். அம்மாவுக்கும் மகனுக்கும் அதே மெளன உரையாடல். ஏதோ ஒருவகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டே வந்தாள். அழுகை வராமல் போனது. அவளையே சபித்துக் கொண்டாள்.
***
எதுவுமே சாப்பிடாமல், கறைபடிந்த சட்டையை மாற்றிவிட்டு பொங்கலுக்கு எடுத்த டீ ஷார்ட் முக்கால் பேண்ட்டை மாட்டிக் கொண்டு, அரசமரத்தடியில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான். பூவரச இலையில் கோயிலில் கொடுத்த வெண் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டான். கோயில் நடை சாத்தியதும், வீட்டிற்குக் கிளம்பாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.
கட்டளைக்கு அடிபணியும் அந்த சாவுக்களை கொண்ட கண்கள், யாருக்காகவோ காத்திருந்தது. காதை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் சுயத்தின் நினைவு தப்பி, உடலை இறக்கி வைப்பதற்கான இறுதிக்கட்டத்தை அரச இலைகள் காற்றில் சலசலத்து வரவேற்றுக் கொண்டிருந்தன. அடைவதற்குக் கடந்த காகம் தலையில் எச்சமிட்டுச் சென்றது. வெள்ளிக்கிழமை வெண்பொங்கல் வாங்கித் தின்னவந்த பிள்ளைகள் கயிற்றை இழுத்துப் போட்டு விளையாடி அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். அந்த அழைப்பிற்காக காத்திருந்து வடமேறினான் / இறங்கினான். அதே விளையாட்டு. அதே சிரிப்பு. பொங்கலன்று வடமேறி ஜெயித்ததற்காகப் பரிசாகக் கிடைத்த தாம்பூலத்தட்டு அவன் கண்களில் மெல்ல மெல்லத் தெரிந்தது.
மேல்நோக்கிப் பார்த்து ஏறாமல் காட்சி தப்பி எங்கோ பார்த்து ஏறினான். அவனுக்கு உயரத்தின் அளவு எப்படியோ தெரிந்திருந்தது. கட்டளையின் சுவை எச்சிலாக கூடிக் கொண்டே போனது. கட்டளையின் மொழி ஹ்க் ஹ்க் ஹ்க் ஹ்க் ஹ்க்.
கயிறு கட்டியிருந்த கிளையை எட்டிப் பிடித்து இன்னும் ஒரு எட்டு மேலேறி கால்களால் கிளையைப் பின்னி, கைகளைத் தொங்கப்போட்டான். கருப்புக் கயிறு விலா எலும்பில் தட்டி நின்றது. டீ ஷர்ட் முகத்தை மூடியது.
கட்டளை வந்ததும் வெளவால்கள் பறந்தன..
***
–ரமேஷ் ரக்சன் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் 16, ரகசியம் இருப்பதாய், பெர்ஃப்யூம் மற்றும் ஒரு நாவல் “நாக்குட்டி” வெளிவந்துள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com /