பாரதிராஜா
எட்வர்ட் ஸ்னோடன் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் என்ன செய்தார் என்பதும் நினைவிருக்கிறதா? அவர் செய்த வேலை பற்றி ஊடகங்கள் ஒரு பார்வையையும் அமெரிக்க அரசு ஒரு பார்வையையும் நமக்குக் கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் – அம்மாம்பெரிய வேலைகளைச் செய்யும் இடத்துக்கு எப்படிச் சென்றார் – அதற்கு முன்பும் பின்பும் என்னவெல்லாம் நடந்தன என்று அனைத்தையும் விளக்கி அவரே எழுதிய நூல்தான் ‘நிரந்தர ஆவணம்’ (Permanent Record). அவர் இந்த நூல் வெளியிடுவதற்கு முன்பே பெரும் ஆதரவாளர் கூட்டத்தைப் பெற்றிருந்தார். நூல் வெளிவந்த பின்பு அவர்களின் எண்ணிக்கை மேலும் கூடியது. “என்ன இருந்தாலும் நம் பரம்பரை எதிரி நாடான ரஷ்யாவில் போய் தஞ்சம் புகுந்திருக்கிறானே! அப்படியானால் அவர்களின் கைக்கூலிதானே இவன்!” என்று சொன்னவர்கள் கூடப் பலர் நூல் வெளிவந்த பின்பு அவரின் விளக்கங்களைப் படித்துவிட்டு மனதை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக, இரண்டு வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, செய்ய நினைத்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொன்று, அதை ஏன் செய்தேன் என்ற விளக்கத்தையும் தெளிவாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்புதான் முழுமையான ஆதரவு கிடைக்கிறது.
இந்த நூலுக்கு இப்படியொரு பெயரை ஏன் வைத்தார்? சென்ற தலைமுறை வரை, பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் சரி, நம்மைப் போன்ற எளிய மனிதர்களானாலும் சரி, நாம் செய்யும் எவ்வளவு பெரிய குற்றத்தையும் அப்படியே மறைத்துவிட்டு எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் புதியதோர் இடத்தில் போய் புதிய வாழ்க்கை ஒன்றைத் தொடங்க முடியும். இருக்கிற இடத்திலேயே அதற்கான எந்தத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டுக்கூட புதிய மனிதனாக வாழ முடியும். குற்றங்களை விடுங்கள். குற்றமென்று கூற முடியாத எத்தனையோ தவறுகளை எல்லோரும் செய்யத்தான் செய்கிறோம். அவமானங்களைச் சந்திக்கத்தான் செய்கிறோம். அவற்றை அப்படி அப்படியே மறந்துவிட்டு வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லத்தான் செய்கிறோம். தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிந்தைய இந்த உலகத்தில், மிகவும் குறிப்பாக சமூக ஊடகங்களின் வரவுக்குப் பின் அதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. நம் ஒவ்வொரு நகர்வையும் நமக்குத் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ நமக்குத் தெரியாமலே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் ஒவ்வொரு நகர்வும் எங்கோ ஓரிடத்தில் பதிந்து வைக்கப்படுகிறது. அதை நாம் அழித்துவிட்டால், அத்தோடு அது அழிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்கிறோம். அப்படியே எதுவுமே முழுமையாக அழிக்கப்படுவதில்லை. நம் கண் பார்வையில் இருந்து மட்டும் அது அழைக்கப்பட்டிருக்கிறது. அது வேறு எங்கோ ஓரிடத்தில் ‘நிரந்தர’ ஆவணமாகத் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் தட்டியெழுப்பி வெளிக்கொண்டுவர முடியும். அமெரிக்க அரசாங்கமும் உளவு அமைப்புகளும் இப்படிச் சேகரித்துச் சேமித்து வைக்கும் வேலையை அம்பலப்படுத்தியது தான் ஸ்னோடன் செய்த வேலை.
உங்களுக்கு எதிரானவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி உங்களை ஏதேனும் செய்ய விரும்பினால் அதுவும் சாத்தியம். அதுவே நீங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் உங்களை என்னவெல்லாம் செய்ய முடியும்? ஏன் அரசாங்கத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அரசாங்கங்கள்தாம் இத்தகைய ஆவணங்களின் பெரும் பயனாளர். மக்களுக்கு எதிரான அரசாங்கங்கள் இவற்றைப் பெரிதளவில் பயன்படுத்தி தமக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களின் குரல்வளையை நெரிப்பர். மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப்படும் அரசாங்கங்களும் மக்களின் பாதுகாப்புக்காக என்று சொல்லி இந்த ஆவணங்களைப் பயன்படுத்தும். அது மக்களின் பாதுகாப்புக்காக மட்டும் பயன்படுமா என்கிற இடத்தில்தான் சிக்கல் வருகிறது. முக்கியமாக, எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்வதுதான் எங்கள் பாணி அரசியல் என்று வாழும் சுயமோகித் தலைவர்களும் அவர்களின் அடிமைகளும் இவற்றைப் பயன்படுத்தி மக்களாட்சி அமைப்பைப் பெரும் கேலிக்கூத்தாக மாற்றிவிட முடியும்.
அமெரிக்க மக்களாட்சி இருநூறாண்டுப் பழமை கொண்டது. உலகின் தலைசிறந்த மக்களாட்சி தம்முடையதுதான் என்றும் தாம்தான் உண்மையான வல்லரசு என்றும் தம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மற்ற பல மக்களாட்சிகளை விடப் பலமடங்கு முதிர்ச்சியுற்றது. அப்படியிருந்துமே ஸ்னோடன் பயந்தார். அவர் பயந்தது போலவே அடுத்து வந்த அதிபர் அமெரிக்க அரசியல் அதற்கு முன்பு பார்த்திராத மாதிரியான பல கோமாளித்தனங்களைச் செய்து காட்டினார். புலனாய்வுத் துறைத் தலைவரை அழைத்து, “நீ எனக்கு விசுவாசத்துடன் இருப்பாயா?” என்று கேட்டார். “நான் நேர்மையோடு இருப்பேன்” என்று பதில் அளித்ததால், அவரை அவமானப்படுத்திப் பொறுப்பை விட்டு நீக்கினார். இதே ஆள், தனக்கு வேண்டாதவர்கள் பற்றிய ரகசியத் தகவல்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
வெளியுலகைப் பொறுத்தமட்டில் ஸ்னோடன் ஒரு டெல் (Dell) நிறுவன ஊழியர். உண்மையில், அவர் அமெரிக்க உளவு நிறுவனங்களின் கணிப்பொறி அமைப்புகளை நிர்வகிக்கும் பணியில் இருந்தவர். உளவுத் துறையில் ஒருவர். அவரைப் போன்ற மற்றவர்களைப் போல கொடுத்த வேலையைச் செய்தோமா வீட்டுக்கு வந்தோமா என்று இராமல், ஓரிடத்தில் சில சந்தேகங்கள் கொள்கிறார், தனக்குக் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி உளவு நிறுவனங்கள் என்னென்ன தகவல்கள் எல்லாம் சேகரிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்கிறார், அப்போது ‘நம்மைக் காக்கும் அமைப்பு என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற நம் அரசாங்கம் நமக்குத் தெரியாமலே – நம் அனுமதி இல்லாமலே நம்மைப் பற்றிய இவ்வளவு தகவல்களைச் சேகரித்து வைக்கிறதா!’ என்ற அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
நம்மைப் போன்றவர்களுக்கு நம் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்படுவதோ எங்கோ ஓரிடத்தில் சேமித்து வைக்கப்படுவதோ ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. அதன் பொருள் நாம் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொள்கிறவர்கள் என்றில்லை. தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் அவற்றின் நீள அகலங்கள் பற்றியும் முழுமையாகத் தெரியாதவர்கள் – அவற்றை அனுபவித்திராதவர்கள். அவ்வளவுதான். தனியுரிமை (privacy) பற்றிய மிதமிஞ்சிய உணர்வு கொண்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில் அவரால் அதைச் செரித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
அப்படி வெளியிட்டதன் மூலம் அவர் என்ன சாதித்தார்? தன் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் கூட வாழ்வில் திரும்பக் காணவே முடியாது என்கிற நிலைக்கு வந்து நின்றார். கரணம் தப்பியிருந்தால் கண்டிப்பாக மரணம் நிகழ்ந்திருக்கும். சர்வ வல்லமை படைத்த அமெரிக்காவின் உளவு ரகசியங்களையே வெளியிடும் அளவுக்குப் போகிற துணிச்சல் சாதாரணப்பட்டதில்லை. வாழ்நாள் சிறை, நாடு கடத்தல், தற்கொலை அல்லது கொலை – இவற்றுள் ஒன்றுதான் நிச்சயமான முடிவு என்று தெரிந்தும் இப்படியொரு வேலையைச் செய்யத் துணிந்தது எதனால்? ஏதோவொன்று அவருக்கு அந்த அளவுக்கு மனதை உறுத்தியிருக்க வேண்டும். வேறு ஏதோ தன்னல நோக்கம் இருந்திருக்கலாம் என்று சொல்வோரும் உண்டு. நூலைப் படித்து முடிக்கும் போது இரண்டில் ஒரு தெளிவான முடிவு உங்களுக்குக் கிடைக்கும்.
2013-இல் அவர் இதை வெளியிட்ட போது, அவருக்கு வயது 29. கணிப்பொறிகளையும் தொழில்நுட்பத்தையும் சராசரி மனிதர்களைவிடக் கூடுதலாக அறிந்திருப்பவர்களுக்கு இந்தப் புதிய உலகம் வழங்கும் வாய்ப்புகளுக்கு அளவே இல்லை. அப்படியான ஒருவர் தான் ஸ்னோடன். திறமைமிக்க இளைஞர். தாய்-தந்தை, மூதாதையர் உட்பட குடும்பத்தில் பலர் அமெரிக்க இராணுவத்திலும் பாதுகாப்பு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்கள். உடம்பெல்லாம் நாட்டுப்பற்று கொப்பளிக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தவர். இவரே இராணுவத்தில் சேர்ந்து, தன் ஆற்றலுக்கு மீறிய சுமையைச் சுமக்க நேர்ந்ததால் கால்களை முறித்துக்கொண்டு விடுபடுபட்டவர். “அதனால் என்னிடம் வந்து இந்த நாட்டுப்பற்று பற்றிப் பாடம் நடத்தும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்” என்கிறார். அப்படியானவர் இப்போது அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்வின் எஞ்சிய நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அதில்தான் சிக்கலே இருக்கிறது. அதனாலேயே இன்னும் அவர்மீது ஒரு சந்தேகக்கண் இருக்கிறது. அதற்கான விளக்கத்தை நூலில் கொடுத்திருக்கிறார்.
உலகத்துக்கு ஓர் உண்மையைச் சொல்ல நூல் எழுதியவர், நூலின் முதற்பாதியில் ஏன் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தன் தொழில்நுட்பத் திறமைகள் பற்றியும் அவ்வளவு பேசியிருக்கிறார் என்று தோன்றவே இல்லை. அவர் சொல்லியிருக்கும் எல்லாமே நூலின் குறிக்கோளுக்கு வலுசேர்க்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லும் போதுதான் வாசிப்பவருக்கு இவரால் எப்படி இது முடிந்தது என்பதும், எதனால் இப்படியொரு வேலையில் இறங்கினார் என்பதும் நன்றாகப் புரியும்.
அவர் சொன்னது இதுதான்: “அமெரிக்கர்கள் மட்டுமல்ல, இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அமெரிக்க அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறான். நீங்கள் ஒரு முறையேனும் உங்கள் வாழ்க்கையில் ஒரு கணிப்பொறியையோ தொலைபேசியையோ தொட்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பேசும் ஒவ்வோர் அழைப்பும் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலும் மின்னஞ்சலும் கண்காணிக்கப்படுகிறது. இப்படி ஒன்று நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.”
நூல் முழுக்கவும் திரைப்படம் பார்க்கும் உணர்வு கொடுக்கும் பல காட்சிகள். தனக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடாமல் முதலில் எப்படி அமெரிக்காவை விட்டு ஹாங்காங் தப்பி ஓடினார், ஊடகங்களை எப்படி லாவகமாகப் பயன்படுத்தினார், எக்குவடோர் நோக்கிப் பயணப்பட்டவர் எப்படி ரஷ்யாவில் போய் இறங்கினார், ரஷ்ய விமான நிலையத்தில் ரஷ்ய உளவுத்துறையினர் எப்படி இவருக்கு உதவுவது போல் கரம்நீட்டி இவரைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பவற்றையெல்லாம் விளக்கியிருக்கிறார். தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்கிறார். ரஷ்யாவிலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் உரிமையைப் பெற்றுவிட்டார். அப்படியிருக்கையில் அவர் ரஷ்ய உளவுத்துறைக்கு ஒத்துழைக்காமல் அங்கு வாழ முடியுமா என்று தெரியவில்லை. தாய்நாட்டைப் பற்றி இவ்வளவு தகவல்கள் வைத்திருக்கும் ஒருவரை எதிரி நாடு எப்படி நடத்தும் என்கிற கேள்வி ஒருபுறம் என்றால், தாய்நாட்டையே அம்பலப்படுத்தத் தயங்காதவன் தமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று கருதுவார்கள் என்கிற கேள்வியும் வருகிறது.
இம்புட்டு வேலையையும் தன் காதலிக்குத் தெரியாமலே செய்து முடிக்கிறார். உளவு நிறுவனங்களில் பணிபுரியும் எல்லோருக்கும் இருக்கும் கட்டாயந்தான் அது. ஆனால் அவற்றின் ரகசியங்களை உலகத்துக்கே அம்பலப்படுத்த முடிவு செய்த ஒருவர், அவற்றைத் தன் காதலியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது பெரிய விஷயந்தான். திடீரென்று ஒருநாள் புத்தர் தன் குடும்பத்தை விட்டுக் கிளம்பியதைப் போல இவரும் காதலிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்.
குறிப்பிட்ட மனிதர்களைக் குறிவைத்துச் செய்யப்படும் கண்காணிப்புகள் காலங்காலமாக இருக்கின்றன. ஒருத்தர் விடாமல் எல்லோரையும் கண்காணிக்கும் வேலை, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னரே தொடங்கியது. அமெரிக்க உளவுத்துறை வரலாற்றில் நிகழ்ந்த இந்தப் பெரும் மாற்றம் எப்படி நடந்தது என்பதைத் தன் கண்முன்னால் கண்டதாக விளக்குகிறார். அந்தப் பாதகச் செயலுக்குத் தான் தொழில்நுட்ப ரீதியாகத் துணை போனவன் என்று வருந்துகிறார். அப்படியான ரகசியங்கள் ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் நூலில் அப்படி எதுவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் விடப் பயங்கரமான விழிப்புணர்வு ஒன்று கிடைக்கும்.
ரஷ்யாவில் போய் இறங்கியதைப் பற்றியும் பின்னர் தன் காதலியும் ரஷ்யா வந்து சேர்ந்தது பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் அங்கே இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை. அதற்கடுத்து எழுதிய நூலில் அதுபற்றிச் சொல்லியிருக்கிறார். ‘செய்தித்துறையின் சுதந்திரம் அறக்கட்டளை’ (Freedom of the Press Foundation) எனும் அமைப்பின் இயக்குனர் வாரியத்தில் ஒருவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தனியுரிமை பற்றிய குடிமக்களுக்கான விழிப்புணர்வு உரைகள் ஆற்றிக்கொண்டிருக்கிறார்.
கூடுதல் பாதுகாப்பு நல்லதுதான். ஆனால் உலகெங்கும் இப்போது நடந்து வரும் மாற்றம், நாட்டுப்பற்று என்ற பெயரிலும் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரிலும் நமக்கே தெரியாமல் நம் உள்ளாடையை உருவிவிடும் வேலை. நம் வளங்களையும் அவற்றைவிட விலைமதிப்பு மிக்க நம்மைப் பற்றிய தகவல்களையும் திருடுபவர்கள், நாட்டுப்பற்றையும் நாட்டின் பாதுகாப்பையும் சொல்லி என்ன செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற புது நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். இதில் நாம் எதுவும் இழக்கவில்லை; யாரோ சிலர்தான் பாதிக்கப்படுகிறார்கள்; அதையும் வேடிக்கை பார்த்து ரசிக்கலாம் என்கிற புத்தி இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியவே புரியாது. நம் குருட்டுத்தனம் நமக்குத்தான் பெருங்கேடு. உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்புக்காக எல்லோரும் சில வசதியின்மைகளை அனுபவிக்கத்தான் வேண்டும். அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டிச் செய்யப்படும் ஒவ்வொரு வேலையையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்; கேள்வி கேட்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஸ்னோடன் நம்மிடம் விதைக்கிறார். அந்தப் போர்வைக்குள் தான் ஆகப்பெரும் மோசடிகள் நடக்கின்றன. கேள்வி கேட்பார் இன்றி. இதையெல்லாம் படித்துவிட்டு அமெரிக்காவில் தான் இப்படியெல்லாம் நடக்கிறது, நம்நாட்டில் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று நம்புபவர்கள் முக்கியமான உண்மையைத் தவறவிடுகிறவர்கள். அமெரிக்கர் ஒருத்தருக்குத்தான் அதைக்கண்டு கோபம் வந்திருக்கிறது; தன் அரசாங்கத்தையே எதிர்த்துப் போரிடும் அளவுக்கு தைரியமும் ஆற்றலும் இருந்திருக்கிறது. இதை நம்நாட்டில் செய்ய முடியுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தத்துவார்த்தமான தளத்தில் நின்று பேசினால், மனிதன் மாறுபவன். நேற்று செய்ததை நாளை மறந்துவிட்டு வேறொன்றாய் மாறுவது எல்லோர் வாழ்விலும் நடப்பது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கலாம். மாற்றமும் வளர்ச்சியின் ஒரு பகுதியே. அப்படி மாறிவிட்டவனை மாறவிடாமல் நினைவுபடுத்தித் தண்டிக்கும் வல்லமையை இந்த அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. மாறினாலும், பழைய கொள்கைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்குவதில் இன்பம் கொள்ளும் அமைப்புகள் இவை. இதுவும் அடிப்படை உரிமைக்கு எதிரான ஒன்றுதானே!
ஸ்னோடன் அம்பலப்படுத்தியிருப்பது அமெரிக்க அரசாங்கம் செய்யும் கண்காணிப்புகள் பற்றி மட்டுமே. இதே வேலையைத் தனியார் நிறுவனங்களும் செய்துகொண்டிருக்கின்றன. “அரசாங்கம் செய்வதுகூடப் பரவாயில்லை. அவர்கள் மக்கள் நலனுக்காகவோ பாதுகாப்புக்காகவோ செய்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வார்களோ!” என்றொரு சாரார் பதறுகிறார்கள். “தனியார் நிறுவனங்கள் கூடப் பரவாயில்லை. நம்மால் அவர்களுக்கு லாபமில்லை என்று தெரிந்துவிட்டால் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அரசாங்கங்கள்தாம் பெரும் அச்சுறுத்தல். அரசியல் முதிர்ச்சியற்ற நாடுகளில் இந்தத் தகவல்கள் எதிர் கருத்து கொண்டவர்களையெல்லாம் சித்திரவதை செய்யப் பயன்பட்டுவிடும்” என்று இன்னொரு சாரார் அஞ்சுகிறார்கள். இது ஏற்கனவே பல நாடுகளில் நடப்பதையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! இதன் உச்சகட்ட பயங்கரம் என்பது அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் வைத்துக்கொள்ளும் திருட்டுக் கூட்டணி. பொது ஊடகங்களைப் போலவே சில சமூக ஊடக நிறுவனங்களும் ஆளுங்கட்சிகளிடமும் தலைவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அடுத்த கட்டத்துக்குப் போய் அவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். தூக்கம் வராது. எனவே, ஸ்னோடனின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், தனியார் நிறுவனம் ஒன்றில் அவர்கள் நம் தகவல்களையெல்லாம் வைத்துக்கொண்டு செய்யும் தகிடுதத்தங்களை அருகில் இருந்து பார்க்கும் இன்னொருவர் இது போல வெளியே வந்து அவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும். நமக்கொன்றும் தெரியாததில்லை. ஆனால் தேவையான அளவு அதன் தீவிரத்தை உணர்ந்திருக்கிறோமா என்பது சந்தகமே.
இப்படியொரு பெரும் அம்பலப்படுத்தலைச் செய்ததன் மூலம் அவர் என்ன சாதித்தார் என்ற கேள்விக்கே மீண்டும் வருவோம். அமெரிக்க உளவுத் துறையின் செயல்முறைகளில் ஒரு சிறு மாற்றத்தையேனும் செய்தார்களா? ஆம். செய்தார்கள். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கொத்தாகப் பொது மக்களின் தொலைபேசி உரையாடல்களைச் சேகரிக்கக் கூடாது என்ற சட்ட மாற்றம் கொண்டுவரப்பட்டது. தம்மைப் பற்றிய தகவல்கள் அரசாங்கத்தாலும் அமேசான், பேஸ்புக், கூகுள் போன்ற தனியார் நிறுவனங்களாலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்ற விழிப்புணர்வு அமெரிக்க மக்களிடையே பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் – நீங்கள் எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், என்னென்ன செய்கிறீர்கள் என்ற எல்லாத் தகவல்களும் ஏதோவோர் இடத்தில் பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. அவை வெளிவருமா வராதா என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
அமெரிக்க அரசையும் உளவு நிறுவனங்களையும் பொறுத்தமட்டில் அவர் ஒரு துரோகி, அதுவும் எதிரியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் துரோகி, நாட்டின் பாதுகாப்பையே சீரழிக்கும் வேலைகளைச் செய்தவர். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர் செய்தது திருட்டு. அவரோ அதற்கு வேறொரு விளக்கம் கொடுக்கிறார். “எது அமெரிக்கா? அமெரிக்க அரசும் உளவு நிறுவனங்களுமா அல்லது அமெரிக்க மக்கள்தாம் அமெரிக்காவா? யாருக்கு நான் உண்மையோடு இருக்க வேண்டும்?” என்கிறார். தான் மக்களுக்காகத்தான் அரசும் உளவும் என்று நம்புகிறவன் என்றும், அவர்களுக்கே உண்மையாக இருப்பேன் என்றும், அம்மக்களுக்குத் தம்மைப் பற்றிய தகவல்கள் எப்படியெல்லாம் சேகரிக்கப்படுகின்றன – சேமிக்கப்படுகின்றன – பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிந்தே தீர வேண்டும் என்றும் வாதிடுகிறார். அதற்கும் மேலாக, இத்தகைய கண்காணிப்புகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது என்றும் நிறுவ முயன்றிருக்கிறார். இந்த வாதத்தை ஏற்றுக்கொள்பவர்கள், அவரை தன் நலனை விடப் பிறர் நலனையும் தான் நம்பிய குறிக்கோள்களையும் பெரிதாக நினைத்த வீரன் என்றும் நாயகன் என்றும் கொண்டாடுகிறார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள், துரோகி என்கிறார்கள். அவர் செய்தது துரோகந்தான்; ஆனால் அதைவிடப் பெரிய குறிக்கோள் ஒன்றுக்காக அதைச் செய்ததால் அவரை மன்னிக்கலாம் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள்.
பின் குறிப்பு: இந்த நூலைப் படித்து முடித்த நிமிடத்திலிருந்து பேஸ்புக் கணக்கை அழித்துவிட வேண்டும் என்று எண்ணி அதையும் வெற்றிகரமாகச் செய்துவிட்டேன். ஸ்னோடன் சொல்வது போல, அது என் கண் பார்வையிலிருந்து மட்டுந்தான் நீக்கப்பட்டிருக்கிறது; முழுமையாக அழிக்கப்பட்டுவிடவில்லை என்பதையும் அறிவேன்.
***
பாரதிராஜா, தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com
இந்தக் கட்டுரை, பெகாசஸ் பிரச்சனை வெளிவரும் முன்பே எழுதியதுன்னு சொன்னா, யார் நம்பப் போறாங்க! 🙂