வேல் கண்ணன்
உப்பளங்கள் கரிக்கும் நிலத்தில் நின்றபடியே ஆன்லைன் ஆர்டர் கொடுத்த பெப்பரோனி பீட்சா(pepperoni pizza)வைச் சவச்சப்படியும் வெப்பக்காற்று எரிக்கும் நிலத்தில் ‘சில் பீர்’ சீப்பியபடியுமான, திணைகள் மருவிய, பிறழ்ந்த, கலங்கிய காலகட்டத்தில் “என் நிலம்” என்பது எங்கே? எப்போது? என்னும் கேள்வியை எழுப்புகிறது.
“என் படைப்புகளில் என் நிலம்” என்பதைவிட என் படைப்புகளில் நான் வாழ்ந்த, வாழும் நிலம் என்று பொருத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
கவிஞர் யவனிகா ஸ்ரீராம் படைப்புகளில் பெருங்கனவு நிலம் ஒன்று உலவுகிறது. இந்த நிலம் வருவதற்கு காரணமாக, நாம் சார்ந்த நிலத்தின் செழுமை, வளமை, இயல்புக்கு மேலதிகமாகச் சுரண்டப்பட்டு, “நிலம் சார்ந்த மனிதர்கள்” என்ற நிலைமாறி “மனிதர்கள் பிடித்து வைத்திருக்கும் மிச்ச நிலமாக” மாறியது காரணம் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்தியல் ஒப்புக்கொண்டதின் வெளிப்பாடே, என் கவிதையான ‘என் நிலம் சார்ந்து பாட என் நிலத்தில் என்ன இருக்கிறது’, ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’. இது என்னுடைய இரண்டாம் தொகுப்பில் இடம் பெற்றது.
என்னுடைய இலக்கற்ற தீவிர வாசிப்பு தொடங்கிய காலம் குறைந்த கார்காலமும் அதிக பனிக்காலமும் அதைவிட அதிகமான வேனிற் காலமும் தன்னகத்தே கொண்ட திருவண்ணாமலையில் வாழும்போது நிகழ்ந்தது. இந்த வாசிப்பும் தேடுதலும் இவ்வுலகை, பொதுப் புத்தியில் இருந்து முற்றிலும் விலக்கிய பார்வை தந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு நிகழ்வு, ஒரு சினிமா, கதை, கவிதை, அரசியல் மாற்றம், மனிதர்களின் சல்லித்தனம், மகோன்னதம், சமூக அமைப்பு குறித்து ஓரளவிற்கு புரிதலும் பார்வையையும் மாற்றியது.
என்னுடைய முதல் தொகுப்பில் (இசைக்காத இசைக்குறிப்பு) இந்தப் புரிதலுடன் என் படைப்புகள் இருந்ததா? நிச்சயமாக இல்லை. ஆனால் நான் வாழ்ந்த மலை சார்ந்த நிலத்தில் அழுத்தமாக கால் ஊன்றி நின்று, அண்ணாந்து பார்த்தும் சுற்றும் முற்றும் பார்த்தும் வியப்புற்றும் ஆற்றாமையுடனும் குறிப்பாக ஈழத்தில் நடந்தேறிய இன அழிப்பு பெருங்கொடுமை கண்டும் எழுதியது என்று சொல்லலாம்.
முதல் தொகுப்பில் வரும் மலை, மரங்கள், இளமஞ்சள் வெயிலும் நான் வாழ்ந்த நிலத்தின் பகுதிகள். குறிப்பாக மரம். திருவண்ணாமலையில் நான் வசித்த வீட்டில் அசோக மரங்கள் இருந்ததால், ‘அசோக மரத்து வீடு’ என்பார்கள். அதே தெருவில் இருக்கும் எனது பள்ளி நண்பர் அண்ணாமலை வீட்டில் தெரு நண்பர்கள் அதிகம் புழங்கவும் விளையாடவும் செய்வோம். அந்த வீட்டிற்கு ‘வேப்ப மரத்து வீடு’ என்பார்கள். நான் அதிகம் இந்த மரங்களின் மடியில் ஒட்டியபடியே கிடப்பேன். அண்ணனின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில்(அடையாறு) ஒரு வேப்பமரம் இருந்தது. சிலவேளைகளில் நானோ, அவரோ சாய்ந்தபடி நின்று பேசிக்கொண்டிருப்போம். அவரின் இழப்பை “பச்சையம்” என்ற கவிதையை இந்த மரங்களுடன் எழுதியிருந்தேன். அதேபோல், எழுதத் தொடங்கிய நாட்களில் நான் வாழ்ந்த ஊர், மலைகள் சூழ இருந்த “சைலம்” என்ற சேலம். அந்தச் சமயத்தில் பொழுது கழிந்தது எல்லாம் சுற்றி இருக்கும் ஏதாவதொரு மலையின் அடிவாரத்தில்தான். இதுவே இன்றுவரை என்னையுமறியாமல் மலைகளும் மரங்களும் வெளிப்படுகின்றன. இந்த நிலத்து சூழலின் தன்மையில் மனித இயல்புகளும் இழப்புகளும் காதலையும் காமத்தையும் ஏமாற்றங்களையும் கொண்டாட்டங்களையும் வலிகளையும் எழுதிவருகிறேன் என்று நம்புகிறேன்.
இரண்டாம் தொகுப்பான ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’ வெளிவர ஐந்து வருடமானது. இந்த இடைவெளியில் கவிதையின் வீரியத்தை, தேவையை, சமகால நீட்சியை, சூழல் சார்ந்து இயங்கும் நிலத்தின் இயல்பை, காலத்தின் அவசியத்தை, இன்னும் இணக்கமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிகம் எழுதவில்லை என்றாலும் கவிதை சார்ந்து நிறைய பயணப்பட்டேன்.
முன்பே படித்த பல ஆளுமைகளின் கவிதைகள், படைப்புகளை மறுவாசிப்பு செய்தேன். அதில் இயங்கும் நிலம், காலம் குறித்த அவதானிப்பு முற்றிலும் வேறு கோணத்தில் தென்படத் தொடங்கியது. இரண்டாம் தொகுப்பை ஓரளவிற்கு இவ்வகையான புரிதலுடன் செய்தேன்.
தற்போது, பத்து வருடத்திற்கு மேலாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெருநகரமான சென்னையின் தன்மையை “நகரப் பெருவாழ்வு தனை”, “நேற்று இன்று நாளை”, “வழிகளை மாற்றிக்கொள்பவன்” போன்ற பல கவிதைகளில் வெளிப்படுத்தினேன்.
முன்பெல்லாம் திருவண்ணாமலையில் ஓரிரு நாட்கள் பெய்யும் கோடை மழையானது கடந்த இரண்டு வருடமாக, நெடுநாட்கள் நீடித்து பொழிந்து, வெக்கையின் அளவைக் குறைத்திருக்கிறது. மார்கழியில் கொட்டும் கடும் பனி, கார்த்திகை மாதத்திலேயே கவிழ்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்தை நேரடியாக உணர முடிகிறது. ஒருபக்கம் மகிழ்வாக இருந்தாலும் ஒருவித சந்தேகமும் எதிர்காலம் குறித்த கலக்கமும் இல்லாமல் இல்லை. இதன் வெளிப்பாடாகவும் நிலம் என்பதை இடப்பெயர் கொண்டு நேரடியாகச் சொல்லாமல், அதன் சூழல், தகவமைப்பு, காலம் அது தரும் உள் உணர்வுகளை முடிந்தவரைக்கும் இப்போது எழுதிவரும் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறேன்.
ஐந்திணைகளைக் கொண்டாடிய தமிழ் நிலத்தின் இழந்த வளமைகளை, என் கவிதையில் வரும் கனவுக்குள்ளும் மாயத் தன்மைக்குள்ளும் பொதித்து எழுதுகிறேன்.
மாயக்கனவுகள் தொன்மங்களை மீட்டெடுக்கும் ஒரு வழி என்பதறிவோம்.
***
வேல் கண்ணன் – திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.
இசைக்காத இசை குறிப்புகள், பாம்புகள் மேயும் கனவு நிலம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: velkannanr@gmail.com