Saturday, November 16, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்என் படைப்பில் என் நிலம்

என் படைப்பில் என் நிலம்

கலைச்செல்வி

னது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில் வேலைநிமித்தமோ வேறு எந்த நிமித்தமோ குடியேறி கொள்ளும் இடத்தையா? திருமணமாகி சென்று சேரும் ஊரையா? அவரவர் வாங்கும் திறனுக்கேற்ப கிடைக்கும் யாரோ ஒருவரின் முன்னாள் வயற்காடு அல்லது ஏதோ ஒரு ஊரின் முன்னாள் சுடுகாடு அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நீர்நிலை அல்லது ஏமாற்றி தலையில் சுமத்தப்பட்ட அரசாங்க புறம்போக்கு என்றிருக்கும் பூமியில் வீடு கட்டிக்கொண்டு காலம் முழுதும் கடனை சுமக்க வைக்கும் தற்போதைய வாழ்விடத்தையா? எதை நமது நிலமென்பது? உடைமை கொண்டதெல்லாம் பிடித்தமானதாகி விடப்போவதில்லை. உரிமை இல்லாததன் மீது பிரியம் வராது என்பதை சொல்வதற்குமில்லை.

எனக்குமே இந்த பிரச்சனை இருப்பதுண்டு. என் தந்தையார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரின் பிறப்பு வளர்ப்பு படிப்பு எல்லாமே மலேசியா நாட்டில்தான். திருமணம், வேலை என்றளவில் இந்தியாவுக்கு வந்து விடுகிறார். அவருக்குமே இந்தியா புதிதுதான். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணி. அங்கேயே டவுன்ஷிப் அரசு குடியிருப்பில் தங்கல். திருச்சியை பூர்விகமாக கொண்ட மனைவி (என் அம்மா). மெல்ல அவருக்கு இந்தியா பழகிப்போக, குருவிக் குஞ்சுகளாக நாங்கள். எனது இளமைப்பருவம் டவுன்ஷிப் குடியிருப்பில். எங்கோ தொடங்கி நீண்டு கிடக்கும் இரட்டை தார்ச்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட வரிசை வீடுகளில் ஒன்று எங்களுடையது. தாவரங்களுக்கு நடுவே காங்கிரீட் கட்டடம் முளைத்தது போன்ற வீடுகள் ஒவ்வொன்றும் அடுத்த வீட்டிலிருந்து (பக்கத்து வீடு என்று சொல்ல முடியாதளவுக்கு) கணிசமான தொலைவிலிருக்கும். பெரிய முன்புற வாசல், பிறகு கேட், பாலக்கட்டை என்று அழைக்கப்படும் Slab, அதை தாண்டி சிறு மண் பரப்பு, பிறகே தெரு ஆரம்பிக்கும். நெய்வேலியில் மிதிவண்டி இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். ஓட்டத் தெரியாதவர்கள் கிண்டலுக்குட்பட்டவர்கள். அலுமினியப் பெட்டிக்குள்ளிருக்கும் பென்சில் பாக்ஸில் (பேனா, பிளேடால் குறுக்காக வெட்டி தரப்படும் அரைத்துண்டு ரப்பர், காந்தி பென்சில், ரீஃபில் (மட்டும்) என்று அவற்றுள் மற்றெல்லாமும் இருந்தாலும் அதன் பெயர் பென்சில் பாக்ஸ்தான்) எட்டணா (50 பைசா) வைத்து அனுப்புவார்கள். சைக்கிள் டயரில் காற்று இறங்கிப் போனால் அடிப்பதற்கு. குறுக்கும் நெடுக்குமாக ஓடி நகரை இணைத்தும் பிரித்தும் கொண்டிருக்கும் தார்ச்சாலைகள் பல நேரங்களில் முடிவதேயில்லை. அதற்கு அதன் நீளங்களை தாண்டி அங்கு ஆளரவமற்று இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒழுங்கு… ஒழுங்கு… வீட்டிலும் வெளியிலும் எல்லாமே ஒழுங்குதான். பள்ளி நாட்களில் மாலை நாலரையிலிருந்து ஆறு மணி வரையிலும் விடுமுறை தினங்களில் (மாலை நேரத்தை தவிர்த்து) நேர வரையறையின்றியும் கிடைக்கும் புத்தக வாசிப்புக்கான அனுமதி எனக்கு மிகவும் பிடித்தமானது. நிலத்தை விட புத்தகங்களே அதிகம் கவர்ந்தன என்னை.

திருமணமானதும் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஊர் ஒன்றில் தனிக் குடித்தனம். அது மனதில் ஒட்டுவதற்குள் சென்னையில் அரசுப்பணி மற்றும் தங்கல். கருநிழலென மேலே கவிழ்ந்து கிடந்த நாட்களை முழு விசையோடு தள்ளி விட்டபோது நிறைய மாதங்கள் கடந்திருந்தன. எப்படியோ மாற்றல் பெற்று திருச்சி மாவட்டத்துக்கு திரும்பிய சிறிது காலத்திற்கு மாநில அரசு குடியிருப்பில் தங்கல். பிறகு அதே திருச்சியில் சொந்த வீடு. இவை காலம் என்னை நகர்த்திக் கொண்டு சென்றவை. விருப்போ வெறுப்போ இன்றி நகர்ந்தவை.

எனக்கான நிறைவை நான் இலக்கியத்தின் வழியே பெற்றுக் கொள்ள முடியும் என்று கண்டடைந்தபோதுதான் நிலம் என்பது விருப்பதற்குரியதாகவும் இருக்க முடியும் என புரியத் தொடங்கியது. நான் எழுத தொடங்கிய ஆரம்ப காலத்தில் எனது சிறுகதைகள் நிலமற்றும் அதே சமயம் நகர வாழ்க்கை சூழலிலும் அமைந்திருந்தன. (கிராமப்புற வாழ்க்கை எனக்கு இன்னமுமே பரிச்சயமாகாததொன்றுதான்). சிறுகதைகள் எழுத தொடங்கியபோதே நாவல் எழுதும் ஆசையும் மேலோங்கியது. ‘சக்கை’ எனது முதல் நாவல். அந்நாவலில் நிலமானது என்னையுமறியாமல் பெரிய கதாபாத்திரமாக வந்தமர்ந்திருந்ததை பின்னரே உணர்ந்து கொண்டேன். கல்லுடைக்கும் தொழிலாளிகளை பற்றிய அந்நாவல் வறண்ட நிலத்தின் மீது எழுந்திருந்தது. வானம் பார்த்த பூமியில் விவசாயத்தின் மீது நம்பிக்கையிழந்த இராமநாதபுரம் மாவட்டத்து மக்கள் தமிழ்நாடெங்கும் பரவலாக வாழத் தலைப்படுகின்றனர். அப்படியான ஒரு குழு மலைகள் மிகுந்த பெரம்பலுார் மாவட்டத்திற்கு கல்லுடைக்கும் தொழிலுக்கு வந்து சேர்கிறது. தலைமுறைகள் தாண்டுகின்றன. நாடும் வளர்கிறது. தொழில்கள் இயந்திரமயமாகின்றன. கல்லுடைக்கும் இயந்திரங்கள் புழக்கத்திற்கு வரும்போது தொழிலாளிகள் வேலையிழக்கின்றனர். அந்நாவலின் ஆரம்பமே இப்படித்தான் அமைந்திருக்கும்…

‘உள்ளேன் அய்யா…’ என்று பூமி மட்டத்தின் மேல் ஆங்காங்கே கை உயர்த்தி நிற்கும் உயர உயரமான மலைகள். ‘நாங்களெல்லாம் முன்னாள் மலைகளாக்கும்’ பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் பெரும் பாறைகள். குறுக்காக உடைந்து ஏகதேசம் செங்குத்தாக நிற்கும் பாதி பாதி மலைகள். இது மண் மலையல்ல… கல் மலைதான் என்பதை பறைசாற்றிக் கொண்டு அதன் மேல் முளைத்திருக்கும் மரமாக முடியாத செடிகள்… முடிந்தளவுக்கு அந்த மலையிலேறி அங்கிருக்கும் செடிகளை உணவாக்கிக் கொண்டிருந்த ஆடு மாடுகள், அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்ட தெம்போடு ஆங்காங்கே அடர்வற்று இருக்கும் மரங்களின் நிழற்சிதறல்களில் வம்பு பேசிக் கொண்டிருக்கும் கிராமத்து மக்கள்… துாக்குச்சட்டியுடன் கண்ணயர்ந்த பெரிசுகளை துாங்க வைத்து துாங்க வைத்து எழுப்பிக் கொண்டிருந்த மண் பறக்கும் காற்று… மரமட்டை அதிகமில்லாத பூமியில் என்னால் இவ்வளவு மண்ணைதான் பறக்காமல் தடுக்க முடியும் என்று காற்றுக்கு காதோரம் சேதி சொல்லிக் கொண்டிருக்கும் கருவேலஞ்செடிகள் என அன்றைய காலை நேரம் வெகு ஜோராக களைகட்டிக் கொண்டிருந்தது.

இம்மண்ணும் தொழிலும் என் வாழ்க்கையோடு பழகி விட்ட ஒன்று என்றாலும் அதன் மீது பெரிதாக லயிப்பு ஏதும் ஏற்பட்டதில்லை எனக்கு. ‘புனிதம்’ என்ற எனது அடுத்த நாவலின் கதை சென்னையிலிருந்து அப்படியே மேலேறி டெல்லிக்கு சென்று விடுகிறது.

முகலாயர் காலத்து வீடுகளும் ஆங்காங்கே சில மனிதர்களும் இன்னமும் மிச்சமிருந்து வரலாறை நிதர்சனமாக்கிக் கொண்டிருந்தனர். பான் பீடாவை வாயில் அதக்கியபடி முஜ்ராக்களுக்கு செல்லும் பழக்கவாதிகள் பழங்காலத்தை முதுகில் சுமந்து திரிந்தனர். லௌகீகத்தின் முடிவில் தோன்றும் மெய்ஞானத்தின் தொடக்கமாய்.. ஒளி பொருந்திய ஒலியாய்.. ‘அல்லாஹு அக்பர்’ காற்றில் புனிதத்தை நிரப்பி உடலையும் உள்ளத்தையும் ஒருசேர சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. தொழுகையின்போது நிலவும் அமைதிக்குள் இறைதத்துவம் இறைந்தாற்போலிருந்தது. சிறிதுசிறிதான சந்துகள் ஒன்றாகி ஒரு ஒழுங்கமைந்த பாதையை உருவாக்கிக் கொண்டன. மொகலாய பராம்பரியத்தில் எழுந்து நின்ற பெரிய வீடுகள் சட்டென்று மனதை இறுக்கி பிடித்தது. ஏதாவது ஒரு வீட்டிலிருந்து பாபரோ அக்பரோ தனது பரிவாரங்களோடு வந்து விடுவார்களோ என்று கூட தோன்றியது.

மேலுள்ளவை பெருநகர வாழ்வை தொட்டுச் செல்லும் அந்நாவலின் சில வரிகள். நான் அந்நகரங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை படைப்பில் கொண்டு வந்திருந்தேன். உடலின் இரத்தநாளங்களை போல டெல்டா பகுதியில் ஓடும் ஏ,பி,சி,டி வாய்க்கால்களை போல சாந்தினிசௌக்கின் நெருக்கமான வீதிகள் அப்போது பிரமிப்பை உருவாக்கியிருந்தன.

‘அற்றைத்திங்கள்’ எனது நாவல் அனுபவத்தில் மூன்றாவது படைப்பு. பரணி என்ற பெண்ணின் பயணங்களின் ஊடாக கட்டமைக்கப்பட்ட அந்நாவல் தன் துழாவலை காடுகளில் அமைத்துக் கொண்டது. புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் செய்யப்படும் காடழிப்பு, பழங்குடிகளின் வாழ்வுரிமை பறிப்பு போன்றவற்றை அந்நாவல் பேசுகிறது. நாவல் காட்டுக்குள் நுழைகிறது.

பாதை மடிந்து திரும்பியது. பசுமைக் குகைக்குள்ளிருந்து வருவது போல அடர்மரங்களுக்குள் புகுந்து வெளி வந்தபோது ஓடையின் அகலம் கூடியிருந்தது. கோரைகள், கரையில் ஆளுயுரத்திற்கு உயர்ந்திருந்தன. ஓடைக்கு குடை பிடிப்பது போல தாழ்ந்து படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க, அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும் மரங்களுக்குமிடையே பாலம் போல தொங்கின. அதன் குதியாட்டத்தில் சருகு இலைகள் ஓடைக்குள் உதிர்ந்தன. புத்தம்புதிய சருகு ஒன்று பழுதின்றி விழ அதன் பின்னோடு என் கண்களை நகர்த்தினேன். நல்ல அகலமான சருகு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மரத்தில் தாக்கு பிடித்திருக்கலாம். நீரின் போக்குக்கு அனுசரித்து நகர்ந்து நகர்ந்து சிறு பாறையொன்றில் தேங்கி பிறகு அதனை விடுத்து நழுவி நீருக்குள் தன் ஓட்டத்தை அதிகப்படுத்தி என் கண்களிலிருந்து மறைந்து போனது.

நான் காடுகளில் ஆர்வமாகப் பயணிக்கத் தொடங்கினேன்.

அக்குடிசையின் நீண்டிருந்த முன்பாகத்தில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டேன். வெகு மிதமான மழைதான். மெதுமெதுவான மரங்களை நனைத்தது. தண்டுகளை ஈரமாக்கியது. இலைத் துளிர்களை நீவி விட்டது. பழுத்த இலைகளுக்கு விமோசனம் அளித்தது. கைகளை விரித்து மழையை உள்வாங்கி.. பின் வெளியேற்றி என மரங்களும் கிறங்கித்தான் கிடந்தன. மழையோசை இசையாய் ஊடுருவி காட்டின் வாசனையை கிளர்ந்தெழுப்ப அது போதையாய் என்னுள் இறங்கியது. இரவா.. பகலா என கணிக்கவியலாத வெளிச்சம் காட்டை நிரப்பியது. சலனமற்றுப் போனது என் மனம். ஆர்ப்பரிப்பற்ற அமைதிக்குள் தொடர்ந்து என்னை இருத்திக் கொள்ள வேண்டுமென தோன்றியது. மழை நின்றிருந்தது. இது காட்டின் இயல்பு என்றார் அங்கிள். சிறு பறவைகளின் ஒலி சூழலின் ரம்மியத்தை கூட்டியது. எழுந்து நடந்தேன். கால்களில் ஒட்டிக் கொண்ட சேறு, உயிர் கரைந்து ஓடுவது போல மழை நீரில் தன் பிடிமானத்தை இழந்து வழிந்தோடியது. இந்நேரம் வரையாடு உடலை சிலிர்த்துக் கொண்டு தன் உடல் ஈரத்தை துறந்திருக்கும். செந்நிற மொந்தை வால் அணில்கள் மரங்களில் தாவியோடத் தொடங்கியிருக்கும்.

காடுகளில் இலயித்துப் போனேன்.

மனித நிழல்படாத பூமி பசுமையானது.. பச்சை நிறமானது.. இயற்கையானது.. அகத்திற்குள் விரிந்து விரிந்து வியாபிக்கும் தன்மை இந்த நிறத்திற்குண்டு. கவிழ்ந்திருந்த வானத்தின் நீட்சியாக இடைவெளியின்றி பசுமையை போர்த்தி கிடக்கும் புல்வெளியில் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். பிரபஞ்சவெளியெங்கும் அகமாக மாறி போக உடலென்ற வடிவு நீர்த்து விட்டது போலிருந்தது. அன்பை வரைய வரைய அது பச்சையாக மாறிக் கொண்டே இருந்தது. எனக்கு குணாவின் மீதும் செரா அங்கிளின் மீதும் பேரன்பு பொங்கியது.

இதுதான் நான்.. இதைதான் தேடுகிறேன். என் மனம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உண்மையாக அப்போதிலிருந்துதான் நான் நிலங்களை மிக அதிகமாக காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். பித்துக் கொண்டாற்போல சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் நிலங்களை வாசிக்கவும் தேடவும் தொடங்கினேன். (இக்காலக்கட்டத்தில் என்னுடைய சிறுகதைகள் அனைத்தும் காடுகளை மையப்படுத்தியே அமைந்திருந்தன). சங்க இலக்கியம் என்னை அப்படியே துாக்கி ‘ஆலகாலத்தில்’ இறக்கி வைத்தது. அது எனது மற்றுமொரு நாவல்.

‘ஆலகாலம்’ ஐந்து பகுதிகளை கொண்டது. ஐந்தும் வெவ்வேறு காலங்களையும் பல்வேறு நிலங்களையும் உள்ளடக்கியது. அதன் முதலாவது பகுதியான சங்க இலக்கிய காலம் பாணன் ஒருவனின் மூலம் ஐவகை நிலங்களிலும் பயணிக்கிறது.

மேலிருந்து பார்வைக்கு பெருமலைத்தொடர் பசும் அடுக்குகளாக விரிந்திருந்தன. இசைவாணன் பெரிய வாயை உடைய தண்ணுமையை முழங்குவது போன்று பெருத்த ஓசையுடன் அருவி காட்டாற்றில் விழ, காட்டாறு பொங்கி ஓடிக் கொண்டிருந்தது. கவிகையின் பரப்புக்குள் ஊடுருவும் அந்தி நேரத்து சூரியனையும் வெள்ளி வழிந்து ஓடுவதைப் போன்ற அருவிகளையும் காணும் ஆவலில் நானும் குழலியும் அங்கேயே நின்று விட, பெரும்பாணர் எங்களை உரத்த குரலில் அழைத்தார். உண்ணுவதற்காகதானிருக்கும் என்றாள் குழலி. ஏனெனில் அங்கு நிலம் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமின்றி அமர்ந்துண்ண ஏதுவாக இருந்தது. “நல்ல பசி“ என்றாள். நெய்யூற்றி வாட்டப்பட்ட செழிப்பான கொழுப்பு பொருந்திய பன்றியின் தொடைகள் கூடப் பசியை துாண்டி விட்டிருக்கலாம் என்றேன் நான்.

கற்பாறைகளை உயர உயர அடுக்கியது போன்றிருந்த மலைகள் எங்களுக்கு பிரமிப்பை உண்டாக்கியது. அருவி வெண்ணுரைகளாக காற்றில் பரவி முகத்தில் சாரலாக தெறிக்க, அதை கண்களை மூடி அனுபவித்தோம். தன்னிடம் அடைக்கலமென்று வருவோருக்கு வரையறையற்று வழங்கும் மன்னரின் கொடைத்தன்மையை போற்றி இன்னிசையோடு நாங்கள் இசைக்கும் பண்ணை போல, இயற்கை தம் அழகை தாமே அங்கீகரித்து நீர்மழையாக பொழிந்துக் கொள்வதுதான் அருவியோ? என்றாள் குழலி.

நாங்கள் ஆற்றின் கரையோரமாக நடந்துக் கொண்டிருந்தோம். குழலி மெல்லிய குரலில் கானமிசைக்க, கழுநீர்ப்பூக்கள் இளங்கள்ளை சொறிந்தன. கள் மணத்தில் தேனீக்கள் கிறங்கின. ஆற்றின் கரையோர மரங்களிலிருந்து உதிர்ந்த கடம்ப மலர்கள் நீரின் நெளிவிற்கேற்ப நடனம் புரிந்தப்படியே நழுவியோட, கடம்பமரங்களோ, பாணக்குடிகளின் பண்ணுக்கும் இசைக்கும் மயங்கி பரிசில்களை வாரி வழங்கும் தலைவனைப் போல மேலும் மேலும் மலர்களை உதிர்த்துக் கொண்டேயிருந்தன. நாங்கள் கரையோரமாக உருண்டுக் கிடந்த கற்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கால்களை வைத்து நடந்தோம். கானகப்பெண்கள் ஆடை நெகிழ்த்தி நீராடிக் கொண்டிருந்தனர். குழலி அப்பெண்களுடன் இணைந்துக் கொள்வதாக கூறினாள். நான் இளங்காலையை அனுபவித்தப்படியே நடக்கத் தொடங்கினேன். காஞ்சிமரம் நீர்புறமாக கிளைகளை விரித்து பரவியிருக்க அதில், சிரல்கள் மீன்களுக்காக காத்துக் கிடந்தன. இரையை கண்டுக் கொண்ட வேகத்தோடு சிரல் ஒன்று நீரில் பாய, அதன் கால் நகம் பட்டு தாமரை இலை கிழிந்தது. கவ்விய மீனோடு அச்சிரல் தாமரை மலரின் மீது அமர, கிரகணநாளில் நிலவை பாம்பு மறைப்பதுபோல தாமரையை சிரல் மறைக்க, செங்குவளையும் நீலமலர்களும் குளத்தை வண்ணங்களால் மூடிக் கொண்டன. துாண்டிலில் செருகப்பட்ட பச்சை இறைச்சியின் வாசத்துக்கு முந்தி வரும் வாளைமீன், அதனுள் மறைக்கப்பட்டிருக்கும் துாண்டிலைக் கண்டு தப்பி சதுப்பான பிரம்பு புதருக்கருகே ஓட, அங்கே படிந்திருக்கும் பிரம்பின் நிழலை துாண்டிலின் கோலாக எண்ணி தவளைகள் கால்களை அகலவிரித்துக் கொண்டு ஓடின.

பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு வாழ்க்கை என்பது விதிக்கப்பட்டதொன்று. பயணியோ பல வாழ்க்கைகளை ஒரே வாழ்க்கைக்குள் வாழ்ந்து விடலாம். வெவ்வேறு நிலங்கள், அவை உருவாக்கும் மனநிலை, அங்கிருக்கும் மக்கள், உணவு, கலாச்சார பின்னணி எல்லாமே நம்மை புத்துணர்வு கொள்ள வைக்கிறது. வாழ்க்கை விரிந்து கொண்டே செல்கிறது.

இருள் தன் ராட்சஷக்கரங்களை பெருக்கிக் கொண்டேயிருந்தது. மரங்களும், அருவிகளும் விலங்குகளும் பதிகளும் அதன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டே வந்தன. குடிசையை நோக்கி அதன் கைகள் எப்போது வேண்டுமானாலும் நீளத் தொடங்கலாம். இப்போது வீசியக்காற்றில் கொம்பனின் வீச்சமும் கலந்திருந்தது. அன்று அது மணிராசன் அடித்திருந்த குண்டுகளோடு ஆங்காரமாக பிளிறிக் கொண்டே ஓடியது. அந்த ஒலியைக் கொண்டே கொம்பன் அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்றான் மணிராசன். உண்மைதான். நாலைந்து சரிவுகளைக் கடந்து பெருமலையை போல சரிந்துக் கிடந்தது. கொம்பனின் கொம்புகள் விலையுயர்ந்தவை. தந்தத்தாலான யானைபொம்மையை முதலாளி வீட்டு வரவேற்பறையில் கண்டிருக்கிறேன். இது அசல். அசலுக்கான மதிப்பு மிக அதிகம். உற்சாகம் பீறிட வெற்றிக் கூச்சலிட்டோம். பீனாச்சியை ஒலிக்க செய்து தப்பையில் தாளமிட்டோம். கஞ்சா புகை பனியோடு சேர்ந்து படலமாக மேலெழும்ப உற்சாகத்தோடு விடிய விடிய ஆடிக் கொண்டேயிருந்தோம்.

மேற்சொன்ன இருள், அரசாங்கத்தின் நாடகங்கள் அரங்கேறும்போது பழங்குடிகள் மீது கவிழும் இருள். அச்சிறுகதையின் பெயரே கூட ‘இருள்’ தான். எனக்கு அந்த பயணத்திலிருந்து, அந்த இருளிலிருந்து வெளி வர கால அவகாசம் தேவைப்பட்டது.

அவளுடைய வீடு அதன் அடிவாரத்தில் இருந்தது. நேரங்களை கூட மலைகளில் சூரியன் எழுப்பும் ஜாலங்களின் வழியே அவர்களால் அறிந்துக் கொள்ள முடியும். ஒரு பக்கத்து சூரியன் மறுபக்கத்து மலைச்சிகரத்தை செவ்வொளியால் நிறைக்கும்போது கோதுமை வயல்கள் விவசாய ஆட்களால் நிரம்பி விடும். மலைச்சரிவுகளின் விளிம்புகளை கதிரவன் தன்னொளிக் கொண்டு கூர் தீட்டும்போது குதிரைகள் உற்சாகமாய் கனைக்கத் தொடங்கும். ஆனால் பின்னாட்களில் அவை கனைப்பதை விட பயந்து தெறித்து வால்களை துாக்கி ஓட்டம் பிடிப்பதுதான் அதிகமாக இருந்தது. காட்டாறுகள் வேகமிழக்கும்போது அவை அள்ளிக் கொண்டு வரும் வண்டல் படிவதால் உருவான சமவெளியில் இயற்கையாக முளைத்த புற்களின் ஆரோக்கியம் தங்கிய மினுமினுப்பான அவற்றினுடல் மிரட்சியில் துள்ளின. கம்பளி ஆடுகள் வழிவகை தெரியாது அலறின. அவர்களின் வரவை தெரிவிக்கும் கட்டியங்கள் என அப்போது அவர்களால் அறிய முடியவில்லை. அரசியல் நிலைப்பாடு கொள்ளுமளவுக்கோ பிரிவினைவாத வெறுப்பரசியலுக்கு செல்லுமளவுக்கோ உணரவில்லை அவர்கள்.
அந்த இளைஞன் அவளுக்காக ஆப்பிள் பழச்சாறை கண்ணாடி டம்ளரில் நிறைத்து வைத்து நீட்டிக் கொண்டிருந்தான்.

“என் பெயர் மஞ்சோன்…” என்றான் அவள் கேட்காமலேயே.

காஷ்மீரத்து மஞ்சோனுடன் சிறிது காலம் வாழத் தோன்றுகிறது.

“அண்ணா காகேசம் பக்கம் போயிருக்கப்போவுது” மூத்த சகோதரனை கேலி செய்தாள் பார்வதி. கோமதிக்கு நகைச்சுவையோ கிண்டல் கேலியோ வராது. இழப்பு அவளை மாற்றி விட்டதா அல்லது இயல்பே அதுதானா என்றறியவியலாத இளமையிலேயே அவள் வாழ்க்கை தொலைந்திருந்தது. ஆறும் கடலும் சேரும் கழிமுகமென்பதால் மழைக்காலங்களில் நிலத்தையும் நீரையும் பிரித்தறிய முடியாத சாம்பல் வண்ண வெளிக்குள் கிராமமே ஆழ்ந்து போகும். கடல் பேரோசை கொண்டு எழும்பும். காற்றும் மழையும் ஒன்றையொன்று விஞ்சும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே நதி கடலாக மாறி விடும். காலளவு நீர் இடுப்பளவில் உயர்ந்து மார்பு, கழுத்து என ஏறிக் கொண்டே வரும். நீந்தினாலும் கரையேறுவதற்கு துறை புலப்படாது. அது வெகுதுாரத்திலிருந்து உருட்டிக்கொண்டு வரும் வளங்கள் மண்ணை செழிப்பாக்கும். வயல்கள் முத்துமுத்தான தானியங்களை பெற்றெடுக்கும். பள்ளங்கள் மேடாகும். படுவூர், காகேசம் போன்ற கிராமங்கள் கூட முகத்துவார வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய மண் திட்டு என்பார்கள். இன்று உயிர்கள் பெருகி அங்கு ஜீவக்களை மிளிர்கிறது. முகத்துவாரங்களால் பள்ளத்தை மேடாக்கவும் மேட்டை ஓடையாக்கவும் முடியும். சில சமயங்களில் மேடுகள் தாவரங்களோடு அடித்துக் கொண்டுபோய் கடலில் விழுந்து மாளும். ஏரிகளாக மாறி விடும் வயல்களில் நீர் வற்றி விளைச்சல் பெருக வேண்டுமென இராமாயண பாகவதப்பிரசங்களின்போது பெண்கள் மனதார வேண்டிக் கொள்வர். ஊரே பக்திப்பரவசத்தில் மூழ்கியிருக்கும். பிரசங்கிகளுக்கு தட்சணைக்கு பஞ்சமில்லாததால் அடுத்த ஆண்டுக்கான வருகையை சம்பிரதாயமாக நிச்சயித்து விட்டு கிளம்புவார்கள்.

நிலங்கள்… நிலங்கள்.. நம்மை சுற்றிலும் எத்தனை விதமான நிலங்கள். முகத்துவாரத்தில் நான் கண்டவற்றை கதையாக்கி விடும்போது வாழ்க்கைக்குள் வசந்தம் நுழைந்து விடுகிறது. இலக்கிய உலகில் அடிக்கடி சொல்லப்படும் Pleasure என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் போலும்.
ஆலகாலத்து பாலை நிலம் கூட என்னை கவரவே செய்தது.

பொழுது மங்கி வரும் வேளையில் நாங்கள் மணலில் கால்களை புதைத்து புதைத்து நடக்கத் தொடங்கினோம். கடலலைகள், கரை மணலை தொட்டு வணங்கி பின்வாங்கி மீண்டும் முன் வருவதை பெருந்தவம்போல செய்துக் கொண்டிருந்தன. ஆனால் குழலியோ, பொன்னையள்ளிக் கொட்டியது போன்றிருக்கும் செருந்திப்பூக்களின் அழகைக்காணவே அவை வந்து போகின்றன என்றாள். எப்படியாக இருப்பினும் அவற்றை கண்ணிமைக்காது உற்று நோக்கினால் பாலைநிலத்தில் ஒட்டகம் உறங்கி எழுவது போன்றிருக்கும். அதை அவளிடம் கூறியபோது, “இதோ இங்கு பூத்திருக்கும் முண்டகப்பூக்களை உன் ஒட்டகங்கள் என்னவாக கருதிக் கொள்ளும்?” என்றாள். நான் வாளாவிருந்தபோது, “கடலலைகள் அவற்றை கதிர்மணிகள் என்றெண்ணிக் கொண்டு கழுவியும் நழுவியும் செல்கிறது” என்றாள்.

கடலில் நீர் பெருகிக் கிடந்தாலும் பருக நீரற்று எங்களின் நா வறண்டிருந்தது. கடற்காற்று வேறு உடலில் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு உப்பாக உடலை தழுவிக் கொண்டிருந்தது. தாகத்தால் வறண்டிருந்த உதடுகளை நாக்கை சுழற்றி ஈரமாக்கிக் கொண்டோம். வரிவரியாக ஓடிக் கிடந்த மணற்பாளங்களில் நடப்பதற்கஞ்சி பிள்ளைகள் அழத் தொடங்கினர். நாயின் நாக்கை போன்று வளைந்திருக்கும் பெண்டிரின் பாதங்களை நீரற்ற ஆற்றில் இறைந்துக் கிடக்கும் பருக்கைக்கற்கள் குத்தி கிழித்தன.

மழை தன் தொழிலை மறந்து நீலவானத்தை விரும்புவதால் நிலங்கள் மனமுடைந்து பாளம்பாளமாக பிளந்திருந்தன. கிளைகளில் ஒட்டியிருக்கும் துளியளவு பசுமைக்காக யானைகள் மரத்தையே பிடுங்கி எறிந்து விடுவதால் ஒதுங்குவதற்கும் நிழலற்று போய் விட்டது. பரல் கற்களுக்கிடையே ஊறிய நீருக்காக யானையும் புலியும் போட்டியிட்டு எழுப்பும் உறுமலால் பாதையே அதிர்ந்துப்போனது. இரைக்காக சிதல் புற்றைக் கிளறும் கரடி அங்கு பாம்பு சீறுவதைக் கண்டு அதிர்ந்து ஓடின. இலைகளே அற்றுப்போன மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் வரிப்புறாக்கள் வறட்சியால் புலம்பி தவித்தன. நீரற்றுபோன பூமியை களிறு விரக்தியோட தட்ட, நிலமே புழுதிக்காடாக மாறிப் போனது.

நாவலின் இரண்டாவது பகுதி மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத்தை செதுக்கிய தலைமைச்சிற்பியின் நினைவுகளாக எழுவது. பல்லவர் காலத்தியது. போர்களால் உறவுகளை இழந்திருந்த அவன் இமயம் நோக்கி பயணிக்கிறான். அது இப்போதிருக்கும் நகர்கள் சூழ்ந்த வணிக மயமாக்கப்பட்ட இமயம் அல்ல.

இமயத்தின் மடிப்பும் ஆழமும் விண்ணை தொட்டு விடுவது போன்ற அதன் உயரமும் திடீரென்று ஏதொன்றும் இல்லாததாகவும், உடனே எல்லாமானதாகவும் மாறிக் கொண்டேயிருந்தது. எல்லாமானதாகவும் எனில், தாயாகவும் தந்தையாகவும் இளவல்களாகவும் ஊராகவும் பேராகவும் எல்லாமானதாகவும்தான். பின் அவை ஏதுமற்று பனியால் மூடிய மண் குவியற்போலாகியது. இம்மண்குவியல்களே விண்ணை மண்ணுடன் இணைக்கின்றன. வளைந்த வான் விருப்பத்தோடு மலையுச்சியை தழுவிக் கொள்கிறது. மலைச்சிகரத்தின் விளிம்புகளை ஒளியால் வரைந்திருந்த சூரியன், குளிரால் நடுங்கும் உடலை தன் வெப்பக்கரங்கள் கொண்டு அணைத்துக் கொள்ள, அது கருவறையின் கதகதப்பு போல உடலில் வெம்மையை ஏற்றியது. மலைச்சரிவுகள் வரிவரிகளாக வெவ்வேறு வடிவம் காட்டின. சில புத்தரின் முகங்கள் போன்ற நீண்டு வழிந்தன. புத்தரின் முகம் அறிவும் அமைதியும் நிறைந்தது. சைத்தியங்களிலும் விஹாரைகளிலும் அவற்றுக்கு தீபதுாப ஆராதனைகள் நடைபெறும். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அகில்களின் மணத்திலும் அகல்களின் ஒளியிலும், ஒளிரும் புத்தரின் முகங்களில் சிரிப்பு துலங்குவதோடு கனிவும் முகிழ்ந்திருக்கும்.

காற்று சுழன்று வீசியது. அங்கிருந்த பாறையில் அமர்ந்துக் கொள்ள வேண்டுமாய் தோன்றியது. ஆனாலும் உடலை இம்மியளவும் அசைக்க விருப்பமின்றி நின்றிருந்தான். மலையிடுக்குகள் இருளாலானவை. இடுக்குகள் அழுக்குகளால் நிறைந்தவை. அழுக்குகள்தான் அழுக்காறுகள். அதனுள் நுழைந்து விடும் எண்ணங்கொண்டு காலையும் மதியமும் மாலையுமென சூரியன் தொடர்ந்து படையெடுக்க, சூரியனின் ஒளிக்கொண்டு உடலை வளர்க்கும் மலைகளோ, இடுக்குகளை சாதுர்யமாக தம் நிழல் கொண்டு மறைத்திருந்தன. அந்நிழல்கள் சில சமயம் குட்டையாகவும், சில சமயம் நீண்டுமிருந்தன. தன் முயற்சியின் பலிதமின்மையால் கோபம் கொள்ளும் சூரியன் இடுக்குகளுக்கான ஒளியை விண்ணை தொடும் உச்சத்தில் நின்ற பெரிய பனிமலையின் மீது சிந்தி கண்களை கூச செய்தான். மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் கிளைக்குகிளை தாவி கொண்டே சென்றன. ஒரு கிளையிலிருந்து நீங்க வேண்டுமாயின் மற்றொரு கிளைக்குதான் தாவ வேண்டும். பிரிதொன்று இல்லையேல் குரங்குகளால் அக்கிளையிலிருந்து நீங்கி விட முடியாது.

ஏதொன்றுமில்லாதவற்றையும், எதனுள்ளாவது அடக்கி விட வேண்டும் என்றெழும் எண்ணத்தையும் விட்டொழிக்கும் எண்ணம் மேலோங்க, விறுவிறுப்பாக நடந்தான். அதுவே உடலை களைக்க செய்து வீழ்த்த போதுமானது. உறக்கம் என்பதே மரணத்திற்கான ஒத்திகைதான். உறக்கத்திற்கென, உடல் எடுத்துக்கொள்ளும் நிலம் மட்டுமே தனக்கானதென்பதை உணராதவர்களே, மாபெரும் சைனியத்தோடு நாடு பிடிக்க கிளம்பி விடுகின்றனர்.

அவன் தான் கண்டதை கற்பனையோடு கலக்கிறான். விரல்களும் உளிகளும் பாறையை இமயமாக்குகிறது. நாவலை எழுதி முடித்த பிறகு “அர்ச்சுனன் தபசு” எனக்கு வேறு வடிவம் காட்டியது. என்னால் அவனுடைய விரல்களை தொட முடிந்தது. அச்சிற்பம் என்னுடையதே என்பது போல உணர்ந்தேன். ஏனெனில் அதை செதுக்கியது என்னுடைய சிற்பி அல்லவா?

ஓங்கியுயர்ந்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டதும் பலா, ஞெமை, நமேரு போன்ற மரங்களும் சிங்கங்கள், யாளிகள், மலையாடுகள், பன்றிகள், மான்கள், குரங்குகள், முயல், உடும்பு, ஆமை முதலிய எண்ணற்ற உயிர்கள் வாழ்வதும் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுவதும் நர நாரயணனாக எழுந்தருளி தன்னை வெளிப்படுத்தியதுடன் தவமியற்றும் யோகியருக்கு வீடுபேறு நல்கும் திருமால் உறையும் பதரியாசிரமம் திகழ்வதும், மகேசுவரர் அர்ச்சுனருக்கு பாசுபதம் வழங்கியதும், சிரஞ்சீவியான பரசுராமர் தன் வாழிடமாக கொண்டதும், கின்னரர்களும் சித்தர்களும் தேவக்கன்னிகையரும் கந்தர்வரும் கிம்புருடர்களும் நாகர்களும் தத்தம் துணைகளோடு வந்து இன்புறுவதும் மலை மாந்தர்கள் வாழ்வதும் மனிதக்குலத்தை பிறப்பறச் செய்யும் புனித கங்கையாறு பாய்வதுமான இமயம், இமயமென எழுந்து நின்றது. புதுக்கருக்கு கலையாத அச்சிற்பங்கள் நிலைத்துப் போன காலங்களாக முடிவிலாத்தன்மையுடன் விரிந்து நிற்க, மன்னர் அதன் முன் நின்றிருந்தார்.

பல்லவர் நிலம் என் கண்முன்னே விரிந்தது. அக்காலத்திலிருந்து எப்போது நான் நிகழ்கணத்துக்கு மீள்வது?
துறைமுகத்தில் ஏற்றியவற்றை இறக்கவும், இறக்கியவற்றை ஏற்றவுமாக கடற்கரை நாவாய்களால் சூழப்பட்டிருந்தது. இறக்கப்பட்ட பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டும், அடுக்கி வைக்கப்பட்ட பண்டங்கள் பண்டகச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதுமாக இருந்தன. வானளாவிய விளக்குகள் கடலில் செல்லும் நாவாய்களுக்கு கரையை அறிவித்து அழைப்பு விடுத்தன. தெருக்களில் பரதவர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் வீட்டு மாடங்களில் ஏற்றி வைத்த விளக்குகள் பொன்னாய் ஒளிவீச, அவ்வொளியில் அங்கிருந்த பரதவபெண்கள் பந்தடித்து விளையாடுவதும் மாடங்களில் நின்றபடி கடலழகை ரசிப்பதுமாக பொழுதை இனிமையாக கழித்தனர். சாருதேவிக்கு அவற்றை தாண்டியும் ரசனையிருந்தது. கனவிருந்தது. அது அவனுக்கு இருப்பதை போன்றதொரு கனவு. வடதிசை பயணத்திலிருந்து மீள திரும்பிய அவனுக்கு அவளிடம் நட்புக் கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. அவர்களை விடவும் பிரம்மாண்டமான கனவு மன்னர் நரசிம்மருக்கிருந்தது. அது கற்பாறைகளுக்கு உயிருண்டாக்கும் கனவு. கனவுகளை ஒற்றைப்புள்ளியில் இணைக்கும் சாதுர்யமும் அவருக்கிருந்தது. அதுவே மனித வரையறைகளை மீறும் சாத்தியப்பாடுகளை உருவாக்கியிருந்தது.

என் நாவலின் கற்பனை பயணம் சோழநிலத்தில் என்றானபோது நான் சோழநிலத்தினுாடே அடிக்கடி பயணம் மேற் கொண்டேன். இது நாவலின் மூன்றாவது பகுதி.

மடைகளின் வழியாக வரும் நீரை தத்தம் வயல்களுக்கு பாய்ச்சுவதில் ஆண்கள் மும்முரமாக இருந்தனர். மோர்ப்பானைகளோடு பெண்கள் குழாம் ஒன்று அவனை கடந்து சென்றது. ஏதோ பேசியபடி வந்த அவர்கள் அவனை கண்டதும் சற்று நிறுத்திவிட்டு பிறகு தொடர்ந்தனர். வயல்களில் நெற்பயிர்கள் கரும்புகள் போன்றும், கரும்புப் பயிர்கள் பாக்கு மரம் போலவும் உயர்ந்திருக்க, அவற்றுக்கிடையே ஊர்கள் இருந்தன. தானியக்கதிர்களை உண்ண வரும் பட்சிகள் நிலத்தில் தாழப் பறந்தன. கரையோர மரங்களிலிருந்த கூடுகள் காற்றுக்கேற்ப நடனமாடின. மணிமங்கலத்தில் இருப்பதைபோல இங்கும் வீடுகள் வரிசையாகவும் நெருக்கமாகவுமிருந்தன. மாடுகள் பால் கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவை போல கனத்தமடியும் இளம்கன்றுகளுமாக பட்டிகளிலிருந்து குரல் கொடுத்தன. வீதிகள் நீளமாக இல்லாமல் பாம்பு போல நெளிந்தோடி வீடு்களின் முன்பு சரணமிட்டு நின்றன. தன்னை தவிர்த்து அனைவரும் பரபரப்புடன் இயங்கும் காலை நேரத்தை பரபரப்பின்றி கவனிக்கத் தோன்றியது அவனுக்கு. வரப்புமேட்டின் மீது கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொண்டான். வயல்களில் சீரான வரிசைகளில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள், பந்தலிட்டது போல இலைகளை பரப்ப, அதன் கிழிசல்களுக்குள் சூரியன் நுழைந்தபடி நிலத்தை பார்வையிட்டது.

இஞ்சியும் மஞ்சள் கொல்லைகளும் செழித்திருந்த வழிகளில் செந்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் பார்வைக்கு இதமளித்தன. நதியின் பசிய கரையோரங்கள் வழிபாடுகளால் நிறைந்திருந்தன. காஞ்சியைப் போன்று செல்வச்செழிப்பு இங்கில்லை. போலவே, இங்கிருப்பதை போன்று அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் அங்கில்லை. கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் கையில் ஊதுகுழலோடு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். பொன்னி நதியின் கரையில் உடலை துாய்மைப்படுத்திக் கொண்டிருந்த சிவனடியார்கள் டங்.. டங்.. என்று ஒற்றையொற்றையாய் ஒலித்த கோவிலின் ஒவ்வொரு மணியோசைக்கும் நமச்சிவாய.. நமச்சிவாய.. என்று முணுமுணுத்துக் கொண்டனர். பல்லவநாட்டில் தென்படுவதுபோல சமணர்களும் பௌத்தர்களும் இங்கு அதிகம் தென்படவில்லை.

என்னுடைய நான்காவது பாகத்தின் நாயகன் வங்க நிலத்துக்குள் நுழைந்து விடுகிறான். என்னுடைய நாவல் ஏன் இத்தனை நிலங்களுடே பயணிக்கிறது? அதுதான் நானா?

வசிட்டா ஏரியில் நீர் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈர நைப்பான நிலங்கள்தான் கிராமங்கள் என்றாகின போலும். அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடுகிழித்தாற்போலெல்லாம் அமைந்திருக்கவில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதானசாலையின் அருகாமையில் இருந்தது பேலாட் கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளை தவிர்த்து சிறு மண்பரப்புகளை கூட தாவரங்கள் தவற விடவில்லை.

காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. பாதை விரிந்தும் குறுகியும் வளைந்தும் நெளிந்தும் படுகையும் சேறும் நிலமும் நீருமாக இருந்தது. மழையும் வெயிலுமற்ற இதமான பருவநிலை உடல் களைப்பை ஏற்படுத்தாது. தொலைவில் தெரிந்த பிரம்பப்புதர்களில் எழுந்த பச்சை வாசனை அவனுக்குப் பிடித்தமானது. வானம் அரை வெளுப்பாக கவிழ்ந்திருந்தது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் கருநிறம் சூழ்ந்து மழை வீசி விடும். மண் ஏற்கனவே சதுப்பாக இருந்தது. மழை வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வழுக்கி விட்டு விடும். ஆனாலும் கால்கள் மேலும் நடக்க சொல்லித் துாண்டின.

அவன் கங்கையின் கரையோரமாக பயணிக்கிறான்.

சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயண மூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் துளசியும் கலந்தோடும் எழிலான அலக்நந்தா சூரிய ஒளியில் தகதகக்க, தூரத்தில் அடம்பலான புகையாடை உடுத்தி நெளிந்தாடியபடி வந்தாள் பாகீரதி. கண்களை மூடி கைகளை தொழுது கல்லின் முன் நிற்கும்போது அது கடவுளா கல்லா என்றெல்லாம் ஆராயத் தோன்றாது. ஹே கங்கேமாதா ஸ்ரீ கங்கேமாதா என்று உருகும் உள்ளங்களும் இடைவிடாது ஒலிக்கும் மந்திர முழக்கங்களும் ஆலய மணியோசையும் கங்கையை நதியென்றே உணர விடவில்லை. தனக்குள்ளிருக்கும் தெய்வத்துக்குள் கரைந்து விட விக்கிரகம் ஒரு கருவி. கங்காமாதாவும் ஒரு கருவியே. கசிந்து ததும்பும் நீரில் அகல்களும் மலர்களும் மிதந்து ஜொலித்தன. நட்சத்திரங்கள் நிரம்பிய நிறைவானம் போல நதி நிறைந்து வழிந்தது. காற்று குளிரை பரப்பிக் கொண்டிருக்க, நிலவு தன் இளஞ்சூட்டில் அதை உருவிக் கொண்டிருந்தது. கரையோர கட்டடங்களின் ஒளிபிம்பங்களை கங்கை தன்னுள்ளிருந்து எழுந்தனவாக பிரதிபலித்துக் காட்டியது. நிரம்ப ஏதுமில்லாதது போல மனங்கள் பொங்கி வழிந்தன. ஒருவேளை இவ்வுலகில் நிலையின்மையென நிறைந்துள்ளவை அனைத்தையும் நிலைத்தவையாக்க முயலும் மானுட அச்சம்தான் பக்தியென உருமாற்றம் கொள்கிறதா?

இமயத்தின் கரடுமுரடான பாதைகள் அவனை இன்னும்… இன்னும் என்று அழைக்கின்றன.

எதிரெதிரே பார்த்துக் கொண்ட இமயத்தின் பனிச்சிகரங்கள் ஒன்றின் மீதொன்று நிழலை கிடத்தியிருந்தன. ஓடையாய் நகரும் கங்கையின் இருமருங்கிலும் முதிராத இமயம் கற்களாக கரையொதுங்கி கிடந்தன. மரங்களை தலையில் வைத்துக் கொண்டாடும் சிகரங்களின் நடுவே வெண்மேகங்கள் தோன்றுவதும் நகர்வதும் மறைவதுமாக இருந்தன. இடைவிடாது பெய்யும் மழையிலும் நகர்ந்தப்படியிருக்கும் மூடுபனிக்கும் மத்தியில் ஓடைகள் தோன்றி தோன்றி மறைந்தன. பாகீரதியின் கட்டவிழ்ந்த ஆட்டத்திற்கு மலைத்தொடர்கள் மௌன அங்கீகாரமளிக்க, கண்ணீரும் கதறலுமான நின்றது மக்கள் கூட்டம். எதன் பொருட்டு இந்த கண்ணீர். இதுதான் ஆன்மீகமா..? இதுதான் பக்தியா..? பக்தி என்பது தீவிரத்தன்மையின் உச்சத்தில் நிகழும் இயல்பா? பக்தியின்பால் இத்தனை உருக்கமென்றால் பக்தியற்றவையின் மீது அதேயளவு மூர்க்கமும் ஏற்படுமல்லவா? ஒன்றின் மீது கொள்ளும் பக்தி அந்த ஒன்றை எல்லாமுமாக ஆக்கி விடுமா? இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் இதே தீவிரத்தில் கரைந்து கிடக்கும் மனம் வாய்க்குமா? அதற்காக இமயமும் கங்கையும் பக்தர்கள் செல்லுமிடமெங்கும் தன்னை நீட்டித்துக் கொள்ளதான் முடியும்?

தெரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. நிலங்கள் மனதை இத்தனை துாரம் ஆக்கிரமித்து விடுமா என்ன? கண்களை மூடிக் கொண்டபோதும், நீர் நுங்கும்நுரையுமாக பெருகியது. அலை போல எழுந்தது. சுழல்களை உருவாக்கியது. அதன் தெளிந்தத் தடத்தில் மீன்கள் நீந்தி விளையாடின. காற்று மலைகளின் மூச்சைப் போல ஒரே சீராக வீசியது. மனமெங்கும் பிரவகிக்கும் கங்கை உடலுக்குள் நுழைந்துக் கொள்ளும் ஆனந்தத்திற்கு மூச்சைதான் தட்சணையாக்க வேண்டும். அது விடுதலைக்கான தேடலும் கூட. ஆனால் விடுதலை என்பது எதிலிருந்து? அப்படியாயின் சிறையிலிருந்ததென்பது முடிவாகிறது. வதை தான் வாழ்க்கையா? பனிப்பாறைகள் உருகி நீராக வழிந்து நதியாக ஓடுகிறது. மந்தாகினியாக நடை போடுகிறது.

ருத்ரபிரயாகையில் ரௌத்திர நடனமிடுகிறது. காதுகளை உடைக்கும் பேரோசைக் கொள்கிறது. ரிஷிகேஷில் தவழ்ந்து காசியில் சகல பாவங்களையும் தன் மீது ஏற்றி கரைந்து கல்கத்தாவில் அகன்று விரிந்து கப்பல்களை தன் மீது சுமந்து கடலோடு கலந்து… இதில் எது கங்கையின் முகம்? அமைதியா? பொறுமையா? ரௌத்ரமா? சலங்கையிட்டு ஆடும் நடன மங்கையா? யாரிவள்? அனைத்துமா? அல்லது தனியளா? விடுதலையை தேடிய பயணமா? அவளுக்கு எது விடுதலை? கடலோடு கலந்து தன் சுயத்தை தொலைத்து விடுவதா? இதில் புனிதம் என்பது வெறும் கற்பிதமா? கண்டவர் யாருண்டு? கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

நிலங்களின் விரிவுக்கு எல்லையென்று ஏதுமில்லை. மனதிற்கும்தான். அது இப்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹானஸ்பர்க் நகரத்திற்கு சென்றிருந்தது.

நகரில் வர்த்தகம் தன்னளவில் செழித்திருந்தாலும் இங்கிலாந்திலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் வந்து குவிந்த நிதியாளர்கள் பணப்புழக்கத்தை மேலும் பெருக வைத்துக் கொண்டிருந்தனர். வந்தேறிகள் என்றாலும் தங்களை தாங்களே முதன்மைப்படுத்திக்கொண்ட ஐரோப்பியர்களின் வீடுகளும் தெருக்களும் கூட அவர்களை போன்றே ஆசைகளாலும் அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன. அவை பெரும்பாலும் ஸ்காட்லாந்திலிருந்து வந்த பொறியாளர்களாலும் கைவினைக் கலைஞர்களாலும் உருவாக்கப்பட்டவை. இருபதாம் நுாற்றாண்டு தொடங்கி நான்கைந்து வருடங்கள் கடந்திருந்த அக்காலக்கட்டத்தில் உருவாகிக் கொண்டிருந்த ஜோஹானஸ்பர்க் நகரின் எண்ணற்ற கட்டடங்கள் அக்கலைஞர்களின் தொழிற்மேன்மையை காட்டின. மொசாம்பிக்கிலும் கார்ன்வாலிருந்தும் தங்கச்சுரங்களில் பணியாற்ற வந்திருந்த தொழிலாளர்கள் நகருக்குள் இப்படியான இடங்கள் இருப்பதை அறியாதவர்களாக இருளுக்குள் அமிழ்ந்து ஒளிரும் பொன்னை கண்டெடுத்துக் கொண்டிருந்தனர். சூரியன் தீண்டாவிட்டாலும் சுரங்கப்பணியாளர்கள் அந்தி மயங்கும் இந்நேரத்தில் உடல் களைப்பை உணர்ந்திருப்பர். கடை வைத்திருந்தாலும் கப்பல் வைத்திருந்தாலும் அங்கு வாழும் ஆசியர்களை ஐரோப்பியர்கள் கூலிகள் என்றே அடையாளம் சொல்லிக் கொண்டனர்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சத்தியாகிரக ஆசிரமம் கோச்ராப் பங்களாவிலிருந்து சபர்மதி நதியின் கரையோர சதுப்புக்கு இடம் மாறியிருந்தது. அகமதாபாத் ஜவுளி ஆலைகளுக்கும் சபர்மதி சிறைச்சாலைக்கும் அருகாமையில் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த ஆசிரமத்தில் தங்குவதற்கேற்ப சிறு குடிசைகள் எழுப்பப்பட்டிருந்தன. காந்தியின் அறை சிறியதாக இருந்தது. காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்குமென அதில் இரும்புக்கம்பி போடப்பட்ட சிறு சன்னல் இருந்தது. ஆண், பெண் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது பேர் தங்கியிருந்த அந்த ஆசிரமத்தில் சமையலுக்கென சிறு தகரக் கொட்டகை போடப்பட்டது. ஆசிரமவாசிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத்தரவும், விவசாயத்தில் ஈடுபடவுமாக பொருளாதார தன்னிறைவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. நதியின் உயரமான கரையோரத்தில் தினந்தோறும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் பிரார்த்தனை மையத்தை அடைந்திருந்தார்கள். அணியணியாய் ஆசிரமவாசிகள் வந்து அமரத் தொடங்கியதுமே அவ்விடம் புனித ஸ்தலம் போலாகி விட அதன் மீது மங்கிய மாலைப் பொழுதின் மெல்லொளி மெருகேற்றாத தங்கமென படரத் தொடங்கியது. அதனை பிரார்த்தனை மேடையில் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அகல் தன்னொளி கொண்டு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் நாயகனென காந்தி அமர்ந்திருந்தார். வழிப்பாட்டுப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இருள் ஒளியை வென்று கொண்டிருந்தது. அவ்வொளி அவரை கோட்டோவியமாய் காட்டியது. அவர் வலுவான மெல்லிய கால்களை ஒன்றின் மீது ஒன்றடுக்கி அமர்ந்திருந்தார். தான் உணர்ந்தவைகளை அவர் உரையென ஆற்றியபோது ஈரசந்தி வேளை முடிந்து பொழுது இரவுக்குள் நுழைந்தது.

இந்த தலைப்பை சற்றே மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியேயும் இருக்கலாம். ‘என் படைப்பில் என் நிலம்’ என்பதும் ‘என் நிலத்தில் என் படைப்பு’ என்பதும் ஒன்றுதானே? நான் வேறு… என் படைப்புகள் வேறா? நான் படைத்தவற்றுள் எது என்னுடையது? என் படைப்புகளில் வரும் எல்லாமே நான் தானா? அப்படியாயின், என்னுடைய நிலத்தில்தான் நான் படைப்புகளை விதைத்திருக்கின்றேனா? எது, எதுவாக இருப்பினும் நான் முன்பிருந்ததைப் போல இப்போது குழப்பிக் கொள்வதில்லை.

***
கலைச்செல்வி (பிறப்பு: 1972) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அவரது கதைகள் பரவலாகக் கவனிக்கப்பட்டன. அறம் சார்ந்த படைப்புகளை நோக்கமாகக் கொண்டு அதை வரலாற்று உணர்வோடும், கலை படைப்பாகவும் வளர்த்தெடுப்பதில் சமகாலத்தின் முக்கியமான படைப்பாளியாக தம்மை நிலை நிறுத்தியுள்ளார்
• வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி & கூடு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்
• சக்கை, புனிதம், அற்றைத்திங்கள், ஆலகாலம், ஹரிலால், தேய்புரி பழங்கயிறு ஆகிய நாவல்கள் எழுதியுள்ளார்.

தொடர்புக்கு – kalaiselvi312try@gmail.com இவரது நூல்களைப் பெற இங்கே சொடுக்கவும்

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular