Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்எஸ்ப்ளனேடில் உள்ள வீடு - ஆன் எபர்

எஸ்ப்ளனேடில் உள்ள வீடு – ஆன் எபர்

மிஸ்.ஸ்தெபானீ த பீஷெத் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தார். சரியாக வளராதது போல் தோற்றமளிக்கும் ஒல்லியான கை கால்கள். அவர் தலை அந்தச் சன்னமான நீள கழுத்திற்கு மேல் ரொம்பப் பெரிதாக இருந்தது. முகத்தைச் சுற்றி அவர் அணிந்திருந்த கஞ்சி போட்ட முக்காடு மாதிரியான துணியே அவர் தலை உடைந்து தோள்களின் மேல் விழாமல் காப்பாற்றுவது போல் இருந்தது. பிரபு வம்சாவளியில் வந்த ஸ்தெபானீ த பீஷெத்தின் முன்னோர்களின் படாடோபம் அவரின் ஆடம்பரமான தலையலங்காரத்தில் அடைக்கலமாகியிருந்தது. அவருடைய குறுகிய மண்டையோட்டின் மேல் அடுக்கடுக்காக இருந்த சுருண்ட முடியலங்காரம், சமச்சீராக வெள்ளித் தோட்டாக்களை வைத்துக் கட்டிய கட்டிடம் போல் இருந்தது.

மிஸ் பீஷெத்திற்கு இளமைக்காலமே இருந்ததில்லை போல. அவள் குழந்தை உடையிலிருந்து நேரடியாக  காலரிலும் மணிக்கட்டிலும் இளஞ்சிவப்பு ஃப்ரில்ஸ் வைத்த இந்தச் சாம்பல் நிற உடைக்கு மாறியது போல் இருந்தது.

தந்தத்தினால் வேலைப்பாடு செய்யப்பட்ட பிடிகளையுடைய இரண்டு குடைகளை அவர் வைத்திருந்தார்.  ஒன்று, இளஞ்சிவப்பு நிறத்தாலானது, இன்னொன்று, சாம்பல் நிறம்.

அவருடைய சாரட்டில் வெளியே செல்லும்போது வானிலையைப் பொறுத்து அந்தக் குடைகளை எடுத்துச் செல்வது வழக்கம். வானம் தெளிவாக இருந்தால் இளஞ்சிவப்புக் குடையையும், மேகமூட்டத்துடன் இருந்தால் சாம்பல்நிறக் குடையையும் கொண்டு செல்வார். அந்த ஊரே அவர் குடைகளை வைத்து அன்றைய வானிலையைத் தெரிந்து கொள்ளும். பனிக்காலத்திலும் மழைக்காலத்திலும் ஸ்தெஃபானீ வெளியே செல்வதில்லை.

நான் இங்கே மிஸ் பீஷெத்தின் குடைகளையும், அவை தெரிவிக்கும் வானிலை மாற்றத்தைப் பற்றியும் ஏன் சொல்கிறேன் என்றால், அந்த இரண்டு குடைகளும் அவரின் ஒழுங்கான வாழ்க்கைமுறையை உள்ளபடித் தெரிவிக்கும் வெளிப்புற அடையாளங்கள் என்பதை வலியுறுத்தத்தான்.

மிஸ். பீஷெத்தின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது.  மாற்ற முடியாத ஒரு ஒழுங்குமுறையை அந்தப் பழங்காலத்து அப்பாவிப் பெண்மணி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த அசாதாரணமான கட்டமைப்பில் ஒரு சின்ன பிளவோ, நிறுவப்பட்ட ஒழுங்குகளில் ஒரு சிறிய மாற்றமோ போதும், மிஸ் பீஷெத் உடம்பு சரியில்லாமல் படுத்து விடுவார்.

நல்லவேளையாக அந்த வயதான பீஷெத் தன்னுடைய பணிப்பெண்ணை மாற்றாமல் வைத்திருந்தார். (அந்தக் காலத்தில் அதெல்லாம் சாத்தியம்…)

பணிப்பெண்ணான ஜெரால்தீன் தன் எஜமானியை நன்றாகப் பார்த்துக் கொள்வதோடு அவளின் பாரம்பரிய பழக்கங்களுக்கும் மிகவும் மரியாதை கொடுத்து வந்தாள்.

பாரம்பரியத்தைப் பராமரிப்பதுதான் மிஸ் பீஷெத்தின் வாழ்க்கையாக இருந்தது; சரியாகச் சொல்வதானால் பாரம்பரியமே அவர் வாழ்க்கை. குடைகளையும், சிகையலங்காரத்தையும் தவிர இன்னும் பல சடங்குகள் அங்கே பின்பற்றப்பட்டன. காலையில் எழுவது, இரவு உறங்கச் செல்வது, சமையல் தயார் செய்வது, சரிகை வேலைப்பாடு என எல்லாமே பாரம்பரிய முறைப்படி செயல்பட்டன.

ஸ்தெஃபானீ-ஆர்தென்ஸ்-சோஃபி த பீஷெத் எஸ்ப்லனேடைப் பார்த்தபடி இருக்கும், ஃப்ரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் வீட்டில் வசித்து வந்தார். உங்களுக்கு அந்த வீடுகளைப் பார்த்தாலே தெரியும்- செங்குத்தான கூரையுடைய, வரிசையான ஜன்னல்களுடைய குறுகலான வீடுகள். மேல்மாடி ஜன்னல்கள் குருவியின் கூட்டைப் போல இருக்கும். இதைப் போன்ற ஜன்னல்கள் இருந்தால் உள்ளே இரண்டு அல்லது மூன்று பரண்கள் இருப்பது உறுதி. வயதான ஒரே ஒரு பெண்ணிற்கு இது மிகவும் அதிகம். நம்பினால் நம்புங்கள், மிஸ் பீஷெத் மேலே பரணுக்குச் சென்றதே இல்லை. பழைய நினைவுகளைப் புதுப்பிக்கவோ, பழைய பொருட்களைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது அந்த மஞ்சளான பழைய காகிதங்களை முகர்ந்து கொண்டு பரணைச் சுத்தப்படுத்தவோ ஏறியதே இல்லை.

அவர் எல்லா அறைகளையும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு தளத்திலும் முக்கியமான ஒன்றிரண்டு அறைகளையே பயன்படுத்தினார். ஒவ்வொரு தளத்திலும் ஒரு அறை. நான்காவது மாடியில் வேலைக்காரர்களின் தங்குமிடம் இருந்தது. அதில் ஜெரால்தீனின் அறை மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்தது. உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் மற்ற அறைகளைப் பூட்டி விடுவது அவ்வீட்டின் மரபு. அதனால், ஸ்தெஃபானீ பத்து வயதாக இருக்கும் போது ஸ்கார்லெட் ஃபீவரில் இறந்த அவள் இரு தம்பிகளின் அறைகள், அவர்கள் பிறந்த பின் உயிரை விட்ட அவள் தாயாரின் அறை, வேட்டையாடும் போது இறந்த அவள் அண்ணன் ஐரேனேவின் அறை, யுர்சுலீன் கான்வெண்டில் சேர்ந்துவிட்ட தேனேஜின் அறை, நீண்ட நாள் உடம்பு சரியில்லாமல் இருந்து பிறகு காணாமல் போன அவள் தந்தையின் அறை, கடைசியாக, திருமணம் செய்து கொண்டு போன சார்ல்ஸின் அறை எல்லாம் பூட்டப்பட்டிருந்தன.

அவ்வீட்டுக்குரியவர்கள் இறந்து போனாலோ, கான்வெண்டில் சேர்ந்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவர்கள் அறைக்குப் பூட்டுவிழா நடத்துவது மரபு. போனவர்களின் அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் அப்படி அப்படியே வைத்து சுத்தம் செய்ய பிரயத்தனப்படுவாள் ஜெரால்தீன். அறையில் இருக்கும் மரச்சாமான்களின் மேல் துணியைப் போர்த்தி, ஷட்டர்களை இழுத்துக்  கதவைப் பூட்டுவாள். அவ்விதமாக அவ்வீட்டிலுள்ள நபர் நிரந்தரமாக அனுப்பி வைக்கப்படுவார். அந்த அறையில் அதற்குப் பின் யாரும் கால் வைக்க முடியாது.

இடுகாட்டில், வெட்டியான் கல்லறையின் கற்களை நேராக்குவது, புதைத்த இடத்தைச் சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் எப்படி ஒரு புனிதமான, முக்கியமான காரியமாகக் கருதுவானோ அந்த விதமான மனநிலையுடன்  ஜெரால்தீன் இந்த உறவுகளைத் துண்டிக்கும் வேலையைச் செய்தாள்.

ஒருநாள் மிஸ் பீஷெத்தின் அறையையும் மூட வேண்டி வந்து, தனியாக சிறிது காலம் அந்த வீட்டில் இறந்தவர்களுக்கு மத்தியில் தான் வாழவேண்டி வருமோ என்று சில சமயங்களில் ஜெரால்தீன் நினைப்பதுண்டு. உண்மையில் அந்த தினத்துக்காக அவள் எந்த பயமும் இன்றி காத்துக் கொண்டிருந்தாள். ஏன், சிறிது சந்தோஷமாகவே அந்த நாளை எதிர்பார்த்தாள்; அது அவள் இளைப்பாறும் நாட்களாகவும் இவ்வளவு ஆண்டுகள் அந்த வீட்டில் உழைத்ததற்கு பிரதியுபகாரமாகவும் இருக்கும். மிகவும் பாடுபட்டு பலமுறை சுத்தம் செய்யப்பட்ட அந்தப் பெரிய வீட்டின் அறைகள்  நிரந்தரமாக நிலையாக உறைந்து போகும். தூசும், பூஞ்சைக் காளானும் பொருட்களின் மீது படரலாம். ஆனால் ஜெரால்தீனிற்கு வேலை எதுவும் இருக்காது.

இம்மாதிரியான எண்ணங்கள் சோம்பேறித்தனத்தால் வருவதில்லை. ஒரு உழவன் தன் கடைசி உழவை எதிர்பார்ப்பது போல, ஒரு தையல்காரர் தன் கடைசித் தையலை எதிர்பார்ப்பது போல, ஜெரால்தீனும் கடைசிக் கதவைப் பூட்டி, சாவியை வளையத்தில் மாட்டும் நாளை எதிர்பார்த்தாள். ஜெரால்தீன் கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த நாள்தான் அவளுடைய இத்தனை வருட வேலைக்கு மகுடம் சேர்க்கப் போகும் நாள்; வேலையைச் செவ்வனே முடித்ததற்கான அத்தாட்சி; தான் பணிப்பெண்ணாகப் பிறந்த விதியை முழுமை செய்யும் நாள்.

இதில் விசித்திரம் என்னவென்றால், உயிருடன் கான்வெண்டில் கன்யாஸ்திரியாக இருக்கும் தேனேஜையும், ஒரு குடும்பத்தின் கணவனாக, தந்தையாக இருக்கும் மிஸ்டர் சார்ல்ஸையும், இந்த வயதான பணிப்பெண் இறந்தவர்களின் கணக்கில் சேர்ப்பதுதான். ஒருவேளை இருவரும் பிறந்த வீட்டை விட்டுப் போனது அவளுக்கு அவர்கள் இல்லாமலிருப்பதற்குச் சமமாக எண்ணி இருக்கலாம்; அவர்களுக்கு இனி இந்த வீட்டில் உயிரோட்டமான உறவு இல்லாததாகக் கூட இருக்கலாம். வீட்டின் கனமான கதவுகள் மிஸ் தேனேஜுக்காக நிரந்தரமாக மூடியாயிற்று. தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மிஸ்டர் சார்ல்ஸ் ஊரின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தையல்காரியை திருமணம் செய்து கொண்டதால் மிஸ்டர் பீஷெத் அவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு அந்த வீட்டை ஸ்தெஃபானீக்கு எழுதி வைத்து விட்டார்.

சார்ல்ஸ் தினமும் தன் சகோதரியைப் பார்க்க மாலையில் வருவார். ஆனால் ஜெரால்தீன் அவருடன் பேசுவதில்லை. அவளின் பார்வையில் ஸ்தெஃபானீ மட்டுமே பீஷெத் குடும்பத்தின் எஞ்சியிருக்கும் வாரிசு.

மூன்றாவது மாடியில் மிஸ் பீஷெத்தின் அறையைத் தவிர எல்லாக் கதவுகளும் மூடியிருக்கும்.  இரண்டாவது மாடியில் நீலநிறத்தில் இருக்கும் சின்ன வரவேற்பறை நிறம் மங்கிப் போய் யாரும் கவனிக்கப்படாமல் இருந்தது. முதல் மாடியில் இருக்கும் பெரிய வரவேற்பறையோ அடைசலாக சம்பந்தமில்லாத மரச்சாமான்களுடனும், பூத்தொட்டிகளுடனும், வெவ்வேறு விடிவில் பல பொருட்களுடனும் அமைதியற்று இருந்தது. கீழ்த்தளத்தில் உள்ள கனமான ஓக் மரத்தால் செய்யப்பட்ட கதவைத் திறந்தால் பெரிய ஹால், டைனிங் ஹால் மற்றும் வரவேற்பறையைக் காணலாம். ஓதமெடுத்த, சரியானபடி பொருட்கள் இல்லாத பழைய காலத்துச் சமையலறை அடித்தளத்தில் இருந்தது. ஜெரால்டீன்தான் சமையல் செய்வாள் என்றாலும் அவளை சமையல்காரி என்று சொல்ல முடியாது.

ஜெரால்தீனின்  எஜமானி பாரம்பரியத்தை வழிபட்டார் என்றால், ஜெரால்தீன் பிரகாசமான நிறங்களில் பட்டன்கள் அணிவதை ஒரு பாரம்பரியமாக வைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கருப்பு ஸ்கர்ட்டும் வெள்ளை ஏப்ரனும் சீருடை. ஆனால் அவள் ஸ்கர்ட்டுக்கு மேல் போடும் சட்டைகள் வண்ணமயமாக இருந்தன. நீலநிறச் சட்டைக்கு சிவப்பு பட்டன், பச்சை சட்டை மேல் மஞ்சள் பட்டன், தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில், கண்ணாடி போல என இன்னும் நிறைய நிறைய. இதற்கெல்லாம் பரணில் பெட்டிகளில் நினைவுச் சின்னங்களாக மிச்சமிருந்த அந்தக் காலத்து உடைகளில் இருந்து பொத்தான்களை களவாடினாள்.

இந்தப் பைத்தியக்காரத்தனத்தோடு, ஒவ்வொரு ராத்திரியும் படுக்கப்போகும் முன் ஒயின் இருக்கும் அறைக்கு சும்மாவேனும் ஒருமுறை சென்று வருவது அந்த சிவப்பான குண்டுப் பெண்மணியின் வழக்கம்.

ஆனால் ஜெரால்டீனிடம் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவளுடைய எஜமானியின் நித்தியக் கடமைகளை இம்மி அளவும் பிசகாமல் செய்வதுதான்.

தினமும் காலையில், வெயிற்காலமானால் ஏழு மணிக்கும், குளிர் காலமானால் எட்டு மணிக்கும் மூன்று மாடி ஏறி மிஸ் பீஷெத்தின் கதவைத் தட்டுவாள். ஆட்காட்டி விரலால் இரண்டே இரண்டு முறைதான் தட்டுவாள். அவ்வளவே சமிக்ஞை. அப்புறம்தான் சடங்குகள் ஆரம்பிக்கும்.

ஜெரால்டீன் முதலில் திரைச்சீலைகளை நீக்கி ஷட்டர்களைத் திறப்பாள். பீஷெதிற்கு மையிருட்டில்தான் தூங்கப் பிடிக்கும். அவரை இரவின் தீயவைகளிடமிருந்து தடுக்க கெட்டியான துணிகளால் ஆன திரைச்சீலையும், வார்னிஷ் செய்யப்பட்ட ஸ்லேட்டுகளும் உபயோகப்படுத்தப் பட்டன. அவருக்கு இரவு மட்டுமல்லாமல் சூரியனின் முதல் கிரணங்களிடமும் பயம். அவை அவர் விழித்துக் கொள்ளும் நேரத்திற்கு முன்பாக எழுப்பி விட்டு விடும்.  பின் என்ன செய்வதென்று அறியாமல் போய் விடும்.

பின்னர் ஜெரால்டீன் டீ வண்டியை ஹாலிலிருந்து  தள்ளிக்கொண்டு வருவாள். அதன் மேல் காலையில் பீஷெத்துக்கு வேண்டிய எல்லாம் இருக்கும்: இரண்டு வெள்ளை மாத்திரைகள், ஒரு டம்ளர் தண்ணீர், காஃபி, டோஸ்ட், பல் தேய்க்கும் ப்ரஷ், பேஸ்ட், தாமிரத்தினாலான கழுவும் பேசின் மற்றும் கஞ்சி போடப்பட்ட துணி. வண்டியின் கீழ்த்தட்டில் துடைப்பம், முறம், பூந்துடைப்பம் இன்னும் வீட்டைச் சுத்தம் செய்யும் பிற சாமான்கள் இருக்கும்.

அந்த டீ வண்டி மூன்று அடுக்கு கொண்டது. இரண்டு அடி அகலமும்  நான்கு அடி நீளமுமாக இருக்கும். அது ஜெரால்டீனே பழைய பெட்டிகளால் செய்த வண்டி.

ஸ்தெஃபானீ சாப்பிட்டு முடித்தவுடன் அவரைக் குளிப்பாட்டி, உடுத்தி விட்டு, பவுடர் போட்டு, தலையலங்காரம் செய்வாள் ஜெரால்தீன். இத்தனை சிசுரு‌க்‌ஷைகளும் நடக்கும் போது அவள் எஜமானி ஆடாமல் அசையாமல் அமைதியாக நம்பிக்கையுடன் உட்கார்ந்திருப்பார்.

அதன் பின், ஜெரால்தீன் புருவத்தைச் சுருக்கிக்கொண்டு ஜன்னல் வழியே பார்க்கும்போது, ஸ்தெஃபானீக்கு ஒன்றும் புரியாத, உறுதியற்ற  சில கணங்களை கடக்க வேண்டி வரும்.

‘இன்று எப்படிப்பட்ட நாளாக இருக்கும் என்று சொல்ல முடியாது…’

அதைக் கேட்டு எஜமானி தன் பணிப்பெண்ணை வெறுமையாகப் பார்ப்பார்.  அவர் முகத்தில் என்ன செய்வதென்று அறியாத ஒரு வலி தெரியும்.  அந்த முகத்தைப் பார்த்தவுடன் ஜெரால்டீன் ஒரு முடிவோடு சொல்வாள்:

“மழை பெய்யப் போகிறது. நீங்கள் வெளியே போக வேண்டாம். நான் வண்டியோட்டியிடம் சொல்லி விடுகிறேன்.”

அதன் பின்னரே ஸ்தெஃபானீ சற்று நிம்மதியடைவார்; ஆனாலும் ஜெரால்தீன் அவரை நீலநிற வரவேற்பறையில் ஜன்னல் ஓரமாக இருக்கும் முதுகு உயர்ந்த வேலைப்பாடு செய்யப்பட்ட நாற்காலியில் அமர வைத்தால் மட்டுமே முழு நிம்மதியடைவார். அதில் உட்கார்ந்து கொண்டு மடியில் சரிகைத் துணியையும் கையில் க்ரோஷே ஊசியையும் எடுத்தால்தான் அவரால் யோசிக்கவே முடியும்.

வானிலை மோசமாக இருக்கிறது. நான் வெளியே செல்ல முடியாதுஎன் அம்மா நான் ஏழு வயதாக இருக்கும்போது எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த க்ரோஷேவைப் பின்னுவதைத் தவிர வேறு வேலை இல்லைவானிலை நன்றாக இருந்திருந்தால் வெளியே வண்டியில் போயிருக்கலாம். உலகில் இரண்டு உண்மைகள்தான் இருக்கின்றனஅந்த இரண்டே இரண்டு உண்மைகளுக்குள் கண்களை மூடிக்கொண்டு ஒளிந்து கொள்ள முடியும். ஒன்று, வண்டியில் வெளியே செல்வது; இரண்டாவது, க்ரோஷே பின்னுவது. ஜெரால்தீனால் அன்று எப்படிப்பட்ட நாள் என்று சொல்ல முடியவில்லை என்றால் வெறுமையாக அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து விடுகிறேன். மூளை ஸ்தம்பித்து விடுகிறது. சரி! இதையெல்லாம் இப்போது நினைக்காமல் இந்த இரண்டு நிஜங்களின் பின்னால் போக வேண்டியதுதான்வண்டியில் வெளியே போவது அல்லது பின்னுவது.

 வானிலை நன்றாக இருந்தாலும் கூட ஜெரால்தீன் தன் எஜமானியிடம் சொல்ல மாட்டாள். ஏனென்றால் அது அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தரும். ஆச்சரியமே இல்லாத சரியான வாழ்க்கை என்னுடையது என நினைக்கும் அவரிடம், வண்டியில் வெளியே போவதும் பின்னுவதும்தான் உலகம் என  நினைக்கும் ஒருவரிடம் அவர் செய்வது சரியல்ல என்று சொன்னால் ஏற்படும் மனக்கலக்கத்தை யோசித்துப் பாருங்கள். பின்னர் அவர் எந்த உண்மையையும் நம்பாத  நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்.

சிறு வயதிலிருந்து மிஸ் பீஷெத் சின்னச் சின்ன க்ரோஷே துண்டுகள் பின்னுவதில் தன் நேரத்தைச் செலவழித்தார். ஜெரால்தீன் அவையெல்லாவற்றையும்  தன்னுடைய கற்பனா சக்திக்கு ஏற்றாற்போல் உபயோகப்படுத்தினாள். ஸ்தெஃபானீக்கு இந்தக் கலையின் எல்லா ரகசியங்களும் அத்துப்படி. அந்த அறிவே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு வாரத்தில் அவருடைய விரல்கள் நாலு க்ரோஷே துண்டுகள் பின்னின. ஒவ்வொன்றும் உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் போல்  இருந்தன. வீடு முழுக்க அவை நிரம்பியிருந்தன  – ஐந்தோ ஆறோ பியானோவின் மேல், சுமார் எட்டு துண்டுகள் எல்லா மேஜைகளிலும், ஒரு டஜன் சாய்வு நாற்காலியின் மேல், ஒன்றிரண்டு மற்ற நாற்காலிகளின் மேல் என க்ரோஷே துணி இல்லாத ஒரு பொருளையும் எந்த அறையிலும் பார்க்க முடியாது. சொல்லப் போனால் எல்லா சாமான்கள் மேலும் நுண்ணோக்கியால் பெரிதாக்கப்பட்ட பனியின் துகள்கள் போன்று அவை காட்சியளித்தன.

வெயிற்காலமோ பனிக்காலமோ, ஜெரால்தீன் வானிலை சரியில்லை என்று அறிவித்து விட்டால் மிஸ் பீஷெத் காலை முழுதும் க்ரோஷே பின்னுவதில் கழிப்பாள். நீலநிற வரவேற்பறையில் நேராக நிமிர்ந்து அமர்ந்து ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்பாள். காலை வைக்கப் பயன்படுத்தும் சிறிய ஸ்டூலை மூடியிருக்கும் துணி அவள் புதிதாகப் பின்னிக் கொண்டிருப்பதை ஒத்திருக்கும்.

சரியாக மதியம் பதினொன்று ஐம்பத்தைந்துக்கு ஜெரால்தீன் கூப்பிடுவாள்:

“மிஸ் ஸ்தெஃபானீ, உணவு தயார்!”

இந்தக் குரல் கேட்ட நொடி தன்னிச்சையாக ஸ்தெஃபானீ எழுந்திருப்பாள். நீண்ட வருடமாகப் பழக்கப்பட்ட இந்தச் சடங்கான வாக்கியம் அவளை எழுந்திருக்க வைத்து, மெல்லப் படிக்கட்டில் இறங்க வைத்து மேஜையில் அவர் இடத்தை அடைய வைக்கும். அவர் யோசிக்கவோ புரிந்து கொள்ளவோ முயற்சி செய்யாமலேயே எந்திரத்தனமாக இது நடக்கும்.

ஸ்தெஃபானீ  வண்டியில் வெளியே போயிருந்தால் சரியாக பதினொன்றே முக்காலுக்கு வீட்டில் இருப்பார். அதனால் அவரால் வேண்டிய அளவு அமைதியுடன் மதிய சாப்பாடு அறிவிப்பை எதிர் கொள்ள முடியும்.

மிஸ் பீஷெத்தின் பிரயாணம் கூட ஒரு ஒழுங்குமுறைக்குட்பட்டது. அவர் நடைமேடையில் மெல்ல மெல்ல சின்ன அடி வைத்து நடப்பார். நிறைய அடுக்குகள் கொண்ட  தலையலங்காரத்துடன் அந்த சன்ன உடம்பைக் கொண்டு நடக்கச் சிரமப்பட்டு ஜெரால்தீனின் உதவியோடு கோச்சில் அமர்வார். கோச்சை ஓட்டுபவர் குதிரையை முடுக்க வண்டி மெதுவாக அமைதியாக எப்போதும் போல அந்த ஊரின் வீதிகளில் செல்லும்.

குதிரைக்கு போகும் வழி மனப்பாடம். அதனால் அந்த வண்டிக்காரன் தொப்பியால் முகத்தை மூடி, காலை நீட்டிக் கொண்டு, கைகளை வயிற்றில் கட்டிக் கொண்டு ஒரு சின்னத் தூக்கம் போடுவான். பயணம் முடிந்ததும் மாயவித்தை போல் விழித்துக் கொள்வான். சந்தோஷத்துடன், அதே சமயம், ஆச்சர்யத்துடன் கூப்பிடுவான்:

“இதோ! வீட்டிற்கு வந்து விட்டோம் மிஸ்!”

பயணம் ஆரம்பித்தபோது தூங்கியதால், அவன் குரல் ஏதோ இந்த பூமிக்குத் திரும்ப வந்ததை வித்தை என்று நினைத்துக் கூப்பிடுவதைப் போல் இருக்கும்.

மிஸ் பீஷெத், ஜெரால்தீன் உதவியுடன் வீட்டிற்குள் மறைவார். வண்டிக்காரன் குதிரையை அவிழ்த்து விட்டு வண்டியை அதன் இடத்தில் விடுவான். பயணம் முடிந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் ஒரு சோகத்துடன் அவன் குதிரையை அவிழ்ப்பதைக் காண்பார்கள். ஒரு புராதன வண்டியை இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு வயதான குதிரை, தூங்கி வழியும் வண்டிக்காரன், சாம்பல் மற்றும் இளஞ்சிவப்பில் உடை உடுத்திய மம்மியைப் போலிருக்கும் ஒரு வயதான பெண்மணி… அவன் அந்தக் காலை வெயிலில் குதிரையை அவிழ்ப்பது ஒரு அமானுஷ்யச் செய்கையாக இருக்கும்.

மதியவேளை உணவுக்குப் பின் ஜெரால்டீன் தன் எஜமானியை வரவேற்பறைக்குக் கூட்டிக் கொண்டு வருவாள். க்ரோஷே பின்னுவதை விடாமல் ஸ்தெஃபானீ  சில விருந்தினர்களை(ச்) சந்திப்பாள். அவர்களுக்கு ஜெரால்டீன் டேண்டேலியன் ஒயினும் பிஸ்கட்டுகளும் கொடுப்பாள்.

பெரிய விரிவான தலையலங்காரத்தால் கழுத்து வலித்தாலும் அந்த வயதான எஜமானி தன் இருக்கையை விட்டு நகராமல்  வலுக்கட்டாயமாக தலை நிமிர்ந்து அமர்ந்திருப்பார். அப்படி அமர்ந்திருப்பதால் ஏற்படும் சங்கடம் சில சமயங்களில் தவிர்க்க இயலாதபடி அவர் முகச்சுளிப்பின் மூலம் தெரிந்து விடும். நிறைய பவுடர் அப்பிய அந்தச் சின்ன முகத்தில் அந்த ஒரு சிறிய முகச்சுளிப்பைத் தவிர விருந்தினர்களால் வேறு எந்த உணர்ச்சியையும் பார்க்க முடியாது.

அதைத் தவிர ஸ்தெஃபானீ  தன் விருந்தாளிகளிடம், ‘உங்கள் தாயார் எப்படி இருக்கிறார்?’ என சுரத்தேயில்லாத தொனியில் கேட்பது, பூட்டியிருக்கும் பல அறைகளில் ஒன்றிலிருந்து வருகின்ற குரலைப் போன்று இருக்கும். அந்த ஊரில் வசிக்கும் பலரும் அந்த அறைகள் அங்கு வசித்தவர்களின் ஆவிகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கின்றன என்று கருதினார்கள்.

ஸ்தெஃபானீக்கு இந்த வாக்கியம்தான் நலம் விசாரிப்பு, வரவேற்பு, விடைகொடுத்தல், உரையாடல் எல்லாமும். உண்மையைச் சொல்லப் போனால் அந்த வாக்கியம்தான் விருந்தினர்களுக்கு எல்லாம்.  ஏனென்றால், கொடுத்த ஒயின் புளிப்பாகவும் பிஸ்கட் இரும்பு போலவும் இருக்கும். அவை எப்போது பணிப்பெண்ணால் தயாரிக்கப்பட்டன எனத் தெரியாது. ஸ்தெஃபானீயின் தந்தை உயிரோடு இருந்தபோது தயாரிக்கப்பட்டவை என்று நான் நினைக்கிறேன்.

தள்ளாடுகின்ற வயதான பெரியவர்கள்தான் மிஸ் பீஷெத்தின் விருந்தாளிகள். எந்தவொரு அந்நிய மனிதனும் அவர்களின் தாயாரின் உடல்நிலை குறித்த அபத்தமான கேள்வியைக் கேட்க மாட்டான். ஆனால் மிஸ் பீஷெத்திற்கு அந்த வாக்கியத்தைத் தவிர வேறு எப்படியும் விசாரிக்கத் தெரியாது. மேலும் அது அவருக்கு அர்த்தம் இல்லாத வெறும் வாக்கியம்.

ஸ்தெஃபானீ விருந்தினர்கள் அங்கு இருக்கும்போது ஒரு க்ரோஷே முழுமையடைந்து விட்டால் ஒரு கூழாங்கல் முகட்டிலிருந்து விழுவது போல அதை அப்படியே கீழே நழுவ விட்டு, அடுத்து அதே மாதிரியான ஒன்றைப் பின்ன ஆரம்பித்து விடுவார்.

வந்த பெண்மணிகள் அதிக நேரம் இருப்பதில்லை; ஸ்தெஃபானீயும் அவர்கள் இருப்பதைக் காட்டிலும் போவதையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.

ஆறேகால் மணிக்கு ஜெரால்தீன் மிஸ்டர் சார்ல்ஸ்ஸின் வருகையை அறிவிப்பாள். ஒரு நல்ல சுவிஸ் கடிகாரத்தின் இயக்கத்தைப் போல ஒவ்வொரு நாளும் இதே சம்பிரதாயத்துடன் அரங்கேறியது. மிஸ் பீஷெத்தினுள் இயங்கும் சக்கரம் சரியாக ஆறேகாலுக்கு, அந்த மெலிதான உருவத்தைச் சுமந்து செல்லும் கால்களுக்கு, உடனே கீழே கொண்டு செல்லும்படி கட்டளையிடும்.

அவரின் சகோதரர் நெற்றியில் முத்தமிட்டு புன்சிரிப்போடு குண்டு குண்டான தன் விரல்களை தேய்ப்பார்.

“ம்ம்… வீட்டிற்குள் நன்றாக இருக்கிறது.”

பின் தன் கோட்டைக் கழற்றி முன்னறையில் இருக்கும் ஸ்டாண்டில் மாட்டுவார். ஜெரால்தீன் அவருடைய அசைவுகளை கைகளைக் கட்டிக்கொண்டு இறுமாப்போடும் வெற்றியோடும்  ஒரு படைத்தளபதியைப் போல் பார்த்துக் கொண்டிருப்பாள். நைந்து போன அவரின் கோட்டை கேவலமாக பார்ப்பாள். அவள் பார்வை:

ஹூம்எப்போது அந்தப் பெண்ணைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தாரோ அப்போதே இது நடக்கும் என்று தெரியும். இவரின் தந்தை இவரைத் துரத்தி விட்டார், நானும் இறந்த மற்றவர்களின் அறையைப் போல இவர் அறையையும் பூட்டி விட்டேன். மிஸ் பீஷெத் வேண்டுமானால் தினமும் மாலையில் அவரை வரவேற்கட்டும், அது அவரின் விருப்பம்; ஆனால் நான், இவ்வீட்டின் வேலைக்காரியான நான், அவருடைய பணிவைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன் என்று அவருக்குத் தெரியட்டும். மிஸ்டர் பீஷெத்தை அவமானப்படுத்தியதற்கு தண்டனைதான் இந்த வறுமை. அவர் வீட்டில் போதுமான அளவு உணவு இல்லாததால் தினமும் இங்கே சாப்பிட வருகிறார். எங்களுடைய உணவைத் தின்று விட்டு பின் அவரின் தோல் எங்கள் வீட்டின்  கதகதப்பையும் எடுத்துக்கொள்கிறதுபிச்சைக்காரன்!’  என்று நினைத்துக் கொள்வாள்.

 சார்ல்ஸ் ஒரே ஒருவேளை தான் நல்ல உணவு சாப்பிடுகிறார் என்ற கூற்று உண்மையானால் அவர் ஏன் ஒல்லியாக இல்லை என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. அவர் குண்டாக, மிகவும் குண்டாக மஞ்சள் நிறத்துடன் இருந்தார். அவருடைய வழுக்கைத் தலையும் பளபளக்கும் முகமும் ஒரே மாதிரி இருந்தன; கண்களும், உதடும் நிறமற்று இருந்தன. அவர் கண்கள் மீனின் கண்ணைப் போல என்றும், அவர் உடை அழுக்கு நாற்றம் வீசுவதாகவும் ஜெரால்டீன் சொல்வாள். மேலும், ஜெரால்தீனால் அவர் உணவு உண்ணும் முறையை மறந்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

“எப்படித் தான் அவர் திருமணம் செய்து கொண்ட அந்த ஜீவராசியால் அவருடைய வீட்டின் உயர்ந்த பழக்கவழக்கங்களை மறக்க வைக்க முடியும் என்று தெரியவில்லை” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொள்வாள்.

இரவு உணவின் நேரம் நெருங்க நெருங்க சார்ல்ஸ் உற்சாகமாகி விடுவார். சகோதரியின் வெறுமையான பார்வைக்கு நடுவே அவர் கைகளைத் தொடர்ந்து தேய்த்துக் கொண்டே கதவுக்கும் ஜன்னலுக்குமாக, ஜன்னலுக்கும் கதவுக்குமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பார்.

சரியான நேரத்தில் இருவரும் அந்த நீண்ட மேஜையின் எதிரெதிர் முனையில் அமர்வார்கள்.

அறையில் எரிவாயு விளக்கு இல்லாததால் இரண்டு மெழுவர்த்திகள்  மட்டுமே மேஜையின் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த இடம் இன்னும் பெரிதாகவும் ஆழமாகவும் தோன்றும். அறையின் மூலைகள் இருட்டில் தொலைந்திருக்கும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இருவரின் நிழல்கள், ஆர்வமாக செதுக்கப்பட்ட ஓக் மரப்பலகைகளின் மேல் கருப்புத் தீயைப் போல் நடனமாடிக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மாலையிலும் நிலவிய அந்தச் சூழ்நிலை சார்ல்ஸை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை அந்த நிழல்களுக்குப் பின்னால் ஏதேனும் நடமாட்டத்தை, அந்த விருந்தைப் பார்வையிடும் கண்ணுக்குப் புலப்படாத பார்வையாளர்களை உணர்ந்தாரோ என்னவோ! எந்த நிமிடமும் மேல் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் அந்த ஆவியுருவங்கள் எங்கே கீழே வந்து காலி நாற்காலிகளை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயமும் இருந்தது. கைத்தறித் துணியைப் போல் வெண்மையான, பூனையைவிட சற்றே பெரிய உருவத்தையொத்த அந்தக் கிழவியும் பார்க்க அமானுஷ்யமாகத்தான் இருந்தார்.

சூப் கொஞ்சம் சாப்பிட்டவுடன் ஸ்தெஃபானீயின் சகோதரனுடைய சந்தோஷமான மனநிலை மாறியது. வீட்டினுள் நுழையும்போது இரவு உணவின் மணத்தைத் துள்ளலோடு போதையோடு முகர்ந்து கொண்டு வந்தவரின் முகம் இப்போது இருண்டது.

கசப்பான எண்ணங்களுடன் துணியை, வெள்ளிச் சாமான்களை, பீங்கான் பாத்திரங்களைப் பார்த்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கிற, அந்த உடம்பில் இன்னும் உயிருடன் இருக்கும் தன் சகோதரியைப் பார்த்தார். கண்ணுக்குப் புலப்படாத எந்த பந்தம் ஸ்தெஃபானியை உயிருடன் வைத்திருக்கிறது? காற்றடித்தால் பறந்துவிடக் கூடிய நிலையில் இருக்கும் அவள் உயிரோடு இருப்பது ஆச்சரியம்தான்.

ஜெரால்தீன் மேஜையைச் சுற்றி நகர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண் சார்ல்ஸினுள் ஊடுருவி அவர் எண்ணங்களை அறிந்து கொண்டது போலிருந்தது. அவள் கவனித்தது அவருக்குப் பெரும் அமைதியின்மையை உண்டாக்கியது. ‘இந்த வேலைக்காரி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் ஸ்தெஃபானீ அவள் முன்னோர்களைச் சென்றடைந்து இருப்பாள். ஏதோ ஒரு வேண்டாத சக்தியைப் பயன்படுத்தி பிணம் போல இருக்கும் என் சகோதரியை தன் முன்னோர்கள் வீட்டில் நடமாட விட்டு என் வீழ்ச்சியை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டார். ஜெரால்தீன் சார்ல்ஸின் தந்தையினுடைய கோபத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு புனிதமான சத்தியத்தை நம்பிக்கையுடன் பேணுவதைப் போன்று கோபத்தையும் பேணி வந்தாள்; அது சார்ல்ஸிற்குத் தன்மேல் தொங்கிக் கொண்டு இருக்கும் சாபத்தை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

இந்த எண்ணங்களுக்கு நடுவில் விடாப்பிடியான அவள் பார்வையின் சுமையைத் தாங்க முடியாமல் அந்த மனிதர் தலையைத் தூக்கிப் பார்த்தார். பணிப்பெண் அங்கு இல்லை. ஆனால் சமையலறை படிக்கட்டுக்கும் சாப்பிடும் அறைக்கும் இடையே சாவிக்கொத்தின்  ஓசையை சார்ல்ஸால் கேட்க முடிந்தது. அவள் பெல்ட்டில் இருப்பது என்னென்ன சாவிகள் என்று தெரிந்ததும் அவர் உடம்பு நடுங்கியது. சாவி இல்லாத அலமாரியோ, அறையோ அந்த வீட்டில் ஒன்று கூட இல்லை. தன்னுடைய அறையின் சாவி இறந்து போனவர்களின் அறையின் சாவியோடு இருப்பதை நினைத்து நெஞ்சு இறுகியது, அவர் பயந்து போனார். ஆசுவாசப்படுத்திக்கொண்டு முணுமுணுத்தார்:

“பாழாய்ப் போன வீடு! இந்த வயதான மறை கழன்ற பெண்களுடன் இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்… இந்த ஒயின் என் தலைக்கேறுகிறது என நினைக்கிறேன்!”

ஸ்தெஃபானீ டேபிளை விட்டு எழுந்ததும் சார்ல்ஸும் அவளைத் தொடர்ந்து எழுந்தார்.

அந்த மாலையும் மற்ற மாலைப் பொழுதுகளைப் போலவே ஆரம்பித்தது. ஸ்தெஃபானீ பின்னுவதை ஆரம்பிக்க , சார்ல்ஸ் கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையில் நடந்தார்.

எல்லா நாட்களையும் போலவே முழு அமைதியுடன் சகோதரனும் சகோதரியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார்கள்.  கடிகாரம் பத்து அடித்தது. போதுமான அளவு வீட்டில் இருந்தபின் தன் சகோதரிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, கோட்டை மாட்டிக் கொண்டு, நூலிழை பிரிந்த பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு விடைபெற்றார்.

தெருவை ரசித்துக்கொண்டு நடப்பவர் போல தெருவில் மெதுவாக நடந்தார். தன் நிழலை சுவரில் பார்த்ததும் பழைய வேண்டாத எண்ணங்கள் அவருக்கு நடுக்கத்தை தந்தது. வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளைப் போல ஆச்சரியமோ , துக்கமோ இல்லாமல்  இந்த இரண்டு பெண்மணிகளும் அவருக்குப் பழக்கப்பட்டு விட்டனர்.  அவர்களைப் பற்றி நன்றாக அறிந்த அவர், அவர்களை இப்போது நேருக்கு நேர் பார்ப்பதில்லை. அவர்களுடைய செயலற்ற பிம்பங்களின் பிரதிபலிப்பு மட்டுமே அவருடைய கண்களில் கடந்து போயின.

அவர் வீடு இருக்கும் தெருவான ர்யூ தே இர்லாந்தேவில் திரும்பியவுடன் சார்ல்ஸ் தன் மனைவியைப் பற்றி நினைத்தார். ஒரு பாதுகாப்பான உணர்வுடன், தன்னிடம் வந்து விட்ட விலைமதிப்பான ஒரு பொருளிடம் செல்வது போல் அவசரமில்லாமல் அவளிடம் சென்றார். சட்டென்று தான் வீட்டிற்கு வந்துவிட்டதை உணர்ந்தார். இரண்டு ஒரே மாதிரியான, சோகமான, சிதைந்த, தாழ்வான வீடுகள். அவைகளின் நுழைவாயில்கள் கிட்டத்தட்ட சாலையின் மேல் இருந்தன.

இந்த இரு வீடுகளில் ஒன்றில் இரண்டாவது மாடியில் சார்ல்ஸும் அவர் மனைவியும் இரண்டு அறைகள் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். படிகளில் ஏறி, சமையலறையைத் தாண்டி, மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு படுக்கையறைக்குச் சென்றார். ஒரு கரகரப்பான ஓய்ந்து போன குரல் மெதுவாகக் கேட்டது. “சார்ல்ஸா?”

மெழுகுவர்த்தியை மேஜை மேல் வைத்தார். அந்தப் பெண் நெற்றி மேல் கையை வைத்து தனக்கு வந்த வெளிச்சத்தை மட்டுப்படுத்தினாள். அவர் அவளின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தார்.

‘எப்படியிருக்கிறார் உங்கள் சகோதரி?’

‘எப்போதும் போலத்தான்…’

எப்போதும் போல அதே இரண்டு கனமான வாக்கியங்கள். வெளியே சாதாரணமான வாக்கியங்கள் போலத் தெரிந்தாலும் அதற்குப் பின்னால் இருந்த பேசப்படாத வாக்கியங்கள்:

‘இன்னும் நிறைய நாட்கள் இருப்பாள் என்று நினைக்கிறீர்களா? சாகவே மாட்டாளா?’

அந்த நிமிடத்தில் எஸ்ப்லனேட் வீட்டில் ஸ்தெஃபானீ த பீஷெத் தன்னுடைய சிறிய சில்லிட்ட கைகளைக் கட்டிக்கொண்டு செல்லுபடியாகாத பழைய துணியைப் போன்ற தன்னை, அழுத்திய அத்திப்பழத்தைப் போன்ற தன்னை வெறுமையான இரவுக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மரணம் அந்த வீட்டின் எல்லாக் கதவுகளையும் மூடுவதைப் போன்று, ஜெரால்தீன் விழித்துக் கொண்டு கனவு கண்டுகொண்டிருந்தாள்.

(வெயிற்காலம்  1942)

-La maison de l’esplanade by Anne Hébert

இந்தக் கதை ஃப்ரெஞ்ச் மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழில்: காயத்ரி ஆர்.

(இவர் சென்னையில் வசித்துவருகிறார். பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர். ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பங்குதாரர்)

ஓவியம் –  Gustav Klimt

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

4 COMMENTS

  1. Ur translation is very beautifully written gayathri. Very touching story of the old lady who lives alone. It’s very difficult to experience the loneliness

  2. மிகவும் அருமையான கதை தேர்வு
    பிரெஞ்சு இலக்கியத்தின் நேர்த்தியை தமிழில் தந்ததற்கு பாராட்டுக்கள்
    கதை நாயகியின் தனிமையின் அனுபவத்தை விவரித்து எழுதிய பாங்கு அருமை
    ஸ்டெபொனி சில இடங்களில் ஜெயகாந்தனின் கங்காவை நினைவு படுத்துகிறார் தங்களின் வர்னனையில்.
    வாழ்த்துக்கள்!!!!

  3. மொழி பெயர்ப்பு என தெரிவதுதான் நல்ல எழுத்துக்கு அழகு. பவரது எழுத்தில் இணைய எழுத்தாளரகள் என்பதுதான் தெரிகிறது

    இந்த கதையும் மொழி ஆக்கமும் வெகு”சிறப்பு. சாருவின் மொழியாக்கம் போன்ற உன்னதம் கீழ்கண்ட சொற்கொவைகள் போல பல வாக்கியஙக்களை வெகுவாக ரசித்தேன்

    அத்திப்பழத்தைப் போன்ற தன்னை வெறுமையான இரவுக்கு

    செல்லுபடியாகாத பழைய துணியைப் போன்ற

    செயலற்ற பிம்பங்களின் பிரதிபலிப்பு மட்டுமே

    செல்லப்பிராணிகளைப் போல ஆச்சரியமோ , துக்கமோ இல்லாமல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular