சட்டவாக்க அரங்கு – சமூகத்திற்கான கலைச் செயற்பாடு
– ரூபன் சிவராஜா
(இத்தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க.. இங்கே சொடுக்கவும்)
சட்டவாக்க அரங்கம் (Legislative Theatre) என்பது அகஸ்டோ போல் வடிவமைத்த ஒடுக்கப்பட்டோருக்கான அரங்க வடிவங்களில் ஒன்று. இறுதியானதும் கூட. நேரடியான சமூக அரசியல் செயற்பாட்டினைக் கொண்ட வடிவம் இது. அதன் ஆற்றுகைச் செயல்முறையும் அடைவும் அரங்கக் கலைக்கு சமூகப் பொறுப்பினையும் அரசியல் கடப்பாட்டினையும் அர்ப்பணிப்பினையும் கொடுக்கின்றது. ஒடுக்குமுறைக்கெதிரான கலை மற்றும் ஜனநாயக-அரசியற் செயற்பாடு. இதன் அடைவு என்பது உள்ளுராட்சி சபை நகர சபை பிரதேச சபை நாடாளுமன்றம் ஆகியவற்றில் சட்டங்களாகவும் சட்டத்திருத்தங்களாகவும் நிறைவேற்றப்படக்கூடிய உத்திகளையும் செயல்முறைகளையும் கொண்டுள்ளன.
1993இலிருந்து 1996 வரையான காலப்பகுதியில் பிரேசிலின் Rio de Janeiro மாநில சட்டமன்ற உறுப்பினராக Boal நேரடி அரசியலில் ஈடுபட்டபோது பல முக்கிய சட்டங்களும் திருத்தங்களும் இந்தச் சட்டமன்ற அரங்கச் செயற்பாட்டினூடாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் பாதுகாப்பிற்குமான சட்டங்கள் அவை.
சட்டவாக்க அரங்க வடிவம், செயற்பாட்டுப் படிநிலைகள், சட்ட உருவாக்கப் படிநிலைகள் தொடர்பாக கட்டுரையின் இனிவரும் சில பகுதிகள் அமைகின்றன.
‘ஜனநாயக சமூகத்தில் குடிமக்கள் தமது பாராளுமன்றத்தில் வெறுனே பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் செயல்களினூடாகத் தமது வாழ்விற்கான பொறுப்பினை எடுக்கவேண்டும். நிலைமாறு ஜனநாயகம் என்பது உரையாடல், ஊடாட்டம், மாற்றம் என்பவற்றைக் குறிக்கிறது’ என்கிறார் Boal.
நேரடி மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளை விளங்கிக் கொண்டு கூட்டுப் பிரதிபலிப்பு உரையாடல் மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகளையும் வெளிகளையும் உள்ளடக்கிய ஐனநாயக உத்திமுறைகளை சட்டவாக்க அரங்கத்தில் வடிவமைத்தார். சட்டவாக்க அரங்கு என்பது அடிப்படையில் ‘மக்கள் அரங்கிலிருந்தே’ (Forum Theatre) பரிணமிக்கிறது. ‘மக்கள் அரங்கு’ தான் மேலதிக செயற்பாட்டு உத்திகளோடு அடுத்த படிநிலைக்கு நகர்த்தப்பட்டு சட்டவாக்க அரங்காக வடிவமாற்றம் அல்லது விரிவாக்கம் பெறுகின்றது.
மக்கள் அரங்கின் இலக்கு, நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, முரண்பாடுகளுக்கான புதிய, மாற்றுத் தீர்வுகளை நிகழ்த்திக்காட்டலூடாக வெளிப்படுத்தி, மாற்றம் நோக்கிய சிந்தனையைத் தூண்டுதலாகும். முரண்பாட்டுகளைக் கொண்ட கருப்பொருளை காட்சிபூர்வமாக வெளிக்கொணரவும் அதன் முரண்பட்ட விருப்பங்களை விளங்கிக் கொள்ளவும் வழிவகுக்கிறது. சட்டவாக்க அரங்கத்தின் இலக்கு ஒடுக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைச் சட்டரீதியாகச் சாத்தியப்படுத்துதலும் நலன்களைப் பாதுகாத்தலுமாகும். முன்னையது கலையின் ஊடாக தனிப்பட்ட மனங்களிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. பின்னையது நடைமுறையில், அரசியல் அதிகாரத்தில் நிறுவனரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. விளிம்புநிலை அல்லது ஒடுக்கப்பட்ட தரப்பினரின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் நிலவுகின்ற ஆட்சி நிர்வாக முறைமைக்குள் புதிய சட்டங்களாக அல்லது சட்டத்திருத்தங்களாக முன்மொழிதல் என்பதே சட்டவாக்க அரங்கின் நோக்கம்.
‘மக்கள் அரங்கில் பார்வையாளர்கள் ஆற்றுகையாளர்களாக மாறுகின்றனர். சட்டவாக்க அரங்கில் குடிமக்கள் சட்டவாக்கிகளாக மாறுகின்றனர்’ என்கிறார் Boal.
சட்டவாக்க அரங்கம் நிகழ்த்தப்படும் முறைமை, வடிவம், உத்தி, இறுதி அடைவு சார்ந்து மூன்று முக்கிய படிநிலைகளைக் கொண்டுள்ளது.
1) கூட்டுப் படைப்பாக்கம் (Collective Creation)
2) மக்கள் அரங்கு, எழுத்துமூல முன்மொழிவு (Forum Theatre and written proposals)
3) சட்ட உருவாக்கத்திற்கான கருத்தமர்வு (Legislative phase)
இந்த அமர்வுகளில் குறிப்பிட்ட அரங்கச் செயற்பாட்டாளர்கள் (பங்கேற்பாளர்கள்/ஆற்றுகையாளர்கள்), முதன்மைப் பாத்திரங்களாக (Protagonist) செயற்படுவர். ஆற்றுகையாளர்கள் (Actors), நெறியாளர்(Joker), பொதுமக்கள் (Spec-Actors),சட்ட மற்றும் கருத்தியல் நிபுணர்கள் இந்த அரங்கச் செயற்பாட்டுப் படிநிலைகளுக்குள் இயங்குவர். பங்கேற்பின் வெவ்வேறு படிநிலைகள் வெவ்வேறு தாக்கங்களை உண்டுபண்ணுகின்றன.
கூட்டுப் படைப்பாக்கம்
‘கூட்டுப் படைப்பாக்கம்’ எனும் முதற்படிநிலையில் குழுநிலை உருவாக்கத்துடன் ஆற்றுகையாளர்களுக்கான செயற்பாடுகள் தொடங்குகின்றன. குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கையை உருவாக்குதல், குழு ஒத்திசைவினை ஏற்படுத்துதல் இப்படிநிலையின் அடிப்படை நோக்கங்கள். பங்கேற்பாளர்கள் இலகுவாகவும் சுதந்திரமாகவும் ஒருவரோடொருவர் நெருங்கி ஊடாடுவதற்கான ‘வெளி’, விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. அந்த வெளியானது தனித்த மற்றும் கூட்டுப் படைப்பாக்கத்திற்கான வெளியாகப் பரிணமிக்கிறது. இந்த வகையான இலகுபடுத்தல் (Warmup) செயற்பாடுகள் எந்தவொரு நாடக, ஆற்றுகை, கலை வெளிப்பாட்டு ஒத்திகைகள் மற்றும் நிகழ்த்துகைகள், படைப்பாக்கங்களுக்கும் இன்றியமையாதவை.
இத்தகைய ஆரம்பநிலைத் தயார்ப்படுத்தல்களின் பின் பலரைப் பாதிக்கின்ற ஒடுக்குமுறை அல்லது சமூகப்பிரச்சினை சார்ந்த கருப்பொருள் ஒன்றினை நெறியாளர் அறிமுகப்படுத்துவார். ஆற்றுகையாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட கருப்பொருளுடன் தொடர்புடைய வன்முறை, ஒடுக்குமுறை சார்ந்த உதாரணச் சம்பவங்களை அறிமுகப்படுத்துவர். அவை ஆற்றுகையாளர் நேரடியாக அனுபவித்த அல்லது வேறு வழிகளில் அறிந்த கதை அல்லது சம்பவமாக இருக்கும். அவை பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். ஒவ்வொரு கதை/சம்பவமும் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றிலிருந்து ஒரு கதை/சம்பவம் ஆற்றுகைக்காகத் தெரிவுசெய்யப்படும். தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட கதை அதனை முன்மொழிந்தவரின் மேலதிக பங்களிப்புடன் ஆற்றுகைக்கான தயார்ப்படுத்தல் இடம்பெறும்.
அரங்க ஆற்றுகைப் பகுதி பிரச்சினையின் அடிப்படைக் கூறுகளை விபரிக்கும் வகையிலும் கற்பனை மற்றும் குறியீட்டு அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும். கற்பனையும் குறியீடும் நாடகப்படைப்பாக்கத்தில் முக்கியமானவை. அவற்றின் மூலமே கலையினதும் நாடகத்தினதும் மொழி முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில்தான் மக்கள் அரங்கிற்கான கூட்டுப்படைப்பாக்க மற்றும் கலைத்துவ அம்சங்களுடன் நாடக எழுத்துரு, ஆற்றுகையாளர் தெரிவு, பின்னணி இசை உட்பட்ட கூறுகளும் தீர்மானிக்கப்படுகின்றன.
அரங்க ஆற்றுகைகளின் அர்த்தம், சக்தி, தாக்கம், புரிதல் என்பன பரந்துபட்டவை. மாறுபட்டவையும்கூட. ஒரு பக்கம் கலைவெளிப்பாடு, படைப்பாக்கம், ஆற்றுகை, பார்வையாளனுக்கான காட்சியனுபவம், சிந்தனைத் தூண்டல், சமூக மாற்றத்திற்கான கருவி. மறுபக்கம் அரங்க ஆற்றுகைக்கான தயார்ப்படுத்தல்கள் அரங்கப் பயிற்சிகள், விளையாட்டுகள், ஒத்திகைகள் கூட்டுப்படைப்பாக்கத்திற்கான களமாகவும் தூண்டுதலாகவும் அமைகின்றது. அது அரங்க மொழியின், கலை மொழியின், நாடக மொழியின் மொத்த வெளிப்பாட்டினைப் பொறுத்து அதன் சக்தி, தாக்கம், அர்த்தம் மாறுபடுகிறது. மொழியின் மொத்தக் கூறுகளைப் பொறுத்து அரங்கம் ஏற்படுத்தும் தாக்கம், கடத்தும் உணர்வு, அறிவு, கலாச்சார அம்சம்களைப் பொறுத்து வெவ்வேறு பரிமாணங்களை அடைகின்றது. முரண்பாட்டின் தாக்கத்தையும் உணர்வுபூர்வமான அம்சங்களையும் காட்சிபூர்வமாக மீளுருவாக்கம் செய்ய சொற்களற்ற தொடர்பாடல் செய்கைகளான உடல் அசைவுகள், நெருக்கம், குரலின் தொனி, முகபாவங்கள் என்பன முக்கியமானவை. மொழியின் கூறுகள் என்பவை உரையாடல் மொழியைக் குறிப்பதன்று. கலையின் மொழியைக் குறிப்பது. கலையின் மொழி என்பது பல்பரிமாணம் கொண்டது.
மக்கள் அரங்கு – நிகழ்த்துகை, எழுத்துமூல முன்மொழிவு
இரண்டாவது படிநிலையில் மக்கள் அரங்கு நிகழ்த்துகையும் எழுத்துமூலமான முன்மொழிவுகளின் கையளிப்பும் இடம்பெறும். ஆற்றுகை நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் எழுத்துமூலமான தீர்வுகள் முன்வைக்கப்படும். இந்தக் கட்டத்தில் அரங்க வெளிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் அரங்க வெளிக்குள் பிரவேசிக்கும் போது அவர்களின் கைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களுடைய அட்டைகள் வழங்கப்படும். (ஆற்றுகைக்குப் பின்னர் எழுத்துமூலம் கையளிக்கப்பட்ட தீர்வுகள் மீதான வாக்கெடுப்பிற்கு அந்த அட்டைகள் பயன்படுத்தப்படும்.) மக்கள் அரங்கின் உத்தி மற்றும் நிகழ்த்துகை முறையினை அறிமுகம் செய்து, சட்டவாக்கப் படிநிலையை நெறியாளர் விளக்குவார்.
எடுத்துக்கொண்ட கருப்பொருள் ஒரு உண்மையான சமூகப் பிரச்சினையை, முரண்பாட்டினை, ஒடுக்குமுறையைப் பிரதிபலிக்கின்றதா எனப் பார்வையாளர்களின் அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் உள்வாங்கப்படும். முரண்பாட்டுக்கான சாத்தியமான தீர்விற்கான பரிந்துரைகளும் அவர்களிடமிருந்து கோரப்படும். பார்வையாளர்களின் தலையீடு அனுமதிக்கப்படும். அரங்கில் பார்வையாளர்கள் ஆற்றுகையாளர்களாக மாறுவர். (இந்தத் தொடரின் ‘மக்கள் அரங்கு’ தொடர்பான முன்னைய கட்டுரையில் அதன் நிகழ்த்துகை முறைமை, வடிவம்,உத்திகள் தொடர்பான விபரிப்புகளைக் காண்க). நிகழ்த்துகையின் நிறைவில் பார்வையாளர்களும் தீர்வுக்கான தமது முன்மொழிவுகளை எழுத்துமூலம் வழங்குகின்ற முறைமையுள்ளது.
சட்ட உருவாக்கம்
மூன்றாவது படிநிலையில், முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் மீதான தெரிவும், மொழிசார்ந்த செழுமைப்படுத்தலும் (சட்டமன்ற மொழி) இடம்பெறும். முதலில் அரங்கக்குழுவிலுள்ள சட்டத்துறை வல்லுனர்கள், அப்பரிந்துரைகள் நிலவுகின்ற சட்ட அமைப்பியல் வரையறைகள் விழுமியங்களுக்கு உட்பட்டதா என ஆராய்வார்கள். தொடர்ந்து அவற்றைச் சுருக்கியும் சாராம்சப்படுத்தியும் பொதுமக்களுக்கு விளக்கி, அவற்றின் மீதான வாக்கெடுப்பிற்கு விடப்படும். வாக்களிப்பின் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள், அரசியல்வாதிகள் மத்தியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படும். சட்ட மன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் வாக்களிப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மையைப் பெறுமிடத்து அவை தீர்மானமாக நிறைவேற்றப்படும். சட்ட வரைபின் இறுதிப்படிநிலை பாரிய பங்களிப்பினைக் கோருகின்ற விடயமாகும். நடைமுறை யதார்த்தம் பற்றிய நுண்ணறிவும் பரந்த பார்வையுமுடைய முழுமையான புரிதலுக்குரிய வகையில் சட்டவாக்க அரங்கின் செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
(தொடரும்..)
ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.