Saturday, November 16, 2024
Homeபொதுஒரு மழையிரவில் . . .

ஒரு மழையிரவில் . . .

4533312812_71cd29f313

                     ரமேஷ் ரக்சன் கதைகள் – 04

“மழை பெஞ்சாலும் அண்ணனும் தம்பியும் குல்பி விக்கிறத விட மாட்டிங்களாடா?”

“இல்ல சார் எப்பவும் வாங்குறவங்க வாங்குவாங்க. அவுங்க தான் தெனமும் கொண்டுவர சொல்லிருக்காங்க…”

“சார் பசங்கள பாத்திங்களா!? ரெகுலர் கஸ்டமர் எல்லாம் வச்சிருக்கானுங்க”

“அப்டிலாம் இல்ல சார் எங்கிட்ட நல்லா இருக்கும்னு வாங்குறாங்க…”

“அவரு கேக்காம எதும் சொல்லாதடா கேள்வியா கேப்பாரு” என்று அண்ணன் தம்பியின் காதில் முணுமுணுக்க அமைதியானான்.

“இங்க ரெண்டு குல்பி குடு!..”

“10ரூபா, 20ரூபா எது சார் வேணும்?..” தம்பிக்காரன் விலை சொல்லி முடிக்க, அண்ணங்காரன் வெண்ணிலாவும் சாக்லேட்டும் இருக்கு சார் எது வேணும் என்றான்.

“எங்கள பாத்தா பயமா இல்லயா?”

“இந்த மாதிரி எல்லாம் சின்ன பசங்க விக்க கூடாது தெரியுமா?”

“படிக்ற வயசுல படிக்காம குல்பி விக்றாங்கனு ஜெயில்ல போடலாம் தெரியுமா?”

“ஹிந்திகார படிக்கிற பசங்க எல்லாம் பாணிபூரி விக்றாங்க சார்…”

வலது கைக்கு லாவகமாய் நின்ற தம்பிக்காரன் பொடனியில் அடித்தபடி இரண்டு போலிஸ்காரர்களும் அவர்களை கடக்க ஆரம்பித்தனர்.

எப்போதும் போல எல்லோரும் போல மணியடிக்காமல், ஒரு சத்தமாகவோ தாளமாகவோ மணியடித்தால் தினமும் இரவு குல்பி வாங்கும் நபர்கள் இறங்கி வந்து வாங்கிச்செல்வார்கள். ஏனெனில் அண்ணன் தம்பி இருவர் விற்கும் குல்பி, கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது காரணமாக இருப்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. அதுமட்டுமில்லாது, அதிக பேச்சுலர்கள் வாழும் தெரு அது.
தினசரி வாங்கும் நபர்கள் மணியடிப்பது யாரென தெரியாமல், கீழ் இறங்க வேண்டாம் என்பதும் இவர்களை அடையாளம் காண்பதற்கு, ஒருத்தனுக்கான அலாரமாக இருந்த அந்த அண்ணன் தம்பிகளின் அழைப்பு, நாளடைவில் சுவையால் அந்த தெருவிலிருக்கும் எல்லா மேன்சனுக்கும் பழக்கப்பட்ட ஒன்றாகிப்போனது.

“மெதுவா சொல்லலாம்ல? அடிச்சிட்டு போறான் பாரு தேவடியாமொவன்;”

“துட்டும் தரமாட்டான்… ஓசில குடுக்க சொல்றியா?”

“ஒரு அடிதான!.. 40ரூவா மிச்சம்!..”.

சின்ன மேஜை. சுற்றும் போது எத்தனை ரெக்கைகள் இருக்குமென எண்ணிவிடும் அளவிற்கு மெதுவாய் ஓடும் ஒரு மின்விசிறி. அழுக்குத்துணிகளை தொங்கவிட இரண்டு சுவற்றை இணைத்து ஒரு கயிறு. துணிகளை துவைத்துக்கொள்ள சின்னதாய், நான்கு விரல் உயரம் அளவிற்கு சதுரமாய் கட்டப்பட்ட மற்றுமொருமூலை அதனையொட்டி ஒரு சன்னல் அதில் இரண்டு சோப்பு.

அவர்கள் பாஷையில் சொல்வதானால் உப்பு சோப்பு, மேலுக்கு போட்டு குளிக்கிற சோப்பு
அருகருகே படுத்திருந்தாலும் விடியலில் என்னவோ இருவருமே சிலுவை போலவே படுத்திருப்பார்கள்.

பக்கத்திலேயே பழக்கம் பிடித்து வைத்திருந்த தாத்தாவோடு ஒட்டிக்கொண்டவன் சின்னவன். பகலில் பழச்சாறு கடைகளுக்கு அவர் ஐஸ் கட்டிகளை கடைகடையாக போடப்போகும் போது ஒத்தாசையாக கூடச்செல்வான்.

பாலமோ மேட்டுப்பகுதி வரும் போது பின்னிருந்து தள்ளுவது. அப்படி இல்லாத சமையங்களில் ஐஸ் கட்டிகளோடு ஒருவனாய் அமர்ந்து கொள்வது.ப்ரிட்ஜ், வாசிங்மெசின் என லோடு வந்துவிட்டால், அந்த முதியவரும் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டில் லோடு இறக்கி வைத்துவிட்டு வாய்ப்பு கிடைத்தால் அந்த தெர்மாகோல் ஷீட்டுக்கு தலையை சொரிந்தபடி நிற்பார், சிலமுறை வாங்கியும் கொடுத்திருக்கிறார்.

உதிர்த்து விளையாட தெர்மாகோல்

ரிக்ஷா சைக்கிள் ஓட்டக்கொடுப்பது

ஒரு எப் எம் ரேடியோ

சின்னவனுக்கு விருப்பமெல்லாம், எப்போதோ ஒருமுறை உடைந்த நிலையில் கிடைத்த தெர்மாகோல் பாக்ஸ் மீண்டும் கிடைத்து விடாதா என்பது தான் அது.சொரசொரப்பான கல் ஒன்றை எடுத்து தெர்மாகோலை உராய்ந்து உராய்ந்து சின்ன சின்ன முட்டைகளாய் அரை முழுவதும் நிரப்பி விளையாடியது மீண்டும் ஒருமுறை நிகழ்ந்து விடாதா என்பது தான்.

என்னதான் அண்ணனும் தம்பியுமாய் குல்பி விற்று வந்தாலும் எப் எம் வாங்குவதற்கென அண்ணனிடம் காசு கேட்டதுமில்லை. அடம் பிடித்ததுமில்லை. அந்த முதியவருடன் செல்கையில் கிடைக்கும் 5ரூபாய் பத்து ரூபாய் என தனியாய் சேமித்து வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில், அண்ணனிடம் கூட பணம் சேர்ப்பதை சொல்லவில்லை.

“டேய் பொடியா” என்றழைத்த சற்று நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தவனை, “என்னாடா அண்ணன புடிச்சிட்டு போயிட்டாங்கனு சோகமா இருக்கியா? நாளைக்கு காலைல விட்ருவாங்களாம் எல்லாம் பேசியாச்சி. அந்த ஆளு அப்டி சொன்னானு கவலப்படாத” என்று மெதுவாய் தேற்ற முயன்றார் பெரியவர் சிறுவனை.
சின்னவன் அழத்துவங்கியபடியே எத்தனையோ இரவுகள் கேட்டும் சொல்லாத தான் பிளைக்க வந்த கதையை சொல்ல ஆரம்பித்தான்.

“எங்க ஊர்ல நாங்க ஓடு லோடு ஏத்தி விடுற வேலைக்கு, லீவு நாள்ல எங்க அண்ணன் கூட நானும் சும்மா போவேன். நாங்க மதியம் சாப்டு மரத்து மூட்ல இருக்கும்போது எங்க ஓனர் ஒரு புது கார்ல வந்தாரா…

நல்லா இருக்குனு நான் போயி பாத்ததும், எங்க அண்ணனும் பின்னாடியே வந்தான். நான் கண்ணாடிய தொட்டுபாத்ததுக்கே அந்த ஆளு என்ன கொட்டிட்டான். சும்மா தான் பாத்தோம்னு சொன்னதுக்கு எல்லாம் தள்ளி நின்னு தான் பாக்கனும் தொட்டுஎல்லாம் பாக்கக்கூடாதுனு சொல்லிட்டான் அதான் இங்க வந்தோம்..”

“இங்கையும் அந்த அப்பார்ட்மெண்ட் ஆளும் அதையே சொன்னாரா அதான் எங்கண்ணன் கார் கண்ணாடிய ஒடச்சி மாட்டிக்கிட்டான்!..”

“என்னமோ இவனுவ மட்டும் தான் கார் வாங்குறவன் மாதிரி!?.. நீங்க ரிக்ஷா ஓட்ட சொல்லி தரியளா? நானும் அப்டியே கார் ஓட்டிப்படிச்சி அப்றம் கார் வாங்குவேன்” என்றவனை இன்னும் சற்று அருகில் அமர்த்தி புது எம் எம் ரேடியோவை கையில் கொடுத்தார்.

“நீ சேத்து வச்சிருக்கல்லா அந்த ரூவாய எல்லாம் எடுத்துட்டு வா” என்று அனுப்பியதும், சேர்த்து வைத்திருந்த சில்லரையை எடுத்துக்கொடுக்க அதில் 135/- இருந்தது.

“என்னடே நேத்து ராத்திரி தான 185/- ருவா இருக்குனு சொன்ன அதுக்குள்ள 50 ருவா எங்க?” என்று கேட்க,

“நான் சரியா எண்ணாம சொல்லிட்டேன்..” -என்று சமாளித்தான்.

“இது 300 ரூவா;”, “நீ இந்த 135 ரூவாய குடுத்துரு மீதிகாசு தர வேணாம் ராத்திரி பாட்ட கேட்டுட்டே தூங்கு காலைல அண்ணன் கூட்டிட்டு வந்துரலாம்” என்று அவனை அறைக்கு அனுப்பி வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.

அறையில் துணிக்கயிறு மின்விசிறியில் முடிச்சிட போராடித் தோற்றிருந்தது.
ஐஸ்கட்டி அறை முழுவதும் நீராகப் பரவியிருந்தது. ஐஸ் பெட்டியைச் சுமந்து வந்த தெர்மாகோல் சின்ன சின்ன பந்துகளாய் உதிர்ந்து கிடந்தன.

1

 

       – ரமேஷ் ரக்சன்

rameshrackson@yahoo.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular