சரவணன் சந்திரன்
“அந்த பொம்பளையால சீப்படணும்னு உங்க ஜாதகக் கட்டத்தில தெளிவா இருக்குது. பேசாம இப்பயே முடுக்கி விட்டிருங்க. இல்லாட்டி பின்னாடி கெடந்து உருளுவீங்க. ஆழமா படிச்சவங்க விஷயத்தில வயசு ஒன்னும் கணக்கு இல்லை. கணிக்கிற விஷயத்தில நாங்க ரெண்டு பேரும் லேசுப்பட்டவங்க கிடையாது. இதுவரைக்கும் தப்புனதில்லை. கட்டத்துக்குள்ள நின்னு யாரோடவும் போட்டி போடுவோம்” என்று தனபாண்டியின் குரல் வரவே விழித்துப் பார்த்தேன். கிரிதரன் ஒத்திசைவாகத் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தான். கேட்டவுடனேயே கண்ணைத் திறந்து இவர்களைப் பார்ப்பதற்கு முன்பே எனக்குத் திக்கென இருந்தது. அடுத்த கணம் அவன்கள் என் தனிவாழ்வினுள் நுழைகிறார்கள் என்பதால் எரிச்சலாகவும் வந்தது.
நிதமும் இரவு என்னைப் படுக்க வைத்துக் கைகால்களை அழுத்திவிட்டுக் கொண்டிருப்பார்கள். “இந்தப் பக்கம் நீ அமுக்கு” என யாராவது ஒருத்தர் சொல்கிற சத்தம் மட்டுமே கேட்கும். அன்றைக்கும் அப்படிச் செய்துகொண்டிருந்த போதுதான் அமைதியைக் கிழித்துக்கொண்டு அதைச் சொன்னான். “மூடிக்கிட்டுப் போங்கடா அந்த பக்கம். ஒரு மரியாதை வேணாம். கூடப் படுக்கைக்குப் பக்கத்தில உங்காந்திட்டா பொண்டாட்டி ஆயிடுவீங்களா” என இருவரையும் துரத்தி விட்டேன். அதற்கப்புறம் அதிகாரத் தோரணையை அவர்கள் இருவரிடமும் கொஞ்சம் அதிகமாகவே காண்பித்தேன். பிறகு அதுகுறித்து மூச்சே விடவில்லை என்னிடம். மேலும் மேலும் பவ்யமாகத்தான் அலைந்தார்கள்.
கிரிதரனும் தனபாண்டியும் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே இருபத்து சொச்சம் வயதிருக்கலாம். முதலில் என்னுடைய பட்டறையில் கிரிதரன்தான் வேலைக்குச் சேர்ந்தான். கொஞ்சநாள் கழித்து அவன் தனபாண்டியை அழைத்து வந்தான். இருவரும் காளைகளைப் போல ஜோடி போட்டுக்கொண்டு அலைவார்கள். மற்றவர்களிடம் இருந்து தனித்து இருவரும் ஓர் ஓவியம் போல் புடைத்துக்கொண்டு தெரிவதைப் போல எனக்குத் தோன்றி இருக்கிறது. சிக்கல் இல்லாதவர்கள் என்பதால் இருவரையும் எனக்கு எடுத்திருந்த வீட்டிலேயே தங்க வைத்திருந்தேன். எப்போதாவது குடிக்கும்போது தனபாண்டிக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுப்பேன். ஆனால் கிரிதரன் முடியாது என மறுத்துவிடுவான்.
கிரிதரன் கஞ்சா அடிப்பதாக பட்டறையில் மற்ற பையன்கள் பேசிக்கொள்வார்கள். எனக்கு அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது என்றாலும், அழுத்தி விடுகிற சமயங்களில், மாடு வயிற்றை நிலத்தில் பதித்து அமர்ந்து ரசனையாய்த் தலையை ஆட்டிக் கொண்டிருப்பதைப் போல கிரிதரன் தலையை மட்டும் ஆட்டுவான் ஒரு தினுசாய். அதனாலேயே அவன் கஞ்சா அடிப்பான் எனத்தான் நானும் நம்பினேன். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தனபாண்டி சொல்வதற்கு மட்டும் தலையாட்டியபடி அமர்ந்திருப்பான்.
வேலையில் எந்தச் சுணக்கமும் காட்ட மாட்டார்கள். இருவரும் அமைதியாய் யாரிடமும் பேசாமல் கம்பியை எடுத்து நெருப்பில் சொருகிக் கொண்டிருப்பார்கள். கடமுடாவென எந்தக் கம்பிச் சத்தமும் இருக்காது. இருவர் செய்யும் வேலையிலும் ஒரு நுணுக்கத்தைப் பார்த்து இருக்கிறேன். அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் விட்டு விட வேண்டும். தங்களுக்குள் எதையாவது குனிந்து மெதுவாகப் பேசிக்கொள்ளும் போது பெரும்பாலும் கிரிதரன் தலையை மட்டும் ஆட்டுவான். பையன்கள் அதைச் சுட்டிக்காட்டி, “கட்டுன பொண்டாட்டி மாதிரி ஆட்டுறான் பாரு” எனக் கிண்டலடிப்பார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனபாண்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுகிற ஆளாக இருந்தான் கிரிதரன்.
ஓர் இரவில் குடித்துக்கொண்டிருக்கும் போது, “உங் கதையைச் சொல்லுலே” எனத் தனபாண்டியைப் பார்த்துச் சொன்னேன். கிரிதரனிடம் கேட்டிருந்தால் தலையை மட்டும்தான் ஆட்டுவான். “பெறந்ததில என்ன இருக்கு அன்ணாச்சி? புழுவப் போலத்தான் பெறப்பு. சதுரகிரி மலை தெரியும்ல. அங்க ஒரு குரு இருந்தாரு. இங்க இருக்கப் பிடிக்காம சின்ன வயசிலயே அங்க ஓடிப் போயிட்டேன். அங்க நல்ல சாப்பாடு, தங்கல். ஒழுங்கா குருவுக்கு பணிவிடை செஞ்சேன். எங் குருட்ட இருந்து ஜாதகம் பார்க்கக் கத்துக்கிட்டேன். எங்குருநாதர் காசுக்கு ஜோசியம் பார்க்க மாட்டாரு. அந்த ஜாதகத்தை அவருக்குத் தொடத் தோணனும். அவரை மாதிர் இருக்க ஆசை. அவர் செத்தபிறகு எங்க போறதுன்னு தெரியாம ஊருக்குப் போனப்பதான் இவன் இங்க கூப்டு வந்தான்” என்றான்.
“அவங்கதை என்னலே” என்றேன்,
“ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்தே ஒண்ணா இருக்கோம். வீட்ட தண்ணி தொளிச்சு அவனே முழுகிட்டான். ஏதோ அரைக்கிலோ சீனி அதிகமா வாங்கறதுக்காக ரேஷன் கார்ட்ல அவன் பேரை இன்னமும் வச்சிருக்காங்க. அவங்கப்பா ஆடு மேய்க்கிறாரு. அம்மா ரெம்ப நாளைக்கு முன்னயே செத்திருச்சு. இருந்த கொஞ்ச நிலத்தை கவர்மெண்ட் எடுத்துட்டாங்க. அதில கொஞ்சம் காசு வரும்ணு காத்துக்கிட்டு இருக்காங்க. ஓர் அண்ணனும் தம்பியும். அண்ணன் காட்டு வேலைக்குப் போறான். தம்பி எட்டு படிக்கிறான். எது மேலயுமே ஆர்வம் இல்லாம இருந்தான். நாந்தான் கட்டம் கணிக்கக் கத்துக் குடுத்தேன். இப்ப குட்டி பதினாறு அடி பாயுது” என்றான்.
இருவரையும் அதற்குப் பின் கொஞ்சம் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்தேன். வீட்டினுள் சத்தம் வராமல் நுழைந்த போது, மஞ்சள் குண்டு பல்ப் வெளிச்சத்தில், சுவரோரம் ஒட்டி அமர்ந்து, மடியில் வைத்துப் புத்தகம் ஒன்றை விரித்துப் படித்துக்கொண்டிருந்தனர். எட்டாம் வகுப்புப் பையன்களைப் போலத் தோளோடு தோள் நெருக்கி அமர்ந்திருந்தனர் அப்போது. என்னைப் பார்த்ததும் அவசர அவசரமாக அதை ஒளித்து வைத்தனர். அவர்கள் போனபிறகு அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த போது, ஜோதிடப் புத்தகம் என்று தெரிந்தது.
“கட்டம் அறிந்து காப்பாற்றிக்கொள்” என்று கொட்டை எழுத்தில் அட்டையில் ஓர் எந்திரம் வரையப்பட்டதன் கீழ் போட்டிருந்தார்கள். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ராசிகள், லக்கினங்கள், கணங்கள் என எல்லாவற்றையும் பற்றியும் தனித்தனியாக எழுதி இருந்தனர். என் மகள் ராசிக்குப் படித்துப் பார்த்தேன். எதையும் போட்டு உடைப்பர் இந்த ராசியினர் என மிகச்சரியாகப் போட்டிருந்தது. அவர்கள் ஒளித்து வைத்த இடத்திலேயே மறுபடியும் வைத்து விட்டேன்.
நான் எடுத்துப் பார்த்த விஷயம் அவன்களுக்குத் தெரியும் போல? அதற்கப்புறம் துணிந்து எடுத்துப் படித்துக்கொண்டிருந்தனர். குடிக்கிறவர்களுக்கு மத்தியில் படிக்கத்தானே செய்கிறார்கள் என்பதால் நானும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிரிதரன் மட்டும் அந்தப் புத்தகத்தை வெறிகொண்டு படிப்பதைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தை அவன் பைபிளை ஏந்துவதைப் போல அணைத்து எடுத்துச் சென்றான்.
சிலநாட்கள் இடைவெளியில் அந்தப் புத்தகத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நடந்து போவதைப் பார்த்தேன். கிரிதரனின் கண்களில் குழி விழுந்திருந்தது. ஆனால் தனபாண்டியைப் பொறுத்தவரை சோறுக்குத்தான் முதல் இடம் எப்போதும் கொடுப்பான். “அண்ணாச்சி. பசியில அந்த மலைக்குப்போய் உக்கார்ந்த உடனேயே சுடுசோறு போட்டாங்க. அதுக்கு விட்டது வேறு எதுவும் இல்லை” என்பான்.
மதியத்தில் வேலை இல்லாமல் அமர்ந்திருந்த போது ஒருநாள் இருவரும் இணைந்து ஒரு சிறுபெண்ணை அழைத்துக்கொண்டு வந்து நின்றனர். நெஞ்சே இல்லாமல் சாயம் போன சுடிதாரில் நின்றாள். வத்தலக்குண்டுவிற்குப் பக்கத்தில் உள்ள மலைக் கிராமத்தில் இருக்கிறது வீடு. அவளுக்கு ஓர் அக்காவும் உண்டு. குடும்பமே தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கிறது. இவள் எப்படியோ பன்னிரெண்டு முடித்து விட்டாள். இனி அவளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லை எனச் சொல்லி விட்டார்கள் வீட்டில். ஊரில் இருக்கும் போதே கிரிதனுக்கும் அவளுக்கும் காதலாம். அவளை நர்ஸ் ஆக்கிவிட்டுத்தான் திருமணம் முடிப்பேன் எனக் கிரிதரன் எல்லோரிடமும் சவால்விட்டு அழைத்து வந்துவிட்டானாம். என்னது சவால் விட்டானா? தலையை ஆட்டினானா?
அவளுக்குப் பட்டறைக்குப் பக்கத்திலேயே நானும் போய் ஒரு தங்குமிடத்தை ஏற்பாடு செய்தோம். அதுவும் நல்ல ஒழுக்கமான பிள்ளைதான். கிரிதரனிடம் இருந்து தள்ளியே நடந்தாள். ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் தனபாண்டியை “சொல்லுங்கண்ணே” என்பாள். என்னை நாளடைவில் அவளாகவே அப்பா என அழைக்கத் துவங்கினாள். கிரிதரன் எங்கெங்கோ போய் யார் யாரையோ பிடித்து, அவளுக்கு நர்சிங் படிப்பிற்குக் கோவையில் இடம்பிடித்துக் கொண்டுவந்தான். அவன் இப்படியெல்லாம் பேசுவான் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெனில் என்னிடம் பேசாமல் இருந்ததற்குக் காரணம் மரியாதை என எடுத்துக்கொண்டேன்.
அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போய் நர்சிங் கல்லூரியில் சேர்த்துவிட்டு, அடுத்த பேருந்தைப் பிடித்துப் பட்டறைக்கு வந்து சேர்ந்துவிட்டான். “எங்க தங்குணீங்கல” என்றேன். “ரூம் போடலை அண்ணாச்சி. அவங்களை காலேஜூக்குள்ள விட்டுட்டு நான் பஸ் ஏறிட்டேன்” என்றான் தலையைக் குனிந்தபடி. கவனித்துப் பார்த்தபோது இருவரும் திடீரெனத் தனித்தனியாகச் சாப்பிடப் போவது தெரிந்தது.
இன்னொரு பையனை அழைத்து விஷயத்தைக் கேட்டேன். அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் காசை மிச்சம் பிடிக்கிறானாம் கிரிதரன். எனக்கென்ன தலையெழுத்தா எனத் தனபாண்டி எப்போதும்போலப் போகிறானாம். “உனக்கு கிறுக்குப் பிடிச்சிருச்சா. எதாவது யார்ட்டயாவது பணம் கட்டச்சொல்லிச் சிபாரிசுக்குப் போகலாம்” என்றேன் அழைத்து. “இல்லைங்க அண்ணாச்சி நாந்தான் தரையில உருண்டு புரண்டு இதைப் பண்ணனும். யார் தலையிலயும் சுமையை ஏத்தக்கூடாது. இந்த சோத்தையும் திங்கற ஜனங்க இருக்கத்தானே செய்றாங்க” என்றான் கிரிதரன்.
அவனை நினைக்கையில் எனக்குப் பெருமையாக இருந்தது. அந்தப் பெண்ணிற்கு உடையும் செருப்பும் வாங்கக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். அவன் கேட்கிற சமயங்களில் முன்பணமாகத் தொகையும் கொடுத்தேன். நாள்பட கிரிதரன் சரியான உணவில்லாமல் சோர்வாகத் தட்டுப்படத் துவங்கினான். சில நேரங்களில் எனக்கு வாங்குகிற சாப்பாட்டில் குழம்பு, பொரியலைக் கொஞ்சம் மிச்சம் வைத்து, வெறும் சோறு மட்டும் ஒரு தட்டுக்கடையில் வாங்கிவரச் சொல்லி அவனைச் சாப்பிட வைப்பேன். என்னால் முடிந்தது அதுதான்.
நண்பர்களோடு வெளியில் போய்விட்டு இரவு வீடு திரும்பியபோது, உள்ளே பலத்த சத்தம் கேட்டது. தனபாண்டி, “லூஸூக்கூதி.. சொல்லிக்கிட்டே இருக்கேன்” என கிரிதரனை அடிக்கிற சத்தமும் கேட்டது. உள்ளே நுழைந்தபோது தனபாண்டி கையில் பயணப்பையோடு நின்றான். என்னுடைய சமாதானங்களைப் பொருட்படுத்தாமல், “எதைக் கண்டானோ அதுல? அந்த வாடை ஞாபகம் வந்திருச்சுன்னா மத்ததை மறந்திடறான். இவன் தெரிஞ்சே சீப்பட நினைக்கிறான். அதை என் கண்கொண்டு பார்க்க முடியாது அண்ணாச்சி. மன்னிச்சிருங்க” எனச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வேலையிலிருந்து போனான். நடுவீட்டில் செல்வ லட்சுமி என்கிற பெயர் கொண்ட ஜாதக நோட்டு ஒன்று கிழிந்து கிடந்தது. அதைக் கையில் எடுத்தபோது கிரிதரன் வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு அவனது படுக்கைக்கு விரைந்தான்.
தனபாண்டியின் பிரிவிற்குப் பின் கிரிதரன் மேலும் முடங்கிப்போனான். கொஞ்சம் வேகம் குறைந்த இயந்திரம் போல பட்டறைக்குள், அதேசமயம் பழைய நுணுக்கத்துடன் நடை போட்டான். இரண்டொரு தடவைக் கவனித்துப் பார்த்தேன், கம்பிகள் உரசுகிற சத்தம் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் கல்லூரிக் கட்டணத்திற்காகப் பக்கத்தில் அவன் ஒரு பெரிய தொகையை வட்டிக்கு வாங்கியதாகவும் எனக்குத் துப்பு கிடைத்தது. “இங்க ஆட்கள் வருவாங்க. போவாங்க. எனக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லை” என்று கொடுத்தவரிடம் போய்ச் சொல்லிவிட்டும் வந்தேன். சோதித்துப் பார்த்ததில் முறையாய் வட்டி கொடுப்பதும் தெரியவந்தது.
ஊரில் நிலத்திற்கான பணம் வந்துவிட்டதாக வந்து நின்றான். அந்த முறைதான் அதிக நாட்கள் அவன் விடுமுறை எடுத்தது. நான்கு நாள் கழித்துக் கிளம்பி வந்த அவன் என் கையில், வங்கி மாதிரி நினைத்து, ஒன்றரை இலட்சம் ரூபாயை ஒரு பைசா வட்டிக்கு கொடுத்து வைத்தான். அதற்கப்புறம் அவன் ஊருக்குப் போவதையே நிறுத்திவிட்டான். “எனக்குன்னு இனிமே இதை விட்டா வேற ஒன்னுமே இல்லை அண்ணாச்சி. கொஞ்ச நாள் பிடிமானம்” என்றான் என்னிடம்.
அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி அந்தப் பிள்ளைக்கு கல்விக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணத்தைக் கட்டினான். இடையில் ஒருநாள் வந்த அந்தப் பிள்ளை எங்களது பக்கத்து வீட்டில் குளித்துவிட்டு, பட்டறைக்குக் கிளம்பி வந்தாள் கையில் ஒரு பழைய, நூல் பிரிந்த ரெக்ஸின் பையோடு. ”படிச்சு முடிச்சா அவங்க வச்சிருக்க ஆஸ்பத்திரிலேயே வேலைக்கு எடுத்துக்குவாங்களாம்ப்பா” என்றாள். எனக்குப் பார்க்கச் சங்கடமாக இருந்ததால், கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, “போயி முதல்ல தோள்ள போடற மாதிரி நல்ல ஒரு பையா வாங்கிக்குடு. சினிமாவுக்கு கூப்டுட்டு போ. கற்பெல்லாம் போயிராது உனக்கு” எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
மாலையில் அவளைப் பேருந்தில் அனுப்பிவிட்டுத் திரும்பி கிரிதரன் உற்சாகமாக நடந்துவந்த காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்தேன். அப்படியொரு துள்ளல் இருந்தது அவனது நடையில். அப்போதும் தலையை தன்னியல்பாய் ஆட்டிக்கொண்டிருந்தான் அவன். வந்துநின்ற அவனிடம், “கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து அனுப்புனியால” என்றேன். “அதுக்குத்தான எல்லாமே அன்ணாச்சி. சின்ன வயசில இருந்து ஆதரவா இருந்துச்சு. அன்னைக்கு நிலைமைக்கு அந்த ஆதரவு இல்லைன்னா செத்துப்போய் இருந்திருப்பேன். அந்தப் புள்ளையை எனக்கு ரெம்ப பிடிக்கும் அண்ணாச்சி” என்றான் ஆழமான யோசனையோடு. தனபாண்டியைக் குறித்து ஒருநாள் அவனிடம் விசாரித்தபோது, “அவனை இனிமே நான் பார்க்கிற அம்சம் இல்லை அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு விரைவாக அவ்விடத்தில் இருந்து அகன்றான்.
அவளது மூன்றாம் வருடப் படிப்பிற்கு முன்னமே என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணம் முழுமையாகக் கரைந்துவிட்டது. மற்ற பையன்களிடமுமே அவன் கடனாகப் பணம் பெற்றிருந்தான். சிறிய அளவிலான தொகைகள் என்பதால் தலையைக் கொடுத்தாவது தந்துவிடுவான் என அவன்மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டுக் குட்டியைத் தூக்கி இன்னொன்றில் போட்டு அவளைப் படிக்க வைத்தான். அவள் முடிப்பதற்குள் இவன் தன்னைச் சுற்றிக் கடனைச் சுவராய் எழுப்பிக்கொண்டான்.
அவள் சொன்ன மாதிரியே படித்து முடித்ததுமே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். வேலைக்குப் போவதற்கு முன்பு வந்து பார்த்தாள். இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் செல்போனை கையில் வைத்திருந்தார்கள். வேலைக்கு இடையே ஓடிப் பதுங்கி அவன் பேசுவதைப் பார்த்து இருக்கிறேன். கொஞ்ச நாள் செல்போனுக்கு வேலை இல்லாமல் இருந்தது. சோர்ந்துபோய் அமர்ந்திருந்த அவன் கோவைக்குப் போய்விட்டு வர அனுமதி கேட்டான். இருளடைந்தது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு திரும்பி வந்தான்.
“அவங்களா பார்க்குற வரை நாம போயி பார்க்க முடியாதாம்” என்றான் என்னிடம். கிரிதரனின் எந்தத் தொலைபேசி அழைப்புகளையும் அப்புறம் அந்தப்பெண் எடுக்கவே இல்லை.
சிலநாட்கள் கழித்து என்னுடையதிலிருந்து அழைத்துப் பார்த்தேன். “அலோ யார் பேசறது? நான் அவங்க அக்கா பேசறேன். நீங்கதான் ஓனரா? அந்தப்பையன் எந்நேரமும் படுக்கறதை பத்திதான் பேசறானாம். வெளிப்படையா சொல்ல முடியாதளவுக்கு பயங்கர டார்ச்சருங்கறா. ஒரு பொண்ணப் பெத்தவரு. உங்களுக்குத் தெரியாதா? எங்க வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா கொன்னே போடுவாரு. நான் வச்சிடறேன். நீங்க கொஞ்சம் கண்டிஷன் பண்ணி வைங்க” என்றது குரல்.
அந்தரத்தில் விட்டு ஓடிப்போகிற அளவிற்கு துரோகம் செய்யக் கூடியவளாக அவள் நிச்சயம் இருக்க மாட்டாள் என நம்பினேன். அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு எப்படித் தெரியும்? பொதுவாகவே இந்தப் பிள்ளைகள் எல்லாம் ரகசியமாகவே இருக்கிறார்கள். அந்தப் பிள்ளை கிளம்பிவந்து என்ன ரகசியம் சொல்லப் போகிறாளோ?
அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. நெஞ்சில் சங்கடம் அடைக்க, எனக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கோர்த்து “நமக்குன்னு இருக்கறது கண்டிப்பா வந்துரும். நல்ல நேரம் வந்தா அது நடந்திடும்” என்றெல்லாம், என்னவோ சொல்லிப் பார்த்தேன். அவன் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அந்தப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி அவன் தூங்கிக்கொண்டிருப்பதை வீட்டினுள் நுழையும்போது ஒருதடவை பார்த்தேன். வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பி எங்கேயோ போய்விட்டு வருவான். அவனது சட்டையைத் துழாவியபோது, கோவைக்குப் போகிற பயணச்சீட்டு இருந்தது.
முறை வைத்து வாரம் தவறாமல் இப்படிப் போய்விட்டு வந்தான். அந்த முறை அவன் கிளம்பிப் போனபோது, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து என்னை அழைத்தார்கள். “பொண்ணுங்க வேலை செய்ற எடத்தில எக்குத்தப்பா நடந்துருக்கான். அந்தப் பொண்ணை எல்லார் முன்னாடியும் தகாத மாதிரி அசிங்கப்படுத்திருக்கான். அவங்க வேலைக்காரங்க போட்டு அடிச்சு இங்க தூக்கிட்டு வந்திருக்காங்க. ஓனரு ரெம்ப பெரிய மனுஷன். கேஸ் போட்டு ரிமாண்ட் பண்ணித்தான் ஆகணும்” என்றார்.
சிலநாட்கள் கழித்து அதிகாலை நேரத்தில் துவண்டு நடந்து வந்தான் கிரிதரன். மேலுக்குச் சுகமில்லாதவர்களிடம் இருக்கும் சோர்வு அவனது கண்களில் தெரிந்தது. ஒடிசலாய்க் குச்சியொன்று காற்றில் ஆடிவருவதைப் போல இருந்தது அவனுடைய நடை. ஜெயில் சோறு ரௌடியைத்தானே உருக்கி எடுக்கும்? இவனுக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது என நினைத்துக்கொண்டேன். வந்த அவனை யாருமே தொந்தரவு செய்யவில்லை.
அவன் பிறகொருநாள் தனியாகப் பேசத்துவங்கினான் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். நான் பார்க்கும்போதே கையைத் திடீரெனக் காற்றில் ஆட்டி முணுமுணுத்தான். வீட்டில் அவனோடு தனியாக இருக்க எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவ்வப்போது நோட்டம் விடுகையில், அந்தப் புத்தகத்தைக் குனிந்து அமர்ந்து படிக்கிற காட்சி தெரியும். “போதும் போய்த் தூங்கு” என்பேன். விளைக்கை அணைக்கிற சத்தம் கேட்கும் எனக்கு.
ஒருநாள் மதியம் போல வெளியில் போய்விட்டுத் திரும்பியபோது, கடை வாசலில் கூட்டமாக இருந்தது. பைகளைத் தூக்கிக்கொண்டு கிரிதரன் எல்லோரது பிடியையும் விலக்கிவிட்டு, ஓட முயற்சித்துக்கொண்டிருந்தான். அருகில் போய் பார்த்தபோது, நெற்றியை நிறைத்து விபூதிப் பட்டை இட்டிருந்தான். வழக்கமாக அவ்வாறு அவன் பூசுவதில்லை. அவன் முகத்தில் அச்சம் நட்டுக்கொண்டு தெரிந்தது.
என்னுடைய கையையும் உதறிவிட்டு நடுச்சாலையில் பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு திருடனைப் போல ஓடினான் கிரிதரன். கொஞ்ச தூரம் பின்னாலேயே விரட்டிப்போய்ப் பார்த்துவிட்டு மூச்சிரைக்கத் திரும்பி வந்தேன். அவன் போனதிலிருந்து எனக்கு நிலைகொள்ளவில்லை. எங்கே போயிருப்பான்? பையன்களை விட்டுப் பேருந்து நிலையத்தில் தேடச்சொன்னேன். அவனது வீட்டிற்கு அழைத்துப் பார்த்தேன். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவன் இல்லாத வீட்டினுள் தனியாக நுழைந்தபோது மனம் கனத்தது. கொஞ்சம் அதிகமாகவே அன்றைக்குக் குடித்தேன்.
சிலநாட்கள் கழித்து மீண்டும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு. “முழுக்க லூஸாயிட்டான் போல. உங்க நம்பரை மட்டும்தான் மனப்பாடமா சொல்றான். கேஸெல்லாம் வேணாம்னு சும்மா அடிச்சுத் தொரத்துரோம். அந்த பொண்ணு வேலை பார்க்கிற எடத்தில போயி அவளுக்கு முன்னாடி வேட்டியை அவுத்து காட்டிருக்கான்” என்றார் அங்கிருந்து பேசியவர். தொலைபேசியை அவனிடம் கொடுக்கச் சொன்னபோது, வாங்க மறுத்துவிட்டானாம். “ஆள் எப்படி இருக்கான்” என்றேன். “உடம்புல உசுரத் தவிர ஒன்னும் இல்லை. கண்ண சிமிட்டறத வச்சுத்தான் பாடில உசுரு இருக்கறதே தெரியுது. ஆனா நெத்தியை நிறைச்சு விபூதிப் பட்டை” என்றார் அவர் பதிலுக்கு.
பிறகு ஒரு வாரம் கழித்து அவனது வீட்டிற்குத் தொலைபேசி செய்தபோது அங்கே அவன் போன விவரம் தெரியவந்தது. “இங்கதான் அமைதியா இருக்கான். திடீர்னு வெளமெடுத்து கிளம்பி போயிர்றான். ஒவ்வொரு தடவையும் ரத்தம் பட்ட சட்டையை வேஸ்ட்டா கீழ போட்டு எரிக்க வேண்டியிருக்கு. மனசே ஆறலை. ரத்தத்தை விடுங்க. நாம காடுகரையில சிந்தாத ரத்தமா? ஊரெல்லாம் அசிங்கப்பட்டிருப்பானே? இங்கயும் வந்து அதைக்காட்டி எங்களையும் ஊரெல்லாம் அசிங்கப்படுத்துறானே” என்றார் அவனுடைய அப்பா.
அதற்கடுத்து அவன் குறித்து நானாகப்போய் எதையும் விசாரிக்கவே இல்லை. என் சொந்த வாழ்விலும் சில இடர்கள் இருந்ததால் அதைப் பற்றிய யோசனைகளும் குறைந்திருந்தன. ஆனால் அவனைப் பற்றி நினைக்கையில் துயரம் கூடும். அந்தப் பெண் அப்பா என அழைத்ததில் கொஞ்சம் அசைந்துதான் போயிருந்தேன். அன்றைக்கு ஒருநாள் ஆறஅமர அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த போது, கடைசியாய் தனபாண்டி சொன்னது திடீரென நினைவிற்கு வந்தது. “இவன் தெரிஞ்சே சீப்பட நினைக்கிறான்”. எதற்காகச் சொன்னான் இதை?
பட்டறையில் பெரிய வேலை ஒன்று வந்திருந்ததால், கொஞ்சம் பொருட்கள் வாங்கத் தற்செயலாகக் கோவைக்குப் போக வேண்டியிருந்தது. கிளம்பும் போதே கிரிதரன் அங்கே இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். ஏதோ யோசனையோடு அவனது வீட்டிற்கு அழைத்துப் பார்த்தபோது, நான் உணர்ந்தது சரியெனப் பதில் வந்தது. என் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, அந்தப் பிள்ளை அன்றொரு நாள் சொன்ன அடையாளங்களை வைத்து அந்த மருத்துவமனைக்குப் போனேன்.
தூரத்தில் அந்த மருத்துவமனை வாசலில் கிரிதரன் குத்த வைத்து அமர்ந்திருந்த காட்சி தெரிந்தது. இருப்பதிலேயே கேடான நிலையில் அங்கே கிடந்தான். முகமெல்லாம் மண் அப்பி இருந்தது. சற்றுமுன் யாரிடமோ அடிவாங்கி இருப்பான் போல. அருகில் போய் அவனது தோள்களைக் குலுக்கி எழுப்ப முயற்சித்தேன். என் கைகளை உதறிவிட்டு, வாயிலின் அந்தப் பக்கம் போய் அமர்ந்து குறுகுறுவென்று என்னையே பார்த்தான். இனி இது பட்டறைக்கு ஏற்ற கம்பி அல்ல என்பதை உணர்ந்து திரும்பும் முன்னர் அவனிடம் ஏதோ ஒரு நம்பிக்கை ஒன்று உந்தித் தள்ள அந்தக் கேள்வியைக் கேட்டேன். வெறும் காற்றில்கூட அந்தக் கேள்வி மிதந்து கொள்ளட்டும்.
“நீ தெரிஞ்சேதான் சீப்படற. மனசறிஞ்சு எதுக்கு அந்தப் பிள்ளையை சீப்பட வைக்குற” என்றேன்.
பதிலேதும் சொல்லாமல் என்னையே எரிப்பதைப் போலப் பார்த்துக்கொண்டே இருந்தான். சற்றுப் பொறுத்த பின்னர், திரும்பி என் வழியில் நடந்தபோது என் முதுகிற்குப் பின்னால் இருந்து அவனது குரல் கேட்டது.
“கட்டம் அதைத்தான் சொல்லுது. கட்டம் என்னைக்கும் தோக்கக் கூடாது”.
முதுகிற்குப் பின்னாலிருந்து விசையொன்று இழுத்தது. நெஞ்சில் ரோமக்கால்கள் நட்டுக்கொண்டு நின்ற நிலையில், திரும்பிப் பார்க்கவே விரும்பவில்லை நான்.
***
சரவணன் சந்திரன் – மதுரையில் பிறந்த இவர் ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்றவர். இதுவரை எட்டு நாவல்களும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு கதைத் தொகுதிகளும் ஒரு மொழிபெயர்ப்பும் வெளிவந்திருக்கிறது.