Saturday, November 16, 2024
Homesliderகனவின் வழியே (சிறுகதை)

கனவின் வழியே (சிறுகதை)

R.நித்யாஹரி

தை ஒரு அடர்வனம் என்று கூறிவிட முடியாது. ஆனால் நான் பார்த்திராத ஒரு காட்டுப்பாதையாக அது இருந்தது. அங்கிருக்கும் ஒரு ரயில் தண்டவாளத்தினை ஒட்டி நான் நடந்து கொண்டிருக்கிறேன். என்கூடவே நீளமான அங்கி அணிந்த நபர் ஒருவர் கையில் ஒரு ஸ்டாப் க்ளாக்கை பிடித்துக்கொண்டு வருகிறார். பல சேதங்களுடன் இருக்கும் அந்த ரயில் பாதை ஒரு பெரும் பாறையைக் குடைந்து அதனுள் செல்கிறது. அதை நெருங்கியதும் நான் முடிந்த அளவு வேகமெடுத்து ஓடுகிறேன் அந்த டனல் அருகே ஒரு தொண்டுகிழவி ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். நான் என் வேகத்தை சற்று குறைத்து இதற்குள் பாதை இருக்கிறதா? செல்லலாமா? என்று வினவுகிறேன். அதற்கு அவள் “இந்த பூமியே தொறந்து தான் கெடக்கு தாயீ போ… போ…” என்கிறாள். நான் திரும்ப வேகமெடுத்து அந்த டனலுக்குள் ஓடுகிறேன்.உள்ளே இருள் அப்பிக் கிடக்கிறது. கண்ணுக்கு எட்டிய வரைக்கும் கருக்கிருட்டு பரவி இருக்கிறது… சிறு பறவைகளின் கீச்..கீச் ஒலிகளும், பூச்சிகளின் ரீங்காரமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் வேகத்தைக் குறைக்காமல் நான் ஓட அந்த அங்கி அணிந்த நபரும் என்னுடனே ஓடி வந்து கொண்டிருக்கிறார். கூடவே டிக் டிக் சப்தமும். அது ஒரு கண்மூடித்தனமான ஓட்டம். சற்று நேரத்தில் தூரத்தில் சிறிய வெளிச்சம் தென்படுகிறது. அதை நோக்கி என் கால்கள் இன்னும் வேகமெடுத்து ஓடுகிறது. மெல்ல வெளிச்சக்கீற்றுக்குள் புகுந்து டனலை விட்டு நான் வெளியேறுகையில் அந்த அங்கி நபரைக் காணவில்லை. அங்கே ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி ஒரு ஐசை கையில் நீட்டியபடி நிற்கிறார். நான் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறேன்.

காலையில் எழும்போது கனவு நன்றாக நினைவில் இருந்தது. ஒரு குச்சி ஐசுக்கா அப்படி ஒரு வெறித்தனமான ஓட்டம் என்று நினைத்து மெலிதாய் புன்னகைத்துக் கொண்டேன். அன்றுதான் எனக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வின் முதல்நாள். தேர்வுகள் அனைத்தும் முடிந்து நல்ல மதிப்பெண்களும் பெற்ற பின் அப்பாடா பரீட்சைக்கான ஓட்டம் முடிந்தது என்று நினைத்த நொடியே அந்தக் கனவில் ஓடியதுபோல பரீட்சைக்கு தொடர்ந்து படித்துவிட்டதாய் தோன்றியது. அடுத்த நொடியே, அப்படியானால் இந்த மதிப்பெண்கள் தான் நான் பெற்ற குச்சி ஐஸா என்று எழுந்த சிந்தனையில் நகைச்சுவையும் கூடவே கொஞ்சம் சுவாரஸ்யமும் இருந்ததாகப் பட்டது.

அதன் பிறகு அது கௌன்சலிங்குக்காக நான் காத்திருந்த காலம். அப்போது வந்த கனவொன்றில் நான் ஒரு பெரிய மாளிகையினுள் நிற்கிறேன். அந்த மாளிகை எங்கும் சிவப்புநிற பின்னணியில் தங்கநிற வண்ணத்தில் அழகழகான ஓவியங்கள் வரையப் பெற்றிருக்கிறது. என் அருகே அரேபியன் நைட்ஸ் டிராமாவில் வரும் ஒரு மந்திரவாதியின் தோற்றத்தில் நீளமான தாடியும் ஜிலுஜிலு ஜிப்பாவும் அணிந்த ஒருவன் நிற்கிறான்.

அந்த மாளிகையில் எங்கு நோக்கிலும் அறைகள். அனைத்தும் பூட்டப்பட்ட அறைகளாக இருக்கின்றன. அவன் என் கையில் ஒரு சாவியைத் தந்து உனக்கான அறையை கண்டுபிடித்து நீயே கதவை திற. உனக்கு மூன்று சந்தர்ப்பங்கள் என்று கூறுகிறான். அவ்வளவுதான் நான் விழித்துவிட்டேன்.

அந்த மந்திரவாதி தந்த சாவி இன்னும் கையில் இருப்பதாக ஒரு உணர்வு. நான் கைகளை விரித்துப் பார்த்துக் கொண்டேன். அந்த அளவுக்கு நிஜத்தில் நடந்தது போலவே இருந்தது அந்தக் கனவு.
அதுவரை காணாத காட்சியை கனவில் காண முடிகிறதென்றால் கற்பனையின் ஆற்றலை நினைக்க எனக்கு பிரம்மிப்பாய் இருந்தது. என் கையில் இருக்கும் சாவிதான் நான் பெற்ற மதிப்பெண்கள் என்றும் பூட்டிய அறைகள் தான் கல்லூரிகள். அந்த அறைகளில் ஒன்றுதான் நான் தேர்வு செய்யப்போகும் கல்லூரி என்று எனக்கு வந்தக் கனவை பொருத்திப் பார்க்கையில் இன்னும் சுவாரஸ்யம் கூடி போனது.

பிறகு சம்மந்தமே இல்லாத கனவுகளைக் கூட எப்படி நிஜத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்ப்பது என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால் பெரும்பாலும் கனவுகள் முழுதாக நினைவில் இருப்பதில்லை. அல்லது கனவுகள் வருவதே இல்லை. கனவெல்லாம் நிஜமாகிறது என நம்பவில்லை என்றாலும் நிஜத்திற்குத் தொடர்புபடுத்திக் கொள்வது பிடித்திருந்தது. நம் அனைவருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருப்பது போல ஒரு கிழவியும் ஒளிந்திருக்கிறாள் போலும், அவள்தான் இரவில் கனவின் வழியாக நமக்குக் கதை சொல்கிறாள். கனவின் வழியே காட்சிகளை மட்டும் நாம் காண்பதில்லை நம்முடைய ஐம்புலன்களையும் கனவு ஆட்கொள்கிறது. அதில் வரும் டூலிப் மலர்களும், ரோஜாக்கூட்டமும் அதன் மணத்தை நிரப்பிவிட்டே செல்கிறது.

கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில் வந்த கனவொன்றில் நான் ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சாலையின் இருபுறமும் வெட்டவெளியாக இருக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களே இல்லை. தரையெங்கும் பச்சைப்புற்கள் மண்டிக் கிடக்கிறது. வானம் மேகம் ஏதுமின்றி பளிச்சென்று நீலப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நான் ஒரு சிவப்புநிற சுடிதார் அணிந்து என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். நான் யாரையோ தேடுவதாக ஒரு உணர்வு. சரியாக யூகிக்க முடியவில்லை. அந்த சாலையில் இருக்கும் என்னுடைய மாமாவின் கடை இருந்த இடத்தில் இப்போது சரக்கொன்றை மரம் ஒன்று மஞ்சள்நிறப் பூக்களை தரை எங்கும் உதிர்த்து உயர்ந்து நின்றிருந்தது.

இந்த கனவு வந்து சரியாக நான்கு நாட்களில் மாமா ஒரு சாலைவிபத்தில் உயிரிழந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை அழைத்துப் போக அப்பா வந்திருந்தார். பயணம் முழுவதும் மாமாவின் நினைவே நிரம்பி துக்கம் தாளாமல் இருந்தது.

சிறுவயதில் “என்ன வேலை செய்யிறீங்க மாமா?” என்றுக் கேட்டால்
“அதுவா… வெட்டி நிமித்துற வேலை” என்று நடித்துக் காட்டிக் கூறுவார்.
மாமா மரவேலை செய்பவர். மரக்கதவுகளில் அழகான வேலைப்பாடுகள் எல்லாம் செய்வார். எங்கள் ஊரில் இருந்த தேவாலயத்தின் கதவுகள் கூட மாமா வடிவமைத்தது தான். இறந்த மரத்திலும் பூ பூக்கிறது உங்கள் கைவண்ணத்தில் தான் மாமா என்று கூறுவோம். மனதில் மாமாவின் நினைவுகள் முழுதுமாகச் சூழ்ந்திருந்தது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தபடியே பயணம் முழுதும் கழிந்தது.

அன்று அங்கே மாமாவின் உடலுக்கு அருகே அமர்ந்து அவரின் தாடையைக் கையில் தாங்கியபடி பாட்டி அழுதது தாங்க முடியாத துயரமாக வெடித்தது. “நான் கல்லாட்டம் இருக்கையிலே உனக்கென்ன அவசரம்” என்று பாட்டி ஒரு நூறுமுறையாவது புலம்பி அழுது தீர்த்தார். மூன்று தினங்கள் கழித்து கல்லூரிக்கு திரும்பும் போதுதான் அப்பாவிடம் அந்த கனவை பற்றி கூறினேன்.
“இது ஒரு யதேச்சையாக வந்த கனவுதான். கனவெல்லாம் நிஜமாகாது. அப்படி எல்லாம் நீ என்னைக்கும் யோசிச்சுறாத” என்று அப்பா கூறியது சரியாகத்தான் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

அதன் பிறகு கனவு அச்சத்தை தரக்கூடிய விஷயமாக மாறி இருந்தது. அதன் பிறகான நாட்களில் கனவெதுவும் வராதது அல்லது நினைவில் தங்காதது சற்று ஆறுதலாக இருந்தது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டின் ஈவன் செமஸ்டர் தொடங்கியிருந்தது. வகுப்பில் வழக்கம் போல பாடம் நடந்து கொண்டிருந்த ஒருநாள் யாரோ என்னைக் கவனிப்பது போன்ற உணர்வில் திரும்பி ஜன்னலுக்கு வெளியே நான் பார்க்க அவன் என்னையேப் பார்த்தபடியிருந்தான். முதலில் அவன் என்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகம் எழவே என் பின்னால் திரும்பி வேறு யாரையும் பார்க்கிறானா என்று பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் பார்த்தேன். என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டவன் போல நீதான் என்று சுட்டுவிரலால் என்னைக் காட்டி ஒரு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விழித்தபடியே கண்ட கனவை போல் இருந்தது அந்த காட்சி. நிஜமாகவே இப்போது ஒருவன் இங்கே நின்று என்னைப் பார்த்தானா என்று நான் குழம்பிக் கொண்டிருக்கையில் அவன் மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி அந்த ஜன்னலைக் கடந்து பைனல் இயர் வகுப்பிற்குள் சென்றான்.

அவன் விழியில் ஒரு ஈர்ப்பும் அந்த புன்னகையில் குறும்பும் நிறைந்திருந்தது. இதென்ன சில நொடிகளிலேயே ஒருவன் நம்மை ஈர்த்துவிட்டானா என்ற சிந்தனையை ஒத்திப்போட்டு பாடத்தை கவனிக்க முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தேன்.

மறுநாளும் அதே கதை, நான் கவனிக்கவில்லை என்றால் சத்தம்போட்டு பக்கத்தில் இருப்பவனிடம் பேசி என்னை ஈர்ப்பதற்காக அவன் செய்து கொண்டிருந்த அனைத்துமே அதன் வேலையை கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தது.

அன்று என் கனவில் ஒரு பெரிய யானை வந்தது. இருட்டில் நின்றிருக்கும் யானையை தூரத்திலிருந்து பார்க்கையில் கணிக்க முடியாத ஒரு பெரிய உருவமாகத் தெரிந்தது. அதை விளங்கிக் கொள்ள நெருங்க நெருங்கத்தான் அதன் விஸ்வரூபம் புரிந்தது. அப்படியும் அது கண்களுக்குள் அடங்காத ஒன்றாகவே இருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு வந்த குதிரை கனவிற்கு அடுத்த சில நாட்களில் தான் எனக்கு ஒரு புது டூ வீலர் கிடைத்தது. அப்படியானால் இப்பொழுது அதனினும் பெரிய வண்டி ஓட்டுவதற்கு வாய்க்க போகிறதா? யானையை நினைத்தபடியே காலையில் நான் வகுப்பிற்குள் நுழையும்போது அவன் என் இருக்கையில் அமர்ந்து, தாடையை இருகைகளாலும் தாங்கியபடி என்னைப் பார்த்ததும் புருவங்களை உயர்த்திப் புன்னகைத்தான். அதே புன்னகை… மந்தகாசப் புன்னகை. அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் ஸ்லோ மோஷனில் நடந்துபோய் அவன் அருகே நின்று புன்னகையைக் கட்டுப்படுத்தி சீரியஸாக முகபாவம் காட்டி,

“இது உங்க க்ளாஸா?” என்றேன்.

இல்லை என்பது போல் தோளைக் குலுக்கி “ஆனா அப்படியும் சொல்லலாம்” என்றவன் பக்கத்து இருக்கையைக் காட்டி உக்காரு என்பது போல சைகை செய்துவிட்டு என் கையிலிருந்த நோட்டை வாங்கி கடைசி பக்கத்தில் என் பெயரையும் அருகே ஜாவீத் என்று அவன் பெயரையம் இணைத்து “மீராஜாவீத்” என்று எழுதி குறும்புடன் என்னைப் பார்த்து புருவங்களை உயர்த்தி புன்னகைத்து விட்டு எழுந்து அவன் கிளாஸிற்குச் சென்றான்.

பெரிதாக ஏதும் பேசாத போதும் பார்வை பரிமாற்றங்களுடனே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வெள்ளியும் எங்களுக்கு இருக்கும் ஆப்டிடியூட் க்ளாஸை சீனியர் மாணவர்களில் யாராவது வாலன்டியராக வந்து ஹேண்டில் செய்வார்கள். நான் எதிர்பார்த்தது போல ஜாவீத் தான் அன்று வந்திருந்தான். வழக்கமான அந்தப் புன்னகையுடன் வகுப்பின் முன் நின்று முதல் பசிலை விளக்க ஆரம்பித்தான். A மற்றும் B ஒரு செயலை தனித்தனியாகச் செய்தால் இவ்வளவு காலம் ஆகும் இதுவே அவர்கள் இனைந்து செய்தால் எவ்வளவு காலத்தில் முடிக்கலாம் போன்ற பசில்களில் எல்லாம் அவன் “இப்போ எக்ஜாம்பில்க்கு நானும் மீராவும் ஒரு வேலைய தனித்தனியா செய்றோம், இதுவே நாங்க சேர்ந்து செஞ்சா எவ்வளவு நேரத்தில் முடியும்” என்று அவன் அந்த பசிலை விளக்க வகுப்பே ஆர்ப்பரித்துச் சிரித்தது.

மனம் சுத்தமாக அந்த பஸிலில் லயிக்கவில்லை. அவனோ அதைச் சர் சாதாரணமாக போர்டில் சால்வ் செய்து கொண்டிருந்தான். அடுத்து வந்த பசிலும் அவன் அதே ரகத்தில் விளக்க ஆரம்பிக்க நான் வகுப்பை விட்டு வெளியேறினேன்.

பின்னாலேயே வந்தவன் “கொஞ்சம் சொல்றத கேட்டுட்டு போலாமே” என்றான்.

“சொல்லு. பஸில்ல வார்த்தைகளை ஏன் மாத்திப் போட்ட? ஏன் இப்படி பண்ணின?”

“என்னோட கனவை நனவாக்குறதுக்காக தான்”

“கனவா??” ஆச்சர்யமாக அவனை பார்த்து “என்ன கனவு?” என்றேன்.

அவன் தன்னுடைய ஆள்காட்டி விரலால் என் முகத்தை வட்டமிட்டுக் காண்பித்து “மை ட்ரீம்” என்று கூறி சற்று இடைவெளி விட்டு “என்னை பிடிச்சிருக்கு தான” என்று கேட்டே விட்டான்.

இந்தக் கேள்வியை எதிர்கொள்ள எனக்கு சிலநொடிகள் தேவைப்பட்டது. அம்மாவின் முகம் கண்முன்னே வந்து போனது. எனக்கு என்ன பதில் சொல்வதென்று குழப்பமாக இருந்தது.

“இவன் இன்னும் நாலு மாசத்துல காலேஜ் விட்டு போயிருவான் அப்புறம் நம்மலையா நெனச்சுட்டு இருக்க போறான்னு நெனைக்கிறியா?”

“அப்படி இல்ல. நமக்குள்ள என்ன புரிதல் இருக்குனு நெனைக்கிற இவ்ளோ பெரிய முடிவெடுக்க?”

புரிந்து கொண்டவனாய் தலையை ஆட்டிப் புன்னகைத்துவிட்டு,

“கரெக்ட்டு தான். இப்படி கேட்கணும்னு திட்டமிட்டு கேட்கல பேசும்போது அப்படியே வார்த்தைகள் வந்துடுச்சு. ஆனா என் எண்ணம் உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.”

“ம்ம்.” என்றவாறே அருகிலிருக்கும் மாடிப்படியில் நான் அமர அவன் என் எதிரே சுவரில் சாய்ந்து நின்று கொண்டான்.

“ஜாவீத்”

“ம்ம்”

“சின்ன வயசுல படிச்சிருக்கோமே ஓ ஹென்றி கதை, அதுல காதலனுக்கு பரிசா தன் தலைமுடியை விற்று காசாக்கி அவனோட பிய்ந்து போன கை கடிகாரத்துக்கு காதலி செயின் வாங்கி வருவா, அவனோ அந்த கடிகாரத்த விற்று அவளின் நீளமான கேசத்தை வார அழகான சீப்பு வாங்கி வருவானே அப்படி ஒரு விலைமதிக்க இயலா அன்பை கொண்டதொரு காதல் செய்யறது தான் என்னோட ட்ரீம். அன்பிற்காக எதையும் துறக்கும் வல்லமையை அந்த அன்பே தரும். அப்படியான அன்பாக இது அமையுமானு எனக்கு தெரியல, எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்” என்றேன்.

“கண்டிப்பா மீரா. உன்கிட்ட ரொம்ப பிடிச்சதே இந்த நிதானம் தான். நல்லா யோசி. அவகாசம் முடிந்து இந்த இளவரசி வந்து தொட்டதும் இளவரசனாக மாறுவேனென்றால் அதுவரை அந்த மிருக இளவரசனாக இருக்கவும் தயார். காத்திருக்கேன்” என்றவனின் முகத்தில் புன்னகை இல்லை. எப்போதும் குறும்புடனும் புன்னகையுடனும் இருக்கும் அவன் பார்வை அன்று தீர்க்கமாக இருந்தது.

இளவரசி தொட்டவுடன் மிருக இளவரசன் இளங்குமரனாக மாறிவிடும் கதை சிறுவயதில் படித்தது நினைவுக்கு வந்து போனது. அன்று முழுவதும் இந்தச் சிந்தனையே என்னை ஆட்கொண்டது. அவனைப் பற்றிச் சிந்திப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது என்னை அதிகமாக ஈர்த்தது.

மனம் யானையை போல அடங்க மறுத்தது அதை அடக்குவது எளிதல்ல என்று புரிந்த கணம் அந்த யானைக் கனவிற்கு அர்த்தம் கிடைத்து விட்டது.

அந்த மாத இறுதியில் வந்த என் பிறந்தநாளின் போது எங்கள் லேபில் இருந்த கனிணி ஒன்றில் ஜாவீத் எங்கள் பெயரை இணைத்து எழுதி ஒரு பர்த்டே கார்ட் டிசைன் செய்திருந்தான். ஆர்ட்டின் சிம்பல் எல்லாம் எல்லா மூலைக்கும் பறக்கவிட்டு அந்தக் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து சாஃப்ட் காப்பியை டெலிட் செய்யும் முன் அந்த வழியாகச் சென்ற எங்கள் எச்.ஓ.டி மேம் பார்த்து விட்டார். மேம் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் இருவரையும் அவரின் அறைக்கு அழைத்து விட்டிருந்தார்.

“என்ன பண்ணி வச்சிருக்க நீ… மொதல்ல க்ளாஸ்ல எல்லாருக்கும் சொல்லியாச்சு. இப்போ டிபார்மெண்ட்ல எல்லாருக்கும் தெரியப் போகுது. அதுவும் எச்.ஓ.டி”

“லவ் பண்ணினா தெரியத்தான் செய்யும்…”

“நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையே”

“நீ என்னை லவ் பண்றன்னு நானும் யார்கிட்டயும் சொல்லலையே”

“கோவம் கோவமா வருது உன்மேல…”

சட்டென்று நின்றவன் நிதானமாக “தப்புதான் சாரி… ரொம்ப சாரி… சுத்தமா எதிர்பாக்கல அவங்க வந்து இப்படி பாப்பாங்கன்னு” என்றவன் முகம் முழுவதும் ப்ளீஸ் என்றது.

ஜாவீத் தொடக்கத்திலேயே இதற்கும் மீராவுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று மேமிடம் தெளிவாகக் கூறிவிட அவரும் என் முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டு அவனுடைய தந்தையை மட்டும் அழைத்துவரக் கூறிவிட்டார். மறுநாள் மதியம் லஞ்ச் டைமில் ஜாவீதின் அப்பா வந்திருந்தார். எச்.ஓ.டியைப் பார்த்துப் பேசிவிட்டு கிளம்பப் போனவரை நிற்கச் சொல்லிவிட்டு என்னிடம் வந்தான்.

“வாப்பா வந்திருக்காங்க. வா உன்ன இண்டரடியூஸ் பண்ணனும்”

“எ..ன்..னா..து… ஐயோ ஆள விடு. என்னால வரமுடியாது.”

“ப்ளீஸ் வா… அவரை நிற்க சொல்லிட்டு உன்ன கூட்டிட்டு வரதா சொல்லிட்டு வந்திருக்கேன்.”

“ஜாவீத்னா புயல் இல்ல சுனாமினு ஏதும் அர்த்தம் இருக்கா?”

“இல்ல மாயம் செய்பவன்னு அர்த்தம் இருக்கு. இந்த ஆராய்ச்சி அப்பறம் வச்சுக்கலாம் என்கூட வா” என்று அழைத்து போய் அறிமுகம் செய்து வைத்தான்.

“உள்ள மேம் சொல்லிருப்பாங்களே, இந்த பொண்ணு தான்” என்றான்
எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவர் மெல்லக் கிளம்பிப்போக
என் அருகே வந்து நின்று என் கையை அவன் கையுடன் கோர்த்துக் கொண்டான். அப்படியே இமைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்திக் கொள்வது போல என் கைகள் பொருந்திக் கொண்டது. என் நுரையீரல் ஆக்ஸிஜனுக்காகத் தவிக்க ஆரம்பித்தது.

“நீ ரொம்ப வேகமா போற ஜாவித், எங்க இருந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்?”

“அவர்கிட்ட இருந்துதான்… இப்படிதான் அம்மாவோட கைய பிடிச்சுக்கிட்டு வந்து தாத்தா முன்னாடி நின்னு கல்யாணமும் பண்ணிருக்கார்… பயப்படாத… கோவப்படமாட்டார் புரிஞ்சுப்பார்” என்று என் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் நொடி நொடியாய்க் கடந்து செல்கிறது. அவ்வாறான மணிப்பொழுதுகளின் சுழற்சியில் சில பொழுதுகள் தான் நம் கவனம் ஈர்க்கும், மனதில் தடங்கள் பதிக்கும், முழுதாய் நம்மை புரட்டிப்போடும். உண்மையில் அவையே நாம் வாழும் தருணங்கள், அப்படி ஒரு தருணத்தில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.

எங்கள் அன்பின் அடர்த்தி கூடிக்கொண்டே சென்றது. நாட்கள் வேகமாக உருண்டோடி ஜாவீதின் கல்லூரி வாழ்வின் இறுதிநாள் என்று ஒன்று வந்தே விட்டது. எலெக்ட்ரானிக்ஸ் லேபில் இருந்த என்னிடம் வந்து நான் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை சுழலவிட்டு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அது இரண்டுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது.

‘பார்த்தியா, எனக்கு பிரைஸ் விழுந்திருக்கு. நீ என்னோட அப்படியே கிளம்பி வந்துடு” என்றான்.

“எங்க”

“நான் எங்க இருக்கேனோ அங்க… என்கூடயே இரு”

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சில நிமிடங்கள் அப்படியே கரைந்தது.

பேச எங்களிடையே வார்த்தைகளே இல்லை. அன்றைய நாளின் நொடிகள் சூறாவளிக் காற்றைப் போலப் பறந்தது. ஏன் இப்படி நேரம் இவ்வளவு வேகமெடுத்து ஓடுகிறது. தென்றலை போலத் தவழக் கூடாதா? இந்த காலமும் நேரமும்தான் கொஞ்சம் தூங்கக் கூடாதா என்றிருந்தது.

ஏதேதோ பேசிச்சிரிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். சிந்தனை முழுதும் பிரிவைப் பற்றியே இருந்ததைக் கண்கள் காட்டிக் கொண்டே இருந்தது. வாரம் ஒரு ஈ மெயிலாவது அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அவனை அழைத்துப் போக அன்று மாலை அவனுடைய அப்பா வந்திருந்தார். ஹாஸ்டல் வக்கேட் செய்து அவனுடைய உடமைகள் அனைத்தையும் வண்டியில் ஏற்றிப் புறப்பட்டு அவனுடைய வண்டி ஒரு புள்ளியாக மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன்.
கனவில் வந்த யானையின் உருவத்தை நெருங்க நெருங்க ஏற்பட்ட உணர்வு போல ஜாவீதில்லாத அந்த வெறுமை விஸ்வரூபமெடுத்தது. அவன் இல்லாததும் உடன் யாருமே இல்லாததும் ஒன்றுதான் என்று தோன்றியது. எது ஒன்றும் அவனை எளிதில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு மாதத்தில் பணி கிடைத்து அவன் சவுதி கிளம்புவதாக ஈ மெயில் அனுப்பியிருந்தான். “வான் எனும் கூரையின் கீழ் இருக்கும் இந்த உலகம் மிகவும் சிறியது” என்று அந்த மெய்லை முடித்திருந்தான்.

அடுத்து அவனிடமிருந்து வந்த மெயில்களில் எல்லாம் என்னை ஹபிபி (அரபி மொழியில் அன்பே) என்று குறிப்பிட்டு எழுதியிருந்தான். அரபியில் அவன் கற்ற முதல் வார்த்தை அது.

நான் படிப்பை முடித்த பிறகு பெங்களூரில் பணியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் வேலை சற்று அதிகமாகவே இருந்தது. உறங்குவதற்கு மட்டுமே அறைக்கு வருவதாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கை நேற்றை போலவே இன்றும், இன்று போலவே நாளையுமாக நகர்ந்து கொண்டிருந்தது.

ல மாதங்களில் நல்ல பணி கிடைத்தால் கனடா அல்லது அமெரிக்கா செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டு ஜாவீத் அன்று எனக்கொரு ஈமெயில் அனுப்பியிருந்தான். அவன் இந்தியா வந்துவிட மாட்டானா என்று நான் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவன் இன்னும் தூரமான தேசம் செல்வது எனக்கு சற்று கவலையாய் இருப்பதாக பதில் அனுப்பினேன்.

‘ஒரு மேகத்தின் மேல் இருந்து பார்த்தால் நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகள் தெரியாது.
நீ வடக்கில் இருந்தாலும்
நான் தெற்கில் இருந்தாலும்
நாம் திசைகளாய் இருப்போம்’ என்று அவன் பதிலளித்திருந்தான்.

அத்தனையும் வெறும் வார்த்தைகள் அல்ல மனதில் நிறையும் உணர்வுகள்.

ஜாவீதிற்கு வெள்ளி மட்டுமே விடுமுறை எனக்கோ ஞாயிறு மட்டும். கால இடைவெளியும் இரண்டரை மணிநேரம் அவனுக்கு பிந்தி இருப்பதால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் பேசும் சந்தர்ப்பங்கள் கூட எங்களுக்கு வெகு சொற்பமாக இருந்தது. ஆனால் அவ்வப்போது “ஐ யம் திங்கிங் ஆஃப் யூ” “இடது கண் துடித்து உன்னை காண ஏங்குவதை உரக்க அறிவிக்கிறது” “காணும் அனைத்தும் உன்னையே ஞாபகப்படுத்துகிறது வேறு யாரையும் சைட் அடிப்பது கூட இல்லை” “இன்று திங்கள் கிழமை நீ விரதம் இருப்பாய் இனி இருவரும் இணைந்தே” “எனக்கு தனிமை என்பது யாருமில்லாத போது அல்ல நீ இல்லாத போது” “இன்று உன் பெயரை எழுதி ஒரு விதை நட்டிருக்கிறேன், உன் முகம் போல பூ பூப்பதாக அது என்னிடம் தெரிவித்துவிட்டு மண்ணுக்குள் சென்றிருக்கிறது” போன்ற ஒற்றை வாக்கிய மெயில்களால் எங்கள் போல்டர் நிரம்பி வழிந்து அன்பை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

சில மாதங்கள் கழித்து பணி நிமித்தமாக எனக்கு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு வந்தது. ஜாவீதிற்கு இந்தச் செய்தியும் அவனுடைய பயண ஏற்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்றும் கேட்டு மெயில் அனுப்பியிருந்தேன். உடனே நான் கிளம்பியாக வேண்டிய அவசரமான பணி என்பதால் விசா ப்ராசஸ் முடிந்த அந்த வாரமே நான் பயணப்பட்டேன். நான் கிளம்பும் வரையிலும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.

நீண்ட காலத்துக்கு பிறகு அன்று வந்த அந்த கனவு என் நினைவில் நிறைந்திருந்தது. அதில் ஒரு பெரிய வெள்ளைச்சுவர், வானுக்கும் பூமிக்கும் இடையே அந்த சுவர் தடுப்பு ஒன்றை ஏற்படுத்தியிருப்பது போல ஒரு தோற்றத்தில் இருக்கிறது. அதன் கீழே ஒரு ஏணி இருக்கிறது. நான் அதில் ஏறிச் செல்லச்செல்ல அது இன்னும் மேலே மேலே உயர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. எதைத் தேடியோ அந்த ஏணிப்படிகளில் சுற்றி அலைகிறேன். அந்த வெள்ளைச்சுவரில் ஆங்காங்கே தொட்டிச்செடிகள் மாட்டப்பட்டு பூக்கள் பூத்திருக்கின்றன.

அதைப் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாம்புகள் ஏதுமற்று ஏணி மட்டும் அங்கு இருந்ததால் கூட இருக்கலாம். சட்டென்று கனவின் காட்சி மாறி இப்போது ஒரு பெரிய கடல் பரப்பு கண்களின் முன் விரிந்து கிடக்கிறது. நான் ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு அழகான கடல் பயணம். காணும் திசை எங்கும் நீலநிறம் வியாபித்திருந்தது. ஒளிக்கீற்றுகள் நீரில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது நீரின் பரப்பு. கப்பல் நிறைய மனித முகங்கள். சற்று தூரத்தில் ஒரு தீவு தென்படுகிறது. கப்பல் அருகே செல்லச்செல்ல அந்தத் தீவே ஒரு சாலையாக விரிகிறது. நான் கீழிறங்கி நடக்கத் துவங்குகிறேன். அந்தப் பாதையின் காட்சிகள் மனதை நிறைக்கின்றன.

கனவில் ஏணியில் ஏறியதையும் நிஜத்தில் நிகழ்ந்த இடமாற்றத்தையும் பொருத்திப் பார்த்து புன்னகைத்தபடியே கண் விழிக்கையில் நான் அமெரிக்காவுக்கு வந்து பனிரெண்டு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. கைக்கடிகாரம் இன்னும் இந்திய நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்து காலை ஒன்பது மணி என்று நேரத்தை மாற்றிவிட்டு படுக்கையை விட்டு எழச் சரியாக காலிங் பெல் அடித்தது. ஜானாக தான் இருக்கும் என்று கதவை திறக்க அவனே தான்

“ஹே மீரா நாங்க இங்க பக்கத்துல இருக்க ஒரு மால் போறோம். நீ எங்க கூட ஜாயின் பண்ணிக்கிறியா? திரும்ப ரிட்டன் வரும்போது உனக்கு புது நம்பரும் போனும் வாங்கிடலாம். இல்ல உனக்கு டயர்டா இருந்தா தூங்கு” என்றான்.

“நிச்சயம் வரேன். இன்னைக்கு நம்பர் வாங்கிடுறது பெட்டெர். எனக்கு ஒரு பிப்டீன் மினிட்ஸ் குடு.”

“நாங்க பக்கத்துல கேண்டில்வுட் கார் பார்க்கிங்க்ல வெய்ட் பண்றோம் வந்துடு ஓகே வா” என்று கூறிச் சென்றான்.

ஜான் பெங்களூரிலிருந்த டீமில் என்னுடன் பணிபுரிந்தவன். இந்த ஊரில் எனக்குத் தெரிந்த ஒரே முகம் ஜான் தான். விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்து வந்து அறை வரை வந்து பெட்டியை எல்லாம் அடுக்கித் தந்து டின்னர் ஆர்டர் செய்து என்று புது இடத்தில் எனக்கு எல்லா உதவியும் செய்யும் நண்பன் அவன்.
பதினைந்து நிமிடங்களில் கிளம்பிப் பார்க்கிங் செல்ல அங்கே எனக்காக ஐந்து பேர் காத்திருந்தார்கள். சுருக்கமான அறிமுகப் படலம் முடிந்ததும் நாங்கள் மால் புறப்பட்டோம்.

“ஜான் எனக்கு ஒரு தோசை வாங்கி குடு நல்ல சாப்பாடு சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு. எந்நேரமும் பசியில இருக்க மாதிரியே இருக்கு” வந்து ஒருநாள் கூட ஆகல அதுக்குள்ள இந்த நிலைமைக்கு வந்துட்டியே என்பது போல என்னை பார்த்து “ஈவ்னிங் நிச்சயம் வாங்கி தரேன் இப்போ மார்னிங் ப்ரேக்பாஸ்ட் மால் போனதும்” என்றான்.

சரி என்று தலையசைத்து வைத்தேன்..

மால் அருகே எதிர்பார்த்ததை விடவும் கூட்டமாக இருந்தது. உடன் வந்திருந்த அனைவரும் காலை உணவை முடித்துவிட்டே கிளம்பியதால் ஒரு ரெஸ்டாரண்டின் முன் நானும் ஜானும் மட்டும் இறங்கிக் கொள்ள மற்றவர்கள் மாலுக்குச் சென்றார்கள்.

ஜனத்திரள் அதிகமாக இருந்த அந்த இடத்தில் நிறைய உணவகங்கள் தான் கண்ணுக்குத் தென்பட்டன. வாகனங்களின் சத்தமும் மக்களின் குரலும் காதுகளை நிறைத்தபடி இருந்தது.

முதல்ல நீ சாப்பிடு என்று ஒரு பரீட்டோ வாங்கித் தந்துவிட்டு “மீரா சாப்டுட்டு இரு, நான் காஃபி வாங்கிட்டு வரேன்” என்று சற்று தள்ளியிருந்த ஸ்டார்பக்ஸ் நோக்கி சென்றான் ஜான்.

ஓகே என்று தலையாட்டி விட்டு நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே மீதமிருந்த பரீட்டோவை உள்ளே தள்ளினேன்.

பக்கத்தில் ஒரு கடை முழுவதும் கண்ணாடி தொட்டிகளும் அதனுள் வண்ணமயமான மீன்களும் கண்களைக் கவர்ந்தன. அப்படியே பார்வையைச் சுழலவிட தூரத்தில் ஒரு கடையின் முகப்பில் DOSA (தோசா) என்ற எழுத்துக்கள் என் கவனத்தை ஈர்க்க அப்படியே மெல்ல எழுந்து ஜனத்திரளுடன் ஒட்டிக்கொண்டு ஒரு ஒடுக்கமான பாதையில் நடந்து அருகே போனதும் தான் புரிந்தது அது NADOSAMMA (நாதோசமா) என்றொரு இத்தாலியன் உணவகம். அந்தப் பெயரின் ஒருபகுதி மட்டும் தூரத்தில் இருந்த என் கண்களுக்கு தெரிந்திருக்கிறது.

அடச்சே இப்படி ஏமாந்து போனோமே என்று யோசித்துத் திரும்புகையில் தான் நான் வந்த வழியை தொலைத்து விட்டது சட்டென உறைத்தது. உறைத்த நொடி வியர்த்தது. ஒரு யூகத்தில் நான் திரும்பி நடக்க, சிறிது நேரத்திலேயே அனைத்தும் புதிய காட்சிகளாக கண்களுக்கு இருந்தது.

அம்மா கூறியது நினைவுக்கு வந்தது. மீரா புதுதேசம் காணப் போகிறாய். அங்கே நீ ஒரு பறவையை போல உன் கூட்டத்துடனேயே இரு என்று. நான் வழியைத் தவறவிட்ட பறவையாய் திரிகிறேன் அம்மா என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன்.

டுத்து நடக்கப் போவது என்ன என்பது தெரியாததால் ஒரு பயம் தானாய் மனதை கவ்விக் கொண்டது. இப்போது நான் ஏன் பயப்படுகிறேன்? மீரா நீ குழந்தையல்ல, இது வேற்று கிரகமும் அல்ல யோசி.. யோசி. நான் சாப்பிட்டது சிபோட்டில் என்றொரு மெக்சிகன் ரெஸ்டாரண்ட் என்பது நினைவுக்கு வர, அருகே இருந்த ஒரு நபரிடம் விசாரித்து அவர் காட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தேன். கனவில் வந்த ஏணியில் சுற்றி அலைந்து எதையோ தேடியது நினைவுக்கு வந்தது.

நான் அதிகம் போனால் மூன்று நிமிடத்திற்கு மேல் நடந்து இங்கே வந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அனுமானத்தைக் கொண்டு நடக்கையில் இன்னும் தொலைந்துபோய் விட்டதாகத் தோன்றியது. இது ஒரு கனவுக்காட்சியாக இருந்து இப்பொழுது கண்விழித்து இயல்பு நிலைக்கு வந்துவிடக் கூடாதா என மனம் தவித்தது. தொண்டை வறண்டது. ஏதோ ஒரு மால்க்கு தானே அனைவரும் வந்தோம். அருகிலிருக்கும் மால் எது என்று விசாரித்தால் நிச்சயம் வழியைக் கண்டுபிடித்து விடலாம். இது சரியான யோசனை. மால் எங்கே இருக்கிறது என்று நிச்சயம் இங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று பார்க்கையில் என்ன அதிசயம் என் கண்களுக்கு அந்த மால் தென்பட்டுவிட்டது. அந்த மாலை விட்டுக் கண்ணெடுக்காமல் அதை நோக்கி வேகமெடுத்து நடக்க எத்தனிக்கையில் ஒரு ஆஜானுபாகுவான ஆள் என் எதிரே வந்து நின்றார்.

பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது அவர் ஒரு அமெரிக்கன் காப் என்று.
என்னை உற்று நோக்கிய அவர் சில நிமிடங்களாக என்னை கவனிப்பதாகவும் நான் இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்து எனக்கு ஏதோ உதவி தேவைப்படுவதாக தோன்றியதால் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

நான் நடந்த அனைத்தையும் கூற என்னை அங்கே அருகிலிருந்த காவலர் சோதனை அறைக்கு வரவேண்டி கேட்டுக் கொண்டார்.
ஐயோ என்று நினைத்தபடியே அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த அறையை அடைந்ததும் என்னை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். என்னை உற்று பார்த்து அவதானிப்பது எனக்கு தெளிவாய் புலப்பட்டது.

நான் மீண்டும் ஒருமுறை என்னைப் பற்றியும் என் பணி, என்னுடைய நிறுவனத்தின் பெயர், நேற்று தான் அமெரிக்காவுக்கு நான் வந்திறங்கியதையும் அவரிடம் கூற அலட்டிக் கொள்ளாமல் அழுத்தமாக ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“உங்கள் பாஸ்போர்டை காண்பிக்க முடியுமா?”

கடவுளே என்ன இது? நான் அதெல்லாம் கொண்டு வரவில்லையே. அது என் அறையில் இருப்பதாகக் கூறினேன்.

அவர் என் கைப்பையை சோதிக்க விரும்புவதாக கூறவும் என் ஹாண்ட் பாக்கில் இருந்த அனைத்தையும் மேஜை மீது பரப்பி வைத்தேன். என் கைப்பையை வாங்கி உப்மா கிண்டுவது போல கிண்டிக் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதோ டவுன் பஸ்ஸில் சென்ற டிக்கெட்டெல்லாம் வெளியே வந்து விழுந்தது.

ஒரு சின்ன காகித புத்தகம் அந்தக் கடவுச்சீட்டு இல்லாமல் எது இருந்து என்ன பிரயோஜனம்?

அடுத்ததாக அந்த அதிகாரி ஒரு கேள்வியை முன்வைத்தார். “எங்கே தங்கி இருக்கிறீர்கள்?”

ஆங்… எனக்கு தெரியுமே அந்த பெயர்… அது… அது ஒரு சீன பெயராயிற்றே… ஐயோ கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்? நான் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயர் என்ன? ஜான் தங்கியிருப்பது கேண்டில்வுட் அது ஒரு ஆங்கில பெயர் என்பதால் நன்றாக நினைவில் இருந்தது. நான் தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் ஏதோ ஷான் என்று தொடங்கும். சட்டென ஞாபகம் வரவில்லையே.

சிறு வயதில் நான் ஆறாவது படிக்கும்போது கன்யாகுமரி சென்றபோது தங்கிய ஹோட்டலின் பெயர் ஸ்ரீ நிவாஸ் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தஞ்சாவூரில் தங்கிய ஹோட்டலின் பெயர் ராஜ் ரெசிடென்சி, தாஜ்மஹால் சென்றபோது தங்கிய ஹோட்டலின் பெயர் தாஜ்விலாஸ்.பெங்களூரு வந்து பணிக்கு சேர்ந்ததும் தங்கிய ஹோட்டலின் பெயர் மேக்னா இன்டர்நஷனல் இப்படி என் வாழ்க்கையில் இன்னும் எத்தனை ஹோட்டல்களில் தாங்கினேனோ அத்தனையும் நினைவுக்கு வர இப்போது தங்கியிருக்கும் அந்த ஹோட்டலின் பெயர் என் நினைவில் எப்படி நில்லாமல் போனது?
அதிகாரி இப்போது என்னை சர்வநிச்சயமான சந்தேக வலையில் வைத்து நோக்க ஆரம்பித்தது அவர் பார்வையிலேயே புரிந்தது.

நான் என் ஈ மெயில் திறந்து பார்த்து கூறுவதாக கேட்டுக்கொண்டேன்.
எனக்கு அஃபீசியலாக இந்த பயணத்தை பற்றிய குறிப்பிருக்கும் மெயில், நான் ஜாவீதுக்கு அனுப்பியிருந்த மெயில் என்று இரண்டு இடங்களில் அந்த ஹோட்டலின் பெயர் இருக்கும். ஆனால் அதிகாரி மறுத்துவிட்டார்.

பதிலுக்கு அவருடைய கைபேசியைத் தந்து எனக்கு இங்கே தெரிந்த யாராவது ஒருவரை அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
போச்சு மூன்றாவது ஆப்ஷனும் பிளாப். எனக்கு எந்த எண்ணும் நினைவில் இல்லை. சிறுவயதில் அப்பாவின் நடமாடும் டெலிபோன் டைரக்டரியாக நான் இருந்தது நினைவுக்கு வந்தது.

அப்போதெல்லாம் எப்படியும் ஒரு முப்பது லேண்ட்லைன் நம்பர்களாவது நினைவில் வைத்திருப்பேன். இப்போது தேவைப்படும் ஒருவர் எண்ணும் என் நினைவில் இல்லை.
எங்கிருந்தாவது இப்போது ஜான் ஓடிவந்து என்னை காப்பாற்றக் கூடாதா என்றிருந்தது. இதென்ன தமிழ் சினிமாவா? நான்தான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், எனக்காக நான்தான் வாதாட வேண்டும். அவரின் சந்தேகத்தை போக்கி என்னை நிரூபிக்க வேண்டும். தயாராகு மீரா, தயாராகு… யோசி… யோசி, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது செய். வழியில்லாமல் போகாது. நீ ஒன்றும் குற்றவாளி இல்லையே என்று கூவிக்கொண்டே இருந்தது மனம்.

நான் யாராக இருந்தால் என்ன? என்ன பெயரோ எந்த ஊரோ இப்போதைக்குத் தேவை என்னுடைய கடவுச்சீட்டு. புத்திக்கு சட்டென ஒரு யோசனை வந்தது. அதிகாரியை அழைத்து என்னுடைய பாஸ்போர்ட் எண் எனக்கு நன்றாக நினைவிருப்பதாகக் கூறி ஒரு காகிதத்தில் எழுதி தந்தேன்.

அதிகாரி அதைப் பெற்றுக்கொண்டு யாரையோ அழைத்து பேசினார். என் பாஸ்போட்ர் எண்ணைத் தந்து சோதித்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் சீக்கிரமே என்னைப் பற்றிய விபரங்களை அறிந்து உறுதிசெய்து கொண்டார்.

நான் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் ஷான் டாங்ஷெங் லமாய் என்ற தகவலையும் எனக்குக்கூறி புன்னகைத்தார். என் வாழ்வில் இனி நான் மறக்க முடியாத பெயராக அந்த நொடியே அது மாறிவிட்டது.
கடவுளுக்கு மனதினுள் நன்றி கூறியபடியே, “முதலில் மால் சென்று உடன் வந்த நண்பர்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்” என்று நான் கூறியதும் அந்த அதிகாரி என்னை மாலிற்கே அழைத்துச் சென்றார்.அங்கே பார்க்கிங்கில் அனைவரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஜான் மட்டும் என்னை எங்கோ தேடிக்கொண்டிருப்பதாகக் கூறி அவனை போனில் அழைத்து தெரியப்படுத்த அவனும் ஐந்து நிமிடத்தில் மூச்சிரைக்க வந்து சேர்ந்தான்.

“நிஜமாகவே ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்றவனின் குரலில் அத்தனை அக்கறை இருந்தது. எனக்கு அனைவரையும் சிரமப்படுத்தியது சங்கடமாக இருந்தது.

அதிகாரி விடைபெற்றுக் கொண்டு இனி எங்கு சென்றாலும் பாஸ்போர்ட் நிச்சயம் கைவசம் வைத்திருங்கள் என அறிவுறுத்திவிட்டு சென்றார். நாங்களும் அந்த இடம்விட்டுக் கிளம்பினோம்.

நான் ஜானை நோக்கி “ரொம்ப சாரி ஜான்… எப்படி இப்படி தொலைஞ்சு போனேன்னு எனக்கே புரியல.” என்று தோசைக்காக நான் புறப்பட்டுப் போனதை விவரிக்க சரியாக வண்டி அந்த NADOSAMMA-வை கடந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் குபீரென்று சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

ஜான் மட்டும் சிரிக்காமல் “காலைலயே உன்ன தோசை சாப்பிட கூட்டிட்டு போயிருக்கணும்” என்றான்

வரும் வழியில் தோசை சாப்பிட்டு விட்டு, புது போனும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். போன் கைக்கு வந்த அடுத்த நிமிடமே மெயில் பாக்ஸை திறந்தேன். அப்போதும் ஜாவீதிடமிருந்து எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. மாலை ஷான் டாங்ஷெங் லமாய் ஹோட்டல் அறைக்கு வந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டேன்.

இரு தினங்கள் கழித்து அலுவலகத்தின் ரிஸப்ஷனைக் கடக்கையில் ரிசிப்ஷனிஸ்ட் என்னை அழைத்து எனக்கொரு நோட் இருப்பதாகக் கூறி ஒரு சின்ன தாளை கையில் திணித்தார். அதில் “உனக்கு மேலே இருக்கும் கூரையின் கீழ் தான் நானும் இருக்கிறேன்” என்று எழுதியிருந்தது. அது ஜாவீதின் கையெழுத்து என்று அறிந்து என் கண்கள் விரிந்து சுற்றித் துழாவித் திரும்பிப் பார்க்கையில் அங்கிருக்கும் நாற்காலியிலிருந்து எழுந்து வருவது ஆம்.. ஜாவீத்தான் அது. ஒரு பயணம் தனது பாதையைக் கண்டுகொண்ட மகிழ்ச்சி மனதை நிறைத்தது.

***

நித்யாஹரி

ஆசிரியர் தொடர்புக்கு nithya.ramadoss@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. அருமையான நடை
    கனவு உலகத்தில் காட்சிப்படுத்திய விதம் அருமை….
    எழுத்தாளர் நித்யா அவர்களே நல் வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular