தமிழில் – நரேன்
அவர்கள் அவனைப் புதிதாகச் சலவை செய்யப்பட்ட சுத்தமான உறைகளுக்கிடையில் கிடத்தியிருந்தார்கள். மங்கலான இளஞ்சிவப்பு விளக்கின் அடியில், மேசையின் மீது அப்போதுதான் பிழிந்து ஊற்றப்பட்ட கெட்டியான ஆரஞ்சு சாறு எப்போதும் போல் தயாராக வைக்கப்பட்டிருந்தது. சார்லஸ் அழைத்தால் போதும் அவனுடைய அப்பாவோ அல்லது அம்மாவோ, அவனது உடல்நிலை தற்போது எவ்வளவு மோசமாகிவிட்டதென்பதை அறிந்து கொள்வதற்காக, உடனடியாக தலையை நீட்டி அறைக்குள் நுழைத்து எட்டிப் பார்ப்பார்கள். அவ்வறையில் ஓசை பரவும் விதம் நன்றாகவே இருந்தது; காலை நேரங்களில் டாய்லெட் தன் பீங்கான் தொண்டையில் தண்ணீர் கொப்புளிப்பதைக் கேட்க முடியும், கூரையை மழை தட்டுவதையும் ரகசிய சுவர்களினூடாக திருட்டு எலிகள் ஓடுவதையும் கீழே கானரிப் பறவை அதன் கூண்டில் பாடிக்கொண்டிருப்பதையும் கூட கேட்க முடியும். மிகவும் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் நோய் ஒன்றும் அவ்வளவு மோசமானதாக இருப்பதில்லை.
சார்லஸிற்கு பதிமூன்று வயது. அது செப்டம்பரில் பாதி கழிந்துவிட்ட காலம், இலைகள் உதிர்ந்து பூமி பற்றியெரியத் தொடங்கியிருந்தது. அந்தக் கொடூரமான ஒன்று அவனைத் தாக்கி பிடித்துக் கொள்ளும் முன் அவன் மூன்று நாட்களாகப் படுக்கையில்தான் கிடந்தான்.
அவன் கைகள் மாற்றமடையத் தொடங்கியது. அவனது வலது கை. அவன் அதைப் பார்த்தான். அது கொதித்து வியர்த்து படுக்கை விரிப்பின் மீது தனியாகக் கிடந்தது. அது படபடத்தது, லேசாக அசைந்தது. பிறகு வண்ணம் மாறியபடி அது அப்படியே அங்கேயே கிடந்தது.
*
அன்று மதியம் டாக்டர் மீண்டும் வந்தார். அவனது மெல்லிய மார்பின் மீது ஒரு சிறு டிரம்ஸ் வாசிப்பதைப் போலத் தட்டினார். “எப்படி இருக்கே?” புன்னகைத்தபடி டாக்டர் கேட்டார். “எனக்கே தெரியும், நீ சொல்ல வேண்டாம்: ‘எனக்கு சளி சரியாயிடுச்சு டாக்டர், ஆனாலும் என் உடல் ரொம்ப மோசமாகிக்கொண்டே போவதாக உணர்கிறேன்’ அதானே… ஹா ஹா..!” அடிக்கடி அவர் சொல்லும் அதே ஜோக்கை திரும்பச் சொல்லி அவரே சிரித்துக்கொண்டார்.
சார்லஸ் அப்படியே படுத்துக் கிடந்தான். அவனைப் பொறுத்தவரையில் இந்தக் கொடுமையான அரதப்பழசான கேலிப்பேச்சு இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அவனது மனதில் அந்தக் கிண்டல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. அவனது மனம் அதைச்சென்று தொட்டு பின்பு பயத்தில் வெளிறிப் பின்வாங்கிக் கொண்டது. தன்னுடைய ஜோக்குகளால் தான் எவ்வளவு இரக்கமற்றவனாக இருக்கிறோம் என்பது டாக்டருக்குத் தெரியவில்லை! நிறமிழந்து உடல் நீட்டிப் படுத்திருந்த சார்லஸ், “டாக்டர்” என்று கிசுகிசுத்தான். “என்னுடைய கை இனி எனக்குச் சொந்தமில்லை. இன்று காலை அது வேறொன்றாக மாறிடுச்சு. அதை நீங்க எனக்காக மறுபடியும் பழையபடி மாத்தணும் டாக்டர்!”
டாக்டர் அவருடைய பற்களைக் காட்டிச் சிரித்து அவன் கையை தட்டிக் கொடுத்தார். “பார்க்கும்போது எனக்கு அது நன்றாக இருப்பது போலத்தான் தெரியுது கண்ணா. உனக்குக் காய்ச்சலினால் ஒரு குட்டிக்கனவு வந்திருக்கிறது அவ்வளவுதான்.”
“ஐயோ டாக்டர், அது இப்போ மாறிடுச்சு டாக்டர்…” கட்டுக்கு அடங்காத தன் வெளுத்த கையை பரிதாபமாகத் தூக்கிப் பிடித்தபடி அழுதான் சார்லஸ்.
டாக்டர் கண்ணடித்தார். “அதுக்காக நான் உனக்கு ஒரு பிங்க் மாத்திரை கொடுக்கிறேன்.” சார்லஸின் நாக்கின் மீது ஒரு மாத்திரையைப் போட்டார். “விழுங்கு!”
“இது என்னுடைய கையை மறுபடியும் என்னுடையதாக மாற்றிடுமா?”
“ஆமா, ஆமா.”
செப்டம்பரின் நீலவானத்தின் அடியில் அரவமற்ற சாலையில் டாக்டர் தன் காரை ஓட்டிச் சென்றபோது வீடு அமைதியில் ஆழ்ந்திருந்தது. கீழே எங்கோ தூரத்தில் சமையலறை எனும் ஒரு உலகத்தில் கடிகாரம் துடித்துக் கொண்டிருந்தது. சார்லஸ் தனது கையை பார்த்தபடியே படுத்திருந்தான்.
அது பழையபடி மாறவில்லை. இன்னமும் அது வேறொன்றாகத்தான் இருந்தது.
வெளியே காற்று வீசிக்கொண்டிருந்தது. குளிர்ந்த ஜன்னலின் மீது இலைகள் மோதி விழுந்தன.
நான்கு மணிக்கு அவனது மற்றொரு கையும் மாற்றமடைந்தது. அது தனித்துக் கிட்டத்தட்ட பரபரக்கத் தொடங்கியது போல் தோன்றியது. ஒவ்வொரு செல்லாகத் துடித்து விலகியது. வெப்பமான இதயத்தைப் போல அடித்துக்கொண்டது. விரல் நகங்கள் நீலமாகவும் பின்பு செந்நிறமாகவும் மாறியது. இந்த மாற்றங்கள் நிகழ சுமார் ஒரு மணிநேரம் ஆனது. முடிந்ததும், பார்ப்பதற்கு எந்தவொரு சாதாரண கையையும் போலவே இருந்தது. ஆனால் அது சாதாரணமானது அல்ல. அது இனி அவனுடையது இல்லை. நம்பவியலாத திகிலில் படுத்துக் கிடந்தான், பின்பு முற்றாகச் சோர்வுற்று அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.
ஆறு மணிக்கு அவனுடைய அம்மா சூப் கொண்டு வந்தார். அவன் அதைத் தொடவில்லை. கண்களை மூடியபடியே “எனக்கு கைகள் இல்லை” என்றான்.
“உன் கைகள் நன்றாகவே உள்ளன சார்லஸ்,” என்றார் அம்மா.
“இல்லை,” அவன் ஓங்கியழுதான். “என்னுடைய கைகள் போச்சு. ஏதோ மரக்கட்டைகள் இருப்பதைப் போலத்தான் நான் உணர்கிறேன். ஐயோ, அம்மா… அம்மா என்னைப் பிடித்துக் கொள், பிடித்துக் கொள். எனக்குப் பயமாக இருக்கு!”
அவளே அவனுக்கு உணவூட்ட வேண்டியிருந்தது.
“அம்மா, டாக்டரை மீண்டும் கூப்பிடுங்கள், ப்ளீஸ். என் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது,” என்று சொன்னான்.
“டாக்டர் இரவு எட்டு மணிக்கு இங்கே இருப்பார்,” என்று சொல்லிவிட்டு அம்மா வெளியே சென்றார்.
*
ஏழு ஆகியிருந்தபோது, வீட்டை இரவு கருமையாக நெருங்கிச் சூழ்ந்து மூடியிருந்தபோது சார்லஸ் தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து தன் ஒரு காலில் முடிந்து பிறகு அடுத்த காலிலும் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். “அம்மா! இங்கே சீக்கிரம் வா!” அவன் உரக்கக் கத்தினான்.
ஆனால் அம்மா அங்கு வருவதற்குள் அது நிகழ்ந்து முடிந்துவிட்டிருந்தது.
அம்மா திரும்பக் கீழே சென்றபோது அவனுடைய கால்கள் துடிதுடித்து வெப்பமேறி செஞ்சிவப்பாகியது. நடுநடுங்கும் இம்மாற்றத்தினால் அறையே வெம்மையில் நிறைவதை எதிர்த்து எதுவும் செய்யாமல் சும்மா படுத்து கிடந்தான்.
“நான் உள்ளே வரலாமா?” டாக்டர் வாசற்கதவில் நின்று புன்னகைத்தார். “டாக்டர்!” கத்தினான் சார்லஸ். “சீக்கிரம், என்னுடைய போர்வைகளை விலக்கிப் பாருங்கள்!”
டாக்டர் பொறுமையுடன் போர்வைகளைத் தூக்கினார். “ஆ… அதோ பார்… நன்றாக ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாய். கொஞ்சம் வியர்க்கிறதுதான். லேசான ஜூரம். உன்னை அங்கேயிங்கே நகர வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே, சுட்டிப்பையா.” ஈரம் தோய்ந்த அவனின் இளஞ்சிவப்பு கன்னத்தைக் கிள்ளினார். “அந்த மாத்திரை வேலை செய்ததா? உன்னுடைய கை மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியதா?”
“இல்லை… இல்லை… இப்போது என்னுடைய இன்னொரு கையும் இரண்டு கால்களும் கூட…”
“சரி… சரி… இப்போது உனக்கு நான் இன்னும் மூன்று மாத்திரைகள் கொடுக்கப் போகிறேன். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொன்று. சரியா, என் குட்டி சிவப்பு பேரிக்காயே?” டாக்டர் சிரித்தார்.
“அது என்னை சரி பண்ணிடுமா? ப்ளீஸ்…ப்ளீஸ்… எனக்கு என்ன ஆச்சுனு சொல்லுங்க.”
“மிதமான செங்காய்ச்சல்தான், லேசாகச் சளி பிடித்திருப்பதால் கொஞ்சம் சிக்கலாகியிருக்கு.”
“எனக்குள்ளேயே வாழ்ந்து மேலும் மேலும் நிறைய கிருமிகளை உருவாக்கும் வகையான கிருமியா இது?”
“ஆமாம்.”
“இது சிவப்பு காய்ச்சல்தான்னு உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? நீங்க எந்த டெஸ்டும் எடுக்கலையே?”
அசட்டையான அதிகாரத்துடன் அச்சிறுவனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தபடி சொன்னார் டாக்டர், “கண்களால் பார்த்தே அது எவ்விதமான காய்ச்சல் என்று சொல்லும் திறமை எனக்கு உண்டு என்று நம்புகிறேன்.”
டாக்டர் தன் கறுப்பு மருந்து பெட்டியை விரைவாக அடுக்கி மூடுவது வரை எதுவும் பேசாமல் படுத்து கிடந்தான் சார்லஸ். பிறகு அந்த அமைதியான அறையில், அச்சிறுவனின் குரல் மிகவும் மென்மையாக வலுவிழந்த ஒலியாக எழுந்தது, ஏதோ நினைவூட்டப்பட்டவனைப் போல அவனின் கண்கள் ஒளிர்ந்தன. “நான் ஒருமுறை ஒரு புத்தகம் படித்தேன். கல்லாக மாறி உறைந்து நிற்கும் மரங்களைப் பற்றி. மரங்கள் எப்படி தரையில் விழுந்து அழுகி, பிறகு கனிமங்கள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து தங்களைத் தாங்களே கட்டி எழுப்பி நிற்கின்றன என்பதைப் பற்றி. அவை பார்ப்பதற்கு மரங்களைப் போலவே இருக்கும். ஆனால் மரங்கள் அல்ல, பாறைகள்.”
“சரி, அதற்கென்ன?” என்று கேட்டார் டாக்டர்.
“நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்,” சிறிது நேரங்கழித்து சொன்னான் சார்லஸ். “கிருமிகள் எப்போதாவது பெரிதாக ஆகுமா? அதாவது என்னுடைய பயாலஜி வகுப்புகளில் ஒரு செல் உயிரிகள், அமீபாக்கள் அதுபோன்ற மற்ற சிலதுகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் கொத்தாக, ரொம்ப பெரியதாக ஆகும்வரை ஒன்றாகக் கூடியிருந்து பிறகு எப்படி ஒரு உடம்பை உருவாக்கின என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பிறகு மேலும் மேலும் செல்கள் ஒன்றிணைந்து மிகவும் பெரிதாகி இறுதியாக ஒரு மீனாக உருவெடுத்திருக்கலாம். அதையும் மீறிக் கட்டக்கடைசியாக இதோ நாம் இருக்கிறோம். ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவுவதாக முடிவெடுத்துக் கொண்ட செல்களின் தொகுப்புதானே நாம் எல்லோருமே. இது சரிதானே?” காய்ச்சல் கண்ட உதடுகளை அவன் நனைத்துக்கொண்டான்.
“என்ன பேச்சு இதெல்லாம்?” டாக்டர் அவனை நோக்கி வளைந்து குனிந்தார்.
“நான் இதை உங்ககிட்ட சொல்லணும் டாக்டர். ஓ… நான் சொல்லியே ஆகணும்!” அவன் அழுதான். “சும்மா கற்பனை செய்து பாருங்கள்… ப்ளீஸ் கற்பனை செய்யுங்கள். அந்த காலத்தைப் போல நிறைய நுண்ணுயிரிகள் ஒரு பெரிய தொகுப்பை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பிறகு அவை மேலும் மேலும் இதைப்போல நிறைய உருவாக்கத் தொடங்கினால் என்ன ஆகும்?”
அவனது வெள்ளைக் கரங்கள் தற்போது அவன் நெஞ்சின் மீதிருந்து மெல்ல அவன் கழுத்தை நோக்கி ஊர்ந்தது.
“பிறகு அவை ஒரு மனிதனை மொத்தமாக எடுத்துக்கொள்ள முடிவெடுத்தன!” சார்லஸ் அழுதான்.
“ஒரு மனிதனை எடுத்துக்கொள்வதா?”
“ஆமாம், ஒரு மனிதனாகவே மாறிவிடுவது. நான், என்னுடைய கைகள், என் கால்கள்! ஒரு நோய்க்கு ஒருவனைக் கொன்று பிறகு அவனாகவே வாழ எப்படியோ தெரிந்து கொண்டுவிட்டது என்றால் என்ன செய்வது?”
அவன் அலறினான்.
அவனது கைகள் அவன் கழுத்தின் மீது இறுகியிருந்தது.
டாக்டர் கூச்சலிட்டபடி அவனை நெருங்கிச் சென்றார்.
*
ஒன்பது மணிக்கு அவனின் அம்மாவும் அப்பாவும் டாக்டரை வழியனுப்ப அவரது கார் வரை உடன் சென்று, அவருடைய பையை அவரிடம் கையளித்தனர். அவர்கள் அவ்விரவின் குளிர்ந்த காற்றில் நின்று சில நிமிடங்கள் பேசினார்கள். “அவனது கைகளும் கால்களும் எப்போதும் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று சொன்னார் டாக்டர். “அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.”
“அவனுக்கு எல்லாம் சரியாகிடுமா டாக்டர்?” அம்மா டாக்டரின் கையை ஒரு கணம் பிடித்துக்கொண்டார்.
டாக்டர் அவரது தோளைத் தட்டிக்கொடுத்தார். “நான் முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்ப டாக்டராக இருக்கிறேன் இல்லையா? இது காய்ச்சல்தான். மற்ற எல்லா விஷயங்களையும் அவன் கற்பனை செய்து கொள்கிறான்.”
“ஆனால் அவன் கழுத்தில் இருக்கும் காயங்கள், அவன் கழுத்தை அவனே நெருக்கி மூச்சுத் திணறடித்துக் கொண்டானே…”
“நீங்கள் அவனைக் கட்டியே வைத்திருங்கள்; அவன் நாளை காலை சரியாகிவிடுவான்.”
இருண்ட செப்டெம்பர் சாலையில் அவரின் கார் கிளம்பிச் சென்றது.
*
அதிகாலை மூன்று மணியளவில் தனது இருண்ட அறையில் சார்லஸ் இன்னமும் விழித்துக் கொண்டிருந்தான். அவனது கழுத்தின் அடியிலும் முதுகின் பின்புறத்திலும் படுக்கை ஈரத்தில் தோய்ந்திருந்தது. அவன் உடல் கடுமையான வெப்பம் கொண்டிருந்தது. இப்போது அவனுக்கு கைகளும் இல்லை கால்களும் இல்லை. அவனது உடலும் மாறத் தொடங்கியிருந்தது. அவன் படுக்கையில் அசையவேயில்லை ஆனால் பரந்த வெற்றுக் கூரையைக் கூரிய கவனத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் சத்தம் போட்டு எல்லா பொருட்களையும் வீசியெறிந்தபடி இருந்தான், ஆனால் இப்போது அவன் குரல் கரகரத்துப் போனது, அவனும் சோர்வடைந்துவிட்டான். அவன் அம்மா இதுவரை மூன்று முறை எழுந்து வந்து அவன் புருவத்தின் மேல் ஈரத்துண்டை அழுத்தி அவனை ஆற்றுப்படுத்தினார். இப்போது அவன் அமைதியாக இருந்தான், அவன் கைகள் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது.
அவனது உடலின் சுற்றுச் சுவர்கள் மாற்றமடைவதைப் போல அவன் உணர்ந்தான். உறுப்புகள் நகர்ந்தன, இளஞ்சிவப்பு சாராயத்தின் கொள்கலன் பற்றியெரிவதைப் போல அவனது நுரையீரலில் தீ பற்றிக் கொண்டது. ஒரு கணப்பறையின் நடுங்கும் பிழம்பைப் போல அவ்வறை ஒளிர்ந்தது.
அவனுக்கு இப்போது உடல் இல்லை. அத்தனையும் போய் விட்டது. உடல் அவனுக்குக் கீழேதான் இருந்தது, ஆனால் அது ஒற்றை துடிப்பெனப் பற்றியெரியும் ஒரு மந்தமான போதையினால் நிறைந்திருந்தது. ஏதோ கில்லட்டின் கருவி அவன் தலையைச் சரியாக வெட்டிக் கழித்துவிட்டதைப் போல அந்தத் தலை தலையணை மீது பளபளத்துக் கிடந்தது. ஆனால் உடலோ, கீழே, இன்னமும் உயிருடன், வேறு யாரோ ஒருவருக்கு உரியவொன்றாக இருந்தது. இந்த நோய் அவன் உடலை முழுவதுமாக தின்றுவிட்டது. அப்படி உண்டதின் மூலமாகவே கொந்தளிக்கும் அதன் நகல் ஒன்றின் மூலமாகத் தன்னை பிறப்பித்துக் கொண்டது.
அவன் கைகளில் இருந்த சிறு மயிர்களும் விரல் நகங்களும், வடுக்களும், கால் விரல் நகங்களும், அவனது வலது இடுப்பின் ஒரு சிறிய மச்சமும் கூட மிகச்சரியாகப் புதிதாக மீண்டும் வனையப்பட்டிருந்தன.
நான் இறந்துவிட்டேன் என்று அவன் நினைத்தான். நான் கொல்லப்பட்டு விட்டேன், ஆனாலும் நான் வாழ்கிறேன். என் உடல் இறந்துவிட்டது, அதில் முழுவதும் இப்போது இருப்பது இந்த நோய்தான். யாருக்கும் அது தெரியப்போவதும் இல்லை. நான் எல்லா இடங்களையும் சுற்றி வருவேன் ஆனால் அது நானாக இருக்காது, வேறு ஏதோ ஒன்றாகத்தான் இருக்கும். அது முழுக்க முழுக்க கேடு செய்யும் ஒன்றாக இருக்கும், அத்தனையும் தீங்கிழைப்பவை, மிகப்பெரியது, பெரும் பாவங்கள் செய்யக்கூடியது, அதைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அதைப் புரிந்து கொள்வதற்கோ கூட மிகக்கடினமான ஒன்று. அது காலணிகள் வாங்கும் தண்ணீர் குடிக்கும் ஒருநாள் திருமணம் கூடச் செய்துகொண்டு இதுவரை இவ்வுலகில் இழைக்கப்பட்டதை விடவும் பெரும் பாவங்களைச் செய்யும்.
ஒரு சூடான மதுவைப் போல வெப்பம் இப்போது அவன் கழுத்தைத் தனதாக்கிக் கொண்டு அவன் கன்னங்களுக்குள் நுழைந்தது. அவன் உதடுகள் எரிந்தன, அவன் கண் இமைகள் இலைகளைப் போல தீ பற்றிக்கொண்டன. அவன் நாசி மெலிதாக, மிக மெலிதாக நீலத்தழலென சுவாசத்தை வெளியேற்றியது.
எல்லாம் முடிந்தது என்று அவன் நினைத்தான். இது என்னுடைய தலையையும் மூளையையும் எடுத்துக்கொண்டு இரண்டு கண்களையும் எல்லா பற்களையும் என் மூளையில் இருக்கும் அத்தனை குறிப்புகளையும், ஒவ்வொரு தலைமுடியையும் என் காதுகளின் சுருக்கங்களையும் தனதாகப் பொருத்திக் கொள்ளும். அதன் பிறகு என்னுடையதென்று எனக்கு எதுவும் மிச்சமிருக்காது.
கொதிக்கும் பாதரசத்தால் தன் மூளை நிரப்பப்படுவதை அவன் உணர்ந்தான். இடது கண் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது, பிறகு ஒரு நத்தையைப் போல தன்னைத்தானே பின்னிழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றது. அவன் இடது கண் குருடாகிவிட்டது. அது இனி அவனுக்குச் சொந்தமில்லை. அது எதிரியின் எல்லைக்கு உட்பட்டதாகிப் போனது. அவனுடைய நாக்கு போய்விட்டது, வெட்டித் தள்ளப்பட்டுவிட்டது. இடது கன்னம் மரத்துப்போய் பின்பு தொலைந்தேவிட்டது. இடது காது கேட்பதை நிறுத்திக்கொண்டது. அது இப்போது வேறு யாருக்கோ உரியது. மரக்கட்டைகளைக் கல்லாக உருமாற்றும் அந்த தனிமங்களாலான ஒன்று, ஆரோக்கியமான விலங்கு செல்களை மாற்றிடும் அந்த நோயெனும் ஏதோவொன்று… அது, அந்த ஒன்று, இப்போது புதிதாகப் பிறந்து கொண்டிருந்தது.
அவன் கத்த முயன்றான். அவனால் அந்த அறையில் சத்தம்போட்டு கூர்மையாக உரக்கக் கத்த முடியும்தான், ஆனால் அப்போதுதான் அவனது மூளை வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. வலது கண்ணும் வலது காதும் துண்டிக்கப்பட்டது, அவன் முழுதாக செவிடும் குருடுமாக ஆனான். அனைத்திலும் தீ பற்றிக்கொண்டது, அனைத்தும் நடுங்கியது, அனைத்தும் பீதியடைந்தது, அனைத்தும் மரணித்தது.
அவன் அம்மா கதவைத் தாண்டி அவனை நெருங்கி வருவதற்குள் அத்தனையும் சப்தமடங்கிப் போனது.
*
ஒரு தெளிவான நற்காலையது. வீசிய பலமான காற்றே டாக்டரை வீட்டின் முன் நடைபாதையில் உந்திச் செல்ல உதவியது. மேலே ஜன்னலில் நன்றாக ஆடையணிந்து அச்சிறுவன் நின்றுகொண்டிருந்தான். டாக்டர் கைகளை அசைத்துப் பேசியபோது அவன் பதிலுக்கு கைகளை அசைக்கவில்லை. “என்ன இது? அடக்கடவுளே… இவ்வளவு சீக்கிரம் எழுந்தாச்சா?”
டாக்டர் கிட்டத்தட்ட ஓட்டமாக படிகளேறி மேலே சென்றார். பலமாக மூச்சு வாங்கியபடி படுக்கையறைக்குள் நுழைந்தார்.
“படுக்கையை விட்டு வெளியே எழுந்து என்ன செய்கிறாய்?” அவர் சிறுவனை விசாரித்தார். அவனுடைய மெல்லிய மார்பின் மீது தட்டினார், உடற்சூட்டையும் நாடித்துடிப்பையும் கவனித்தார். “ஆஹா… என்ன ஆச்சரியம். குணமாகிவிட்டது. கடவுளால் குணமாகிவிட்டது!”
“இனி என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டேன்” என்று அறிவித்தான் அச்சிறுவன். பரந்த ஜன்னலுக்கு அருகே வெளியே பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான், “இனி ஒருபோதும் இல்லை.”
“நானும் அதைத்தான் விரும்புகிறேன். நீ நலமாக இருக்கிறாய், சார்லஸ்.”
“டாக்டர்?”
“என்ன, சார்லஸ்?”
“நான் இப்போது பள்ளிக்கூடம் போகலாமா?” சார்லஸ் கேட்டான்.
“நாளைக்குப் போனால் போதுமே. நீ பள்ளிக்குப் போக மிகவும் ஆர்வமாக இருப்பதைப் போலத் தெரிகிறதே.”
“ஆமாம். எனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கும். அத்தனை குழந்தைகளையும் பிடிக்கும். எனக்கு அவர்களோடு விளையாட வேண்டும், தொட்டுப் பிடித்து மல்யுத்தம் செய்ய வேண்டும், அவர்கள் மீது உமிழ்ந்து விளையாட வேண்டும். பெண்களின் சடையைப் பிடித்து விளையாடவும், ஆசிரியர்களின் கைகளைக் குலுக்கவும், பொருட்கள் வைப்பறையில் இருக்கும் அத்தனை பொருட்களின் மீதும் என் கைகளைத் தேய்க்கவும், பிறகு பெரியவனாக வளர்ந்து பயணங்கள் செய்து உலகிலுள்ள அத்தனை மக்களுடனும் கைகளைக் கோர்த்துக் குலுக்கவும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும், நூலகங்களுக்குச் சென்று எல்லா புத்தகங்களையும் தொட்டெடுத்து… – எல்லாம்.. இது எல்லாமும் நான் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்,” செப்டம்பரின் காலைப்பொழுதை வெறித்துப் பார்த்தபடி சொன்னான் அச்சிறுவன். “என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள்?”
“என்ன?” டாக்டர் குழப்பமுற்றார். “நான் உன்னை சார்லஸ் என்ற பெயரைத் தவிர வேறு எதைச் சொல்லியும் அழைக்கவில்லை.”
“பெயரே இல்லாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.” சிறுவன் தோள்களைக் குலுக்கினான்.
“நீ திரும்பவும் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாயிருக்கிறாய் என்பதை அறிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” டாக்டர் சொன்னார்.
“நான் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.” சிறுவன் புன்னகைத்தான். “உங்கள் உதவிக்கு நன்றி டாக்டர். கைகளைக் குலுக்கிக் கொள்ளலாமா?”
“மகிழ்ச்சியாக…”
அவர்கள் தீர்க்கமாக கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள், திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தெளிவான காற்று வீசியது. கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரம் அவர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள், சிறுவன் அம்முதியவரை தலைதூக்கிப் பார்த்து நன்றி சொன்னான்.
பிறகு, சிரித்தபடியே சிறுவன் டாக்டரை வேகமாகக் கீழே அழைத்துச் சென்று வெளியே காரின் அருகே நிறுத்தினான். அம்மாவும் அப்பாவும் அவரை மகிழ்வுடன் வழியனுப்பி வைக்கப் பின்தொடர்ந்தார்கள்.
“முறுக்கேற்றிய வயலின் நரம்பைப் போல இருக்கிறான்!” டாக்டர் சொன்னார். “நம்பவே முடியவில்லை!”
“பலமாகவும்…” அப்பா சொன்னர். “நேற்றிரவு அவனே கட்டுகளை அவிழ்த்து வெளியே வந்துவிட்டான், சரிதானே சார்லஸ்?”
“நானா?” சிறுவன் கேட்டான்.
“நீதான்! ஆனால், எப்படி?”
“ஓ..!” சிறுவன் சொன்னான், “அது வெகு காலத்திற்கு முன்னால் நடந்தது.”
“வெகு காலத்திற்கு முன்னாலாம்….”
அவர்கள் அனைவரும் சிரித்தனர். அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த போது அமைதியாக இருந்த அச்சிறுவன் தன் வெற்றுக் கால்களை நடைபாதையோரம் நகர்த்தி அங்கே குறுகுறுவென ஓடிக்கொண்டிருந்த சிவப்பு எறும்புகள் மீது லேசாகத் தொட்டுத் தடவினான். அவன் பெற்றோர்கள் அம்முதிய மனிதருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவன் கண்கள் ஒளிர, இரகசியமாக, எறும்புகள் தயங்கி நடுங்கி பின் சிமெண்ட் தரையின் மீது அசையாமல் கிடப்பதைப் பார்த்தான். அவை இப்போது குளிர்ந்து போயிருக்கும் என்பதை உணர்ந்தான்.
“குட் பை”
டாக்டர் கைகளை அசைத்தபடி கார் ஒட்டிச் சென்றார்.
தன் பெற்றோருக்கு முன்னால் நடந்து சென்றான் அச்சிறுவன். நடந்து செல்கையில் நகரத்தை நோக்கித் திரும்பிப் பார்த்து தன் கீழ்மூச்சில் “பள்ளிக் காலங்கள்” என்று முணுமுணுத்தான்.
“அவன் மீண்டும் முழுவதுமாக குணமாகிவிட்டான்… நல்லது,” என்றார் அப்பா.
“அவன் பேசுவதைக் கவனித்தீர்களா? அவன் மீண்டும் பள்ளிக்குப் போவதற்கு ஆவலாகக் காத்திருக்கிறான்!”
சிறுவன் சத்தமின்றி திரும்பினான். அவன் தன் பெற்றோரை ஒவ்வொருவராக நொறுக்கிப் பிழியுமளவு கட்டியணைத்தான். அவர்கள் இருவரையும் பலமுறை முத்தமிட்டான்.
பின்னர் ஒரு வார்த்தை கூட பேசாமல் வாசற்படியேறி வீட்டிற்குள் சென்றான்.
பெற்றோர்கள் நுழைவதற்கு முன்னர், வரவேற்பறையில் இருந்த பறவைக் கூண்டை அவசரமாகத் திறந்து தன் கைகளை நெளித்து நுழைத்து மஞ்சள் கானரி பறவையைச் செல்லமாக ஒரேயொருமுறை தடவிக் கொடுத்தான்.
பின்னர் கூண்டின் கதவை அடைத்துவிட்டு, பின்னால் அடியெடுத்து நின்று காத்திருக்கத் தொடங்கினான்.
***
ரே பிராட்பரி – Ray Bradbury (1920-2012) : இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அறிபுனைவு கதைகளின் வித்தகர் என்று பெருமளவில் புகழப்பட்டாலும் தான் எழுதி மிகப் பிரபலமான Fahrenheit 451 என்ற ஒரு நாவல் மட்டும்தான் அறிபுனைவு வகைமையில் சேரும் மற்ற அனைத்தும் அதிபுனைவு மற்றும் மர்மக் கதைகள்தான் என்று கூறுகிறார். ஆனால் அறிவியலின் அடித்தளத்தில் இவர் கட்டியெழுப்பும் விறுவிறுப்பான மர்மக் கதைகளில் கூட கவித்துவ நடையழகையும் கற்பனையின் உச்சங்களையும் தொட்டவர். இவரின் பல சிறுகதைகள் பால்யகால நினைவுகளை மீட்டெடுப்பவை. கூடவே அச்சிறுவயதில் வாழ்வின் புலப்படா மர்மங்களையும் ஒரே நாளில் திடீரென அப்பால்யமே தொலைந்து போகும் விசித்திரத்தையும் மீண்டும் மீண்டும் தன் அதிபுனைவு கதைகளில் ஆராய முற்பட்டிருக்கிறார்.
1948-ல் எழுதப்பட்ட கனவுக் காய்ச்சல் எனும் இச்சிறுகதையை ஒரு கிருமி ஒரு மனிதனை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளும் அறிபுனைவு சாயலில் ‘பால்யம்’ எனும் உடலை உரித்து அவிழ்த்து மனிதனாக வெளியேறும் ஒருவனின் கதையாகவும் கொள்ள முடியும். இளமைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கிருமியை ஒத்த ஒரு நாசக்கார செயலில் ஈடுபடும் சாத்தியம் உள்ள மர்மத்தை இக்கதை விறுவிறுப்புடன் திறக்கிறது. உலகில் தனித்தவனாக வெளியேறாத வரை ஒருவனின் பச்சையம் பாதுகாக்கப்படுகிறது. அது உலர்ந்து தனக்கென வாழ்வை நிர்மாணிக்க முற்படும் எவரும் மற்றவனைத் தொற்றி மேலேறிப் பரவும் கிருமி தானே.
***