Sunday, November 17, 2024
Homeநூல் விமர்சனம்கனவு மிருகம் - விமர்சனம் - வேல்கண்ணன்

கனவு மிருகம் – விமர்சனம் – வேல்கண்ணன்

கனவு மிருகம் – சிறுகதைத் தொகுப்பு

முன்பெல்லாம் நண்பர் கரிகாலன் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் 2 நிமிடங்கள் கண்டிப்பாக பாலசுப்ரமணியத்தின்  எழுத்துகளை பற்றி பேசிவிடுவார். ஒரு சந்தர்ப்பத்தில் நானும் சதுக்கத்தில் சற்று இளைப்பாற வேண்டி இருந்தது. அத்தனை நாள் நண்பனின் பேச்சு கேளாமைக்கு வருந்தினேன். அதில் முதலில் நெருக்கமாக உணர்ந்த எழுத்து எழுத்தாளர் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவலுக்கு எழுதுப்பட்ட கட்டுரை. (http://www.sadhukkam.blogspot.in/)

இரண்டாவது : நள்ளிரவுக் கோரிக்கை. அதில் சில வரிகள் :
“இசையும் ஓர் உடல்
நீதி செய்வதே இன்னொரு உடலுக்கு மற்றொரு உடலின் சடங்கு
பொங்கவே செய்யும் நீரற்ற ஊற்றுகளும்
கேட்டறிய முடியா நாசித்துவாரங்களின் மூச்சொலியென
கோடை ஓர் உடல்”

“பருவம் தப்பி இடம்பெயர்ந்த பறவை
நீரற்ற நிலைகளில் புழுக்களுமில்லாத வெடிப்புகளைக்
கண்டு மலைத்து
விண் அகல் ஒவ்வொன்றிடமும் வேண்டிநின்றது”
இப்படியாகத்தான் நவம்பர் 2 2012 ல் இருந்து பாலா விற்கும் எனக்குமான பாலம் தொடங்கியது.

னவு மிருகம் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த, பல நிகழ்வுகளை நினைவு படுத்திய, தொடர்பு படுத்திய கதை “இருள் திரவம்” என்னும் சிறுகதை தான். பாலா எழுதத் தொடங்கிய பின்னாட்களில் அதாவது இறுதியாக எழுதிய கதைகளில் ஒன்றாக இருக்ககூடும் என்று எண்ணுகிறேன்.

இந்நாட்களில் எத்தனை பேருக்கு தனிமை- கவிதையால், ஓவியத்தால், இசையால், இலக்கியத்தால் நிரப்பபடுகிறது என்று தெரியவில்லை. உலகின் மகா உன்னதமான இலக்கியம் உருவாகுவதின் பின்னணியில் ஒரு தனிமையும்  இருப்பதை நாம் அறிவோம். அப்படியான தனிமை இன்றைய சூழலில் இருக்கிறதா? இந்த கதையில் வரும் ரகுநந்தனின் தனிமைப்படுத்தலுக்கான (கவனிக்கவும், தனிமை அல்ல-தனிமைப்படுத்தல்) காரணம் நகர சந்தையின் கூறுகள் தான் என்றாலும்  அது மிகையாகாது. இன்றையப் பெருநகரங்களில்  பல இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ இன்று இருக்கும் நிலைமைதான். இவர்களின் தனிமையை முழுதாக ஆக்கிரமித்து கொள்வதும்  தட்டிப்பறிப்பதுமாக பின்னணியில் செயல்படுவது தகவல் தொழில் நுட்பம் தான் என்பது இந்த கதையில் சொல்லப்படுவதாக  நான் பார்க்கிறேன்.

ஒன்றுக்கு ஒன்று முரணா தகவல்களை அளிப்பதில் தனியார் தொலைக்காட்சிக்கு சளைத்தவை அல்ல இணையமும். MASS Media எனப்படுவது ஒரு கற்பனைக்கு எட்டாத Global நெட்வொர்க். அந்த நெட்வொர்கில் சிக்கத் தவறியவர்கள் குறைவே. தனிமனித கோபமும் சிந்தனையும்  தானே விடுதலைக்கான வழி. ஒரு இளைஞனின் தனிமை தன்னை தன் சமூகத்தின்அவலங்களை உணரவைத்துவிடுமோ என்கிற அச்சத்தில் அத்தனிமையை உடைக்கப் பாடுபடுவதில் எல்லா தேசங்களுக்குள்ளும் உலா வரும் ஒற்றுமையை இணையத்தில் காணலாம். தனிமனிதனேயே இல்லாமல் செய்துவிடுவதும் இதனுடைய குறிக்கோள்  ஆகும். கதை சொல்லும் நேரத்தை மாற்றி மாற்றி ரகுனந்தனின் மன நிலைக்கு ஒத்து சொன்னவிதம் சிறப்பு என்றாலும், இன்னும் கூட தெளிவாக குழப்பியிருக்காலம். கதையில் Lift ஐ சவப்பெட்டியாக நினைத்து பார்ப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை வெறும் குறியீடு மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது.

அடுத்தது எனக்கு பிடித்த கதை :
சந்தன எண்ணை –   இந்த கதையில்  4, 5 வது பகுதி படிக்கும் போது
பாலகுமாரன் நினைவிற்கு  வரத்தொடங்கிவிட்டார். நல்லவேளையாக அந்த விபத்து தொடரவில்லை 6 வது பகுதியுடன் முடித்திருக்கிற வேண்டிய சிறுகதை இது. அப்படி முடித்து இருந்தாலும், “பார்கவியின் மேல் வேணு கோபாலுக்கு என்ன மாதிரியான அக்கறை பாரு” என்று யாரேனும் “கரை அப்பி” விடும் அபயாம் இருப்பதை உணர்ந்த  பாலா 7 வது பகுதியில் பார்கவியின் முடிவைத் தெளிவாக சொல்ல வேண்டி இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் 7வது பகுதியில் வரும் சில  வரிகளில்  ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். இதை நீங்களும் இந்த நெருக்கத்தை உணர்விர்கள் என்று நம்புகிறேன். அந்த வரிகள். “விதியை குறுஞ்செய்திகள் முடித்து வைக்கும் காலம்.” இங்கே பலரின் விதியை ஆரம்பித்து வைப்பதும் அதே குறுஞ்செய்திகள் தான்.

எதிர்பாராதது நடப்பது தான் வாழ்வின் இயல்பு என்றாலும் ஒரு விபத்தில் தீடிரென்று வீட்டின் ஆண்களை இழக்க நேரிடும் பெண்களின் நிலைமை சொல்லும் முள் என்ற சிறுகதையில் போகிற போக்கில் இப்படி சொல்லி செல்கிறார். “எதிர்வீட்டின் வாசற்படியில் தெரிந்த இரு கண்கள் இனி எப்போதும் அந்த வாசலில் நேரும் அசைவுகளைப் பார்த்தபடி வீட்டிற்கு வெளியே நீதிமன்றங்களின் சாட்சியாய் இருக்கும்” அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கூட இப்படி போகிற போக்கில் சில விஷயங்களை ‘பஞ்ச்’ வைத்து விட்டு செல்வார்.

மேற்கண்ட எனது பார்வையில் பாலசுப்ரமணியத்தின் சிறுகதை குறித்து மட்டும் எனது பார்வை வைத்தது எனது குறைபாடாகவே/போதமையாகவே நான் கருதுகிறேன். இதற்கும்  மேலாக பாலா மொழி, இசை, ஓவியம், சிற்பம், பொருளாதாரம், தேசியம் அரசியல், உளவியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்து இயங்கும் தளம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பெரியது. அதனை அதன்  போக்கை இங்கே குறித்த நேரத்தில் வடித்து விட முடியாது. பாலாவின் கவிதை வரிகள் இங்கே நினைவிற்கு வருகிறது.

//அது ஒரு கோப்பை
நிரம்பவே நிரம்பாத கோப்பை//
இது போல் தான் பாலசுப்ரமணியத்தின் படைப்புகள் பற்றி பேசுதலும் நிரம்பவே நிரம்பாத கோப்பை.
நன்றி

கனவு மிருகம்
ஆசிரியர்: பாலசுப்ரமணியம்
வெளியீடு : பாதரசம் பதிப்பகம்

 வேல்கண்ணன்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular