1.
முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும்
இந்தக் கோடை காலக் காலையில்
முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன்
எதற்காகக் கவிதை?
யாருக்காகப் பாடல்?
எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்?
உயிரில் மூண்டெரிகிற அக்கவிதையில்
காணாமலாக்கப்பட்ட மகள்
என்னை அமைதிப்படுத்த
விம்மலை அடக்கிக் கொண்டு சிரிக்கிறாள்.
அதை மீறித் துயரத்தின் நிழல்
நெடுமரங்களாக அசைந்தாடுகிறது எங்கும்.
அவளுக்கென ஆக்கப்பட்ட சோறு
இதோ உலர்ந்த பருக்கைகளாகி முற்றமெங்கும் சிதறுகின்றன
அப்படியே அது உலகம் முழுவதும் பரவுகிறது
“சோற்றுப் பருக்கைகளால்
உலகம் முழுவதையும் மூடிச் செல்கிறாய்“ என்று
கைது செய்யப்படலாம் நான்.
தேடிக் கண்டடைய முடியாத மகளின் பசிக்கு வேறெப்படி நான்
இந்தச் சோற்றை ஊட்ட முடியும்?
முற்றத்தில் அதைக் கொத்திச் செல்லும்
காக்கை, குருவிகளிடம் கேட்கிறேன்
“காக்கை, குருவியெல்லாம் எங்கள் ஜாதி… என்றும்மைப்
பாடித் திரிந்த இனிய தோழியல்லவோ அவள்!
அவளிடம் இந்தச் சோற்றுப் பருக்கைகளைச் சேர்த்து விடுங்கள்
அல்லது
அவளின் நிமித்தமான பிதுர்க்கடனாக இதை ஏற்றுக் கொள்க” என்று.
இதோ அவள் முற்றத்தில் நட்ட மாமரம் பழுத்துச் சொரிகிறது
அந்தப் பழங்களின் வாசனை அவளைத் தேடியலைகிறது.
தாங்க முடியாத அவளின் நினைவுகளோடு
அந்தப் பழங்களை மரத்தின் அடியில் புதைக்கிறேன்.
என்னிதயத்திலிருந்து பீறிட்டெழும் துயரத்தைப்போல
பழங்களின் வாசனை கிளர்ந்து கிளர்ந்து மேலெழுகிறது
அதுதான் உன்னுடைய வாசனை மகளே
அதை எங்கே நான் புதைப்பேன்?
அந்த வாசனை பழங்களைப் போல இனிப்பதில்லை.
“அம்மா” என்றொரு சொல்
அல்லது
“நான் இங்கிருக்கிறேன்” என்றொரு வார்த்தை சொல்!
நீண்டெரியும் எனதிந்தத் தூக்கமற்ற நாட்களும்
பசியும் தாகமும்
அலைவும் முடிவுற்று விடும்.
ஏனிந்தக் கனத்த மௌனம்
ஏளனமா? புறக்கணிப்பா? இயலாமையா?
இந்தக் காலம் உனக்காகவும் இல்லை
எனக்காகவும் இல்லாமலாயிற்றுப் பெண்ணே!
அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி
நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி…
***
2.
இதோ இந்த வங்கக் கடலின் கரையில்தான்
நாங்கள் அன்றிருந்தோம்
புரண்டு புரண்டு குமுறியபோதும்
கரை மீற முடியாத அலைகள்
மீண்டும் மீண்டும் கடலிலேயே கரைந்து அழிந்தன.
அன்று நடத்தப்பட்ட ஆயிரமாயிரம் கொலைகளுக்கும்
அந்தரிப்புகளுக்கும் முன்பாக
சாட்சிகளாக நிறுத்தப்பட்டோம்.
வழியும் விதியுமற்று
கையறுநிலைக்காளாகி
குமுறும் அலைகளோடு நின்றோம்
செத்தழிந்தோம்
மிஞ்சியவரெல்லாம் கரையடங்கும் அலைகளோடு கரைந்தொடுங்கினோம்.
இன்று மீளவும்
அந்தக் கொலைகளின் நினைவுகளோடும் துயரோடும்
அதே கரையில் தீரா அலைகளோடு நிற்கிறோம்
பத்தாண்டுகளாகிய பின்னும்
கொதிப்பாறா நினைவுகளில்
இந்தக் கரையும் கரை நீளப் பூத்துக் கிடக்கும் மணலும் தகிக்க
மொட்டைப் பனைகள் இன்னும் அப்படியே நிற்கின்றன
நாமும்தான்.
ஒரு கொலைக்கும் விசாரணையில்லை
நியாயமில்லை
தீர்ப்பில்லை தோழ.
ஏதொன்றும் எந்தக் கணக்கிலும் இல்லாமல் காலமாகிற்றா?
அந்தக் காலமும் நம் கண்ணீரும்
காற்றோடு கரைந்து போயிற்றுப் போமோ!
வண்ண கொடிகளில் வானுயரப் பறக்கும்
இந்த உலகத்தின் நீதியை
அதன் கருணை மிகுந்த கண்களை
எப்படிப் புரிந்து கொள்வதென்று தெரியவில்லை
உலகம் எந்தக் கொந்தளிப்புமின்றி ஆழ்துயில் கொண்டிருக்கிறது
ஆமாம், “உறங்குவது போலும் சாக்காடு..”
கொலைக்குக் கொலைதான் தீர்ப்பென்ற கால நியதி இதுவென
இந்த அலைகள் சொல்கின்றனவா
இதுவே உண்மையென இந்த மணல்வெளி உரைக்கிறதா?
***
3.
இன்று நகரம் காலவரையற்றுத் திடீரென மூடப்பட்டது
மூடப்பட்ட நகரத்திலிருந்து திடீரென பறவைகளின் குரல் உயர்ந்தது
திடீரென ஒளி கூடியது தெருக்களில்
தங்கள் வீடுகளில் உள்ள பூக்களையும் செடிகளையும் கூட
ஆச்சரியத்தோடு பார்த்தனர் எல்லோரும்
இத்தனை நாளும் எங்கிருந்தன என்று தெரியாமல்
ஏராளம் பறவைகள் சுவர்களிலும் கூரைகளிலும் வந்தமர்ந்தன.
தினமும் எல்லோரும் வீடுகளில் பொழுது முழுதும்
ஒன்றாகக் கூடியிருந்தனர்
அமைதியாகச் சமையல் நடந்தது
குளியல், பிரார்த்தனை, பரிமாறுதல், படுக்கை,
தூக்கம், பேச்சு, புத்தகம் படித்தல் எல்லாமும் கூட
மிக அமைதியாகவே நிகழ்ந்தன
காலம் வேகமிழந்து இப்படியொரு யோகம் சித்திக்கும் என்று
நேற்றிரவு கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை
அமைதியென்றால் அப்படியொரு அமைதி
தேனில் குழைத்து வாயில் ஊட்டுகிறது.
வல்லரசு சிற்றரசு எல்லாம்
இந்த அமைதியில் மயங்கியும் முயங்கியும் கிடக்கின்றன.
இப்படியே இந்த அமைதி வளர்ந்து
உலகப் பேரமைதியாகி விடுமோ என்றொரு எண்ணம் முளைக்கிறது
அமைதிக்கும் உள்ளிருத்தலுக்கும் அடையாளமாக
ஆமைகளின் சித்திரத்தை தீட்டிக் கொண்டிருக்கிறான் மகன்
ஆமைகளைப் பற்றி டிஸ்கவரிச் சனலில் ஏதோவொரு நிகழ்ச்சி
போய்க் கொண்டிருக்கிறது
Bear Grylls ஒரு ஞானியின் வாக்கினைப்போல
ஆமைகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்
ஆமைகள் எவ்வளவு அழகாக வாழ்கின்றன
எவ்வளவு அழகாக உறங்குகின்றன
ஆமைகள் மட்டுமல்ல, நண்டுகளும் எலிகளும் கூடத்தான்.
சமயங்களிலெல்லாம் வளைகளில் ஓடிச் சென்று மறைந்து விடுகின்றன.
நாங்களும் ஆமைகளாயினோம்
இது லொக் டவுண் யுகமல்லவா!
செத்துக் கிடக்கும் தெருக்களைப்போலவே
கடற்கரைகளும் உறைந்து போயின.
கடலில் அலைகள் அசைவதை ஏனின்னும் யாரும் தடுக்கவில்லை?
அரச கட்டளை பற்றியும் சமூகப் பொறுப்புப்பற்றியும்
அலைகளின் சிந்தனை என்ன?
ஊரடங்கி வீடுகளில் உறைந்திருக்கும்போது
நிலவு எப்படி மேலேறி வருகிறது?
ஆனால், அந்த நிலவு தங்கத்தில் அல்லவா உருக்கி வார்க்கப்பட்டிருக்கிறது
ஒரு தேவதூதனாகி அது நம்முடைய மடியில் இறங்குகிறது
வா வா நிலாவே அருகே வா என்று பாடுகிறோம்
இதோ எங்களோடு வந்து விருந்துண் என்று அழைக்கிறோம்
இதுதான் இன்றைய நம் விடுதலைப்பாடலா?
சேர்த்து வைத்த புத்தகங்கள் எல்லாம்
எழுந்து வருகின்றன ஒவ்வொன்றாய்
மறந்த உறவினர்கள் தொலைபேசிகளில் கொண்டாடுகிறார்கள்
மூடப்பட்ட நகரத்திலிருந்து தப்பிச் சென்றது புகையிரதமொன்று
அதைக் கண்காணிக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டில்
நாற்பது காவலரும் தலைமை அதிகாரியும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அனுமதியின்றித் தப்பிச் சென்ற புகையிரதத்தைக் கைது செய்வதற்கு
படையணியொன்றை அனுப்பி வைத்தது அரசாங்கம்.
தப்பிச் சென்ற புகையிரதமோ தலைமறைவாகி விட்டதால்
அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
தலைமறைவாகிய புகையிரதத்தைக் கண்டு பிடிக்கவில்லை என்று
அந்தப் படையணியையே நீக்கிவிட்டார் நாட்டின் அதிபர்
தற்செயலாக அதைக் கண்டு பிடித்தால்
14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று
மருத்துவ அறிவிப்புச் சொல்கிறது.
இதற்குள் அந்தப் புகையிரதம்
நகரத்தின் முடிவில் உள்ள ஆற்றில் நீராடுவதாக
யாரோ உளவுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள்.
யாருடைய கண்களிலும் சிக்காமல் நதியோடு கலந்து போகிறது புகையிரதம்.
அடுத்து வரவுள்ள தேர்தலில்
வாக்களிப்பது எப்படி என்று மறந்து போய் விட்டது பலருக்கும்.
அது கூட நல்லதுதான்.
லொக் டவுண் இப்படிப் பலதையும் மறக்கடித்து விடுவதற்கு நன்றி
மூடப்பட்ட நகரத்திற்கு யாரும் வரவும் முடியாது
நகரத்திலிருந்து யாரும் வெளியேறிச் செல்லவும் முடியாது.
மாபெரும் பூட்டோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது
இந்த நெடுங்கதவு.