தங்க.ஜெய்சக்திவேல்
வழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் தான் அது. இந்த அனுபவத்தினை யாருக்கும் சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் புரியும். இப்படியான அனுபவம் யாருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் எனது அந்தப் பயணம் மிக நீண்டது. இந்தியாவில் கரோனா காய்ச்சல் தொடங்கும் முன்னரே நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். அதுவும் 16,000 கி.மீ பயணம். நம்மூரில் டெல்லி, மும்பாய் என அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் கூலித் தொழிலாளர் முதல் ஐ.டி பணியாளர்கள் வரை அனைவரும் 144 தடையுத்தரவால், நடந்தே தங்களின் ஊர்களுக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் இருந்த சமயம் அது. ஆனால் நானோ திக்குத் தெரியாத காட்டில். நீங்கள் கேட்கலாம், எதற்காக இந்த சமயத்தில் நீ இப்படியான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று? ஆனால், அதற்கான எனது பதில் உங்களுக்கு நகைப்பினை ஏற்படுத்தலாம். நான் ஒரு பயணி. அதுவும் தொலைதூர பயணங்களை ரசித்து அனுபவிக்கும் ஒரு பயணி. அப்படியானால் இதையும் நீ அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று நீங்கள் கூறலாம். பரவாயில்லை.
வெளிநாட்டு வானொலிகளை கேட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பார்த்திருக்கலாம். ஆனால், நான் ஒரு வெளிநாட்டு வானொலிகளை கேட்கும் ரசிகன். இப்படி கேட்டுத்தான் எனக்கு பயணத்தின் மீதே பற்றுதல் வந்தது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வானொலிகள் சிற்றலையில்* நம் இல்லத்திற்கே வருகின்றது. அவற்றை நம்மிடம் உள்ள சாதாரண வானொலிப் பெட்டியில் கேட்க முடியும். நீங்கள் யாரேனும் அவற்றைக் கேட்டுள்ளீர்களா? வாய்ப்பு மிக குறைவு. காரணம், இன்று அந்த வானொலிகளைக் எடுக்கக் கூடிய சிற்றலை வானொலிப் பெட்டிகள் மார்கெட்டில் கிடைப்பதில்லை. நமக்கு தெரிந்தது எல்லாம், வானொலி என்றால் ஒன்று மட்டுமே, அது எஃப்.எம் எனும் பண்பலை வானொலிகள். இன்று நாம் யாரும் ‘வானொலி’ என்று கூட அதைக் கூறுவதில்லை. ‘ரேடியோ’ என்றால் தான் தெரிகிறது. இப்படியான ஒரு வானொலிப் பிரியன் உலக நாடுகளை சுற்றுவது ஒன்றும் அதிசயம் இல்லை தானே.
கரோனா காலகட்டத்தில் வானொலி என்ன வேண்டி கிடக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். இங்கே காலம் காலமாக அகில இந்திய வானொலி ஒலிபரப்பி வந்த 7.15 டெல்லி செய்தியையே கரோனா காரணமாக நிறுத்திவிட்டனர். அதற்கு ஏன் டெல்லி செய்தி என்று கேட்டால், நான் இன்னும் ஒரு கதை சொல்ல வேண்டும். இன்று அந்த செய்தி அறிக்கை சென்னையில் இருந்து தான் ஒலிபரப்பாகிறது, டெல்லியில் இருந்து அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகளை மட்டும் அஞ்சல் செய்தால் போதும் என்று கூறிவிட்டனர். மேலும் அனைத்து வெளிநாட்டு சேவைகளையும் ஆல் இண்டியா ரேடியோ (அகில இந்திய வானொலியைத் தான் ஆங்கிலத்தில் கூறினேன்) நிறுத்திவிட்டது. தூத்துக்குடி நிலையம் வெளிநாட்டு சேவை என்பதால் அதுவும் நிறுத்தப்பட்டது. இப்படி நம் நாட்டிலேயே கரோனா பாதிப்பு இருக்க நீ ஏன் 16,000 கி.மீ. பயணிக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.
நான் இந்த பயணத்தினை ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு இருந்தேன். அதனால் இந்த பயண திட்டத்தினை மாற்ற விரும்பவில்லை. எனது திட்டமிடல் எதற்காக என்றால், ஒரு தொலைதூர நாட்டில் உள்ள பாலைவனத்தில் இருந்து சிற்றலை வானொலிகளைக் கேட்க வேண்டும் என்பதே அது. இதனை ஆங்கிலத்தில் ‘டிஎக்ஸ்பெடிசன்’ என்று கூறுவர். எக்ஸ்பெடிசன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும், டிஎக்ஸ்பெடிசன் பற்றி அவ்வளவாக நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அதற்கு அர்த்தம், மக்கள் நடமாட்டம் இல்லாத, மின்சார வசதி, கைப்பேசி, இன்டர்நெட் என எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தித்தினை தெரிவு செய்து, அந்த இடத்தில் இருந்து தொலைதூர சிற்றலை வானொலிகளை கேட்பதற்கு பெயர் தான் டிஎக்ஸ்பெடிசன். இந்தியாவில் வேதாரண்யம், இராமேஸ்வரம், ஒடிசா எனப் பல பகுதிகளில் இது போன்ற டிஎக்ஸ்பெடிசன்களைச் செய்துள்ளேன். இந்த இடங்களைத் தேர்வு செய்வதற்கு, இங்கெல்லாம் ஒரு சிறு தீவு இருப்பதுவும் ஒரு காரணம். இப்படியாக வானொலி கேட்பதில் இருக்கும் சுகமே தனி தான். வெளிநாடுகளிலும், குறிப்பாக இலங்கை (எக்கலா), சிங்கப்பூர் (கிரான்ஜி), மலேசியா (கஜாங்), மற்றும் பிலிப்பைன்ஸிலும் (பலாவி) பயணம் செய்துள்ளேன். ஆனால் எனது கனவு ஒரு தென்னமெரிக்க நாட்டில் போய் டிஎக்ஸ்பெடிசன் செய்வது தான். அந்த கனவினை கரோனாவால் தடுக்க முடியுமா என்ன? இப்படித்தான் அந்த பயணம் தொடங்கியது.
வட அமெரிக்க நாட்டினை தெரிவு செய்ததற்கு அதன் எழுத்தாளர்களும் ஒரு காரணம். மாய எதார்த்தவாதம் அவர்களின் எழுத்தில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையிலும் இருக்கும். சிலியில் உள்ள ஒரு பாலைவனம், இந்த டிஎக்ஸிங்கிற்கு உகந்தது. அந்த பாலைவனத்தின் பெயர் ’அட்டகாமா’. அது ஏன், அந்த பாலைவனத்திற்கு சென்று தான் வானொலியைக் கேட்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நம் வீட்டில் உட்கார்ந்தே திருகினால், அனைத்து வெளிநாட்டு வானொலிகளும் கிடைக்கப் போகிறது, இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்து போக வேண்டும்? என்று கேட்டீர்களானால், அதற்கு நான் இரண்டு பதில்களை வைத்துள்ளேன். ஸ்பேஸ் ஸ்டேசன் எனும் விண்வெளி நிலையம் பற்றி அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த விண்வெளி நிலைய வீரர்கள் ஒவ்வொருவரும் ஹாம் ரேடியோ உபயோகிப்பாளர்கள். (ஹாம் ரேடியோ பற்றி விரிவாக பிறகு கூறுகிறேன்) அந்த விண்வெளி நிலையத்தில் இருந்து அதில் உள்ள விண்வெளி வீரர்கள் ஒரு குறிப்பிட்ட சிற்றலை வரிசையில் ஒலிபரப்புவார்கள். அதனை பூமியில் கேட்க ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும். ஒரு தனியார் விண்வெளி நிறுவனம், அந்த விண்வெளி ஓடத்திற்கு பொது மக்களையும் அழைத்துச் செல்ல விளம்பரப்படுத்திய போது, அதில் செல்ல பெயர் பதிவு செய்தவர்களில் எண்பது சதவீதம் பேர், சிற்றலை வானொலி நேயர்கள். இன்னொரு சம்பவம், தென்துருவத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பொது மக்களையும் அழைத்துப் போக ஒரு சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த போது அதில் பெயரைப் பதிவு செய்தவர்களில் எழுபது சதவீதம் பேர் சிற்றலை வானொலி நேயர்கள். இதில் இருந்து ஒரு உண்மை உங்களுக்கு புரிந்திருக்கும். சிற்றலை வானொலி நேயர்கள், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணிக்க தயங்கமாட்டார்கள். அதுவும் அவர்களின் வானொலிப் பெட்டியோடு. அப்படித்தான் எனது இந்தப் பயணமும் அமைந்தது.
வானொலி ஒலிபரப்பில் பல வகைகள் உள்ளன. நாம் கேட்கும் எஃப்.எம். ஒலிபரப்பில் அப்படியொன்றும் சுவாரஸ்யம் இல்லை. மேலும் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக ஒன்றும் விஷேசம் இல்லை. மத்திய அலை (மீடியம்வேவ்) ஒலிபரப்பு குறைந்த தொலைவே செல்வதால், அதிலும் எந்த ஒரு த்ரில்லிங்கும் கிடையாது. ஆனால் சிற்றலை (ஸார்ட்வேவ்) ஒலிபரப்பு என்பது தொலை தூரத்திற்கு செல்லவல்லது. அந்த ஒலிபரப்பை கேட்க அனைத்து டி.எக்ஸர்களும் விருப்பப்படுவர். (இது போன்று தொலைதூரத்தில் இருந்து வரும் ஒலிபரப்பினைக் கேட்பவர்களை டி.எக்ஸர் என்று கூறுவர். இதில் ‘டி’ என்பது டிஸ்டன்ஸ், ‘எக்ஸ்’ என்பது ஏதேனும் ஒரு தொலைதூர சிற்றலை வானொலி என்பதாகும்). நானும் ஒரு டி.எக்ஸர். அப்படியிருக்க நான் தொலைதூர நாடுகளுக்குச் சென்று சிற்றலை வானொலி கேட்பது என்பது நியாயமானதே.
நான் ஒரு டி.எக்ஸர் மட்டுமல்ல, உரிமம் பெற்ற ‘ஹாம்’ ரேடியோ ஆப்ரேட்டரும் கூட. ஆப்ரேட்டர் என்று சொன்னதும், வெயில் திரைப்படத்தில் வரும் பிலிம் மெஷின் ஆப்ரேட்டர் அல்ல. ஹாம் வானொலி என்பது, உங்கள் வீட்டில் வைத்தே இயக்கக் கூடிய ஒரு சிறிய வானொலி நிலையம் என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கும் ஒரு சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதற்கான தேர்வினை எழுதி உரிமம் பெற்ற பின்னரே ஹாம் வானொலியை நீங்கள் வாங்கவோ அல்லது ஒலிபரப்பவோ முடியும். இப்படியான சகல வித்தைகளையும் அறிந்த ஒருவனை எப்படி கரோனா தடுக்க முடியும். மேலும், இந்தப் பயணத்திற்கு நான் போட்ட முதலீடும் கொஞ்சம் அதிகம். அப்படித்தான் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது.
திட்டத்தின் படி மார்ச் 7 சென்னையில் இருந்து எனது பயணம் தொடங்கியது. எனக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டேன். அதில் குறிப்பாக டெக்சன் பி.எல் 380 டிஜிட்டல் வானொலிப் பெட்டி, லாங் வயர் ஆண்டனா, டி.எக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இவற்றில் அடக்கம். விமான நிலையத்தில் நுழையும் போதே ஒரு சிக்கல். எனது பேக்பேக்கை சோதனை செய்த அதிகாரி, ‘இது யாருடைய பை’ என்று கேட்டு, எனது பையைத் தூக்கி காட்டினார். ‘என்னுடையது’ என்று கூறி வேகமாக ஓடினேன். ‘இதில் என்ன உள்ளது?’ என்றார். ‘வானொலிப் பெட்டி’ என்றேன். ‘திறந்து காட்டுங்கள்’ என்றார். இன்னும் அரை மணி நேரமே விமானம் புறப்பட மீதியுள்ளது. வேக வேகமாக திறந்து காட்டினேன். டெக்சன் வானொலிப் பெட்டியை மட்டும் அவரே கையில் வாங்கி அதை அந்த லெதர் பவுச்சில் இருந்து வெளியே எடுத்துப் பார்க்க முற்பட்டார். ஆனால் அது அவ்வளவு எளிதாக வெளியே வரவில்லை. அதற்குள் இன்னும் இரண்டு மெஷின் கன் ஏந்திய இரண்டு போலீஸ்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அவர்களில் ஒருவர், பவுச்சை விட்டு வெளியே எடுக்கும் போது, அந்த ரேடியோவின் ஆன் பட்டனை அழுத்திவிட்டார், வால்யூமும் அதிமானதால் ‘டர்ர்ர் டர்ர்ர்’ என்று பயங்கர சத்தம். திடீரென்று அதிகமான சத்தம் கேட்டவுடன், அருகில் இருந்த இரண்டு மெஷின் கன் எமகாதகர்களும், என்னை நோக்கி அந்த மெஷின் கன்னை திருப்பி டிரிக்கரில் கையை வைத்தனர். ஒரு நொடியில் எனது உயிர் போவதாய் இருந்தது. நல்ல வேளை நானும் கொஞ்சம் சுதாரித்தேன். என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த வானொலிப்பெட்டியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சுதாரித்த இரண்டு பேரும் ஒரு சேர ‘என்ன இது?’ என்றனர். ‘ரேடியோ’ என்றேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், இது டிஜிட்டல் வானொலி பெட்டி என்பதால் நிறைய பட்டன்கள் இருக்கும். (சந்தேகம் இருப்பவர்கள் ‘டெக்சன் பி.எல். 660’ என்று கூகுள் ஸர்ச் செய்து பார்த்துக் கொள்ளலாம்). நல்ல வேளை எனது லக்கேஜில் உள்ள சோனி ஐ.சி.எஃப். 2010டி யை எடுக்கச் சொல்லவில்லை. அந்த டெக்சனில் டிஜிட்டல் டிஸ்பிளே இருப்பதால், அதில் டைம் ஓடிக்கொண்டு இருந்தது. அதுவும் அப்போதைய நேரம். அதனால் அந்த போலீஸ்காரருக்கு இது ஏதோ டைம் பாமோ என்ற சந்தேகத்தில் என்னைப் பார்த்தார். ‘எங்கே, வைத்துக் காட்டு’ என்றனர். எனது நேரம், அப்பொழுது பார்த்து அந்த ரேடியோ, வயர்லஸ் அலைவரிசையில் இருந்ததால், அந்த விமான நிலையத்தில் போலீஸ்காரர்கள் பேசும் பேச்சு அதில் கேட்டது, இதனால் இன்னும் என் மேல் சந்தேகம் வலுக்கொண்டது.
அந்த டெக்சனில் எப்படி அந்த போலீஸ்காரர்களின் பேச்சு கேட்டது என்று நீங்கள் கேட்கலாம். அந்த வானொலிப் பெட்டியானது காற்றலையில் பரவியிருக்கும் அனைத்து வித ஒலி அலைகளையும் எடுக்கக்கூடியது. சொல்லப்போனால், விமானத்தில் பைலட் பேசும் பேச்சு, கப்பலில் இருந்து கேப்டன் பேசும் பேச்சு, டைம் சிக்னல்கள் என அனைத்துவிதமான ஒலிபரப்புகளையும் கேட்கும் வசதி கொண்டது அந்த டெக்சன் டிஜிட்டல் வானொலி. அப்படித்தான் அன்றைய தினம் விமான நிலையத்தில் உள்ள போலீஸ் அலைவரிசை கேட்டது.
அந்த ஒலிபரப்பினைக் கேட்ட பிறகு அவர்களது கவனிப்பே வேறு மாதிரி இருந்தது. எனது அனைத்து உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களின் உயர் அதிகாரியின் அறைக்கு சகலவித மரியாதைகளுடன் அழைத்துச் சென்றனர். அந்த உயர் அதிகாரி இன்னும் கொஞ்சம் பெரிய மீசை வைத்திருந்தார், என்பது அவரது மாஸ்க்கை எடுத்தபின் தான் தெரிந்தது. அவரிடம் நான் யார், எதற்காக செல்கிறேன், அந்த வானொலிப் பெட்டியில் ஏன் வயர்லெஸ் அலைவரிசை இருக்கிறது என்பதையெல்லாம் விளக்கியதோடு, எஃப்.எப். வானொலி ஒன்றினை வைத்துக் காட்டிய பின்னர் தான் அவர்களுக்கு கொஞ்சம் என் மீது நம்பிக்கை வந்தது.
‘தி இஸ் த லாஸ்ட் கால் ஃபார்…’ என்ற அறிவிப்பு எனது பெயரைக் கூறி ஒலித்துக்கொண்டு இருந்தது. துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டம் தான், அப்பொழுது தொடங்கிய ஓட்டம் மார்ச் 27 வரை ஓடியது. மூச்சிரைக்க ஏறிய அந்த விமானத்தில் மும்பை சென்றேன். செல்வதற்கு முன்பே எனது டி.எக்ஸ் நண்பர்கள், எதற்கு இந்த விஷப்பரீட்சை என்றனர். நாம் பார்க்காத விஷப்பரீட்சையா என்று கூறி மார்தட்டி கிளம்பியது கரோனா சமயத்தில் எவ்வளவு சிக்கல் என்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் செக்யூரிட்டி செக்கில் உள்ளவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து பீதியைக் கூட்டினர். அங்கேயும் இந்த டிஜிட்டல் ரேடியோ பிரச்சனை வரக்கூடாது என்று முடிவு செய்து, அதை லக்கேஜில் ஏற்கனவே உள்ள சோனியுடன் போட்டுவிட்டேன். இன்னும் நம் பயணமே தொடங்கவில்லை, இப்பொழுதே இப்படியா? அதற்கு காரணம், சீனாவின் வூகான் மாகாணத்தில் கரோனா கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் ஏறும் வரை இது போன்ற மாஸ்க் அணிந்தவர்களை தொடர்ந்து பார்த்தவண்ணம் சென்றேன். நாமும் மாஸ்க் வாங்கியிருக்கலாமோ என்று ஒரு எண்ணம்.
மார்ச் 7ல் எனது பயணம் தொடங்கினாலும், நான் சிலியின் தலைநகர் சான்டியாகோவிற்கு மார்ச் 15 தான் போய்ச் சேர்ந்தேன். ஒரே விமானம் கிடையாது என்பதால், எனது பயணத்திட்டத்தினை மும்பையில் இருந்து துபாய், பிரான்ஸ், அமெரிக்கா வழியாக சென்றேன். சிலியில் இருந்து திரும்பிவரும் பொழுது பிரேசில், எத்தியோப்பியா வழியாக மும்பை வர திட்டமிட்டு இருந்தேன். அதற்கு காரணம், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நாள் தங்கல், கொஞ்சம் டி.எக்ஸிங் செய்யவும் வாய்ப்பாக இருக்கும்.
துபாய் விமான நிலையத்தில் அனைவரையும், சானிட்டைஸர்களால் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதித்தனர். ‘நாங்கள் அனைவரும் ஒரு வித பயத்தில் தான் இங்கே பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்’ என்று விமான நிலையப் பணியாளர்கள் கூறியது கொஞ்சம் பயத்தினை கூட்டியது. அதன் பின் அங்கே இருந்து வெளியே வந்து ஒரு நாள் தங்குவது எனத் திட்டம். துபாயில் மக்கள் அனைவரும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். நான் கால் டேக்சியில் ஏறிய போது, அதில் உள்ளூர் பண்பலை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த வானொலியின் பெயர் ரேடியோ சலாம். 106.5 மெ.ஹெட்சில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆச்சர்யம் என்னவெனில் அது தமிழ் வானொலி. ஓட்டுனரின் முகத்தினை உற்றுப் பார்த்தேன், அவர் தமிழர் அல்ல, பின் எப்படி தமிழ் வானொலியைக் கேட்கிறார்? கேட்டே விட்டேன். ‘நீங்கள் ஏன் தமிழ் வானொலியைக் கேட்கிறீர்கள்?’ இது ஆங்கிலத்தில் நான் கேட்ட கேள்விக்கு அவரின் பதில், ‘இந்திய இசை எனக்குப் பிடிக்கும், குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான்’ என்றார். இப்பொழுது புரிந்தது. அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. வானொலியில் பாடல்களுக்கு இடையில் கூறிய முகவரியைக் குறித்துக் கொண்டேன். ரேடியோ ஸ்பைஸ் புஜைராவில் தமிழ் ஒலிபரப்பினை செய்வதாக அவர் கூறினார். ‘தமிழ் எஃப்.எம்’ தெரியுமா? என்று கேட்டேன். கேட்ட மறுநொடி 89.4 மெ.ஹெட்சில் வைத்தேவிட்டார். துபாயில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் வானொலி இந்த ‘தமிழ் எஃப்.எம்.’ மட்டுமே.
வெளிநாட்டுப் பயணங்களில், நான் நகரின் வெளியே எந்தவித ஆரவாரமும் இல்லாத இடத்தில் தான் அறை எடுப்பது வழக்கம். அதற்கு காரணம் அப்படியான இடங்களில் தான் எந்த வித இடையூறும் இல்லாமல் வானொலிகளைக் கேட்க முடியும். அறைக்கு வந்தபின் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்கவில்லை. டெக்சனை ஸ்கேனிங் மோடில் போட்டுவிட்டு முகத்தினை கழுவியிருப்பேன், அழைப்பு மணி அடித்தது. யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் கதவைத் திறந்தேன். வந்திருந்த நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் அல் தாபயாவில் இருந்து வருவதாகக் கூறினார். அல் தாபயா தான் ஐக்கிய அமீரகத்தில் உள்ள உயர் சக்தி சிற்றலை ஒலிபரப்பு நிலையம் உள்ள இடம். இங்கு இருந்து தான் பிபிசி உலக சேவை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஒலிபரப்பு செய்கிறது. நான் இங்கே இருப்பது எப்படி அந்த அல் தாபயா பணியாளருக்கு தெரிந்தது? என்று குழம்பிய போது, அவரே சொன்னார், நான் வருவதை முன்கூட்டியே எனது துபாய் நண்பர் கூறியதாகவும், தானும் ஒரு டிஎக்ஸர் என்பதால், என்னை நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். நான் துபாய் வருவதை இங்கே ஒரு பண்பலை வானொலியில் பணியாற்றும் எனது பால்ய நண்பரிடம் சொல்லியதன் விளைவு இது. எனது நண்பர் தான் இந்த ஹோட்டலை புக் செய்தது. எனக்கு பேசுவதற்கு கால அவகாசம் குறைவு என்பதை அறிந்து கொண்ட அந்த நண்பர், நான் விரும்பினால் என்னை அந்த அல் தாபயா உயர் சக்தி ஒலிபரப்பி தளத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறினார். ஆனால் நேரம் இன்மையால் நான் இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூறிவிட்டேன். இருப்பினும் அந்த ஒலிபரப்பு தளம் பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டேன். தற்சமயம் அந்த ஒலிபரப்பு தளத்தில் நான்கு 500 கிலோ வாட் உயர் சக்தி கொண்ட சிற்றலை டிரான்ஸ்மீட்டர்களும், 800 கிலோவாட் சக்திகொண்ட ஒரு மத்தியலை டிரான்ஸ்மீட்டரும் இருப்பதாகவும், இவற்றை இங்கிலாந்தின் பாப்காக் மீடியா சர்வீசஸ் பராமரிப்பு செய்து வருவதாகவும் கூறினார். இதற்கு இடையில் டெக்சன் தனது ஸ்கேனிங்கை முடித்து இருந்தது.
ஐக்கிய அமீரக அரசு, சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது, வானொலிப் பெட்டியை ஸ்கேன் செய்த போது தான் அது நினைவுக்கு வந்தது. தற்சமயம் அங்கே எஃப்.எம். வானொலிகள் தான் அதிகம் என்று வந்திருந்த நண்பரும் கூறினார். அதனால் எனக்கு அன்று கிடைத்ததெல்லாம், ஒரு சில வெளிநாட்டு வானொலிகளின் சிற்றலை ஒலிபரப்புகள் மட்டுமே. ‘எப்பொழுது நீங்கள் துபாயை விட்டு கிளம்புகிறீர்கள்’ என்று கேட்டார். ‘நாளை நள்ளிரவு’ என்றேன். ‘அப்படியானால், நாளை முழுவதும் என்ன செய்வதாகத் திட்டம்’, ‘கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் வானொலி’ என்றேன். ‘எனக்கும் ஓய்வு தான், வாய்ப்பு இருந்தால் ஒரு சில உள்ளூர் வானொலிகளைப் பார்க்கலாம்’ என்றார். ‘கண்டிப்பாக’ என்றேன். இன்னொரு முறை யோசியுங்கள், ‘இரண்டு மணி நேரத்தில் அல் தாபயா சென்றுவிடலாம். 188 கி.மீ தான். ரோடும் நன்றாக இருக்கும்’ என்று கூறி எனது ஆசையை மீண்டும் தூண்டிவிட்டார். டெக்சனை பார்த்தேன். அவரும் பார்த்தார். சார்ட்வேவ் இன்ஃபோ இணையதளத்தில் இருந்து அல் தாபயாவில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை தனியான குறிப்பேட்டில் வரிசைப்படுத்தினேன். பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ இப்ராஹிம், டிரான்ஸ் உலக வானொலி, இப்ரா மீடியா, ஃபீபா ரேடியோ மற்றும் ரேடியோ தீவா ஆகிய வானொலிகள் இந்த ஒலிபரப்பு தளத்தில் இருந்து சிற்றலையில் ஒலிபரப்புவதாக அறிந்து கொண்டேன். நண்பர் கூறினார், ‘இவை அனைத்தினையும் நீங்கள் இங்கு கேட்க முடியாது’ என்றார். ‘ஓ, அப்படியா’ என்றேன். அது எனக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும். ‘சரி நாளை பார்ப்போம்’ என்று விடைபெற்றார். நான் ஏற்கனவே முடிவு செய்த படி அல் தாபயா பயணத்தினை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டேன். இரவு பல புதிய வானொலிகளைக் கேட்க முடிந்தது. அனைத்தினையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். ஒரு சில வானொலிகளை ஒலிப்பதிவும் செய்து கொண்டேன். அவற்றை எனது ‘சர்வதேச வானொலி’ வலைப்பூவில் வெளியிட திட்டமிட்டிருந்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாது. காலை நான்கு மணி அலாரம் அடித்ததும் எழுந்தேன். மீண்டும் டெக்சனில் பேண்ட் ஸ்கேனிங். அதன் பிறகு காலைக் கடன்கள். குளித்து முடித்து, உள்ளூர் வானொலி நிலையங்கள் ஒரு சிலவற்றைக் கேட்டேன். அவற்றை அன்றைய தினம் பார்க்கவும் திட்டம். குறிப்பாக ‘ஆட்டோ ரேடியோ (103.2), ரேடியோ மீ (100.3), ரேடியோ ஸாவா (90.5), துபாய் எஃப்.எம். (93.0), அரேபியன் ரேடியோ நெட்வொர்க் (92.0), ரேடியோ ஆசியா நெட்வொர்க், மீடியா சிட்டியில் உள்ள ஆசியாநெட் ரேடியோ மற்றும் கல்ஃப் நியூஸ் புராட்காஸ்டிங். இவை அனைத்தினையும் ஒரே நாளில் பார்ப்பது என்பது இயலாது. முடிந்தவரை பார்க்கலாம் என்று காலையிலேயே புறப்பட்டேன். வழியெங்கும் முகமூடி அணிந்த மனிதர்களைப் பார்த்ததால், நானும் ஒரு செட் என்95 முகமூடிகளை வாங்கிக் கொண்டேன். நாள் முழுதும் எவ்வளவு வேகத்தில் சென்றது என்றே தெரியவில்லை. நள்ளிரவு விமானத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் சென்று சேர்ந்தேன்.
11.55க்கு புறப்பட்ட விமானம் பாரீஸ்க்கு அடுத்த நாள் காலை 8 மணிக்குப் போய் சேர்ந்தது. அங்கே ஒரு நாள் தங்கினேன். கலைகளின் நகரம் பாரீஸ், கலைஞர்களை அப்படி கொண்டாடுகிறது. என்னைப் போன்ற வானொலி நேயர்களையும் அந்த நாட்டின் பொதுத் துறை வானொலியான ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனல்’ கொண்டாடியுள்ளது. ‘கிளப் 9516’ என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் எங்கள் பெயர் ஒலிக்காத நாட்கள் இல்லை என்று கூறலாம். பிரான்சில், இசோடன் என்னுமிடத்தில் உயர் சக்தி வாய்ந்த சிற்றலை ஒலிபரப்பிகளை ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவியுள்ளது. உலகிலேயே மிக அதிக சிற்றலை டிரான்ஸ்மீட்டர்களை கொண்ட ஒரு இடம் தான் இந்த இசோடன். இங்கு பதினேழு 500 கி.வா உயர்சக்தி கொண்ட சிற்றலை ஒலிபரப்பிகளுடன் கூடிய ஆண்டனாக்கள் உள்ளன.
பாரீஸில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள இசோடன் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்த கரோனா காலத்தில் என்னை அவ்வளவு தூரம் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிக்காது. எனவே ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனலுக்கு’ முடிந்தால் போகலாம் என முடிவு செய்தேன். தலைநகர் பாரீஸின் செடக்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த நிலையத்திற்கு செல்ல முன் அனுமதி கேட்டேன். ஆனால், அன்றைய தினம் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அறையில் தங்கி இசோடன் ஒலிபரப்பு தளத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்டேன். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹவுஸா, மன்டின்கா, போர்ச்சுகீஸ், சுவாஹிளி மற்றும் வியட்னாமீஸ் ஆகிய மொழிகளின் ஒலிபரப்புகளை அறையில் தெளிவாகக் கேட்க முடிந்தது. அடுத்த நாள் காலை மீண்டும் எனது விமானப் பயணம் தொடங்கியது.
இரவு 8.40க்கு அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு போய் சேர்ந்தேன். இந்தப் பயணம் தான் கரோனா உண்மையிலேயே பயங்கரமானது என உணர்த்தியது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் வெளிநாட்டினரை உள்ளே விட மறுத்துவந்த சமயம் அது. அதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ஆனால் என் அதிர்ஷ்டம், நான் தான் அமெரிக்காவில் நுழையும் கடைசி ஆள். அதன் பின் எந்த வெளிநாட்டு விமானங்களையும் அமெரிக்கா அனுமதிக்கவில்லை. ஆனால் வந்த விமானங்களும், ஒரு சில வெளிநாட்டு விமானங்களும் அன்றும் இயங்கிக்கொண்டுதான் இருந்தன.
தூக்கம் சரியாக இல்லாததால், உடலின் வெப்ப நிலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆட்டோ பாடி ஸ்கேனிங்கில் அதைக் கண்டுபிடித்த அந்த விமான நிலைய அதிகாரி, ‘என்னை கரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். எனது பயண விபரத்தினை, பாஸ்போர்ட் துணைகொண்டு அறிந்து கொண்டார். இப்படியான சிக்கல் எல்லாம் ஏற்படும் என்று முதலிலேயே நினைத்திருந்தேன். அதனால் மனதளவில் தயாராகவே இருந்தேன். ஆனால் பயம் யாரை விட்டது. ஒரு வேளை நமக்கும் கரோனா ‘பாஸிட்டிவ்’ என்று வந்தால், எனது நிலையை யோசிக்க முடியவில்லை. காரணம் நோய் தொற்று குணமாகும் வரை என்னை எங்கும் வெளியே விடமாட்டார்கள். தொற்று தீவிரம் அடைந்துவிட்டால், என் கதி அதோ கதி தான். விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பலரும் என்னை மட்டும் வந்து பார்ப்பதும், போவதுமாக இருந்தனர். இது ஏதோ, நான் ஒரு வேற்று கிரகவாசி போல என்னை உணர வைத்தது.
அவர்களில் ,உயர் அதிகாரி போன்று இருந்த ஒருவர் வந்து என்னை மீண்டும் விசாரித்தார். ‘எங்கே போகிறீர்கள்?’, ‘சிலி’ என்றேன். ‘தொழில் முறைப் பயணமா?’, ‘இல்லை’, ‘பிறகு எதற்காக அங்கே போகிறீர்கள்?’ வானொலி கேட்பதற்காக என்று கூறியிருந்தால், என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தது. எனவே நான், ‘உயர் கல்வி விடயமாக’ என்றேன். பிறகு சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின் வெளியே செல்ல அனுமதித்தார். அடுத்த நாள் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு’ (வி.ஓ.ஏ) போக திட்டமிட்டிருந்தேன். எந்த மாதிரியான சூழ்நிலையில், எப்படியெல்லாம் எனக்கு மட்டும் யோசனை செல்கிறது பாருங்கள்.
சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் கட்டடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே தான் ஒரு காலத்தில் தமிழ் ஒலிபரப்பானது தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. குறிப்பாக மனிதன் முதன் முதலில் நிலாவில் அடி எடுத்து வைத்த செய்தியை தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வெ.நல்லதம்பி நேரடியாக ஒலிபரப்பியதை சொல்லிக் கேட்டிருக்கிறேன். அங்கே உள்ள ‘ரேடியோ ஃப்ரீ ஆசியாவில்’ எனது நண்பர் பணியாற்றுகிறார். அவர் தான் என்னை அங்கு அழைத்துச் செல்வதாக திட்டம்.
காலையிலேயே எனது அறைக்கு வந்தார். ‘எப்படியுள்ளீர்கள்?’ என்றவாறே உள்ளே நுழைந்தார். ‘பயணம் எப்படி இருந்தது? கரோனா பீதி இல்லாமல் எப்படி உங்களால் பயணிக்க முடிந்தது?’ என்று அதிசயத்துடன் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார். அவரும் முகமூடியுடன் தான் வந்தார். எனக்கும் ஒன்று வாங்கி வந்திருந்தார். ‘நலமாக உள்ளேன், கொஞ்சம் பயம் தான், என்ன செய்ய, பயணத்திட்டம் முன்பே திட்டமிடப்பட்டது என்பதால், அதனை ஒத்தி வைக்க விரும்பவில்லை’ என்றேன். ‘அதுவும் சரிதான்’. ‘முதலில் வி.ஓ.ஏ.-விற்குள் வெளிநாட்டினரை அனுமதிக்க மாட்டார்கள் என்று தான் நினைத்தேன், பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டம், அனுமதி கிடைத்துவிட்டது’ என்றார்.
காலை உணவினை முடித்து, அவரது அலுவலக காரிலேயே இருவரும் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு’ சென்றோம். அந்த வானொலியின் சிறப்புகளில் ஒன்று, வெளிநாட்டில் இருந்து வருபவர்களை உள்ளேயே சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இதில் பல இடங்களை நேரடியாகப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. கரோனா காலகட்டத்தில் ஒரு வானொலி நிலையம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அங்கே தான் நான் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொண்டேன். எந்தவித பதட்டமும் இல்லாமல், மக்களுக்குத் தேவையான தகவல்களை மட்டுமே ஒலிபரப்பி வந்தனர். நிலையத்தினுள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருந்தனர்.
அடுத்த நாள் வாஷிங்டன் டி.சி. அருகில் உள்ள ஒரே சிற்றலை டிரான்ஸ்மீட்டர் அமைந்துள்ள இடமான ‘ரெட் லயனுக்கு’ போக திட்டமிட்டிருந்தேன். 92 மைல்கள் தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு ஒரு மணி 45 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று நண்பர் கூறியிருந்தார். ரெட் லயன் என்ற ஊரானது பென்சில்வேனியாவில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து தான் ‘டபிள்யூ.ஐ.என்.பி’ எனும் வோல்ட் இண்டர்நேஷனல் புராட்காஸ்டிங்கின் வானொலி, சிற்றலையில் ஒலிபரப்பி வருவதாக அறிந்தேன். இந்த வானொலி நிலையத்தாரிடம் அனுமதி கேட்ட போது, ‘நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள்?’ என்று முதலில் கேட்டார்கள். ‘இந்தியா’ என்றேன். அடுத்த நொடி ‘அனுமதி கிடையாது’ என்று சொல்லிவிட்டனர். அதை எனது ரேடியோ ஃப்ரீ ஆசியா வானொலி நண்பரிடம் கூறினேன். ‘நீங்கள் ஏன் அவர்களை அழைத்தீர்கள்?’ என்று கோபித்துக் கொண்டார். ‘என்னிடம் கூறியிருந்தால் நானே அனுமதி வாங்கிக் கொடுத்திருப்பேனே’ என்றார். அதன் பின் அவர்களை அழைத்துப் பேசிவிட்டு என்னிடம் வந்தார். ‘அனுமதி கிடைத்துவிட்டது, ஆனால்…’ என்று ஒரு பீடிகை போட்டார். கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதி என ‘ரெட் லயன்’ பகுதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் நான் அங்கே செல்வது என்பது, எனக்குப் பாதுகாப்பான ஒன்றல்ல என்று அந்த வானொலி நிலையத்தினர் நண்பரிடம் கூறியுள்ளனர். காரணம், அங்கே இருந்து நியூயார்க் அருகில் தான் உள்ளது, அமெரிக்காவில் மிக அதிகமானோர் கரோனா தொற்றால் இறந்ததும் நியூயார்க்கில் தான். ‘பரவாயில்லை, பாதுகாப்புடன் சென்று வருகிறேன்’ என்று கூறியும், அரை மனதுடன் சம்மதித்தார். இப்படியான ஒரு வானொலி பயணத்தினை என் வாழ்நாளில் இனியும் எதிர்கொள்வேனா என்பது சந்தேகம் தான். அடுத்த நாள் பயணம் படபடப்புடனேயே கழிந்தது.
‘டபிள்யூ.ஐ.என்.பி’ வானொலி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சிற்றலையில் ஒலிபரப்பி வருகிறது. அதற்காக அவர்களிடம் 50 கி.வா சக்தி கொண்ட ஒரு சிற்றலை ஒலிபரப்பி உள்ளது. 9265 கி.ஹெ இந்த ஒலிபரப்பினை வாஷிங்டன் டி.சியில் நன்றாகவே கேட்க முடிந்தது. எப்படியோ கரோனா பாதிப்பில்லாமல் வாஷிங்டன்னை விட்டு கிளம்பினேன். போகும் வழியெல்லாம் ஆம்புலன்ஸின் சைரன் ஒலி என்னவோ செய்தது. அது வழக்கமாக செல்லும் ஆம்புலன்ஸாக இருந்தாலும். அடுத்த நாள் இரவு, சிலிக்கு பயணம். விமான நிலையம் மீண்டும் ஒரு வகையான பீதியை ஏற்படுத்தியது. இந்த விமானத்தினை விட்டால், அடுத்து சிலிக்கு செல்ல எந்த விமானமும் இல்லை. விமானத்தில் பாதி சீட்கள் காலியாகவே இருந்தன. வந்தவர்களும் தவிர்க்க முடியாமலேயே அந்த பயணத்தினை மேற்கொள்ள வேண்டியதாக தெரிந்தது. நான் மட்டுமே, அதில் சுற்றுலா பயணியாக இருக்க வேண்டும்.
பத்து நாட்கள் சிலியில் இருப்பதாகத் திட்டம். காலை பத்து மணிக்கு சிலியின் தலைநகர் சான்டியேகோவிற்கு சென்று சேர்ந்தேன். விமான நிலையமே மயான அமைதியாக காட்சி கொடுத்தது. ‘ஏன் நீங்கள் எல்லாம் இந்த சமயத்தில் எங்களுக்கும் நோய் தொற்றினை கொண்டு வருகிறீர்கள்?’ என்ற எண்ணத்தில் அந்த விமானத்தில் வந்த எங்களைப் பார்த்தனர். அனைவரும் முகத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதும் கவச உடையை அணிந்திருந்தனர். அனைவரையும் உடல் வெப்ப சோதனைக்கு உட்படுத்தினர். அதன் பின்பே உள்ளே அனுமதித்தனர். இந்த முறை எனது உடல் வெப்பநிலை சராசரியாகவே இருந்ததால் தப்பித்தேன்.
நகரத்தின் வெளியில் வழக்கம் போல் எனது அறையை ஒரு சாதாரண ஹோட்டலில் எடுத்திருந்தேன். மக்கள் கொஞ்சம் பீதியுடன் தான் வெளிநாட்டினரைப் பார்த்தனர். நாமும் அப்படித்தானே. நம்மூரிலும் ஒரு வெளிநாட்டினரைப் பார்த்தால் என்ன செய்வோம் என்று நன்றாக தெரியும் தானே.
சிலியில் சிற்றலை வானொலிகள் எதுவும் இல்லை. அங்கே 90 சதவீத வானொலிகள் மத்திய அலையில் தான் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் எனக்கு தொலைதூர சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்க எந்த இடையூறும் இங்கே இருக்கப் போவது இல்லை. டிஎக்ஸ்பெடிசனுக்கு சிலியை தெரிவு செய்ய அதுவும் ஒரு காரணம்.
இந்த நாட்டின் மற்றுமொரு சிறப்பு, அர்ஜெண்டினாவுக்கு அடுத்து அண்டார்டிகாவை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரே நாடு சிலி. இது தெற்கு வடக்காக 4630 கி.மீ நீண்டும், கிழக்கு மேற்காக 430 கி.மீ அகலமும் கொண்ட நாடாகும். சிலியில் உள்ள இரண்டு வானொலி மன்றங்களை (டி.எக்ஸ் கிளப்) ஏற்கனவே தொடர்பு கொண்டு, அதன் தலைவர்களுக்கு நான் வருவதை கூறியிருந்தேன். அவர்களே எனக்கான தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அடுத்த நாள் காலை இந்தியாவில் என்ன நிலவரம் என்று வாட்ஸப் மற்றும் இணைய தளத்தின் ஊடாக தெரிந்து கொண்ட போது கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. சிற்றலை வானொலிப் பெட்டியில் அகில இந்திய வானொலியின் சிற்றலை ஒலிபரப்பினை டியூன் செய்து பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே கையோடு கொண்டுவந்திருந்த லாங்வயர் ஆண்டனாவை எடுத்து இணைத்தேன், கொஞ்சம் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஒரு வேளை வெளியே கொண்டு போய் இந்த ஆண்டனாவை கட்டினால், இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கிடைக்கலாம்.
நாளை அந்த வானொலி மன்றத்தினர் வந்த பின் தான், அந்த வேலையைச் செய்ய வேண்டும். அதே சமயத்தில் ’அட்டகாமா’ பாலைவனத்திற்கு செல்லவும் அவர்களோடு இணைந்து முடிவு செய்ய வேண்டும். 1625 கி.மீ. தூரத்தில் உள்ள ’அட்டகாமா’ பாலைவனத்திற்கு சான்டியேகோவிற்கு வடக்கே, அன்டபாஃகஸ்டா சென்று, அங்கே இருந்து மற்றொரு சஃபாரியை புக் செய்து தான் ’அட்டகாமா’ பாலைவனம் செல்ல வேண்டும். விமான வசதி இருந்தாலும், செலவைக் குறைக்க பேருந்தில் தான் அன்டபாஃகஸ்டா செல்ல திட்டமிட்டு இருந்தோம்.
காலை நண்பர்கள் வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் இருமிக்கொண்டே இருந்தார். அவ்வப்போது தும்மல் வேறு. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க, கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது இருவருக்கும். இன்னொரு நண்பர் அவரைப் பார்த்து, ‘டாக்டரை எதுக்கும் பார்த்துரேன்’, ‘பார்த்துவிட்டேன், வழக்கமான சளி தான் என்று டாக்டர் கூறினார்’, என்ன தான் இருந்தாலும் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கிலி தான். ‘கிளப் டிஎக்ஸிட்டா டி சிலி’ எனும் டி.எக்ஸ் கிளப்பினைச் சேர்ந்தவர்கள் தான் வந்திருந்த நண்பர்கள். அவர்களது கிளப் டி.எக்ஸர்களுக்காக ‘ரேடியோகிராமா’ எனும் மாத இதழை வெளியிட்டு வருகிறது. அந்த இதழின் சமீபத்திய மாத இதழை எனக்கும் கொடுத்தனர். ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை.
காலை உணவினை நண்பர்களுடன் அருகில் உள்ள கையேந்திபவனில் சாப்பிட்டேன். பெரும்பாலும் அனைத்து உணவுகளும் அசைவம் தான். நான் சாப்பிட்டது கேஜூல்லா. மக்காச்சோளம், உருளைக்கிழங்கு மற்றும் அரிசியினால் தயாரிக்கப்பட்ட உணவு அது. அதில் சிக்கன் சேர்த்தும் அசைவமாகவும் கொடுக்கிறார்கள். நம்மூர் பிரியாணி போன்று இருக்கிறது. ஆனால் அதில் நம்மூர் மசாலாக்கள் எதுவும் இல்லை.
காலை உணவுக்கு பின் ஒரு லாங் வயர் ஆண்டானாவை எனது அறைக்கு மேலே, மொட்டை மாடியில் அமைத்தோம். அதன் பின் கொஞ்ச நேரம் சிற்றலை வானொலிகளைக் கேட்டோம். மதியத்திற்குப் பின் உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றிற்குச் செல்ல திட்டமிட்டோம். ஆனால் ‘அதற்கு முன் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய இடம் இருக்கிறது’ என்று சொன்னார் டி.எக்ஸ் நண்பர். ‘எந்த இடம்’, ‘அசோசியேசன் டி ரேடியோ டிஃபியூசர்ஸ் டி சிலி’ என்றார். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அமைப்பு தான் சிலியில் உள்ள வானொலி நிலையங்களை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனமாகும். நம்மூர் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் போல. அங்கே சென்றால், தற்பொழுது சிலியின் வானொலிகள் எத்தனை உள்ளன, அவற்றில் எத்தனை மத்தியலை மற்றும் பண்பலை நிலையங்கள் போன்றவை பற்றி அறிந்து கொள்ளலாம். புத்தகங்கள் ஏதேனும் வெளியிட்டிருந்தாலும் வாங்கி வரலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ‘அதுவும் சரி தான், மூவரும் இணைந்தே செல்வோம்’ என்று சொன்னேன். கோர்ரீயோ பகுதியில் இருந்த அலுவலகத்திற்குச் சென்ற பின் தான் தெரிந்தது, கரோனா காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுவிட்டது என்று. இதுவே இப்படியென்றால், எப்படி வானொலி நிலையங்களுக்குப் போவது? நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு டி.எக்ஸிங் செய்வது தான். இந்தப் பயணமே அதற்குத் தானே.
வாய்ப்பிருந்தால் ’அன்டோஃபகஸ்டா’ அல்லது ’அட்டகாமா’ பகுதியில் உள்ள வானொலி நிலையங்களை அடுத்தடுத்து வரும் நாட்களில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டேன். மதிய உணவாக ‘பாஸ்டல் டி சாக்லோ’ எனும் உள்ளூர் உணவினை சாப்பிட்டேன். இது அந்த நாட்டில் மட்டுமே கிடைக்கும் தானியங்கள் மற்றும் மக்காச்சோளத்துடன் கறியை ஸ்டஃப் செய்து கொடுக்கின்றனர். சுவையான உணவு.
இரவு அன்டோஃபகஸ்டாவுக்கு எக்ஸ்பிரஸ் பேருந்தில் புறப்பட்டோம். நண்பருக்கு இருமல் அதிகமாகியிருந்தது. மாத்திரையை போட்டுக்கொண்டதாக நம்பிக்கை ஊட்டினார். தூசின் காரணமாக எனக்கு தும்மல் வந்துகொண்டே இருந்தது. நாம் தும்மக் கூடாது என நினைக்கும் போது தான், நமது மூக்கு நம நம என்று அரிக்கும். என்ன செய்ய, தும்மினேன். இப்பொழுது அவர் என்னை பார்க்க, நான் அவரைப் பார்க்க, தோள்களை குலுக்கி ஒன்றும் இல்லை என்றேன். வாழ்க்கை வட்டமானது.
அடுத்த நாள் காலையும் பேருந்து பயணம் தொடர்ந்தது. காலை உணவினை வழியிலேயே ஒரு மோட்டலில் நிறுத்தினர். அது மோட்டல் போல் இல்லை பார்ப்பதற்கு. ஏதோ ஒரு பெரிய மால் முன் நிறுத்தியது போல் இருந்தது. அவ்வளவு தூய்மையாக இருக்கும் மோட்டலை நான் பார்த்ததில்லை. நல்ல கூட்டம். ஆனால் அத்தனை கூட்டமும் அமர இடம் கொண்ட அந்த மோட்டலில் காலை உணவினை சாப்பிட்டோம்.
நான் சாப்பிட்டது ‘சம்பனடாஸ்’ என்னும் உள்ளூர் உணவு. வழக்கமாக, இது போன்ற பயணங்களில் எனக்கு உள்ளூர் உணவினை சாப்பிடுவது பிடிக்கும். என்ன ஒன்று கொஞ்சம் டேஸ்ட் வேறுவிதமாக இருக்கும். பாஸ்டரி வகையான உணவு அது. மேல்புறத்தில் இருந்த சீஸ் அந்த உணவின் சுவையைக் கூட்டியது. பஸ்ஸில் பசித்தால் சாப்பிட, கொஞ்சம் சிலியின் புகழ்பெற்ற ‘சாப்பள்ளே, நாச்சீ மற்றும் சோசோகா’ போன்ற தீனியையும் வாங்கிக் கொண்டேன்.
அன்றைய தினம் பிற்பகல் தான் அன்டோஃபகஸ்டா போய்ச் சேர்ந்தோம். சிலியின் ‘வடக்கின் முத்து’ என்று அறியப்பட்ட இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையே ஐந்து லட்சத்திற்கும் குறைவு தான். இது ஒரு துறைமுக நகரம். சுரங்கங்கள் நிறைந்த பகுதி. போலிவியாவின் ஒரு பகுதியாக 18ஆம் நூற்றாண்டில் இருந்தது. 1883 போருக்கு பின், சிலியின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. அங்கேயும் ஒரு சில வானொலிகள் மத்தியலையில் மட்டுமே ஒலிபரப்பி வருகிறது. எங்களுக்குத் தான் வானொலி நிலையங்களுக்கு செல்ல நேரமே இல்லை.
இந்தியாவை விட பின்தங்கிய நாடாக இருப்பினும், மருத்துவத்தில் முன்னோக்கியே உள்ளது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருவதை, பொது இடங்களில் பார்க்க முடிந்தது. அனைத்து மக்களும் முகமூடியை அணிந்தவாறே பொது இடங்களில் தென்பட்டனர். நாங்களும் கொஞ்சம் பாதுகாப்பாகவே இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் இருந்த மியூசியத்திற்கு சென்று வந்தோம். இரவு அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் சந்தைக்கு சென்றோம். ‘இங்கே விற்கப்படும் வானொலிப் பெட்டிகள் அனைத்தும் சீனாவில் இருந்தே வருகின்றன’ என்றார் நண்பர். ‘எங்கள் நாட்டிலும் அப்படியே’ என்றேன். அங்கே இருந்த ஒரு கடையில் வானொலிப் பெட்டிகளை மட்டுமே விற்றுக்கொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவெனில், நம்மூரிலாவது பிலிப்ஸ் போன்ற ஒரு சில உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு கிடைக்கும். அங்கு அது கூட இல்லை.
அங்கே கென்வுட், ஈட்டன், சங்கீயன், சோனி, ஐக்காம், ஜெ.ஆர்.சி, ஏ.ஓ.ஆர் போன்ற ஒரு சில சர்வதேச பிராண்ட்களையும் காண முடிந்தது. நம் நாட்டில் இந்த வானொலிப் பெட்டிகள் எல்லாம் கடைகளில் பார்க்க முடியாது. இணையத்தில் மட்டுமே ஆர்டர் செய்து வாங்க வேண்டும். இதில் இருந்தே, இங்கே இன்னும் வானொலி கேட்கும் நேயர்கள் அதிகம் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இரவு கொஞ்ச நேரம் வானொலி (டி.எக்ஸிங்) கேட்டோம். அன்றைய இரவு பல வெளிநாட்டு வானொலிகள் தெளிவாகக் கிடைத்தன. இந்தப் பேரிடர் காலத்தில் கொஞ்சமாவது தைரியமாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் வானொலி மட்டுமே. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வானொலியைக் கேட்டு உலகம் முழுவதும் கரோனாவின் தீவிரத்தினையும், இந்தியாவில் அதன் நிலைமையையும் அறிந்து கொள்வது தான் அந்த தைரியத்திற்கு காரணம்.
இன்றைய இரவு டி.எக்ஸிங்கை பயனுள்ளதாக்கியது, டென்மார்க் சிற்றலை வானொலி நேயர் மன்றம் வெளியிட்ட ‘டொமஸ்டிக் புராட்காஸ்டிங் சர்வே’ (டி.பி.எஸ்) தான். அந்த கையேட்டை கூடுதலாக இரண்டு பிரதி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அதனை அந்த நண்பர்களுக்கு கொடுத்த போது, அவர்களுக்கு அளவில்லாத சந்தோஷம். அவ்வளவு தகவல்கள் கொண்டது அந்த டி.பி.எஸ். ஆங்கர் பீட்டர்சன் 20 வருடங்களாக இந்தத் தொகுப்பை வெளியிட்டு வருகிறார். இதில் சிற்றலையில் ஒலிபரப்பும் அனைத்து உள்ளூர் வானொலிகளின் அலைவரிசை விபரங்கள் நேர வாரியாக கொடுத்திருப்பது இதன் சிறப்பு. அன்றைய தின இரவு, எப்படிப் போனது என்றே தெரியவில்லை.
அடுத்த நாள் அதிகாலையிலேயே அட்டகாமா பாலைவனம் கிளம்ப திட்டமிட்டிருந்தோம். அங்கே, மூன்று நாட்கள் தங்க திட்டமிட்டிருந்தோம். பாலைவனத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தோம். 200 கி.மீ. தொலைவுள்ள அட்டகாமாவிற்கு மினா எஸ்கான்டிடா வழியாக சென்றோம். அட்டகாமாவில் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பாலைவனத்தின் பல்வேறு இடங்களிலும் கூடாரமிட்டு இரவு முழுக்க தங்கி வானொலிகளைக் கேட்டோம். அந்தப் பகுதிகளில் எங்களைப் போலவே அமெரிக்கா, அர்ஜென்டினா, லாட்வியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இது கொஞ்சம் பயத்தினைப் போக்கியது எனக்கு.
மூன்று நாள் இரவும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாக கழிந்தது. அடுத்த நாள் அங்கே இருந்து 22 மணிநேர பயணத்தினைத் தொடங்கினோம். எக்ஸ்பிரஸ் பேருந்தில் சான்டியோகோ வந்து சேர்ந்தோம். நண்பர்கள் பிரியா விடை பெற்றுக்கொண்டனர். எனக்கு அன்றைய தினம் இரவு விமானம். பெரும்பாலான விமான நிறுவனங்கள் தனது வெளிநாட்டு சேவையை நிறுத்தியிருந்த சமயம் அது. எனக்கான விமானம் கிடைக்குமா என்று சந்தேகத்தின் ஊடாக அமர்ந்திருந்தேன். கடைசியில் நான் பயந்தது போலவே அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது அறிந்து மனம் பதறியது. கொஞ்சம் கையில் இருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டு மூச்சினை இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
அந்த சமயத்தில் அங்கே வந்த சுங்க அதிகாரிகளுக்கு என் மீது என்ன சந்தேகம் வந்ததோ தெரியவில்லை, என்னை சோதனை செய்ய வேண்டும் என்றனர். நான் ‘அனைத்து சோதனைகளையும் முடித்து தானே வந்தேன்?’ என்றேன். ‘எங்களுக்கு சந்தேகம் வந்தால், அவர்களை மீண்டும் நாங்கள் சோதனையிடுவோம்’ என்றனர். இது என்ன புது சோதனை. முதலிலேயே நான் கரோனா என்ற ஒரு பெரும் சோதனையில் இருக்கிறேன். மீண்டும் ஒரு சோதனை. எனது லக்கேஜ், கைப்பை மற்றும் பேக்பேக் என, அனைத்தினையும் சோதனையிட்டபின், ‘தங்களின் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்’ என்று கூறிச் சென்றனர். ஒரு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தேன். எனது நண்பர்கள் 16,000 கி.மீ அப்பால் இருந்தபடி மொபைலில் அழைத்தவண்ணம் இருந்தனர். ‘நிலைமை மோசமாகிறது, பாதுகாப்பாக இரு’ என்றனர். அப்பொழுது தான் தெரிந்தது கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தனது விமான நிலையங்களை மூடி விட்டன என்று.
எனக்கு இருந்த ஒரே வழி, அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த கடைசி விமானமான லத்தீன்-எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மட்டுமே. சிறிதும் யோசிக்காமல் அந்த விமானத்திற்கான கவுண்டரில் விசாரித்து, இடம் இருந்ததால் டிக்கெட் எடுத்து, ஏறிக்கொண்டேன். நினைத்த நேரத்தில் செல்லும் பஸ் பயணம் போல் ஆகிவிட்டது. பணம் தான் தண்ணீராக செலவானது. விமானத்தில் அனைவரும் பீதியில் அமர்ந்திருந்தனர். நன்றாக மூச்சினை இழுத்து விட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
கடைசி நிமிடத்தில் விமானம் ஒரு நாள் பிரேசில் தலைநகர் சாவோ பவுலோவில் தங்கிச் செல்லும் என்று கூறிவிட்டனர். வேறு வழியில்லை, தங்கித்தான் ஆகவேண்டும். எப்படியாவது இந்த தென் அமெரிக்க கண்டத்தினை கடந்து விடலாம் என்றால் முடியாது போல் இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு ஏறி இரவு ஒன்பது மணிக்கு தலைநகர் சாவோ பவுலோவுக்கு போய்ச் சேர்ந்தேன். ஒரு நாள் தங்குவதற்கான பொறுப்பினை விமான நிறுவனமே எடுத்துக்கொண்டது. விமான நிலையத்தின் அருகிலேயே தங்கினோம். இனி, அடுத்த புறப்பாடு நாளை இரவு தான் என்பதால் கொஞ்சம் ரேடியோவை டியூன் செய்தேன். பிரேசிலின் சிறப்பே மத்திய அலை வானொலிகள் தான். உலகிலேயே மிக அதிக மத்திய அலை வானொலிகள் உள்ள நாடுகளில் முதன்மையானது பிரேசில். சிற்றலை ஒலிபரப்புகளும் உண்டு. ஆனால், அது உள்நாடுகளுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. சாவோ பவுலோவிலேயே ஒரு சிற்றலை டிரான்ஸ்மீட்டர் உள்ளது. ஆனால் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால், எங்கும் செல்ல முயற்சி செய்யவில்லை.
அடுத்த நாள் காலையே விமானம் புறப்பட்டது. நேராக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாபாவிற்கு சென்று சேர்ந்தேன். அங்கேயும் உடனடியாக மும்பைக்கு விமானம் கிடைக்கவில்லை. அடுத்த நாள் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாக இருந்தது. அதனால் அருகில் உள்ள கடைவீதிக்குச் சென்று வந்தேன். கொஞ்ச நேரம் சிற்றலை வானொலிகளை கேட்டேன். அதில் குறிப்பாக ‘ரேடியோ எத்தியோப்பியா’ என்று அழைக்கப்பட்ட ‘எத்தியோப்பியன் புராட்காஸ்டிங் கார்பரேஷன்’ இன்றும் அஃபார், அரபிக், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் சோமாலி ஆகிய மொழிகளில் சிற்றலையில் ஒலிபரப்பு செய்து வருகிறது. 7336 கி.ஹெ மட்டுமே அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இடையில் அகில இந்திய வானொலியைக் கேட்டதும் திக் என்று இருந்தது. அனைத்து வெளிநாட்டு விமானங்களும் இந்தியாவில் இறங்கத் தடை என்ற செய்தி தான் அது. உள்ளூர் டிராவல் ஏஜென்டை அழைத்து ‘மும்பைக்கு அடுத்த விமானம் எப்போது?’ என்று கேட்டேன். ‘உங்களுக்குத் தெரியாதா? இங்கே இருந்து எந்த நாட்டிற்கும் வெளிநாட்டு விமான சேவை இப்பொழுது இல்லை’ என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ‘அடுத்த சேவை எப்பொழுது இருந்தாலும் எனக்கு அழைத்து கூற முடியுமா?’ என்றேன். ‘கண்டிப்பாக கூறுகிறேன், உங்களைப் போல், இங்கே இருந்து இந்தியாவிற்கு செல்ல பலரும் கேட்டுள்ளனர்’ என்று வயிற்றில் பாலை வார்த்தார். இரவு தூக்கம் இல்லை. வானொலி தான் கை கொடுத்தது.
இரண்டு நாள் கழித்து அடிஸ்அபாபாவிற்கு இந்திய அரசே சிறப்பு விமான சேவை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. காரோனா சிறப்பு விமானம் அது. நல்ல வேளையாக டிராவல் ஏஜன்டிடம் கூறியிருந்ததால், அவர் இந்த சிறப்பு விமானம் பற்றிய தகவலை உடனடியாக தெரிவித்து உதவினார். நானும் அடிஸ்அபாபாவின் கெபாலே பகுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேரடியாக சென்று உதவும் படி கூறினேன். நல்ல வேளை ஏற்கனவே பதிவு செய்த ஒருவர் வராததால் அந்த கரோனா சிறப்பு விமானத்தில் மும்பை நோக்கிய எனது பயணம் உறுதியானது. அடுத்த நாள் அதிகாலை அந்த கரோனா சிறப்பு விமானம் மும்பை நோக்கி பயணமானது. விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே உயிர் வந்தது. இல்லையெனில் நிலைமை சீராகும் வரையில் இங்கேயே இருக்க வேண்டியது தான். கையில் காசில்லாமல் அந்த நிலையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
எனக்குத் தெரிந்து எந்த ஒரு வானொலி நேயரின் பயணமும் இவ்வளவு திரில்லாக இருந்திருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. கரோனா காலத்திய இந்தப் பயணம் மனதிற்கு ஒவ்வொரு நொடியும் புது வித அனுபவத்தினை கொடுத்தது. இந்த 20 நாட்களில் சந்தித்த நண்பர்கள், கேட்ட வானொலிகள், உண்ட உணவுகள், தங்கிய விடுதிகள் என அனைத்தும் பசுமையான கரோனா நினைவுகளாக இருக்கும். மும்பையிலேயே 24 நான்கு நாட்கள் தனிமை படுத்திக் கொண்டேன். அதன் பின் இந்தியாவே ஒரு மாதம் தனிமைப்படுத்திக் கொள்ளும் என்று சற்றும் நினைக்கவில்லை.
***
** சிற்றலை வானொலிகள் 2000 கி.ஹெ. முதல் 30,000 கி.ஹெ வரையுள்ள அலைவரிசைகளில் மட்டுமே எடுக்கக் கூடியது ஆகும். மீட்டர்களில் சொல்வதானால் 120 மீட்டர் முதல் 11 மீட்டர்கள் வரையில் இருக்கும்.
- தங்க.ஜெய்சக்திவேல் – சென்னை பல்கலைகழகத்தின் இதழியை துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆகாஷ்வாணி, ஹாம் ரேடியோ வரிசை நூல்கள், பன்முகப்பார்வையில் சீன ரேடியோ, இலங்கை ரேடியோ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வசிப்பது சென்னையில். தொடர்புக்கு – ardicdxclub@yahoo.co.in
அருமையான வரிகள் அண்ணா
தில்லான மனிதர் தான் சார் நீங்கள்..!!
💯💯💯💯