கார்த்திக் புகழேந்தி
சந்திராவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கவிழ்த்து, போர்வை, சீலை பிள்ளைகளின் துணிமணிகளை எல்லாம் அலசிப்போட்டுவிட்டு, வீட்டையும் ஒட்டடை அடித்துப் பெருக்கித் துடைத்து, வாசலில் ஊடுபுள்ளியில் தரதரவென நாலு கம்பிகளை இழுத்து முடித்து நிமிர்ந்தபோது, அக்கடாவென எங்காவது ஓடிப்போய்க் குறுக்கைச் சாய்க்கலாமென வலி விண்விண் என்றது.
சின்னக்குட்டிக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் வீட்டுக்குள் கால் தரையில் நிக்காது. பரத்திக் கொண்டு பக்கத்து குடித்தனத்திற்கு டி.வி பாக்கப் பாய்ந்துவிடும். பனங்கிழங்கு தரைக்கடியிலே பருவம் கண்டது மாதிரி எப்போ விடைத்தது என்றே தெரியாமல் திம்மென வளர்ந்து நிற்கிறாள் பெரியவள் உமா. இந்த மார்கழி வந்தால் பதினாலு தொட்டுவிடும். சின்னக்குட்டியும் அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து தானே வளர்கிறது. இத்தனைக்கும் ஆறு வருசம் இளமைதான் பெரியவளைவிட. பார்த்தால் அப்படி வித்தியாசம் பிரிக்க முடியாது. ரெண்டும் ஒரே சைஸ் பீஸ் பெனியனைத் தொள தொளவென மாட்டிக் கொண்டு அச்சில் காய்ச்சின வெல்லக்கட்டியாட்டம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடக்கும். சமயத்தில், எது முன்ன உக்காரும் எது பின்ன உக்காரும் என்று சொல்ல முடியாத வாக்கில் தத்தளித்துக் கிடக்கிறது.
பெரியவளுக்கு எங்கே விஜய் படம் போட்டாலும் மூக்கு வேர்த்து விடுகிறது. சின்னதும் அது கழுத்தைப் பிடித்துக்கொண்டே விஜய் விஜய் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு பின்னாலே ஓடுகிறது. அப்போதெல்லாம் சந்திராவுக்கு விஜயகாந்தை இவ்வளவுக்குப் பிடிக்கும். ஆனாலும் ரகசியமாக வைத்துக் கொண்டாள். எப்போதோ குமுதத்தில் வந்த விஜயகாந்தின் அகண்டு சிரிக்கும் படத்தைத் தன் தையல் மெஷினின் நூல்கண்டு பெட்டிக்குள் ஒட்டி வைத்திருந்தாள். எங்க நேரிலேயேவா வந்துவிடப் போகிறான் என்கிற ஒரு தைரியத்தில் ஒன்றிரண்டு முறை முத்துக் கொடுத்துக் கொண்டதும் உண்டு. எப்படித்தான் மாரீஸ்வரிக்கு மூக்கு வேர்த்ததோ விசயத்தைக் கண்டுபிடித்து விட்டாள்.
மாரீஸ்வரி சந்திராவுக்கு நேர் மூத்தவள். ஆள் சிவப்பு முள்ளங்கிக்குப் பக்கத்து வைத்து ஒத்திக் கொள்ளும் நிறம். கன்னம் ரெண்டு பப்பாளியாட்டம் பழுத்து சிவந்து கிடக்கும். அதில் ஒன்றிரண்டு பரு எட்டிப் பார்த்துவிட்டால் குய்யோ முய்யோ என்று வீட்டையே ரெண்டு பண்ணிவிடுவாள். வட்டுக் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டு கன்னத்தைப் பிதுக்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். பிறக்கும்போது என்ன கவனிக்காமல் விட்டார்களோ தெரியவில்லை, காய்ச்சல் வந்து வலதுகால் மெலிதாகச் சூம்பிவிட்டது அவளுக்கு. நடக்கும்போது காலைச் சரித்து சரிந்து அரைக்கோபுரமாகத் தெரிவாள். அதனாலே வெளியே தெருவுக்கு என்று எங்கேயும் அவள் போனதில்லை. காய் வாங்க கமருகட்டு வாங்க என்று எல்லாத்துக்கும் சந்திராதான்.
மாரீஸ்வரிக்கு ராம்கி என்றால் உயிர். ஏட்டிக்குப் போட்டியாய் எப்போதாச்சும் சந்திரா அவளோடு மல்லுக்கட்டுபோது, அவள் விஜயகாந்தும் சந்திராவைப் போலக் கட்டக் கருப்பு என்று வெருட்டுவாள். பதிலுக்கு இவள் ராம்கி மட்டும் என்னவாம், கருப்பா இருக்க நிரோசாவைத் தானே கட்டிக்கிட்டான் என்று சண்டை கட்டுவாள். ‘இனி ஒருதரம் நிரோசாவ கருப்புன்ன அவ்ளோதான்’ என்றபடியே செம்பை ஓங்கிக் கொண்டு அடிக்க வருவாள் மாரி. ‘நீ மட்டும் என் ஆளச் சொல்லுற’ இவள் பதிலுக்குக் கடித்து வைக்க ரெண்டுபேரும் தலைமுடியைச் சிக்காக்கிக் கொண்டுதான் அடங்குவார்கள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சந்திராவுக்குச் சிரிப்பாய் வந்தது.
அப்பவும் சரி இப்பவும் சரி வீட்டில் டீவி என்கிற ஒரு வஸ்து இருந்ததே இல்லை. வாரமானால் எட்டு ரூபாய்க்கு கல்கண்டு, குமுதம், ராணி முத்து, கண்மணி என்று வரும். ஆள்மாற்றி ஆள் சுற்றிச் சுற்றி வந்து பிடிங்கிக் கொண்டுபோய்தான் வாசிக்கணும். ஒளியும் ஒளியுமெல்லாம் பார்க்கணும் என்றால் பக்கத்து வீட்டுத் திரணையில்தான் ஒண்ட வேண்டும். காலனியில் சாந்தி அக்கா வீட்டில் மட்டும்தான் டீவி இருந்தது. மரக்கதவு போட்ட பெட்டிக்குள் அம்சமாய் இருந்துகொண்டு வசீகரிக்கும். எப்போது சாந்தி அக்கா கொழுந்தன் காலேஜ் படிப்பதற்காக அவர்கள் வீட்டில் வந்து தங்க ஆரம்பித்தானோ அப்பயிருந்து, ஜாக்கெட்களுக்கு ஊக் தைத்துக் கொண்டே அவர்கள் வீட்டில் போய் டீவி பார்ப்பதும் நின்று போனது.
காலனியில் ரொம்பக் காலமாக ஒரே குடித்தனத்தில் வாடகைக்கு இருந்தது சந்திரா குடும்பம்தான். எட்டுக்குப் பத்தில் ஓர் உள்ளறை, அதில் இடைமறுத்து சின்னதாக ஒரு நெத்தி உயரத் தடுப்பு, வாசலிலே அடுப்படியும், திர்ணையும். பீடி சுற்றவும், ஊர்க்கதை பேசவும் யாராவது ரெண்டு ஆள் அந்தத் திர்ணையே கதியாயக் கிடப்பார்கள். அவர்களை உட்கார வைத்துக் கதை பேசிக் கொண்டே வீட்டில் உள்ள நாலுபேருக்கும் சோறும் குழம்பும் பொங்கி ஆக்கி இறக்கிவிடுவாள் கோமு ஆச்சி.
மாரியையும் சந்திராவையும் ‘தாயில்லாப் பிள்ளைங்க’ என்றாலும் மண்டையில் கொட்டிக் கொட்டித்தான் வளர்த்தாள் கோமு ஆச்சி. தான் பெத்த ஐந்தில் ஒரே பெண் பிள்ளையான பரிமளத்துக்குக் காசநோய் வந்தபோது அவளைக் காப்பாற்றுவதற்காக கோமு ஆச்சி அலைந்து திரியாத வைத்தியம் இல்லை. எந்த புண்ணியமும் கைகொடுக்காமல் போக முப்பது வயது மகளைத் துள்ளத் துடிக்கத் தூக்கிக் கொடுக்திருந்தாள். அப்போதிருந்து மகன்கள் யார் வீட்டிலும் தங்காமல் தன் மகள்வழிப் பேத்திகளை வளர்ப்பதற்காகக் கிளம்பி வந்து விட்டாள்.
என்னதான் மாமியார் வந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டாலும், அந்த சின்ன வீட்டில் தானும் கூட மாடப் படுத்துறங்குவதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொண்ட சுப்பிரமணியம் தான் மார்க்கெட்டில் துணி தைக்கும் கடையின் பெஞ்சையே தன் குடியிருப்பாக மாற்றிக் கொண்டார். நல்ல நாள் பொல்ல நாளுக்கு அவர் வீடுவந்தால் வாசல் திர்ணையில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் மடியில் சிதறியிருக்கும் பீடித்தூளை சுளகில் உதறிவிட்டு, எழுந்து அவரவர் வீட்டை நோக்குக் கிளம்புவார்கள். பிறகு அது அவர் நிலைகொள்ளும் இடமாக அந்த நாள் முழுக்க மாறியிருக்கும்.
இப்படியே தீர்ந்தது வருசங்கள். அந்த ஏழு வீட்டுக் காம்பவுண்டில் வாடகைக்கு வந்தவர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருந்தார்கள் மற்றபடி இவர்கள் வாசலுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அக்கம்பக்கத்திலும் ஒருத்தரொருத்தர் பழகி பாசங்காட்டி, கோதத்த, செம்பகம் மைனி, விமலாக்கா என்று உறவு சொல்லி அழைத்தவர்கள் கூட திடும் திடுமெனப் புதுவீடு மாறிக் கிளம்பிவிடும்போது நெஞ்சை அள்ளிப் பிய்த்துப் போட்டது போல இருக்கும் மாரிக்கும் சந்திராவுக்கும். எதோ சொந்த பந்தம் பிழைப்பு பிழைக்க நாடுதாண்டிப் போவதுபோல நாலு நாளைக்கு அக்காளும் தங்கச்சியும் கண்ணீர் வடித்துக் கொண்டே உண்ணாமல் பரயாமல் கிடப்பார்கள். பிறகு பொங்கலுக்கு தீபாவளிக்கு கார்டு எழுதி அனுப்புவார்கள். அதுவும் கொஞ்ச காலத்துக்குள் நீர்த்துவிடும். பிறகு புதிய வருகை, புதுப் பழக்கம், புதிய சொந்தம் என்று அலையடிக்கத் துவங்கிவிடும்.
சந்திரா, கதிரவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இந்தத் திருப்பூர் உப்புத் தண்ணிக்கு வாக்கப்பட்டு வந்தபோதும் கூட அப்படித்தான் அழுது வடிந்துகொண்டிருந்தாள். ஏழு வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளி உலகம் எதுவுமில்லை என்று இருந்தவளை, அடிவேரோடு பிடுங்கி இங்கே கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டார்களே என்று வாய்விட்டு அரற்றாதது தான் விட்டுவைத்த பாக்கி. எல்லாத்துக்கும் மேலே, அடியோ புடியோ அது மாரீஸ்வரி முகத்தில்தான் அவளுக்கு விடியணும். அப்படியாக வளர்ந்தவளை எக்கேடும் கெட்டுப் போ என்று விரட்டி விட்டது மாதிரி இங்கு தள்ளிவிட்டதால் கோமு ஆச்சி மீதும்கூட தின்றுசெரிக்க முடியாத கோபம் ஒன்று அவள் கொதவளைக்குள்ளே முட்டிக் கொண்டு கிடந்தது.
சந்திரா கதிரேசனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து இன்றோடு பதினாலு வருசம் பூர்த்தியாகிறது. முன்பு காங்கேயம் ரோட்டில் இருந்த வீடு இடம் பத்தவில்லை என்று வெள்ளியங்காட்டுக்கு குடிமாறி மூணு வருசம் தான் ஆகியிருக்கும். அதுவும் பிள்ளைகளுக்காகத் தனிக் கக்கூஸ் இருக்கும் வீடுதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சண்டைபோட்டுத்தான் மாறினாள். கதிரேசன் சந்திராவைப் பெண் பார்க்க வந்திருந்தபோது கூட, வரக்காப்பி போட்டுக் கொடுத்து, ஆள்மாற்றி ஆள் வாய் ஓயாமல் ஊர்ப்பேச்சுப் பேசிக் கொண்டிருக்க, இரும்பு ஸ்டூல் போட்டு அவர்களுக்கு நடுவாந்திரமாக உட்கார்ந்திருந்தவனை பொண்ணுகிட்ட பேசணும்னா போய் பேசிப்போட்டு வாப்பா என்று கூடத்திலிருந்து யாரோ சொன்னபோது, ’ஒங்க வீடு ஓட்டு வீடா மட்டப்பா போட்டதா, கக்கூஸ்க்கு கதவு போட்டதா’ என்றெல்லாம் தான் விசாரிக்க நினைத்தாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு கால்நடுங்கித் தொடை கிடுகிடுக்க ஒரு பேச்சும் பேசமுடியாமல் சுவரோடு ஒட்டின பல்லிபோல கடைசி வரைக்கும் நின்றுகொண்டாள்.
கதிரவனின் குடும்பத்தினர் தண்டுகாரன்பாளையத்தில் வீட்டோடு சேர்த்து பெட்டிக் கடை வைத்திருந்தார்கள். வளையோடு போட்ட பெரிய வீடுதான். பழைய தொழுவத்தில் மாடு மாடாய் வளர்த்து, மடி மடியாய் கறந்து, வண்டி வண்டியாய் சாணி அள்ளிப்போட்டு, உட்கார்ந்து தின்றிருக்கிறார்கள். இப்போது எருவுக்கு ஏழு வீதி நடக்கணும்.
”என்ன மாடு வச்சாங்களோ.. எல்லாமும் கொண்டா கொண்டானு வரக் காப்பியால்லா கேக்குதுங்க” என்று வெள்ளைச் சீலை ஆச்சி கல்யாணம் முடியுமட்டும் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்க மாரீஸ்வரி வாய் பொத்திச் சிரித்துக் கொண்டாள்.
’அக்கா இருக்குமுன்ன தங்கச்சிக்குக் கலியாணமா” என்று கேட்காதவர்கள் யார்தான் ஏழு வீட்டுக் காம்பவுண்டைக் கடந்து போனார்கள். மாரீஸ்வரி எல்லாரின் வாய் ஒழுக்கையும் தையல் மிஷின் சத்தத்தில் மடித்துத் தைத்து விட்டாள். ஆளும் அமுக்குணிதானே. எனக்கு கல்யாணமே வேணாம் என்று தன் ஒற்றைக் காலில் உட்கார்ந்தே சாதித்துவிட்டாலே படுபாவி. கோமு ஆச்சி வடித்த கண்ணீரெல்லாம் அவள் கண்ணுக்கு ஒரு ஈரமாகவேபடவில்லை. அப்பாவும்தான் அவள் குரலுக்கு மேலே எந்திரித்துப் பேசிவிட்டாரா என்ன>
“ஒழுங்கா அவளுக்கு மாப்பிளை பாக்க வழியப்பாரு. சீட்டு கீட்டப் போட்டு அவளை இங்கருந்து அனுப்பு..” என்று அவரை அதட்டாத குறைதான்.
”நீ பண்ணலாட்டி போ, என்ன ஏன் வெரட்டப் பாக்க?” என்று சந்திரா எரிந்து விழுந்தபோது, “வந்தம்னா வாய் இருக்காது” என்று கத்தரிக்கோலை காண்பித்து உக்கார்ந்த மேனியில் அரட்டிவிட்டாள். சொல்லப்போனால், கதிரவனை, ”உனக்குச் சரியா வருவாருபில.. சரின்னு சொல்லு” என்று அவள்தான் தெரிந்தெடுத்தாள். சந்திராவுக்கு பொங்கல், தீபாவளிக்கெல்லாம் அளந்து அலங்கரித்து மாரீஸ்வரி தைத்துக் கொடுக்கும் பட்டுப் பாவாடைச் சட்டை மாதிரிதான் கதிரவனும் அவளுக்குக் கிடைத்திருந்தான்.
”ஒனக்குன்னு மனசுல கல்யாண ஆசையே இல்லயாபில..”
”ஏன்ட்டி கேக்க..”
” சொல்லு…”
“என்னத்த ஆசப்படணும்ங்க..”
”கல்யாணம்லாம் பண்ணி, பிள்ளேல்லாம் வேணும்ட்டு..”
“அதுக்குத்தான் நீ இருக்க. நீ பெத்து என்ட கொடுத்துருவல்லா..”
“கேக்கதுக்கு ஒழுங்கா பதில் சொல்தாளா பாரு..”
“அந்தச் சிறுக்கி மனசுக்குள்ள ஊரயே ஒளிச்சி வச்சிருப்பா..”
“தெ.. நீ ஏன் சும்மா ஊடைல வார.. கெழவி.”
“ஏம்ட்டி நீங்க ரெண்டு கெழவிகளும் ஒண்ணா கழுத்தக் கட்டிக்கிடக்க என்ன கெழவிங்கியோ..”
“நீ சொல்லுங்கன்லா..”
“எனக்கென்னப்ல.. அதெல்லாம் தோணவே இல்ல. என் ஆளுதான் ஏற்கனவே என்ன விட்டுட்டு உன்ன மாதி ஒரு கருத்தவளக் கட்டிக்டாம்லா..”
“மூஞ்சி.. நீ பண்ணாட்டி எனக்கும் வேணாம்.”
“எடு வெளக்கமாத்த..”
சாலைக்குமரன் சன்னிதியில் தாலிகட்டு முடிந்ததும், காசி விநாயாகாவில் பதினோரு மணிக்கெல்லாம் மதியச் சாப்பாடு சொல்லியிருந்தார்கள். ஏழுவீட்டுக் காம்பவுண்டின் கடைசி வீட்டு ஆட்டோ டிரைவர் முத்து அண்ணன் தான் பெண் வீட்டு, மாப்பிள்ளைச் சொந்தங்களை முகச்சாடை நியாபகம் வைத்து டோக்கன் விநியோகித்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்த அன்றைக்குச் சாயங்காலமே ஜங்ஷனில் இருந்து திருப்பூருக்கு ட்ரெய்ன். மறுவீடு விருந்து எல்லாம் கனவு மாதிரி ஒரேநாளில் முடிந்துபோன ஊரிலில்லாத அதிசயக் கல்யாணம் சந்திராவுடையது.
”திருநல்வேலியில இருந்து எப்படி இங்க கல்யாணம் பண்ணி வந்தீங்க..”
பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே தனம் அக்கா, கேட்ட கேள்வி இதுதான்.
“ஏன் வரக்கூடாதா?” கருக்கென்று முகத்தில் அடித்தமாதிரிதான் பதில் கொடுத்தாள் சந்திரா. அன்றைக்கு அவள் இருந்த கொதிப்பு அப்படி. கல்யாணம் முடிந்த மரா வாரத்திலே மாமனார் வீட்டின் மூத்த மருமகள், ”உம்மவன் கல்யாணத்துக்கு செஞ்ச என் செலவுப் பைசாவை எடுத்து வை” என்று வாசலில் நின்று கொண்டாடி விட்டாள். காலையில் பேச்சாக ஆரம்பித்த சண்டை மதியத்தில் கைகலத்து, சாயங்காலத்தில் எல்லாம் சந்திராவுக்கு, மாரீஸ்வரி ஆசை ஆசையாக வாங்கிப் போட்டக் கம்மலையும், கழுத்துச் செயினையும் கழற்றிக் கொண்டுபோய் கில்டுக்கடையில் வைத்துவிட்டு, அத்தோடு அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று தண்டுகாரன்பாளையத்திலிருந்து, கதிரேசன் வேலைபார்த்து வந்த பனியன் கம்பனிக்குப் பக்கத்திலே குட்டியாக வீடு ஒன்று வாடகைக்குப் பார்த்து மாறி வந்திருந்தாள்.
அதே வாரத்தில் நட்டநிசியில் கழுத்துப்பக்கத்து முடியை விலக்கிவிட்டுக் கொண்டே, ”வீட்டில தனியாதானே இருக்க, கம்பெனில பீஸ் வெட்ட வந்தா…” என்று கதிரவன் இழுத்ததும், அன்றைக்குக் காலையிலே கொண்டையை முடிந்து கொண்டு வெறுங்கழுத்தோடு வேலைக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.
என்ன ஆங்காரங்கள் கொண்டிருந்தும் என்ன.. பொம்பளை மனசாச்சே நாள்பட நாள்பட ஒரு சுதாரிப்புக்கு வந்தாக வேண்டியிருக்கிறதே. வேலையும் சரி தனம் அக்காவும் சரி பழகவும் பேசிக்கொள்ளவும் எளிதான விஷயங்களாக இருந்தது சந்திராவுக்கு அந்த ஊரில் வாய்த்த ஒரே கொடுப்பனை. கதிரவன் காண்ட்ராக்டருக்கு கணக்கு வழக்கு முடித்து எழுதிக் கொடுப்பது வரைக் காத்திருக்க வேண்டாம் என மினிபஸ் பிடித்து வீடுவந்து சேர கூடமாட வேலைபார்க்கும் பெண்களோடும் பொருந்திக் கொண்டாள். பேச்சுப் பழக்கம் மெல்ல வளர்ந்தும் கேள்விகள் மாறவில்லை..
”திருநல்வேலியில இருந்து எப்படி இங்க கல்யாணம் பண்ணி வந்தீங்க..”
”எங்கப்பா டெய்லர் வேலை பார்த்தாங்க… நாங்க அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் அப்படியே வேலை பழகிட்டோம். டெய்லர் மாப்பிள்ளைக்கு டெய்லர் பொண்ணு பார்க்கப்போக அப்படி விசாரிச்சு வந்ததுதான் எங்க வீட்டுக்காரர் குடும்பம். அவங்க பூர்வீகமும் எங்க ஊர்ப்பக்கம் தானாம்.”
கதிரவன் கடும் உழைப்பாளிதான். என்ன நாலு காசை நறுவுசாகச் சேர்த்து வைக்கத் தெரிந்திருக்கவில்லை. அவன் கேட்டான் இவன் கேட்டான் என்று சம்பளக் காசைக் கடனுக்குக் கொடுத்துவிட்டு இவன் பெட்ரோல் இல்லாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டு பத்தரை மணிக்கு வீடுவந்து சேர்ந்தபோது எரிச்சல் அப்பிக்கொண்டு வந்தது சந்திராவுக்கு. கொண்டுவந்த பீரோலும் கட்டிலும், குத்து விளக்கும் எவர்சில்வர் பித்தாளைப் பாத்திரங்களும் மட்டும் நிறைந்துகிடந்த வீட்டிற்குள் வாரச் சம்பளத்தைக் கொண்டு ஒவ்வொரு பொருளாகச் சேர்ந்த்தது சந்திராதான். நோவு நொடியென்று அவன் படுத்துக் கொண்டபோது மட்டும் மாமியார் வந்து ஒரு எட்டு மகனைப் பார்த்துவிட்டுப் போவார். சொல்லச் சொல்லக் கேட்காமல் மகனும் மருமகளும் வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போனதில் ஏற்பட்ட கோபத்தால் மாமனார் மட்டும் தலைகாட்டவே இல்லை.
விருந்தாளிக் காக்கைகள் கத்தவே கத்தாத அந்த குடியிருப்பில், சந்திரா மாசமானது தெரிந்த மூன்றாவது கிழமையில், மாவிலங்கா, கல்கோணா, முந்திரிக்கொத்து என்று அவளுக்குப் பிடித்ததெல்லாம் ஒயர்கூடைகள் நிரம்பத் தூக்கிக் கொண்டு வந்துசேர்ந்தது கோமு ஆச்சி. அன்றைக்குச் சந்திராவின் முகமெல்லாம் வெளிச்சம் தீரவில்லை. மாரீஸ்வரி வரலையா ஆச்சி என்று ஆசை ஆசையாகக் கேட்டாள்.
”அது அங்க மெசினக் கட்டிகிட்டு அழுது. நீ லெட்டரு போட்டீல்லா. அததான் ராவும் பவலும் படிச்சுட்டு கெடக்கா. மனசே கேக்கலம்மா. நீ மாசமா இருக்கன்னு போலீஸ்காரரு வீட்டுக்குப் போன்போட்டுச் சொன்னாலுஞ் சொன்ன தையத் தக்கான்னு ஒரே குதியா குதிக்க ஆரம்பிச்சுட்டா..”
“ஏ ஆச்சி என்னையும் ஒங்கூட கூட்டிட்டுப் போயிரேன். எனக்கும் அவளத் தேடுது. கம்பனி போன் நம்பர்தான் லெட்டர்ல எழுதிருக்கம்லா. அவளா ஒருதடம் கூப்டா என்னவாம் கொறஞ்சா போயிருவா”
“ஒ..அக்காளப் பத்திப் புதுசா தெரிஞ்சவ மாதிரி கேக்கியம்மா.. சரி மாப்பிள எப்ப வருவாரு. பொங்கி ஆக்கி கொடுக்கியா.”
“இல்ல ஆச்சி. கடைல தான் வாங்கிச் சாப்பிடுதாரு. எனக்கு வாந்தி நிக்கல. படுத்தே கிடக்கேன். வேலைக்கும் போகல ஒரு வாரமா..”
அன்று மாலை நேரத்தோடு கதிரவன் வீடு வந்து சேர்ந்திருந்தான். மீன் கிடைக்காத ஊரா இது என்று வசை வைத்துக் கொண்டே ஆச்சி கறி சமைத்து வைத்திருந்தாள். ஆச்சியின் கைச் சமையல் ரொம்பவே பிடித்திருப்பதாகச் சொன்ன கதிரவன் இரவு நெடுநேரம் அவளோடு பேசியிருந்துவிட்டு இங்கயே கூட இருந்து சந்திராவைப் பார்த்துக் கொள்ளத்தானே என்று வாய்விட்டே கேட்டுக்கொண்டான். மாரீஸ்வரியை தனியாக விட்டுவிட்டு வந்திருப்பதை மனசில் வைத்து ஆச்சி நாசூகமாய் அவன் கோரிக்கையை மறுத்துவிட்டு இரண்டாவது கிழமையில் ஊர் திரும்பியிருந்தாள்.
சொன்னமாதிரியே ஐந்தாவது மாதத்தில் ஆச்சி திரும்ப வந்திருந்தாள். அன்றைக்குச் சாயங்கால ரயிலில் கதிரவனும் ஆச்சியும் மல்லுக்கட்டித்தான் ரயிலில் சீட் பிடிக்க முடிந்தது. வீங்கிவிடாமல் இருக்க ராத்திரி முழுதும் சந்திராவின் கால்களை அழுத்தி விட்டுக் கொண்டே இருந்தாள் கோமு ஆச்சி.
கடைசிவீட்டு முத்து அண்ணன் அந்த அகாலத்தில் ஆட்டோவை எடுத்துக் கொண்டு ஜங்ஷன் ஸ்டேசன் வாசலில் காத்துக் கொண்டிருந்தார். ஆட்டோவை நெருங்கினபோதுதான் உள்ளுக்குள் மாரீஸ்வரி சரிந்து உட்கார்திருப்பதே தெரிந்தது. அந்த இடத்திலே அவளைப் பார்த்துவிட்டதும் கண்ணெல்லாம் பொங்கி தாரை தாரையாக வடிய, ஏட்டீ.. என்று வாய்விட்டே கத்தி அழத் துவங்கி விட்டாள் சந்திரா.
“ஏப்ல.. ஏப்ல.. ச்சி ஆள்லாம் பாக்காங்க. ஏப்ல அழாதப்ல.. பிள்ளத்தாச்சி அழக்கூடாதுப்ல” என்று எவ்வளவுதான் தேற்ற..
”வாங்க.. எப்படி இருக்கீங்க.. நல்லா பாத்துக்குறாளா.. என் தங்கச்சி..”
கதிரவன் கன்னம் குழியச் சிரித்து, “அதெல்லாம் சொல்லவா வேணும்..” என்று மனப்பூர்வமாகச் சொன்னான்.
மூத்தது தலைப்பிரசவம் தாய் வீட்டில்தான் என்றாலும் தாய் இல்லாதது ஒரு குறையே இல்லை என்கிறபடிக்கு ஆச்சியும், மாரியும் சந்திராவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டார்கள். கை நிரம்ப வளையல் போட்டு, வயிறு பெருத்ததும் நாடாவை நீட்டிப் புதுப்பாவாடை தைத்துக் கொடுத்து, நின்றால் நடந்தால் தண்ணி எடுத்துக் கொடுத்து, சூடு காணாமல், சுரம் பிடிக்காமல் தட்டில் வைத்துத் தாங்கினார்கள்.
பாளையங்கோட்டை வேளாங்கண்ணி ஆஸ்பத்திரி நர்ஸ் வந்து, ”சந்திரா வீட்ல இருந்து யாரும்மா.. உங்களுக்கு பொம்பளைப் பிள்ளை” என்று சொல்லிவிட்டுப் போனபோது மாரி குதியாட்டம் மட்டும் தான் போடவில்லை. கோமு ஆச்சி ஆம்பளைப் பிள்ளைக்கு ஆசைப்பட்டிருந்ததை வெளியில் காட்டாமல், ரெண்டு உசுரும் நல்லபடி வரணும் என்று திரிசூலி மாரியம்மனை மனசுக்குள் நேந்துகொண்டாள்.
கோலமாவு டப்பாவை சன்னல் கம்பியின் ஓரத்தில் சொருகிவிட்டு கடிகாரத்தில் மணி பார்த்தாள் சந்திரா. ஆறு அடிக்க இன்னும் இருபது நிமிஷந்தான் இருந்தது. இரண்டையும் காபி குடிக்கக்கூட வராமல் இன்னும் என்ன செத்த டிவி என்று வாய்விட்டுத் திட்டுக் கொண்டே பேங்க் மேனேஜர் வீட்டு வாசல் நோக்கி நடந்தாள்.
”ஏ ரேணு, உமா.. டீவி பார்த்தது போதும், ரெண்டு பேரும் வாங்கடீ..”
“ஏ அம்மா கூப்புட்றாங்க வா..” தோள்பட்டை வரைக்கும் இறங்கிக் கிடந்த பனியனைக் கழுத்தை ஒட்டித் தள்ளிக் கொண்டு சின்னக்குட்டி ரேணுகா முதல் ஆளாக ஓடி வந்து சந்திராவின் காலைக் கட்டிக் கொண்டாள்.
அவள் பின்னாலே உமா மெதுநடை போட்டு வந்த உமாவுக்குச் சுள்ளென்று ஒரு அடியோடு, “வெளக்கு வச்சா வீட்டுக்கு வரணும்னு தெரியாதா கழுத.. அப்படி என்ன டீவி கேக்கு ஒனக்கு..” என்ற திட்டும் விழுந்தது.
”ம்மா எப்பம்மா ஆச்சி ஊருக்குப் போவம்..”
“ஏண்டி..”
”விஜய் படத்துல நம்ம ஆச்சி ஊரல்லாம் காட்னாங்கம்மா..”
”ஆமாம்மா திருநெல்வேலின்னு பஸ்லாம் கூட வந்துச்சு..”
“நாம எப்பம்மா பஸ்ல ஊருக்குப் போவம்..”
“போலாம் போலாம்..”
“ம்மா அப்பா எப்பம்மா வருவாரு..”
“வருவாரு வருவாரு.. வாய மூடிட்டு புக்க எடுத்து வச்சிப் படிங்க.. காப்பிய சிந்தாம குடிக்கணும்”
சீக்கிரமாகவே தன் சொந்த ஊருக்குத் திரும்பும் எண்ணமும் ஆசையும் சந்திராவுக்கும் ஏற்பட்டிருந்தது என்னவோ வாஸ்தவம் தான்.. பெரியவள் பிறந்தபோதுதான் கடைசியாக ஊரில் அதிக காலம் இருந்தது. சின்னவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவள் பிறந்த வீட்டுக்குள்ளே காப்பர்டி வைத்துக் கொண்டதாலும், அது பனியன் ஆர்டர்கள் குவியும் காலமானதாலும் அடிவயிற்று வலியும், பாலூட்டாத மார் கடுப்புமாகச் சேர்த்து பெறாத வலியெல்லாம் சேர்த்து பேறுகால நோவாக இறங்கியிருந்தது. சந்திராவின் மாமனார்கூட அவள் பிறந்த மாசத்திலே தான் இறந்திருந்தார். எல்லாமுமாகச் சேர்த்து நாட்களை நகர்த்திக் கொண்டே போனதே தவிர ஊரோடு போய் எட்டிப் பார்க்கும் காலம் பழுக்க வேண்டுமே..
ஹ்ம்.. எல்லாம் நேற்று ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. போட்ட நகைகளைக் கழுத்தில் இருந்து கழற்றின வேகம்போல ஒவ்வொன்றும் நினைப்பில் மட்டுமே குடியிருக்கிறது. அதனதன் இடங்களை எதுவெதுவோ வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது. சித்தாறு நனைத்த உடம்புக்குள் நொய்யலின் வாடை குடியேறின மாதிரி எல்லாமே பழகிவிட்டது.
ஆனாலும் ஏதேதோ விசயங்கள் கண்முன் வந்து எல்லாவற்றையும் கிளறிவிட்டுச் சென்று விடுகிறதே…
இன்றைக்கும் கூடக் கல்யாணநாள் என்பதின் ஞாபகமிருக்காமல் மூக்கு வியர்க்கக் குடித்துவிட்டு வீடு திரும்புகிறவன் வழக்கம்போல நடு ராத்திரியில், பிள்ளைகள் உறங்கியதும், சத்தம் எழாமல் கிட்டே வந்து, கன்னம், கழுத்து, கால்கள் முலைகளில் முத்தமிட்டு, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க கலவி கொண்டு, வசமாகத் தன்மேல் கால்களைத் தூக்கிப் அவள் மேல் போட்டுக்கொண்டு உறங்கும்போது, இதேமாதிரி என்றைக்கோ ஓர்நாள் ராத்திரியில் சொன்ன அவனது வார்தைகளும் கூட அவள் ஞாபகக் குட்டைக்குளிருந்து மக்கி மருக்களித்து குமட்டுகிற வாடையோடு மேலெழுந்து வந்துவிடுகிறதே…
”காப்பியக் குடிச்சா டம்ளர அங்கயே வப்பியா.. எந்திரிச்சிப் போய் கழுவப் போடு..”
உமா தன் தங்கச்சியின் தம்ளரையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அடுப்படிக்குள் நுழைந்தாள். அதேநேரம் வாசலில் அதே பழைய டி.வி.எஸ்-50 ஒன்று இறுமிக் கொண்டே வந்து நின்ற சத்தம் கேட்டது.
”ஆனாலும், உங்கக்கா நல்ல கலர்ல.. தப்பா எடுத்துக்கமாட்டன்னா ஒண்ணு சொல்றேன். கால் மட்டும் நல்லா இருந்தா அவங்களையே கட்டியிருப்பேன் தெரியுமா..”
வீட்டையும் மனசையும் என்ன கழுவிப் பெருக்கித் துடைத்து என்ன பலன், இவ்வளவு காலமும் மனசுக்குள் நட்டுவைத்திருக்கும் கல்லைப் பெயர்த்து வெளியில் தூக்கிப் போடவே அவளால் முடியவில்லையே.
***
கார்த்திக் புகழேந்தி
பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com
வழக்கம் போல அருமை💐💐💐💐
Reading between the lines and just wondering how sad life is for some people. Realistic story , learnt a lot from their lives…
Realistic…. Super
சித்தாறு -நொய்யல் இணைப்பு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.கடைசி பத்தி ஒரு அதிர்வைக் கொடுக்கின்றது.பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகள் ,அதில் நாம் பொருந்திப் போவது என மிகத் துல்லியமாக சித்தரிக்கின்ற கதை …நல்ல வாசிப்பு அனுபவம் ,நன்றி ஆசிரியருக்கு
நன்றிங்க குமார்.