1. வேறெங்கோ இருந்திருப்பதாக..
சுழற்றி வீசி சுருட்டிக்கொள்ளும் காற்றோடு போய்விட
துகளென அற்ப பாத நிழலுக்குள் ஒடுங்கிடாமல்
ஆளற்ற தீவொன்றில் ஒளி ரூபமாய்
வியாபிக்க
கூடவில்லை இத்தனிமை
இரைச்சலாகி சிதறும் சொற்களை அரைக்கின்ற தகிப்பு
மிச்சமுள்ளது
உயிர் புலம்பலில் ஆவியாகும் கற்பனை மூச்சு
இருளில் முட்டியபடி போக்கு காட்டுகிறது கனவென
பொய்யாய்
உருக்குழைவு பிம்பத்தை எதிர்கொள்ளத் தவிக்கும் நனவிலி
வியப்பில்
பாதரசம் இளகும் கண்ணாடியில் தெரிந்திருந்தேன்
எப்போதும்
எழுதிட
வாகற்ற லிபிகளின் சாயல்
காகித அடுக்குகளுக்கு ஊடே விம்முவதை
நிறுத்தவில்லை
அடர்ந்த நிசிமூலையின் சன்னமான ஊளையாகி
அழைத்தபடி
இன்னும்
காலத்தின் கவுச்சி ஏறிய மடிப்புகளின் படிகளில் மனம்
இறங்கிட
உந்தும் பிடிமானத்தை காவு கேட்கின்றன
ரத்தம் உறைந்த நாளங்கள்
சொல்லத் தோன்றிற்று
எளிய விசாரனைகளுக்குள் அடைப்படுகின்ற நிர்ப்பந்தம்
வேண்டாம்
உண்மைக்கு அருகே மண்டியிருக்கும் நீச்ச வாடையில்
தோய்ந்து வெளிப்படும் முக பாவங்களை
தந்துவிடுவேன்
மாறாக
சுயவரைபடத்திலிருந்து வெளியேறும் ஒருவனாய்
வைகறையொன்றில் காற்றோடு போய்விட
போதவில்லை
இத்
தனிமை
2.நட்சத்திரங்களை எண்ணி காத்திருந்த வேளையில்..
*
பூனையுடலிலிருந்து பிரிந்து அலைகிறேன்
உங்கள் எழுத்துக்களினூடே
மியாவ் என்றபடி
ஒவ்வொரு வேட்டைக்குப் பிறகும்
குருதியை சுத்தப்படுத்த விழையும் அர்த்தங்களின்
வாடை
நாசியை விட்டு அகலுவதில்லை
எதிர்கொள்ளும் இரவிலும்
பச்சிளங் குழந்தைகளின் குரல்களைப் பெயர்த்து
உங்கள் ஜன்னல் மீதேதான்
சார்த்தி வைக்கிறேன்
அவ்வப்போது
அகாலத்தின் பள்ளத்தில் குப்புறக் கிடக்கும்
கனவுகளை முகர்ந்து பார்க்க ஒரு
வாய்ப்பு
ஒப்புக்கொள்ள வேண்டாம்
பரிவு கூட்டும் தயவுகளுக்கு பொறுமையில்லை
இப்பொழுதின் தருணத்தைத் தூய்மைப்படுத்தி
மேஜை விரிப்பில் கிடத்திக் கொள்ளுங்கள்
அது உங்களின் சௌகரியம்
ச்சோ
என் அரைக்கண் தூக்கம் சொக்கியபடி கூசுகிறதே
அட
இந்தக் கவிதையின் திரைச்சீலையை மட்டுமாவது கொஞ்சம்
இறக்கிவிடுங்கள்
3.மீதமுள்ள கயமையை..
நீர்ச்சுமை விலக கிழித்துப் பாய முயலவில்லை
பழையச் சருகு
இடைவெளி நெருக்கித் தொகுத்துப் பிளப்பதில்
பொடித்துப் போகின்ற
வம்பு
அள்ளி யனல் ஊதி
எங்கிருந்தோ வாசலில் கால் பரப்பி
நிற்பதாக
உச் கொட்டுகிறீர்
மடை உடைத்து
***
கவிதைக்காரன் இளங்கோ