சொல்
தாயக்கட்டைகளைச் சுழற்றிவீசுவதுபோல்
சொற்களை வீசியெறிகிறாள் சிறுமி
ஒவ்வொரு சொல்லையும் தொற்றியெடுத்து
தன்சேலைக்குள் பொதிந்தவற்றுடன் ருசிபார்த்து
அதிர்ஷ்டம் கொண்டுவரும்
தாயத்திற்காகக் காத்திருக்கும் அம்மாவின்முன்
தன் கனவில் புகுந்த பேய்ச்சொல்லை
ஒரு சித்திரத்தின் நளினத்துடன்
வீசுகிற சிறுமி அவள் முக வெளிறலில்
கலைந்து திகைக்கிறாள்
மனதைத் தைத்து ரணமாக்கும் சொற்கள்
காதுகளில் மொய்க்கும்
சுவர்க்கோழியின் ரீங்காரமாகின்றன
காலம் பொதித்த அர்த்தச் சுமையில்
கழன்று விழுகிற சிறுமியின் சிறகுகள்
உயிர்பயத்தில் விடுவித்துக்கொண்ட
பல்லியின் வாலாகத் துடிக்கின்றன.
***
பத்ம பாரதி