1.கொல்லமுடியாத புன்னகை
சுவாசப்பாதையின் சுவர்களெங்கும்
கண்ணாடிகள் தெறிக்கின்றன
நுரையீரலில் உறைந்திருக்கும்
மஞ்சள் மலரை
கிழித்துத் துப்பும் புயலுக்கு
மீளவும்
வீட்டுக்குள் வர விருப்பமே இல்லை
கரகரப்பில் அடங்காமல்
பாய்கிறது சிறுத்தை
அலறுகிறாள்
தூளியில் உறங்கும் மகள்
குளியலறைக்கு ஓடி ஒளியுமென்னை
இழுத்து இழுத்து புகைக்கிறது இரவு
எரியும் நுரையீரல் காட்டைத்
தடவிக் கொடுக்கிறேன்
விலாவிலிருந்து
மேல்நோக்கித் தாவும் வலிமிருகம்
குரல்வளையைக் கவ்வுகிறது
பின்னங்கால்களை உறைய வைக்க
தடவப்படும் தந்திரப்பசைக்கு
நேரமென்பது எப்போதும் குழப்பும் ஓவியம்
உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில்
நோய்மையின் கதவைத்
திறந்து திறந்து மூடுகிறேன்
வெவ்வேறு நிறங்களில்
ஜொலிக்கின்றன மாத்திரைகள்
விழுங்கியதெல்லாம் தொலைகிறது
ஆழமான மஞ்சள் மலருக்குள்
சூரணம்
கஷாயம்
கபம் அறுக்கும் லேகியம்
எப்படி அழித்தாலும்
முற்றும் தொலையாது சிரிக்கும் மலர்
இந்தக் கார்காலம் சென்று
அடுத்த கார்காலம் வா என்கிறது
கொல்லமுடியாத
புன்னகையின் முன்
தோற்று வணங்குகிறேன்
***
2. ஒளிரும் தெய்வம்
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
எனக் கேட்டபிறகு
எதிரே அமர்ந்திருந்தவரைக் காணவில்லை
பின்னொளிந்து
கண்களைப் பொத்தி விளையாடுபவர்
இருக்கையுடன் பிய்த்து
மேற்கூரையை உடைக்கிறார்
ரயிலை சீசாப்பலகையாக்கி
அடித்து அடித்து மேலேற்றும்போது
நானும் இப்பூமியில்தான் உள்ளேன்
இழுத்துக்கொள் இழுத்துக்கொள்
நிலம் நோக்கிக் கூவுகிறேன்
எடையை இழுக்கும் இடத்தில்
ஆழமான குழியைத் தோண்டுகிறவர்
மீளத்திரும்பமுடியாத இடத்தில் மிதக்கவிட்டபிறகு
எப்படி அது
என் தோளில் வந்து தங்கியதென
நேர்காணல் ஆரம்பிக்கிறார்
பறக்கும் அதிகாலை தோசைகள்
தீய்ந்த முகத்துடன் படபடக்கின்றன
பின்தொடரும் வயிற்றுக்குள்
குத்துவிடும் போது எழும் ஓசை
நடந்து நடந்து
முடிவு தெரியாதவர்களின்
கால்களில் விழுந்து வணங்குகிறது
இலையுதிர்க்கால வீதிகளில்
சேகரித்து வைத்திருப்பதையெல்லாம்
கொட்டி எரிக்கிறார்கள்
சருகுகள் கருகும் தீ
பறந்து வந்து சுடுகிறது வயிற்றை
மாலையில் உறித்துண்ண
வைத்திருந்த ஆரஞ்சுப் பழத்தை
விண்மீன் சுளைகளாக தூக்கி வீசியதும்
தொண்டையைத் தடவுகிறார்
உங்கள் நாவுகளுக்காகத்தான்
ஒளிரும் சுவைகள் உருவாக்கப்பட்டதா ?
சீசாப்பலகைக்கு அடியிலிருக்கும்
வலிமையான ஸ்ப்ரிங்
தண்டுவடத்தைப் பார்த்து சிரிக்கிறது
வலிந்தேறும் தாகம்
இறைப்பை நெருங்க முடியவில்லை
தண்ணீர் பாட்டிலை உடைக்கிறார்
எங்கிருந்தோ ஓடிவந்து
காப்பாற்றுகிறது வேலை தெய்வம்
ஊணுருகத் தழுவிய பிறகு
தோள்களிலேற்றி ஒளிரவிடுகிறார்
வேலையை வாங்கியவுடன்
நிரந்தரத்தைப் பிடித்துவிட்ட கம்பீரத்துடன்
நடந்து செல்கிறார்
***
3. நீருக்குள் மூழ்குபவள்
கிணற்றுக்குள் குதிக்கும் போது
தலை மட்டும் மூழ்கவில்லை
எழுந்து நிற்கும் கூந்தல் காட்டில்
வீறிட்டழுகிறது குழந்தை
நீருக்குள் பரவும் ஒலி
ஆழம் நோக்கும் பாதங்களை
மூழ்கவிடாமல் தாங்கிப்பிடிக்கிறது
சூழும் கொடிகளின் கண்களில்
மின்னுவதெல்லாம்
செழுமையான உடல் மட்டுமே
பாம்புகளென சீறிப் பாயும் பழங்கதைகள்
முதலில் கொத்துவது
அவளுடைய மூளையைத்தான்
கயிற்றை வீசி
குழந்தையைத் தூக்கும்
தலைவனை நோக்கி
பாம்புகளை எறிகிறாள்
துடிக்கும் அவனைக் கொத்தும் கதைகள்
அறுவடை வயலைக் கொளுத்துகிறது
உனக்கு ஒன்றுமில்லை
நன்றாகத்தானிருக்கிறாய்
கிணற்றுக்குள் குதிக்கும் குரல்கள்
நெஞ்சில் மோதியதும்
எறும்புகளாகி மடிகின்றன
கொடிகள் முகம் நோக்கி நகரும் வேளை
சுற்ற ஆரம்பிக்கிறது கிணறு
காப்பாற்ற யாருமில்லாத
அலைகள் சுழலும் பெருங்கடல்
சுற்றிச் சுற்றி விரியும் சன்னதம்
முகம் மறையும் பித்துக் கணத்தில்
நல்ல வேளையாக மலர்கிறது உறக்கம்
விழிக்கும் போதே மறைகின்றன
கீழிழுக்கும் தண்ணீரும்
மேலெழும்பிய காடும்
எரியும் வயல்வெளியில்
குழந்தையைக் கொஞ்சியபடியே நடப்பவள்
தலைவனிடம் கேட்கிறாள்
அணைப்பதற்கு ஏன்
எந்தக் கிணற்றிலும்
தண்ணீர் இல்லை.
***
இரா.கவியரசு – அரசுப்பணியில் இருக்கும் இவர். தற்போது திருத்தணியில் வசித்துவருகிறார். அண்மையில் நல்ல கவனம் பெற்ற இவரது கவிதைத்தொகுப்பு – நாளை காணாமல் போகிறவர்கள்
rajkaviyarasu@gmail.com