கார்த்திக் பாலசுப்ரமணியன்
ஹீப்ருக்களின் பைபிளான ஆதியாகமத்தில், ‘சோதாம்’ மற்றும் ‘கொமோரா’ என்ற இரு நகரங்களும் அவற்றில் வாழ்ந்தவர்கள் செய்த பாவங்களின் பொருட்டு நெருப்பாலும் கந்தக மழையாலும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்விரண்டு நகரங்களும் நவீன யுகத்தில் ஒருபால் விழைவு கொண்டவர்களுக்கான, அதிலும் குறிப்பாக இரு ஆண்களுக்கிடையான காதலின் குறியீடாக வழங்கப்படுகிறன. இவ்விரு நகரங்களில் ஒன்றான கொமோராவின் பேரால் தலைப்பிடப்பட்டிருக்கும் லக்ஷ்மி சரவணகுமாரின் இந்த நாவல் தன் கதையை தலைப்பிலிருந்தே சொல்லத் தொடங்குகிறது.
மதுரைக்கு அருகே சொராக்காப்பட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அம்மண்ணின் கிடாவெட்டு திருவிழாவுடன் தொடங்குகிறது இந்நாவல். பலரும் பல்வேறு காரணங்களுக்காக காணிக்கையாக கிடா வெட்ட, அங்கே தன் தந்தையைக் கொல்ல நேர்ச்சை கொண்டு ஆடு வெட்டுகிறான் கதிர். அதிலிருந்து துவங்கி, கதிருடைய பின்னணி, அவனின் தந்தையான அழகர்சாமியின் பால்யம் என்று ஈரிழையாகப் பயணித்து இவ்விருவரும் சந்திக்கும் புள்ளியில் வளர்ந்து அழகர்சாமியினுடைய கொலையில் முடிகிறது நாவல்.
தந்தை மகன் இடையே நிலவும் உறவு நிலை இந்திய வறுமைப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது பெரும்பாலும் மிகவும் இறுக்கமான ஒன்றாகவே இருக்கிறது. இங்கே ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்பத் தலைவன் என்ற வகையில் தந்தையிடமே குவிக்கப்படுகிறது. கட்டற்ற அதிகாரம் எங்கும் எதேச்சதிகாரத்துக்கு இட்டுச் செல்வதே வழமை. குடும்ப அமைப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவே இங்கும் நடைபெறுகிறது. இந்த அதிகாரத்தை குடும்பத்தின் பெண்கள் ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட குறுகிய வெளியுலகத் தொடர்பும் பொருளாதாரச் சார்பும் புனிதமேற்றப்பட்ட தாய்மையும் இப்படிக் குவிக்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் கேள்விக்குட்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. ஆனால், இதே இடத்தில் இன்னொரு ஆடவன் மகன் என்ற பெயரில் தலையெடுக்கும்போது இருவருக்குமான அதிகாரப் போட்டி துளிர்விடத் தொடங்குகிறது. அது கைகொள்ளப்படும் வீரியமே இருவருக்குமான உறவுநிலையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.
தந்தையைக் கொல்லும் வேட்கை வெளிப்படும் பல்வேறு பிரதிகள் உலக இலக்கியங்களிலும் சினிமா போன்ற கலை வடிவங்களிலும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றன. (சமீபத்தில் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஜோஜி’ திரைப்படமும் அப்படியான பின்புலம் கொண்ட கதையே. அதுவுமே ஷேக்ஸ்பியரின் மேக்பத்தினை ஆதர்சமாகக் கொண்ட படைப்பாக இருக்கிறது). பொதுவாகத் தந்தையைக் கொல்லும் விழைவென்பது தாயிடத்தில் கொண்ட பேரன்பின் காரணமாய்த் தோன்றிய ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸி’ன் நீட்சியாகவே நிறைய இடங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், எல்லாவிடங்களிலும் அது அப்படி இருப்பதில்லை. இந்த நாவலைப் பொறுத்தமட்டில் அது தாயின் மீதான பற்றின் பொருட்டெழுந்த தந்தையின் மீதான வெறுப்பு என்று குறுகிப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.
சிக்மண்ட் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வினை சற்று உதவிக்கு அழைத்துக்கொண்டால், அவர் மனித மனத்தை இயக்கும் விசயங்களாக மூன்று சக்திகளைக் குறிப்பிடுகின்றார். Super Ego, Ego, Id. இதில் தினந்தோறும் சந்திக்கும் சாதாரண மனிதர்களுக்கு – ஒரு நவநாகரிக சமூகத்தில் எது இயல்பென்று கருதப்படுமோ அவற்றைத் தவறாமல் பின்பற்றும் மனிதர்கள் – முதலிரண்டு சக்திகள் மேலோங்கியிருப்பதாக அவதானிக்கிறார். அதே நேரத்தில் மூன்றாம் சக்தியான ‘இட்’டின் ஆதிக்கம் அதிகமாகும் ஒருவனுக்கு அவனுடைய பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்கி சுயகட்டுப்பாட்டை மீறுகிறான் (கா.சு-நூல்). மேலும் இதை ஒரு மனநோயாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை மனித மனதின் ‘இட்’டில் பதிவாகியிருக்கும் கொடூர நினைவுகளை உளப் பகுப்பாய்வின் வழியே சிகிச்சை செய்து அழிக்க முடியுமானால் அவனை அதன் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து பழிவாங்கும் உணர்விலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிவிடலாம் என்பது பிராய்டின் துணிபு. இந்தப் பின்னணியில் இந்நாவலில் வரும் கதிரிடத்தில் தன் தந்தையின் மீதிருக்கும் வன்மத்தை அணுகினால், கதிர் தன்னுடைய அதுவரையிலான வாழ்விலடைந்த அத்தனை இழிநிலைகளுக்கும் தன்மீது உமிழப்பட்ட எல்லா கசப்புகளுக்கும் ஊற்று முகமாக தன்னுடைய தந்தையே இருந்திருக்கிறார் என்று உணருமிடத்தில் அவரின் மீதான வெறுப்பு வன்மமாகத் திரிகிறது. நாவல் முழுவதும் அவ்வெறுப்புக்கான சகல நியாயங்களும் திரும்பத் திரும்ப கூறப்பட்டிருக்கிறன. அவற்றுள் ‘சாத்தனின் மனவெளிக் குறிப்புகள்’ பகுதி முக்கியமான ஒன்று.
மேலும், இந்நாவல் நெடுகிலும் முக்கியமான முரண் ஒன்று இழையோடுகிறது. அதுவுவே நாவலின் பெரும் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படுகிறது. ஒரு மனிதனின் இயல்பினை, அவன் நல்லவன் கெட்டவன் என்று பிரித்தறியப்படும் குணா விலாசங்களை வரையறுப்பதில் அவனுடைய பால்யத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அழகர்சாமி, கதிர் – இவ்விருவருமே வஞ்சிக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடல் கடந்து பிழைக்கச் சென்ற கம்போடிய தேசத்தில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் பெற்றவர்களையும் உற்றவர்களையும் இழந்து அடிமைப்பணி செய்து வளர்ந்த பால்யம் அழகர்சாமியுடையது. ஏழ்மையும் இயலாமையும் பழிச்சொல்லும் விரட்ட பெற்றோர் உற்றோர் இருந்தும் ஆதரவற்றோர் விடுதியில் சிதைக்கப்பட்ட பால்யம் கதிருடையது. முன்னதாக இவ்வாறான பாதிப்புக்குள்ளான அழகர்சாமியே கதிரின் அலைகழிக்கப்பட்ட துயர் நிரம்பிய பால்யத்துக்குக் காரணமாய் இருப்பதே இதில் செயல்படும் முக்கிய முரண். நாவல் கதிரின் பார்வையிலிருந்தே பெரும்பாலும் இயங்குகிறது. தந்தையின் மீதான அவனுடைய கோபத்துக்கும் வன்மத்துக்கும் கொலைவெறிக்குமான நியாயங்கள் ஒருபக்கம் சொல்லப்பட்டிருந்தாலும் மற்றொரு இழையாக ஓடும் அழகர்சாமியின் கதையையும் வாசிக்கும் ஒருவருக்கு அவரிடத்தே சிறுபரிவு ஏற்படுவதைத் தவிர்க்கவியலவில்லை. எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளை என்று கட்டம் கட்டிச் சுட்டிவிட முடியாதுதான். இப்படி இரு தரப்பையும் வாசகனிடத்தே முன்வைக்கும் போது இயல்பாக வாசகனுக்கு கதிரின் நியாங்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுவே வாசகனைப் பிரதியிலிருந்து சற்று வெளியே நிறுத்துவதற்கும் காரணமாகிவிடுகிறது.
நாவல் முழுவதும் இரக்கமற்ற வன்மம், ஆற்றுப்படுத்தவியலாத கோபம், பொறுத்துக் கொள்ளவியலாத இழிவு எனக்கொண்ட மனிதர்கள் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்பட்டாலும் அன்பின் வழியது உயிர் நிலையில் உலவுபவர்களும் இருக்கிறார்கள். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலொரு தேசத்தில் நடக்கும் அரச பயங்கரவாதத்தின் காரணமாய் நடைபெறும் உள்நாட்டுப் போரின் விழைவாக நடக்கும் வன்முறைகளுக்கு துளியும் சம்பந்தமில்லாது குற்ற உணர்ச்சி கொண்டு கலங்கும் ராவுத்தரும் ஆதரவற்ற குழந்தைகளிடத்தே பேரன்பு காட்டும் ரோஸி ஆன்ட்டியும் சக்தி, சத்யா, சுதா, மலர் என்று அன்பைப் பொழிபவர்களும் நாவல் முழுவதும் வந்துகொண்டுதானிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கின்றார்கள்.
நாவலில் கதிர் பயணிக்கும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வந்த அளவுக்கு அதற்கு இணையான முக்கியத்துவம் கொண்ட அழகர்சாமியினுடைய பகுதி அப்படிப் பொருந்தி வரவில்லை. கம்போடிய மண்ணில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம், அதனால் பாதிக்கப்படும் மக்கள், அவர்கள் மேல் செலுத்தப்படும் கட்டற்ற வன்முறை என எல்லாம் பதிவாகியிருந்தாலும் அந்தப் பகுதியோடு முழுவதுமாய் ஒன்ற இயலவில்லை. அந்த நிலமும் பின்னணியும் அவர்களின் வாழ்க்கைப் போக்கும் சரிவரப் பதிவாகவில்லை. அவை பெரும்பாலான இடங்களில் வெறும் தகவல்களாகவும் செய்திகளாகவும் மட்டுமே கடத்தப்படுவதான உணர்வு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின் சிறப்பான பகுதியென்று கதிர்-முருகன்-சக்தி ஆகியோரின் பாத்திர வார்ப்புகளையும் அவர்களிடைய நிலவும் அன்பையும் புரிதலையுமே சொல்வேன். கதிரை நேசிக்கும் முருகனால் அதற்கு இணையாக சக்தியைக் காதலிக்க முடிகிறது. கதிரின் மீதான முருகனின் விழைவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சக்தி அதை எங்கோ ஓரிடத்தில் புரிந்துகொள்கிறாள். இப்படியான உறவுச் சிக்கலை எந்தவிதத்திலும் புனிதப்படுத்தாமல் அவற்றின் இயல்புத் தன்மையோடு காட்சிப்படுத்தியிருப்பது நன்றாக வந்திருக்கிறது. இந்நாவலின் உச்ச தருணங்களில் ஒன்றாக கதிர், முருகன், சக்தி என மூவரும் முருகனின் வீட்டிலமர்ந்து உணவருந்தும் காட்சியையும் எல்லா உண்மையும் வெளிப்பட்ட பின்னரும் மருத்துவமனையில் நோயுற்று இருக்கும் கதிரின் அம்மாவுக்காக சக்தி வந்து நிற்கும் காட்சியையும் சொல்வேன்.
பல்வேறு இடங்களில் இரத்தமும் சதையுமாக வெளிப்பட்டுள்ள உரையாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. அதிலும் சுதாவுடன் கதிரின் உறவும் அவளின் விலகலும் வெளிப்படும் இடமும் அப்போது நிகழும் உரையாடலும் தமிழ் நாவல் உலகுக்குப் புதிது. அதேபோல கதிரின் மீது சக்திக்கு வரும் கனிவுக்கும் அன்புக்கும் காரணம் இன்னதென்று நாவலில் எந்த இடத்திலும் கூறப்படுவதில்லை. உண்மையில் அவள் அவனை வெறுத்துத் தூக்கி எறிவதற்கான எல்லா நியாயங்களும் நாவலில் உண்டு. அதையும் மீறி அவளிடத்தே வெளிப்படும் அன்பையும் கருணையையும் வாசகனால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் ஆன்ட்ரூ சாமியார் தத்துவார்த்த பார்வையின் வழியே கதிரைப் புரிந்துகொள்ள முயலும் இடம் வெறும் பாவனையாக மட்டுமே எஞ்சிவிடுகிறது. அதைவிட நாவலின் வழியே கதிரை ஒரு வாசகன் இன்னும் நெருக்கமாக கண்டடைந்து கொள்வான்.
நாவலில் வரும் சில நாடகத் தருணமிக்க காட்சிகள் நாவலை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்குப் பதிலாக அதை ஒருபடி நிலை கீழே இழுப்பவையாக உள்ளன. குறிப்பாக பேய்ச்சியின் பின்னால் பித்துகொண்டு அலையும் இடம், சத்யாவுடனான காதல் தருணங்கள், ஆரம்பத்தில் வரும் சிறுமி கற்பகத்தின் முதிர்ச்சியான உரையாடல்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆண்களுக்கிடையேயான உறவும் காதலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களில் இயைந்து வந்த அணுக்கம் ஆண்-பெண் காதல் தருணங்களில் கூடி வரவில்லை.
இதில் வரும் விஜியும், மலரும் அதிலும் குறிப்பாக விஜியின் தந்தையாக வரும் முதியவரும் முக்கியமான பாத்திர வார்ப்புகள். அம்முதியவருக்கு நேரும் முடிவு அதுவரையான நாவலின் ஒட்டுமொத்த பார்வையையும் மறுபரிசீலனை செய்யும் விதமாய் அமைந்திருக்க வேண்டியது. ஆனால் அவ்விடம் அதீதமாய் புனிதப்படுத்தப்பட்டு உணர்வுப்பூர்வமாகக் கடத்தாமல் போகிறது. ஆனால், அதுவரை சேர்த்து வைத்துக்கொண்ட தன் மொத்த ஆத்திரத்தையும் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அமையுமிடங்களில், கதிரின் தடுமாற்றமும் தத்தளிப்பும் வெளிப்பட்டுள்ள இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அவன், தானே தன் தந்தையின் நீட்சியாக இருப்பதை உணருமிடம் முக்கியமான திறப்பு. ஆனால், அதுவரையிலான தன் வாழ்வின் அத்தனை கசங்கல்களையும் நீவிச் சரிசெய்து கொள்ளும் வாய்ப்பு சக்தி, தனம், முருகன் வழியே வரும்போது அதைச் செய்யாமல் தந்தையைக் கொல்வதொன்றே அதற்கான சரியான வழியென்று கதிர் பிடிவாதம் கொள்ளுமிடம் கதிரைப் புரிந்துகொள்வதை மேலும் சிக்கலாக்குகிறது. அதுவே கதிர் அழகர்சாமியைக் கொல்லுமிடத்தில் வாசகனிடத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பெரும் சலனத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.
கியாஸ் தியரியில் சொல்லப்படுவதைப் போல ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்புக்கு பனிப்பாறைகள் உருகிச் சரிவதைப் போல உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் வன்முறையின் பிழம்புகளுக்கு அதற்குத் துளியும் சம்பந்தமில்லாத பாவங்களின் ஈர்ப்பு நிலத்தில் சிறு பூச்செடிகள் கருகுகின்றன.
***
கார்த்திக் பாலசுப்ரமணியம், சொந்த ஊர் ராஜபாளையம். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’, க.சீ.சிவகுமார் நினைவு முதல் சிறுகதைத் தொகுப்புகளுக்கான விருதை வென்றது. ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் வாசகசாலை விருதை வென்றது.
தொடர்புக்கு – karthikgurumuruganb@gmail.com