1) ஆழியின் மகரந்தம்
பூக்களை மட்டுமே
புகைப்படம் பிடிப்பவன்
கடல் பார்த்துத் திரும்புகிறான்
ஒற்றை அலையின் படத்துடன்
மலர்ந்த நாகலிங்கத்தின்
மகரந்த முக்காடு போல்
ஒயிலாய் வளையும் ஒற்றை அலை
கடலினுள் இறங்கும் கதிரவனின்
செம்மஞ்சள் பூசிச் சிதறும்
மகரந்தத் துகள்களென
நீர்த்துளிகள்
ஆழியை மடித்து மடித்து
அல்லிவட்ட இதழ்கள் செய்யும்
ஓரிகாமி அறிந்த
சிறுமி இக்கவிதை
*
2) இணை கோடுகள்
அரைநொடி மின்னலுக் கிணையென
நகராது நகர்ந்தெழுதும்
நத்தை தனது மினுங்கும் கோட்டை
நேர்க்கோட்டில் நீந்தும்
திமிங்கிலத்தின் பெருமூச்சை
வெகுநீட்டி விரையும்
விமானத்தின் வெண்புகை
ஈறறியாப் பேரண்டத்தில்
எவர் வகுக்கக் கூடும்
இலக்கங்கள்
இலக்கணங்கள்
இணைகோட்டுச் சூத்திரங்கள்?
எல்லாம் கிடக்கட்டும்
இல்லாதிருக்கும்
இருப்புப் பாதையில் பார்
சின்னஞ்சிறு மஞ்சள் பொதிகளில்
கவிதைகள் சுமந்து வரும்
இரயில் பூச்சி
*
3) ஆதிச்சுடர்
இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்
செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை
*
4) வேனிலின் சுடர்கள்
கங்கு சட்டியில் வாடும்
கதிர் சோளக் கூம்பினின்று
கடற்கரை வெளியேகும்
தகிக்கும் தங்கச் சுடர்கள்
கொன்றை மஞ்சரிக் கூம்பு நீங்கி
கொதிகானலில் நெளிந்தாடி
தரைநோக்கி பயணிக்கும்
தணிந்த தங்கச் சுடர்கள்
இரவோடும் பகலோடும்
கடலோடும் கானலினூடும்
தகித்திருக்கையில் தணிந்ததையும்
தணிந்திருக்கையில் தகிப்பதையும்
சடசடப்பதையும் சப்தமற்றதையும்
ஒன்றே போலத் தழுவித் திரிகிறான்
காற்றெனும் மாய முதுகிழவன்
*
5) சிறுமாயம்
மினுங்கும் இளஞ்சிவப்பில்
மென்தகடுகள் தைத்த
தேவதையின் ஆடையை
சன்னல் வழியேகி தழுவும்
சிதறும் பேரண்டத்தின்
சின்னஞ்சிறு கற்றை கதிர்
எதிரொளிக்கும்
சுவரெங்கும் சுழன்றொளிரும்
குங்குமப்பூ குழைத்த
குட்டிப் பால்வீதி
***
கௌரி ப்ரியா – சென்னையில் வசிக்கும் இவர் அடிப்படையில் ஒரு மருத்துவரும் கூட. மின்னஞ்சல் – ggowripriya07@yahoo.co.in