சினைக்குழாய்க்கு நட்சத்திர விரல்கள்
விசேஷம் இல்லையா
விடை தேடித் திரிபவள்
மனதின் பாலையில்
கள்ளிச் செடியொன்றைச்
செல்லமாய் வளர்த்தாள்
சருமம் கெட்டித்து
இடை அகண்டு
அகம் கசந்த பின்னும்
நீர்மையைத் தக்க வைத்தல்
அன்றாடத்தின் போராட்டம்
பாலையின் கள்ளிக்கும்
பதில் வறண்ட
காரிகைக்கும்
நிராசைகளின் நெடுவெளியில்
இருவரும் ஒருநாள்
துளிர்த்தலைத் துறந்து
முட்களைப் பூண்டனர்
செல்லக் கள்ளியின்
நட்சத்திர முட்களின்
பன்முனைகளுள் ஒன்றின்மேல்
படர்ந்து ஒளிர்வதுண்டு
அவள் சுண்டித் தள்ளும்
விழிநீர்த்துளி
அத்தகைய நொடிகளில்தான்
சினைக்குழாயின்
விரல்கள்
அணு ஒன்றினை விழுங்கி
இன்மையை நோக்கி
தள்ளுவதும்
*
வேர்
விரிந்த தோலுடை
அடிவயிற்றை
விரல்களால் நீவுகிறாள் தங்கம்மா..
என்னவென்று கேட்டுவிடுவாளோ
தொப்புள் கொடியெனும்
ஜீவநதியின்
கிளைகளின் பிரதிகள் இவை
எனலாமா
கிளிக்குஞ்சு உன்னை
அடைகாத்த கூட்டின்
இழைகள் இவையென
எடுத்துக் கூறலாமா
ப்ரபஞ்சத்திலிருந்து நீ
வயிற்றுக்குள் குதித்திறங்க
மின்னலொன்று
ஒளிர்ந்து விரிந்ததென்று
கதைகள் சொல்லலாமா
“அம்மாஆஆஆஆ..”
இதோ கேட்கப் போகிறாள்..
தயாராக இரு..
“அம்மா..
இது என்ன வேர் மாதிரி இருக்கு?
வேரா?”
என்கிறாள்
***
கௌரி ப்ரியா
சென்னையில் வசிக்கிறார். மருத்துவராக பணிபுரிகிறார். இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் அவ்வப்போது கவிதைகள் எழுதி வருகிறார்.
மின்னஞ்சல்: ggowripriya07@yahoo.co.in