நாராயணி சுப்ரமணியன்
கடலுக்கடியில் சென்று விலங்குகளைப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. அழகான விலங்குகள், நீருடன் ஓடிப்பிடித்து விளையாடும் சூரிய ஒளியின் கீற்று, அலைகளின் பந்தாட்டம் என்று விரியும் அந்த அனுபவத்தின் முக்கியமான ஒரு அம்சம் கடலுக்கடியில் கேட்கும் ஒலி. எந்த வாழிடத்துக்கு சென்றிருக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒலிகளின் தன்மை மாறுபடும். அலைகளின் ஓசையையும், கடலுக்கடியில் அணிந்து கொள்ளும் முகமூடிக்குள் பேரிரைச்சலாகக் கேட்கும் நமது சுவாசத்தின் ஒலியையும் மீறி சில விஷயங்கள் நம் காதை எட்டிவிடும்.
ஒலிகளைத் துல்லியமாகக் கேட்பதற்காக, ஒரு சில வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு கவனித்த அனுபவம் கூட எனக்கு உண்டு. பவளப்பாறைகளின் மேல் உள்ள பாசித்துணுக்குகளைச் சுரண்டும் கிளிமீன்களின் க்ரக் க்ரக், கொடுக்குகளை வைத்துச் சண்டையிடும் நண்டுகளின் க்ளிக் ஒலி, பாறையின் மேல் உள்ள பாசியை மேயும் மட்டிக்கிளிஞ்சல்களின் கிறீச்சிடல் என்று கலவையான ஒலிகளைக் கேட்டிருக்கிறேன்.
ஒலியின் வால்பிடித்து வீடு திரும்புதல்
காற்றில் பயணிப்பதை விட ஐந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பயணிக்கின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வீட்டை வந்து அடைய, வழி கண்டுபிடிக்க, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க என்று பல்வேறு காரணங்களுக்காக ஒலிகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள். கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை.
ஃபைண்டிங் நீமோ திரைப்படத்தில் வரும் நீமோ ஒரு கோமாளி மீன் (Clown fish). இது பவளப்பாறையில் வசிக்கும் இனம் என்றாலும் முட்டையிலிருந்து வெளியில் வரும் லார்வா, முதலில் ஆழ்கடல் பரப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கும். லார்வாவிலிருந்து மீனாக உருமாறும் பருவம் வரும்போது, தன் தாய்வீடான பவளத்திட்டு எங்கே இருக்கிறது என்பதை சத்தங்களால் தான் தேடிக் கண்டுபிடிக்கும். ஒரு பவளத்திட்டு என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை போன்றது. அந்த அதீத ஒலியைப் பின்தொடர்ந்து வரும் லார்வா, ஒரு வழியாக பவளத்திட்டை அடைந்தவுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும்!
செயற்கை ஒலிகளின் குறுக்கீடுகளற்ற ஒரு சூழலில், கடற்புல் படுகைகளின் தொடர்ந்த ஒளிச்சேர்க்கையால் உருவாகும் ஆக்சிஜன் குமிழ்கள் தொடர்ந்து மேலெழும்பி, கடற்பரப்பை நோக்கிப் பயணிக்கின்றன. மேலே போகப்போக அளவில் பெரிதாகி, இவை உடைகின்றன. ஆயிரக்கணக்கில் இவை உடையும் ஓசை, நூற்றுக்கணக்கான சிறு மணிகளின் ஓசையைப் போல சேர்ந்திசைத்து, லார்வா மீன்களை வீடு திரும்புமாறு அழைக்கின்றன.
ஒலிச்சித்திரங்கள்
கௌபாய் வெஸ்டர்ன் திரைப்பட நாயகர்களுக்கெல்லாம் சவால்விடக் கூடியது பிஸ்டல் இறால் என்கிற கடல்வாழ் விலங்கு (க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகர்கள் மன்னிப்பார்களாக). இந்த இறால்களை “Gunslingers” என்று செல்லமாக அழைக்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள். இரை பிடிப்பதற்காக இது நீர்க்குமிழியாலான, அதிவேகத் தோட்டா ஒன்றைத் தயாரித்து, தனது பெரும் கொடுக்கால் வெளியிடும். இந்த நீர்க்குமிழி தோட்டா வெளியேறும்போது சராசரியாக வரும் சத்தமே 210 டெசிபலுக்கும் மேல்! துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவின் ஒலியே 150 டெசிபல்தான் என்பதோடு நாம் இதை ஒப்பிட்டுக் கொள்ளலாம். இந்த நீர்க்குமிழித் தோட்டாவின் வேகமும் சத்தமும் இரையைத் திகைக்க வைத்து மயக்கத்திலாழ்த்தி விடுவதால் இறால் எளிதாக வேட்டையாடுகிறது.
மிட்ஷிப்மன் என்ற ஒருவகை மீன், பாடல்களைப் பாடித்தான் பெண்மீன்களைக் கவர்கிறது. கூடுகட்டி முட்டையிட்ட பின்பு, குரைப்பது போன்ற ஒரு எச்சரிக்கை ஒலியை எழுப்பி முட்டைகளைக் காவல் காக்கிறது. கூன்முதுகுத் திமிங்கிலங்களின் பாடல்களை வயலின் இசைக்கு ஒப்பிடுகிறார்கள் சில வல்லுநர்கள். குடும்பத்தினருடன் தொடர்ந்து உரையாடுவது, வழி கண்டுபிடிப்பது என்று எல்லாவற்றுக்குமே ஒலியை மட்டும் நம்பியிருக்கின்றன திமிங்கிலங்களும் ஓங்கில்களும்.
இவை சில உதாரணங்கள் மட்டுமே. பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டியும் ஒலி பயணிக்கக்கூடியது என்பதால், கடலின் முக்கியமான தகவல் தொடர்பு ஊடகம் ஒலிக்கற்றைதான். ஒரு ஆரோக்கியமான கடல் சூழல் என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்தது. கடலுக்குள் இந்த தொடர் சத்தம் கேட்கவில்லை என்றால் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.
இரைச்சல்களால் அழிக்கப்படும் கடல் ஓசை
கப்பல் போக்குவரத்து, எண்ணெய் / எரிவாயு இருக்கும் இடங்களைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் ஆய்வுகள், காற்றுத் துப்பாக்கிகள், எண்ணெய் எடுப்பதற்காகக் குழாய்கள் போடும் இரைச்சல், ராணுவ சோனார், வெடிவைத்து மீன்பிடித்தல், எண்ணெய்க் கிணறுகளின் இயக்கம், பழைய போர்களின்போது மிச்சம் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை வெடித்துத் தீர்ப்பது, கட்டுமானங்களின் இரைச்சல் என்று கடலுக்குள் ஏராளமான வழிகளில் ஒலி மாசுபாட்டை உண்டாக்குகிறோம். கடந்த ஐம்பது வருடங்களில், முக்கியக் கப்பல் வழித்தடங்களின் இரைச்சல் 32 மடங்கு அதிகரித்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு! இந்த ஒலி மாசுபாட்டால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒலியாலான முகமூடி (Acoustic Masking)
இதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இரைச்சலான ஒரு சாலையில் நாம் பேசும் ஒலி கேட்காது, இல்லையா? அதைப் போலவே, கடல்வாழ் உயிரினங்களின் ஒலி, செயற்கை ஒலியால் மூடி மறைக்கப்படுகிறது. அதனால் விலங்குகளால் எளிதில் இரைதேட முடிவதில்லை, ஒன்றிணைந்து பயணிக்க முடியவில்லை, வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சில திமிங்கில இனங்களில், 80%-க்கும் மேற்பட்ட ஒலிகளும் பாடல்களும் இரைச்சல்களால் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன.
உடல்ரீதியான பாதிப்பு
தொடர்ந்து இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும்போது, செவித்திறன் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கடலுக்கடியில் கண்ணிவெடி இயக்கப்படும்போதும், சுற்றியுள்ள 60 பாலூட்டிகள் நிரந்தரமாகக் கேட்கும் தன்மையை இழக்கின்றன என்கிறது ஒரு அதிர்ச்சிகரமான தரவு! ஒரு வருடத்துக்கு இங்கிலாந்துக் கடற்பகுதியில் மட்டும் ஐம்பது கண்ணிவெடிகள் வெடிக்கப்படுகின்றன என்பதை நாம் இதனோடு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இரண்டாம் உலகப்போரின் போது புதைக்கப்பட்ட வெடிகள் என்பதால், உலக அரசுகள் இவற்றைத் தொடர்ந்து தேடி வெடிக்கச் செய்கின்றன.
காற்றுத் துப்பாக்கி (Air gun) என்பது கடலுக்கடியில் இருக்கும் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் ஒரு கருவி. ஒரே நேரத்தில் குறைந்தது 30 காற்றுத்துப்பாக்கிகளை இயக்கினால் மட்டுமே எண்ணெய் வளங்களைக் கண்டறிய முடியும். இதனால் உண்டாகும் சத்தம் 200 டெசிபல்களைத் தாண்டும். 2017-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு காற்றுத் துப்பாக்கியை வெடித்தாலே, அதிலிருந்து 1.2 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மொத்த நுண்விலங்குகளில் 75% அதிர்ச்சி தாங்காமல் உடனே இறந்துவிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல முதுகெலும்பற்ற கடல்விலங்குகளின் உடலில் Statocyst என்கிற உறுப்பு உண்டு. நம் உள் காதில் உள்ள திரவத்தைப் போல, வழி கண்டுபிடிக்கவும் சமநிலையில் இருக்கவும் இதுதான் உதவுகிறது. ஒலி மாசுபாட்டினால் இந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது. ஆகவே விலங்குகளால் வழி கண்டுபிடிக்க முடிவதில்லை. சமநிலையை இழந்து நீந்தும்போது, அவை பாறைகளில் மோதி இறக்கின்றன.
திமிங்கிலங்கள் அடிக்கடிக் கரை ஒதுங்குவதற்கும் இது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. செவித்திறன் இல்லாத திமிங்கிலங்களால் ஒலியை வைத்து வழி கண்டுபிடிக்க முடிவதில்லை, அவை தாறுமாறாகப் பயணித்துக் கரையொதுங்கி இறக்கின்றன.
செயல்பாடுகளில் மாற்றம்
திடீர் ஒலி பல விலங்குகளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவை திகைத்து நின்றுவிடுகின்றன. சில நேரங்களில் வேட்டை விலங்குகளிலிருந்து தப்பிப்பது போன்ற இயல்பான செயல்பாடுகளையும் அவை நிறுத்திக் கொள்கின்றன. இரைச்சல் நிறைந்த கடலில் வாழும் திமிங்கிலங்கள், இணை தேடுவதற்காகப் பாடும் பாடலை சரியாகப் பாடுவதில்லை, அதனால் இனப்பெருக்க விகிதம் குறைகிறது.
எண்ணிக்கையில் மாற்றம்
வலசை போதல், வழி கண்டுபிடித்தல், வீடு அடைதல் என்று எல்லாவற்றுக்குமே ஒலியை நம்பியிருக்கும் விலங்குகள், ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும்போது, அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. தொடர் இரைச்சல் இருந்தால் அவை வலசையைத் தவிர்த்துவிடுகின்றன. வழக்கமான பாதைகளில் பயணிக்காததால், அவற்றுக்குக் கிடைக்கும் உணவும் கிடைப்பதில்லை, உடல் மெலிந்து அவை இறக்கின்றன.
அதிகமாகக் காற்றுத் துப்பாக்கிகள் பயன்படுத்தும் இடங்களில், வழக்கமாகக் கிடைக்கும் மீன்களை விட, 40 முதல் 80% குறைவான மீன்களே கிடைப்பதாக சொல்கிறார்கள் நார்வே நாட்டின் மீனவர்கள், இதே நிலை இரைச்சல் அதிகமான எல்லா இடங்களிலும் இருக்க வாய்ப்பு உண்டு.
மன அழுத்தம்
ஒலி மாசுபாட்டின் முக்கியமான பாதிப்பு இது. தொடர்ந்து ஒலிபெருக்கிகள் இயக்கப்படும்போது நாமே எரிச்சலடைகிறோம், விலங்குகள் மட்டும் விதிவிலக்கா? தொடர்ந்து இரைச்சல் இருக்கும்போதோ, திடீரென்று பேரிரைச்சல் வரும்போதோ, கடல்வாழ் விலங்குகளின் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றை Stress hormones என்பார்கள். இவை தொடர்ந்து உடலில் இயங்கும்போது, உணவு உண்பதில் ஆர்வம் இருக்காது, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சில விலங்குகளுக்கு சத்தத்தைக் கேட்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, அதுவும் பல நோய்களை ஏற்படுத்துகிறது. கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதிகளில், திமிங்கிலங்களின் உடலில் இந்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கின்றன என்று உறுதிப்படுத்தியது 2001-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.
தீர்வுகள்
தாயின் வயிற்றுக்குள் பனிக்குட நீர் அசையும் ஒலிதான் மனிதனின் காதுகள் கேட்கும் முதல் ஓசை. நீருக்குள் ஒலியைக் கேட்டுப் பழகிய பின்பு தான் நாம் வெளி உலகத்துக்கே வருகிறோம். ஆனால் கடலுக்குள் ஏற்படும் ஒலி மாசுபாட்டிற்கும் நாமே காரணமாக இருக்கிறோம் என்பதுதான் பெரிய முரண்.
அதீத ஒலி அளவில் ஹெட்ஃபோன்களில் பாட்டுக் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். தலை வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது. என்ன செய்வோம்? ஒலி அளவைக் குறைக்கலாம், அல்லது ஹெட்ஃபோனையே கழற்றிவிடலாம். கழற்றவே முடியாத ஹெட்ஃபோன் என்றால்? கடல்வாழ் விலங்குகள் தினசரி உழலும் இரைச்சலான நரகம் அப்படிப்பட்டதுதான்.
மனிதக் காதுகளைப் பொறுத்தவரை 65 டெசிபல்களுக்கு மேல் இருக்கும் எந்த ஒலியும் மாசு என்று வரையறுக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால் சர்வசாதாரணமாக 200 டெசிபல்களைத் தாண்டிப் போகின்றன மனிதனால் ஏற்படும் கடலடி இரைச்சல்கள்.
ப்ரொபெல்லர்களை மாற்றியமைப்பது, சைலன்சர்கள் பொருத்தி வேலை செய்வது, கப்பல்களின் வேகத்தைக் குறைப்பது, சில ஒலிமிக்க கருவிகளுக்கு மாற்று கண்டுபிடிப்பது என்று தீர்வுகள் எல்லாமே எளியவைதான். ஆனால் செயல்படுத்துவதில் வழக்கமான தயக்கங்களும் பொருளாதாரச் சிக்கல்களும் அரசியல் குறுக்கீடுகளும் வந்துவிடுகின்றன.
“உமணர்களின் உப்பு வண்டியுடைய சக்கரங்கள் உருளும் ஒலி கேட்டு, குருகுகள் பயந்துபோய் பறந்து ஒளிந்து கொண்டன” என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். ஒலி கேட்டால் விலங்குகள் பயப்படும் என்பது மனித இனத்துக்கு எப்போதோ தெரியும். ஆனால் ஏனோ நாம் இன்னும் காற்றுத் துப்பாக்கிகளைக் கடலுக்குள் இயக்குவதை நிறுத்திக்கொள்ளத் தயாரில்லை.
***
தரவுகள்
- The soundscape of Anthropocene ocean, Charles Duarte et al, 2021, Science.
- Noise in the sea and its impacts on marine organisms. Chao Peng et al, 2015.
- Widely used marine seismic survey air gun operations negatively impact zooplankton. Robert McCauley et al, 2017, Nature.
- Evidence that ship noise increases stress in right whales, Rosalind Rolland et al, 2012, Proceedings of the Royal Society.
நாராயணி சுப்ரமணியன்
கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com
ஓவியம் – Katsushika Hokusai